திமித்ரிகளின் உலகம்  


  து, அமெரிக்காவில் வேனல்காலத் தொடக்கம். நேற்று கடியாரத்தை ஒரு மணி நேரம் முன்னால் வைத்து விட்டார்கள் அமெரிக்காவில் இருந்து திமித்ரியின் தொலைபேசி அழைப்பு நடுராத்திரிக்கு வராமல் இன்றிலிருந்து ராத்திரி பதினோரு மணிக்கே வந்து விடும். நியூயார்க்கிலிருந்து திருப்பதியைக் கூப்பிடுவான் திமித்ரி, சாண்ட்விச் மென்றபடி ப்ராஜக்ட் விஷயம் பேச. சென்னையில் சீனியர் ப்ராஜக்ட் மேனேஜர் திருப்பதி.

திமித்ரியின் தினசரி வசை பொழிதல் பெரும்பாலும் இப்படித் தொடங்கும் –

“இப்போ இங்கே ஊரோடு சாப்பிடற அருமையான பகல் நேரம். நான் வாத்து மேச்சுக்கிட்டு இருக்கேன்.. முழு முட்டாள்களான உங்களை எல்லாம் கட்டி மேச்சுக்கிட்டு கஷ்டப்பட்டுட்டிருக்கேன். எப்போ தான் சரியா வருவீங்களோ”.

இந்தியாவில் அந்த நேரம் நடுநிசி; ஒரு கூட்டமே கண்விழித்து அவனுடைய வாய்மொழிக்காகக் காத்திருக்கிறது என்பதை சவுகரியமாக மறந்துவிடுவான் அவன்.

இந்தியாவில் இயங்கும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் கம்பெனியின் அமெரிக்க கஸ்டமர் அவன். ஒரு பெரிய பேங்க் அதிகாரி. அந்த பேங்குக்காகத் தான் இங்கே ஒரு நானூறு உறுப்பினர் குழு மெனக்கெட்டு உயிரைக் கொடுத்து மென்பொருள் தயாரிக்கிறது. திரு என்ற திருப்பதி அதில் இருநூறு பேருக்குத் தலைவன். திமித்ரியின் கண்ணோட்டத்தில் திரு, தலைமை அடிமை. அதிகார வெள்ளைக்கார துரை, அடிமை இந்தியர்களால் ஆன உலகம் அங்கே மிச்சசொச்சமாக இருக்கிறது. நாயே என்றுதான் இன்னும் கூப்பிடவில்லை.

திமித்ரி ரெண்டு தலைமுறை முன் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஓடிவந்த அகதிக் குடும்பத்தின் இந்தத் தலைமுறைக் குலக் கொழுந்து. ரஷ்யா என்றால் எந்த கிரகம் என்று கேட்கிற அளவு அவன் சராசரி அமெரிக்கன் ஆகிவிட்டான்.

திமித்ரி தொலைபேச ஐந்து நிமிடம் தாமதமானாலும், திரு அவனை அழைக்க வேண்டும். இல்லாவிட்டால், ‘உங்க யாருக்கும் ப்ராஜக்ட்லே அக்கறை கிடையாதா? நான் தான் கூப்பிடணுமா? நீங்க கூப்பிட மாட்டீங்களா?” என்று எகிறுவான்.

திரு கீழ்ப்படிதல் மிகுந்த சுறுசுறுப்பான அடிமை என்பதால் நடுங்கும் கரங்களோடு எண்ணை அழுத்தி எஜமானனைக் கூப்பிட்டு குரல் நடுங்க வணக்கம் சொல்லி நலம் விசாரிப்பான். “$$$$” என்று பதில் வணக்கம் சொல்லி திமித்ரி திட்டும்போது ஹெட்போன் மாட்டித் தன்னை மட்டும் அந்த வசவு மழை நனைக்க வழி செய்வான் திரு. பதிலுக்குத் திட்டினால் மாதச் சம்பளமாகக் கணிசமான வருவாய் இல்லாது போகலாம்.

போன வாரம் திமித்ரி வசை பாடியவர்களில் முக்கியமானவர்கள் சீனியர் ஆர்கிடெக்ட் சாந்தி மகாதேவன், சீனியர் டெக்னிகல் ரைட்டர் பிரமீளா டேவிட், சீனியர் டெஸ்டர் லைலா இஃப்தகர், ப்ராஜக்ட் டீம் லீடர் ரேணு சச்தேவ், ஆமாம். எல்லாரும் பெண்கள். முப்பது வயதை எட்டாத சீனியர்கள்.

திருவுக்கு தினசரி மண்டகப்படி ஆகி, அவனுக்கு மூளை என்ற ஒன்றே இல்லாமல் படைத்தனுப்பி விட்டான் என்ற செய்தியை அவன் வாயாலே சொல்ல வைத்து திமித்ரி கிழித்து அனுப்பிவிட்டு, மேற்கூறிய நான்கு பெண்ணரசிகளை விமர்சனம் செய்ய உட்கார்ந்தபோது திரு அங்கே இருக்க வேண்டாம் என்று சொல்லி விட்டான். வீடியோ கான்பரன்ஸ் இல்லாமல் டெலிபோன் பேச்சு வார்த்தை என்றால் ’வெளியே போயாச்சு’ என்று குரல் விட்டுவிட்டு ஒரு ஓரமாக உட்கார்ந்து என்ன நடக்கிறது என்று கவனிக்கலாம். வீடியோவில் அது சாத்தியமில்லை. திரு மனசே இல்லாமல் வெளியே வந்து கதவில் காது ஒட்ட நின்றான்.

போனவாரம் அந்த வீடியோ உரையாடல், உரையாடல் என்ன உரையாடல், திமித்ரி மட்டும் பேசி ஏச, இந்த நாலு பெண்ணரசிகள் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு கண்ணைக் கசக்கி அழ ஆரம்பித்து வாயில் கர்ச்சீப் அடைத்து கான்பரன்ஸ் அறைக்கு வெளியே வந்தபோது ராத்திரி மணி ஒன்றும் சில நிமிஷங்களுமாக கடியாரம் காட்டிக் கொண்டிருந்தது.

‘மலேயா மந்திரவாதியை கூட்டிக்கிட்டு வரணும் இனிமேலே’. இதை மட்டும் பிரமிளா டேவிட் சொன்னாள். திரு, கொசு மருந்து அடிக்கும் இடத்தில் நிற்க நேர்ந்ததுபோல் இரண்டு கையையும் முகத்துக்கு முன் வேகமாக ஆட்டி மந்திரவாதி எல்லாம் கம்ப்யூட்டர் கம்பெனிக்குள் வரலாகாது என்று உணர்த்தும் விதமாக முகம் சுளித்தான். லைலா திருவைப் பார்வையால் சுட்டெரித்து, விட்ட இடத்திலிருந்து அழுகையைத் தொடர்ந்தாள்.

மலேயா மந்திரவாதி இரண்டு வாரமாகப் பேச்சுகளில் அடிபட்டு வருகிறான் என்பதைத் திரு அறிவான். மலையாள மந்திரவாதி என்று காதில் வாங்கிக் கொண்டு முன்குடுமி வைத்த மீசை மழித்த கனமான ஒரு பிரகிருதியை திரு கற்பனை செய்தபோது ரேணு அது மலேயா மந்திரவாதி என்பதைத் தெளிவு படுத்தினாள்.

“நூறு வருஷம் முந்தி பினாங்குலே இருந்து கப்பல் ஏறி இங்கே வந்தவன் அவன்” என்று கூடுதல் தகவலை ரேணு சச்தேவ் வெளியிட்டாள்.

கோடிக்கணக்கான டாலர் கணக்கில் மென்பொருள் உருவாக்கப்படும் சாப்ட்வேர் கம்பெனியில் வெளியாட்கள் உள்ளே வருவது சிரமமானது. வேலை பார்க்கிற யாராவது போஸ்ட் பார்சல் ஆர்டர் பண்ணினால், அதை டெலிவரி செய்ய சர்க்கார் உத்யோகஸ்தரான தபால்காரர் கூட உள்ளே வரமுடியாது – அவரிடம் அதற்கான அனுமதி இல்லை என்பதால்.

சர்க்கார் உத்தியோகஸ்தரை வழி மறித்தால் சர்க்காரையே அவமரியாதை செய்வதாகும் என்று பழுப்பு கலர் பார்சலோடு வாசலில் நின்ற தபால்காரர் சத்தம் போட்டாலும், செக்யூரிடி நிர்வாகி உத்தம் சிங்க் ராணா அவரை தாட்சண்யமே பார்க்காமல் திருப்பி அனுப்பி விட்டான். அப்புறம் போஸ்ட் ஆபீஸில் போய்த்தான் பார்சலை வாங்க வேண்டிப் போனது.

”இந்த மலேயா மந்திரவாதி போஸ்ட்மேன் கூட இல்லை. நூறு வருஷம் முந்திய ஜீவன் என்கிறீர்களே. எங்கே அவனை உட்கார வைத்திருக்கிறீர்கள்? இப்போதைக்கு டெம்பரரி அனுமதி கார்ட் வேணுமானால் ஆன்-லைனில் அப்ளை செய்யுங்கள், ஆவண செய்யப்படும்” என்றான். அப்போது மலேயா மந்திரவாதி விஷயம் காதில் விழுந்த ராணா, யாரும் அது பற்றி அவன் காதுபட அப்புறம் பேசாததால் வேறே காரியங்களில் கவனம் செலுத்தலானான் அவன்.

இன்றைக்கு, ராணா பொதுப் பாதுகாப்பு சோதனை என்று ப்ராஜக்ட் தளங்கள் தோறும் பாதுகாப்பு பக்கப் பதிய இருக்கிறதா என்று சோதனை செய்தான். எல்லாம் கச்சிதம். மன நிறைவோடு, கம்பெனி செலவில் நான் ரொட்டி, தயிர் சாதம் என்று ஆபீஸ் கேண்டீனில் ராச்சாப்பாடு திருப்தியாக உண்டு வீடு திரும்பும் உத்தேசத்தோடு ராணா கார் சாவியை மேஜைக் களேபரத்துக்கு இடையே தேடிக் கொண்டிருந்தபோது, சாந்தி மகாதேவன் வந்து சேர்ந்தாள்.

“இன்னும் ஒருமணி நேரத்திலே, ராத்திரி பனிரெண்டு மணிக்கு வீடியோ கான்பரன்ஸ், அமெரிக்க கஸ்டமரோடு. வீடியோ அறையில் ஏர்கண்டிஷன் வேலை செய்யாமல் போனது. கொஞ்சம் சரி பண்ணிக் கொடுங்க ப்ளீஸ்”.

திமித்ரி என்ற அதே அமெரிக்க கஸ்டமரோடு பேசப்போவது சாந்தி மகாதேவன் தலைமையில் அதே நான்கு நபர் பெண்கள் குழு என்ற உபரி தகவலையும் ஈந்தாள் அவள். பெண்கள் என்றால் ராணாவும் இரங்குவான் என்ற எதிர்பார்ப்பு அவள் குரலில் தொனித்தது. இரங்காவிட்டால், தலையில் தட்டி வேலை ஏவவும் அஞ்ச மாட்டார்கள் இந்த மகளிர் சிறப்புக் குழுவினர்.

“உங்க ப்ராஜக்ட் மேனேஜர் திரு என்ற திருப்பதி, ஏர்கண்டிஷன் பற்றி ரிப்போர்ட் பண்ணட்டும். ஆவண செய்யப்படும்”. இரக்கத்தின் சுவடே இல்லாத வார்த்தைகள் ராணாவிடமிருந்து வெளிப்பட்டன.

“அவர் இல்லை. வரமாட்டார். இப்போ என்னங்கறே?”

சாந்தி மகாதேவன் எகிற, ராணா உடனே சரணடைந்தான். புலிப்பாலா கேட்டாள் இந்தப் பெண்?  ஏர்கண்டிஷன் சரியாக இயங்க வைக்க உதவி தானே கேட்டாள்? ராணா உடனே செய்வான்.

அந்த நேரத்தில், அட்மின் டிபார்ட்மெண்டில் எலக்ட்ரீஷியன் யாரும் இல்லாததால், பிட்ஸ் பிலானி கல்விக் கழகத்தில் எம்.டெக் தொழில்நுட்பம் தேர்ந்த ராணா சட்டையைக் கழட்டி விட்டு பொத்தல் விழுந்த பனியன் வெளியே தெரிய, ஏ.சி. ப்ளாண்ட் அறைக்கு உள்ளே விதவிதமான சத்த கோலாகலத்துக்கு இடையே பிரவேசித்தான்.

தட்டிக் கொட்டி ஏதோ செய்து வீடியோ கான்பரன்ஸ் ஹாலில் ஏர்கண்டிஷனர் இயங்கத் தொடங்க, அங்கே கூடியிருந்து குளிரப் போனவர்கள், மனப்பூர்வமாக அவனுக்கு நன்றி சொல்ல, இந்த மாத சம்பளத்தை வாங்கியதற்குத் தகுந்தபடி கடினமாக உழைத்த பூரிப்பில் ராணா கொஞ்ச நேரம் மிதந்தான். அப்புறம் ஞாபகம் வந்து கேட்டான், – ”யாரோ மலேயா மந்திரவாதி என்றீர்களே போன வாரம் கூடியபோது?”

அதெல்லாம் ஒரு தமாஷுக்கு என்று சாந்தி பலமாக மறுத்தாலும் ராணாவுக்கு சந்தேகம் தீரவில்லை. நூறு வருஷம் முந்திய மனுஷனோ, நம் காலத்தில் ஜீவிக்கிறவனோ, சாப்ட்வேர் கம்பெனிக்குள் ஒரு அந்நியன் நுழைந்திருக்கிறான். அவனைக் கெல்லியெடுத்து வெளியே எறியாவிட்டால் ராணாவுக்கும் செக்யூரிடி மகா நிர்வாகி என்ற அவன் பதவிக்கும் ஒரு தலைமயிர் மதிப்பும் இருக்கப் போவதில்லை.

ஆபரேஷன் தியேட்டர் வெளியே எரிகிற மாதிரி வீடியோ கான்பரன்ஸ் ஹால் கச்சிதமாக அடைத்திருக்க, வெளியே எல்.ஈ.டி விளக்குத் தொகுதி கபர்தார் என்று ஒளிர்ந்து உள்ளே வந்தால் கைகால் உடைபடுமென்று மிரட்டியது. ராணா சற்று நின்றான்.

இந்த மலேயா மந்திரவாதியும் ஒருவேளை உள்ளே இருந்தால்? எப்படியாவது இந்தப் பெண்களின் கைப்பையிலோ, கார் பின்னறையிலோ இருந்து வந்து சேர்ந்திருந்தால்? கைப்பையில் அடைக்கக் கூடிய மனுஷன் இருக்க முடியாதுதான். அதுவும் நூறு வருடம் முந்தியவன் என்றது அவன் பகுத்தறிவு.

ஆனாலும் அவன் மந்திரவாதியாமே. மந்திரவாதிகள் நினைத்தபடி உருமாறும் ஷேப் ஷிப்டர்களாகவும் இருக்க வாய்ப்பு உண்டே. ஒரு உருவத்திலிருந்து மற்றொன்றுக்கு உருமாறுவதில் கில்லாடியாக இருந்தால் கைப்பை என்ன, கைக்குட்டையாகக்கூட உருவம் மாறி உள்ளே வந்து யாரும் கவனிக்காத இருட்டான ரெஸ்ட் ரூமில் சுயஉருவம் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கலாம்.

அவன் இருப்பதையும் இல்லாததையும் நிச்சயப்படுத்திக் கொள்ள ஓர் அபூர்வமான சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது ராணாவுக்கு. உள்ளே லோக்கல் நபர்கள், அமெரிக்க ஜனாதிபதியோடு கூட அணு ஆயுதத்தை ஏவுவது பற்றி வேண்டுமானாலும் பேசிக் கொண்டிருக்கட்டும். அடிப்படை பாதுகாப்பு பரிசோதனை என்று எந்த நேரமும் ஆபீஸில் எந்த இடத்திலும் செக்யூரிட்டி தலைமை நிர்வாகி தடாலென்று உள்ளே நுழைந்து பார்க்க அனுமதி உண்டே.

அந்த உரிமையைப் பயன்படுத்த ராணா முடிவு செய்தான். சாப்பாட்டில் குடமிளகாய் சேர்த்துக் கொள்ளும்போதெல்லாம் மூக்கில் நீர் வடிய, அவனுக்கு இப்படி அசாத்தியத் துணிச்சல் ஏற்படுவது வழக்கம். ராத்திரி சமையலில் கேண்டீன்காரர் கிலோ கணக்கில் குடமிளகாய் பெய்திருந்ததால் ராத்திரி முழுக்க வீரம் காண்பிக்க அவன் நிச்சயித்தான். வீட்டுக்குப் போய் சர்தாரிணியை ஏறிடும்போது அது மாறலாம். அதுவரை ஆபீஸ்தான் கதி.

முடிவு செய்ததும், காவேரியாறு என்று பெயர்ப் பலகை கதவில் பொறித்த வீடியோ கான்பரன்ஸ் ஹால் வாசலில் நின்றான் ராணா. ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணினான். மறைந்த அவனுடைய அம்மா அமர்ஜீத் கவுர் சொல்லிக் கொடுத்தது. சமயத்தில் பேச வேண்டிய தருணத்தில் கூட பத்து செகண்ட் இப்படி டைம் டிலே மனதில் ஒளி வீசி அணையப் பேசியிருக்கிறான் அவன். யோசித்துப் பேசக்கூடியவன் என்ற பெரும்புகழ் அதனால் சரியோ, தவறோ அவனோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது.

பத்து எண்ணி முடித்ததும் சகல கதவையும் திறக்கும் சிறப்பு அனுமதி கார்டை இயக்கி, கான்பரன்ஸ் அறைக் கதவைத் தள்ளத் திறந்து கொண்டது. முகத்தில் பரபரப்பைக் காட்டியபடி உள்ளே நுழைந்தான் ராணா.

ஓவல் வடிவ மேசைக்கு முன் வலது பக்கம் ரெண்டு பேர், இடது புறம் ரெண்டு பேர் என்று பெண்ணரசிகள் உட்கார்ந்து கெக்கெபிக்கே என்று சிரித்துக் கொண்டிருந்தார்கள். எதிரே சுவரில் சார்த்திய பெரிய டெலிவிஷன் திரையும் பாதிக்கு ஆக்கிரமித்துக் கொண்டு ஒரு வெள்ளைக்காரத் தடியன் அதேபடிக்கு சிரித்துக் கொண்டிருந்தான். மந்திரவாதி தந்திரவாதி ஒரு மண்ணையும் காணோம்.

வந்தபடிக்கு சுவரில் நாலு இடத்தில் தட்டி தலையைக் குலுக்கியபடி நகர்ந்து, ஒரு சலாம் போட்டு, டிவியில் தெரிகிற வெள்ளைக்காரனுக்கும் வணக்கம் சொல்லி தேங்க்யூ என்றபடி வெளியே வருவதற்குள் அந்த பனிக்கால இரவில் ராணாவுக்கு வியர்த்து சட்டை நனைந்து விட்டிருந்தது. மூக்கில் இருந்து குடமிளகாய்  நீர் வடிவது அதிகமாகி இருந்தது.

கான்பரன்ஸ் அறைக்குத் தெற்கே அமெரிக்க பேங்க் ப்ராஜக்ட் பணி நடக்கும் இடம். இருநூறு பேர் உட்கார்ந்து வேலை பார்க்கிறபடி இரண்டு தடுப்புகளில் விளக்கு ஜகஜோதியாக எரிந்து கொண்டிருப்பதை ராணா பார்த்தான். சாந்தி மகாதேவன் சீனியர் ஆர்கிடெக்ட் என்பதால் தனி அறை உண்டு அவளுக்கு என்று நினைவு வர, சாந்தி பெயரைச் சுமந்த கதவைத் தேடியடைந்து, எட்டிப் பார்த்தான். மந்திரவாதி இங்கே இருந்து போக்குக் காட்டிக் கொண்டிருக்கலாம். அறையில் ஒரு பிஸ்கட் பேக்கட்டும், பாதி குடித்த கோக் பாட்டிலும் தவிர வேறு எதுவும் விசேஷமாக இல்லை.

காற்றாடப் படுத்து உருளலாம் என்பதாக கொஞ்சம் பெரிய தோதில் ப்ராஜக்ட் மகா நிர்வாகி திருப்பதி அறை இருளோ என்று கிடந்ததைப் பார்த்தான் ராணா. திருப்பதியின் இருக்கையில் ஏதோ ஒளிர்ந்து கொண்டிருந்தது. ராணா உஷாரானான். அது வெடிக்கும் பொருளாக இருக்கலாம். ஆபீசில் யாரோ தீவிரவாதி குண்டு வைத்திருக்கலாமோ? செக்யூரிட்டி தலைவனான ராணா தலைமேல் அது விடியலாம், சாப்ட்வேர் கம்பெனியில் எதற்காக வெடிகுண்டு வைக்க வேண்டும் என்று அவன் மனம் கேள்வி கேட்டது. சாப்ட்வேர் கம்பெனியில் வைக்கக் கூடாது என்று எந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது என்று குடைமிளகாய் வாசனையோடு இன்னொரு மனம் துள்ளியது.

திருப்பதியின் நாற்காலியில் உழக்கு மாதிரி யாரோ உட்கார்ந்திருப்பதாகத் தோன்ற உள்ளே போய்ப் பார்க்கலாம் என்று உத்தேசித்தபோது ஹால் முழுக்க விளக்குகள் எரிய, ராத்தூக்கத்தில் நடக்கிற நோயாளி போல திரு உள்ளே வந்து கொண்டிருந்தான்.

உத்தேசமாக ’குட்மார்னிங்’ சொன்னான் ராணா. ’அடிப்படை செக்யூரிட்டி சோதனை’ என்று ஒரு வரி புன்னகையோடு சேர்த்துக் கொண்டான். எல்லாம் சரியாக இருக்கிறது என்பதாக அபிநயம் பிடித்து திருப்பதியை அவனுடைய நாற்காலியில் உட்காரச் சொன்னான். வேறே யாராவது அங்கே இருந்தால் சத்தம் போடுவானே, பார்க்கலாம் என்று ஒரு வினாடி அங்கேயே நிற்க ”ராணா குட் டே” என்று அசாத்தியமாக காலத்தை முன்னால் வளைத்து திரு கொட்டாவியைப் புறங்கையால் சிதைத்தபடி வணக்கம் சொன்னான்.

”டார்மெட்டரியில் நாலு மணி நேரம் தூங்கிட்டு குளிச்சுட்டு ஆபீஸ் வந்துட்டேன்”. திரு தன்நிலை விளக்கம் சொல்லியபடி அவனுடைய நாற்காலிக்கு நகர்ந்தபோது ஓவென்று சிரித்தபடி நான்கு பெண்களும் உள்ளே வந்தார்கள். ராணாவுக்கும் ஏனோ இனம் புரியாத சந்தோஷம். திருப்பதி எந்த சிரமமும் இன்றி நாற்காலியில் உட்கார்ந்து தொலைபேசியைக் காதில் ஒட்டிக் கொண்டிருந்தான். அங்கே எதுவும் ஒளிரவில்லை என்பதை நிம்மதியோடு கவனித்தான் ராணா.

திரு, அமெரிக்க கார் கம்பெனி ப்ராஜக்ட் ஒன்றையும் கொஞ்ச நாள் கூடுதலாக நிர்வகிக்க கம்பெனி ஆணைப்படி செயல்படுகிறான். முழுநேரமும் ஆபீசில் செலவழிக்க அவனுக்கு இன்னும் இரண்டு மாதமாவது விதிக்கப்பட்டிருக்கிறது. நியூயார்க்கில் தற்போது பிற்பகல் இரண்டரை என்பதால் தொலைபேசியில் பேசித் தீர்க்க வேண்டியது நிறைய உண்டு.

“திமித்ரி மீட்டிங் சந்தோஷமா போச்சு”

சாந்தி மகாதேவன் சொல்ல, நம்ப முடியாமல் தலையைக் குலுக்கிக் கொண்டான் திரு.

”கார் கம்பெனி ப்ராஜக்ட் பேச்சு வார்த்தை இருக்கு. முடிச்சுட்டு பேசறேன்” என்றான் தொலைபேசியில் அழைப்பு வரக் காத்திருந்த படி.

”லேடீஸுக்கு ஏன் டார்மெட்டரியிலே ரூம் தர்றதில்லே?”.

லைலா ராணாவைக் கேட்டாள். திடீரென்று ராத்தங்கி வேலை முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தால் நடுவிலோ, ஆரம்பத்திலோ கொஞ்சம் இளைப்பாறித் திரும்பி வர, கம்பெனி நிர்வாகம் கட்டடத்தின் நான்காவது மாடியில் நான்கு அறைகளைச் சகலவிதமான சௌகரியங்களோடும் ஐந்து நட்சத்திர ஓட்டல் பாணியில் அமைத்து வைத்திருக்கும் இளைப்பாறும் இடம் அந்த டார்மெட்டரி. ஆண் ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வளமுறை. பெண்கள் எத்தனை நேரம் ஆனாலும் தக்க பாதுகாப்போடு காரில் கொண்டு விடப்படுவது அவசியம். பெண்கள் ராத்தங்கினால் பிரச்சனை என்ன என்று லைலா, ராணாவை விசாரித்தாள்.

”நடுராத்திரி விவாதிக்க வேண்டிய காரியம் இல்லை இது சீமாட்டிகளே. நாளையோ மறுநாளோ பகலில் பேச உங்களை வரவேற்கிறேன்”, சொன்னபடி ராணா கிளம்ப, திரு ஓவென்று பெருங்குரலெடுத்துக் கூவினான். தன் நாற்காலியை அவசரமாக விட்டு அறைக்கு வெளியே ஓடி வந்து ராணா மேல் முட்டிக் கொண்டான் அவன்.

”என் நாற்காலியில் யாரோ உட்கார்ந்திருக்காங்க. விபூதி மணக்குது. எலுமிச்சை நெடியும் உண்டு. யார் அங்கே என்னைக் கேட்காமல்?”.

’ஒரு குழப்பமும் இல்லை’ என்றபடி, அவன் அறைக்கு வெளியே நின்று, ”சமத்து இல்லே, வெளியே வந்துடுவியாம்” என்று யாரையோ, குழந்தையிடம் பேசுகிற மாதிரி தாஜா செய்தாள் சாந்தி மகாதேவன்.

திரு தன் கார் டேஷ்போர்டில் வைத்திருக்கும் ரேடியம் போல ஒளிரும் புத்தர் சிலை சைசில் ஏதோ ஒன்று வாசலுக்கு வந்து மறைந்தது.

“ஒண்ணும் இல்லே. ராப்பகலா வேலை செஞ்சா மனசு குறக்களி காட்டுறது சகஜம் தான். நீ உன் அமெரிக்கா ப்ராஜக்ட் வேலையை பாரு” என்று சாந்தி மகாதேவன் படு கேஷுவலாகச் சொல்ல, தலையசைத்து திரு தன் இருக்கைக்கு ஓட்ட ஓட்டமாக ஓடி அடிக்க ஆரம்பித்த டெலிபோனை எடுத்தான்.

“அது யாரு?“

ராணா கேட்டான். பதில் இல்லை. தான் இருப்பதையே லட்சியம் செய்யாமல் காஃபி மேக்கர் யந்திரத்தின் பக்கம் போன பெண்களை அவன் அவசரமாகத் தடுத்தாட்கொண்டான்.

ராணா, ராத்திரியிலே சிகப்பு தலைப்பாகை கட்டாம, மனசுக்கு இதமான கலர்லே அதைக் கட்டு. மனசு நிம்மதியா இருக்கும். ராத்திரியிலே காரசாரமா குடமிளகாய் சாப்பிடறதையும் ஒழி. இல்லியோ,   காலைக்கடன் நேரத்தில் ராக்கெட் போல எம்பி தும்பா போயிடுவே. வா, காப்பி குடிக்கலாம்”.

சாந்தி மகாதேவன் அவனை நெட்டித் தள்ளிக்கொண்டு போக, உள்ளே திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அவர்களோடு போனான் ராணா.

காப்பியை நிறைத்துக் கொண்டு அங்கேயே யந்திரம் பக்கத்தில் போட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்தார்கள். “அது யார்?
ராணா விடாமல் பிடித்தான். சாந்தி மகாதேவன் புன்னகை புரிந்தாள்.

“இதைச் சொல்லணும்னா இந்த ஊரோட வரலாற்றிலே நூற்றம்பது வருஷம் பின்னாலே போகணும். அந்த அளவு சரித்திரம் உனக்குத் தெரியாது. படிச்சுட்டு வா, அப்புறம் சாவகாசமா சொல்றேன்”

“வேலைக்கு ஆகாது. உடனடியா அறிவு கொடு”. ராணா யாசிக்க, டெலிவிஷன் தொடர் முன்கதை சுருக்கம் சொல்லும் வேகத்தில் அவள் சொன்னதன் சாராம்சம் இது-

”நூற்றைம்பது வருஷம் முன் இந்த நான்கு மாடி பெரிய கட்டிடம் இருந்த இடம் மட்டும் இல்லை, இந்தத் தெரு, அடுத்தது, ஏன் இந்தப் பேட்டை, அடுத்த பேட்டை எல்லாம் தண்ணீர்லே மூழ்கியிருந்தது. அது ஒரு பெரிய ஏரி. மலேயாவுக்கு தேயிலை, ரப்பர் தோட்ட வேலைக்கு இங்கேயிருந்து ஆட்கள் குடும்பத்தோடு போகிறது தான் அப்போ வழக்கம். அதிசயமா, மலேயாவில் இருந்து ஒரு மந்திரதந்திரவாதி, சேனன்னு பெயர் சொன்னான்.. சேனன் இங்கே வந்து இங்கே இருந்த மந்திரவாதிகளோடு போட்டி போட, அவனைக் கழுத்தை முறிச்சு கொன்னு ஏரியிலே வீசிட்டாங்க. சேனன் புதையுண்டு போன இடம் நம் ஆபிசுக்கு இருபதடி கீழே. மந்திரவாதிங்கறதாலே உசுரு மட்டும் அவ்வப்போது வெளியே வந்து உலாவறது உண்டாம். போன வாரத்துக்கு முந்தின வாரம் காரிடர்லே என்னை சந்திச்சான் அவன்”.

”திமித்ரி திட்டுனதுலே மனசு உடைஞ்சு போயிருந்தபோது அதெல்லாம் ஒண்ணுமில்லாம ஆக்கிடலாம் அப்படீன்னு உத்திரவாதம் கொடுத்தான் சேனன். துர்மந்திரம் இல்லே, எல்லாரும் சந்தோஷமா இருக்க செய்யறது இது அப்படீன்னு ஒரு சின்ன பொம்மையா என் மேஜை மேல் உட்கார்ந்தான். அப்போ தெரியாது அவன் இருட்டுலே வெளிச்சமா தெரிவான்னு. ஆபீஸ் பிடிச்சுப் போய் அவன் தினம் ராத்திரி சுத்தற மாதிரி இன்னிக்கு சுத்திட்டிருந்தான். போன வாரம் வீடியோ கான்பரன்ஸுக்கு என்னையும் கூட்டிப்போன்னு நச்சரிச்சான். வீடியோவிலே அவன் உக்காந்தா உலகம் பூரா தெரிஞ்சுடும்னு மாட்டேன்னு சொன்னேன். அதுக்குள்ளே எங்க எல்லோருக்கும் ப்ரண்ட் ஆகிட்டான். போன வாரம் திமித்ரி வகை தொகை இல்லாமல் திட்டின பிறகுதான் இவனை இன்னிக்கு கூட்டிப் போக தீர்மானிச்சது. இவனை வீடியோ கான்பரன்சுக்கு கூட்டிப் போய், கர்ச்சீப் போட்டு மூடினது. திமித்ரி திட்டவே இல்லைங்கறது மட்டுமில்லே, சிரிச்சு சிரிச்சு வேறே பேச வைத்து நிலைமையை சந்தோஷமாக்கிட்டு முடியறதுக்குள்ளே வெளியே ஓடிட்டான். எல்லாம் நல்லா நடந்தது இவனாலே தான்னு நம்பறேன்.. மலேயாக்காரன் ஒரு ஓரமா ஃபோட்டோகாப்பி மிஷின் மாதிரி, ஷ்ரெட்டர் மாதிரி, காஃபிமேக்கர் மாதிரி, ஷூ பாலீஷ் மெஷின் போல இருக்கட்டும். கைக்குட்டையாலே இல்லே பேப்பர் டிஷ்யூ போட்டு மூடினா எழுப்பற வரைக்கும், அது மணிக் கணக்கோ, நாள், வருஷக் கணக்கோ, உடனே துருவக் கரடி மாதிரி செயல் மறந்து ஆழ்ந்து உறங்கப் போயிடுவான். இடத்தையும் அடைக்க மாட்டான். பாதி ஏ4 பேப்பர் அளவு போதும்”.

ராணா பார்த்தபோது அவனுடைய சட்டைப் பைக்குள் மலேயா மந்திரவாதி உட்கார்ந்து கொண்டு சிரித்தான்.

”நான் எந்த மந்திரவாதமும் செய்யலேப்பா. மலேயாவிலே காவடி மாதிரி சோறு ஒரு குடம், இறைச்சி இன்னொரு குடம்னு மூங்கில் கழியிலே கட்டி தோளிலே சுமந்தபடி, தெருத்தெருவா நாசி கொரங்க், அதான் அரிசிச் சோறு வித்துட்டிருந்தேன்.. இங்கே எப்படியோ வந்துட்டேன்.. போகட்டும்.. அந்த திமித்ரி உள்ளூர உங்களுக்கு பயப்படறான்.. நீங்க தொழில்நுட்பம் படிச்சவங்க. நாளைக்கே ரொம்ப பெரிய ஆளா வந்துடுவீங்க. அவன் பேங்க்லே கடைநிலை தாண்டினால், அடுத்த மட்டத்திலே அதிகாரியாத்தான் ரிடையர் ஆகணும். அந்த பயத்தை உங்களைத் திட்டித் தீர்த்துக்கறான். ரஷ்யாக்காரன். ரெண்டு தலைமுறையா பாடுபட்டாலும், அமெரிக்காவிலே முழுக்க ஒட்டமுடியாத மனக் குமைச்சல் வேறே.. அவன் மனசை லேசாக்க ஒரு வாழ்த்து அனுப்பினேன். ஈமெயில் எல்லாம் தெரியாது. மனசு விட்டு மனசு போகிற டெலிபதி தான். அதான் வெள்ளைக்கார சார் ஒரே குஷியிலே.” என்று சொன்னான். அது ராணாவுக்குத் தெரியாத ஜப்பானிய மொழி. அவனுக்கு நாசி கொரங்க் பிடிக்கும் தான். கோலாலம்பூர் போகும்போதெல்லாம் தேடிப்போய் சாப்பிடுவது வழக்கம். ஆனால் ஜப்பானிய மொழி தெரியாது.

ராணா சட்டைப்பையில் சேனனோ கோனனோ வந்து புகுந்து சரித்திரம் சொல்லவில்லை என்று நம்பினான். அதெல்லாம் சம்பவிக்கவே முடியாது என்று குடைமிளகாய் சாப்பிட்ட அஜீர்ணம் குணமானதும் அவன் முடிவு செய்தான். இதைப் பற்றி அவன் யாரிடமும் மூச்சு விடப் போவதில்லை.

ராணா யோசித்தான். இவன் காலே அரைக்கால் மனுஷன் கூட இல்லை. இங்கே இருந்தாலும் இல்லேன்னாலும் கம்பெனிக்கு ரிஸ்க், வருமானம் இழப்புன்னு ஒண்ணும் இல்லே. கம்ப்யூட்டர் ஒயரை கடிச்சு கனெக்‌ஷன் இல்லாம பண்றது, டாய்லெட்டுலே ஃப்ளஷ் பண்ண விடாமே அடச்சுக்கறது மாதிரி விஷமம் எல்லாம் செய்ய மாட்டான். சும்மா சுத்திக்கிட்டு இருப்பான். இருட்டுலே தேசலா பிரகாசிக்காம இருந்தால் கண்டுக்காம விட்டுடலாம்.

“இன்னியிலிருந்து இருட்டுலே பளிச்சிட மாட்டேன்”, மலேயாக்காரன் மௌனமாக சத்தியம் செய்து தந்தான். பிறகு எதுவும் இருட்டில் ஒளிரவில்லை திரு-விடம் இதைப் பகிர நினைத்து, வேண்டாமென்று வைத்தான் ராணா.

”மலேயாக்காரன் வந்த அப்புறம் கேண்டீன்லே லேட் ஆக சாப்பிட எப்போ வந்தாலும் ரொட்டியும் சோறும் இருக்கு. கூடுதலாக சமைக்க வேண்டியே வரலே. நாலு பேர் வந்தா நாலு பேருக்கு ரொட்டி, எட்டு பேர் வந்தா எட்டு பேருக்கும் சாம்பார் சாதம் இப்படி பாத்திரத்துக்கு உள்ளே இருந்து வரும்”. இது கேண்டீன் இன்சார்ஜ் போத்தி, சத்தமில்லாமல் பகிர்ந்து கொண்டது.

இந்தோனேஷியா ப்ராஜக்ட் கஸ்டமர்கள் சரியான கஞ்சர்கள். எவ்வளவு அதிகம் உழைத்து வேலை முடித்தாலும் பணம் வந்து சேர ஒரு யுகம் ஆகும். அந்த ப்ராஜக்ட் நடக்கும் முதல் மாடியில் ஒரு ராத்திரி மலேயாக்காரன் ஓடிய பின், அடுத்த நாள் இந்தோனேஷியா டாணென்று பணம் அனுப்ப ஆரம்பித்தது. கம்பெனி சீனியர் வைஸ் பிரசிடெண்ட் பிஜு நாயர் கூட ’மலையாள மாந்த்ரீகன் கடமட்டத்துக் கத்தனார் வன்னதுபோல’ என்று வார்த்தை சொல்லி வியந்தானாம்.

ரெண்டு வருஷமாக போட்டி கம்பெனிகளோடு மல்லுக்கட்டி பிரிட்டீஷ் ஃபெலைன் க்ளப் என்ற பூனை வளர்ப்போர் சங்கத்தின் பத்து மில்லியன் பவுண்ட் ப்ராஜக்ட் அதாவது ஒரு கோடி ரூபாய் மதிப்பில், சேனன் வந்து பிரிண்டரைச் சுற்றி ஓடிய பிறகு கம்பெனிக்குக் கிட்டி, ஆபீஸோடு கொண்டாட வைத்தது இன்னொரு கதை.

திரு ஒரே நாளில் ரெண்டு பதவி உயர்வு வாங்கி கம்பெனி வைஸ்பிரசிடெண்ட் மற்றும் வீட்டில் அழகான பெண் குழந்தைக்கு அப்பா என்று ஆகியபோது அவன் மேஜையை அவனே சுற்றி வந்து ஆள் வராத பொழுதில் அங்கே ஒரு முறை நாற்காலியில் வந்திருந்த மலேயா மந்திரவாதிக்குத் தரையில் கழுத்து டை படிய சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் பண்ணியதை சாந்தி மகாதேவனிடமோ மற்ற யாரிடமோ சொல்லவில்லை.

இவ்வளவு ஏன், டெலிவிஷனில் பிரபலமான சானலில் ‘பாடும் கம்ப்யூட்டர்’ என்ற கம்ப்யூட்டர் தொழில்நுட்பக் கம்பெனிகளுக்கான இசைப் போட்டியில் நூறு கம்பெனிகளோடு மோதி, இவர்கள் கம்பெனி பரிசு வென்றதற்கு பிரசிடெண்டே – என்றால் கம்பெனி தலைவர் – இசைக்குழுவை நேரடியாகப் பாராட்டினாராம்.  கணிசமான ஊக்க ஊதியம் அவர்களுக்கு உடனே வழங்கப்பட்டது. எல்லாம் சேனன் வேலை என்று அரசல் புரசலாக செய்தி.

அமெரிக்க, பிரிட்டீஷ், பிரஞ்ச், ஜெர்மன் கம்பெனிகளுக்கு வேலைக்கு ரகசியமாக மனுப் போட்டவர்கள் ரகசியமாகவே சேனனை பிரார்த்தித்து விசாவும் பணி நியமன உத்தரவும், கஷ்டம் இல்லாத பிரிந்து போவதுமாக நல்ல காலம் அனுபவிக்கவும் மலேயா மந்திரவாதியே காரணம் என்று கம்பெனி ஊழியர் வாட்ஸ அப் குழுக்களில் பகிரப்பட்டது.

ராணா ஒரு நாள் லீவு போட்டு விட்டு நகர சரித்திரம் முழுக்கப் படித்ததில் தெரிய வந்தது, ஆபீஸ் நிற்கிற இடத்தில் எந்தக் காலத்திலும் ஏரி எதுவும் இல்லை. அவன் யாரிடமும் எதையும் சொல்லவில்லை.

பிரமீளா டேவிட் தன் மூன்று வயது மகளுக்கு வாங்கிய இருட்டில் ஒளிரும் பொம்மை ரொம்ப பயங்கரமாக தெரிந்ததால் ஆபீஸிலேயே அதை விட்டுவிட்டு வேறே சாத்வீகமான, சாதாரணமான பொம்மை வாங்கி வீட்டுக்கு எடுத்துப் போனாள். அது போனமாதம். அவள் விட்டுப் போன அந்த பொம்மை எப்படியோ திருப்பதி அறைக்கு வந்து அவனை அலற வைத்தது. அது இப்போது எங்கே? பிரமீளா யாரிடமும் கேட்கவில்லை. சொல்லவில்லை.

மனோதத்துவத்தில் தபால் மூலம் சர்ட்டிபிகேட் கோர்ஸ் முடித்த ரேணு சச்தேவ், குழுவுக்கு அசுர நம்பிக்கை அவர்கள் மேலேயே வர மலேயா மந்திரவாதி பற்றிக் கதை கட்டியதாக யாரிடமும் சொல்லவில்லை தான்.

எத்தைத் தின்னால் திமித்ரி என்ற பயங்கரம் தீரும் என்று சாந்தி மகாதேவன் இருந்தபோது ரேணுவின் வார்த்தை அவளுக்கு இதமாக இருந்தது. தர்க்கம் எல்லாம் அப்புறம். அந்த பாதி ஏ4 காகித சைஸ் மலேயா மந்திரவாதி எங்கே? அது வெறும் பொம்மை தானே? இல்லை நிஜமா? சாந்தி மகாதேவனுக்குத் தெரியவில்லை. இதை யாரோடும் பகிர்ந்து கொள்ளவில்லை அவள்.

அடுத்த வாரம் ப்ராஜக்ட் நிமித்தம் சாந்தி மகாதேவன் அமெரிக்கா போனாள். வீடியோ கான்பரன்ஸின் போது, திமித்ரி உற்சாகமாகவும், பல்லெல்லாம் தெரிய சந்தோஷமாகவும் இருந்ததை இங்கே திரையில் மற்றவர்கள் பார்த்தார்கள். அவனுக்கு வேறு அமெரிக்க பேங்கில் உயர் பதவி கிடைத்திருந்தது. இன்னும் இரண்டு மாதத்தில் வெளியே போகப் போகிறான். யாரிடமும் அதைச் சொல்லவில்லை.

“இந்த மாட்யூல் எப்போ முடியும்?”

திமித்ரி அதிகாரமாகக் கேட்க, அதைவிட மிடுக்காக லைலா இங்கிருந்து பதில் சொன்னாள் – “ப்ராஜக்ட் ப்ளான் படிக்கு அடுத்த புதன் தான். விரிவான டெஸ்டிங் இல்லாம நான் ரிலீஸ் பண்ண மாட்டேன். இரண்டு தரப்பும் சம்மதித்துப் போட்டுக் கொடுத்த அட்டவணைப் படி அந்த நாளிலே டெலிவரி. அதுக்கு முன்னோ பின்னோ ஒரு நாள் கூட எடுக்காது. கண்டிப்பா.”

”சரி, பிரச்சனை இல்லை, நான் சும்மாத்தான் கேட்டேன்”, திமித்ரி பம்மினான். சாந்தி அவன் பக்கத்தில் இருந்து, இங்கே இருக்கும் குழுவைப் பார்த்துக் கால் செண்டிமீட்டர் புன்னகை சிந்தினாள்.

“மலேயாக்காரர் எப்படி இருக்கார்?” மீட்டிங் முடியும் நேரம் திமித்ரி கேட்டான். அவனுக்கு அருகே மர முக்காலியில் டிஷ்யூ பேப்பர் மூடிய, பிஸ்கட் வைத்த தட்டிலிருந்து பாதி ஏ4 காகித சைஸில் எதுவோ தாவி குப்பைக்கூடையில் விழுந்ததை யாரும் பார்க்கவில்லை.


  • இரா.முருகன்

7 COMMENTS

  1. எழுத்தாளர் இரா.முருகனின் ‘திமித்ரிகளின் உலகம்’ கணினி உலகில் மந்திரவாதி ஊடுருவலாக வித்தியாசமான புனைவு. அசத்தலான கதை. வாழ்த்துக்கள்.

    -தஞ்சிகுமார்.

  2. கணினியின் பிடியில் மூளை உலர்ந்து போனவர்களை மகிழ்விக்க சுவையானா ஏக்கத்தை எடுத்துரைக்கும் கதை. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற சொற்றொடரே மய்யக்கருவோ ? வாழ்த்துக்கள் திரு. முருகனுக்கு.

  3. புதிய களம்! சிறந்த நடை! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

  4. Sir, the story put a smile on my face. Fantastic details, vivid imagination, thrilling ending…….. __/\__

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.