வெளிய

முள் தோப்பெங்கும் மலநாற்றம். இந்தத் தெருவிலேயே பெரியம்மா தான் முதலில் தோட்டத்துக்குப் போகும். தெருக் குழாயில் ராத்திரி முழுக்க தண்ணீர் மெல்லிசாகச் சொட்டிக் கொண்டிருக்கும். தண்ணீர் பிடிப்பதற்காக பெரியம்மாவுக்கு விடியற்காலை இரண்டு மூன்று மணிக்கெல்லாம் விழிப்பு வந்துடும். தண்ணீர் பிடித்துக்கொண்டு இருக்கும்போதே பறவைகள் சத்தம் கேட்கிறதா எனப் பார்க்கும். பறவைகள் சத்தம் கேட்டால் பூச்சி. பொட்டெல்லாம் போய்விடும்னு பெரியம்மா சொல்லும்.

தோட்டத்துக் கதவைத் திறந்து முதல் ஆளாகப் பெரியம்மா குப்பைப் பள்ளத்திற்குப் போகும். குப்பைப் பள்ளத்தைவிட்டுத் தள்ளிப்போய் உட்காராது. முன்னாடியே உட்கார்ந்துவிடும். பெரியம்மா போன உடனே அடுத்தடுத்து அக்காக்கள் மூன்று பேரும் போவார்கள். கடைசியாய் அம்மா போகும்.

நான் போகும்போது கால் வைக்க இடமிருக்காது. கட்டை விரலை ஊன்ற வைத்து எம்பிக் குதித்து, நல்ல இடம் தேடி உட்காருவதற்குள் போதுமென்றிருக்கும். அந்நேரத்திற்குள் எல்லோர் வீட்டுக் குப்பைப் பள்ளத்தையும் சுற்றிச் சுற்றி இருந்து வைத்திருப்பார்கள். பன்றிகள் வரும்வரை கால் வைக்க முடியாது. நாற்றம் குடலை முறுக்கும். மழைப் பெய்கின்ற நேரம் என்றால் பொழுது விடியவே கூடாது என்று வேண்டிக் கொள்வேன். யாரும் குப்பைப் பள்ளத்திற்குக் கிட்டக்கூடப் போக மாட்டார்கள். வழி முழுக்க தண்ணீர் தேங்கும். நான் வரும்போது தண்ணீரும் மலமும் சேர்ந்து ‘வ்வா……’

நான் குப்பைப் பள்ளத்துக்கு அருகில் உட்காந்துபோக மாட்டேன். எனக்குன்னு குப்பைப் பள்ளத்தைத் தாண்டி ஒரு முள்ளு மரம் இருக்கு. குடை பிடிச்ச மாதிரி படர்ந்திருக்கும். அந்த முள்ளு மரத்துக்குப் பின்னால் இரண்டு பேர்கூட உட்காரலாம். வெளியே தெரியாது. வேர் அவ்வளவு தடிமன். அந்த மரத்துப் பின்னால் உட்கார்ந்து போனால்தான் பயமில்லாமல் இருக்கும். பின்னாடியும் நிறைய மரமிருக்கும். யாருக்கும் தெரியாது. மரத்துப் பின்னால் உட்கார்ந்து கொண்டு வேரின் ஓரத்தில் சாய்ந்து பார்த்தால் யார் வீட்டுத் தோட்டத்துக் கதவு திறந்திருக்கிறது, யார் வெளியெ வருகிறார்கள்… எல்லாம் பார்க்கலாம். எட்டு மணிக்கு மேல் போனால் பெண்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆண்கள் மட்டும் வாயில் பிரஷ்ஷை வைத்துக்கொண்டு குப்பைக்கிட்ட நின்றிப்பார்கள். “எந்தப் பொட்டச்சி எந்த முள்ளு மரத்துக்குக்கீழ் உட்கார்ந்திருக்காள்”ன்னு கண்ணு அலஞ்சிக்கிட்டிருக்கும்.

வாயில் வைத்த பல்பொடி நுரை போய், பிறகு வெறும் எச்சிலைத் துப்பி, வராத சளியைக் காறித் துப்பிக்கொண்டு கண்களால் முள் மரத்தை மேய்ந்து கொண்டிருப்பார்கள். மூணாவது வீட்டு வடிவேலு அண்ணனுக்கு இதுதான் வேலையே. மரத்துச் சந்திலிருந்து அவன் வருவதைப் பார்த்தால் வேகமாக வீட்டுக்குள் ஓடிவிடலாம்.

சாயந்திரம் பள்ளிக்கூடம் விட்டவுடன் தினமும் வீட்டுக்குள் பையைத் தூக்கிப்போட்டுவிட்டு நானும் சங்கரியும் நேராகத் தோட்டத்திற்கு ஓடும். எனக்கொரு மரம்டி அவளுக்கொரு மரம். பாவாடையை நல்லா சுருட்டிவிட்டுக்கொள்வோம். மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு பேசுவோம். கையில் ஆளுக்கொரு குச்சி. இருந்து கொண்டே பள்ளம் தோண்டுவோம். சின்னச் சின்ன நட்சத்திரம் வரைவோம். சில சமயம் குச்சியைப் போட்டுவிட்டு மண்ணை அள்ளி, சின்னச் சின்ன நிலாக் கும்பல் வைப்போம். நிலாக் கும்பல் வைத்துக் கொண்டே நகர்வோம். அவள் என் பக்கம் நகர்வாள் நான் அவள் பக்கம். நிலா கும்பல் சுவாரசியத்தில் நகர்ந்து வந்து முட்டிக் கொள்வோம். ‘அய்ய’ என ஓர் அசட்டு சிரிப்பு. மீண்டும் நகர்ந்து அவரவர் மரத்தடிக்குப் போவோம். சங்கரி காலையில் என்னுடன் வரமாட்டாள். அவங்க அம்மா விடமாட்டாங்க.

காலையில் பெரியம்மா, அம்மா, பக்கத்து வீட்டு மீரா சித்தி யாரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்க மாட்டாங்க. அவசரத்துக்கு வெளிய போயிட்டு வேலையைப் பார்க்கத் திரும்பிடுவாங்க. சாயந்திரம் பேசுவதற்காகத்தான் குப்பைப் பள்ளத்திற்கு வருவார்கள். பக்கம் பக்கமாய் உட்கார்ந்துகொண்டு குசுகுசுவென பேசுவார்கள் அம்மாவும் மீரா சித்தியும். இருட்டினாத்தான் எழுந்து வருவார்கள். எழுந்து நின்றுகொண்டு கொஞ்ச நேரம் பேசுவார்கள். நடந்து தோட்டத்துக்கு வந்து அங்கு நின்றும் பேசிக் கொள்வார்கள். பேசும்போது மீரா சித்தியின் முகத்தைப் பார்க்க வேண்டும். கண்கள் பக்கத்து வீட்டுக் கதவுகளைப் பார்த்துக் கொண்டே இருக்கும். முகம் தீவிரமாக இருக்கும். அடிக்குரல். உதடுகள் இடைவெளியின்றி அசைந்து கொண்டிருக்கும். அம்மா ஒன்றிரண்டு வார்த்தைகள் சொல்லும். சித்தி பேசிக் கொண்டேயிருக்கும். தலையைச் சுற்றி கொசு மொய்க்கும். வாய்க்குள் ஒன்றிரண்டு பூச்சிகள் நுழையும். காறித் துப்பிவிட்டு, “கண்ணு, வாங்கடி போலாம். பொழுது போச்சி. பூச்சி பொட்டு வரும்” என்று சொல்லிக் கொண்டே தோட்டத்து வாசற்படியில் வைத்திருக்கும் ஒரு டப்பா தண்ணீரில் கால் கழுவிக் கொள்ளும்.

மண்ணு வீட்டுக் கன்னியம்மா கிழவி நல்ல வெயில் நேரத்தில்தான் சுள்ளி பொறுக்கப் போகும். கிழவிக்கு எந்த முள்ளு மரம் காஞ்சிருக்கு, எந்த மரத்துல காய் பழுத்து விழற மாதிரி இருக்கு, வேர் பட்டுப்போன மரத்தை எப்படி பொளந்துகிட்டு வர்றது எல்லாம் தெரியும். எல்லா மரத்துக்குக் கீழேயும் யார் வெளிய போவாங்கன்னும் தெரியும். அந்தத் தெருவில் யார் யாருக்குத் தீட்டுன்னு மதியத்திற்குள் குழாயடியில் கிழவி சொல்லிவிடும். “ஏழு புள்ள பெத்திருக்கேன்… எனக்குக் கூடத்தான் உதிரம் பட்டிருக்கு. ஆனா இந்த காஞ்சூர்த்தாளுக்கு மட்டும் ஒன்னுக்குப் போற மாதிரி போதே. குறுக்கு விண்ணுன்னு தெரிச்சுப் போயிடும்” என்பாள். எல்லார் பத்தியும் தெரியும்.

“சின்ன பசங்கதான கீது. வாய சும்மா வெச்சிட்டிரு மாமி” என்பாள் அம்மா.

“ஆமாம். இவள்லாம் குடிசையில ஒக்காரப் போறதில்ல. வூட்டுக்காரன் கூட படுத்துப் புள்ளப் பெத்துக்கப் போறதில்ல. ரொம்பத்தான்டி அதிசயம் காட்றீங்க.”

நொடிக்கும் அம்மா இடத்தைக் காலி செய்யும். சங்கரி இரண்டு நாட்களாகப் பள்ளிக்கூடம் வரவில்லை. வெளிய போகவும், சாயந்திரம் வரவில்லை. தோட்டத்தில்போய் பின்கதவைத் தட்டினேன். சங்கரி அம்மா தான் திறந்தார்கள்.

“அக்கா, சங்கரியக் கூப்பிடுக்கா.”

“அவ இப்பத்தாண்டிப் போயிட்டு வந்தா. நீ போயிட்டு வா.”

கதவைச் சாத்திவிட்டுப் போய்விட்டாங்க. அவளுக்கு அவசரமாக வந்துவிட்டிருக்கும். அதுதான் போயிட்டுப் போய்விட்டாள். நான் மட்டும் போனேன். சங்கரியின் மரத்தடி சுத்தமாக இருந்தது. இந்நேரத்திற்குப் பன்றி வராதே என்று யோசனையாய் இருந்தது.

நான்கைந்து நாட்கள் ஆகிவிட்டன. சங்கரி பள்ளிக்கூடமும் வரவில்லை. கண்ணிலும் படவில்லை. ஒருநாள் சாயந்திரம் இவள் வெளிய போகப் போனாள். சங்கரி வெளிய போகும் இடத்தில் நிலா கும்பல் வைப்பதுபோல் சின்னச் சின்ன மண் குவியல்கள் இருந்தன. காலால் லேசாகக் கீறிப் பார்த்தேன். ரத்தமாய் இருந்தது. அவளுக்கு உடம்பு சரியில்லைப் போலிருக்கிறது. அதுதான் என்கூட வெளிய போக வரவில்லை. அவளுக்கு உடம்புக்கு என்னன்னு பயமாக இருந்தது. ராத்திரியானால் கரண்ட் கம்பத்திற்குக் கீழே உருளைக்கிழங்கு விளையாட்டு விளையாடுவோம். சங்கரி அங்கும் வரவில்லை. போய்க் கூப்பிட்டேன். “ஏய், அவளுக்கு பேதியாகுதுடி. ஒரு வாரத்திற்கு எங்கும் வரமாட்டா.”

சங்கரியம்மா என்னை உள்ளேயே கூப்பிடவில்லை.

ஒரு வாரம் கழித்துத் தான் சங்கரி வெளிய போக வந்தாள். “ஏம்ப்பா, இத்தன நாள் வரல?”ன்னு கேட்டவுடனே, ”எங்க அம்மாகிட்ட கேட்கக் கூடாது என்ன? நான் வயசுக்கு வந்துட்டன்டி. எங்கம்மா சும்மான்னாலும் பேதியாச்சுன்னு சொன்னாங்க. யார்ட்டயும் சொல்லாதப்பா என்ன?” என்றாள் சங்கரி. குச்சியைக் கீழே போட்டு சங்கரியைப் பார்த்தேன். முகத்தில் மஞ்சள் பூசியிருந்தாள். பாவாடையை நன்றாக விரித்து முன்னால் கீழே இறக்கிவிட்டுக் கொண்டிருந்தாள். பின்னால் இடக்கையால் பாவாடையைப் பின்புறத்தை மறைக்குமாறு நீட்டிப் பிடித்துக் கொண்டிருந்தாள்.

ஒன்னுக்கு பெல்லடிச்ச உடனே குழாயில் தண்ணீர் குடிக்க ஓடி வந்தேன். கன்னியம்மா கிழவி இருந்தது. என்னைப் பார்த்தவுடன், “என்னாடி, ஒன் கூட்டாளி குடிசையில் ஒக்காந்துட்டாளா? சூத்துத் துணியைத் தூக்கிக்கினு கதை பேசிக்கிட்டிருக்கிறதெல்லாம் இனிம கூடாது. அவ ஆத்தா என்னமோ கோழிய கவுத்துப் போட்ற மாதிரி கவுத்துப் போட்டிருக்கா. விடிஞ்சா தெறந்து விட்டுத் தானே ஆகணும். எல்லா வேசம் காட்றாங்க” என்றது.

…..

கைகள் பாவாடையை மெல்ல கீழே இறக்கின. சங்கரியின் மரத்திற்குப் பக்கத்தில் வெள்ளையாய் ஒன்று அசைந்தது. சங்கரியின் மரத்தில் ஜோட்டான். ஜோட்டானாய் மஞ்சள் காய்கள் தொங்கின. பச்சை மரத்தில் மஞ்சள் காய்கள். இடையில் வெள்ளையாய் ஏதோ ஒன்று.

வீணான துணியை யாராவது தூக்கிப் போட்டிருப்பார்கள். முள்ளில் மாட்டி காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது. நினைத்துக் கொண்டே விரித்தப் பாவாடையைச் சுருட்டிப் பிடித்தேன்.

குச்சியால் நட்சத்திரம் வரைந்துவிட்டுச் சங்கரியின் மரத்தைத் திரும்பிப் பார்த்தேன். வெள்ளைத் துணியைக் காணவில்லை. “எங்கே போயிருக்கும்? கீழே விழுந்திருக்குமோ?” சமாதானத்துடன் எழுந்தேன்.

குப்பைப் பள்ளத்தில் கறுப்பு-சிவப்பு கோடுடன் குச்சி போன்ற பொருள் கிடந்தது. குச்சியால் கிளறினேன். பென்சில். அட, இந்தப் பென்சிலைத் தானே இரண்டு நாளாகத் தேடிக் கொண்டிருந்தோம்? அம்மா தான் பெருக்கி வாரிக் கொட்டியிருக்கும். திட்டிக் கொண்டே பென்சிலைப் பீச்சாங்கையில் எடுத்தேன்.

தோட்டத்து வாசற்படியில் தண்ணீர் டப்பா இருந்தது. சங்கரி வீட்டில் இருக்கிற மாதிரி பிளாஸ்டிக் குவளை வேண்டும் என்று ஆசையாய் இருக்கும். ஆனால். அம்மா காசு கொடுத்து குவளை வாங்காது. ஒவ்வொரு டப்பாவாய்த் தொலையத் தொலைய யார் வீட்டில் இருந்தாவது ஒரு பெயின்ட் டப்பா வாங்கி வந்துவிடும். பிடியும் இல்லாமல், மேலெல்லாம் பெயின்ட் ஊத்தி, வாந்தி எடுத்த மாதிரி இருக்கும். குளிக்க, தோட்டத்திற்குப் போக, கை கழுவுகிற தொட்டிக்கு… எல்லாத்துக்கும் டப்பாதான்.

ஒரு டப்பா தண்ணீரில்தான் கால் கழுவ வேண்டும். அம்மா, பெரியம்மா, மீரா சித்தி எல்லாம் அந்த ஒரு டப்பாவில்தான் கழுவிக் கொள்வார்கள். வீட்டிற்கு உள்ளே போய், தொட்டித் தண்ணீரில் கையையும் காலையும் கழுவுவார்கள். எனக்கு மட்டும் எப்பவும் தண்ணீர் பற்றாது. அம்மா திட்டும். “அரிசி, பருப்பு செலவு செய்யற மாதிரிதான் தண்ணீரையும் செலவு செய்யணும். காசு கொடுத்து வாங்கலேன்றதுக்காக மானாவாரியா ஊத்தக் கூடாது.”

பென்சிலைக் கழுவினேன். அரை டப்பா தீர்ந்துவிட்டது. “அய்யய்யோ, பென்சிலை உள்ளே போய்க் கழுவியிருக்கலாமே?” தலையில் கொட்டிக் கொண்டேன். அரை டப்பா தண்ணீர்தான் மீதி இருந்தது. என்ன செய்வது? பத்தாதே! காலில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு வெளி வாசலில் இருக்கும் தண்ணீர் தொட்டிக்கு நடந்தேன்.

அம்மா உள்வாசலில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தது. அப்பா, தம்பி யாரும் இல்லை. வெளிவாசலை ஒட்டியிருந்த பெரியம்மா வீட்டைப் பார்த்தேன். ஒருவரும் கண்ணில் படவில்லை. சட்டென்றுத் தொட்டிப் பக்கத்தில் உட்கார்ந்து நான்கைந்து டப்பாக்கள் தண்ணீர் மொண்டு கால் கழுவினேன். “இப்படி போற வர்ற வழியில் கால் கழுவினா. நாங்கள்லாம் நடக்கிறதா இல்லயா? வெளிய போனா தோட்டத்தில் கால கழுவிட்டு வர வேண்டியதுதானே? சின்ன பப்பா பாரு? உள்ள வர?” பெரியம்மா வாசல் கழுவித் தள்ளிய துடைப்பத்துடன் கூச்சல் போட்டது.

பக்கத்தில் பெரியம்மாவைப் பார்த்தது தூக்கி வாரிப் போட்டது. இதையொட்டி அம்மாவுக்கும். பெரியம்மாவுக்கும் நடக்கப் போகிற சண்டையை நினைத்தேன். தாராளமாகத் தண்ணீர் ஊற்றிக் கழுவிய சந்தோஷம் போனது. உடம்பு ஆடியது.

அம்மா வெளியே வந்தது. சாமான் கழுவிக் கொண்டிருந்த கையோடு என் முடியைக் கொத்தாகப் பிடித்தது. பெரியம்மா கையிலிருந்த துடைப்பத்தைப் பிடுங்கி முதுகிலும் காலிலும் தொடையிலும் என வசதியாக அகப்பட்ட இடங்களில் எல்லாம் அடி விழுந்தது. “அய்யோ, அடிக்காதம்மா, அடிக்காதம்மா. இனிமே தோட்டத்துல கழுவுறம்மா, வலிக்குதும்மா…” கத்தினேன்.

”அவ அவ பல்லுக்கு நிக்காதன்னு சொன்னா கேட்டாத்தானே. இங்க தான் எப்ப எப்பன்னு நிக்கறாங்களே? தண்ணீய ஊத்துனா ஒரு சண்ட. ஊத்தலன்னா ஒரு சண்ட. வெடிஞ்சா ஒரு சண்ட. பொழுதுபோனா ஒரு சண்டன்னு தெனம் ராமாயணம். போதாததுக்கு நீ வேற.”

“இப்ப என்னா சொன்னன்னு அந்தப் பொண்ணப் போட்டு இந்த அடி அடிக்கிற. வெளிய போயிட்டு வந்து கால கழுவுறா. பின்னாடியே கழுவிக்கிட்டு வர வேண்டியது தானேன்னு கேட்டதுக்கு இந்த அடி அடிக்கிற? போற வர்ற வழியில் மெறிச்சு மெறிச்சு நடக்கணுமா? தூங்கி எழுந்தா நல்லா அவலை வறுக்கிற! நல்லாயில்ல சொல்லிட்டன்.”

“நானா அவல வறுக்கிறது? யார் வறுக்கிறாங்கன்னு அவங்கங்களுக்கு தெரியும்.”

வெற்றுடம்பில் தோளில் துண்டுடன் அப்பா உள்ளே வருவது தெரிந்தது. அம்மா துடைப்பத்தைக் கீழே போட்டுவிட்டுச் சாமான் தேய்க்கப் போனது. பெரியம்மா இறைந்து கிடந்த துடைப்பக்குச்சியை ஒவ்வொன்றாகப் பொறுக்கி துடைப்பத்துள் செருகியது. வீட்டுச் சண்டை ஆம்பளைங்க வரைக்கும் போனால் பெரிசாகிவிடும். கை கலப்பு ஏற்படும். அம்மாவும். பெரியம்மாவும் என்ன சண்டைன்னாலும் அவங்களுக்குள்ள வைத்துக் கொள்வார்கள். காலையில் சண்டை போடுவார்கள். சாயந்திரம் திண்ணையில் உட்கார்ந்து யாரிடமோ பேசுவதுபோல் ஜாடையாகப் பேசிக் கொள்வார்கள். அப்பாவும் பெரியப்பாவும் சண்டை போட்டால் இதெல்லாம் முடியாது.

அப்பா செருப்புக் காலை ஒருக்களித்து வைத்து நடந்து வந்தார். தொட்டிக்கருகில் வந்தவுடன். செருப்பை கழட்டினார். “டப்பா எடும்மா!” டப்பாவை நீட்டினேன். “கருமம் – நாய் கண்ட எடத்தில போய் வைக்குது!” தொட்டியிலிருந்து தண்ணீரை எடுத்து ஊற்றி செருப்புக்குள் காலை விட்டு வேகவேகமாயத் தேய்த்தார். நாறியது.

அம்மா சாமானைக் கழுவித் தண்ணீரை ஊற்றியது. பெரியம்மா ஒரு நிமிடம் நின்று அப்பாவைப் பார்த்துவிட்டுத் தண்ணீரை வாசலில் விசிறி ஊற்றிவிட்டுச் சென்றது.

முதுகிலும் தொடையிலும் வீங்கிப் போயிருந்தது. தொட்டுப் பார்த்தேன். பாவாடையை லேசாகத் தூக்கிப் பார்த்தேன். வீங்கியிருந்தது. பென்சில் எங்கே? தேடினேன். தண்ணீர் போகும் சாக்கடை வாயிலில் கிடந்தது. அப்பா செருப்பைக் கழுவிய தண்ணீர் தேங்கியிருந்தது.” “சீசீ… வேணாம்…” தொடையைத் தேய்த்தபடி ஓடினேன். ஒன்னாம் பெல் அடிச்சது. பையைத் தேடினேன். சாப்பிடவில்லை.

*

“ஒன்னுக்குப் பெல் எப்ப அடிப்பாங்கன்னு தெரியலையே?” வயிறு கலக்கியது. காலையில் ஒழுங்காகப் போகவில்லை. முள்ளு மரத்தின்மேல் கிடந்த துணியைப் பார்த்து பயந்த பிறகு வெளிய வரவேயில்லை. இப்ப கலக்குது. பத்து நிமிசம் இருக்கும். அதுக்குள்ள ஓடிப்போய் வந்துரலாம். லேட்டானாலும் டிரில் டீச்சர் மொத கேட்லதான் நிப்பாங்க. நாம பின்னாடி பக்கமா உள்ள வந்துடலாம்.”

சங்கரியைப் பார்த்தேன். எழுதிக் கொண்டிருந்தாள். கணக்கு வாத்தியார் போர்டில் எழுதிப் போட்டிருந்ததை எழுதவில்லை. அவள் வாய்ப்பாடு எழுதிக் கொண்டிருந்தாள். தினம் வாய்ப்பாடு எழுதிவிட்டால் போதும், வாத்தியார் வேறொன்னும் கேட்க மாட்டார். “வாய்ப்பாடு படிங்கடா, தானா கணக்கு வரும். என்னையப் பாருங்க. காலரிக்கா என்ன, அரையரிக்கா என்ன, ரெண்டையும் கூட்டினா என்ன, கழிச்சா என்ன, பெருக்கனா என்ன, எல்லாஞ் சொல்வேன். யோசிக்கிற வேலையே கிடையாது. தண்ணீயா வரும். நா பன்னென்டு என்னன்னா ஒருத்தஞ் சொல்லு பார்ப்போம். ஒருத்தனும் சொல்ல மாட்டாங்க. மனப்பாடம் பண்ணத்தான் வணங்க மாட்டேங்குதே? பின்ன எப்படி கணக்கு வரும்”னு தினம் சொல்வார். அவர் என்ன நடத்தினாலும் வாய்ப்பாடு எழுதினால் போதும். அடிக்க மாட்டார்.

சங்கரியின் தொடையைச் சுரண்டினேன். “என்ன?” கண்ணால் கேட்டாள். ரெண்டு விரலைக் காட்டினேன். “அய்யோ, இப்ப எப்படி போறது? நான் வரலை.”

“வயிறு வலிக்குதுப்பா. இப்ப வேணாம். பெல்லடிச்சப் பிறகு போகலாம். பத்து நிமிஷத்துக்குள்ள ஓடியாந்திடலாம். வாப்பா.”

“எங்க அம்மா பார்த்தா தொடப்பக்கட்ட தான். கண்ட நேரத்தில் எல்லாம் தோட்டத்துக்குப் போகக் கூடாதுன்னு சொல்லியிருங்காங்க.”

“வயிறு வலிக்குதுப்பா.”

“இப்ப முள்ளு மரத்துக்குக் கீழ் நிறையப் பேர் குடிச்சிட்டு சீட்டாடுவாங்க. அப்புறம் நம்ம குப்ப பள்ளத்தாண்ட இந்நேரத்துக்கு நிறைய பன்னிங்க இருக்கும். ஒரு பன்னி வேற குட்டிப் போட்டிருக்கு. அதப் பார்த்தாலே பயம். நான் வர மாட்டேம்ப்பா.”

எனக்கும் தெரியும். வெயில் வந்தா போதும். எல்லார் வீட்டுத் தோட்டத்துக் கதவையும் ஒருக்களித்து வைப்பது தெரிந்தால் போதும். முள்ளு மரத்திற்குக் கீழே ஒரு கும்பல் வந்துவிடும். வாயில் பீடியை சொருகிக் கொண்டு சீட்டு ஆட்டம் நடக்கும். சில்லறையும், ரூபாயுமாக நடுவில் கிடக்கும். மஞ்சள் சிவப்புக் கலரில்தான் பனியன் போட்டிருப்பார்கள். பனியன் கலரும் பீடி நாற்றமும் பயமாக இருக்கும். பகலில் யாருமே தோட்டத்துப் பக்கம் போக முடியாது. “ஏன்டா இங்க வந்து விளையாட்றீங்க”ன்னு யாராவது கேட்டால் போதும். அன்றைக்கு ராத்திரிக்குள் பொதை பொதையாய் இருக்கிற அவங்க முள்ளு மரத்தில் ஒரு சுள்ளி இருக்காது. அடி வேர் வரைக்கும் வெட்டி எடுத்துவிடுவார்கள். காலையில் பார்த்தால் மறைப்பே இல்லாமல் முழு வெளிச்சமாக இருக்கும் அவர்கள் தோட்டம்.

தோட்டத்தில் வைக்கிற அலுமினிய அன்னக்கூடை, குடம், பக்கெட், வராண்டாவில் விடுகிற சைக்கிள் எல்லாம் காணாமல் போகும். யாரையும் ஒன்றும் கேட்க முடியாது. “அந்த பொறம்போக்குக்கிட்டல்லாம் நம்மால பேச முடியாது. நீங்க ஒழுங்கா இருங்க. வேலையா போனமா, வந்தமான்னு நடந்துக்கங்க. அவஞ் சீட்டு வெளையாட்றான், சிகரெட் பிடிக்கிறான்னு சொல்லிக்கிட்டிருக்காம. நம்ம வேலையைப் பாருங்க…” சொல்லிவிட்டுப் போய்விடுவார் அப்பா.

பத்துமணி ஆனால் போதும். முள்ளுக் காய்களுக்காகப் பன்றிகள் வந்துவிடும். பெரிய பெரிய பன்றிகள். பார்க்கவே பயமாக இருக்கும். ஒரு பெரிய பன்றி போனால் சிறியதும் பெரியதுமாக இருபது பன்றிகள் கூட ஓடும். ஒரு பன்றியின் காலில் மற்றொன்று காலைவிட்டுச் சிக்கிச் சிக்கி அவை ஓடும் நேரத்தில் தூசு கிளம்பும். மல நாற்றமடிக்கும். வாலைத் தூக்கி பன்றி உறுமிக் கொண்டு ஓடும் சப்தத்தில் பயம் உச்சிமயிரைப் பிளக்கும்.

நிறைய பன்றிகளுக்கு பயமே இருக்காது. உட்கார்ந்து வெளிய போய்க் கொண்டிருக்கிற நேரத்திலேயே பக்கத்தில் வரும். அம்மா பெரியம்மால்லாம் கையில் குச்சியை வைத்துக்கொண்டு, “ச்சு… ஓடு” என்று விரட்டிவிடுவார்கள். கன்னிம்மா கிழவி, ”வா.. என்… இருந்தே எடுத்துக்க” என்று பல்லை இளித்துக் காட்டும். ஈ என்று கிழவி பல்லை இளித்துப் போடும் சப்தத்திற்குப் பன்றி பயந்து அடுத்தத் தோட்டத்திற்கு ஓடிப் போகும்.

எனக்குப் பன்றியைப் பார்த்தாலே நடுக்கம் வந்துவிடும். “உர் உர்” ரென்று மண்ணை முகர்ந்து பார்த்துக்கொண்டு அது நடக்க நடக்க சர்வ நாடியும் ஒடுங்கும். நான் பயந்து உட்கார்த்திருப்பதைப் பன்றி கண்டுபிடித்துவிடும். நான், “ஏய் போ” என மெதுவாகச் சொல்வேன். எனக்கே கேட்காது. “வா” என கூப்பிட்ட மாதிரி பன்றி நெருங்கி வரும். நான் பயந்து எழுந்திருப்பேன். அடிக்க வருவேன் எனப் பயந்து இரண்டடி பின்னுக்குப் போகும். நானும் இரண்டடி பின்னால் வைத்தவுடன், பன்றி முன்னுக்கு வரும். அலறியடித்து நான் வீட்டை நோக்கி ஓடினால் போதும். பன்றியும் எதிர்த்திசையில் ஓடிக் கொண்டிருக்கும்.

பன்றிகள் வராத பகல் நேரங்களில் மட்டுமே நான் கூட்டாளிகளுடன் வெளிய போவேன். அவசரமா வந்தாலும் அம்மாவைக் கூப்பிட்டால் வராது. தறியை விட்டு இறங்காது. “கெக்கலனுக்கு காக் குழிக்குள்ள கால வுட்டாத்தான் கால் வயிறு கஞ்சி. எண்ணிப் பார்க்கிறதுக்குள்ள எட்டு எழை குறைஞ்சிடும்”னு எதையாவது சொல்லும். கன்னிம்மா கிழவிதான் பகல் பூரா தோட்டத்துல நடமாடும். சீட்டாடுகிறவன், குட்டிப் போட்ட பன்றி, எந்த பயமும் கிடையாது. கிழவி இருக்கிற தைரியத்தில் போகலாம். ஆனால், அது கண்ணில் படும்படி வெளிய போனால் அடுத்த நாள் குழாயடியில் என் பேச்சு தான் நாறும்.

வயிறு கீழே இறங்கி வருவதுபோல் மீண்டும் கனத்தது. சங்கரியின் கையை மீண்டும் சுரண்டினேன்.

“போப்பா, அம்மா திட்டும்ப்பா. வயசுக்கு வந்துட்ட பிறகு காத்துக் கறுப்பு அண்டும். வெயில் நேரத்தில் எங்கும் போகக்கூடாதுன்னு அம்மா சொல்லியிருக்கு. இப்ப நான் வந்தன்னு தெரிஞ்சா, சாயங்காலம் துடைப்பக்கட்ட பிச்சுக்கும்.”

கோபம் வந்தது. நாமே போகலாம் என்று வெளியே வந்தேன். பீடி நாற்றமும் பன்றியின் உறுமலும் கேட்டது. பயத்தில் நெஞ்சடைத்தது. ஒன்னுக்கு பெல் அடிக்க பியூன் அண்ணன் மணிக்கட்டையை எடுத்துக்கொண்டு போனார்.

பள்ளிக்கூடத்திற்குப் பின்னால் போனேன். மஞ்சள் கனகாம்பரம் செடி மண்டிக் கிடக்கும் முள்ளுத் தோப்பு. முள்ளு கனகாம்பரம் பூவே எனக்குப் பிடிக்காது. தொடும்போதே விரல் முழுதும் மஞ்சளாய் மகரந்தம் அப்பிக் கொள்ளும். தலையில் வைத்தவுடன், தலை முழுக்க மஞ்சள் தூள் தேய்த்தது மாதிரி இருக்கும். கட்டிச் சந்தனம் மாதிரி அந்தக் கலர் மட்டும் அழகாக இருக்கும். அப்புறம் முள்ளு கனகாம்பரத்தை வேகமாக பறிக்க முடியாது. நெறிஞ்சி முள்ளு மாதிரி, முள்ளு கொத்துக் கொத்தா இருக்கும். ஒவ்வொரு பூவா பறிச்சி எடுக்கறதுக்குள்ள கையில் அங்கங்கே ரத்தம் வரும். பெரிய பயம். முள்ளு கனகாம்புரம் புதருக்குள்ளே பன்றி நிறைய இருக்கும். பெரிய பெரிய பள்ளம் போட்டு இருக்கும். ஒரு பன்றி தானே இருக்கிறது என்று பார்த்தால் பெரிய பன்றி எழுந்தவுடன் அடியிலிருந்து பத்துப் பனிரெண்டு குட்டிகள் எழுந்து ஓடும். பன்றிக்காகவே முள்ளு கனகாம்பரம் புதர்ப் பக்கம் போகமாட்டேன்.

ஒன்னுக்கு பெல் முடியறதுக்குள்ள போகணும். பயந்துகொண்டே புதர்களை விலக்கினேன். “முள்ளு கனகாம்பரப் புதருக்குள்ள கட்டாயம் பாம்பு இருக்கும்” அம்மா சொன்னது, ஞாபகம் வந்தது. உடல் வேர்த்தது. வயிற்றுக் கனமும் அதிகமானது. கால் வழியே வந்துவிடும்போல் இருந்தது. மெல்ல நடந்தேன். வெளிச்சம் இல்லை. கண்கள் பழகியிருந்த குறைந்த வெளிச்சத்தில் ஓர் இடம் தேடினேன். ரொம்ப உள்ளப் போய்விடக் கூடாது. பயந்து கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தேன்.

நிறைய பேர் போய் வைத்திருந்தார்கள். காலைக் கவனமாகப் பார்த்து வைத்தேன். மிதித்துவிடப் போகிறோம் என்ற அருவருப்பு. உள்பக்கமாய் நகர்ந்தேன். நல்ல இடமாய்த் தேடியதில் புதரின் உள்ளே வந்துவிட்டிருந்தேன். பெருக்கி வைத்ததுபோல் ஓர் இடம் இருட்டிலும் வெள்ளையாய் தெரிந்தது. அப்பாடா… சட்டென்று உட்கார்ந்தேன்.

கண்களில் இருந்து தண்ணீர் வழிந்தது. வயிற்றின் கனம் குறைந்தது. இடது கையால் கண்ணைத் துடைத்தேன். வலது கையால் குச்சியொன்றை எடுத்து மண்ணைக் கீறினேன். பாவாடையைச் சுருட்டி இடுப்புக்குமேல் ஏற்றிக் கொண்டேன்.

மண்ணைக் கீறி நட்சத்திரம் வரைந்தேன். சிறிய நட்சத்திரம், பெரிய நட்சத்திரம் என்று முள்காட்டில் நட்சத்திரங்களை வரைந்தேன். நட்சத்திரங்களைச் சுற்றி வட்டம் வரைந்தேன். வட்டத்திற்குள் அடைபட்ட நட்சத்திரங்கள். சின்னச் சின்ன நட்சத்திரங்களை மண்ணில் உருவாக்கிக் கொண்டு மெல்ல நகர்ந்தேன். எழுந்திருக்காமலேயெ நகர்ந்து சென்று கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி நட்சத்திரங்கள் வளர்ந்து கொண்டிருந்தன. மண் காடெங்கும் புதுப்புது நட்சத்திரங்கள் முளைத்தன. காலடியில் துவங்கி, முட்டிபோட்டு, கை எட்டும் தொலைவு வரை நட்சத்திரங்கள் முளைத்தன. நட்சத்திர மண்டலமாய் முள் புதர் ஒளிர்ந்தது.

முன்னும் பின்னும் இடமும் வலமுமாக நகர்ந்து கொண்டிருந்தேன். மேகங்களுக்கிடையில் நட்சத்திரங்களைத் தேடிப் பொறுக்கி குவித்து வைப்பது போல் உற்சாகத்துடன் தொடர்ந்தேன். கனமான மேகம் என்று நினைத்து கால் வைக்கப் பஞ்சு பொதிபோல் உள்ளிழுத்தது ஒரு மேகம். கால் சறுக்கியது. லேசாக நினைவு இடற, பள்ளத்திற்குள் காலை விட்டிருந்தேன். பள்ளத்தில் கால். மேட்டில் நான். நிதானித்தேன். சுற்றி அடர்ந்த இருள். நட்சத்திரம் வரைந்து கொண்டே முள் புதருக்குள் நிறைய தூரம் வந்துவிட்டிருந்தேன். வயிறு கலங்கியது. அழுகை வந்தது.

இருட்டுக்குக் கண்ணைப் பழக்கினேன். குட்டையான அடர்ந்த முள்ளு கனகாம்பரம் செடியில் மஞ்சளாக அடர்ந்து பூக்கள் தெரிந்தன. வேறொன்றும் தெரியவில்லை. சுற்றிப் பார்த்தேன். எழுந்து போகலாம். அசைந்தேன். பக்கத்தில் “உர்” ரென்று உறுமல். தூக்கிவாரிப் போட்டது. திரும்பிப் பார்க்க முடியாமல் கழுத்துப் பிடித்துக் கொண்டதுபோல் இழுத்தது. மறுபடியும் “உர்” கால்கள் நடுங்கின. கண்களை மட்டும் தோள்பட்டை வரை திருப்பி, பின்னால் பார்த்தேன். அம்மா… சத்தமாய்க் கத்தினேன். பெரிய பன்றி. தலைமேல் யாரோ ஓங்கிக் கொட்டினார்கள். மீண்டும் திரும்பினேன். பன்றி தலையை மட்டும் மெல்லத் தூக்கியிருந்தது. பன்றி உடல் முழுவதும் மேலேறிக் கொண்டும் இறங்கிக் கொண்டும் பத்துப் பனிரெண்டுக் குட்டிகள். ரொம்பக் குட்டி. ஒரு நாள், இரண்டு நாள் தான் ஆகியிருக்கும், குட்டிப் போட்டு.

“குட்டிப் போட்ட பன்றி யாரையும் கிட்ட சேர்க்காது. விரட்டி கடிக்கும்.” அம்மா சொன்னதெல்லாம் முதுகில் அடியாய் விழுந்தது. என்னால் அசைய முடியவில்லை. பன்றி அரை மயக்கத்தில் என் அசைவைக் கணித்தபடி அசையாதிருந்தது. நான் காலை நகர்த்த மெதுவாக அசையும்போது, பன்றியின் உடம்பு மெல்ல உயர்ந்தது. காது மடல்கள் நேராகி விரைத்து நின்றன. வேர்த்தது. நெஞ்சடைத்தது. தொடைகள் கனத்தன.

அழுகையாய் வந்தது. சங்கரியை திட்டினேன். அம்மாவை வெறுத்தேன். கன்னியம்மா கிழவியின் கையைக் கடிக்க நினைத்தேன். இன்று பன்றியால் கடிபடப் போகிறோம் என்று தெரிந்துவிட்டது. ஒன்னுக்கு பெல் அடிச்ச சத்தமே கேட்கவில்லை. கேட்டுத் தொலைச்சிருந்தா அப்பவே போயிருக்கலாம் என்னைத் திட்டிக் கொண்டேன்.

பன்றி அசையாமல் இருந்தது. நான் அசைந்தால் அதுவும் அசைந்தது. யாராவது வருவார்களா இந்த முள்காட்டிற்குள்? பார்வையால் துழாவினேன். பெரிய புதருக்குப் பின்னால் மஞ்சள் பூக்களுக்கு மத்தியில் சிகப்பாய் ஒரு புள்ளி. இன்னும் பயம் கூடியது. அப்போதுதான் பீடி நாற்றத்தை உணர்ந்தேன். ”அய்யய்யோ… யாரொ ஆள் மறைஞ்சிருக்கான்… நம்மை பார்த்துட்டிருக்கான்… ”உயிர் நரம்பை உருவி எடுத்ததைப்போல் வாய்விட்டு அலறினேன். அம்மா … சிகப்புப் புள்ளி லேசாக அசைந்து இடம் மாறியது. “சங்கரி” கத்தினேன். வார்த்தை என் தொண்டைக்குள்ளேயே முடிந்துபோனது.

திரும்பிப் பார்த்தேன்… பன்றி அமைதியாய்த் தலையைக் கீழே சாய்த்திருந்தது. தேம்பித் தேம்பி அழுதேன். யாரை நினைத்துக்கொண்டு அழுவது என்று தெரியவில்லை. வாய்விட்டு அழுதேன். அழுது அழுது இப்பொழுது சத்தம் மட்டம் வந்தது. கண்ணீர் வரவில்லை. தலை சுற்றுவதுபோல் இருந்தது. சாப்பாட்டு மணி அடிக்கிற சத்தம் கேட்டது. மணிச் சத்தம் கேட்டவுடன் வீட்டுக்கு ஓடிப்போக வேகமாக எழுந்தேன்.

சட்டென்று நான் எழுந்தவுடன் பன்றி ‘உர்’ரென்று உறுமி, குட்டிகளை உதறித் தள்ளி எழுந்து நின்றது. என்னைப் பார்த்துச் சீறியது. வேகமாக எழுந்ததில் தலைமுடி முள்ளுச் செடியில் கொத்தாக மாட்டிக் கொண்டது. அம்மா… என்று அலறியபடியே தலைமுடியைப் பிடித்துக் கொண்டேன். எதிரே பார்த்தேன். சிகப்பு புள்ளி மறைந்து போயிருந்தது. யாரோ நடக்கும் சத்தம். பச்சை பனியன் புதரில் இருந்து பிள்ளைகள் ஓடிவரும் திசை நோக்கி நகர்ந்தது.

பயத்தில் எனக்குச் சிறுநீர் வருவதுபோல இருந்தது. தலைமுடியை இழுத்துப் பார்த்தேன். முள்ளில் பின்னலோடு மாட்டியிருந்ததில் அசைக்க முடியவில்லை. பன்றி எதிரில் உறுமியபடி நின்றிருந்தது. பாவாடை நனைந்தது.’ஒன்னுக்குப் போயிட்டமோ?’ அம்மாவிடம் பாவாடையை நனைத்துக் கொண்டுபோய் உதைவாங்க போகிறோம் என்ற பயம் வந்தது.

தொடையிடுக்கில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.