மெய்யியலின் மதிப்பீடு-பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்,தமிழாக்கம்: விவேக் ராதாகிருஷ்ணன்

மெய்யியலின் சிக்கல்களை பற்றிய நமது சுருக்கமான மேற்பார்வை முடிவுக்கு வரும் நிலையில், மெய்யியலின் மதிப்பீடு என்ன, மற்றும் அதை ஏன் கட்டாயமாக படிக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. மெய்யியல் என்பது, சூழ்ச்சியற்ற ஆனால் பயனற்ற அற்பத்தையும், நுண்கூர் வேறுபாடுகளையும், மற்றும் அறிய முடியாத பொருட்களை பற்றிய சர்ச்சைகளையும் தாண்டி, வேறு பலன் ஏதும் அளிக்கக் கூடியதல்ல என்ற மனப்போக்கு ஒன்று இருந்து வருகிறது. இந்த மனப்போக்கை அறிவியலின் அல்லது நடைமுறை அலுவல்களின் தாக்கத்தால் பலர் கொண்டுள்ளனர். இவ்வாறான கண்ணோட்டத்தில் மெய்யியலின் மதிப்பீட்டை பற்றிய கேள்வியை சிந்திப்பதற்கான அவசியம் மேலும் கூடுகிறது.

The Problems of Philosophy

மெய்யியலை பற்றிய இப்பார்வை, வாழ்க்கையின் இலட்சியப் பொருட்களை  (ends of life) பற்றிய தவறான கருத்தாக்கத்தினாலும், மெய்யியல் முயன்றடையக்கூடிய நன்பொருட்களின் (goods) தன்மையை பற்றிய தவறான கருத்தாக்கத்தினாலும் தோன்றுவதாகும். இயற்பொருள் சார்ந்த அறிவியல், அதன் கண்டுபிடிப்புகளின் மூலமாக, அதனை பற்றி அறிந்திராத எண்ணற்ற மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது; எனவே இயற்பொருள் சார்ந்த அறிவியலின் கல்வியை பரிந்துரைக்க மூலகாரணமாய் இருப்பது, கற்கும் மாணவர்களின் மீது ஏற்படும் தாக்கம் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனித இனத்தின் மீது பொதுவாக ஏற்படும் தாக்கமே ஆகும்.

ஆனால், பயனுடைமை (utility) மெய்யியலை சேர்ந்தது அல்ல. மெய்யியற்க் கல்விக்கு மாணவர்கள் அல்லாத மற்றவர்களிடம் ஏதேனும் மதிப்பு இருக்குமேயானால், அது கண்டிப்பாக, மறைமுகமானதாக, அதை படிப்பவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கத்தின் மூலமாக மட்டுமே தான் இருக்கக்கூடும். ஆகையால், எங்கேயாயினும் தேடினோமேயானால், மெய்யியலின் மதிப்பை முதன்மையாக இவ்வாறான தாக்கங்களிலேதான் தேட வேண்டும்.

மேற்கொண்டு பார்க்கும்போது, மெய்யியலின் மதிப்பீட்டை நிர்ணயிக்கும் இம்முயற்சியில் நாம் தோல்வியடையாமல் இருக்க, ‘நடைமுறையாளர்கள்’ (‘practical men’) என்று சிலரை தவறாக அழைப்பதிலிருக்கும் முற்சாய்வுகளிலிருந்து நம் மனதினை விடுவிக்க வேண்டும். ‘நடைமுறையாளர்’ என்று நாம் அடிக்கடி பயன்படுத்தும் இச்சொல், பொருள் தேவைகளை (material needs) மட்டுமே அங்கீகரிக்கும் ஒருவரை குறிக்கும்; இவர் உடலுக்காக மட்டுமே மனிதனுக்கு உணவு வேண்டும் என்பதை உணர்ந்தவராகவும், மனதிற்கு கொடுக்கப்பட வேண்டிய உணவின் தேவையை பற்றிய அறிதல் இல்லாதவராகவும் இருப்பார். ஒரு சமூகத்தில், எல்லாரும் செல்வந்தர்களாக இருந்தாலும், வறுமை மற்றும் நோய் சாத்தியமாகக்கூடிய அளவிற்கு குறைக்கப்பட்டாலும், அந்த சமூகத்தை மதிப்புமிக்கதாக உருவாக்க செய்யவேண்டியவை இன்னும் ஏராளமானதாக இருக்கும்; நாம் இருக்கும் சமூகத்தில் கூட மனதின் நன்பொருட்கள் (goods of the mind) குறைந்தபட்சமாக உடலின் நன்பொருட்களுக்கு (goods of the body) நிகரான முக்கியத்துவத்தை உடையவை ஆகும். மெய்யியலின் மதிப்பை மனதின் நன்பொருட்களுள்தான் பிரத்யேகமாக கண்டடைய வேண்டும்; மற்றும், மனதின் நன்பொருட்களின் மீது அக்கறை உள்ளவர்களை மட்டுமே, மெய்யியலை படிப்பது நேர விரயமல்ல என்பதை ஏற்கச் செய்ய முடியும்.

மெய்யியல், மற்ற கல்விப் பாடங்களை போலவே, அறிவை முதன்மையான இலக்காக கொண்டுள்ளது. அது அடைய முயலும் அறிவு,  அறிவியல்களின் குழுமத்திற்கு (body of the sciences) ஒருமைப்பாட்டையும், ஒருங்கமைப்பையும் வழங்கக்கூடிய அறிவாகும். அது நம் பற்றுதல்கள், முற்சாய்வுகள், மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படைகளை  நுண்ணாய்வு விசாரணைக்கு உட்படுத்துவதால் விளையும் அறிவாகும்.  ஆனால் மெய்யியல் தன் கேள்விகளுக்கு உறுதியான பதில்களை அளிக்கும் முயற்சிகளில் மாபெரும் வெற்றியை அடைந்திருக்கிறதென்று சொல்ல முடியாது. நீங்கள் ஒரு கணிதவியலாளரையோ, ஒரு கணிமவியலாளரையோ, ஒரு வரலாற்றாசிரியரையோ அவரின் அறிவியல் எந்த உண்மைகளை உறுதியாக கண்டடைந்திருக்கிறது என்று கேட்டால், அவரின் பதில் நீங்கள் மனமுவந்து கேட்கும் வரை நீளும். ஆனால் அதே கேள்வியை ஒரு மெய்யியலாளரிடம் முன்வைத்தால், அவர் நேர்மையானவரானால், அவர் மற்ற அறிவுத்துறைகள் அடைந்ததை போன்ற ஆக்கமுறையான விளைவுகளை தன்னுடைய ஆய்வு அடைந்திருக்கவில்லை என்பதை ஏற்றுக் கொள்வார். இதற்கு காரணம், ஏதேனும் ஆய்வுப்பொருளை குறித்த உறுதியான அறிவு சாத்தியமாகும்போதே, அப்பொருள் மெய்யியலின் ஆய்வுப்பொருளாக இருப்பது முடிவுற்று, தனிப்பட்ட அறிவியலாக மாறுகிறது. முன்னொரு காலத்தில் மெய்யியலில் சேர்க்கப்பட்டிருந்த விண்ணுலகத்தின் முழு ஆய்வு, இப்போது வானவியலை (astronomy) சேர்ந்ததாக இருக்கிறது;  நியூட்டனின் சிறந்த படைப்பு ‘இயற்கை மெய்யியலின் கணிதக் கோட்பாடுகள்’ (‘The Mathematical Principles of Natural Philosophy’) என்றே அழைக்கப்பட்டது; அதே போல், மெய்யியலின் ஒரு பகுதியாக இருந்த மனித மனத்தின் ஆய்வு, இப்போது மெய்யியலிலிருந்து பிரிக்கப்பட்டு, உளத்தின் அறிவியலாக (science of psychology) மாறியிருக்கிறது. ஆகையால், மெய்யியலின் உறுதியற்ற நிலை, ஒரு பெருமளவிற்கு, உண்மை என்பதைவிட  மேம்போக்கான தோற்றமே: உறுதியான பதில்களை ஈட்ட தகுதியாக இருக்கின்ற கேள்விகள், அறிவியலுக்குள் வைக்கப்படுகின்றன; உறுதியான பதிலை கொடுக்க முடியாத கேள்விகள் பின்தங்கி உருவாக்கும் மிச்சமே மெய்யியல் என்று அழைக்கப்படுகிறது.

ஆனால், இது மெய்யியலின் உறுதியற்ற நிலையை பற்றிய உண்மையின் ஒரு பகுதி மட்டுமே. நமக்கு தெரிந்த வரையில், பல கேள்விகள் – நம் ஆன்மீக வாழ்க்கைக்கு அளவிடற்கரிய ஈர்ப்பு உடையவை உட்பட – மனித அறிவுத்திறன்  இப்போது இருப்பதை விட வேறொன்றாக மாறும் வரை தீர்க்க இயலாதவையாகவே இருக்கிறது. பிரபஞ்சத்திற்கு ஏதேனும் ஒருமிப்பான திட்டமோ அல்லது நோக்கமோ உள்ளதா, அல்லது, அது அணுக்களின் தற்செயலான கூட்டா?     பிரக்ஞை என்பது பிரபஞ்சத்தின் நிலையான ஒரு பகுதியாக இருந்து, எல்லையற்ற ஞான வளர்ச்சிக்கு நம்பிக்கை கொடுப்பதா?, அல்லது அது, உயிர்ப்பு சாத்தியமற்றதாக மாறக்கூடிய ஒரு சிறு கோளின் மேல் இருக்கும் நிலையற்ற விபத்தா? நல்லவையும், தீயவையும் முக்கியத்துவத்தோடு இருப்பது முழு பிரபஞ்சத்திற்குமா அல்லது மனிதனுக்கு மட்டுமா?

இத்தகைய கேள்விகள் மெய்யியலால் கேட்கப்பட்டு, பல்வேறு மெய்யியலாளர்களால், பலவகையாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவற்றிற்கு வேறு வழியில் பதில்கள் கண்டுபிடிக்கப்பட முடியுமோ இல்லையோ, மெய்யியல் பரிந்துரைக்கும் பதில்கள்யாவும் நிரூபிக்கத்தக்கவை அல்ல என்றே தோன்றுகிறது. ஆயினும், ஒரு பதிலை கண்டறியும் எதிர்பார்ப்பு சிறியதாக இருப்பினும், மெய்யியல் இத்தகைய கேள்விகளை நம் கருத்தில் தொடர்ந்து கொள்ளச் செய்வதோடு, அவைகளின் முக்கியத்துவத்தையும் நமக்கு உணர வைக்கிறது. இதை தவிர, அக்கேள்விகளுக்கு வரும் அனைத்து அணுகுமுறைகளை ஆராய்வதும் மெய்யியற்ச் செயல்பாட்டின் ஒரு அங்கமே. மேலும், உறுதியாக தெரியக்கூடிய அறிவிற்கு நாம் நம்மை குறுகிக்கொள்ளும்போது, அழிந்து கொண்டிருக்கின்ற இப்பிரபஞ்சத்தின் மேல் நமக்கிருக்கும் ஆர்வத்தை விழிப்புணர்வுடன் வைப்பதும் மெய்யியலே ஆகும்.

பல மெய்யியலாளர்கள் அவ்வாறான அடிப்படை கேள்விகளின் உறுதியான பதில்களை நிலைநாட்ட மெய்யியலால் முடியும் என்று கருதியிருப்பது உண்மையே. அவர்கள் சமய நம்பிக்கைகளில் இருக்கும் முக்கியமானவற்றை சரியான ஆதாரத்தால் உண்மையென திட்டவட்டமாக நிரூபிக்க முடியுமென்று எண்ணியிருக்கிறார்கள். இத்தகைய முயற்சிகளை மதிப்பிடுவதற்கு, மனித அறிவை மேற்பார்வையிடுவதும், மற்றும் அதன் முறைமைகளையும், வரையறைகளையும் பற்றி கருத்துகளை உருவாக்குவதும் அவசியமாக இருக்கிறது. இத்தகைய சமாச்சாரத்தில் சீராய்வற்ற பிடிவாதமான கருத்தை கூறுவது விவேகமற்றதாய் இருந்துவிடும். ஆனால், நமது முந்தைய அத்தியாயங்களில் கண்டது போல, சமய நம்பிக்கைகளை மெய்யியலின் ஆதாரங்களால் அறிவதை நிராகரிக்க வேண்டும். ஆகையால், அத்தகைய கேள்விகளின் உறுதியான பதில்களை மெய்யியலின் மதிப்பீட்டில் சேர்க்க முடியாது. இதனால், மெய்யியலின் மதிப்பானது  அதை கற்பவர்கள் அறியமுடியும் எந்த ஒரு உறுதியான அறிவுக்குழுவையும் சார்ந்து இருக்காது.

மெய்யியலின் மதிப்பை, உண்மையில், அதனுடைய உறுதியற்ற தன்மையிலேதான் பெரும்பாலும் கண்டடைய வேண்டும். மெய்யியலின் நிழலே படாத ஒருவர் பொது அறிவிலிருந்தும், மற்றும் அவர் வாழும் காலத்தின் அல்லது அவர் வாழும் நாட்டின் வாடிக்கையான நம்பிக்கைகளிலிருந்தும் பெறப்பட்ட முற்சாய்வுகளுள் அகப்பட்ட வாழ்க்கையையே நடத்துவார்; அவருடைய கவனமான சிந்தனைக்கு ஒத்துழைப்போ அல்லது ஒப்புதலோ தராத, அவர் மனதினுள் வளர்ந்திருக்கும் திடநம்பிக்கைகளில் சிக்கிக்கொண்ட வாழ்க்கையையே வாழ்வார். அத்தகைய ஒருவருக்கு உலகமே உறுதிசெய்யப்பட்டதாக, எல்லையுடையதாக, தெட்டத்தெளியதாக  மாற நேரிடும்; வழக்கமான காட்சிப்பொருட்கள் அவரிடம் எந்தக் கேள்விகளையும் எழுப்பாது; மற்றும் பழக்கமில்லாத சாத்தியக்கூறுகள் அவரால் ஏளனமாக நிராகரிக்கப்படும். இதற்கு மாறாக,  மெய்யியற்ச் செயல்பாட்டை நாம் தொடங்கிய உடன், மிகவும் பொதுவான அன்றாட நிகழ்வுகள் கூட, முற்றுப் பெறாத பதில்களையே கொடுக்கக்கூடிய சிக்கல்களுக்கு நம்மை இழுத்துச் செல்கின்றன. மெய்யியல், தான் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதில்களை உறுதிப்பாட்டோடு கொடுப்பதில்லை என்றாலும், நம் சிந்தனைகளை விரிவாக்குவதற்கும், வழக்கத்தின் அடக்குமுறையிலிருந்து நம்மை விடுவிப்பதற்கும் பல சாத்தியங்களை  நமக்கு அறிவுறுத்துகிறது. எனவே, பொருட்களின் தன்மை என்னவாக இருக்கிறது என்ற நமது உறுதியுணர்வை குறைக்கும் அதே வேளையில்,  பொருட்களின் தன்மை என்னவாக இருக்கலாம் என்ற நமது அறிவை மிகப்பெரிய அளவில் உயர்த்துகிறது; விடுதலை தரும் சந்தேகத்தின் நிலத்தினுள் பயணம் செய்திராதவர்களின் ஆணவமிக்க பிடிவாதத்தை மெய்யியல் அகற்றுகிறது; மற்றும் பழக்கப்பட்ட பொருட்களின் தன்மையை பழக்கப்படாத தோற்றத்தில் காண்பித்து நம் வியப்புணர்வை அது உயிர்ப்புடன் வைக்கிறது.

கணிக்க முடியாத சாத்தியங்களை காண்பிக்கும் அதன் பயன்பாட்டினை தவிர, மெய்யியலுக்கு மதிப்பளிக்கும் பண்பொன்று உண்டு – அனேகமாக அதுவே அதனுடைய தலைசிறந்த மதிப்பிற்கு காரணமாகும். அது, ஆழ்ந்து சிந்திக்கும் பொருட்களினுடைய மேன்மையின் மூலமாக வருவது, மற்றும், அத்தகைய ஆழ்ந்த சிந்தனையால் விளையும் குறுகிய மற்றும் தனிப்பட்ட இலக்குகளிலிருந்து கிடைக்கும் விடுதலையில் இருப்பது. இயல்புணர்ச்சிகளை மட்டுமே பூர்த்தி செய்ய நினைப்பவரின் வாழ்க்கை அவருடைய தனிப்பட்ட நலன்களின் வட்டத்தின் உள்ளேயே அடைபட்டுவிடுகிறது: அவரது குடும்பம் மற்றும் நண்பர்களை அந்த குறுகிய வட்டத்தினுள் அனேகமாக சேர்க்கலாம்; ஆனால், அப்படிப்பட்ட ஒருவர், இயல்புணர்ச்சி சார்ந்த ஆசைகளுக்கு ஆதரவாகவோ அல்லது தடங்கலாகவோ வருவதை தவிர, வெளி உலகத்தை கருத்தில் கொள்வதில்லை. அமைதியாகவும், சுதந்திரமாகவும் இருக்கும் மெய்யியற்த் தேடல் நிறைந்த வாழ்க்கையை ஒப்பிடுகையில், அத்தகைய ஒருவரின் வாழ்க்கை கலக்கத்தோடும், சிறைபட்டதாகவும் இருக்கும். இயல்புணர்ச்சியை அடிப்படையாக கொண்ட நம் தனிப்பட்ட நலன்களின் அந்தரங்க உலகமென்பது சிறிதானது; இந்த தனிப்பட்ட உலகம், மிகச் சிறந்த மற்றும் ஆற்றல் மிக்க உலகின் மத்தியில் இருப்பதால், விரைவிலோ அல்லது தாமதமாகவோ, அது இடிபாடுகளுள் இடப்படும். வெளி உலகம் முழுவதையும் சேர்க்கும் விதத்தில் நம் சொந்த ஆர்வத்தையும், அக்கறையையும்  விரிவாக்கவில்லை என்றால், எதிரிகளால் சூழப்பட்ட காவற்படையை போல, தப்பித்தல் சாத்தியமற்றது என்பதையும், சரணடைதலே உறுதியானது என்பதையும் தெரிந்து  முடங்கிக் கிடப்போம். அத்தகைய ஒரு வாழ்க்கையில் மன அமைதி என்பதே இருக்காது; அவ்வாழ்க்கை வேட்கையின் வலியுறுத்தலுக்கும், மனத்தின்மையின் பலவீனத்திற்கும் நடக்கும் நிரந்தரப் போராட்டமாக இருக்கும். ஏதோ ஒரு வழியில், நம் வாழ்க்கை சிறந்ததாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டுமென்றால், நாம் கண்டிப்பாக இந்த சிறையிலிருந்தும், மற்றும் இந்த போராட்டத்திலிருந்தும் தப்பிக்க வேண்டும்.

அவ்வாறு தப்பிக்க ஒரு வழி மெய்யியற்ச் சிந்தனையில் ஈடுபடுவதே. மெய்யியற்ச் சிந்தனை தன்னுடைய மிகப் பரந்த கணக்கெடுப்பில், பிரபஞ்சத்தை இரு விரோதமான முகாம்களாக – நண்பர்கள் மற்றும் பகைவர்கள் என்றோ, உதவுவது மற்றும் எதிர்ப்பது என்றோ, நல்லது மற்றும் கெட்டது என்றோ – பிரிக்காது; மாறாக, அது நடுநிலை தவறாத எண்ணத்திலிருந்து முழுமையை பார்க்கும். மெய்யியற்ச் சிந்தனை கலப்படமற்று இருக்கும்போது, மீதமுள்ள பிரபஞ்சமும் மனிதனை ஒத்த ஒன்றுதான் என்பதை நிரூபிக்க முற்படுவதில்லை.  அறிவை கைப்பற்றும் முயற்சி அனைத்தும் சுயத்தின் உருப்பெருக்குதலே (enlargement of the Self) ஆகும்; ஆனால் இந்த உருப்பெருக்குதல் என்பதை நேரடியாக நாடிச்  செல்லாத போதுதான் நிறைவாக கிடைக்கிறது. அறிவிற்கான நம் ஆர்வ வேட்கை தனித்து இயங்கும் போதுதான் இதை அடைய முடியும். அதாவது, நாம் அறிய நினைக்கும் பொருட்களின் இயல்பை முன்கூட்டியே விழையாமல், அப்பொருட்களில் கண்டடையும் இயல்புகளுக்கு ஏற்றவாறு சுயத்தை மாற்றி அமைத்தபடியே செயல்படும் போதுதான் நம் சுயம் விரிவடைந்து உருப்பெருகிறது. இந்த சுயத்தின் உருப்பெருக்குதலை அடையாமல் இருப்பது எப்போதென்றால், அதை அறியும் முயற்சியில் உலகத்தை இந்த சுயத்திற்கு மிகவும் ஒத்ததாகக் கருதி, அதற்கு புறம்பானவையாக தோன்றுவதை அறிவு என்று ஏற்காமல் இருக்கும் போது. இவ்வுலகத்தை சுயத்திற்கு ஒப்பான ஒன்றாக நிரூபிக்கும் ஆசையானது ஆணவத்தின் ஒரு உருவகை ஆகும்; மற்றும், ஆணவத்தின் மற்ற எல்லா உருவகைகளையும் போல, சுயம் அடைய முயலுகின்ற, மற்றும் அதற்கு நன்கு தெரிந்த வளர்ச்சிக்கு அது ஒரு தடங்கலாக இருக்கும். ஆணவம், வேறு இடங்களில் செயல்படுவது போல, மெய்யியற்ச் சிந்தனையிலும், அதன் சொந்த இலக்குகளுக்கு உலகத்தை ஒரு கருவியாகக் காண்கிறது; ஆகையால், அது சுயத்தை விட உலகத்தை குறைவான கணிப்புக்கு உட்படுத்துகிறது; மற்றும், சுயமானது தான் அடையும் நன்பொருட்களின் மேன்மைக்கு வரையறைகளை தானே நிறுவுகிறது. மெய்யியற்ச் சிந்தனையிலோ, இதற்கு மாறாக, சுயம்-அல்லாத (not-Self) ஒன்றிலிருந்து நாம் தொடங்குகிறோம்; மற்றும் அதில் கிடைக்கும் மேன்மையின் மூலமாக சுயத்தின் எல்லைகள் விரிவடைகிறது; பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மையின் மூலம், அதை சிந்திக்கும் மனமும் எல்லையற்ற தன்மையின் சில பாகங்களை அடைகிறது.

இதனால்தான் பிரபஞ்சத்தை மனிதனோடு இணைக்கும் மெய்யியற்க் கோட்பாடுகளால் நம் ஆன்மாவின் மேன்மை பேணப்படுவதில்லை. அறிவு என்பது சுயம் மற்றும் சுயம்-அல்லாதவையின் சங்கமத்தின் (union) ஒரு படிவமே; மற்ற எல்லா சங்கமத்தையும் போல,  இதுவும் சுயத்தின் ஆதிக்கத்தால் பாதிக்கப்படுகிறது; மற்றும், நாம் பிரபஞ்சத்தை கட்டாயப்படுத்தி நம்முள் காணும் பொருட்களோடு ஒப்பிட முற்படுவதினாலும் இச்சங்கமம் சேதமடைகிறது. ஒரு குறிப்பிட்ட பார்வைக்கு பரவலான மெய்யியற்ச் சார்பு ஒன்று உண்டு: அது, மனிதனே எல்லாவற்றிற்கும் அளவுகோல் என்றும், உண்மை என்பதே மனிதனால் உருவாக்கப்பட்டது என்றும் முன்வைக்கும் பார்வை; அது,  வெளியும், நேரமும் (space and time) மற்றும் உலகளாவியவை (universals) அனைத்தும் மனதின் இயல்புகளே என்று விளக்கும் பார்வை; மற்றும், மனதால் உருவாகாதவையெல்லாம் அறிய முடியாதவை மற்றும் நம் எண்ணுதலுக்குள் வராதவை என்று ஏற்கும் பார்வை. இப்பார்வை, இதுவரையிலான நம் வாதங்கள் சரி என்றால், உண்மை அல்ல; இது உண்மை அல்ல என்பதை தவிர, நம் சுயம் சிந்திக்க இப்பார்வை தடையிடுவதால், மெய்யியற்ச் சிந்தனைக்கு மதிப்பு தரும் அனைத்தையும் இப்பார்வை பறித்துச் செல்லும். மேலும், இப்பார்வை கருதும் அறிவென்பது, சுயத்திற்கு சுயம்-அல்லாதவையுடன் ஏற்படும் சங்கமத்தை அல்ல; மாறாக, இது நம் முற்சாய்வுகள், பழக்க வழக்கங்கள், மற்றும்  ஆசாபாசங்களையே அறிவு என்று அழைக்கிறது; அவ்வாறாகவே, ஒரு துளைக்க முடியாத திரையை நமக்கும், அப்பால் இருக்கும் உலகிற்கும் இடையில் இப்பார்வை வைக்கிறது. இப்படிப்பட்ட ஒரு அறிவாய்வுக் கோட்பாட்டில் விருப்பம் காட்டும் ஒருவர், தான் சொல்வது  சட்டமாகாதோ என்ற அச்சத்தால் தன் வீட்டை விட்டு என்றும் வெளியே வராதவராக இருப்பார். 

இதற்கு மாறாக, உண்மையான மெய்யியற்ச் சிந்தனை, சுயம்-அல்லாத எல்லாவற்றின் உருப்பெருக்குதலிலும், அதாவது சிந்தனைக்குரிய  பொருட்களின் விரிவாக்கத்திலும், மற்றும் அதன் மூலமாக சிந்திக்கும் சுயத்தின் உருப்பெருக்குதலிலும் தன் நிறைவை கண்டடைகிறது. நமக்கு சொந்தமான, தனிப்பட்ட நலன்களை அல்லது பழக்கவழக்கங்களை, அல்லது ஆசாபாசங்களைச் சார்ந்த  எதுவும், நாம் அறியும் பொருளை உருவேறுபடுத்தி காட்டுகிறது; இதனால், நம் அறிவுத்திறன் அடைய முனையும் சங்கமம் பாதிக்கப்படுகிறது.  இவ்வாறாக, சுயத்திற்கும், அறியும் பொருளுக்கும்  இடையில் ஒரு தடையை உண்டாக்கி, நம் சொந்த மற்றும் தனிப்பட்ட விஷயங்களே நம் அறிவுத்திறனுக்கு ஒரு சிறையாக மாறுகிறது. சுதந்திரமான அறிவுத்திறன் என்பது, கடவுள் பார்ப்பதை போல, இங்கே மற்றும் இப்போது என்ற கட்டுக்குள் அடங்காமல், எதிர்பார்ப்புகளும், அச்சங்களும் இல்லாமல், வாடிக்கையான நம்பிக்கைகள் மற்றும் சம்பிரதாயமான முற்சாய்வுகளின் வலைகளுக்குள் சிக்காமல், தெளிவமைதியுடன், நடுநிலை உணர்வுடன், தனித்த மற்றும் பிரத்தியேகமான அறிவு வேட்கையில் பார்க்கும். அது அடைய முற்படும் அறிவானது தனிப்பட்டதாக இல்லாமல், கலப்பற்ற சிந்தனையில் ஈடுபடும் மனிதனால் அடைய முடியும் அறிவாகும். ஆகையால், சுதந்திரமான அறிவுத்திறன், புலன்களாலான தனிப்பட்ட காட்சிகோணத்தைச் சார்ந்த அறிவு நுழையாத, மற்றும் சொந்த சரித்திரத்தின் தற்செயல்கள் நுழையாத அறிவையே அடைய முற்படும். அது நுண்மமான மற்றும் உலகளாவிய அறிவை மட்டுமே பெரிதாக மதிக்கும்.

மெய்யியற்ச் சிந்தனையின் சுதந்திரத்திற்கும், நடுநிலைக்கும் பழக்கப்பட்ட நம் மனது, நம் செயலின் மற்றும் உணர்ச்சியின் உலகத்திலும் அதே மாதிரியான சுதந்திரத்தையும், நடுநிலையையும் பேணிப் பாதுகாக்கும். அது, வற்புறுத்தல் ஏதும் இல்லாமல், தன் நோக்கங்களையும், விருப்பங்களையும் முழுமொத்தத்தின்  பகுதிகளாகவே (parts of the whole) பார்க்கும். மெய்யியற்ச் சிந்தனையில் நடுநிலை என்பது கலப்படமற்ற அறிவு வேட்கை ஆகும்; மனதின்  இதே நடுநிலைத் தன்மைதான் செயலில் நீதியாகவும், உணர்ச்சியில் அனைவருக்குமான அன்பாகவும் (universal love) – அதாவது, பயனளிப்பவருக்கும், பாராட்டுக்குரியவருக்கும் மட்டும் இல்லாமல் எல்லோர் மீதும் காட்ட முடிகிற அளவில்லா அன்பாகவும் – இருக்கிறது.  எனவே, மெய்யியற்ச் சிந்தனை நம் கருத்துகளின் பொருட்களை மட்டுமல்லாமல், நம் செயல்பாடுகளின் மற்றும் நம் பாசங்களின் பொருட்களையும் விரிவாக்குகிறது: அது நம்மை, தடித்த சுவரால் சூழப்பட்ட ஒரு நகரத்தின் குடிமக்களாக மட்டுமில்லாமல், இந்த முழுமொத்த பிரபஞ்சத்தின் குடிமக்களாக ஆகும்படி செய்கிறது. இந்த பிரபஞ்சத்தின் குடியுரிமையில்தான் மனிதனின் உண்மையான சுதந்திரம் இருக்கிறது; அதில்தான் நம் குறுகிய எதிர்பார்ப்புகளிலிருந்தும், மற்றும் நம்மை கட்டுப்படுத்தும் அச்சங்களிலிருந்தும் கிடைக்கும் விடுதலை இருக்கிறது.

முடிவாக, மெய்யியலின் மதிப்பீட்டை பற்றிய நம் உரையை சுருங்கத் தொகுப்பதென்றால்: மெய்யியல் ஆழ்ந்து படிக்கப்பட வேண்டிய ஒரு பாடத்துறையாகும்;  அதன் விதிப்படி எந்த உறுதியான பதில்களும் உண்மை என்று அறியமுடியாததால், அதைப் படிப்பது அதன் கேள்விகளின் உறுதியான பதில்களுக்காக அல்ல; மாறாக, அதன் கேள்விகளுக்காகவே அதைப் படிக்க வேண்டும்; இதற்குக் காரணம், இக்கேள்விகள் எது சாத்தியம் என்பதை பற்றிய நம் எண்ணத்தை  விரிவாக்குகிறது, நம் அறிவுசார் படைப்பாற்றலை வளப்படுத்துகிறது மற்றும் சிந்தனைக்கு எதிராக மனதை தடுக்கும் பிடிவாதமான உறுதிப்பாட்டை குறைக்கிறது. ஆனால், அனைத்திற்கும் மேலாக, இதை கற்க வேண்டிய காரணமாய் இருப்பது, மெய்யியல் சிந்திக்கும் பிரபஞ்சத்தின் மகத்துவத்தின் மூலமாக, நம் மனமும் மகத்துவத்தை அடைகிறது; இதனால், நம் ஆகச்சிறந்த நலனை (highest good) கட்டமைக்கும் பிரபஞ்சத்துடனான சங்கமத்திற்கும் நம் சுயம் தகுதியாகிறது.

மூலம்: Russell, Bertrand. “The Value of Philosophy.”, Chapter 15 in The Problems of Philosophy, Columbia: Arc Minor, 2008.

கட்டுரை பற்றிய சிறுகுறிப்பு

“மெய்யியலின் மதிப்பீடு” என்ற இக்கட்டுரை 20-ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற மெய்யியலாளரான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் எழுதிய “மெய்யியலின் சிக்கல்கள்” (“The Problems of Philosophy”) என்ற புத்தகத்தில் இறுதி அத்தியாயமாக இடம்பெற்றுள்ளது. 1912-ல் முதன்முதலாக வெளிவந்த இப்புத்தகத்தில் ரஸ்ஸல், மெய்யியலின், குறிப்பாக அறிதலியலின் (epistemological) சிக்கல்களை வாசகர்களுக்கு மிக எளிதாக அறிமுகப்படுத்த முயல்கிறார். இச்சிக்கல்களை அவர் தலைப்புச்சார்ந்தும், வரலாற்று பின்னணியோடும், மிகச் சுருக்கமாக அறிமுகம் செய்கிறார். பல பல்கலைகழகங்களில், மெய்யியல் மாணவர்களுக்கு அறிமுகப் பாடநூலாக இப்புத்தகம் பரிந்துரைக்கபடுகிறது. இப்புத்தகத்திலிருந்து “மெய்யியலின் மதிப்பீடு” என்ற மேலுள்ள கட்டுரை மெய்யியற் விசாரத்தின் நோக்கம் மற்றும் எல்லையை பற்றியது. மெய்யியலை முறையாக, கல்வி பாடமாக, கற்றிடாத மக்களுக்கு மெய்யியலின் முக்கியத்துவத்தை விளக்கும் அறிமுகக் கட்டுரையாக இருந்துவருகிறது.