மன்னிக்கவும்
இதை சொல்வதற்குள் எனக்கு 38 வயது ஆகி விட்டது.
மன்னிக்கவும்
முலை விடாத வயதில்
உனக்கு உலகத்திலேயே யாரைப் பிடிக்கும்
என்ற கேள்விக்கு
காட்பரீஸை மென்றுக்கொண்டே
சித்தப்பா என்று சொல்லியிருக்க கூடாது தான்.
மன்னிக்கவும்
அன்று ஏதோ சடங்குக்கு ஊருக்குப் போன சித்தியுடன்
கூடவே தொற்றிக் கொண்டு போகாமல்
யாருமில்லாத வீட்டில் தனியே யிருக்க
ஒத்துக்கொண்டது என் கவனக்குறைவு தான்.
மன்னிக்கவும்
இரவில்
பாதி தூக்கத்தில்
சித்தப்பா அருகில் வந்து படுத்ததை
அறியவில்லை
அவரின் கைகள் அவ்வளவு நீளம்,
அதன் நகங்கள் அவ்வளவு பதம் என்பதை
என் ஜனன உறுப்புகளை அவர் தொடும்வரை
அறியவில்லை.
மன்னிக்கவும்
…………………………
…………………………
மன்னிக்கவும்
குடும்பம் என்பது கூடு
குடும்ப ஆண்கள் பாதுகாவலர்கள்
குடும்பத்துக்குள் என்ன நடந்தாலும் வெளியே சொல்லக்கூடாது
குடும்ப மானம் குடும்ப பெண்களின் கைகளில் தான் இருக்கிறது
என்ன இருந்தாலும் அவர் என் சித்தப்பா.
மன்னிக்கவும்
அவ்வப்போது ஆவென திறந்து ஓலமிடும்
சித்தப்பா என்ற காயத்தில் கசிவது
ரத்தம் அல்ல விந்தும் அல்ல
கண்ணீரும் அல்ல
அது ஒரு நிறமில்லா திரவம்
நம்பிக்கை என்ற அழுகிய பிணத்தின் வாசனை
அடிக்கும் திரவம்.
மன்னிக்கவும்
இது உங்களைக் காக்க வைத்து சொல்ல வேண்டிய செய்தியில்லை தான்.
மன்னிக்கவும்
மனம் வலி உண்டாக்கும் கவிதை
பதைபதைப்போடு படித்தேன்
பெண்குழந்தைகளைக் காப்போம்..பெண்குழந்தைகளைப் படிக்க வைப்போம்…என முழங்கிக் கொண்டிருந்த சித்தப்பா தானே அது…? நல்லவர்…
மன்னிக்கவும்.
இனி எப்படி தூக்கும் வரும்.
லீனா மணிமேகலை யின் ‘மன்னிக்கவும்’ கவிதை நெஞ்சுக்குள் நெருஞ்சி முள்ளாய் சுருக்கென்று தைத்தது.அருமை.
மனதுக்குள் எவ்வளவு துக்கமும் பாரமும்,அதுவும் எவ்வளவு நெருக்கமான நம்பிக்கைக்கு உரிய ஒருவர் செய்யும் போது அதன் பேரிடி மறக்கமுடியாத தொடரும் விழி முன் நிற்கும் கனவு.
இது எல்லோருக்கும் ஒரு பாடம்
சில கவிதைகள் உணரக்கூடியவை,
நெருடக்கூடியவை,
கலங்கவைக்கக்கூடியவை,
ஆனால் பாடங்களாக்கப்படவேண்டியவை!
இந்த கவிதையை எழுதியதற்காக நன்றி!
வலியுடைய கவிதை