குழந்தை வேலுவும் குருட்டுக் கோழியும்..


வேம்புவின் இலைகளிலிருந்து மழை நீர் “லப் டப்” ஒலியை உண்டாக்கியவாறு செம்மண் பூமியைத் தழுவிக்கொண்டிருந்தது, தொடர் மழையினால் மலையடிவாரத்து ஊரே அதீதமாய் செம்மை பூண்டிருந்தது,  இந்தச் செந்நிற ஊரின் மேற்குத் தெருவின் கடைசியில் இருக்கும் வீடுதான் பர்வதம்மாளின் வீடு. பர்வதம்மாளின் வீட்டை வீடு என்று மட்டும் சொல்லிவிட இயலாது, பல அறைகள் கொண்ட சுரங்க வீடு அது. ஒரு காலத்தில்  கூட்டுக் குடும்பமாக நிறைய மனிதர்கள் வாழ்ந்த வீடு, சின்னச் சின்னதாகப் பல அறைகள் கொண்ட வீடு. வீட்டின் நடுவில் ஒரு வெட்ட வெளி. அந்த வெட்ட வெளியின் வழியாகத்தான் இதமான வெய்யிலும், பௌர்ணமி இரவின் நிலவொளியும், குளுமையான மழைச்சாரலும், தேகத்தைக் குளிரச்செய்யும் தென்றல் காற்றும் வீட்டிற்குள் பிரவேசிக்கும். வீட்டின் பின்புறம் இரண்டு முருங்கை மரங்களும், பப்பாளி மரங்களும், பல ஆண்டுகளைக் கடந்த வேப்பமரமும் இருக்கிறது. அந்த நாட்டுப் பப்பாளி மரத்திலிருந்து கிடைக்கும் பழங்களின் சுவை அலாதியாய் இருக்கும். விதைகள் நிம்பியிருக்கும் அந்த பழத்தின் சுவைக்காக ஏங்கிப் பல முறை கிழவிக்குத் தெரியாமல் திருடித் தின்றுள்ளான் கிழவியின் வீட்டுப் பக்கத்துக் குடிசையிலிருக்கும் குழந்தை வேலு. குழந்தை வேலுதான் பழங்களைத் திருடித் தின்கிறான் என்று  கிழவிக்குத் தெரிந்தாலும் தாயற்ற அந்தக் குழந்தையின் மீது கோபப் படுவதில்லை அவன் மேல் கிழவிக்கு பெரும் கருணை இருந்தது. முருங்கை மரத்திலிருக்கும் கம்பளிப் புழுக்களைத் தின்பதற்கும், பப்பாளிப் பழங்களைக் கொத்திச் சாப்பிடவும், காக்கைகளும், மைனாக்களும், குருவிகளும் பர்வதம்மாளின் ஓட்டு வீட்டின் பின்புறம் நிறைந்திருக்கும். 

”ஆத்தா ஓம் வீட்டு முருங்க மரத்துல இருக்குற முருங்கக்காய் வச்சு சாம்பார் வச்சா சாம்பார் ருசியே அலாதிதான்” என அடிக்கடி பர்வதம்மாளிடம் சொல்லிக்கொண்டே முருங்கைக் காய்களை வாங்கிச் செல்வார் தோழர் செங்கொடியான். கம்யூனிசக் கொள்கையின் மேல் இருந்த ஈடுபட்டால்  கணபதி என்ற தன் பெயரை செங்கொடியான் என மாற்றிக் கொண்டத் தோழரிவர். ஒண்டிக்கட்டையாக வாழும் பர்வதம்மாளுக்கு இவர்கள்தான் உலகம். 

இவ்வளவு கருணை மிக்க பர்வதம்மாளுக்கு பிடிக்காத ஒரு விசயம் இருக்கிறது. அது கோழிகள் செய்யும் அட்டகாசம்தான். தன் வீட்டின் பின்புறமிருக்கும் வெளியில் ஊர்க் கோழிகள் இரைக்காகத் தன் கால்களைக்கொண்டு குழிபறித்து மண்ணைக் கிளரிச் செய்யும் சேட்டைகள் பர்வதம்மாளுக்கு நித்தமும் எரிச்சலையே தந்துகொண்டிருந்தது. 

“ யாரு கவுட்டுக்குள்ள கிளரிக்கிட்டிருக்கீங்க, போய் ஒங்காத்தா கவுட்டுக்குள்ள கிளர வேண்டியதுதான” எனக் கூறிக்கொண்டே கோழிகளை நோக்கி கற்களை விட்டு வீசிக்கொண்டும், புலம்பிக்கொண்டும் பர்வதம்மாள் தன் எரிச்சல்களைப் போக்கிக்கொள்வது அன்றாடம் நடக்கும் வாடிக்கையாயிருந்தது. இந்தக் கோழி விரட்டும் போரில் கிழவியோடு, பல நேரங்களில் வேலுவும் இணைந்து கொள்வான். அவனும் சிறிய கற்களை எடுத்துக்கொண்டு கோழிகளை நோக்கி வீசுவான். வெள்ளை, சிவப்பு, கருப்பு, சாம்பல் நிறத்திலிருக்கும் கோழிகள் பர்வதம்மாளையும், வேலுவையும் பார்த்தாலே “ கெக் கெக் கெக்” என சப்தமெழுப்பிக்கொண்டே வேலிப்புதருக்குள் ஓடிவிடும்.

“வெறட்டுய்யா என் ராசா அந்தக் கண்டாரோலிகளை” எனக் கூறிக்கொண்டே வேலுவிற்கு, தன் முந்தியில் முடிந்து வைத்த ஒரு ரூபாய்  சில்லறையை எடுத்துத் தருவாள் கிழவி. வெளிநாட்டிலிருக்கும் தன் அக்காள் மகன் அவ்வப்போது பணம்  அனுப்புவதால் கிழவிக்குப் பணம் பெரிய பிரச்சனையில்லை. கோழிகள்தான் பிரச்சனை,  அவை மண்ணைக்கிளறிச் செய்யும் அட்டகாசம்தான் பிரச்சனை. கோழிகள் மேல் ஜென்மப் பகை கொண்டவள் போல்தான் அழிச்சாட்டியம் செய்வாள்,பர்வதம்மாள் கிழவி. இரவில் வீட்டின் மத்தியில் உள்ள வெட்டவெளியில் வந்து படுத்துக்கொள்வாள்.  கிழவிக்குத் துணையாக வேலுவும் வந்துவிடுவான். கிழவிக்கு கால் அமுக்கி விடுவான். தினமும் கோழிகளோடு மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் கிழவிக்கு வேலுவின் கைகளினுடைய அரவணைப்பு பெரும் சுகத்தைத் தந்து கொண்டிருந்தது. அந்த தருணத்தில் கிழவியாகவே தான் இராஜ்ஜியம் செய்து வாழ்ந்த இந்த வீட்டின் கதையையும், இப்போது யாருமற்ற தனிமையில் அல்லல் படுவதையும் வேலுவிற்கு  கூறுவாள். வேலு நட்சத்திரங்கள் மினுங்கிக் கொண்டிருக்கும் வானத்தையோ, வீட்டின் பின்புறமிருந்து வீட்டிற்குள் எட்டிப்பார்க்கும் வேம்புவின் கிளையையோ பார்த்துக்கொண்டே “ உம் உம்” எனக் கிழவி சொல்லும் கதைக்கு சப்தமெழுப்புவான்.

***

டேய் இன்னும் பள்ளிக்கூடத்துக்குப் போகலையா எனக் கூறிக்கொண்டே தன் குடிசையின் அருகில் உள்ள கொட்டத்திலிருந்து சப்தம் போட்டார் வேலுவின் தந்தை கனகு. அந்த சிறிய கிராமத்தில் காளை மாடுகள் வைத்திருக்கும் ஒரு சிலரில் கனகுவும் ஒருவர். 

”கெளம்பீட்டேன் ப்பா” எனக் கூறிக்கொண்டே , தன் ஒட்டுப்போட்ட ட்ரவுசரைத் தேடினான். வேலு அம்மணமாக இருப்பதைப் பார்த்துவிட்ட கனகு

டேய் என்ன ட்ரவுசர் போடமா பள்ளிக்கூடத்துக்கு கெளம்பீட்டையா?

வெருசா போட்டுக் கெளம்புடா  மணி ஆயிருச்சில்ல ..

வேலு அந்த நீலவண்ண ட்ரவுசரைப் போட்டுக்கொண்டும், முதல் அமைச்சர் படம்போட்ட கருப்பு நிறப் பையைத் தூக்கிக்கொண்டும் வேகமாக ஊரின் மையத்திலிருக்கும் பள்ளிக்கூடத்திற்கு ஓடினான். அந்தக் காலைப்பொழுதிலேயே செருப்பில்லாத அவன் பாதங்களில் புழுதியேறியிருந்தது. விளையாட்டுப்பயல்.

டீச்சர் என்னதான் பாடம் நடத்தினாலும் அவனுக்குப் பாடத்தைவிட பர்வதம்மாள் கிழவியின் வீட்டின் பின்புறமிருக்கும் சிறிய தோட்டத்தில் விளையாடுவதும் கோழிகளை விரட்டுவதும் தான் பிடித்திருந்தது.

டேய் சுரேசு நேத்து இந்தா மொக்கப் பாம்பு டா  நந்தினி நாகத்துல காட்டுவாங்கல்ல அந்தாமொக்க இருக்கும்டா ஓட்டு வீட்டுப் பாட்டி வீட்டுக்குப் பின்னாடி இருக்குற பொதருக்குள்ள போச்சுடா.

”நீ அடிக்கலையா”..

”டேய் அது சாமிப்பாம்பு போல இருந்துச்சுடா நான் அடிக்கல”

”அடிச்சு சாகாம தப்பிச்சுருச்சுன்னா ”..

வெரட்டி வெரட்டி கடிக்க வரும், பள்ளிக்கூடத்துக்கு கூட வந்து கடிக்குமாம் அதனாலதான் அடிக்கல என சுரேசிடம் கூறிக்கொண்டே தன் சளி ஒழுகும் மூக்கை இடது கையால் துடைத்துக்கொண்டான்.

வேலுவிடம் சிரித்துக்கொண்டே சுரேஷ் சிலேட்டைக் காண்பித்தான் சிலேட்டில் ஜான் வாத்தியார் போட்ட ரைட் பாம்பு போல் நீண்டும் வளைந்துமிருந்தது . 

இருவரும் சிரித்துக்கொண்டனர். 

ஜான் வாத்தியார்  போர்டில் பெருக்கல்  கணக்கை எழுதிக்கொண்டிருந்தார். இருவரும் வாத்தியார் போர்டில் கணக்குப்போட தங்களை கூப்பிடக்கூடாது என நினைத்துக்கொண்டே நடுங்கிக்கொண்டிருந்தனர்.

பள்ளிக்கூடம் போவது, தன் குடிசைக்கு வருவது , கொம்புகள் பெரிதாயிருக்கும் அந்தக் காளைகளுக்குத் தண்ணீர் விடுவது வைக்கோல்களிடுவது, காளைகள் தூங்கும்போது அதன் அருகில் அமர்ந்து கொள்வது, காளைகள் வேலுவின் கால்களையும், கைகளையும் தன் நாவினால் நக்கும்போது அந்த சொரசொரப்பான வருடலில் மகிழ்ந்து போவது, பர்வதம்மாள் கிழவியின் ஓட்டு வீட்டிற்குச்செல்வது,  கிழவியோடு சேர்ந்து கோழிப்படைகளை விரட்டுவது என வழக்கம்போல் வேலுவின் பால்ய நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது.

***

ன்னாடீ பார்வதி ஆளேயே பாக்கமுடியல” , என வீட்டுத் திண்ணையில் அமர்ந்துகொண்டு தன் ஓய்ந்துபோன குரலில் கேட்டாள் கிழவி.

“எங்கம்மா ஒரே வே, கசாப்புக்கடக்காரனுக்கு வாக்கப்பட்டு இப்படி வீடு வீடாப் போயி கோழிகளை வாங்குறது பொழப்பாப் போச்சு” .  ஊசியப்போட்டே வளக்குற பிராய்லர் கோழிகளை விட நாட்டுக்கோழிக்குத்தானே இப்போ  மவுசு ஜாஸ்தி,  “வெலக்கொறச்சு வாங்கிட்டுப் போயி’  கூறுபோட்டு வித்தாத்தான சாயந்திரம் அடுப்பு பொங்க முடியும். அந்த செவிட்டு மனுசனுக்கு எல்லாமே சைகையிலதான் சொல்ல வேண்டியிருக்கு , நான் ஒன்னுன்னு சொன்னா அந்த மனுசன் ஒம்போதுன்னு செய்றான்” என தன் செவிட்டுக் கணவன் மாரியை எண்ணி அங்கலாயித்துக் கொண்டாள் பார்வதி.

சில நிமிடம் அமைதி காத்தவள் பின் 

“எம் பொழப்ப விடு நீ எப்படி ஆத்தா இருக்க”?

எனக்கென்ன “ காடு வா வாங்குது, வீடு போ போங்குது” இன்னும் கொஞ்சகாலத்துல போய் சேந்துருவேன் அப்ப வந்து அழுதுட்டுபோயிறாத்தா , இந்தக் கோழிங்கதான் ரொம்ப ரோதனை கொடுக்குது.  இந்தக் கோழிகள எப்பயாச்சும் அடிச்சு வச்சுருப்பேன் நீ வாட்ட வந்து தூக்கிட்டுப் போயிடு, என ஆத்திரத்தில் வார்த்தைகளை விட்டாள் கிழவி

”சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் . நீ இன்னும் இருபது வருசத்துக்கு நல்லாயிருப்ப” எனக் கிழவியிடம் நின்று பேசிக்கொண்டிருந்த பார்வதி  மெல்லக்  கோழிகளோடு கசாப்புக்கடைக்கு நடையைக் கட்டினாள். அவள் கைகளில் வெள்ளை நிறத்திலும், சிவப்பும் கருப்பும் கலந்த நிறத்திலும் இரு கோழிகள் தலைகீழாய் தொங்கிக்கொண்டு தங்களது உயிரின் கடைசி கணங்களைத் தெரிந்துகொண்டதுபோல சோகத்தோடிருந்தன.

நீண்ட நாட்கள் கண்ணில்படாத தோழர் செங்கொடியோன் தூரத்தில் போய்க் கொண்டிருப்பதைப்  பார்த்துவிட்ட பர்வதம்மாள் கிழவி.

”ஏலேய் ..

தோழர் எங்க நீயும் ரொம்ப நாளா வீட்டுப்பக்கம் காணோம்”. 

“ கோவணத்துல ஒரு துட்டு முடிஞ்சிருந்தா, கோழி கூப்புட ஒரு பாட்டு வருமாமுன்னு” சொன்னது போல காசு அதிகம் கெடச்சிருச்சோ, எங்கேயும் போயி கூத்தியா, கீத்தியா வச்சுகிட்டையா. இதுக்குத்தான் இரத்த ஓட்டம் நல்லா இருக்குறப்பயே கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னேன். மீசை நரைச்சாலும் ஆசை நரைக்காதுல்ல”.. என சப்தமாகப் பேசிவிட்டுச் சிரித்துக்கொண்டிருந்தாள் கிழவி.

”நீ வேற ஆத்தா மதுர தமுக்கத்துல ஒரு மாநாடு மூனு நாள் நடந்துச்சு சாயந்தரம் ஆரம்பிச்சா இராத்திரி பதினொன்னாயிருது அந்த நடுச்சாமத்துல நம்ம ஊருக்கு பஸ்ஸா இருக்கு அதனால  மதுரையில இருக்குற தோழர் ஜாபர் வீட்டுலயே  தங்கிட்டேன்”  இந்தப் பாழாப்போன அரசாங்கம் மக்கள நிம்மதியா வாழவா விடுது, அவன் மனசுலத் தோணுறதெல்லாம் சட்டமாக்கி நாட்டக் கூறு போடுறாங்க நாமதான் இத எதுத்து போராட வேண்டியதாயிருக்கு” எனக் கூறிக்கொண்டே தன் தோளிலிருந்த சிவப்பு நிறத்துண்டை எடுத்து முகம் துடைத்துக்கொண்டார். இன்னொரு கையில் பகத்சிங் படம் போட்ட புத்தகம் ஒன்றை வைத்திருந்தார்.

”சரி ஆத்தா நான் வாறேன் எனச்சொல்லி கிளம்பிய தோழரிடம்.

மரத்துல முருங்கக்காயி அதிகமாயிடுச்சு, ரெண்ட புடிங்கிட்டுப்போயி சாம்பார் வச்சு சாப்பிடு அப்பத்தான ஒனக்கு ஊர்சுத்தத் தெம்பா இருக்குமெனச் சொன்னாள் பர்வதம்மாள் கிழவி.

 தோழரும் சிரித்துக்கொண்டே ஓட்டு வீட்டின் பின்புறம் சென்று இரண்டு முருங்கைக்காய்களைப் பறித்துச் சென்றார்.

”இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே ஏன் இன்னும் இந்த வேலுப்பய வரவேயில்லை”. 

பொடி போடும் பழக்கம் பாட்டிக்கு இருந்ததால் மூக்கு நமநமன்னு இருந்தது. 

“யாராவது பொடுசுகள் கண்ணுலத் தட்டுப்பட்டா  வெங்குடு நாயக்கர் கடைக்குப் போயி மூக்குப்பொடி வாங்கிட்டு வரச்சொல்லலாம்” என நினைத்துக்கொண்டே யாருமற்ற  வெய்யிலூறித் திரியும் தெருவையே பார்த்துக்கொண்டிருந்தாள் பர்வதம்மாள் கிழவி.

”நான் தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு” எனப் பாடிக்கொண்டும், தன் தலைமுடியைக் கோதிவிட்டுக்கொண்டும் கிழவியின் முன்பு வந்து நின்றான் வேலு.

“ஏண்டா வாலு எங்கடா பாட்டுப்பாடிட்டு  இந்த வேகாத வெய்யிலுல சுத்திக்கிட்டிருக்க” எனக்கூறிக்கொண்டே ஐந்து ரூபாய் சில்லறையை எடுத்துக்கொடுத்து நாயக்கர் கடைக்குப் போயி மூக்குப்பொடி வாங்கிட்டு வந்துடு ராசா” என்றாள் கிழவி.

“பில்லா ன் வரலாறு, பாத்தது நான் பலபேரு” எனப் பாடிக்கொண்டே நாயக்கர் கடை நோக்கி ஓடினான் வேலு. 

சிறிது நேரத்திற்குப்பின் வந்து பார்த்தால் வீட்டுத் திண்ணையில் பாட்டியைக் காணவில்லை. 

“தான் திண்ணி பிள்ளை வளக்காது, தவிடு திண்ணி கோழி வளக்காதுன்னு சும்மாவா சொல்லி வச்சாங்க சொலவடை, கோழி வளக்கத் துப்பில்லாதவளுங்க எதுக்கு கோழி வளக்குறாங்க எனப் புலம்பிக்கொண்டே வீட்டிற்குப் பின்புறமிருந்து மண்ணைக் கிளறி பள்ளம் செய்துவிடும் கோழிகளை விரட்டிக்கொண்டிருக்கும் கிழவியின்  சப்தம் கேட்டது.

குழந்தை வேலு வேகமாக ஓடிப்போய் பர்வதம்மாள் கிழவியோடு சேர்ந்து கோழிகளை விரட்டினான். எப்போதுமில்லாமல் இன்று  ஆக்ரோசமாக கோழிகளை நோக்கி கற்களை வீசினான்.

வேலு வீசிய கல் ஒரு கருப்புக் கோழியின் தலையில் பட்டது. கோழி அப்போதே ”கெக் கெக்: என சப்தமெழுப்பியவாறே  கீழே விழுந்தது, கிழவியும், வேலுவும் வேகமாகப் புதருக்குள் சுருண்டு விழுந்திருக்கும் கருப்புக் கோழிக்கருகில் சென்று பார்த்தனர்.

”டேய் வேலு வெருசாப்போயி டம்ளர்ல தண்ணி எடுத்துவாடா” என்றாள் கிழவி. வேலுவும் பதட்டத்தோடு தண்ணீர் எடுத்துவந்தான், மயங்கிய நிலையில் இருக்கும் கருப்புக் கோழியின் மஞ்சள் நிற வாயைத்திறந்து நீரைச் சொட்டு சொட்டாய் விடச்சொன்னாள் கிழவி. பின் கிழவி கோழியின் உடம்பைத் தொட்டுப் பார்த்தாள் ”உஷ்ணமாய்தான்” இருந்தது. கருப்புக் கோழியின் ஒரு  கண் மட்டும் சிதைந்து போயிருந்தது. 

கருப்புக் கோழியைத் தூக்கிவந்து வீட்டிற்குள் வைத்தாள் கிழவி. என்னதான் கோழியின் மேல் ஜென்மப் பகை கொண்டு அலைந்தாலும், கோழியை விரட்ட மட்டுமே செய்வாள். இப்படி தன் முன்னால் ஒரு கோழியின் உயிர்சலாடுவதைப் பார்க்கவே பாவமாயிருந்தது  பர்வதம்மாள் கிழவிக்கு.

இந்தக்கோழியைப் பார்த்தால் குண்டுபத்மா வீட்டுக் கோழி மாதிரி தெரியுதே அவ பெரிய லம்பாடி பொம்பளயாச்சே என்ன செய்ய எனக் கிழவி யோசித்துக்கொண்டிருந்தாள்.

அதற்குள் வெளியே ஓடிய வேலு மாரியம்மன் கோயிலில் ருந்து கொண்டு வந்த சிறிய மஞ்சள் கயிறைக் கோழியின் காலில் கட்டிவிட்டான். கோழி தான் எறிந்த கல்லினால்தான் இப்படி ஆகிவிட்டது என வேதனைப்பட்டான்.

வாசலில் யாரோ அழைப்பது போன்ற குரல் கேட்டதும்

பர்வதம்மாள் கிழவி வாசலுக்குச் சென்று பார்த்தாள்

தோழர் செங்கொடியான் நின்றிருந்தார்.

பாட்டித் தோழரிடம் தான் படும் அவஸ்தையைக் கூறினாள்.

“ இதுக்குத்தான் ஆத்தா அன்னைக்கே சொன்னேன்” கோழி  மண்ணக் கிளறுனா கிளறிட்டு போகுது நீ கேக்கவே மாட்டுற

அந்தக் கோழி வேற குண்டுபத்மா வீட்டுக் கோழின்னு சொல்ற அவ சும்மாவே ஊருக்கே தெரியும்படி குதிப்பா, இந்த விசயம் மட்டும் தெரிஞ்சது உலகத்துக்கே தெரியும்படி குதிச்சுடுவா.

“நாட்டுலதான் இப்படி வந்தவங்களுக்குள்ள பாகுபாட உண்டாக்கி வெட்டுறாங்கன்னா நீ வீட்டுலயே இப்படி செய்யுற எத்தனையோ பறவைங்க வருது, இந்தக் கோழி மட்டும் ஒன்ன என்ன செஞ்சுச்சான்” பாசிசக் கிழவின்னு முகிக்கொண்டார் தோழர்.

சரி எனக்குத் தெரிஞ்ச பண்டுவத்தப் பாக்குறேன் எனக் கூறிக்கொண்டே  கோழியின் உடலை லேசாக நீவி விட்டு , கோழியின் வாய் திறந்து சில சொட்டு தண்ணீர் விட்டார். பாப்போம் எந்திரிச்சா பத்மாவுக்கு யோகம் இல்லையின்னா செவிடன் மாரிக்கு யோகம் எனச்சொல்லி விட்டுச் சென்றார் தோழர்.

சில கணங்களுக்குப் பின்  லேசாக கால்களை ஆட்டியது, தன் சிறகுகளை மெல்ல அசைத்தது, தொய்ந்து போயிருந்த தலையைக் கொஞ்சம் தூக்கியது  அந்த ஒரு கண் போன குருட்டுக் கோழி.  ஏனோ தெரியவில்லை சில கணங்களிலேயே அந்த ஒற்றைக்கணையும் மூடிக் கொண்டு மீண்டும் சுணங்கிக்கொண்டது.

வேறு யாரிடமாவது விபரம் கேட்கலாம் என நினைத்து பர்வதம்மாள் கிழவி வீட்டைக்கூட பூட்டாமல் வெளியேறினாள். குழந்தை வேலுவும் பர்வதம்மாள் கிழவியோடே ஓடிச்சென்றான். கோழி எப்படியாவது எந்திரிச்சிரனும், இனிமே எந்தக் கோழி மேலயும் கல்ல விட்டு வீசமாட்டேன்” என மாரியம்மனை நினைத்து மீண்டும் வேண்டிக்கொண்டான்.

பர்வதம்மாளும், வேலுவும் சென்ற நேரம் பார்த்து கிழவி வீட்டிற்கு வந்த பார்வதி வீடு திறந்திருந்ததினால் வீட்டின் மையத்தில் செத்துப்போதுபோல இருந்த கோழியைப் பார்த்துவிட்டாள். ஏற்கனவே கோழிகளை வாங்கப் பல வீடுகளுக்குச் சென்று விசாரித்துவிட்டு வந்தவளுக்கு இந்த செத்துப்போனதுபோலப் படுத்திருக்கும் கோழி ஆறுதல் தந்தது. பர்வதம்மாள் கிழவி முன்பு தன்னிடம் சொன்னது அவள் நினைவில் ஓடியது. கிழவிதான் ஏற்கனவே சொல்லிட்டாங்கள்ள பெறகென்ன இன்னைக்கு செலவில்லாம ஒரு நானூறோ, ஐநூறோ, சம்பாதிக்கலாம்” என மனதில் எண்ணிக்கொண்டும் கோழியின் கால்களைப் பிடித்துத் தூக்கிக்கொண்டும் செவிடன் மாரியின்  கசாப்புக் கடை நோக்கிச் சென்றுவிட்டாள் பார்வதி.

சிறிது நேரம் கழித்து பர்வதம்மாள் கிழவியும், குழந்தை வேலுவும் வீட்டிற்கு வந்து பார்த்தபொழுது  அங்கே கோழி இல்லை. 

குழந்தை வேலு ”அப்பாடா கோழி எந்திரிச்சி போயிருச்சுடா” எனக் கூறிக்கொண்டே சந்தோசத்தில் துள்ளிக்குதித்தான். ”

இனிமே எந்தக் கோழியையும் வெரட்டமாட்டேன் மேஞ்சா மேஞ்சுட்டுப் போகுது” எனச் சொல்லிக்கொண்டு கன்னத்தில் போட்டுக்கொண்டாள் பர்வதம்மாள் கிழவி. இருள் கவிழ்ந்திருந்த பர்வதம்மாள் கிழவியின் முகம் இப்போது மலர்ந்த பூ போலிருந்தது.

அதே வேளையில் குழந்தை வேலு, மாரியம்மனைக் கும்பிட்டு கட்டிவிட்ட மஞ்சள் கயிற்றோடு  வெட்டப்பட்ட குருட்டுக் கோழியின் கால்கள்  செவிடன் மாரியின் கசாப்புக்கடை ஓரத்தில் வீசப்பட்டிருந்தது.


  • தேவராஜ் விட்டலன்

1 COMMENT

  1. மிக அருமையான கதை.
    எதாா்த்தமான வாா்த்தைகள், கதையின் கிராமத்து சொலவடைகளை வசிக்கும் பொழுது எனது பாட்டியின் நினைவலைகள் என்னுள் …..
    கோழியின் மீது உள்ள வெறுப்பு அடிப்பட்டதும் இரக்கமாக மாறிவிட்டது……
    இது போல் தான் சில மனிதா்களும் உயிருடன் இருக்கும் போது மனிதத்தின் மகத்துவம் புாிவதில்லை……

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.