- கூண்டுப்பறவைகள்
சுதந்திரமான பறவையொருவன் காற்றில் கரணமடிப்பான்,
ஓடையின் போக்கில் அதன் நீரோட்டம் நீளும் தொலைவு வரை மிதப்பான்,
தன் சிறகுகளை ஆரஞ்சு நிற சூரிய கிரணங்களில் அமிழ்த்துவான்,
பரந்த வானத்தையே துணிவுடன் உரிமை கோருவான்.
ஒடுங்கிய கூண்டில் குறுக்கும் நெடுக்குமாய் நடைபோடும் பறவையாலோ,
கொதிப்பின் கம்பிகளைத் தாண்டிப் பார்க்க முடிவதில்லை,
அவன் சிறகுகள் கத்தரிக்கப்பட்டுள்ளன,
அவன் கால்கள் கட்டப்பட்டுள்ளன,
அதனால் தான்,
அவன் வாய் திறந்து பாடுகிறான்.
எதையெல்லாம் அவன் அறிந்திருக்கவில்லையோ,
ஆனால் எதற்காகவெல்லாம் அவன் இன்னமும் ஏங்குகின்றானோ,
அதையெல்லாம் பற்றி அச்சம் தொனிக்கும் நடுங்கொலியால் பாடுகிறான்.
தூரத்து குன்றில் அவனது ராகம் ஒலிக்கிறது,
ஏனெனில்,
அவன் விடுதலையைப் பற்றிப் பாடுகிறான்.
சுதந்திரமான பறவை,
மற்றுமொரு தென்றலையும்,
பெருமூச்செரியும் மரங்களினூடே மெலிதாய் ஊடுருவும் தடக்காற்றையும்,
அதிகாலை பிரகாசத்தின் புல்வெளியில்
காத்திருக்கும் பருத்த புழுக்களையும் பற்றி எண்ணிக்கொள்கிறான்,
வானத்தையே தன்னுடையதெனச் சொந்தம் கொண்டாடுகிறான்..
கூண்டுப் பறவையானவன்,
கனவுகளின் கல்லறையின் மேல் நிற்கிறான்,
கொடுங்கனவொன்றின் கூச்சலால் அவன் நிழல் ஓலமிடுகிறது,
அவன் சிறகுகள் கத்தரிக்கப்பட்டுள்ளன,
அவன் கால்கள் கட்டப்பட்டுள்ளன,
அதனால் தான்,
அவன் வாய் திறந்து பாடுகிறான்.
எதையெல்லாம் அவன் அறிந்திருக்கவில்லையோ,
ஆனால் எதற்காகவெல்லாம் அவன் இன்னமும் ஏங்குகின்றானோ,
அதையெல்லாம் பற்றி அச்சம் தொனிக்கும் நடுங்கொலியால் பாடுகிறான்.
தூரத்து குன்றில் அவனது ராகம் ஒலிக்கிறது,
ஏனெனில்,
அவன் விடுதலையைப் பற்றிப் பாடுகிறான்.
- நகரும் காலம்
விடியல் போன்றது உன் நிறம்
என் நிறமோ மானின் கஸ்தூரி
ஒன்று,
திண்ணமானதொரு முடிவின் தொடக்கத்தையும்,
மற்றது,
தொடக்கமொன்றின் உறுதியான முடிவையும்
தீட்டுகிறது.
- ஒரு தேவதையால் ஆசீர்வதிக்கப்பட்டது
நாம்,
அன்பு தனது நெடிய புனிதக் கோயிலை விட்டு வெளியேறி,
நம் கண்களுக்குப் புலப்பட்டு,
வாழ்வை நோக்கி நம்மை விடுவிக்கும் வரை,
துணிவுக்குப் பழக்கப்படாதவர்களாய்,
மகிழ்ச்சியிலிருந்து வெளியேறிய அகதிகளாய்,
தனிமையின் கிளிஞ்சல்களில் சுருண்டபடி வாழ்கிறோம்.
அன்பு வந்து சேர்ந்தது,
அதன் பரிவாரத்தில்…
பரவசங்களும்,
பழைய இன்ப நினைவுகளும்,
வலிகளின் தொன்மையான வரலாறுகளும் கூட வந்தன.
எனினும்,
நாம் துணிச்சலுடன் இருப்போமானால்,
அன்பு நமது ஆன்மாக்களினின்று
பயத்தின் சங்கிலிகளை அறுத்துப்போடும்.
நமது கோழைத்தனம் மறக்கடிக்கப்படும்,
அன்பின் பேரொளியில் தூய்மையடையும் நாம்
துணிவோடிருக்க உறுதிகொள்வோம்.
நாம் என்னவாக இருக்கிறோமோ,
என்னவாக என்றென்றும் இருப்போமோ,
அவையாவும் அன்புக்கான விலைதான் என்பதை
காண்கிறோம் சட்டென்று.
இருப்பினும்,
அன்பு ஒன்று மட்டுமே
விடுவிக்கும் நம்மை!
கவிதை மூலம் : மாயா ஏஞ்சலோ
மொழிபெயர்ப்பு: நவீனா
- ஆசிரியர் குறிப்புகள்
மூலக்கவிதை ஆசிரியர்:
மாயா ஏஞ்சலோ (ஏப்ரல் 4, 1928 – மே 28, 2014, செயின்ட் லூயி, மிசௌரி)
ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் எழுத்தாளர், கவிஞர், நடிகை, நர்த்தகி, பாடகி, நாடகாசிரியர், பாடலாசிரியர், நாடகத்தயாரிப்பாளர், திரைப்படத்தயாரிப்பாளர், இயக்குனர், குடிமை உரிமைப் போராளி. இனவெறிக்கு எதிராகப் போராடிய மாயா ஏஞ்சலோ தனது எழுத்துக்களில் புறக்கணிப்பின் வேதனையையும், ஆற்றாமையையும், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளையும் ஆழமாகப் பதிவுசெய்துள்ளார்.
ஆறு மொழிகளில் தேர்ச்சி கண்டவர். இவர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளதோடு, எகிப்து, கானா நாட்டுப் பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். எந்த பல்கலைக்கழகத்திலும் இவர் பயின்றதில்லை என்றாலும் கூட, உலகம் முழுவதிலுமுள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவப் பட்டங்களை வழங்கி சிறப்பித்திருக்கின்றன.
தனது எழுத்துப்பணியின் ஐம்பது வருடங்களில், ஏழு சுயசரிதைகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், பதினெட்டு கவிதைத் தொகுப்புகள், இரண்டு சமையல் குறிப்பு நூல்கள், நான்கு குழந்தை இலக்கியங்கள், ஏழு நாடகங்கள், பதினொரு திரைப்படத்திற்கான வசனங்கள், நான்கு ஸ்போக்கன் வேர்ட் கவிதை தொகுப்புகள் என பல புத்தகங்களை எழுதியுள்ள இவர் ஐந்து கிராமி உள்ளிட்ட பல விருதுகளும் பெற்றுள்ளார்.
மொழிபெயர்ப்பு ஆசிரியர்:
நவீனா, தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்போது அரசு உதவி பெறும் கல்லூரி ஒன்றில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர், ஆப்பிரிக்கப் பெண் எழுத்துக்கள் குறித்த முனைவர் பட்ட ஆராய்ச்சியினையும் மேற்கொண்டுவருகிறார்.
இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்து செயல்பட்டு வரும் இதழின் பதிப்பாசிரியர் குழுவில் இடம்பெற்றிருக்கிறார். இலங்கையைச் சேர்ந்த ‘சி பி எஸ்’ என்னும் உலக அமைதிக்காக பணியாற்றி வரும் அமைப்பு இவருக்கு ‘பெண்களின் குரல்’ விருது வழங்கி சிறப்பித்துள்ளது.
ஆங்கிலத்தில், பெண்ணியம் சார்ந்து A Parrot in Blue & Other Poems, கிரேக்க மற்றும் ரோமானிய புராணக் கதைகளைத் தழுவி Are You Real? & Other Poems என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான ‘லிலித்தும் ஆதாமும்’ என்கிற பெண்ணியக் கட்டுரைத் தொகுப்பு தமிழில் இவரது முதல் நூல்.
தேசிய மொழிபெயர்ப்பு அமைப்பில் (NTM) மொழிபெயர்ப்பிற்கான சிறப்பு பயிற்சிகள் பெற்று, அதன் உறுப்பினராக இருந்து பாடநூல்களை மொழிபெயர்த்துள்ள இவர் தனது தமிழ் கவிதைகளில் தேனி மற்றும் மதுரை மாவட்ட வட்டார வழக்கினையும் பதிவுசெய்து வருகிறார்.
தற்போது இந்து தமிழ் திசை நாளிதழின் நடுப்பக்கத்தில் பெண் பார்வை என்னும் தொடர் பத்தியினை எழுதி வருகிறார்.
எதிரும் பதியும் இணையும் புள்ளியில் உண்டாகும் மாயத்தை தமிழிலும் தக்கவைத்துக் கொடுத்துள்ள நவீனாவிற்கு வாழ்த்துகள்.- பாரதிநிவேதன்
மிக்க நன்றி