‘பெண் சினிமா’ – கட்டுரைத் தொடர் -1


புதிய அலை சினிமாவின் மூதாய்

ஆக்னஸ் வார்தா

2017 மே கான் திரைப்பட விழாவின் மார்ஷே-ட்யூ-ஃபிலிம் பிரிவின் சர்வதேச கூட்டுத் தயாரிப்பாளர் புரிந்துணர்வு சந்திப்புகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்றிருந்த சமயம். சர்வதேசங்களில் இருந்தும் குவியும் திரைப்பட ஆர்வலர்களின் கூட்டம் கானில் அதிகம் என்பதால், திரையிடல்களுக்கு செல்வதற்கான அனுமதியை பல மாதங்களுக்கு முன்பே அட்டவணைகளையெல்லாம் கிட்டத்தட்ட மனனம் செய்து, பார்த்துப் பார்த்து துல்லியமாக திட்டமிட்டு பதிவு செய்து பெற்றிருந்தாலும், விழா நடக்கும் நாட்களில் ஒவ்வொரு படத்திற்குமான டிக்கெட்டுகளை அந்தந்த நாட்களில் தனித்தனியே நாம் கவுண்டரில் பெற்றாக வேண்டும். அப்படி அடித்துப் பிடித்து நுழைவு சீட்டு பெற்றிருந்தாலும் ரெட் கார்ப்பெட் வேர்ல்ட் பிரீமியர் ஷோக்களுக்கு, ஃபார்மல் உடைகள் காலணிகளோடு பலமணி நேரங்கள் வரிசையில் நின்றால் தான் படத்தை காணும் பாக்கியம் கிடைக்கும். இதெற்கெல்லாம் எனக்கு பொறுமை வாய்ப்பதில்லை என்பதால், ரூல்ஸ் அதிகம் இல்லாத பிரஸ் ஷோக்களை தேர்ந்தெடுத்து என் வழக்கமான அழுக்கு ஜீன்ஸ், சட்டை ஜாக்கெட்டுடன் செல்வது தான் என் வழக்கம். விதிவிலக்காக இயக்குனர் ஆக்னஸ் வார்தாவின் முழு நீள ஆவணப்படம் “Faces Places”-ன் ரெட் கார்ப்பெட் ஷோவுக்கு கவுனும், ஹை ஹீல்சும், சிறப்பு நுழைவு டிக்கெட்டுமாக பல மணி நேரங்களுக்கு முன்பே ஆஜராகி விட்டேன். ஒரு படத்தைப் பார்க்க இதெல்லாம் தேவையா என்ற கேள்வி உங்களுக்கு நிச்சயம் எழும். அப்படி எழுந்தால் நீங்கள் அதைக் கான் திரைப்படவிழாக் குழுவிடம் தான் கேட்க வேண்டும்.

ரெட் கார்ப்பெட்டில் இயக்குனர் ஆக்னஸ் நடந்து வந்த இருபது நிமிடங்களையும் கானின் வரலாற்றுப்  புகழ்மிக்க கிராண்ட் தியேட்டர் லூமியரின் பிரம்மாண்டமான திரையில் காட்ட திரையரங்கில் அமர்ந்திருந்த பார்வையாளர்கள் அப்பொழுதே எழுந்து நின்று ஆரவாரமாய் கைதட்டி வரவேற்கத் தொடங்கி விட்டனர். தியேட்டருக்குள் அவர் வந்து நின்றும் நிற்காமல் கைகள் தட்டிக் கொண்டே யிருந்தன. ஒரு கலைஞருக்கு கிடைத்த உச்சபட்ச மரியாதையையும் அன்பையும் தரிசிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இயக்குனர் ஆக்னஸுக்கு குள்ளமான உடலமைப்பு என்பதால் இருக்கையின் மீது ஏறி நின்று பார்வையாளர்களை ஆற்றுப்படுத்தி அமரவைத்தார். எந்த நியதிகளுக்கும் கட்டுப்படாமல், தனக்கென்று ஒரு பாதையை வகுத்துக் கொண்டு, வரையறைகளை மீறிய சுதந்திர சினிமா மொழியை உருவாக்கி, திரைப்படக்கலையை வேறு உயரங்களுக்கு எடுத்துச் சென்ற ஒரு பெண் ஆளுமை கொண்டாடப்படும் தருணம் தந்த நெகிழ்வில் என் கண்களில் நீர் வழிந்துக்கொண்டே இருந்தது. திரைப்படம் முடிந்ததும் அவரிடம் ஓடிப்போய் கை கொடுத்தேன். அந்த கைகள் அவ்வளவு கனத்துடன் இருந்தன. அந்த கனம், வரலாற்றின் கனம். சினிமா மீதான தீராத வேட்கையின் கனம். பெண்ணிய தீரத்தின் கனம். அந்த கைகுலுக்கலுக்குப் பிறகு என் கைகள் நம்பிக்கையின் ரேகைகள் பழுத்து புதிதாய் தெரிந்தன. எனக்கு வார்த்தைகள் எழவில்லை. அவரிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் எல்லாம் பேசி தீர்த்து விட்டது போன்ற நிறைவை அந்த சில நொடிகள் நேர ஸ்பரிசம் தந்திருந்தது. 89  வயது ஆக்னஸ் வார்தாவும், ஓவியர் ஜே.ஆர்-ரும் ஃபோட்டொ பூத் வடிவிலான வேனில், பிரான்ஸின் கிராமப்புறங்களுக்கு பயணம் செய்து, சந்தித்து உரையாட நேரும் மக்களின் மெகாசைஸ் போர்ட்ரைட்ஸ் (portraits)-ஐ எடுத்து கையோடு பிரிண்ட் செய்து அவரவர் வீடுகளின் சுவர்களில் ஒட்டி அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை கௌரவிக்கும் “Faces Places” மனிதத்தையும் கலையையும் மிக அருகே வெகு அணுக்கத்துடன் வைத்ததில் வெற்றி பெற்ற படம். ஆவணப்படப் பிரிவில் ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப்படட “Faces Places”, ஒரு ஃபாண்டஸியின் குதூகலத்துடன் வாழ்க்கையின் மீது தீர்க்கமான விசாரணைகளைச் செய்துக்கொண்டே, சாதாரணங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் அசாதாரணங்களின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுவதோடு, ரோட் ஃபிலிமுக்கே உரிய ஆச்சரியங்களை தந்தபடி செல்லும் சினிமா அனுபவம்.

பொதுவாக ஆக்னஸின் படங்கள், புனைவு – ஆவணம், வண்ணம் – கருப்பு வெள்ளை, கலை – வெகுஜனம் என்ற வகைமாதிரிகளைக் கரைத்தும் கலைத்துப் போட்டும் தனித்துவத்துடன் கூடிய அசலான சுதந்திரமான திரைமொழியின் அனுபவங்களைத் தருபவை. இருபதுக்கும் மேற்பட்ட முழுநீளத் திரைப்படங்களையும், இரண்டு டஜன் குறும்படங்களையும், சில தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியிருக்கும் ஆக்னஸ் வார்தா புகைப்படக் கலைஞராக தன் கலைப்பயணத்தை தொடங்கியவர். பாரீஸ் மற்றும் ஐரோப்பாவின் வெவ்வேறு நகரங்களின் மியூசியங்களிலும், ஆர்ட் காலரிகளிலும் போட்டோகிராஃபராக பணியாற்றிய அனுபவத்தால், ஓவியங்களின் தாக்கங்களும், புகைப்படங்களின் வடிவரீதியான பாதிப்புகளும் அவருடைய படங்களை நூல் போல நெய்திருக்கும். உங்கள் வரலாற்றில் எனக்கு இடமில்லையெனில், புதியவரலாற்றை நானே உருவாக்குவேன் என்பதற்கேற்ப தன்னுடைய வாழ்க்கையை, கலையை, சிந்தனையை, படைப்பை, வெளிப்பாட்டை தனக்கே உரியபாணியில் அமைத்துக் கொண்ட ஆக்னஸ் வார்தா, அவர் வாழ்ந்து சென்றகாலத்தின் அழியாச் சின்னம் மட்டுமல்ல என்னைப் போன்ற பெண்படைப்பாளிகளுக்கு சுதந்திரத்தின் பேரடையாளம்.

2019 மார்ச்சில் தனது தொண்ணூறு வயதில் இறந்த ஆக்னஸ் வார்தாவின் புகைப்படத்தை, அதிகாரப்பூர்வமான போஸ்டராக அதே ஆண்டு மே மாதத்தில் நடந்த கான் திரைப்பட விழா அறிவித்தது. அந்தப் புகைப்படம் 1954-ம் ஆண்டு ஆக்னஸ் வார்தா, அவருடைய முதல் திரைப்படமான La Pointe Courte-ஐ இயக்கிய போது படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். மடக்கிய கால்சராயும், தொப்பியும், குழுவில் வேலை செய்த சக ஆண் டெக்னீஷியனின் தோளின் மீது வெறுங்கால்களுடன் நின்றுக் கொண்டு கேமிரா வியூஃ பைண்டரில் தனது ஃபிரேமை பார்த்துக் கொண்டிருக்கும் இயக்குனர் ஆக்னஸ் வார்தாவின் அந்தப் புகைப்படத்தை, தொடுவானத்தின் பின்புலத்திற்கு மாற்றி வடிவமைக்கப்பட்ட கான் திரைப்படவிழாவின் போஸ்டர், அவரை மட்டுமல்லாது பெண்ணிய சினிமாவின் சக்தியை அங்கீகரிக்கும் விதமாக அமைந்திருந்தது. ஆக்னஸின் படங்கள் எதுவும் கான் திரைப்பட விழாவில் விருதுகள் வாங்கியதில்லை என்பதுவும், வாழ்நாள் சாதனைக்கான கௌரவத்தை 2015-ல் தான் கான் திரைப்பட விழா அவருக்கு வழங்கியது என்பதுவும் நாம் அவதானிக்க வேண்டிய வரலாறு.

சினிமாவை ஜனநாயகப்படுத்த வேண்டிய தேவையையும், இலக்கியம் போன்று சினிமாவும் ஆசிரியரின் குரலாக மாற வேண்டும் என்பதையும், குறைந்த பட்ஜெட்டில் பரிசோதனை முயற்சிகளை செய்து  வடிவத்திலும்,  உள்ளடக்கத்திலும் பெரும்மாற்றங்களைக் கொண்டு வருவதின் முக்கியத்துவத்தையும்,  சினிமாவை நுண்கலைக்கு நெருக்கமாக வைப்பதற்கான முயற்சிகளையும் முன்வைத்த புதிய அலை சினிமா இயக்கம் 1958-ல் வலுப்பெற்றபோது,  அதன் முன்னோடியாக 1954-ஆம் ஆண்டிலேயே அதன் எல்லா அம்சங்களோடும் La Pointe Courte திரைப்படத்தை எடுத்திருந்தார் ஆக்னஸ். புதிய சினிமா அலையின் தொடக்கப்புள்ளியாக கருதப்படட Truffaut-வின் 400 Blows மற்றும் Godard-இன் Breathless படங்களுக்கெல்லாம் முந்தையது Agnes Varda- வின் La Pointe Courte. சினிமா வரலாற்றில் புறந்தள்ளப்படட இந்த உண்மையை, தொண்ணூறுகளில் பல பெண்ணிய திரைப்பட ஆய்வாளர்களும், விமர்சகர்களும் தலையீடு செய்து பல கட்டுரைகளை எழுதி, விவாதங்களை நடத்தி தான் நிறுவ முடிந்தது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில் பெல்ஜியத்திலிருந்து தப்பி ஃபிரான்ஸ் வந்த ஆக்னஸின் குடும்பம். ஆரம்ப நாட்களில் அவருடைய பதின்ம வயதில் தங்கிய மீனவ கிராமம் Sete-ற்கு, இறக்கும் தருவாயில் இருந்த உற்ற தோழருக்காக புகைப்படங்கள் எடுக்க தனது 25 வயதில் திரும்பும் ஆக்னஸ் சினிமா எடுப்பதற்கு முடிவெடுக்கிறார். காதல் உறவின் விளிம்பிற்கு வெளியிலும் உள்ளிலும் தத்தளித்துக் கொண்டிருக்கும் இளம் இண்டெலக்சுவல் தம்பதிகளுக்கிடையே நடக்கும் உணர்வுப் போராட்டங்கள் ஒரு இழையிலும்,  மீனவ மக்களின் வாழ்வியல் ஒரு இழையிலும் நடந்தேறும் கதைப்பின்னல் தான் La Pointe Courte. Staging-Unstaging என மாறி மாறி ஆவணமும் புனைவும் மயங்கி ததும்பும் மொழியில் புதுமையான சினிமாவை உருவாக்கிய ஆக்னஸ், படத்தின் கட்டமைப்பை William Faulkner-இன் Wild Palms நாவலின் பாதிப்பில் உருவாக்கியதாக பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார். படத்தின் தொகுப்பாளர் Alain Rasnais-இன் பங்களிப்பை முதன்மைப்படுத்தி ஆக்னஸின் உழைப்பை சிறுமைப்படுத்திய திரைத்துறையினர், அவரது அடுத்த முழு நீளப் படமாக  Cleo from 5  to 7  வெளிவந்து பொருளாதார ரீதியாகவும் வெற்றி பெற்ற பிறகு தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொண்டனர். புதிய அலை சினிமா இயக்கத்தை விட இடதுசாரி சிந்தனையும், சினிமாவும் இலக்கியப்பிரதிதான் என்றும் மற்ற கலைகளோடு இணைந்து சினிமாவை எல்லாவித பரிசோதனை முயற்சிகளுக்கும் உட்படுத்த வேண்டும் என்றும் முனைந்த Left Bank Movement குழுவைச் சார்ந்த இயக்குநர்கள் க்றிஸ் மார்க்கர் (Chris Marker), அலைன் ரெயினே (Alain Rasnais) போன்றோருடன் ஆழ்ந்த நட்புறவுடன் இருந்த ஆக்னஸ், அந்தக் குழுவின் மிக முக்கிய குரலான இயக்குனர் ஜேக்குவஸ் டெமியைத் (Jacques Demy) 1962-இல் திருமணம் செய்துக் கொண்டார். La Pointe Courte படத்தை விநியோகிக்க முடியாததாலும், சுயாதீன முயற்சிகளில் ஈடுபடுவதற்கான பொருளாதாரம் இல்லாததாலும் முதல் படத்திற்கும் இரண்டாவது படத்திற்குமிடையே தேசிய சுற்றுலாத் துறையோடு இணைந்து ஆவணப்படங்களைத் தயாரித்தார். பெண்களை வெறும் காட்சிப் பொருட்களாக்காமல் மனிதமயப்படுத்துவதிலும், அவர்களின் உலகின் மீதும் உழைப்பின் மீதும் கருத்தூன்றிய பார்வையைத் திருப்புவதிலும் ஆக்னஸ் தன்னுடைய ஒவ்வொரு ஆக்கங்களிலும் கவனம் செலுத்தினார். இளமை – முதுமை, அழகு -அழகின்மை, ஏழை – பணக்காரர் போன்ற இருமை எதிர்வுகளிடையே குறுகும் அர்த்தங்கள் மீது மட்டுமல்லாது, பெண்மை என்ற கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கத்தின் மீதும் தனது கேள்விகளை முன்வைத்தபடி இருந்தார். BBC-யின் கருத்துக் கணிப்பில் சினிமா வரலாற்றின் மிக முக்கிய முதல் நூறு படங்களில் Cleo from 5 to 7 இடம்பெற்றது.

என்னுடைய வாசிப்பில், Cleo from 5 to 7 மட்டுமல்ல, அவருடைய அடுத்தடுத்த முழு நீளப் புனைவுகளான Le bonheur மற்றும் Les creatures படங்களும் அறுபதுகளின் பெண்களை ரத்தமும் சதையுமாக ஒளிஒலிமயப்படுத்திய உயிர்ச்சித்திரங்கள். “பிறரால் பார்க்கப்படுபவளாக” தன்னை வார்த்துக் கொண்டிருக்கும் பெண், ஒரு புள்ளியில் “பிறரைப் பார்ப்பவளாக” தன்னுணர்வு பெறுவதை, அவளுக்கான உண்மையை, அர்த்தத்தை தானே கண்டடைவதை, விருப்ப உறுதிகளையும் தேர்வுகளையும் தன்வசப்படுத்துவதை மிக நுட்பமாக காட்சிப் படுத்தியிருப்பார் ஆக்னஸ். வழக்கமாக புறநிலையில் காட்டப்படும் பெண்ணின் இருப்பு ஆக்னஸின் படங்களில் அகநிலையில் உயிர்ப்புடன் எழுச்சி பெறுவதைக் காண முடியும். பயாப்ஸி டெஸ்ட் முடிவுகளுக்காக காத்திருக்கும் க்ளியோ தொடக்கத்தில் கவர்ச்சிக் கன்னியாக, சலனப்புத்தி கூடியவளாக, தன்னைக் குறித்த பிரமைகளை பெருக்கிக் கொள்பவளாக, தன்னலப் புத்தியுடையவளாக ஒரு இசை அரங்கத்தின் பாடும் பொம்மையைப் போல வருபவள் படிப்படியாக தன்னுணர்வு பெற்ற மனுஷியாக மாறுவதை அவளுடைய இரண்டு மணி நேர வாழ்வின் நிகழ்வுகளை வரைபடமாக்கி காட்டியிருப்பார்.

Clip from the film, “One sings, the other doesn’t”

சினிமாவை sculpting in time என்பார் இயக்குனர் தார்க்கவ்ஸ்கி. ஆக்னஸ், க்ளியோ ஃபிரம் 5 டு 7-ல் subjective time, objective time என காலத்தை புறத்திலும் அகத்திலும் வைத்து அதன் ஆடிகள் பெண்ணின் இருப்பை வரைந்து செல்வதைப் படமாக்கியிருப்பார். Cleo from 5 to 7 ஒரு கலைப்படைப்பாக இறவா நிலை அடைந்ததற்கு இன்னொரு முக்கிய காரணமாக நான் கருதுவது பெண்ணின் அடையாளத்தை அவளுடைய உடலின் முக்கியத்துவத்திலிருந்து விலக்காமலும் அதே சமயம் விடுதலை செய்ததும் தான். Le bonheur, Les creatures படங்களும் ஆண் பெண் உறவு, திருமணம், தாய்மை, குழந்தைகள், திருமணத்திற்கு வெளியே உருவாகும் உறவு சிக்கல்கள், தனி மனித சுதந்திரம் என எல்லாவற்றிலும் ஊடுறுவியிருக்கும் ஆணாதிக்கத்தின் அலகுகளைத் தான் அலசுகின்றன.

ஆக்னஸின் காலகட்டத்தில் தான் சிமாந்தோ பூவோவின் (Simone de Beauvoir) Second Sex வெளிவருகிறது. தாய்மையை மறுதலிக்கும் தீவிரப் பெண்ணிய போக்குகள் கோலோச்சியக் கால கட்டத்தில் ஆக்னஸ் திருமணம் செய்துக் கொள்கிறார். குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார். பெண்ணியத்தைப் பொறுத்தவரை ஆக்னஸின் வெளிப்பாடுகள் புரட்சிகரமானவை என்று வரையறுப்பதைவிட முதன்மை அக்கறை கூடியவை எனலாம். இடதுசாரி அரசியல் நிலைப்பாடுகளுடைய கலைஞராக, போருக்குப் பின்னான காலகட்டத்தில் கருத்தடை மற்றும் கருக்கலைப்பு உரிமைகள் பெண்களுக்கு மறுக்கப்பட்டதை எதிர்த்தார், போராட்டங்களில் கலந்துக் கொண்டார். பெண்ணின் உடலும் உடல் சார்ந்த தேர்வுகளும் முடிவுகளும் பெண்ணுக்கே என்று குரல் கொடுத்தார். 1971 ஏப்ரலில் வெளியான பிரகடனத்தில், சட்டத்தை மீறி கருக்கலைப்பு செய்துக் கொண்டதாக ஒப்புக்கொண்டு கையொப்பமிட்ட புகழ்மிக்க பெண் ஆளுமைகளில் ஆக்னஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கச் சிங்கம் வாங்கிய ஆக்னஸ் வார்தாவின் Vagabond, ஒரு படைப்பாளியாக என்னை பிரமிக்க வைத்த படம். சமூகத்தின் எல்லாவித போலித்தனங்களை நோக்கியும் தன் நடுவிரலைக் காட்டும் படத்தின் கதாநாயகி மோனா ஒரு ட்ரிஃப்டர் (Drifter). தலைக்கு மேல் கூரையுமில்லை, கால்கள் செல்லும் பாதைகளுக்குப் பெயருமில்லை, அடைவதற்கு இலக்குமில்லை, இழப்பதற்கும் ஏதுமில்லை என்று மனித இனம் உருவாக்கியிருக்கும் எல்லாவித நிறுவனங்களுக்கும் வெளியே வாழ்ந்துக் கொண்டிருக்கும் ஒரு இளம்பெண்ணின் மரணத்திலிருந்து பின்னோக்கி விரிகிறது வேகபாண்ட். ரோட் ஃபிலிமா, மர்மப் படமா, பல்வேறு கதாபாத்திரங்களின் நினைவுகளை கூட்டிப் பிணைத்து சொல்லப்படும் கதையா என்று வியக்க வைக்கும் அடுக்குகள் கூடிய திரைக்கதை வடிவம் பிரதியின்பத்தை அவ்வளவு ரசனையுடன் கூட்டித் தருகிறது. மோனாவின் திமிறும் இளமையும், பறக்கும் கூந்தலின் அக்கறையின்மையும், கரையேறிய பற்களும், ஒளிரும் கண்களும், நாறும் உடைகளும், விரல் நகங்களின் அழுக்கும், உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையின் ரெளத்திரமும்,சுதந்திரமான இருப்பின் தினவும் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடியவை அல்ல.

Agnes Varda & Sandrine Bonnaire who won French Cesar Awards for Best Actress, Film Vagabond 1986

இறந்து போன மோனாவைப் பற்றிய தகவல்களை இயக்குனர் திரட்டுகிறபோது சந்திக்கும் மனிதர்கள் மோனாவைக் குறித்துப் பகிர்ந்துக் கொள்ளும் அபிப்ராயங்கள், அனுமானங்கள் மற்றும் தீர்ப்புகள் மோனாவைப் புரிந்துக் கொள்ள உதவுவதைவிட அவரவர்களின் மன உயரங்களை அளந்துக் காட்டி விடுகிறது. வலதிலிருந்து இடது போகும் டிராக் ஷாட்கள் இடதிலிருந்து வலதாக வாசித்து பழக்கப்பட்ட பார்வையாளர்களின் கிரகிப்பை உறுத்தும் என்பதால், இயக்குநர்கள் பெரும்பாலும் தவிர்த்து விடுவார்கள். ஆக்னஸ் தன் வேகபாண்டை பதின்மூன்று வலது – இடது டிராக் ஷாட்களைக் கொண்டு கோர்க்கிறார். ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கொரு தடவை வரும் டிராக் ஷாட்களின் இடையிலான கதையோட்டத்திற்கு சம்மந்தப்பட்ட ஒரு பொருளிலிருந்து அடுத்த டிராக் ஷாட் தொடங்கும். விடுவிக்கத் தூண்டும் புதிர் போல படம் நம்மை கதைக்குள் இழுக்கும் மேஜிக்கை படம் அநாயாசமாக நிகழ்த்தும். ஆவணப்படக் கூறுகளை புனைவுக்கு லாவகமாகப் பயன்படுத்தி சொல்ல வந்த கதையின் நம்பகத் தன்மையை முகத்தில் அறைவதைப்போல சொல்லும் ஆக்னஸின் திறமை அளப்பறியது.

 

From the film Lion, Love (..and Lies)

இளம் படைப்பாளியாக ஆக்னஸின் கவனம் மேற்கில் பொதுவாக புறந்தள்ளப்படும் வயது முதிர்ந்தப் பெண்களின் மீது குவிந்தது அபூர்வமானது. சிமான் த பூவோவின் முக்கியமான ஆய்வு நூல் “The coming of age” பெண்ணியத்திற்கான கொடையானது போல, ஆக்னஸ் வார்தாவின் L’Opera -Mouffe, O saisons, O chateaux, Salut le Cubains போன்ற படங்களில் பிரதிநிதித்துவம் பெறும் வயது முதிர்ந்தப் பெண்கள் திரைப்படக் கலைக்கு கொடை. அவருடைய ஆவணப்படம் Elsa la Rose, புகழ்பெற்ற சர்ரியலிஸக் கவிஞர் லூயிஸ் அரேகானை (Louis Aragon) விடுத்து, அவரது படைப்பூக்க நாயகியும் மனைவியும் எழுத்தாளருமான எல்ஸாவை (Elsa Triolet) கதாநாயகியாக்கியது. 7 rooms, kitchen and a bathroom- குறும்புனைவில் பழுத்த மூதாட்டி (வேகபாண்ட் படத்தில் வரும் அதே மூதாட்டி) மார்தெ ஜேர்னியஸ் (Marthe Jarnias) பனியால் போர்த்திய பாழடைந்த குளியலறையில் வெள்ளைச் சிறகுகள் மழையாக பொழிய, நிர்வாணமாக நனையும் காட்சி உறைந்த கனவின் தன்மையுடையது. எழுபதுகளில் அவர் எடுத்த முழு நீளப்படங்கள், உடல் அரசியலை மையமாக வைத்தெடுக்கப்பட்ட “One Sings, the other doesnt” மற்றும் நியூயார்க்கின் எதிர் கலாசாரக் கலக கலைஞர்களை வைத்து ஹாலிவுட்டை நையாண்டி செய்யும் Lions, Love (…and Lies) அரசியல் கூர்மை கூடிய படைப்புகள். Black Panthers, Uncle Yanko என்று நீளும் அவரின் ஆவணப்படப் பட்டியல் ஆக்னஸின் அயராத உழைப்பின் சான்றுகள்.

2017 – Honorary Oscar Award

இரண்டாயிரத்திற்குப் பிறகு நடந்த டிஜிட்டல் புரட்சியும், மலிவான, எடை இழந்த கேமிராக்களின் வருகையும், இலகுவாகிவிட்ட ஒலிச்சேர்க்கையும், படத்தொகுப்பும் ஆக்னஸை காட்சிக் கலை நோக்கி தள்ளியது. புகைப்படக் கலைஞராக தொடங்கி திரைப்பட இயக்குநராக மிளிர்ந்த ஆக்னஸ் விசுவல் ஆர்ட்டிஸ்டாகவும் பாரம்பர்யம் மிக்க சர்வ்தேச மியூசியங்களிலும், கேலரிகளிலும் காட்சிக் கலை நிறுவல்களைப் படைத்தார். கட்டம் கட்டிவிட முடியாத கலைஞராக விடுதலையின் மொத்த வடிவமாக அவரின் வாழ்க்கைப் பயணம் திளைப்பின் ஏகாந்தம் நிறைந்தது.

ஆக்னஸின் ஒரு சில படங்களை திரைப்பட விழாக்களில் ஏற்கெனவே பார்த்திருந்தாலும், “பெண் சினிமா” கட்டுரை தொடருக்காக ஐம்பதுக்கும் மேலான அவரின் மொத்த படைப்புகளையும், இணையம் முழுதும் விரவியிருக்கும் எண்ணற்ற பேட்டிகளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய “Gleaners and I” பார்த்துவிட்டு நான் என்னைக் கண்ணாடியில் பார்த்தது போல உணர்ந்தேன். இவ்வுலகம் வேண்டாம் என்று தூக்கியெறிந்ததையும், உதாசீனப் படுத்தியவற்றையும், கர்வத்தால் வீணடிப்பதையும், ஆணவத்தால் கீழ்மைப்படுத்துவதையும் பெண் கதைசொல்லிகளான நாங்கள், எங்கள் உணர்வால், அன்பால், அரவணைப்பால், வார்த்தைகளால், கேமிராவால், மைக்ரோஃபோனால் மிக கவனத்துடனும் அக்கறையுடனும் பொறுக்கி சேகரித்து ஆவணப்படுத்திப் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறோம். கலைத் தோட்டிகளால் இப்பிரபஞ்சத்தின் ஆன்மா அமைதியும் அழகும் பெற்று ஒளிரட்டும்.


லீனா மணிமேகலை

கவிஞர்திரைப்பட இயக்குனர்

2 COMMENTS

  1. ஆக்னஸைப் பற்றிய விரிவானக் கட்டுரை. அவரதுப் படங்களைப் பார்க்கவேண்டும். புதிய அலையின் முன்னத்திய ஏர் என்பது புதியத் தகவல். தொடருக்கு வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.