குடிகாரக் கடிகாரம்


கோலப்பனுக்கு ஒரு வினோதமான மனோ வியாதி இருந்தது. அது வியாதியா அல்லது வினோதமா என்பது கோலப்பனுக்கே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் கூட அதை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் கோலப்பனுக்கு இல்லாமல் போனதுதான் வினோதம். அது என்னவென்றால் தன்னுடைய கைக் கடிகாரத்துக்குக் குடிப்பழக்கம் இருப்பதாக அவர் நம்பினார். அது அவ நம்பிக்கையா? இல்லை அவரது  நம்பிக்கையா என்பது யாருக்கும் தெரியவில்லை. 

கோலப்பன் அந்தக் கடிகாரத்தைக் கையில் கட்டிக் கொண்டு குடிக்கும் போதெல்லாம் அவரோடு சேர்ந்து கொண்டு அந்தக் கைக்கடிகாரமும் குடியை மேற்கொண்டு விட்டு தவறான நேரத்தைச் சரியானது போலக் காட்டிக் கொண்டு திரிந்தது. ஆனாலும்  அது ஒரு வாட்டர் ப்ரூஃப் கடிகாரம்.” அது எப்படி நீராகாரத்தை உட்கொள்ளுகிறது?” என்பதில் அவருக்கு ஒரு மிகப்பெரிய சந்தேகம் இருந்தது. 

“சின்னப் பயல்கள் வரை இப்போதெல்லாம் குடித்துக் கொண்டு லாந்தும் போது, எழவு ஒரு எள்ளுப் போன்ற கடிகாரம்தானே ? குடித்தால் குடித்து விட்டுப் போகட்டும் “ என்ற விசாலமான மனப்பாங்கும், விஸ்தீரணமான ஆறுதலும் கோலப்பனுக்கு எழுந்ததில் அவரும் கடிகாரத்தின் இந்த குடிப்பழக்கத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்.

ஓரிரு நிமிடங்களைத் தவறுதலாகக் காட்டினால் கூட அந்தக் கடிகாரத்துக்கு நிர்ப்பந்தமில்லாத மன்னிப்பை நொடிக்கு நொடி வழங்கி விடலாம். ஆனால் இரவு பகல் பாராமல் மாற்றிக் காட்டியபடியே ஓடிக் கொண்டிருந்த அந்தக் கைக்கடிகாரம் ஒரு பார்வையற்றவனை ஒரு குருட்டு நாய் தவறாக வழிநடத்தியதை கோலப்பனும் உணராமல் இல்லை. 

அன்றும் அப்படித்தான் ஒரு குவாட்டரின் முடிவில் தூங்கி வழிந்த கோலப்பனின் கண்கள் விழித்ததும் கும்மிருட்டில் தெரிந்த அந்தக் கடிகாரத்தின் ரேடியத்தின் ஒளியில் ஜொலித்து வீசிய முட்கள் அதிகாலை மணி மூன்றைக் காட்டியபடி ஓடிக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரே சலசலப்பு. 

“சக்தியை நோக்க சரவண பவனார் ! சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்!” என்ற பாடல் ஒலிக்க கூடவே ஒரு “கொக்கரக்கோ” என்ற சப்தமும் விடியலை உணர்த்த , தடுமாறி எழுந்து வீட்டின் புழக்கடைக்குச் சென்று அங்கே படுத்துக் கிடந்த கன்றுக் குட்டியை எழுப்பி தண்ணீர் காட்ட அழைத்துச் சென்றார் கோலப்பன். அப்போது அவரது கைக்கடிகாரத்தில் ரேடியத்தின் வெளிச்சம் குறைந்து சப்பென்று கிடந்தது. வர மறுத்த கன்றுக்குட்டியை கிட்டத்தட்ட இழுக்காத குறையாக இழுத்து வரும்போதுதான் கோலப்பனின் காலக் கடிகாரம் பின்னோக்கிச் சுழன்றது. 

கார்கில் போரில் கோலப்பன்தான் எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னணியில் இருந்த வீரர்களில் ஒருவர். சொந்த ஊரில் தன்னைக் கேப்டன் என்று சொல்லிக் கொண்ட கோலப்பனுக்கு ஒரு துருப்பிடித்த ரைஃபிள் கையில் தரப்பட்டிருந்தது. எந்த ஒரு வெடிகுண்டு பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டு வந்தாலும் அது கோலப்பனைத் தாண்டிதான் இந்தியாவுக்குள் வர முடியும். எத்தனை முறை வெடிச்சத்தம் கேட்டது என்பதைக் குறித்துக் கொள்ள கடிகாரம் அவசியமாக இருந்தது. 

ஆனாலும் இருட்டில் மணி பார்ப்பதில் ஒரு சவால் இருந்தது. டார்ச் லைட் அடித்து வாட்சைப் பார்த்து காலத்தைக் கணித்தவர்கள் அனைவரும் காலமானார்கள். லைட் வெளிச்சதைக் கண்டதும் மண்டையிலேயே சுட பாகிஸ்தானியர்கள் பயிற்றுவிக்கப் பட்டிருந்ததால் பரம் வீர் சக்ராக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்றது. 

ஒருமுறை வாட்ச் டவரில் அமர்ந்து கொண்டே டார்ச் அடித்து மணி பார்க்க முயன்ற கோலப்பனின் தலைக்குள் ஒரு தோட்டா துளைக்க முயல, மயிர் இழையில் உயிர் தப்பினார் கேப்டன் கோலப்பன். “தூக்கம் சண்டாளன்” என்பார்கள். ஆனால் அன்று தூங்கிக் கொண்டே மணி பார்த்து தலை தொங்கிக் கீழே விழுந்த கோலப்பனைத் தூக்கமே எமனிடமிருந்து பாதுகாத்தது என்று சொன்னால் அது மிகையில்லை. கோலப்பனை நோக்கி வந்த அந்தத் தோட்டாவும் பாகிஸ்தானின் போர்க்கால வீண் செலவுக் கணக்கில் சேர்ந்து கொண்டது. 

இந்தச் சம்பவத்தைப் பக்கத்து டவரிலிருந்து பைனாக்குலரில் பார்த்த “அட்டாக் குருசு” தன்னுடைய தொப்பியைக் கழற்றி அஞ்சலி செலுத்தி மனமுருகி அழுதான். 

“எண்ணே ! கோலப்பண்ணே ! வம்படியாச் செத்துப் போயிட்டியே ! இனி நா யாருக்கூட உக்காந்து ரம்மு குடிப்பேன் ? கடவுளே இரக்கமில்லையா?” என்று கதறிக்கொண்டே கடும் துக்கத்தில் வானத்தை நோக்கி ஏழுமுறை சுட்டதைப் பக்கத்து டவரில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த மேஜர் கப்பன் கடுப்பானார். 

“என்ன மயித்துக்கு இந்த நாயி வானத்த பாத்துச் சுடுகு ? கெழவியா ஆகாயத்துல நிக்கியான்னு மேல சுடுக கோம்பத் தாயளி ? கொப்பன் வூட்டுச் சக்கரத்துலயா துப்பாக்கிக் குண்டு வாங்குகானுவோ ? கொற மாசத்துல பொறந்தவுனுவோ ! அத்தன குண்டையும் இப்புடி அந்தரத்துல சுட்டு வீணடிச்சீட்டு எதிரி எதுத்தாப்புல வந்து நிக்கிம்போது லோடு பண்ணுவானுவா? பாகிஸ்தாங்காரனும் பலகாரம் தின்னாப்புல குண்டி மேலயே சுடுவானுவோ ! இருட்டீ ஒன்னைய காலைல வச்சிக்கிறேன் ! மெமோ தந்தாத்தான் நீ உருப்புடுவா ?” 

மேஜர் கப்பன் களியக்காவிளைக்காரர். கேரளா அருகில் இருப்பதால் தமிழ்நாட்டு ரேஷன் கார்டைச் சுமந்து கொண்டே தன்னை சேட்டன் என்று பெருமை பாடுவதில் வல்லவர். கோலப்பனும் குருசும் கன்னியாகுமாரி மாவட்டத்துக்காரர்கள் என்பதால் மூவருக்குள்ளும் ஒரு பரஸ்பரப் புரிதல் இருந்தது. அதனால் யார் என்ன தெம்மாடித்தானங்கள் காட்டினாலும் யாரும் கண்டு கொள்வதில்லை.  

அதிகாலையில் எழுந்து வெளிக்கி போவதற்காக டவரில் இருந்து இறங்கிய கோலப்பனைக் கண்ட அட்டாக் குருசு அதிர்ச்சியும் சந்தோஷமுமாக “யெண்ணே கோலப்பண்ணே ! நீ சாவலியா?” என்று கத்த, குருசை நோக்கி ஒரு தோட்டா பாய்ந்து வரவும், அந்த டவர் இடிந்து கீழே விழவும் சரியாக இருந்தது. அந்தத் தோட்டாவும் ஏமாந்து போனது. டவரிழையில் உயிர் தப்பி தரையில் உருண்டான் “குருசு என்ற குருசு மிக்கேல்”. 

கீழே இடிபாடுகளின் மத்தியில் படுத்திருந்த குரூசைக் கண்ட மேஜர் கப்பன் கோபத்தில் கத்தினார், 

“எதுக்குல சத்தம் போட்ட ? வெண்டித் தாயோளி! கெடக்க கெடையப் பாரு ? மனசுல பெரிய டாம் குரூசுன்னு நெனப்பு ! ராத்திரி என்னன்னா ஆகாயத்துல ஆண்டவனை சுடுகானுவோ ! காலத்த டவர இடிச்சிக்கிட்டு கிடக்கானுவோ ? ஒங்களுக்கெல்லாம் மெண்டலாயிட்டாடே ? எவம்ல ஒங்கள மிளிட்டீரில வேலக்கி எடுத்தவன் ? இந்தச் சண்டையால நாட்டுக்கு பத்துப் பைசா பிரயோசனம் உண்டாடே ? செவத்து பயலுவோ ? இந்த ஊர புடிச்சிக்கிட்டா மட்டும் பாகிஸ்தாங்கார முண்டையளு வல்லரசாயிருவானுவளா ? வெக்கங் கெட்ட கூதரையளு” 

இதையெல்லாம் பார்த்த கோலப்பன் அதிர்ச்சியில் நின்று கொண்டு அடுத்த அடி எடுத்து வைக்க அப்போது ஒரு தோட்டா அவரை நோக்கி வர, “சளீர்” என்ற சப்தத்தோடு கீழே உருண்டு புரண்டார். அந்த குண்டும் வீணாய்ப் போய் பாகிஸ்தானுக்கு ஒரு மிகப்பெரிய நஷ்டக் கணக்கை உருவாக்கியது. 

‘காட்டு மாட்டின் சாணி இத்தனை வழுக்கும்’ என்பது அப்போதுதான் கோலப்பனுக்கு தெரியும். அந்த மாடு ஏதோ ஒரு விளங்காத செடிகொடியைத் தின்று வயிற்று அளைச்சல் ஏற்பட்டு போட்ட சாணியாகக் கூட இருக்கலாம். ஆனாலும் ‘ஒரு வீழ்ச்சி என்பது மறு ஜென்மமாகக் கூட இருக்கலாம்’ என்பதற்கு அந்த ஒரு சம்பவமே சாட்சியாக இருந்தது. இதைக் கண்ட மேஜர் கப்பன் பாகிஸ்தான் எல்லையை நோக்கி கத்தி சத்தம் போட்டு வெகுவான கொதி நிலையை அடைந்தார்.  

“எலேய் பாகிஸ்தாங்கார பலவட்டறையளா ? ஒருத்தன நிம்மதியா கொல்லக்கி போவக்கூட வுட மாட்டேளா ? ஒங்களுக்கெல்லாம் பேதியெடுக்காதால பு…டாதையளு?  குடிக்கவே கஞ்சி கிடையாது ! இந்த லச்சன மயித்துல துப்பாக்கி வாங்க மட்டும் பைசா இருக்கு….  என்னடே ? 

பாகிஸ்தான்கார முண்டங்களுக்கு இந்த நியாயமான வார்த்தைகள் புரிந்திருக்க வாய்ப்பிருந்ததால் அவர்கள் பங்கரிலிருந்து எழுந்து டீ குடிக்கப் போனார்கள். கப்பன் மேலிருந்து கோலப்பனையும், குரூசையும் மேலே வருமாறு அழைத்தார். இரண்டு பேரும் வாட்ச் டவரில் ஏறினார்கள். 

கப்பன் குரூஸிடம், “ ஒனக்கு மண்டைக்கி வட்டாடே ?”

“என்ன செல்லுதீய மேஜர் சாப் ?”

“மயித்த சொல்லுகாவ! ராத்திரி என்ன மயித்துக்கு வானத்துல சுட்ட ? அங்க ஒங்க ஆத்தாளா நின்னா ? புல்லட்டுக்கு கணக்கு காட்டணும் … ஓர்ம இருக்காடே?” 

“ஐயா ! நாஞ் சுடலை ?” 

“ஆமா ! சத்தங்கேக்காம வுடுகதுக்கு இது என்ன கேஸ் டிரபுளா ? துப்பாக்கிடே ? நீ எத்தன தடவ சுட்டான்னு பாகிஸ்தாங்காரங்கிட்ட கேட்டாலே சொல்லுவானே ? என்கிட்ட வந்து நடிக்க ? சுடலை ? கடலைன்னு …..”

“ மாஃப் கர்தோ மேஜர் சஹாப் ! கோலப்பண்ணே செத்துட்டாம்னு சொல்லிதாஞ் சுட்டேன் ! மரியாதி செலுத்தணும்லா ?”

“இங்க என்ன தேசியக்கொடி போத்தியா கோலப்பன படுக்க வச்சிருக்கு? இந்தா நிக்காம்லா கொலெப்பன்! செலுத்து ஒனக்க மரியாத மயித்த…” 

கோலப்பன் கண்களை உருட்டியபடியே யோசித்தார், ‘என்னத்த கெடந்து ஒளருகானூவோ செத்த பெயலுவ? என்னமோ நடந்துருக்கு?’ 

கப்பன் கோலப்பனிடம், “குருசு என்னடே சொல்லுகான் ? நீ செத்துட்டியாமே அப்புடியா ?” 

கோலப்பன் நெளிந்தார், “என்ன சார் சொல்லுதிய ! இந்தா ஒங்க கண்ணு முன்னுக்க நிக்கியம்லா ? செத்தா எப்புடி நிக்க முடியும் ?” 

குருசு கப்பனிடம், “கெப்பன் சஹாப் ! ராத்திரி கோலப்பண்ணன் மண்டையில ஒரு குண்டு பாஞ்சி செத்து கீழ வுழுந்தத எங்கண்ணால கண்டேன் ! எனக்க ரெண்டு பிள்ளையளு மேல ஒரப்பு !” 

கோலப்பன் திடுக்கிட்டார், “என்னடே சொல்லுத?”

“ஆமா சஹாப் ! டார்ச் லைட்ட எடுத்து வாச்சில அடிச்சி மணியப் பாத்தாருல்லா ! அது அந்தப் பக்கம் இருந்த பச்சப் பாவ்பாஜி பயலுவ கண்ணுல பட்டு ஒருத்தஞ் சுட்டுட்டான் ! அது நேரா வந்து கோலப்பண்ணம் மண்டையில பட்டு அண்ணன் தரையில சாஞ்சதக் கண்டு கொமாஞ்சிப் போயிட்டேன் ! கை தெரியாம விசைல பட்டு ஃபயர் ஆயிட்டு சஹாப்! ” 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னதான் அஞ்சலி செலுத்துனேம்னு சொன்ன ? என்ன வெடிவழிபாடா ? என்ன கோலப்பன் ? பயல் சொல்லுகது நெசமா ? 

கோலப்பன், “இல்லே சார் !” கோலப்பனுக்கு மறுபடியும் குழப்பம்… ‘அய்யோ கொஞ்சம்னா குண்டடி பட்டு செத்துருப்பனோ?’ 

“ உண்மைய சொல்லு மேன் ?” 

கோலப்பன் சுதாரித்துக் கொண்டே, “ ஹி ஹி ஆமா சார் ! நெசந்தான் ! தோட்டா வரவும் சுதாரிச்சிக்கிட்டு மின்னல் வேகத்துல தரையில படுத்துகிட்டம்லா ?”  

“அரே சூத்தியா ஹே கியா தூ ? மேரே சே ஹீ ஜூட் போலேகா தூ ? ( மெண்டல் தா..ளியா நீ ? என்கிட்டயே பொய் சொல்லுதியா ) 

மனதுக்குள் கோலப்பன், ‘ஆஹா கோவம் வந்துட்டே சேட்டனுக்கு ! இனி இந்தியில தள்ளக்கி விளிப்பானே ஏசுவே’ என்று மென்று முழுங்கியவாறே மேஜரிடம், 

“இல்ல சார் ! எனக்கு மொதல்லயே தோணிச்சி! அதனால டிஃபன்ஸ் பண்ணிட்டேன்! 

“என்னது டிஃபன் பாக்சா ? அரே கோலப்பன் ! மை நேம் இஸ் கப்பன் ! கள்ளம் பறையரதுல நினக்கு அப்பன் ! என்கிட்டயே பொய் சொல்லுகியா மேன் ? முப்பத்தி மூணாவது தடவை நீ தூங்கி கீழ வுழும்போதுதான் அந்த தாக்குதல் நடந்துச்சி ! 

“என்ன சார் சொல்லிதீய ?”

“என்கிட்டயும் பைனாகுலர் இருக்குடே!” என்று சொல்லியவாறே குறுசைப் பார்த்தார், “எலே குருசு ! ஒங்களுக்கெல்லாம் தாஜ் ஓட்டல்ல ரூமப் போட்டு தங்கியிருக்கதா எண்ணமாடே ? இழுத்துப் போத்திக்கிட்டு வாயப் பொளந்துகிட்டு தூங்கிதிய ? கார்கில்ல இருக்கோம் மனசிலாச்சா ! ஒருத்தன் என்னடான்னா மூணு மணிக்கி டார்ச் அடிச்சி மணியப் பாக்கான் !  என்னவோ கலெக்டர் ஆபீசுக்கு போற தோரணைல ! மண்டக்கி பக்கத்துல என்ன கொசுவா பறக்கு ? துப்பாக்கி குண்டுடே அது ! பட்டுருந்தா காலைல கபாலத்த காக்கா நக்கிருக்கும் ! நீ என்னடான்னா ராத்திரில கெடந்து சாவாதவனுக்கு ஏழு குண்டு முழங்க அஞ்சலி செலுத்துக ? வம்பா செத்துப் போவாதீங்க எழவெடுப்பான்களே !” என்று சொல்லி ஓய்ந்தார். 

இடிந்து விழுந்த அந்த வாட்ச் டவரை மூவரும் சோகத்தில் பார்க்க, குருசு சொன்னான்.

“ நல்ல காலம் கொஞ்சம் தள்ளி வுழுந்தேன் ! நடுவுல மாட்டிருந்தா இந்நேரம் பெட்டி எடுக்க வேண்டி வந்துருக்கும் ! லெச்சண மயித்துல கெட்டி வுட்டுருக்கானுவ? வாச்சி டவருன்னுதாம் பேரு? வாச்சாம் போச்சாம்னு சரிஞ்சி கெடக்கு!” 

மேஜரும் கொஞ்சம் அசந்துதான் போனார், “அவனுவளுக்கென்ன ? ஜோரா பந்தோபஸ்த்தொட குண்டு தொளைக்காத காருல போராவனுவளுக்கு இங்க எல்லையில என்ன நடக்குன்னு தெரியுமா ? ஒரு குஞ்சாமணி சைஸ் நாடு கெடந்து நம்மக்கிட்ட துள்ளிக்கிட்டு கெடக்கு ! ரெண்டு குண்ட தூக்கி எறிஞ்சா ஒரு நாய் கூட உயிரோட இருக்காது ! இதுக்கு ஒரு ராணுவம் ! ஒரு பாதுகாப்பு ! கொட்டக்கலயம் ? அந்த மூஞ்சியெல்லாம் பாத்தியா ? கழுவாத கறிச் சட்டிக்கணக்கா ? 

கோலப்பன் பைனாகுலர் எடுத்துப் பார்த்தார். அந்த நேரம் பார்த்து ஒருவன் தன்னுடைய பேண்டைக் கழற்றிவிட்டு ஆய் இருந்து கொண்டிருந்தான். 

“ ச்சை… நாத்தம் புடிச்ச செவங்கள் ! பங்கர் வாசல்லயே இருந்துகிட்டு உள்ளாற மூக்கப் புடிச்சிக்கிட்டு கெடப்பானுவளோ என்னவோ? ”  

அதற்கு மேஜர் கப்பன், “ஒன்னைய அங்க எவம்டே பாக்கச் சொன்னது ? இந்தப் பக்கம் பாரு!” என்று சொல்லவும் அந்தத் திசையில் ஒருவன் தாடையைச் சொறிந்து கொண்டிருந்தான். 

எல்லா நாயும் ஒண்ணு போலத்தான் இருக்கு ! என்று சொல்லிவிட்டு மூவரும் பணி முடிந்து முகாமுக்குத் திரும்பினார்கள். மேஜர் கப்பன் ரெண்டு ரவுண்டு ரம்மை சாத்திவிட்டு மேலதிகாரிக்கு ஒரு கடிதம் எழுதினார். 

 

மரியாதைக்குரிய கர்னல் முல்லாஸ் ! 

“இங்கே எல்லையில் மிகவும் பதட்டம் நிறைந்திருக்கிறது. பச்சயன்கள் எங்களை கொல்லைக்கி போகக் கூட அனுமதிக்க மாட்டேன்கிறான்கள் ! எங்கோ ஓசியில் தோட்டாக்கள் அவர்களுக்குக் கிடைக்கும் என்றே நம்புகிறேன். கொசு பறந்தாலும் துப்பாக்கியால் சுடுகிறான்கள். எனக்குக் கடுமையான கோபம் வருகிறது கர்னல் பையா ! கூட இரண்டு ரவுண்டுகள் போட்டால்.. மன்னிக்கவும்… கூட இரண்டு ரவுண்டுகள் சுட்டிருந்தாலும் கூட நான் அந்த நாட்டை இன்று காலையில் ஒற்றையாளாக நின்று துவம்சம் செய்திருப்பேன். 

மேலும் நம்முடைய வாட்ச் டவரில் ஒன்று காற்றில் அசைந்து கீழே விழுந்து விட்டது. கிடுவைகளை மறைத்து நின்று போரிட நாங்கள் ஒன்றும் மீன் சந்தைகளின் வாசலில் நின்று கொண்டு பேரம் பேசி சல்லியங்களை உருவாக்கவில்லை. ஒரு முட்டாள் அரசாங்கத்துடைய கூலியாட்களின் துப்பாக்கி முனைகள் எங்களுக்கு முன்பாக எங்களைக் காவு வாங்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கவனத்தில் கொள்ளவும்…” 

மூன்றாவது ரவுண்டை அடித்துக் கொண்டே மீண்டும் கடிதத்தை எழுதத் துவங்கினார். அவருக்கு பாகிஸ்தானியர்கள் மீது கோபம் கூடிப் போனது. அது அந்தக் கடிதத்தில் எதிரொலித்ததை அவர் அறிந்தேயிருந்தார். 

“இடைஞ்சலுக்கு வருத்தங்கள் கர்னல் ! கொஞ்சம் வெளியில் சென்று விட்டதால் நீங்கள் காத்திருக்க நேர்ந்து விட்டது. மன்னித்து விடுங்கள். மேலும் இந்தத் தாயோளிகள் அத்தனை பேரையும் நான் மத்தி மீனைப் போல சட்டியில் போட்டு பொரிக்கப் போகிறேன் ! நீங்கள் உத்தரவிடுங்கள் ! அவனுவளுக்க தந்தைக்க வஸ்து ஒண்ணுங் கெடையாதுல்லா கார்கிலு ? கொம்மயஓ…யளு? காஷ்மீரு வேணும்னா அவனுவளுக்க தள்ளமாருகிட்ட கூவி விளிக்கட்டும் ! எங்கள என்ன மயித்துக்குச் சுடுதானுவ ? நா கொன்னு புடுவெம் பாத்துக்காரும் ! அந்தத் தந்தக்கிப் பொறக்காத தாய..யளுக்கு அத்தறையே உள்ளூ ! 

கோபம் கொப்பளிக்க நான்காவது ரவுண்டு வயிற்றுக்குள் போனது, மீண்டும் கடிதம் துவங்கப் பட்டது, 

“வே கர்னளூ சீமைல கெடந்தவனே ! இருக்கீரா ஒம்மையும் கொண்டு போயி சிமிட்டேரில அடக்கிட்டானுவாளா ? நா எங்கயும் போவல ஓய் ! வெள்ளமடிக்கத்தாம் போயிருந்தங் கேட்டுக்காரும் ! நாங்க இங்க கெடந்து குளுத்தியில சாவியோம்! நீரூ நல்ல சொட்டரு மயித்தயெல்லாம் போட்டுகிட்டு வூட்டுல சோலி பாத்துக்கிட்டு கெடக்கீரு இல்லியா ? நாங்க இங்ஙன காஞ்ச ரொட்டிய நக்கிட்டு கெடக்கோம் ஓய் ! ஒமக்கெல்லாம் ஒரு சாக்காலம் வார மாட்டங்கே ? செத்த தா…ளிக்கி! ” 

கப்பனுக்கு துக்கத்தில் அழுகை பீறிட்டது. ஐந்தாவது ரவுண்டில் தன்னுடைய காதல் மனைவி கனிகாவின் நினைவுகள் வரவே கடிதத்தின் போக்கானது மாறிப்போனது. 

“அன்புள்ள கர்னலிகா ! நான் இங்கே முத்தச் சப்தங்களில் புரளவில்லை… யுத்தச் சத்தத்தில் மூச்சடைந்து கிடக்கிறேன்… உன் நெஞ்சத்தில் புரள ஆசைப்பட்டு இங்கே பஞ்சத்தில் கிடந்து தவிக்கிறேன் ! மூக்கில் பஞ்சு வைக்க வாராயோ கண்மணியே ?” 

கடைசியாக ஒரு ஸ்மால் உள்ளே போனதும் கர்னலின் கர்ணக் கொடூரமான முகம் தோன்றியதால் கடிதத்தின் உக்கிரம் கூடிப் போனது, 

லேய் கர்ணாலு நாலுகாலு தாயளி ! நேர்ல மட்டும் எங்கையில கெடச்சான்னு வச்சிக்கா ! கால மடக்கி தாடையில ஏந்திப் புடுவேம் ! மீச கு…ணக்கி மட்டும் கொரச்சலு மயிரு கெடையாது ! ஒரே அடிதான் ! செத்து மெதந்துருவ பாத்துக்கா ! 

இப்படிக்கு, 

கேஜர். மப்பன். 

என்று அந்த வரலாறை முடித்துவிட்டு பாயில் சுருண்டார். வழக்கமாக ஓய்வு நேரத்தில் தபால் அனுப்பும் காரியங்களைச் செய்யும் கோலப்பன் கர்ம சிரத்தையாக அந்தக் கடிதத்தை படித்துப் பார்க்காமலேயே மடக்கி சீல் அடித்து அனுப்பினார். மாலையில் எழுந்த மேஜர் தான் கர்னலுக்கு எழுத முயன்ற கடிதத்தை நினைவு கூர்ந்தார். அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே அவருக்கு நினைவில்லை. 

அடுத்த நாள் மேஜர் கப்பனை பதவியிறக்கம் செய்து மிலிட்டரி ஜெயிலில் அடைத்தார்கள். அவர் மீதான குற்றச் சாட்டுக்கள் பின்வருமாறு, 

  1. கர்னல் எம். உல்லாஸ் அவர்களின் பெயரை ‘முல்லாஸ்’ ( முட்டாள்கள் ) என்று குறிப்பிட்டது. ( இதற்குதான் எழுத்தில் காற்புள்ளிகள் அவசியம் என ஆசிரியர்கள் தலையிலடித்துக் கொள்கிறார்கள் )
  2. ராணுவத்தின் ரகசியங்கள் குறித்து கர்னலின் மனைவிக்கு கடிதம் எழுதி அதில் காதல் வசனங்களைச் சேர்த்தது. ( கணவனுக்கு வரும் கடிதங்களை மனைவிமார் பிரித்துப் படிப்பதால் ஏற்படும் தீங்குகளில் இதுவும் ஒன்று ) 
  3. அரசாங்கத்தை இழிவு படுத்தியது. ( ம்க்கும் )
  4. கர்னலுக்கு கொலை மிரட்டல் விடுத்தது. ( இல்லைனாலும் அவர் சாகத்தானே போகிறார் ?) 
  5. கொஞ்சம் கூட அறிவே இல்லாமல் ஒரு கடிதத்தை இயற்றியது.  

தன்னுடைய தபால் பணியின் நிமித்தம் மேஜர் கப்பனின் பணி டபால் ஆனது குறித்த வருத்தம் கோலப்பனை ஆட்கொண்டது. மேலும் ஜெயிலில் இருந்து வந்ததும் மேஜரால் தனக்குப் பணி கிட்டும் என்பதால் தன்னுடைய பணியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார் கோலப்பன். அன்று மாலையில் மேஜரின் அறையைச் சுத்தப் படுத்த போன கோலப்பனுக்கு கர்னலின் வாட்ச் ஒன்று கிடைத்தது. திடீரென பவர் கட் ஆனபோது அந்த வாட்ச் மட்டும் ஒளிர்ந்ததைக் கண்டு அதிசயித்தார். மேரி கியூரி குறித்த அறிவில்லாத கோலப்பனுக்கு அந்த ஒளியானது விந்தையை அளித்தது. 

யாருக்கும் தெரியாமல் வாட்சை எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டார். அந்த கைக்கடிகாரம்தான் இப்போது குடிப்பழக்கத்துக்கு ஆளாகியிருந்தது. பின்னே ! மேஜர் கப்பனின் கடிகாரமென்றால் சும்மாவா ?

கொஞ்ச நாளில் பணியிலிருந்து விடுவித்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தார். இதோ பதினைந்தாண்டுகள் கழிந்து அந்தக் கன்றுக் குட்டியை இழுத்து வந்து கழனித் தொட்டியில் நீர் குடிக்க வைக்க முயன்று தோற்றார். 

பக்கத்தில் உட்கார்ந்திருந்த செல்லம்மாளிடம் கோலப்பன்,  “எட்டீ ! காலங்காத்தலயே தொழுவத்துக்குள்ள குத்த வச்சிருக்க ? போட்டீ எந்திச்சி !” என்றவாறே கன்றுக்குட்டியை தொட்டிக்குள் வைத்து அழுத்தினார். இந்நேரம் படபடவெனப் பொரிய வேண்டிய செல்லம்மாள் அமைதி காத்தது குறித்து கோலப்பனுக்கு சந்தேகம் எழுந்தது. ஒருவேளை தன்னுடைய தாயார் புய்ப்பமாக இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டே, “எம்மோ ! எதுக்கு வெள்ளனயே வந்து இங்க கெடக்க ?” என்றவாறே தள்ளாடி கிழவியின் மேல் விழ கிழவி கழனித் தொட்டிக்குள் விழுந்தாள். அப்போது எங்கிருந்தோ ஒரு அடி கோலப்பனின் பின்மண்டையில் விழ கோலப்பன் மயங்கி தொட்டிக்குள் பாய்ந்தார். 

கண்விழிக்கும் போது காவல் நிலையத்தில் படுத்திருந்த கோலப்பனின் மீது கீழ்க்கண்ட குற்றச் சாட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. 

  1. சாராயக்கடையின் வாசலில் போதையில் படுத்துக்கிடந்த பானமருந்திய மகானை இழுத்து வந்து சாக்கடையில் அழுத்திக் கொல்ல முயன்றது.
  2. வெளியில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த காது கேட்காத கிழவியை சாக்கடைக்குள் மிதித்துத் தள்ளியது. 

ஒரு குவாட்டரைச் சாத்திவிட்டு டாஸ்மாக் கடை மேசையில் குப்புறப் படுத்திருந்த கோலப்பனுக்கு அங்கு பவர் கட் ஆன விஷயம் தெரியாமல் எழுந்து அந்தக் குடிகாரக் கடிகாரம் காட்டிய தவறான நேரத்தால் எழுந்து, பக்கத்து டேபிளில் கேட்ட கந்த சஷ்டிக் கவச ரிங்டோனையும், கொக்கரக்கோ என்ற மெசேஜ் டோனையும் நம்பி தரையில் கிடந்த சக பானியை இழுத்துப் போய் கன்றுக்குட்டி என்று எண்ணி தண்ணீர் காட்டப் போய், செல்லம்மாளும், புய்ப்பமும் எதிர்வினையாற்றாதது குறித்த விந்தையைச் சற்றும் உணராமல் சாக்கடைக்குள் வீழ்த்தி இப்போது காவல் நிலையத்தில் கட்டுண்டு கிடந்தார் கோலப்பன். எல்லையில் கூட இப்படியெல்லாம் நிகழ்ந்ததில்லை. ‘எல்லாம் இந்தக் கப்பன் தாயளிக்க வாட்சால வந்த வினை’ என்று எண்ணி சலிப்படைந்ததோடு நில்லாமல் கப்பனின் சாபம்தான் தன்னை ஆட்டுவதாக நம்பினார்.          

குடிக்காரர்களும் கடிகாரங்களும் ஒன்றுதான். நேரத்தை விரயம் செய்தபடியே ஓடிக்கொண்டிருப்பார்கள் அல்லது படுத்துக் கிடப்பார்கள். ஏ கடிகாரங்களே ! ஏன் எங்களை வதைக்கிறாய் ?


  • பிரபு தர்மராஜ்                     

2 COMMENTS

  1. கப்பன் நான்காவது ரவுண்டுக்கு மேலே போக போக சிரிப்பு தாங்க முடியவில்லை தோழர்…
    எளிய இனிய நடை வாழ்த்துக்கள்…!

  2. மதிப்பிற்குரிய பிரபு தர்மராஜ்:
    மிக அழகான நகைச்சுவையான கதை. “தீவாளி போதையும் தீக்குளித்த வாதையும்” என்ற சிறுகதையை முன்னமே படித்துள்ளேன். (நடுகல்) . (அதுவும் மிக மிக நகைச்சுவையான கதை… என் மாணவர்களிடம் வாசித்துக் காட்டியுள்ளேன்). நெல்லை வட்டார வழக்கு மிக நேர்த்தியாய் வெகு இயல்பாய் வருவது உங்கள் கதையின் சிறப்பம்சமாகக் கருதுகிறேன்.
    நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.