முதல் கதை எதுவென ? குறித்தான கேள்வியோடுதான் உருவாக்கம் பெற்றது இக்கட்டுரை. நவீனத் தமிழ் இலக்கிய வெளியில் புனைவிலக்கியம் குறித்தான படைப்புக் கலை அதாவது தமிழ்ப் புனைவிலக்கியம் பொறுத்த வரை பிரதாப முதலியார் சரித்திரத்திலிருந்து தொடங்கினால் (1879-2020) நூற்று நாற்பத்தொன்று ஆண்டுகளைக் கடந்த நிலையில், இலக்கிய ஆய்வாளர்களால் எது முதல் கதை என்பதான கருத்தாக்கமும் விவாதமும் புகைச்சலோடு இருந்துள்ளதை யாவரும் மறுக்க முடியாது . ஏன்? இவ்வாறான விவாதம் வரவேண்டும். எந்த இரு இலக்கிய பனுவல்களும் முதல் இடத்தைப் பெறுவதற்கு தகுதிப்பாடுகள், மற்றும் அதன் இலக்கண வரையறைக்கு உட்பட்டு உருவாக்கப்படுகிறது. அதுவே அந்த இலக்கண அமைப்பை விட்டுத் தவறும் பட்சத்தில் அல்லது விலகும் பட்சத்தில் உண்மையைக் கண்டடைந்தவர்களின் ஆய்வுகள் மூலம் முதல் கதைக்கான புகைச்சலை ஏற்படுத்துவதோடு முன்னோடிக் கதைகளையும் கண்டடைந்து காட்டி நிற்க வைத்து விடுகிறது .
முதல் இடம் என்கும் போது அது பிற கதைகளை விடவும் தனக்கே உண்டான தனிச் சிறப்புடன் முதன்மையாகி விடுகிறது . மேலும் பிற புனைகதை இலக்கியத்திற்குத் தொடக்கமாகவும் மாறிவிடுகிறது. அது மட்டுமின்றி இலக்கிய வரலாற்றோடு பேசப்படுவதோடு, காலங்காலமாக தொன்று தொட்டு சொல்லப்படுவதாகவும் ஆகிவிடுகிறது. அந்த அளவில் முதல் கதை எது? புனைவிலக்கிய வெளியில்… என்பதைப் பற்றி பார்ப்போம்.
புனைவிலக்கியம் என்பது புனைந்து கூறுகின்ற கதைகளைக் கொண்ட இலக்கிய வடிவம். இது சிறுகதையாகவோ , புதினங்களாகவோ இருக்கும். மனித மனதில் ஒரு நிகழ்ச்சியோ சம்பவமோ கருக்கொண்டு உருவாக்கப்படும் படைப்பு. இப்புனைகதை (ficition) “கற்பனைக் கதை” (ப.755) என்று க்ரியா தற்காலத் தமிழ் அகராதி கூறுகிறது. கதை என்னும் வடிவத்தைக் கற்பனையுடன் கலந்தவை என்ற பதத்திற்குள் அடக்கினால் எது முதல் கதை என்ற கேள்வியும் வந்து நிற்க ஆரம்பித்து விடும் . நம் இந்திய மரபில் வாய் மொழியாக பல்வேறு காலங்கள் எழுதப் படிக்கத் தெரியாத மக்களிடம் ஏராளமான கதை பேசும் மரபு இருந்துள்ளது, மற்றும் அச்சு வடிவ ஊடகம் உருவாக்கத்தில் வந்தவையாக முதல் கதையை எடுத்துக்கொண்டால், அச்சுக்கலை வளர்ச்சியின் பின்புலத்தை நாடிச் செல்ல வேண்டியதிருக்கும் . புனைகதை உலகம் காலத்தால் உருவான கலை வடிவமாகும் . இது மேனாட்டவரின் வருகையாலும் இதழ்கள் பெருக்கம் பெற்றமையாலும் புனைகதை எழுத வேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் கூடியது. உரை நடை வளர்ச்சி புனைகதையை வளர்நிலைக்கு ஈட்டி சென்றது.
முதல் கதை எது? இந்திய இலக்கிய மொழிகளில் வங்க மொழியே முதல் புனைகதை இலக்கியத்தைப் படைத்தவையாக முடிசூட்டிக் கொண்டது. உரைநடை வழியாக இந்திய சமுதாயத்தைக் காட்டுவதற்காக உருவான தகவல் பெட்டகமாகக் கதை வடிவங்களும் பாடநூல் ஆக்கங்களும் உருவாக்கப்பட்டது. பங்கிம் சந்திரர் (1838-1894) எழுதிய துர்கேச நந்தினி (1865) இந்திய புனைகதை இலக்கியத்தின் முதல் புதினமாக வரையறுத்து வைத்துள்ளனர். இவர் பதினைந்து புதினங்களைப் படைத்துள்ளார். இவரின் முதல் புதினம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு ‘இண்டியன் ஃபீல்டு என்ற பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்த ‘ராஜ்மோகனின் மனைவி‘ என்பதாகும். ஆனால் இவை புத்தக வடிவமாக 1935ஆம் ஆண்டு தான் வெளிவந்தது. மேலும் வங்காளத்தில் உரைநடையுடனான கதைகள் பல பாடநூல்களாகப் புழக்கத்தில் இருந்துள்ளது. வில்லியம் காரி என்ற கிறித்துவ பாதிரியார் ஆங்கிலேயருக்கு இந்திய மொழி மற்றும் கலாச்சாரம் பற்றி பரிச்சயம் ஏற்படுத்த சில மொழி வல்லுநர்களை அழைத்து கட்டுரை, கதை உரையாடல் ஆகியவற்றை உரைநடையில் மொழிபெயர்த்திருக்கிறார். இதனை, “அவர் முயற்சியில் 1801ஆம் ஆண்டிலேயே ‘பிரதாப ஆதித்ய சரித்திரம்‘ என்பது வங்காளத்தில் தோன்றியது. இதுவே வங்காள மொழியின் ‘முதல் சரித்திர நாவல்‘ என்றும் கூடக் கூறியவர்கள் உண்டு” 1என்கிறார் அசோகமித்திரன். இதன் மூலம் துர்கேச நந்தினி உருவாக்கம் பெறுவதற்கு முன்பே இப்புதினம் உருவாக்கி இருக்கிறது
தமிழ் இலக்கியத்தில் முதல் புனைகதை படைப்பான மாயூரம் வேதநாயகம் பிள்ளை (1826-1889) எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்‘ (1879) (நூலுக்கு அவர் எழுதிய ஆங்கில முகவுரையில் 23 ஆகஸ்ட் 1879 என்று தேதியிடப்பட்டிருக்கிறது). விமர்சன ரீதியில் இப்புதினத்தை கீழே தள்ளலாம். கமில் ஸ்வலபில் (17.11.1927-17.01.2009) என்பவர் கமலாம்பாள் சரித்திரம் என்னும் புதினத்தையே தமிழின் முதல் புதினமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார். இதனை, “முதல் முதலாகத் தோன்றிய தமிழ் நாவல் வெளிவந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த நாவலின் ஆசிரியரான திரு.ராஜமய்யர் தான், உண்மையிலேயே தமிழில் நாவல் இலக்கியத்துக்கு வித்திட்டவர் ஆவார். பிரதாப முதலியார் சரித்திரம் என்ற பெயரில் 1879ல் வெளிவந்த சில அச்சாட்டுக் கதைகளின் தொகுப்பை, சரியான நாவல் என்று சேர்த்துக் கொள்ள முடியாது“2 என்று தமிழில் முதல் நாவல் என்ற தலைப்பில் சரஸ்வதியை எழுதிய கட்டுரையில் விவரிக்கிறார். நவீன தன்மையுடனான யதார்த்த வாழ்க்கையை அப்படியே படைத்துக் காட்டப்பட்டுள்ளது என்று நாம் கமலாம்பாள் சரித்திரத்தை முதல் தமிழ் புதினமாக ஏற்றுக் கொள்ளலாமென ஜெயமோகனும் வழிமொழிகிறார்.
மேலும், சிட்டி சிவபாத சுந்தரம் என்ற இரட்டையர் தூ.வி.சேஷையங்கார் எழுதிய ஆதியூர் அவதானி சரித்திரத்தை முதல் புதினமாக சில வரையறை வைத்துக் கூறுகின்றனர். இந்நூல் 1875 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. செய்யுள் நடையுடனான நவீனத்துடன் இப்புதினம் விளங்குகிறது. இதனை மறுபதிப்பாக ‘முதல் தமிழ் நாவல்‘ என்ற பெயரோடு 1994 ஆம் ஆண்டு இவர்களே வெளியிட்டுள்ளார்கள் . இப்புதினத்தை இதற்கு முன் முதல் நாவலாக கூறியவரும் உண்டு. மு. இராகவய்யங்காரின் பேரன் ஜெ. பார்த்தசாரதி என்பவர் இதனைப் பற்றி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இதில் சில குறிப்புகளைத் தருகிறார். சேஷையங்கார் பேராசிரியர், பொறியாளர் என்பவற்றோடு குணாகரம் என்ற காவியத்தையும் எழுதியுள்ளார் என்று தெரிவிக்கிறார். இந்நூல் தற்போது வரை கிடைக்கவில்லை. இதனில், “இதற்கு முன் யானியாற்றிய ‘குணாகரம்‘ எனுங்காவியம் என்று குறிப்பிட்டிருப்பதால் குணாகரம் என்னும் நூல் ஒன்றையும் அவர் இயற்றி இருப்பதாகத் தெரிகிறது அதைக் காவியம் என்று குறிப்பிடுவதோடு ‘முதிய தமிழும் புதிய கருத்தும்‘ கொண்டது எனவும் தெரிவிக்கின்றார் காவியம் என்று குறிப்பிடுவதால் அதுவும் கதை தழுவிய நூலாகவே இருக்க வேண்டும்“3 என்கிற போது ஆதியூர் அவதானி சரிதம் உருவாக்குவதற்கு முன்பே வந்துள்ளது. மேலும்,1775 ஆம் ஆண்டு ரவிகுல முத்துவடுகநாத துரைக்கு சிவராத்திரியில் தூங்காதிருக்க வித்துவான் நாட்டரசன் கோட்டை முத்துக் குட்டி ஐயர் சொன்ன கதையே ‘வசன சம்பிரதாயக் கதை‘ ஓலைச்சுவடியில் பிரதியாக இருந்து அது தொலைந்ததாகவும் பின்னர் இதை ஞாபகம் வைத்தவர் சொன்னதைக்கொண்டு தொகுத்து ‘வசன சம்பிரதாயக் கதை‘ என்ற பெயரில் 1895யில் புத்தக வடிவமாக வெளியிட்டுள்ளனர். புனைகதை உரை நடையில் எழுதப்படுவதாகக் கூறினால் வசன சம்பிரதாய கதையை எந்த இடத்தில் வைக்க வேண்டியதிருக்கும்.
இவை போன்ற பல்வேறு சர்ச்சைகள் காரணமாக என்னவோ முதல் புனைகதையான புதினத்தை ஞானபீட விருது பெற்ற அகிலன் ‘சிலப்பதிகாரம் முதல் தமிழ் நாவல்‘ என்று கதைக் கலை எனும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். புதினத்திற்கும் காப்பியத்திற்குமுள்ள ஒப்பிட்டு நோக்கத்தை வைத்து முதல் தமிழ்ப் புதினமாக சிலப்பதிகாரத்தை முதல் புதினம் என்கிறார் . இதனை, “ஒப்பு நோக்கக் கூடிய பொதுத் தன்மைகள் இரண்டிலும் நிறைந்திருக்கின்றனவே! இணைப்புக்கு கருவியாகிய தங்கச் சங்கிலியின் அமைப்பில் மட்டிலும் வேறுபாடு தெரிகிறது அன்றைக்குச் செய்யுள் தமிழில் ஆட்சி செய்தது. இன்றைக்கு உரைநடையின் ஆட்சி. காலம் மாறியதால் கருவி தான் மாறியதே தவிர கற்பனையில் மூலப்பொருளில், கட்டுக்கோப்பில் ,இலக்கண வரம்பில், உருவ அமைப்பில் என்னால் பெரிய அளவில் மாற்றம் காண முடியவில்லை“4 என்கிறார்.
மேலும் இசுலாமியப் படைப்பிலக்கியத்தின் முதல் புனைகதையாக 1885 ஆம் ஆண்டு சித்தி லெப்பை மரைக்காயர் என்ற முகம்மது காசீம் மரைக்காயரால் எழுதப்பட்டு வெளிவந்த அசன்பே சரித்திரம் என்னும் புதினம் விளங்குகிறது. ஆனால் இக்கதை வெளிவருவதற்கு முன்பே இசுலாமிய இலக்கியத்திற்கு மட்டுமல்ல தமிழ்ப் புதின இலக்கியத்திற்கு முதல் புனைகதையாக ஒன்று உள்ளது என்று ஜாகீர் ராஜா குறிப்பிடுகிறார். இக்கதை, “1885ல் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களால் ARWI எனப்படுகிறது. அரபுத் தமிழில் எழுதப்பட்ட தாமிரப்பட்டணம் தமிழின் முதல் நாவலாக இருக்க முடியும் என்று ஈழ எழுத்தாளர் மானா மக்கீன் தெரிவிக்கிறார். ஆனால் வரலாற்றில் இன்றளவும் அந்நாவலுக்குரிய இடமில்லை என்றே தெரிகிறது அரபுத் தமிழில் எழுதப் பட்டதால் அதற்குரிய முதல் இடம் மறுக்கப்படுகிறது“5 என்கிறார். ஆனால் இக்கதையின் கருவையோ கதைச் சுருக்கத்தையோ எவ்வாறு அமைந்துள்ளது என்று குறிப்பிடவில்லை. பிரதாப முதலியார் சரித்திரம் வருவதற்கு இருபத்தொரு ஆண்டுகளுக்கு முன்பே இந்நூல் வந்து விட்டது .
இதைப் போல முதல் சிறுகதையுமுள்ளது புதின இலக்கியத்திற்கு இவ்வாறான குழப்ப நிலை உள்ளது போல முதல் சிறு கதைகளுக்கான தன்மையை சரியான இலக்கணம் கொண்டு வரையறுத்து முதல் சிறுகதையாக ‘குளத்தங்கரை அரசமரத்தை‘ வழி மொழிந்துள்ளனர். புனைவிலக்கியத்தில் தமிழில் உரைநடை படைப்பிலக்கியத்தில் முதலில் தோன்றியது புதினம் தான் என்ற கருத்தாக்கம் உடையப்படுவதாக மாறுகிறது. 1915 ஆம் ஆண்டு ‘விவேக போதினி ‘இதழில் ஸீ .பாக்கியலெஷ்மி என்ற பெயர் வெளிவந்த‘ குளத்தங்கரை அரசமரம்‘ எனும் சிறுகதை முதல் சிறுகதையாக வழங்கப்படுகிறது. எழுதியவர் வ.வே.சு. ஐயர்.
முதல் சிறுகதை தோன்றி நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையில் தான் காலங்காலமாகச் சொல்லி வந்த முதல் சிறுகதை என்ற கருத்தாக்கம் முற்றிலும் உடைக்கப்பட்டதாக அமைந்தது. இதனை, “தாகூர் எழுதிய ‘காட்டேர் கதா ‘ என்ற வங்கக் கதையின் தழுவல். அக்கதையின் ஆங்கில பெயர்ப்பு 1914ல் கல்கத்தாவில் இருந்து வெளிவந்த மார்டன் ரெவ்யூ இதழில் ‘The story of the river stair’ என்ற தலைப்பில் வெளியானது ஐயரின் கதை 1915 இல் ‘விவேக போதினி ‘யில் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் வெளியானது தாகூரின் கதையில் ஆற்றங்கரைப் படிக்கட்டு கதை கூறுகிறது. அய்யரின் கதையில் குளத்தங்கரை அரசமரம் கதை சொல்கிறது” என்பதின் மூலம் முதல் சிறுகதை தழுவல் கதையா என்ற கேள்வி வெளிவர ஆரம்பித்தது. வ.வே.சு. ஐயர் காலத்தில் முன்பாக பாரதி, மாதவையர் ஆகியோர் இதழ்களில் பல சிறுகதைகளை எழுதியுள்ளனர் பாரதியை முன்னிலைப்படுத்தும் விதமாக முதல் சிறுகதையைத் தேடிவருபவரும் உண்டு .பாரதியின் ‘ரெயில்வே ஸ்தானம்‘ முதல் இசுலாமிய சிறுகதையாக வழங்கப்படுகிறது.
பாரதி எழுதிய காலத்தில் தான் 1913ஆம் ஆண்டு விவேக போதினி இதழில் அம்மணி அம்மாள் என்ற ஒரு பெண் எழுத்தாளர் ‘சங்கல்பமும் சம்பவமும்‘ என்கிற ஒருகதை. ‘இரண்டு சவுக்கு மரங்கள் தம்முள் பேசிக் கொள்வதாக உள்ளது காட்டிலுள்ள சவுக்கை மரம் காகிதமாகி பத்திரிகையாகி முடிவில் தன்னையே இழந்து அடுப்பில் சாம்பலாவதை இக்கதை சொல்கிறது. 1915க்கு முன் வந்த இக்கதை புதிய பார்வை என்று ஏற்றுக் கொள்ள மனமில்லை.
தமிழின் முதல் சிறுகதையாக அ .மாதவையர் எழுதிய பஞ்சாமிருதத்தின் கடைசி இதழில் வெளியான ‘கண்ணன் பெருந்தூது ‘வை எம். வேதசகாயகுமார் கூறுகிறார். இச்சிறுகதை மாதவையர் இறப்பிற்குப் பின் வெளிவந்ததாகும். இதனை, ‘முதல் தமிழ்ச் சிறுகதையாக குறிப்பிட வேண்டும் வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்‘ போலல்லாமல் இது தமிழ் வாழ்விலிருந்தே கிளர்ந்தெழுந்த வடிவமாக அமைகிறது. சாதி அமைப்பிலிருந்தான விடுதலை தாழ்ந்த சாதியினரை விட உயர்ந்த சாதியினருக்கே அத்தியாவசியமானது என்ற இக்கதை முன்வைக்கும் பார்வை மிகவும் பொருளுடையது. மாதவையாரை இனங்காட்டுவதும் கூட, ஆசிரியர் குறுக்கீடு பெருமளவின்றி உரையாடல் வடிவமாகத் திகழும் இக்கதையின் வடிவம் அபூர்வமானது. பேச்சு மொழியைக் கையாள்வதில் இதன் ஆசிரியருக்கு எவ்வித தயக்கமுமில்லை. பேச்சு மொழியை முழுவதுமாகக் கையாளும் முதல் தமிழ்ச் சிறுகதையும் கூட“7 என்கிறார்.
ஆர்.எஸ்.ஜேக்கப் என்பவர் ‘சரிகைத் தலைப்பாகை‘ என்ற சிறுகதையை முதல் சிறுகதையாகச் சொல்கிறார். இதை இவர் முன்னிலைப் படுத்தும் விதமாக ‘ தமிழில் முதல் சிறுகதை எது?’ என்ற ஒரு சிறுநூலையும் வெளியிட்டுள்ளார். இதனை, “1877ஜூலை ‘நற்போதகம்‘ இதழில் ‘சரிகைத் தலைப்பாகை‘ என்ற ஒரு சிறுகதையைப் படித்து சிலிர்த்தும் கழித்தும் நின்றேன் சிந்திக்கலானேன் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் வெளியிட்ட ‘பூக்கடை ‘என்ற இதழிலும் வெளியானது (1990களில்)”8 என்கிறார்.இக்கதை எழுதியவர் பெயர் இவ்விதழில் இடம்பெறவில்லை என்றும் ஆனால் இக்கதையை எழுதியவர் அருள்திரு.சாமுவேல் பவுல் ஐயர் என்றும் கூறுகிறார்.
மேலும்,”நமக்குத் தெரிந்த முதல் சிறுகதைத் தொகுப்பு ‘நன்னெறிக் கதா சங்கிரகம்‘ 1869 இல் வெளிவந்தது“9 என்கிறார் சிட்டி சிவபாத சுந்தரம் . இவர்களின் கூற்றுப் படி சிறுகதைத் தோற்றம் நாவலென்னும் புதினம் 1879யில் வெளிவந்த பிரதாப முதலியார் சரித்திரம் வருவதற்கு முன்பே முதல் சிறுகதைத் தொகுப்பில் வெளி வந்துள்ளதை அறிய முடிகிறது. இவரே, இக்கதைத் தொகுப்பில் நாற்பது சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு என்கிறார். இக்கதையை எழுதியவர் அ. சதாசிவம் பிள்ளை கதை எழுதியதற்கான காரணத்தைக் குறிப்பிடும் போது ,”தமிழிலே வெளிவந்த மிகப் பழைய கிறிஸ்தவ சஞ்சிகைகளில் ஒன்றான‘ உதயதாரகை‘ (1841) யாழ்ப் பாணத்திலிருந்து வெளிவந்தது , அதன் ஆசிரியராக 1857 முதல் 1881 வரை பதவியேற்றிருந்த அ.சதாசிவம் பிள்ளை (1820-1895) அந்தப் பத்திரிக்கையில் வாசகர்களுக்கு உகந்ததாக அடிக்கடி சிறுகதைகள் எழுதி வெளியிட்டார்“10 என்கிறார்.
புனைகதைகள் மக்கள் கையில் அதிக புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தில் இருக்கும் போது தான் உருவாகி இருக்கிறது. அச்சு பண்பாடு சமய நிலை கருத்துக்களைத் தெரிவிக்கும் பொருட்டு உருவானது, பின் ஓலைச்சுவடிகளைப் படியெடுத்து புத்தகங்களாக்கினர், இதழ்கள் உருவாக்கம் பெற்றது. இதழ்கள் பொழுது போக்கு தன்மைக்கான பொதுத்தளத்துக்குள் நுழைந்த போது கதைகள் தேவைப்பட்டது. வாய்மொழியான பழைய கதைகள் புளித்துப் போக புதிய புனைகதை உருவானது. அன்றைய கால நூல் விவரப் பட்டியல் நம் கைக்குக் கிடைக்கும் போது முதல் கதை எது என்னும் விமர்சனம் இன்னும் பல எழும். உதாரணமாக ஜான் மர்டாக் என்பவர், “1865 இல் அச்சிட்ட தமிழ் நூல்களை நான் பட்டியல் இட்டபோது 1765 நூல்களைப் பட்டியல் இட்டேன்“11 என்கிறார். இதில் புனைகதைகள் மற்றும் பிற 50 நூல்கள் இடம்பெற்று இருப்பதாகக் கூறுகிறார். இதைப் போல “1900-1910 காலங்களில் வெளிவந்த நூல்கள் குறித்த விவரங்களைக் கூறும் தமிழ் நூல் விவர அட்டவணை 3626 நூல்கள் பருவ விவரங்களைக் கொண்டுள்ளன “12 என்கிறார் வீ. அரசு .
குறிப்புகள்
- அசோகமித்திரன்., இந்திய முதல் நாவல்கள்., ப.8
- கமில்ஸ்வலபில்., தமிழில்., (தொ.ஆ. வ.விஜயபாஸ்கரன்.,சரஸ்வதி களஞ்சியம்)., ப.132
- பெருமாள் முருகன் ., நவீன இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள்., தி இந்து நாளிதழ் அக்டோபர் 19.2013., ப.8
- அகிலன்., கதைக் கலை., பக்.65-66
- ஜாகீர்ராஜா., உருது முஸ்லீம் ஆவணம்., தாமரை., ஜூலை 010.ப.26
- ரசா., இருப்பதிலிருந்து., செம்மலர்.பிப்ரவரிப.25
- எம். வேதசகாயகுமார்., கண்ணன் பெருந்தூது.,சொல்புதிது., ஜூலைசெப்டம்பர்.,ப.79
- ஆர்.எஸ்.ஜேக்கப் ., தமிழில் முதல் சிறுகதை எது ?., ப.10
- சிட்டிசிவபாத சுந்தரம் ., தமிழ்ச் சிறுகதைத் தோற்றமும் வளர்ச்சியும் .,ப.4
- மேலது., ப.18
- வீ. அரசு., உங்கள் நூலகம் ஜூன் ப.79
- மேலது., அக்டோபர்.,ப.39
- முனைவர் மா.ச .இளங்கோமணி,
உதவிப் பேராசிரியர் தூய சவேரியார் கல்லூரி ,
பாளையங்கோட்டை