கயலின் நீள் கூந்தலும் ஊர் மக்களும்


லாயர் ஆறுமுகத்தின் அலுவலகத்திற்குள் கயல் நின்று கொண்டிருந்தாள். காலையில் லாயரிடமிருந்து வந்த குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் எல்லா வேலைகளையும் அப்படியே விட்டுவிட்டு இங்கே வந்து விட்டாள்.  மதிய உணவிற்கு அரிசி ஊற வைத்திருந்தாள். வாழைத் தண்டை மோரில் அரிந்து போட்டிருந்தாள்.

துணிகள் மெஷினில் ஓடிக் கொண்டிருந்தது. இன்னும் வீடு பெருக்கவில்லை. அம்மாயியின் ஈரத் துணிகளைக் கொல்லையில் துவைக்கும் கல்லினருகே போட்டிருந்தாள்.

அந்தியூர் சந்தையில் அவள் அம்மா சாந்தி வாங்கி வந்திருந்த புளியை வெயிலில் உலர்த்த வேண்டும். நாளை வெள்ளிக் கிழமையென்பதால் இன்றைக்கே வீட்டைச் சுத்தப்படுத்தித் துடைக்க வேண்டும் என எல்லாவற்றையும் அப்படியே கிடத்தி இங்கே வந்துவிட்டாள்.

இன்னும் அவர் வரவில்லை.. நால்ரோடு போகும் சாலையில் பேருந்து நிறுத்தமருகேயே அவர் அலுவலகம் இருந்தது. நிறுத்தத்திற்கு ஒட்டிய சாலையிலிருந்து இறக்கமாக நாலைந்து படிக்கட்டுகள் இறங்கியவுடன் தென்படும் ஒற்றை பெரிய அறை கொண்ட அலுவலகம் அது. உள்ளே சாய்வில்லாத மரபெஞ்சும், அருகிலேயே நீர் கேனும் இருந்தது.  பெஞ்சில்   மூன்று பேர் அமர்ந்திருந்தனர். மூவருமே வெள்ளை வெளேரென தும்பைப் பூவின் நிறத்தை ஒத்த வெள்ளை வேட்டி, சட்டையில் இருந்தனர். சலவையின் வாசம் நெருடியது. கயல் சற்று தள்ளி நின்று கொண்டிருந்தாள். நிலைவாசலருகே நிழல் தெரிந்ததும் திரும்பிப் பார்த்தாள். வெள்ளை கதர் சட்டை மற்றும் பழுப்பு நிற கால்சட்டையில் லாயர் ஆறுமுகம் வந்திருந்தார். வியர்வை துளிகளாய் ஆங்காங்கே நெற்றியில் மினுமினுத்தது. அவளைப் பார்த்தவுடன் இவள் ஏன் வந்தாள் என்பது போல் பார்த்தார்.

“என்னம்மா நாந்தான் சொன்னேன்ல”

“சார் என்ன திடீர்னு இப்படி சொல்றீங்க?  அவம் பக்கம் சாஞ்சுட்டீங்களா?”

அங்கிருந்த மற்றவர்கள் இவர்களின் சம்பாஷணையைக் கவனிக்க நிமிர்ந்து அமர்ந்தார்கள். உடனே லாயரின் முகம் வேறு போக்கிற்கு போனது.

 “ஏங்கம்மா, உங்களுக்கு நல்லது செஞ்சா, நீங்க என்னையே தப்பா சொல்றேங்களே.  நல்லது…. ஃபோன்ல பேசிக்கலாம். இப்போ வேலை இருக்கு. போயிட்டு வாங்க” என அவளை உதாசீனப்படுத்தி வேகமாகச் சென்று அவர் இருக்கையில் அமர்ந்து எதையோ தேடுவது போல் அங்குமிங்கும் பார்த்தார். கயலுக்கு கோபம் வரவில்லை. இப்படி எல்லா கழுத்தறுப்பையும் பார்த்தாயிற்று.  அடுத்து என்ன செய்யலாமெனதான் யோசித்தாள்.

அந்தியூர் நெடுஞ்சாலையில் செல்லும் பேருந்திற்கு காத்துக்கொண்டிருந்தாள். இதற்கா இத்தனை வருடங்கள் காத்துக் கொண்டிருந்தோம் என யோசித்ததும்,நெஞ்செல்லாம் இறுகிப்பிடித்தது போல் பாரமாக இருந்தது. அவளுடைய பேருந்து வந்ததும் ஏறிக் கொண்டாள். நல்ல கூட்டம். சந்தைக்குச் செல்பவர்கள் அதிகமாக இருந்தனர். வெக்கையின் கசகசப்பில் இன்னும் வியர்வை ஊற்றியெடுத்தது. அவ்வப்போது ஒற்றிக் கொண்டாள். ஊர் வந்ததும் இறங்கினாள். இன்னும் வெயில் உச்சிக்கு ஏறியிருந்தது. அவள் ஊர் பேருந்து நிறுத்தத்திலிருந்த ஒற்றை கொன்றை மரத்திலிருந்து மஞ்சள் பூக்கள் மரத்தைச் சுற்றிலும் வட்டமாக உதிர்ந்து கிடந்தது. காற்று சிறிதுமில்லை.

குடை கொண்டு வந்திருக்கலாமென வெயிலில் நடக்கும் போதுதான் உறைக்கிறது. வீட்டிற்குள் வந்ததும் அயர்வாய் அம்மாவிடம் வக்கீல் நடந்த விதத்தைக் கூறினாள். நீர் தாகத்தால் தொண்டை வறண்டது. கயலின் அம்மா சாந்தி எலுமிச்சை பழச்சாறு கலந்து கொடுத்தபடி

“அப்பவும் யசோக்கா சொல்லுச்சு. அவனை நம்பாதே. காசபுடுங்கிக்கிட்டு ஒன்னத்தையும் புடுங்க மாட்டான்னு. நீதான் இந்தாளையே புடிச்சு தொங்கிட்டு கெடந்த?

“எனக்கென்னங்கமா தெரியும். இத்தன வருசமா நல்லாதே இருந்தான். அவம் பணத்த கொடுத்திருக்கானாட்டருக்கு. அதான் அவம்பக்கம் சாஞ்சுட்டான்” என்றாள்.

“இப்ப என்ன பண்றது.?”

“வேற லாயர பாத்து கேக்கலாம்.”

“என்னத்தையோ பண்ணு. அவன் 5 லட்சம் கொடுக்கற மாரிதான். இப்படி பொழப்பு போகுதே என்ன கிரகமோ” என்று புலம்பியபடி சமையலறைக்குச் சென்றாள்.

கயல் தாழ்வாரத்தில் வைத்திருந்த புளியைக் கொண்டு போய் பின்கட்டில் வெயிலில் காய வைக்கப் போனாள். அடுத்து வீட்டில் ஒவ்வொரு வேலையையும் இழுத்துப் போட்டு செய்ய ஆரம்பித்தாள். தினமும் அப்படித்தான் பேய் மாதிரி அவளது ஆத்திரங்கள் அடங்கும் வரை செய்வாள்.. அவள் அம்மாவை செய்ய விடுவதில்லை. செய்தாலும் கோபம் வந்து கத்துவாள்.. பெரிய வீடு. இருப்பது மூன்று பேர் மட்டும்தான் கயலும், அவளது அம்மாவும், மூப்பினால் படுத்திருக்கும் அவளுடைய அம்மாயி சுந்தரியும்.

அந்த வீதியில் ஓடிக் கொண்டிருக்கும் சாக்கடையின் மேலே ஒரு பெருங்கல்லை வாசலாகப் போட்டு,  நாலடி தூரம் வரை சிமெண்ட் தரை பூசப்பட்டு அதன் பின் ஆரம்பிக்கிறது கிழக்கு பார்த்த எண்ணெக்கார வீடு. அந்த வீட்டில் காலங்காலமாக எண்ணெய் மற்றும் அரிசி வியாபாரம் செய்வதால் அந்த பெயர் அறிமுகமாய் வந்துவிட்டது. அடுக்கு ஓடுகள் வேய்ந்த தாழ்வாரத்தில் இருபக்கமும் பெரிய திண்ணைகள், இடது புற திண்ணையின் மூலையில் திண்ணையைப் பார்த்தது போல் ஒரு சிறு அறை. அந்த அறை திறந்து பலப்பல வருடங்கள் ஆகிவிட்டது. எண்ணைப் பிசுக்கில் தூசு படிந்த பூட்டு இறுகிப் போய் தொங்கிக் கொண்டிருக்கும். அந்த காலத்தில் வியாபாரம் செய்து விட்டு நேரங்கெட்ட நேரத்தில் மாட்டு வண்டியில் வீடு சேரும் போது, வீட்டுக் கதவைத் தட்டாமல், இந்த அறையில் படுத்துக் கொள்வார்கள் வீட்டின் ஆண்கள் என்று அம்மாயி சிறு வயதில் சொல்லக் கேட்டிருக்கிறாள் கயல்.

பெரிய தேக்குமர நிலைக்கதவைத் திறந்து போனால், ஐந்தடிக்கு நடை பாதை.  ஆங்காங்கே தூண்கள் தாங்கிய பெரிய கூடம்,கூடத்தின் இடது ஓரத்தில் முற்றம். கூடத்தின்  நான்கு மூலையிலும் நான்கு அறைகள். அதில் மேற்கு மூலையில் இருப்பது சமையலறை. சமையலறையே வீடு போலிருந்தது. ஓரத்தில் பாத்திரம் கழுவுமிடமும் தனியாகக் கட்டப்பட்டிருந்தது. சமையலறைக்கு எதிர்புற மூலையில் படுக்கையறை இருக்கிறது. அங்குதான் அவளுடைய அம்மாயி படுத்திருக்கிறாள்.  .

சமையலறைக்கு வலப்பக்க மூலையில் இருக்கும் அறை இன்னொரு படுக்கை அறையாக வைத்திருந்தனர். அதற்கு எதிர்ப்புற மூலையில் இருக்கும் அறை யாரும் பயன்படுத்தா அறை என்பதால் அதுவும் பூட்டியே கிடக்கிறது. அங்கு போவதற்கான வாய்ப்புகளோ ஈடுபாடோ இல்லை. உள்ளே நிறைய பழைய சாமான்கள் , ஓட்டை ஒடிசல்கள், சிறு வயதில் அவள் பயன்படுத்திய ஒயர் கூடை, ட்ரங்கு பெட்டிகள், பழைய துணிகள் புகைப்படங்கள்  எல்லாம் கலந்து ஒரு பழைய மக்கிய வாசனையைக் கொடுத்திருந்தது. இருளாக இருக்கும் அந்த அறையில் சிறிய ஜன்னல் மட்டுமே இருக்கும் அதைத் திறந்தால் வெளிப்புறம் திண்ணையை ஒட்டி இருக்கும் அந்த அறையின் உட்பகுதி தெரியும். அந்த அறையிலும் ஒரு கயிற்றுக் கட்டிலைத் தவிர வேறொன்றுமில்லை.

சமையலறைக்கும் படுக்கையறைக்கும் நடுவில் மீண்டும் புறக்கடைக்குச் செல்ல ஒரு நடைபாதை.  புறக்கடை பக்கவாட்டில் கழிப்பறையும் குளியலறையும் அமைத்திருந்தார்கள். அங்கு ஒரு துணி துவைக்கும் கல்லுமிட்டிருந்தனர்.

அதற்குப் பிறகு மீண்டும் ஓடு வேய்ந்த அகலமான வெளி வராண்டா போலிருந்தது.  அதன் பக்கவாட்டில் இன்னொரு அறை கட்டப்பட்டிருந்தது. அதில் அரிசி மூட்டை கிடங்கு வைத்திருந்தார்கள். அறையின் வெளியே பழைய கயிற்றுக் கட்டில், சாக்கு மூட்டைகள், வட்ட வடிவில் சுற்றி வைக்கப்பட்டிருந்த கயிறு, பயன்படுத்தாத சமையல் பாத்திரங்கள், மண் பானைகள் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தன. அந்த வராண்டாவின் கொல்லைப் புற கதவைத் திறந்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவர்களின் காலி இடம் இருந்தது. அதன் எல்லையில் ஒரு மரக் கதவு. அது அடுத்த வீதியைத் தொட்டிருந்தது. அந்த இடம் சரியாகப் பராமரிக்கப்படாமல் முட்செடிகள் புதர்கள் மண்டியிருந்தன. புதர் மண்டியிருக்கும் இடத்தில் ஒரு பாழுங்கிணறு பயன்படுத்தாமல், முள்வேலிகளால் மூடி வைத்திருந்தார்கள். அதனருகில் பாழடைந்த ஓர் கழிவறையும் இருக்கிறது. புதர்களால் முட்செடிகளாலும் மூடியிருக்கும். முதல் பத்தடி மட்டுமே சுத்தப்படுத்தி 2 தென்னை மரங்கள், கனகாம்பரம், ஜாதி, முல்லை செடிகள், கத்திரிக்காய்,கொய்யா ஆகியவற்றை வளர்க்கிறார்கள்.  இருட்டிய பிறகு கொல்லைப்புறம் வரவே மாட்டார்கள். நாலைந்து முறை கதவு வரை பாம்பு வந்துவிட்டது. கொல்லைப்புற கதவை அரிசி லோடு வரும்போதும் ஏற்றும் போதும் மட்டும் திறப்பார்கள்.

மறுநாள் காலையில் சூரியன், தூங்கி எழுந்து கைகளை, சோம்பல் முறிப்பது போல் தங்கக் கதிர்களை நிலத்தில் பரப்பியிருந்தது. கயல் கூடத்தின் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்தாள். லேசான இளஞ்சூட்டில் அவள் பாதம் இருப்பதை உணர்ந்தாள். அவளின் நீண்ட ஈரக் கூந்தல் தரையில் படர்ந்து பாம்பு போல் மினுமினுத்தது. மின்விசிறியின் காற்றில் அங்குமிங்கும் ஆடியது.

முன்பெல்லாம் கயல் தலைக்குக் குளிப்பதே ஒரு நாள் வேலை. கயலுக்கு கெண்டைக் கால் வரை முடி தழைத்திருக்கிறது. மென்மையான இயற்கையிலேயே லேசான செம்பட்டை முடி. ஒவ்வொரு வெள்ளிக் கிழமையில் சூரிய உதயமான பின், நல்லெண்ணெயில் சில குறுமிளகு, ஒரு பூண்டு போட்டு காய்ச்சிய எண்ணெயை வெதுவெதுப்பாக தலைவேர் முதல் நுனி வரை தடவி ஊற வைத்து, சீகைக்காயில் அரப்பு சேர்த்து நுரை தளும்ப தலைமுடியை அலசி குளித்து வெளி வந்ததும், கயலின் அம்மா சாந்தி தயாராக சாம்பிராணி புகை போட்டு வைத்திருப்பாள். கயலின் தலைமுடியில் சாம்பிராணி புகையில் காண்பித்து ஆற வைப்பாள். வீடு முழுவதும் சாம்பிராணி புகை மண்டலமாக இருக்கும். அதன் பின் லேசான ஈரத்தன்மையில் நீர் சடைப் போட்டுக் கொண்டு வெளியே வந்து வீதியை வேடிக்கை பார்ப்பாள். அதற்குள் பொழுது எட்டைத் தாண்டியிருக்கும். வெயில் அவள் கூந்தலில் பட்டு, தங்க நூழிலை போல் பளபளக்கும், வீதியில் பள்ளிக்கும், வேலைக்கும் செல்பவர்கள் அவளின் சரிகை போல் மின்னும் கூந்தலை ஒருமுறையேனும் ரசிக்காமல் செல்ல மாட்டார்கள்..

கயல் நல்ல அழகு. மினுமினுக்கும் மாநிற சருமம், அவளுக்கு நீள கண்கள், நீள்வட்டமுகம்,  சிரிப்பது போன்ற கன்னக் கதுப்புகள், தாடையில் ஒரு அழுத்தமான குழி, எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு அழகான கூந்தல். கயலின் கூந்தலை இதுவரை வெட்ட சாந்தி அனுமதிக்கவேயில்லை. அது ராஜகுமாரனை வரவேற்கும் இயற்கை கம்பளம் எனச் சொல்வாள்.

அவளுக்குத் தெரிந்த ரெபுன்செல் கதையை எண்ணெய் தேய்க்கும் போது கயலுக்குச் சொல்வாள். முன்னொரு காலத்துல ராஜகுமாரனுக்கு பொண்ணு பாத்தாங்களாம். அப்போ எல்லா பொண்ணுங்களும் அழகானவங்களா, அறிவானவங்களா இருந்ததால ராஜகுமாரனுக்கு குழப்பம். அப்போ அங்க வந்த மந்திரி சொன்னாராம். “ராஜாவே. புஸ்தகங்கள படிக்கப் படிக்க அறிவு வளரும், அனுபவங்கள பாக்கப் பாக்க புத்தி பெருகும். பழகப் பழக கலை பெருகும். ஆனா என்ன செஞ்சாலும் கூந்தல் மட்டும் எல்லாருக்குமே செழிப்பா வளரும்னு சொல்ல முடியாது. அதனால நீள கூந்தல் இருக்கிற பெண்கள் இயற்கையிலே ராஜகுமாரிகள்னு சொன்னாராம்.

அதன்படி நாம தான் ராஜகுமாரன் கல்யாணம் பண்ணிக்கனும்னு  வசதியான, வசதியில்லாத எல்லா குமரிகளும் மூலிகை தைலம் போட்டு வளர்த்தியும் நினைச்ச மாதிரி வளரலையாம். ஆனா ராஜா நகர்வலம் போறப்போ ஒரு ஏழைப்பெண் தரை வரை தன்னோட முடியை தவழ விட்டு பாத்திரம் விளக்கிறத பார்த்தானாம். இவதான் பிறப்பிலேயே ராஜகுமாரின்னு சொல்லி அவளையே கல்யாணம் பண்ணிட்டானாம் என்ற கதையைச் சிறு வயதில் சாந்தி கயலுக்கு அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தாள். கயலுக்கு பெருமை பிடிபடாது. தானொரு ராஜகுமாரி என சொல்லிக் கொள்வாள். யாருக்குதான் ராஜகுமாரியாக இருக்கப் பிடிக்காது. அவளும் கற்பனையில் அப்படி ஒரு மிதப்பிலிருந்தாள்.

அவள் படித்த பள்ளியிலேயே அவளுக்குத்தான் அதிகமான கூந்தல் இருந்தது. கூடப் படிக்கும் தோழிகளில் யாருக்காவது எலிவால் போலிருந்தால்.”ஐயே எலிவால் மாதிரி முடி இருக்கு, உனக்கெல்லாம் ராஜகுமாரன் கிடைக்க மாட்டான். அங்க வேலை பண்ற வேலைக்காரன்தான் கிடைப்பான்” என எள்ளல் செய்வாள்.

இப்போது அதிமாக கயல் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை.  தூணில் சாய்ந்திருந்த கயல் தன் கைகளை முன்னும் பின்னும் திருப்பினாள். சுருக்கங்கள் வந்திருக்கிறதா என நோட்டமிட்டாள்.  இரு தினங்கள் முன்பு பார்த்த சித்ராவின் ஞாபகம் வந்து போனது. ஈஸ்வரன் கோவிலில் பிரகாரத்தைச் சுற்றி வந்துவிட்டு கோவிலின் முன்பிருந்த அரச மரத்தில் அமர்ந்திருந்த போது சித்ராவைப் பார்த்தாள். அவளுடைய பள்ளித் தோழி அவள். குண்டாகி சேலையை கணுக்கால் அளவு தூக்கிக் கட்டியிருந்தாள். திடீரென அவள் குட்டையாகிவிட்டாளோ என கயலுக்கு தோன்றியது. வாஞ்சையாக அவள் கையை பிடித்துப் பேசினாள்.அவளுடைய மகள் கல்லூரியில் படிப்பதாகச் சொன்னதும் கயலின் மனம் சட்டென குறுகிக் கொண்டது. 

அவளுடைய ஏனைய தோழிகளுக்கும் அவளுடைய கதை தெரிந்திருப்பதால் அவளிடம் பெரிதாக விசாரிக்க மாட்டார்கள். அப்படி அவர்கள் என்ன கதை தெரிந்து வைத்திருக்கிறார்களோ என இவளுக்கும் தெரியாது. அவர்களும் இவளிடம் கேட்க மாட்டார்கள், ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதையாக அவளைப் பற்றிச் சொல்வார்கள்.

அவள் முருகனைப் பல வருடங்களாகக் காதலித்ததும்,  அவன் ஏமாற்றியதால் இவள் திருமணமே செய்து கொள்ளவில்லையென்றும்,  அவளுக்கு வேறொருவனுடன் திருமணம் ஆகி, பழைய காதலனை மறக்க முடியாமல் மீண்டும் அம்மா வீட்டிற்கு வந்ததாகவும், கணவன் அவளது தவறான போக்கைக் கண்டித்து அவளைத் துரத்திவிட்டதாகவும்,  இப்படிப் பல கதைகள் அவள் மீது ஊர் திணித்திருந்தது. அவை எதுவும் தனது காதை தீண்டாமல் இல்லை. கடந்து போகவும், அலட்சியப்படுத்தவும் அவள் முருகனை காதலித்தபோதே கற்றுக் கொண்டாள்.. அவனை காதலித்ததைத் தவிர வேறொரு தவறும் அவள் செய்ததில்லை

முருகனுக்குப் பல தொழில்கள் இருந்தன. அந்தியூரில் காய்கறி சந்தை குத்தகை, திருப்பூரில் தறி ஃபேக்டரி, மஞ்சள் வியாபாரம் என சொத்தும் செல்வாக்கும் அதிகமிருந்தது. அதிலெல்லாம் ஈடுபாடில்லாமல் இவள் பின்னாடி அலைந்து கொண்டிருந்தான். முகப்பருக்கள் நிறைந்த முரட்டுத் தனமான அவனுடைய தோற்றம் கயலுக்கு மிகவும் பிடித்திருந்தது. தன்னுடைய ராஜகுமாரன் இவனென காதலில் திளைத்தாள். அவள் அவனைக் காதலித்தது ஊருக்கே தெரிந்தும், ஊர்ப்பேச்சை அவள் உதாசீனப்படுத்தக் கற்றுக் கொண்டிருந்தாள். கயலின் முகத்தில் எப்போதும் ஒரு கர்வம் துளிர்த்திருக்கும். அழகாய் இருப்பதாலோ, அவனைக் காதலிப்பதாலோ, தன்னுடைய நீண்ட கூந்தலினாலோ, எப்பொழுதும் அலட்சியமாய்தான் வீதியில் நடந்து செல்வாள். அவன் சரியில்லாதவன் பல பேரைக் காதலித்தவன் என அவள் தோழிகள் சொல்லியும் அவள் கேட்கவில்லை. வருடங்கள் போலவே அவளுடைய காதலும் சேர்ந்து போய்க்கொண்டிருந்தது ஒரு நாள் “எனக்கு சொத்து முக்கியம் உன்னை மணம் செய்தால் வீட்டில் தரமாட்டார்கள்” என சர்வ சாதாரணமாய் சொல்லி விலகிவிட்டான். அவளுக்கு ஏற்பட்ட மனவலியை உள்ளேயே அமர்த்தி புழுங்கிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு வீட்டில் வரன் பார்த்த போது அதே ஊர்ப்பேச்சினால் அவளுடைய திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே போனது. ஆரம்பத்தில் வெளியில், அவளைத் தெரிந்தவர்கள் சினேகமாய் உதிர்க்கும் சிரிப்பில்    “வேணும் என்ன ஆட்டம் போட்ட. அதான் அவன் கழட்டி விட்டான்” என்ற அர்த்தம் தொனிக்கும். வருடங்கள் போகப் போக அவர்களின் அதே சிரிப்பில் “இவள் பாவம்” என்ற இரக்கம் சுரந்திருந்தது. இந்த இரண்டு மனப்பாங்குமே கயலுக்கு ஒவ்வாததாக இருந்தது.

கயல் மீண்டும் வக்கீல் ஆறுமுகத்திற்கு அழைத்தாள். நல்ல வேளை அவர் அவளது அழைப்பை எடுத்தார்.

“என்ன சார் ஆச்சு? ரெண்டு நாள் முன்னால பேங்குக்கு போனா அவனோட செக் பவுன்ஸ் ஆயிடுச்சு. உங்கள கேட்டா இதோட விட்டுட சொல்லி மெசேஜ் பண்றீங்க. ஒங்களதான நம்பியிருந்தேன்?”

“என்னம்மா பண்ணச் சொல்றீங்க. நீங்க அஞ்சு வருசமா விவாகரத்துக்கு போராடிட்டுதா இருந்தீங்க. அவன் விவாகரத்து கொடுத்ததே பெரிய விசயமா போச்சு நம்முளுக்கு.

இனி ஆரு அவங்கூட மல்லுக்கட்ட முடியும் சொல்லுங்க? அதில்லாம நீங்க ரெண்டு பொம்பளைங்க மட்டும் என்ன பண்ண முடியும்?  கொடுக்க வேண்டியதுல அஞ்சு லட்சமாவது கொடுத்தானே அதோட நல்லதுன்னு ஆக வேண்டிய காரியத்தைப் பாருங்க” என்றபடி அழைப்பை துண்டித்தான்.

“என்ன சொல்றான் அவன் “என கேட்டப்படியே சாந்தி வந்தாள்.

“திமிரப் பாருங்கம்மா, நம்ம ரெண்டு பெரும் பொம்பளைகளாம் என்ன பண்ண முடியும், கொடுத்த பணத்தோட விட்டுடுங்கணு சொல்றான்.

“பன்னாட்டு புடிச்சவன நம்பாதானு எத்தன தடவ சொன்னேன். இப்ப என்ன பண்றது?

“போய் வேற வக்கீல பாக்கிறேன். பஸ்ல வாறப்ப அதான் நினைச்சேன். நம்ம ராஜாண்ணா சொல்லுச்சுல்ல அந்த லாயர் கோபிச் செட்டிப் பாளையத்துல இருக்காராம்.  அவரு நல்ல மனுஷன், நியாயமானவருன்னு அப்ப புடிச்சு சொல்லிட்டே இருந்துச்சு. நாம்போய் பாக்கிறேன்”

“இதென்ன கண்ணு பாதி ஆயுசு கோர்ட்டு கேசுலயே முடிஞ்சிடும் போல, கெரவத்த… உனக்கு மறு கல்யாணம் பண்ணாம நாஞ் சாக மாட்டேன்.. நானாச்சு இந்த குருநாத சாமியாச்சு” என்று குரல் கம்ம சொன்னாள்.

“அழுவாதீங்கம்மா. இப்ப என்னாச்சு. நீங்க போய் வேலையப் பாருங்க”

மறுநாள் கோபிசெட்டிபாளையத்திற்கு கிளம்பினாள். பேருந்தில் கூட்டமில்லை. அவளுக்குத் தெரிந்தவர்கள் ஏறியபோது பார்க்காது போல் திருப்பிக் கொண்டாள். புதிய வக்கீலிடம் முன்னமே வரும் நேரம் பற்றி பேசியிருந்தாள். வண்டி மெதுவாக வேகமெடுத்தது.

அவளுக்குத் திருமணம் என்றால் நினைக்கக் கூடிய எந்த ஒரு  இனிமையான நினைவும் நினைவிலில்லை. நினைவிலில்லை என்பதை விட நிகழவில்லை என்பதே சரி. அங்குமிங்கும் பொருத்தம் தேடி இறுதியில் அவளுக்கு ரவியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டபோது அவளுக்கு 35 வயது. அந்த வயதில் அவளுக்குத் திருமணம் நடக்கும் என யாரும் நினைக்கவில்லை. ரவிக்கும் அவளுடைய காதல் விவகாரம் தெரியும். சொல்லப்போனால் முருகனை நன்றாகத் தெரியும். மனமொப்பி அவனாகவே விரும்பிதான் மணம் செய்ய வந்தான். கயலின் அம்மாயியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது.  கயலின் அம்மா சாந்திக்கு தலைகால் புரியவில்லை. இருக்கும் நகைகளோடு மேலும் புதிதாக நகைகளைச் செய்து அவளுக்குப் போட்டு அழகு பார்த்தாள்.

அந்தியூர் குருநாதசாமி வனக்கோவிலுக்கு சென்று கெடா வெட்டி, ஊர் மக்களுக்கு விருந்து வைத்தாள். வாய்கொள்ளா சிரிப்புடன் வீடுவீடாக ஒருவரையும் விடாமல் திருமணத்திற்கு அழைத்தாள். திருமணத்தை ஊரே மெச்சும்படி விமர்சையாக செய்தாள். மணமானதும் கயல், ரவியுடன் கோபிக்கு வந்துவிட்டாள்.

ஒரு வாரமாகியிருக்கும். திடீரென எங்கிருந்தோ ஒரு பெண் ரவியைப் பார்க்க வீட்டிற்கு வந்தாள். மத்திம வயதில் சுடிதார் அணிந்திருந்தாள். வந்து ரவியிடம் சண்டையிட்டாள். அவள் கூடத்தான் அவன் இருக்க வேண்டுமெனத் தகராறு செய்தாள். கயலுக்கு அது கனவா நனவா என்றே விளங்கவில்லை.

அதன் பின் அவளுக்கும் அவனுக்கும் பல ஆண்டுகள் இருந்த உறவு கயலுக்குத் தெரிய வந்தது. அவளுக்கு வேறொருவனுடன் திருமணம் ஆகி குழந்தையுமிருந்தது.

கயல் தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். அவளுடைய அம்மாவிடம் சொல்லாமல் தானே நிலைமையை சீர் செய்யலாமென நினைத்து, ஓரிரு நாட்களில் நிதானமானதும், சரி ஆனது ஆகட்டும். இனி அவளை மறந்து தன்னுடன் வாழும்படி சொன்னாள். அவன் விட்டாலும் அவள் விடாமல் வந்து வந்து அவனை தன் வீட்டிற்கு கூட்டிச் சென்றாள். அவனை விட்டுவிடும்படி அந்த பெண்ணின் காலிலேயே போய் விழுந்தாள்.

“உனக்கு சாமார்த்தியமிருந்தா அவனை புடிச்சு வச்சுக்கோ” என்று கறாராய் சொன்னாள்.வேறு வழியில்லாமல் சாந்தியிடம் சொல்லவேண்டியதாயிற்று. அதிர்ச்சியில் மயங்கியே விழுந்தாள் சாந்தி. பின்பு அழுது அரற்றியபடி கோபிக்கு வந்தாள். பெரியவர்கள் வைத்து பஞ்சாயத்து செய்தபோது, அவன் “அந்த பெண்ணை ஒதுக்கி வைக்க விருப்பமில்லை. எனக்கு அவளும் வேணும்” என்று மனசாட்சியை அடகு வைத்து சொன்னான். சாந்தி அழுதாள். ” அடப்பாவி அவ வேனும்னா அவகூடவே இருக்க வேண்டியதுதான.. ஏம்புள்ளைய ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட.. நல்லவன் மாதிரி நடிச்சி எம்புள்ள வாழ்க்கைய கெடுத்துட்டியேடா” என அவனைத் தூற்றினாள்.  சேர்ந்தாற் போல் பத்து நாட்கள் கூட வாழாத கயலை அழைத்துக் கொண்டு வீடு சேர்ந்தாள் சாந்தி.

ஊர்மக்கள் அவளுடைய கதைக்கு கண், காது வைத்து இன்னும் உருமாற்றி வீதியில் உலாவவிட்டிருந்தனர்.  எண்ணெக்கார வீட்டில் ஆண்களின் வாழ்க்கை நிலைப்பதில்லை  பெண்கள் தவிர வேறு ஆண்கள் யாரும் சில தலைமுறையாகவே வாழ்வதில்லை, ஒன்று ஓடிப் போய்விடுவார்கள், இல்லையெனில் ஆண்வாரிசு தங்குவதில்லை அதுவுமில்லையென்றால் இறந்து விடுவார்கள், அதுதான் இப்போது கயலையும் பீடித்திருக்கிறது என்று, புதிதாய் கேட்பவர்களுக்கு சுவாரஸ்யமாகவும், பீதியையும் தரும்படி அவரவர் விருப்பத்திற்கேற்ப மாற்றிய கதைகள், வீதியில் ராஜ நடை போட்டுக் கொண்டிருந்தன. உண்மை எங்கு என்றால் கயலின் வீட்டிற்குள் வசதியாக படுத்துக் கொண்டிருந்தது.

பள்ளியில் படிக்கும்போதே தன் தோழிகள் இதைச் சொல்லக் கேட்டதும் பயந்து போய் தன் அம்மாயியிடம் இதைப் பற்றிக் கேட்டிருந்தாள். “போடி கூறு கெட்டவளே. அதுகதே பொழப்பத்து பேசி திரியதுகனாக்கா நீயும் இந்த கதைய தூக்கியாற.. உங்க தாத்தா 90 வயசு வரைக்கும் உசுரோடுதான் இருந்தாரு. நீ அப்போ கொழந்த. உங்கப்பன் ஓடிப் போனா நாம என்னத்த செய்யறது. வவுத்தெரிச்சல்ல நாலு பேரு நாலு கதைய பேசத்தான் செய்வாங்க. ஆம்பள இல்லாத ஊட்ட கட்டி நெர்வாகம் பண்றோமல்லோ.. அதான் அதுகளுக்கு வவுத்தெரிச்சல். ஆரு கெட்டாலும் இத சொல்லிடு” என்று முடித்துக் கொண்டாள்.

ரவியுடன் வாழாமல் வீட்டிற்கு வந்த பின் கயல் வெளிவருவது குறைந்தது. எங்கு சென்றாலும் கேள்விகள்… நீ நலமா? நான் நலம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அடுத்தவர் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி விசாரித்து இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என எரிச்சல் வரும் அவளுக்கு. சுற்றுப்புறம் சாதகமில்லாதபோது தன்னை சுருக்கிக் கொண்டு கூடடையும் நத்தை போல் தன் வாழ்வை அந்த வீட்டிற்குள் சுருக்கிக் கொண்டாள்.

ஒரு வருடம் கழித்து விவாகரத்திற்கு வழக்கு தொடர்ந்தாள். அப்போது அவள் காவல் நிலையத்திற்கும் கோர்ட்டுக்குமாக நடந்த நடை, அங்கிருந்த ஆண்களின் காமப் பார்வை, வேண்டுமென்றே சீண்டிப் பார்க்க நினைக்கும் புத்தி, ஊரார் சொன்ன கதைகள் என அனைத்து அம்புகளும் அவள் மேல் படாமல் தப்பிக் கொண்டிருப்பது அவளுக்கு வாழ்க்கையாகியிருந்தது. அப்போதெல்லாம் அவளுக்கு தெளிவானது ஒரு பெண் தனியாக இருப்பது அத்தனை எளிதல்ல என்பதே.

கோபி பேருந்து நிலையத்தில் இறங்கியதும், அவள் புதிய வக்கீலின் முகவரியைக் கண்டுபிடிக்கப் பெரிதாக சிரமப்படவில்லை.. பல கார்கள் அந்த வீதியை அடைத்து நெருக்கடியாக இருந்தது. ஆட்கள் அங்குமிங்குமாக இருந்தார்கள். அவர் அலுவலகம்  வீடு போலிருந்தது   ஒருவர் இவளைப் பார்த்ததும் என்னவென்று விசாரித்தார். இவள் சொன்னதும் அவளைக் கூடத்தில் காத்திருக்க சொல்லிவிட்டு ஒரு அறைக்குள் சென்றார்.

வெளியிலிருந்த பரபரப்பு உள்ளே இல்லை. நிறைய கோப்புகள், புத்தகங்கள் அலமாரியில் இருந்தன.

அவர் உள்ளே வரச் சொன்னதும் அந்த அறையில் உள்ளே சென்றாள் பத்தியின் வாசனை அறையை மணக்கச் செய்திருந்தது. வக்கீல் சற்று வயதானவராக இருந்தார். அவள் சென்றமர்ந்ததும் விசாரித்தார் அவள் எல்லாவற்றையும் சொன்னாள். அவர் பொறுமையாகத் தலையாட்டியபடி கேட்டுக் கொண்டு,

“விவாகரத்து வாங்க இத்தனை வருசமாச்சா? ஏன்?”

“வாய்தா மேல வாய்தா, பெட்டிஷன் கேன்சலாகினு 4 வருஷமா அவனால இழுத்துகிட்டே இருந்துச்சு சார்  நான் அவன்ட்ட நஷ்ட ஈடு கூட கேக்கல. நாங்க கல்யாணத்துக்கு செலவு செஞ்ச பத்து லட்சம் கொடுத்தா போதும்னு சொன்னோம். அதுக்குதான் அவன் வராம ஏமாத்திட்டு இருந்தான். அப்புறம் கேஸ் போட்டதும் ஒழுங்கா வந்தான். பத்து லட்சத்துல பாதி பாதியா பணத்த தர்றதா சொன்னான். இதுவரைக்கும் 5 லட்சம் கொடுத்தான். விவாகரத்து கேஸ் முடிஞ்சதும் மீதி பணத்த போலி செக் கொடுத்து ஏமாத்திட்டான் சார்”.

“ஓ அப்படியா! அவன்மேல கேஸ் போடலாம்.. விவாகரத்து பத்திரம் வச்சிருக்கீங்களா?

“இன்னும் பத்திரம் கிடைக்கல சார். தீர்ப்பு சொன்னதும் பத்திரம் கைக்கு வர 3 மாசமாகும்னு பழைய லாயர் சொன்னார்”

“அவர் உங்ககிட்ட பொய் சொல்லிருக்காருங்க்மா.  தீர்ப்பு வந்ததும், பத்தே நாள்ல பத்திரம் கிடைச்சுடும், அத வச்சுதான் உங்களால அவன் மேல கேஸ் போட முடியும்”.

கயலுக்கு தொண்டை அடைத்தது. அடுத்து என்ன செய்வது என அவரை கலங்கிப் பார்த்தாள்.

“சரி முதல்ல கோர்ட்டுல கேட்டுட்டு சொல்றேன். இப்ப அங்கதான் நான் போறேன். உங்களுக்கு கால் பண்றேன். ஆக்ஷன் எடுக்கலாம் கவலைப்படாதீங்க” என்றார்.

அவள் மீண்டும் ஊருக்கு வந்துவிட்டாள். பேருந்தில் அவளையறியாமல் கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. எல்லாம் முடிந்தாயிற்று என நினைத்திருந்தாள்.. என்ன பிழைப்பு இது… தன் வயதில் மற்றவர்கள் பிள்ளைகளின் பள்ளிக்கும், கல்லூரிக்கும் அலைந்து கொண்டிருக்க,  நாம வாழ்க்கை தொடங்கவே கோர்ட் கேஸ் என அலைய வேண்டியிருக்கே என சோர்ந்து போனாள்.

வீட்டிற்குச் சென்றதும் ஏதும் சாப்பிடாமல் கொள்ளாமல் தூணில் சாய்ந்தபடி ஒன்றுமே தோணாமல் அப்படியே வெகு நேரம் அமர்ந்திருந்தாள். அவள் இப்படி அமர்வது வழக்கமில்லை., ஏதாவது செய்து கொண்டேயிருப்பாள். சாந்தி அவளருகே சென்றமர்ந்தாள்.

“இதெதுக்கு இப்படி ஒக்காந்திருக்க?”

“இல்லைங்மா..பஸ்ல வாறப்ப அந்த முருகன பார்த்தேன். அவம் பொண்டாட்டி புள்ளைகளோட சிரிச்சுட்டே ஹோட்டல்ல இருந்து வந்துட்டு இருந்தான். அவன் நல்லாருக்கான்.

இந்த ரவியும் எல்லா தப்பும் பண்ணிட்டு தெனாவெட்டா ஊர சுத்திட்டு திரியறான். இவனும் நல்லாதான் இருக்கான். எனக்கு மட்டும் ஏன் பிரச்சனையா வந்துட்டு இருக்கு? ஒண்ணுமே புரிலைங்மா..”

சாந்தி வேகமாக எழுந்தாள். “இந்தா எந்திரி.. இப்ப என்ன நடந்துச்சு. நாப்பது வயசெல்லாம் ஒரு வயசா. வெளிநாட்ல எல்லாம் நாப்பது வயசுலதான் கல்யாணம் பண்ணிக்கிறாங்களாம்.  சிவன் வீதில இருக்காங்களே சந்திரா அக்கா. அவங்க பொண்ணுக்கு உன் வயசுதான் இருக்கும். வெளி நாட்டுல வேலைல இருக்காளாம். விவாகரத்து ஆகி இப்போ மறு கல்யாணத்துக்கு வரன் பாக்கறதா சொன்னாங்க..உனக்கு இனிமேதான் நல்ல காலம்னு நினச்சுக்கோ. இப்பவும் நான் நம்பற குருநாத சாமி கைவிட மாட்டார்” என்ற கூடத்தின் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த பையில் தரகரின் எண்ணை தேட ஆரம்பித்தாள்.

இரவு போல அந்த புது வழக்கறிஞர் அவளுக்கு அலைபேசியில் அழைத்தார். “நான் லாயர் குருநாதன் பேசறேங்க்மா”

“சொல்லுங்க சார்” என்றாள்.

“உங்க பழைய லாயர் இன்னும் விவாகரத்து பத்திரத்துக்கு அப்ளை பண்ணவே இல்லங்க்மா. நாம இனிஷியேட் பண்ணிடலாம். நீங்க திங்க கிழமை காலைல கோர்ட்டுக்கு வந்து ஒரு கையெழுத்து மட்டும் போட்டுட்டு போங்க. ஒரு வாரத்துல கெடச்சிடும். அப்புறம் அவன் மேல ஆக்ஷன் எடுக்கலாம். இதுக்கப்புறம் நீங்க கோர்ட், போலீஸ் ஸ்டேஷன்லாம் வர வேண்டியதில்லை. நாபாத்துக்கறேன். ” என்று நிதானமாக சொன்னார். கயலுக்கு பெருமூச்சு வந்தது. அந்த இரு நாட்களாய் தரகரைப் பார்ப்பதும் வருவதுமாய் சாந்தி இருந்தாள்.

திங்கள் கிழமை வேகமாக எழுந்த கயல் கோர்ட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். சாந்தி அவள் அம்மாவிற்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தாள்.

தனது நீண்ட முடியை இறுதி வரை பின்னிக் கொண்டிருந்த கயல் என்ன நினைத்தாளோ, வேகமாகச் சென்று கத்திரிக்கோலால் தன் முடியை தோள்பட்டை வரை வெட்டி குப்பைத் தொட்டியில் வீசி விட்டு, மீதமிருந்த முடியை தூக்கி குதிரைவால் போட்டுக் கொண்டு கோர்ட்டை நோக்கி வீதியில் இறங்கினாள்.

செந்நிற பாம்பு போல் மினுமினுத்த சடையுடனிருந்த நாலடி கூந்தல், சாந்தி கனவு கண்ட ராஜகுமாரனாய் குப்பைத்தொட்டியில் கிடந்தது, அதனைச் சுற்றிப் பல கதைகள் மொய்த்திருந்தன.


– ஹேமி கிருஷ்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.