நெல்லி, பரந்த பீட்டர்ஸ்பர்க் நகரின் தெருக்களில் பனி கொட்டும் இரவில், எதிர்பார்க்க ஏதுமின்றி, நிற்க நேரிட்ட சின்னஞ்சிறு ஜீவன். கடுங்குளிரில் நீல நரம்புகள் புடைத்து, அவளுடைய வெற்றுப் பாதங்கள் விறைத்துவிட்டிருந்தன. அவற்றை விடவும் விறைத்துப்போயிருந்தது அவள் ஆத்மா. இருண்ட தனித்த அறையின் வாசலை மெல்லத் திறந்து, சந்தேகமும் அச்சமும் கலந்த பெரிய கண்களினால் ‘வான்யா’வைப் பார்த்தபடி தன் தாத்தாவைப் பற்றிக் கேட்கிறாள். அவனுடைய பரிவை அருவருப்புடன் உதறியவளாக இறங்கி ஓடுகிறாள்.
‘இல்லை, தாத்தா என்னை நேசித்திருக்கவில்லை. யாருமே என்னை நேசிக்கவில்லை.’
மலினத்தின் குட்டையாகிய தன் எஜமானி வீட்டுக்கு மீண்டும் திரும்பி வருகிறாள். எதையும் யாரிடமும் ஏற்கலாகாது என்ற தனது விரதத்திற்கு விலையாகச் சொல்லமுடியாத இம்சைகளை இறுக அழுந்திய உதடுகளுடன், வறண்ட கண்களுடன் ஏற்க, சின்னஞ்சிறு உடலுக்குள் அவள் இதயத்தைக் கடுங்குளிர் துளைத்துவிட்டிருந்தது. நோயுற்ற கூட்டுக்குள், மவுனமான கம்பீரத்துடன் கூண்டுக்குள் நடைபோடும் வனராஜனைப் போல, ஒரு ஆத்மா வாழ்ந்திருந்தது.
நெல்லி தஸ்தயெவ்ஸ்கி கதாபாத்திரங்களிலேயே, ஃபாதர் சோஷிமாவிற்கு அடுத்தபடியாக, மிகவும் வலுவான கதாபாத்திரம். அவன் இள நெஞ்சை மீட்டிய ஏதோ வன்மையான அனுபவத்தின் உதிர மணத்தை நாம் அதில் அறியலாம். அவனுடைய இருண்ட நெஞ்சத்தின் கதவுகளை மெதுவாகத் திறந்து உள்ளே வந்து, வாழ்வின் மகத்தான இம்சையை அவனுக்குச் சொன்ன கதாபாத்திரம் அது. நிழல் போல, முகம் மாற்றி பெயர் மாற்றி, அது அவனைத் தொடர்கிறது. இம்சையின் கீழ் எல்லைகளிலிருந்து பேரானந்தத்தின் முடிவின்மைக்கு, கீழ்மையின் இருட்குகைகளிலிருந்து மீட்பின் ஒளிக்கு, மனித ஆத்மா உயர்ந்தெழும் மகத்தான தருணங்களைப் படைக்க அவனுக்கு சாஸ்வதமான உத்வேகத்தை அளித்தபடி.
தஸ்தயெவ்ஸ்கியின் ஆரம்பகால படைப்புகளிலேயே நெல்லி மெல்லிய சுருதி கூட்டலாய் அறிமுகமாகிவிட்டாள். எனினும் ‘நிந்திக்கப்பட்டவர்களும் வதைக்கப்பட்டவர்களும்’ தான் (The insulted and humiliated) அவன் தனது முதல் விசுவரூபத்தைக் காட்டிய நாவல். கலைஞனை அவன் யார் எனக் காட்டிய படைப்பும் இதுவே. அவனுடைய பிற்கால வெற்றிகளுக்கெல்லாம் அடித்தளமிட்ட படைப்பு. பெண்மைக்கே உரிய நிலையில்லாமையுடன், தாய்மையின் வல்லமையுடன், சொந்தப்படுத்தும் வெறியுடன், அன்பின் அத்தனை பலவீனங்களுடன், இப்படைப்பில் பிரசன்னமாகும் நடாஷா அவனுடைய இன்னொரு சாஸ்வத கதாபாத்திரம். இவ்விரு முகங்களின் இணைப்பில் பெண்மை பற்றிய தஸ்தயெவ்ஸ்கியின் தரிசனமும் முழுமை பெறுகிறது.
தஸ்தயெவ்ஸ்கி முதன்மையாய் ஒரு கிறிஸ்தவன். இருண்ட பாதைகளில் தனது விசுவாசத்தின் விளக்குடன் நடந்த பிரச்சாரகன். தூய்மை என்றுமே அவனை உத்வேகம் கொள்ளச் செய்கிறது. சகல மலினங்களும் குவிந்த கிடங்குகளில் வாழ்ந்தும் நெருப்பு போல அதி தூய்மையுடன் ஒளிரும் கதாபாத்திரங்கள் சோனியாவும் நெல்லியும். மானுட மாண்பையே இவர்கள் வழியாகக் தஸ்தயெவ்ஸ்கி சித்தரிக்கிறான். தார்மீக ஆவேசத்துடன் நடாஷாவிற்காக, தன்னையும் நேசிக்கும் அவள் தந்தையுடன் வாதிட வரும் நெல்லியில்; அன்பின் காவல் மட்டுமே துணையாக, கடுங்குளிர் உறைய வைத்த சைபீரியாவில், ரஸ்கால்நிகாஃபுக்காக காத்திருக்கும் சோனியாவில்: அவன் தன் மானுட தரிசனத்தின் உச்சங்களைப் பதிவு செய்கிறான். கீழ்மையே ஒட்டாத லட்சிய வடிவங்களாகவே அவன் இக்கதாபாத்திரங்களை – இந்த நிரந்தரக் கதாபாத்திரத்தை – என்றும் காண்கிறான்.
மீள்தலின் இதிகாசங்கள் தஸ்தயெவ்ஸ்கியின் அத்தனை படைப்புகளும். சகல கீழ்மைகளிலிருந்தும் உயர்ந்தெழும் வல்லமையை எந்நிலையிலும் மனித ஆத்மா பெற்றிருக்கின்றது என்பதே அவனுடைய வசனம். ரஸ்கால்நிகாஃப் அல்லது அல்யேஷாவில், அல்லது எந்த மையக் கதாபாத்திரத்திலும், எரிவது இந்தத் துடிப்பின் தீயேயாகும். மீட்சி மீட்சி எனத் தவிக்கும் ஆத்மாக்கள் இவை. அவை, ஒரு தூரப்பார்வையில், தஸ்தயெவ்ஸ்கியின் முகங்கள்தானோ என்று பிரமை கூட்டுகின்றன. காமத்தில், சூதில், மனப் போராட்டங்களில் தனது அர்த்தங்களை இழந்த தஸ்தயெவ்ஸ்கியின் சுயத்துவ தரிசனங்கள் தாமாகவே அக்கதாபாத்திரங்களுக்கு ரத்தமும் மாமிசமும் தருபவை? மீட்சி என்பது, இருண்ட பாதையில் தனது காலடிகளையே கேட்டபடி நடந்துகொண்டிருந்த வாழ்வில், அவனுடைய நிரந்தரக் கனவாக இருந்ததோ? மீண்டும் மீண்டும் நம்பிக்கையுடன், எதிர்பார்ப்புடன், தன் அத்தனை கலை எழுச்சியாலும் அவன் தனக்குத்தானே கூறிக்கொண்ட ஆற்றுதல்கள் அவன் படைப்புகளனைத்தும்? வாழ்வில் அவன் அவனுக்கே மறுத்துக் கொண்ட புத்துயிரை அவன் தன் கதாபாத்திரங்கள் மூலம் அடைந்துகொண்டானா? “மீள்வேன்! மீள்வேன் என
“மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். அதுதான் முக்கியமான விஷயம். அவ்வளவுதான். வேறு எதுவும் வேண்டாம். கண்டிப்பாய் வேறு எதுவும் அவசியமில்லை…”
எனினும் நெல்லியின் வழியாக அவன் கூற நேர்ந்தது, “அவரிடம் செல்லுங்கள். நான் இறந்துவிட்டேன் என்பதைச் சொல்லுங்கள். அவரை நான் மன்னிக்கவில்லை என்பதைத் தெரிவியுங்கள், இதையும் கூறுங்கள்; நான் திருமொழிகளைக் கடைசிவரை படித்துக்கொண்டிருந்தேன் என்று. நாம் நமது விரோதிகளை முழுக்க மன்னித்துவிட வேண்டும் என்று அது சொல்கிறது. நான் அதைப் படித்தேன். ஆயினும் நான் அவரை மன்னிக்கவில்லை என்று சொல்லுங்கள்”. நெல்லியின் மரணப் படுக்கையில், அவளுடைய கடைசி வார்த்தைகளாய் வருபவை இவை. அந்த ‘அவர்’ அவளுடைய பிறப்புக்குக் காரணமாக அமைந்தவர். அவளுடைய தாயின் தந்தை வியாபாரம் நொடித்துப் போய் நடைபிணமாய் வாழ்ந்து சாகக் காரணமாக இருந்தவர். அவளுடைய அன்னை கைக்குழந்தையுடன் பீட்டர்ஸ்பர்க் தெருக்களில் பிச்சையெடுக்கக் காரணமாக இருந்தவர். அவளுடைய அன்னை தன் கடைசிக் கணங்களைக் கடுங்குளிரில் உறைந்த கிடங்குக்குள் நீலம்பாரித்த உடலோடு தன் குழந்தையை அணைத்தபடி விட்ட சாபத்திற்கு இலக்காக இருந்தவர். செல்வம், மிடுக்கு, சுய பிரதாபம் இவற்றின் உருவம் அவர். அவருடைய கோணத்தில் அவருடைய தரப்பைப் பதிவு செய்யவும் தஸ்தயெவ்ஸ்கி தவறவில்லை. அவர் வாழ்வது இன்னொரு உலகத்தில். போகம் ஒன்றே இன்பம் அங்கு. செல்வமே வெற்றி. அங்கு மானுடத்தின் முகமே வேறு. அசாதாரணமான விஷயம் அல்ல இது. சரித்திரத்தின் எல்லா படிகளிலும் அந்த கோஷமே மேலும் உரத்து ஒலிக்கிறது.
‘உங்கள் சகோதரன் உங்களுக்குத் தீங்கு செய்தால் ஏழு தடவையல்ல, எழுநூறு தடவை மன்னிக்கும்படித்தான் நான் சொல்வேன்’ என்ற அறைகூவலின் சாரத்தை அறியாதவனல்ல தஸ்தயெவ்ஸ்கி. எனினும் அவன் மன்னிக்கவில்லை. தூய்மையின் வடிவமாய் ஒளிர்ந்த தனது லட்சியக் கதாபாத்திரத்தின் உதடுகளில் அவன் தன் தீர்ப்பைப் பொருத்தினான்.
மகத்தான மானுடக் கனவுகள் எதிரொலிக்கும் படைப்புலகம் தஸ்தயெவ்ஸ்கியுடையது. அவற்றின் மிக முக்கியமான அறைகூவல் இதுவே. தன் ஆத்மாவில் நிரந்தர ஜோதியாக எரியும் மகத்தான லட்சியங்களின் குறியீட்டையே, கிறிஸ்துவையே, மறுதலிக்கும் நிலைவரை அவனைக் கொண்டு செல்லும் மன உச்சம் இது. தன் கலையின் புனிதத்தினால் அவன் கிறிஸ்துவையே இடம் பெயரச் செய்கிறான். ஒரு கணம் அந்த இடத்தில் தன்னுடைய ரத்தம் தோய்ந்த சிலுவையை வைக்கிறான்.
மானுடமே மகத்தானது என்கிறான் தஸ்தயெவ்ஸ்கி. லட்சியங்களை விடவும் கனவுகளை விடவும், மானுடத்தைப் புழுதியில் புரட்டும் சகல கீழ்மைகளுக்கும் எதிராக தனது எளிய கதாபாத்திரம் மூலம் தீர்ப்பு வழங்குகிறான். நெல்லி மன்னிக்கவில்லை, கடைசிவரை. அன்பில் திளைத்தவளாய், அவள் ஒரு தூய நினைவாக மாறுகிறாள்.
நெல்லி இறப்பதில்லை. தஸ்தயெவ்ஸ்கி படைப்பில் அவள் மீண்டும் மீண்டும் பிறக்கிறாள். பன்மடங்கு பரவசத்துடன் ‘குற்றமும் தண்டனையும்’ -இல் சோனியாவாக வருகிறாள். தஸ்தயெவ்ஸ்கி படைப்புகளில் மட்டுமல்ல,அவன் தீயூட்டிய மற்ற படைப்பு மனங்களிலும் அவள் மீண்டும் மீண்டும் தெய்வீக உத்வேகத்துடன் பிறந்தபடியே, ஜ்வலித்தபடியே தான் இருக்கிறாள். நீங்கள் அவளை கார்க்கியில் காணமுடியும். பாஸ்டர் நாகின் ‘லாரா’ வில் காணமுடியும். மார்க்கோஸின் ரெமிடியோஸ் அழகியில் காணமுடியும். நெல்லி மரணமற்ற ஒரு பிரகாசம்.
மன்னிக்காதே நெல்லி. நீ பிறந்து ஒளிரும் எந்தப் படைப்புச் சூழலிலும் ஒருபோதும் மன்னிக்காதிரு.
கீழ்மைகளுக்கு எதிரான கோபமே மானுட எழுச்சிகளில் மகத்தானது என்ற தஸ்தயெவ்ஸ்கியின் குரலைக் காலத்தின் முடிவற்ற சுருளில் எதிரொலித்தபடி வந்து கொண்டேயிரு.
மானுடத்திற்கு எதிரான அனைத்திற்கும் முன் சோர்வற்ற அறைகூவலாக உனது சான்னித்தியம் எங்கள் சரித்திரங்களில் இருந்துகொண்டே இருக்கட்டும்.
(கல்குதிரையின் தஸ்தயெவ்ஸ்கி சிறப்பிதழிற்கு எழுதப்பட்ட கட்டுரை)
நன்றி:
எழுத்தாளர் ஜெயமோகன்,
கல்குதிரை.