துர்கனேவின் மூன்று காதல் கதைகள் (ஆஸ்யா, மூன்று காதல், வசந்தகால வெள்ளம்) புத்தகத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்து வாசிக்கத்தக்க இட வரிசையில் என் வீட்டு நூலகத்தில் வைத்திருக்கிறேன். ஆண்டில் பலமுறை அதை எடுத்து கொஞ்சங் கொஞ்சமாகவாவது பலமுறை வாசித்து விடுவேன்.பயண காலங்களில் வெளியூரில், சென்னையில் வாங்கிய பல பிரதிகளில் சில இருக்கின்றன.முதன் முதலாக 30 ஆண்டுகளுக்கு முன்னால் அழியாத கோலங்கள் பட இயக்குனர் எம்.ஆர். பாரதியின் சகோதரர் அண்ணா சாலி என்சிபிஹெச் –ல் பணியாற்றியபோது வாங்கினேன். என்னிடமிருந்த பிரதிகளில் சிலவற்றை யாரோ படித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கையிலிருப்பது திருநெல்வேலி பஸ்ஸ்டாண்டுக்குள் 2000 – ல் வாங்கிய புத்தகம்.
இவான் துர்கேனிவின் மூன்று காதல் கதைகளை ஒவ்வொரு முறை படிக்கும் போதும். முதன் முறையாகப் படிக்கும் அதே மன நிலை வாய்ப்பதை துர்கனேவின் மாயாஜாலம் என்று சொல்லலாம். மிகவும் போற்றத்தக்க பல எழுத்தாளர்களை ஒரே காலகட்டத்தில் கொண்டிருந்தது ரஷ்ய இலக்கியத்தின் பெருமைகளுள் ஒன்று.மண்ணின் மீதும் மனிதர் மீதும் அவர்கள் கொண்டிருந்த தனித்துவம் மிக்க பார்வைகள்தான் ரஷ்ய இலக்கியத்தின் கம்பீரம்.
இத் தொகுப்பில் மூன்று கதைகள் இருக்கின்றன. மூன்றுமே காதல் கதைகள். மூன்றிலும் மூன்று வித காதலர்கள் வருகிறார்கள். பார்க்கிறார்கள், சந்திக்கிறார்கள் ஆண்கள் மனதில் பெண்கள் புகுந்து அலைக்கழிக்கிறார்கள், அலைய வைக்கிறார்கள்.மூன்றும் மூன்று விதமான வயதுடையவர்களின் காதல். காதலுக்கு வயது பொருட்டல்ல. அது ஒரு சந்தோஷம், பரவசம், வாதை எத்தனை காலமானாலும் மீண்டும் மீண்டும் நினைக்க வைத்து காலத்தின் பின்னே நகர்ந்து அக் காதல் காலத்துக்குள் செல்ல வைக்கும் உயிர்ப்பான இயந்திரம். இக் கதைகள் நிகழும் காலகட்டத்திலிருந்தும், துர்கனேவின் வாழ்க்கையிலிருந்தும் இக் கதையின் நாயகன் துர்கனேவ் என்பதையும், தன் அனுபவத்தை பல வருடங்கள் கழித்து உயித்துடிப்புடன் அவர் எழுதியிருப்பதும், நம் வாழ்வின் ஏதாவது ஒரு காலகட்டத்தில் நாம் இது போன்ற ஒரு அனுபவத்தில் முகிழ்ந்திருக்கிறோம் என்பதும் இக் கதைகளை படிக்கும் போது உணர முடியும்.
இக்கதையின் முதல் கதை ”ஆஸ்யா”. என்.என் என்ற இளைஞன் ஆஸ்யா என்ற பெண்ணை ஒரு கோடைவாசஸ்தலத்தில் அவள் அண்ணனோடு சந்திக்கிறான். ரஷ்யர்கள் என்ற முறையில் அவர்கள் அறிமுகம் செய்து கொள்கிறார்கள். அவர்கள் காதலர்கள் என்று ஆரம்பத்தில் என்.என் நினைக்கிறார்.ஆனால் அந்தப் பெண்ணின் பார்வை அவர்கள் காதலர்கள் அல்ல என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது. அதன் பின் அவள் அந்த இளைஞனின் அப்பாவின் இன்னொரு மனைவிக்குப் பிறந்தவர், அவளை வளர்க்கும் பொறுப்பை அப்பாவிடம் ஏற்றுக் கொண்டவன் என்பது தெரிய காதல் பூவாய்ப் பூக்க ஆரம்பிக்கிறது என்.என் மனதில். ஆஸ்யா ஒரு இண்ட்ரோவர்ட். அமைதியும்., அழுத்தமுமானவள். அவளோடு அறிமுகமாகி, பேசிப் பழகி, அருகாமையில் புளகாங்கிதம் அடைந்து அவளிடம் தான் காதலிப்பதை மட்டும் சொல்லாமல் விட்டு விட என்.என்ஐ அவள் பிரிகிறாள். அவன் கடைசி வரையில் அவளிடம் காதலைச் சொல்லாததே சொல்லத் தைரியம் இல்லாததே என்பது தெரிய அதிர்ச்சி அடைகிறான்.தன் இயலாமையை எண்ணி எண்ணிக் குமைகிறான். காதலைச் சொல்லாமலேயே ஒரு காதல் கதை.
“முதல் காதல்” என்ற இரண்டாவது காதல்கதை 16வயதான விளாதிமீர் பெத்ரோவிச்சுக்கும், ஜீனா என்ற 21- வயதுப் பெண்ணுக்கும் நிகழ்வது. நீ என்னைக் காதலிக்கிறாய் என்று சொல்லிச் சொல்லியே அவனைப் பம்பரமாகச் சுற்ற வைக்கிறாள் ஜீனா. பக்கத்து வீட்டுப் பெண்ணான அவளைப் பார்க்காதே, பழகாதே, சுற்றாதே என்று அவன் வீட்டில் கண்டிக்கிறார்கள். ஜீனாவை தேவதையாய்க் காணும் சிலிர்ப்பு, அவள் அருகிலிருப்பதை, அவள் கண்கள் தன்னைப் பார்ப்பதை, தான் அவளோடு பேசுவதை நிஜத்தையே கனவாகக் காணும் அவன் மனநிலையை காலம் கலைத்துப் போடுகிறது. அவர்கள் பிரிகிறார்கள். எனினும் எப்போது வேண்டுமானாலும் எடுத்துப் பார்த்து லயிக்கும் பொக்கிஷமாக அந்தக் காதல் அவனுள் தங்குகிறது.
”வசந்தகால வெள்ளம்” இத் தொகுப்பில் மூன்றாவது காதல் கதை 22 வயது ஸானின்னுக்கும், அவனைவிட வயது குறைந்த ஜெம்மாவிற்கும் நிகழ்வது. பிராங்க் பர்ட் நகரில் சாதாரண வாடிக்கையாளனாக ஒரு மிட்டாய்க் கடைக்குச் செல்லும் அவன் செத்துக் கொண்டிருக்கும் ஜெம்மாவின் தம்பிக்கு முதலுதவி செய்து பிழைக்க வைத்து, ஜெம்மாவின் அன்பையும், அவள் அம்மாவின் அறிமுகத்தையும் பெறுகிறான்.அந்த வீட்டின் விருந்தாளியாகிறான். ஹெர்லிளியூபர் என்பவனுக்கும் ஜெம்மாவுக்கும் திருமணம் முடிவாகியிருக்கிறது. ஜெம்மாவிற்கு ஹெர்கிளியூபரைப் பிடிக்கவில்லை தன்னைப் பல விதங்களில் மகிழ்விக்கும் ஸானினை அவளுக்குப் பிடிக்கத் துவங்குகிறது.ஹெர்கிளியூபர் அவனை வெறுக்கத் துவங்குகிறான். ஒறைக்கு ஒற்றையாக ஒருவரை ஒருவர் சுட்டுக் கொள்ளும் போட்டிக்கு அழைத்து ஒருவரை ஒருவர் சுட்டுக்க் கொள்ள முடியாமல், வானில் சுட்டு சமாதானம் செய்து கொள்கிறார்கள்.ஒரு கட்டத்தில் ஹெர்லிளியூபரை ஜெம்மா நிராகரிக்கப் போவதை அறிந்த அவள் அம்மா, ஜெம்மா நீங்கள் சொன்னால் கேட்பாள். அவளிடம் பேசுங்கள், ஹெர்கிளியூபரை திருமணம் செய்து கொள்ளச் சொல்லுங்கள் என்கிறாள். ஜெம்மாவிற்க்கு புத்தி சொல்லப் போகும் ஸானின் அவள் தன் மீது காதல் கொண்டிருப்பதை உணர்கிறான். தானும் அவளைக் காதலிப்பதை உறுதிபடச் சொல்கிறான்.அவள் சந்தோஷமாக அவனை அம்மாவிடம் அழைத்துப் போகிறாள்.சாவையோ, காலராவையோ அழைத்துக் கொண்டு ஜெம்மா வந்திருந்தால் கூட, அவள் அம்மா வருத்தமடைந்திருக்கமாட்டாள் என்று இந்த நிகழ்வை துர்கனேவ் எழுதுகிறார்.
கணவனை இழந்த, தன் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் ஆள் மூலம் தன் எஞ்சிய வாழ்வைக் கழிக்க விரும்பும் அந்த விதவை அம்மா சானினைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆரம்பிக்கிறாள். அவனுக்குப் பண்ணையும், நிறைய பண்ணை அடிமைகளையும் கொண்டிருக்கும் அவன் ஒரு பெரும் செல்வந்தன் என்பதை அறிந்து சந்தோஷமாகிறாள்., ஜெம்மாவை திருமணம் செய்து கொள்ளவும், அவர்கள் கடையை விரிவாக்கவும் தன் பண்ணையை விற்று பணம் திரட்ட சானின் கிளம்புகிறான். தன் நண்பனின் மூலம் பெரும் பணக்காரியும், பண்ணைக் காரியுமான அவன் மனைவி மாரியா நிக்கலாயேவ்னாவை சந்தித்து, அவளிடம் தன் சொத்துக்களை விற்க ரஷ்யாவுக்கு வருகிறான். நிக்கலாயேவ்னா ஸானினை மடக்கி தன்னிடமிருந்து நகரவிடாமல் வைத்துக் கொள்கிறாள்.அவளிடம் மயங்கி, முயங்கிக் கிடக்கும் அவன் பிராங்பர்ட் திரும்பவே இல்லை.
முப்பது வருடங்களுக்குப் பிறகு மாறாத காதலுடன் அவன் தன் காதலை காதலியைத் தேடி பிராங்பர்ட் வருகிறான். நகரம் மாறியிருக்கிறது, அரும்பாடு பட்டு தேடி அவன் ஹெர்லிளியூபரை சந்திக்க, ஜெம்மா பெரும் செல்வந்தரை திருமணம் செய்து கொண்டு நியூயார்க் சென்று விட்டதை அறிகிறான். தான் தன் தவறை உணர்வதாகவும், தன் குற்றத்தை கல்லறை வரைக்கும் கொண்டு செல்ல விரும்பவில்லை என்று வருந்தியும் கடிதம் எழுதுகிறான்..ஜெம்மாவிடமிருந்து பதில் கடிதம் வருகிறது. உங்களை சந்தித்த பிரிந்த துக்கத்தை நான் மறக்கவில்லை என்றும், அவனை சந்தித்த்தில் நேர்ந்த ஒரு அதிர்ஷ்டம் தனக்குப் பிடிக்காத ஹெர்லிளியூபரை தான் மணம் செய்யாமல் தவிர்க்க அந்தக் காதல் உதவியது என்பதையும், அவனை சந்திக்க விரும்புவதாகவும் தன் மகளின் திருமண ஏற்பாட்டில் இருப்பதாகவும் சொல்கிறாள். தன்னைப் போல் உருவத் தோற்றமுள்ள தன் மகளின் புகைப் படத்தையும் அனுப்பியிருக்கிறாள். திருமண பரிசாக அவன் விலையுயர்ந்த முத்து மாலையில் கோர்த்த சிலுவையை , அறிமுகமில்லாத நண்பனிடமிருந்து என்று குறிப்பிட்டு அனுப்பி வைக்கிறான்.
பிராங்பர்ட்டிலிருந்து அவன் பீட்ஸ்பர்க் திரும்பினான்.அவன் சொத்துக்களை விற்று விட்டு, அவன் அமெரிக்கா போக அவன் ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகக் கேள்வி என்று அந்தக் கதை முடிகிறது.
காதலை ஒரு சந்தோஷமான துயரமாகக் கொண்டாடும் கதைகள் இவை என்று சொல்லலாம். இவை நிகழும் இடங்கள் இக் கதையுள் நிகழும் சீதோஷ்ணம். ஸ்டெப்பி புல்வெளிகள். மலைகள், ஆறுகள், உறையும் பனி, குளிர், வெப்பம், காற்று, வித விதமான மழை கதைகளில் குறிப்பிடப் படும் பல்வேறு இலக்கிய மேதைகள், ஓவியர்கள் பற்றிய குறிப்புகள், வாழ்வு முறை, உணவுப் பழக்கங்கள் இவற்றுடன் துர்கனேவையும் நாம் கொஞ்சம் அறிந்து கொண்டால் இக கதைகள் துர்கனேவால் மட்டுமே எழுதப் படக் கூடிய கதைகள் என்பதையும், உண்மை உறைந்திருப்பதனாலே இக் கதை வாழ்விற்கும், வாசிப்பிற்கும் இணக்கமாக இருப்பதை உணரலாம். காதலின் மகத்துவமும் அதுதான்.
– ஜெகநாத் நடராஜன்
நூல் : மூன்று காதல் கதைகள் – மொழிபெயர்ப்பு நாவல்
ஆசிரியர்: இவான் துர்கேனிவ்
தமிழில் : பூ. சோமசுந்தரம்
வெளியீடு: We Can Books
விலை : ₹400