தலைகீழ் பாதை


கைப்பையிலிருந்து சாவியை எடுத்து கதவைத் திறந்தான் சுப்பிரமணி. உள்ளே அடைத்திருந்த காகிதமும் மையும் கலந்த புழுக்கநெடி ஆவியை போல் கடந்து சென்றது. பலகைத் தடுப்புக்குப் பின்னால் தலையிறங்கப் போர்த்தியிருந்த நகலெடுக்கும் இயந்திரம் மங்கிய வெளிச்சத்தில் குட்டிப்பூதம் போல் தோன்றியது. அதற்குத் தினமும் கொஞ்சமாவது வேலை கொடுக்கவேண்டும். இல்லையென்றால் மிகுந்த பசியில் தன் உரிமையாளனை எடுத்து விழுங்கிவிடும். வழக்கம்போல் வாடிக்கையாளர் பெஞ்சுக்குக் கீழ் செருப்பைக் கழற்றிவிட்டு செய்தித்தாளை மேசையில் வைத்தான். கடையின் மைய விளக்கை மட்டும் போட்டான். பின்பக்கமிருந்து அழுத்திப் பெருக்கத் தொடங்கினான். புழுதியும் மண்ணும் திரண்டு வந்தன. அவற்றை வெளியில் கூட்டித் தள்ளினான். நகல் இயந்திரத்தின் மேலிருந்த துணியை உருவி மடித்து வைத்தான். மேற்புறத்திலும் இடுக்குகளிலும் விரல்விட்டு வெகுநேரம் நுணுக்கமாக துடைத்தான். தட்டிலிருந்த தாள்களை தூசிபோக உதறி மீண்டும் அடுக்கினான். உடலில் குளிர்ந்த வேர்வைத் துளிகள் அரும்பின. மின்விசிறியை மெதுவாக சுழலவிட்டு செய்தித்தாளை படிக்க ஆரம்பித்தான். தினமும் ஒரே மாதிரியாக வெளியாகும் செய்திகளில் மனம் ஒன்றவில்லை.

கடை எதிரில்தான் தேசிய நெடுஞ்சாலை ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் வழியாகத்தான் முன்பெல்லாம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும். போக்குவரத்து எப்போதும் ஓயாமலிருக்கும். சற்று தள்ளி இரயில் பாதை சாலையின் குறுக்கே ஓடுகிறது. இரயில்கள் போய் மறையும் வரையிலும் இரயில்வே கேட் மூடப்பட்டிருக்கும். அப்போது எச்சரிக்கைக்காக எழும் கண கணவென்ற மணியோசை எல்லோர் மேலும் அதிகாரம் செலுத்தும். இரண்டு பக்கங்களிலும் பலவகை வாகனங்கள் கூட்டமாக நிற்கும். தண்ணீர் பாட்டில்களும் குளிர்பானங்களும் தின்பண்டங்களும் பயணிகளின் கையருகில் விற்கப்படும். தேவையில்லையானாலும் உங்களுக்கு அவற்றை வாங்கத் தோன்றும். சுற்றிலுமுள்ள பாய், தலையணை, செருப்புக் கடைகளும் ஓட்டல்களும் ஆட்களால் நிரம்பியிருக்கும். தேநீர்க்கடைகள் இரவு பகலாக இயங்கிக் கொண்டிருக்கும். இந்த வியாபாரங்களுக்காகத் தான் இரயில் பாதை கதவுகள் நீண்டநேரம் மூடப்படுவதாக வதந்தியும் உலவியது. காத்திருக்கும் பயணிகள் பொருட்களை வாங்கி, எதையாவது தின்று இளைப்பாறி பொழுதுபோக்கினார்கள். பலவித கடைகளின் நடுவில் சம்பந்தமில்லாமல் ஒரேயொரு நகலெடுக்கும் கடை சுப்பிரமணியுடையது.  நீங்கள் இரயில்வே கதவு திறப்பதற்குள் தேவைப்படும் நகல்களை அங்கு எடுத்துக் கொண்டு, மீண்டும் வாகனங்களில் பயணம் தொடரலாம். அவனுக்கு வாகனங்களிலிருப்பவர்களை நகலெடுக்க கூவியழைக்க வேண்டியதில்லை. அவர்கள் அவன் கடையைத் தேடி வந்தார்கள். அக்கம்பக்கத்திலிருந்தவர்களும் அடிக்கடி நகலெடுத்துக்கொண்டிருந்தார்கள். இப்போது ஒவ்வொரு அசலுக்கும் எண்ணற்ற நகல்கள் தேவைப்படுகின்றன.  

நாலைந்து மாதங்களுக்கு முன் நகருக்கு வெளியில் நாலுவழி புறச்சாலை போடப்பட்டது. அது நேராக பேருந்து நிலையத்துக்கு சென்றது. எந்த இடத்திலும் இரயில் பாதைகள் குறுக்கிடாது. அதனால் உட்புற சாலையில் பயணிப்பவர்கள் குறைந்தார்கள். நகல் கடைக்கு வரும் மாணவர்களையும் தரகர்களையும் குடும்பத்தினர்களையும் காணவில்லை. அவர்கள் பேருந்து நிலையத்தின் பக்கத்திலுள்ள நிறைய நகல் கடைகளுக்கு செல்கிறார்கள். அல்லது அவர்களுக்கு நகலெடுக்கும் தேவை ஏற்படவில்லை. நிறைய தலையணை மெத்தை கடைகளும் ஓட்டல்களும் புறவழிச் சாலை சந்திப்புக்கு இடம் பெயர்ந்தன. நீர், நொறுக்குத் தீனி விற்பவர்கள் பேருந்து நிலையத்துக்கு மாறினார்கள். இரயில்கள் செல்கையில் இரயில் கேட் வெறுமனே மூடித் திறக்கப்பட்டது. இரு பக்கங்களிலும் காத்திருக்கும் வாகனங்களின் கூட்டமில்லை. அங்கு தெரியாமல் வந்தவர்கள் நிற்க நேரமில்லாமல் திரும்பிச் சென்றார்கள். அவனுடைய மணி சிராக்சும் சில கடைகளும் வேறுவழியில்லாமல் பழைய இடத்தில் தங்கியிருந்தன. ஒரு கிழவர் வீடு பக்கத்திலிருந்ததால் பிடிவாதமாக தினமும் கடையைத் திறந்துகொண்டிருந்தார்.

சுப்பிரமணி செய்தித்தாளை மடித்து உள்ளே வைத்தான். அவசரமான ஒரு வேலையிருப்பதை போல் எழுந்துகொண்டான். கடையினுள்ளிருந்த நகல் இயந்திரத்தை உற்றுப் பார்த்தவாறு நின்றான். ஓர் உதவித்தொகை திட்ட விண்ணப்பம் அவனுக்கு ஞாபகம் வந்ததும் அதை எடுத்தான். யாரோ இவ்வளவு நகல்கள் எடுக்கவேண்டுமென்று கட்டளையிட்டதை போல் இயந்திரத்தை உயிர்ப்பித்தான். மூடியைத் திறந்து படிவத்தை கண்ணாடி மேல் வைத்து பொத்தானை அழுத்தினான். உள்ளே நீண்ட ஒளிர் விளக்கு கண்கள் கூசும்படி நகர்ந்தது. சாம்பல் பூசியதைப் போன்ற தாள்கள் நடுங்கியபடி வெளிப்பட்டன. தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தால் நகல்கள் பளி்ச்சென்று  மாறிவிடும். மொத்தம் மூன்று நகல்களை எண்ணி மேலே வைத்தான். மேசையடுக்கில் அதன் பத்துப் பதினைந்து நகல்கள் விற்பனைக்கு காத்திருந்தன. இனிமேல் அவை தேவையில்லாமலும் போய்விடலாம். அதைத் தெரிந்து செய்ததால் அவனுக்கு மிகவும் அவமானமாயிருந்தது. சில சமயம் தன்னை மீறி செயல்கள் நடந்துவிடுவதை புரிந்துகொள்ள முடியவில்லை.. ஒருமுறை வேலையில்லாத நாளின் முடிவில் வெறிபிடித்து யாரோ ஒருவருடைய வேலை மனுவை நிறைய நகலெடுத்து முடித்ததும்தான் உணர்ந்தான். கண்களில் நீர் வர அப்படியே தலைகவிழ்ந்து உட்கார்ந்தான். அந்தக் காகிதங்களை சிறு சிறு துண்டுகளாக கிழித்து குப்பையில்போட்டான். கடையை  மூடும் போது மனம் வெறுமையாயிருந்தது. மறுநாள் காலை ஒரு முழு பாடப்புத்தகத்தையும் நகலெடுக்கும் வேலை வந்தது. நேற்று தன்னை மீறி வேண்டுதலை போல் அப்படிச் செய்ததால்தான் இந்த வேலை கிடைத்தது என்று எண்ணிக்கொண்டான். தொடர்ந்து வேலையில்லாமலிருந்தால் ஒரு நாளைக்கு கடையிலுள்ள தாள்கள் காலியாகும் வரை தான் தேவையில்லாமல் எதையாவது நகலெடுக்கலாம்.

திடீரென்று ஒருவர் வழி தவறியவரை போல் தயங்கியவாறு கடைக்குள் நுழைந்தார். முதலில் அவர் யாரென்று தெரியவில்லை. அரசியல்வாதியை போன்ற தோற்றத்திலிருந்தார். வெள்ளைச்சட்டையும் வேட்டியும் சற்று மங்கியிருந்தன. பிளாஸ்டிக் பையிலிருந்து கனமான பத்திரத் தாள்களை எடுத்து நீட்டினார். “எல்லாத்துக்கும் ஒரு காப்பி எடுத்துக் குடுங்க” என்று பெஞ்சில் உட்கார்ந்தார். அவர் ஏற்கெனவே சிலதடவை நகலெடுக்க வந்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்தின் இடைத்தரகர் என்று சொல்லலாம். அந்த வீட்டுப்பத்திரத்தின் பக்கங்கள் பழுத்து மட்கி ஒடியும் நிலையிலிருந்தன. அவை பழைய அரசாங்க முத்திரைகள் குத்தப்பட்டு, வினோதமான கிறுக்கல் கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தன. எல்லாப் பக்கங்களையும் பிரித்து நகலெடுத்து முடித்தான். தரகர் மனம் மாறி “இன்னும் ஒண்ணு சேத்து எடுத்திடுங்க” என்றார். இயந்திரத்தை அணைக்கவிருந்த சுப்பிரமணி திருப்தியுடன் மீண்டும் நகலெடுத்துக் கொடுத்தான். முதன்முறை படிப்பவரை போல் தரகர் ஆவலாக நகலைப் படித்துப் பார்த்தார். அவர் கண்கள் பிரகாசித்தன. அது மிகவும் பெரிய சொத்தாயிருக்கலாம். அவர் தலையுயர்த்தி “இங்கதான் கீழ்ப்பக்கமா வரிசையா மூணு கடைங்க ரொம்ப குறைஞ்ச விலைக்கு வருது, விற்கவருக்கு அவசர பண முடை. நீங்க வாங்கிப் போட்டா பின்னால உதவும்” என்றார். தன்னைக் கேலி செய்வதைப் போலிருந்தாலும் தரகர் தொழில்ரீதியாக எல்லோரிடமும் அதை சொல்லுவார் என்று நினைத்துக்கொண்டான். அவன் வெறுமனே புன்னகைத்தான். தரகர் கனத்த சட்டைப் பையிலிருந்து பணத்தை எடுத்துத்தந்தார். அவர் திரும்பவும் நகல்களைப் புரட்டியவாறு போவதை மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தான்.

சுப்பிரமணிக்கு தூக்கம் வரும் போலிருந்தது. இன்று காலையில் ஓரு வியாபாரம் நடந்துவிட்டது. மூலைக்கடையில் நிம்மதியாக தேநீர் குடித்துவிட்டு வரலாம். மின்விசிறியை அணைத்து பெஞ்சை இழுத்துவிட்டு கடைக்கு  வெளியில் வந்தான். இன்னும் பொழுது விடியாதது போல் அரையிருள் சூழ்ந்திருந்தது. வழக்கத்திற்கு மாறாக மங்கிய வெளிச்சம் வீசியது. தரை முழுவதும் கருநிழல் படிந்திருந்தது. தலைக்குமேல் பெரும் விலங்கு ஒன்று நிற்பதுபோலிருந்தது. நிமிர்ந்து பார்த்து ஆச்சரியமும் அதிர்ச்சியுமடைந்தான். அவனால் தன் கண்களை நம்பமுடியவில்லை. மிக அருகில் பிரம்மாண்டமான சிமெண்ட் சுவர் நீண்டிருந்தது. எதிரில் பெரிய திரை கட்டி தொங்கவிட்டது போலிருந்தது. பக்கத்தில் வரிசையாக தூண்கள் விசுவரூபமெடுத்து நின்றிருந்தன. ஒவ்வொன்றும் கைகளால் கட்டிப்பிடிக்க முடியாதளவு பெரியவை. அவற்றின் உச்சியில் தாங்கிகள் பாரமாக உட்கார்ந்திருந்தன. மேலே கூரையை போல் புதிய ஒரு பாலம் வளைந்து கவிந்திருந்தது. அது சாலை மேல் இரயில் பாதைகளை தாண்டிச் சென்றுகொண்டிருந்தது. அவன் கடையும் பக்கத்துக் கடைகளும் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தன. சுப்பிரமணி கண்களை கசக்கிக்கொண்டு பார்த்தான். ஒழுங்காக வேலை கொடுக்காததால் தன் மூளை மழுங்கிப்போய்விட்டதென்று நினைத்தான். யாரிடமாவது போய் கேட்டால் பைத்தியம் என்பார்கள். பல காலமாக அந்தப் பாலம் இருக்கிறதென்று சொல்வார்கள். ஆனால் திடீரென்றுதான் அங்கு மேம்பாலம் முளைத்திருக்கிறது. நேற்று இரவு கடையை மூடும்போது கூட தென்பட்டிருக்கவில்லை. இப்போது மிகவும் அவசரமென்பதால் பாலம் போன்ற சினிமா செட்டை போட்டிருக்கலாம். அல்லது வேறெங்கோ தயாராயிருந்த பாலத்தின் பகுதிகளை எடுத்து வந்து இணைத்திருக்கலாமென்றும் பட்டது. அவன் அதை உற்றுப் பார்த்தவாறு நின்றிருந்தான். அதனால் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் மாற்றங்களை நினைத்து அச்சமாயிருந்தது.

சுப்பிரமணி மேம்பாலத்தின் சுவரை தொட்டுப் பார்த்தான். அதில் வெம்மையும் குளிர்ச்சியும் கலந்திருந்தது. அதன் ஓரமாயிருந்த சிறிய இடைவெளியில் நடந்து சென்றான். சுவரைத் தாண்டியிருந்த தூண்களுக்குள் புகுந்து மறுபக்கத்தை அடைந்தான். கடைகளை உரசியபடி பாலம் மேலெழுந்து சென்றுகொண்டிருந்தது. அதன் குறுகிய இடைவெளியில் நாலைந்து கடைகள் திறந்திருந்தன. அடுத்தடுத்திருந்த கடைகளின் கதவுகள் திறக்க முடியாதபடி சிக்கிக்கொண்டிருந்தன. கடைப் பெயர்களையும் விளம்பரங்களையும் சிமெண்ட் புழுதி மூடியிருந்தது. சில கட்டடங்கள் அரைகுறையாக இடிக்கப்பட்டு மூளியாயிருந்தன. அவற்றுக்கப்பால் முழுவதுமாக காணாமல் போயிருந்தன. அவற்றின் எந்த தடயமுமில்லை. பாலத்தின் அடியில் அடர்ந்த நிழலில் வண்டிமாடுகள் கண் மூடி அசை போட்டுக்கொண்டிருந்தன. முன்னால் முறுக்கிய வைக்கோல் பிரிகள் வைக்கப்பட்டிருந்தன. கீழே சாணமும் மூத்திரமும் கலந்த சேறாயிருந்தது. ஓரத்தில் இரயில்வே கேட்டின் கொட்டகை ஊழியர்களில்லாமல் சிதைந்திருந்தது. நிழலைப் பரப்பிய புங்க மரம் கிளைகள் வெட்டப்பட்டு மொட்டையாயிருந்தது. அவன் துயரம் அழுத்த கடைக்குத் திரும்பினான்.

இந்த இடத்தில் பெரிய மேம்பாலம் கட்டும் தேவையிருக்கவில்லை. புறவழிச் சாலை போடப்படுவதற்கு முன்னால் எல்லா வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்லும். அடிக்கடி இரயில்களுக்காக இரும்புக் கதவுகள் அடைக்கப்பட்டு வாகனங்கள் உறுமியபடி இரு பக்கமும் நிற்கும். துரதிர்ஷ்ட வேளைகளில் ஏதாவது அவசரத்தில் லாரி இடித்தால் பூட்டில் சிக்கிய கதவை நிறைய நேரத்துக்கு திறக்க முடியாது. தொழில் நுட்பக் கோளாறில் சமிக்ஞை கிடைக்காமல் இரயில்கள் குறுக்காக நின்றும்விடும். சில சமயங்களில் இரயில்கள் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும். யாருக்கும் மணிக்கணக்கில் காத்திருக்கும் பொறுமையில்லை. இருசக்கர வாகனத்தை மறுபடியும் கிளப்ப முடியாதென்று அணைக்காமல் காத்திருந்த ஒருவர் அலுப்புடன் “ஒரு மேம்பாலம் கட்டித் தொலைச்சா நல்லாயிருக்கும்” என்றார். பக்கத்தில் காரிலிருந்த சமூக ஆர்வலரின் காதில் அது விழுந்தது. ஐந்து நிமிடத்துக்கு ஓர் இரயில் போகிறதென்றும் காத்திருக்கும் வாகனங்களின் எரிபொருள் மற்றும் மனித நேர மதிப்பு சராசரியாக மணிக்கு ஆயிரமென்றும் அவர் கணக்கிட்டார். இரயில் பாதையை கடக்க மேம்பாலம் மிகவும் தேவையென்று நினைத்தார். அவர் அது பற்றி நிறைய துண்டறிக்கைகள் எழுதி வெளியிட்டார். பாலம் கட்டித் தருவோம் என்று வாக்குறுதியை தேர்தல் நடக்கையில் எதிர்க்கட்சி தந்தது. உடனே எல்லாக் கட்சிகளும் அதே போன்ற வாக்குறுதிகளை அளித்தன. பெரும் வெற்றி பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர் பாலம் கட்டுவதைப் பற்றி சபையில் கன்னி உரையில் பேசினார். பிறகு எல்லோரும் அதை மறந்தும்விட்டார்கள். நீண்ட காலம் கழித்து பாலம் கட்டுவதற்கு ஆராய்ச்சி செய்யத்தொடங்கினார்கள். அது கட்டப்பட்டால் தங்கள் வீடுகள் பறிபோகுமென்று அங்கிருந்தவர்கள் பயந்தார்கள். வணிக நிறுவனங்கள் சில சேர்ந்து வழக்குகள் போட்டன. ஒரு கோவில் இடிக்கப்படுவதை எதிர்த்து பாலம் கட்ட தடையுத்தரவு வாங்கிவிட்டதாகவும் சொன்னார்கள்.

சுப்பிரமணி கடைக்குள் உட்கார்ந்தவாறு பாலத்தை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். அது ஒரு மலையைப் போல் தவிர்க்க முடியாமல் நின்றுகொண்டிருந்தது. மேலும் அவன் கடைக்கருகில் நெருங்கி வந்துவிட்டதாகவும் தோன்றியது. கை நீட்டித் அதைத் தொட்டுவிடலாம் போலிருந்தது. இன்னும் சில நாட்களில் முழுதாக கடையை அடைத்துக்கொள்ளும். இடைப்பட்ட சந்தில் சிலர் போய் வந்துகொண்டிருந்தார்கள். பாலத்தில் நீண்ட கழியை சுமந்து ஒருவர் சிரமப்பட்டு ஏறிக்கொண்டிருந்தார். பிறகு உச்சிக்கு சென்று மறைந்துவிட்டார். கீழே பிளாஸ்டிக் பொருள் விற்பவர் மேலும் போக முடியாமல் நிராசையுடன் தள்ளு வண்டியைத் திருப்பினார். மறுபக்கம் வண்டி மாட்டை ஒர் ஆள் ஓட்டிப் போய்க்கொண்டிருந்தார். சரக்கு இரயிலின் சப்தம் நீண்ட நேரம் கேட்டு ஓய்ந்தது. தொடர்ந்து மற்றொன்று பறவையை போல் கூவிச் சென்றது. பின்னர் கனத்த அமைதி. வாகனங்களின் பழைய இரைச்சல் பரபரப்பு இல்லை. இனி சுவர்தான் எதிரில் சலனமில்லாமலிருக்கும். மேம்பாலம் கீழே யாரும் தேடி வர மாட்டார்கள். அவன் சிறையில் அடைபட்டுவிட்டதை போல் உணர்ந்தான்.

சுப்பிரமணி பேருந்து நிலையத்துக்குப் போகும்பொதெல்லாம் அங்குள்ள மேம்பாலத்தை நின்று பார்த்துவிட்டு வருவான். சாலை மற்றொரு சாலையை தாண்டிச் செல்ல அது கட்டப்பட்டிருந்தது. கீழிருந்து வாகனங்கள் மேலே பாய்ந்து செல்லும். பிறகு உச்சி வானில் இறங்கி மறையும். வேறு வாகனங்கள் மேலிருந்து பனியில் சறுக்குபவை போல் வழுக்கி வரும். அவை சிரமப்படாதபடி பாலம் அதி தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டிருந்தது. சாலையில் ஏறுவதும் இறங்குவதும் தெரியாது. நீங்கள் கண்களை மூடிக்கொண்டால் அதன் மேல் சமவெளியை உணரலாம். வாகனங்களின் மேல் பாலம் அவ்வளவு அக்கறை கொள்கிறது. அது தனியாக நிற்கும் ஒரு சிகரம். அந்த மேம்பாலத்தை அவன் மிகவும் விரும்பினான். அது போன்ற ஒன்றில் நடக்கும் பயணத்தை காலமெல்லாம் ரசித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் பாலம் மனிதர்கள் மேல் கருணையாயிருப்பதில்லை. வாழும் இடத்தைப்பிடுங்கி அவர்களை உயிருடன் கொன்றுவிடுகிறது. தலைமுறைகளாகப் புழங்கிய வீடுகளையும் வாணிபம் செய்த கட்டடங்களையும் கடவுளை வேண்டி வழிபட்ட தலங்களையும் காலடியில் நசுக்குகிறது. ஒரு மேம்பாலம் சாமானியர்கள் மேல் மேலும் குரூரமாயிருக்கிறது. நாம் கால்நடையாக செல்ல அது ஏற்றதாயிருப்பதில்லை.

உள்ளே அடைந்திருக்கப் பிடிக்காமல் மறுபடியும் பெஞ்சை குறுக்காக இழுத்துவிட்டு சுப்பிரமணி எழுந்தான். தெருக்கோடியிலிருந்த தேநீர்க்கடையை நோக்கி சென்றான். சற்று தொலைவிலிருந்த இருப்புப் பாதையின் இருபுற இரயில்வே கதவுகள் அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்டிருந்தன. பதிலுக்கு வரிசையாக குத்தீட்டிகளைப் போன்ற இரும்பு வேலி நீண்டிருந்தது. நடுவில் பாதுகாப்பாக தண்டவாளங்கள் சென்றன. பாலத்தின் குளிர்ந்த நிழலில் வண்டிக்காரர்களும் கூலித் தொழிலாளர்களும் காசு வைத்து தீவிரமாக ஆடுபுலி ஆடிக்கொண்டிருந்தார்கள். ஒதுங்கியிருந்த மளிகைக் கடையும் குளிர்பானக் கடையும் மூடியிருந்தன.  தேநீர்க்கடை தனித்து நின்றிருந்தது. கழுவி சுத்தமாயிருந்த கண்ணாடித் தம்ளர்களை மீண்டும் கழுவிக்கொண்டிருந்தார் கடைக்காரர். பீடி, சிகரெட் விற்கும் பெட்டிக் கடையில் கிழவர் இருமியபடி பீடி புகைத்தவாறு சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தார். அப்போது தூரத்தில் ஓர் இரயில் ஓலமிட்டு வந்து கொண்டிருந்தது.  எதிர்ப்புற பாதையில் மற்றொரு இரயில் பாய்ந்து வந்தது. இரண்டும் சாலை குறுக்கிடும் இடத்தில் ஒன்றையொன்று கடந்து ஓடின. ஒரே இரயில் முன்னும் பின்னுமாக செல்வதைப் போலிருந்தது. கால்களுக்குக் கீழ் பூமி அதிர்ந்தது. தேநீர்க்கடைக்காரர் வழக்கம் போல் அவன் கேட்காமலே கடும் தேநீர் போட்டுக் கொடுத்தார். புன்னகைத்து “இந்தப் பாலத்த இவ்ளோ சீக்கிரமா கட்டுவாங்கன்னு நெனைக்கவேயில்ல…” என்றார். சுப்பிரமணி குழப்பத்தைக் வெளிக்காட்டிக்கொள்ளாமல் “ம்…” என்றான். கடை பெஞ்சிலிருந்தவர் “இது வந்தது ரொம்ப வசதியாப் போச்சி” என்றார். பக்கத்திலிருந்தவர் “பாலத்த கட்டறதுக்கு நெறைய வீடுங்க கடைங்கள இடிச்சு தள்ளிட்டாங்க. அதுக்கு மட்டமான நஷ்ட ஈடுதான் குடுக்கறாங்க” என்றார்.  “அதை இன்னும் கூட குடுக்கவேயில்லை” என்றார் மற்றவர். “நடுவுலிருந்த கோயில் ஒண்ணை அப்படியே பேத்து உள்ளே தள்ளி வைச்சுட்டாங்களாமில்ல. எல்லாம் மாயம் போலிருக்கு.” “இத கட்டறதுக்கு வெளிநாட்டுக்காரங்க கடன் கொடுத்திருக்காங்க. அது கூட பத்தாம போயிடுச்சாம்.” “ஆளாளுக்கு கணக்கெழுதி முடிஞ்சவரை சாப்பிட்டிருப்பாங்க.” “அவசரமாக் கட்டியதால இது வலுவாயில்லை. கொஞ்ச நாளில இடிஞ்சிபோயிடும் பாத்துக்குங்க.” “இனிமே எல்லாரும் இந்தப்பக்கம் வந்தாகணும்…” என்றார் தேநீர்க்கடை பாய். “இது வெத்துக் கதை. பாலத்துக்கு கீழ ஒருத்தரும் வரமாட்டாங்க. எல்லாம் மேல பறந்து போயிடுவாங்க. இப்பல்லாம் யாருக்கும் நிக்க நேரம் இல்ல.” “இத நாளைக்கி அங்கிருந்தே திறந்து வைக்கப்போறாங்க…” அவனுக்கு எது பொய், உண்மையென்று தெரியாமல் தலை சுற்றியது. தேநீர் தம்ளரை வைத்துவிட்டு நகர்ந்தான்.

சுப்பிரமணியின் கால்கள் தாமாக மேம்பாலத்துக்கு சென்றன. எதிரில் வாகனங்கள் நுழையாமல் பீப்பாய்கள் கம்புகள் வைத்து தடுப்பு கட்டப்பட்டிருந்தது. புதிய தார்ச்சாலை பளிங்காக மினுங்கியது. ஒரு வாகனமும் இல்லாமல் மிகவும் அகலமாகத் தெரிந்தது. பாலமெங்கும் அவசரமாக வேலைகள் நடந்துகொண்டிருந்தன. சிறிய விளக்கு மாலைகளையும் தோரணங்களையும் தொங்க விட்டுக்கொண்டிருந்தார்கள். கறுப்பு, மஞ்சள் அம்புகள் கைப்பிடிச் சுவர்களில் பாய்வதைபோல் வரையப்பட்டுக்கொண்டிருந்தன. சாலையில் ரப்பர் மஞ்சள் கோடுகள் இடைவெளிவிட்டு இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தன. மின்னும் மஞ்சள் சிவப்பு ஒளிக்கண்ணாடிகளை பதித்துக்கொண்டிருந்தார்கள். சுப்பிரமணியையும் அவனைப் போன்ற சில பார்வையாளர்களையும் வேலை செய்பவர்கள் திரும்பியும் பார்க்கவில்லை. அவர்களனைவரும் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள். எப்போதாவது தங்கள் மொழியில் சுருக்கமாக பேசிக்கொண்டார்கள். கைகள் விடாமல் இயங்கிக்கொண்டிருந்தன. ஒருவர் இரத்தம் போன்ற வெற்றிலை எச்சிலை துப்பினார். அது பாலத்திலிருந்து மிக வேகமாக கீழே விழுந்தது.

உச்சியில் பலத்த காற்று வீசியது. விசில் போன்ற சத்தம் சுப்பிரமணியின் காதுகளை கிழித்தது. பக்கச் சுவர்களில் உயர்ந்த தடுப்புகளை நிறுத்திக் கொண்டிருந்தார்கள். அவன் கீழே எட்டிப்பார்த்தான். இருப்புப்பாதை கண்ணெட்டும் தூரம் வரை ஓடிக்கொண்டிருந்தது. தண்டவாளங்களும் கற்களும் பளபளத்தன. இரயில் ஒன்று கூவியபடி பாய்ந்து வந்தது. எங்கோ அதன் எதிரொலி கேட்டது. இரயில் மேம்பாலத்துக்கடியில் புகுந்தது. அவன் மறுபுறம் விரைந்து சென்று பார்த்தான். அதற்குள் அது மறைந்துவிட்டிருந்தது. அவன் நம்ப முடியாமல் நின்றிருந்தான். மேம்பாலத்தின் உச்சி தற்கொலைக்கு மிகவும் உகந்த இடம் என்று நினைத்துக்கொண்டான். அங்கிருந்து குதித்தால் எலும்பு கூட மிஞ்சாது.

மேம்பாலம் அபாயகரமாக திரும்பி கீழிறங்கி சென்றது. சற்று கவனம் குறைந்தாலும் அங்கு விபத்து நடப்பது நிச்சயம். சுப்பிரமணி தொடர்ந்து நடந்தான். நீல மலைத்தொடர் பரந்த நகரின் எல்லைக் கோடாக தெரிந்தது. தெருக்களும் சந்துகளும் தாறுமாறாகப் பின்னிக்கொண்டிருந்தன. வாகனங்களும் மனித உருவங்களும் பொம்மைகளாக நடமாடினார்கள். இரும்புக் கூண்டுகளில் மறைந்த தேசத் தலைவர்கள் சிலைகளாக நின்றிருந்தார்கள். சுற்றிலும் உயர்ந்த மாளிகைகளும் வீடுகளும் குடிசைகளின் கூரைகளும் பரவியிருந்தன. அவற்றுக்கிடையிலிருந்த பெரும் வித்தியாசங்கள் துல்லியமாக புலப்பட்டன. அங்கங்கே பாலைவனச் சோலைகளாக பச்சை மர முகடுகள். பாலத்தையொட்டி அழிந்த வீடுகள் குப்பையாகக் குவிந்திருந்தன. சுண்ணாம்பும் மண்ணும் கற்களும் ஒன்றாகக் கலந்திருந்தன. சுவர்கள், கதவுகள் பெயர்ந்து வீடுகள் கைவிடப்பட்டிருந்தன. கரி மூலைகளும் அழுக்கு அறைகளும் தரைகளும் வெளியில் தெரிந்தன. பாலத்தைத் தொட்டிருந்த வீடுகளில் ஆட்கள் எதுவும் நடக்காததுபோல் இயல்பாக நடமாடிக்கொண்டிருந்தார்கள். முக்காடு அணிந்த பெண் மொட்டை மாடியில் துணிகளைக் காயப்போட்டுக்கொண்டிருந்தாள். சன்னல் கம்பிகளைப் பற்றிக்கொண்டு குழந்தை வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தது. ஒரு பையன் பாலத்தின் கைப்பிடிச்சுவரின் மேலேறி விளையாடிக் கொண்டிருந்தான். கதவு பிடுங்கப்பட்டிருந்த வீட்டில் சணல் பை திரையாக தொங்கியது. ஒருவர் பாலத்தில் பயணித்தால் வீட்டு அந்தரங்கங்களை எளிதில் கண்டுவிடலாம்.

பாலத்தின் நுழைவு வாயிலில் அலங்கார வளைவுகளை கட்டிக்கொண்டிருந்தார்கள். “புதிய மேம்பாலம் திறப்பு விழா” என்று தங்க நிறத்தில் எழுதப்பட்டிருந்தது. திறக்கப்போகிறவரின் நடப்பதைப் போன்ற முழு உருவப் பட தட்டிகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன. கைப்பிடிச்சுவரில் அகன்ற கல்வெட்டை கவனமாகப் புதைத்துக்கொண்டிருந்தார்கள். அங்கு உயரதிகாரிகள் சூழ்ந்து நின்றிருந்தார்கள். பளிங்குக் கல்லில் “…தேதி…திறப்பாளர்…” போன்ற வார்த்தைகள் தெரிந்தன. சுப்பிரமணி பெருமூச்சுவிட்டான். அவன் பாலத்தை மறுக்காமல் ஏற்றுக்கொண்டாக வேண்டும். அது திறக்கப்படும் விதி உறுதியாகிவிட்டது. கடைசிக்கட்ட வேலைகள் வேகமாக நடக்கின்றன. எப்பாடுபட்டாவது நாளை திறக்கும் நேரத்துக்குள் முடித்துவிடுவார்கள். பிறகு எல்லா வாகனங்களும் தடையில்லாமல் போய்வரலாம். இனிமேல் காத்திருக்கும் தேவையில்லை. மனித நேரமும் எரிபொருளும் மிச்சமாகும். மனிதர்கள் இரயில் பாதையைக் கடக்கையில் மாட்டிக்கொள்வதால் ஏற்படுகிற மரணங்களும், அது அருகாமையிலிருப்பதால் அடிக்கடி தலை வைத்து செய்து கொள்கிற தற்கொலைகளும் இனி இருக்காது.

சுப்பிரமணி மீண்டும் கடைக்கு வந்து மேம்பாலத்தை பார்த்துக்கொண்டிருந்தான். வெளியுலகத்தை சுவர் முழுதாக மறைத்திருந்தது. யாரும் அதைக் கடந்து  வரப்போவதில்லை. அங்கு ஒரு நகலெடுக்கும் கடையிருந்ததை மறந்துவிடுவார்கள். அவன் நகல் இயந்திரத்துடன் பசியோடிருக்கப்போகிறான். அதை தலை மேல் சுமந்து தான் அலையும் காட்சி எழுந்தது. அவன் அவற்றை மறக்க கண்களை மூடிக்கொண்டான். அப்போது சிலர் கடைக்குள் நுழைந்ததை கவனிக்கவில்லை. எதிர் பெஞ்சில் ஒருவர் உட்கார்ந்த பிறகுதான் தெரிந்தது. மற்றவர்கள் பக்கத்தில் பவ்யமாக நின்றிருந்தார்கள். “இவர்தான் பாலம் கட்டுறதுக்கான பெரிய அதிகாரி. எங்களால அலுவலகத்துக்கு உடனே போய் வர முடியாது. இதையெல்லாம் அவசரமா காப்பி எடுக்கணும்” என்று கனத்த கோப்பை ஒருவர் நீட்டினார். சுப்பிரமணி தன்னையறியாது எழுந்து பெற்றுக்கொண்டான். “ரொம்ப முக்கியமானது, ஒண்ணு கூட தவறக்கூடாது” என்றார் அலுவலர் கடுமையாக. மற்றொரு அலுவலர் தலையாட்டினார். உயரதிகாரி வேறொரு கோப்பை பார்வையிட்டுக்கொண்டிருந்தார். இன்னும் பல கோப்புகள் அலுவலர்களின் கைகளிலும் கக்கங்களிலுமிருந்தன. இந்தக் கணிணி யுகத்தில் இவ்வளவு கோப்புகளிருப்பதை எண்ணி வியந்தான் சுப்பிரமணி. தடுப்புக்கு பின்னாலிருந்த நகல் இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினான். சிறிய உறுமலுடன் அது விழித்தது. கோப்பைப் பிரித்து ஒவ்வொன்றாகத் தாள்களை வைத்து நகலெடுக்கத் தொடங்கினான். எல்லா பக்கங்களும் கணினியில் அச்சிடப்பட்டிருந்தன. ஒப்பந்தங்களும் திட்டமிடல் கடிதங்களும் ஒப்புதல், செயல் ஆவணங்களும், அனைத்தும் இந்த மேம்பாலம் தொடர்பானவை. அங்கங்கே பச்சை மசியில் புரியாதபடி குறிப்பெழுதி சுருக்கக் கையெழுத்துகளிடப்பட்டிருந்தன. கண்ணில்பட்ட ஓரிடத்தில் குடியரசுத் தலைவரின் முத்திரையிட்ட கையொப்பமிருந்தது. பெருநிறுவனங்களின் கோடிக்கணக்கான மதிப்புள்ள பற்றுச் சீட்டுகளும் இணைந்திருந்தன. சுப்பிரமணி. முடிந்த வேகத்தில் நகலெடுத்துக்கொண்டிருந்தான். உயரதிகாரி மற்றொரு கோப்புக்கு மாறினார். அலுவலர் செல்பேசியைத் தர இரண்டு மூன்று வார்த்தைகளில் சுருக்கமாக பேசினார்.

சுப்பிரமணி வாழ்க்கையில் இந்தளவு பக்கங்களை நகலெடுத்ததில்லை. இனிமேலும் எடுக்கப்போவதில்லை என்று தோன்றியது. அவன் தன் கடையை மூடியிருக்கும் மேம்பாலத்தை மறந்தான். அதன் நாளைய கோலாகல திறப்பு விழாவும் ஞாபகத்திலில்லை. எதிர்காலத்தில் நகலெடுக்கும் வேலை நடக்குமா என்ற கவலையும் ஓய்ந்தது. அவன் தொடர்ந்து நகலெடுத்துக் கொண்டிருந்தான். நகலியந்திரம் நடுவில் பழுதுபடாமலிருக்க வேண்டுமென்று நினைத்தான். அரசாங்க அதிகாரிகள் நகலுக்குரிய தொகையை ஒழுங்காக தருவார்களா என்ற சந்தேகம் எழுந்து மறைந்தது. இனி இவர்களைப் போல் யாராவது அருகிலிருப்பவர்கள் அவசரத்துக்குத் தேடி வந்தால்தான் உண்டு. நீண்டகால வாடிக்கையாளர்கள் கடையை ஞாபகம் வைத்திருக்கப்போவதில்லை. அவன் கடை மெல்ல மறைந்து போய்விடும். இந்த மேம்பாலம் கட்டப்பட்டிருக்கக்கூடாது. அது நாளை திறக்கப்படாமல் தடுக்கவேண்டும். அவன் பாலத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அறிவித்தால் திறப்புவிழா நடக்காது. அவனைக் கைது செய்து சித்திரவதைப்படுத்தி தண்டனைக்குள்ளாக்குவார்கள். மேம்பாலம் கட்டப்பட காரணமான இந்தக் கோப்பை ஒளித்துவைத்தாலும் திறக்கப்படுவதை நிறுத்தலாம். அரசுஅலுவலர்கள் அதை ஊகித்தவர்களைபோல் தடுப்புக்கு மேல் அவன் ஒவ்வொரு செயலையும் கண்காணித்தார்கள். சுப்பிரமணி நகலெடுத்துக்கொண்டிருந்த கோப்பின் நடுவில் ஒரு பக்கத்தை மட்டும் நகலெடுக்காமல் விட்டுவிட்டான். யாருக்கும் தெரியாமல் அதை கோப்பில் சேர்த்தான். தான் தவறி செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டான். அதனால் மேம்பாலம் திறக்கப்படாமல் மூடப்பட்டுவிடும் என்றும் நம்ப முயன்றான்.


  • மு. குலசேகரன் 

குறிப்பு:  ‘காலச்சுவடு’ இதழில் வெளியான இச்சிறுக்கதை  கதாசிரியரின் உரிய அனுமதிப் பெற்றுப் பெற்று ‘பெட்டகம்’ பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.