ட்ரான்ஸ் – ஒரு விமர்சனப் பார்வை

உலகின் மிகவும் கனம் மிகுந்தது ஒரு சிறு குழந்தையின் சவப்பெட்டி. அந்தச் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யும் அந்த இறுதி நொடியில் தன்னுடைய குழந்தையின் சவத்தைத் தூக்கிக் கொண்டு ஒரு போதகரின் முன்பாகக் கொண்டு போய் தன்னுடைய மகளைக் காப்பாற்றுமாறு வேண்டுகிறான் ஒரு ஏழைக் குடியானவன். அந்தப் போதகர் செய்வதறியாது நிற்கிறார்.

காய்ச்சல் கண்டு கிடக்கும் குழந்தையை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாமல் ஜெபக் கூடத்தில் விற்கும் அபிஷேகிக்கப் பட்ட எண்ணெய்யை வாங்கிக்கொண்டு போய் அந்த நோய்வாய்ப்பட்ட குழந்தையின் தலையில் தேய்த்து ஜெபிக்கும் அந்தக் குடியானவன். அவனது வாய் பேச இயலாத மனைவி தன்னுடைய கணவன் காட்டும் கூத்துக்களைக் கண்டு பேச இயலாமல் நிற்கிறாள். கடைசியில் குழந்தை இறந்து போகிறது. கடவுள் அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முன்வரவில்லை.

இங்கே சில கேள்விகள் எழுகிறது. ஆன்மீகம் வேறு, மருத்துவம் வேறு, இரண்டும் ஒன்றோடொன்று சம்பந்தமில்லாத வேறுவேறு துறைகள். கடவுள் மட்டுமே நோய்களைக் குணப்படுத்துகிறார் என்றால் நோய்களைத் தருவது யார் ? நோய்களைத் தருவது சாத்தானென்றால் கடவுள் ஏன் முதலில் சாத்தானை ஒழிக்கக் கூடாது ? நோயும், நோயிலிருந்து விடுபடுதலும் மட்டுமே கடவுள் மற்றும் சாத்தானின் வேலைகள் என்றால் மருத்துவமும் அறிவியலும் என்ன ? இங்கேதான் வியாபாரம் துவங்குகிறது.

நோய் தீர்க்கும் மருந்துகளைத் தயாரித்து விற்கும் நோக்கில் நோய்களைக் கண்டுபிடித்து மனிதர்களை நோயாளியாக்கி மருந்து விற்கும் மருத்துவத் துறைக்கு ஆன்மீகக் கூடங்கள் கொஞ்சமும் சளைத்தவையல்ல என்பதைத்தான் டிரான்ஸ் படம் சொல்கிறது. எல்லா இடத்திலும் மனிதர்களும், மனிதர்களின் இழி மூளையும், புழுத்துப் போன வியாபார புத்தியும் முன்னிற்பதுதான் எல்லா காலத்திலும் இந்த சமூகம் எதிர்கொண்டு வருகிறது என்பதை நாம் உணர்ந்தாலும் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் நிஜம். ஏனென்றால் இந்த வியாபாரம் முழுக்க நடைபெறுவது நிழல் உலகத்தில் ஆகையால் இருளுக்குள் அதைத் தேடினால் நம்முடைய சவம் கூட மிஞ்சாது.

மனித மூளை என்பது மிகவும் சிக்கலான ஒரு மீன் பிடிக்கும் வலையைப் போன்றது. அது தெளிவாக இருக்கும் போது சிக்கலின்றி இருக்கும். குழப்பத்தில் இருக்கும் போது எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற சிக்கலில் தவிக்கும்.

ஒரு மனிதனிடம் ‘நீ எதை அதிகம் நாடுகிறாய்’ என்று கேட்டு அதற்கு அவன் ‘நான் அமைதியை நாடுகிறேன்’ என்று சொன்னால் அங்கேதான் ‘ஒலி’ என்றொரு கண்ணுக்குப் புலப்படாத பொருளின் ஆற்றலைக் கருத்தில் கொள்ள வேண்டும். அமைதி என்ற ஒரு சொல்லுக்கு மேற்பரப்பில் மிகுதியான ஒலியும், கீழ்ப் பரப்பில் ஒலியே இல்லாத தன்மையும் இருக்கிறது. அமைதிக்கு வெளியே உள்ள இந்த இரண்டு அடுக்குகளுமே மனித மூளைக்குக் கொஞ்சமும் தேவையற்றதும், ஆபத்தானதும் கூட.

ஒரு ஒலியைக் கேட்கும் மனிதனின் காதுகள் அந்த ஒலியை செவிப்பறை வழியாக மூளைக்குக் கடத்தி அந்த ஒலி என்பது என்ன ? அதன் அடர்த்தி என்ன ? அந்த ஒலி அவனுக்குள் ஏற்படுத்திய தாக்கம் என்ன ? அது சொற்களா ? வாக்கியமா ? இசையா ? இரைச்சலா ? அதற்கு அவன் என்ன மாதிரியாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பதை அந்த ஒலியே தீர்மானிக்கும் பட்சத்தில் அவனது வாழ்வையும், சாவையும், மகிழ்ச்சியையும், துக்கத்தையும் அந்த ஒலிதான் முடிவு செய்யும் என்பதை உங்களால் ஒத்துக் கொள்ள முடியுமா ?

ஒரு கதை சொல்லுவார்கள். அது மாவீரன் அலெக்ஸாண்டரோ அல்லது மாவீரன் நெப்போலியனோ என்று நினைவிலில்லை. இந்த இருவரில் யாரோ ஒருவரது கையில் ஒரு கோப்பை நிரம்ப மது கொடுக்கப் பட்டிருக்கும் போது அவரது பின்னணியில் அதிக சத்தத்தையுடைய ஒரு வெடி வெடிக்கப் பட்டதாம். அப்போது அவரது கையிலிருந்த கோப்பையிலுள்ள மது சிறிதும் அசையவில்லையாம். இங்கே ஒருவனது வீரத்தை அவனது ஒலியைத் தாங்கும் திறன் அல்லது அவனது மனத்திடத்தை ஒலியின் அளவீட்டை வைத்துக் குறித்ததாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

வாஷிங்டன் நகரில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அமைத்துள்ள ஒரு ஒலிபுகாத அறையை எடுத்துக் கொள்ளலாம். அந்த அறையினுள்ளே நீங்கள் இருப்பீர்களானால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எந்தவொரு ஒலியையும் நீங்கள் உணர முடியாது. உங்களது இதயத் துடிப்பையும், ரத்த ஓட்டத்தின் சப்தத்தையும், எலும்புகளின் உராய்வு ஒலியையும் நீங்கள் உணர முடியும். அதே சமயம் உங்களால் அதிக நேரம் அதனுள்ளே இருக்க முடியாது. உங்களுக்கு ரத்தக் கொதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாம். ரத்த நாளங்கள் வெடிக்கும் அபாயமும் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதீதமான அமைதி சில சமயங்களில் மனப் பிறழ்வை ஏற்படுத்தும் காரணியாகும்.

வினோதமான சப்தங்களை உணர்ந்து அந்த சப்தத்தை ஏற்படுத்திய காரணியை அறியாமல் ஒருவர் மனம் பிறழ்ந்து போகும் நிலை என்ற ஒன்று மனோதத்துவத்தில் இருக்கிறது. ‘ஹாலூசினேஷன்’ எனப்படும் ஒரு சூனியத்திலுள்ள ஒலி. அது சம்பந்தப் பட்டோரின் உளவியல் தொடர்புடையது. அதேபோல ‘டெல்யூஷன்’ என்றொரு விஷயம். ஒருவரது கண்களுக்கு வினோதமான உருவங்கள் அல்லது ஒளி தோன்றி அவர்களது மூளையைக் குழப்பி மனநோயாளியாக்கும். இப்படி ஒளி மற்றும் ஒலி தொடர்பான மனோதத்துவ புதிர்கள் நிறைய இருக்கின்றன.

ஒலியும், ஒளியும்தான் இறை என்பதற்கான எடுத்துக்காட்டுகளை ஆன்மீகம் சொல்கிறது. கோவில்களில் தீபாராதனை காட்டுவதும், மெழுகுவர்த்தி ஏற்றி வழிபடுவதும், மணியடிப்பதும், உச்சாடனங்களை அரங்கேற்றுவதும் மனித மனத்தை ஒரு நிலைப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கே ஆகும். அதேபோல ஒரு ஆலயத்தின் மணி ஒலிக்கப்படும்போது அந்தக் கோபுரங்களின் மீதமர்ந்திருக்கும் பறவைகள் சிறகடித்துப் பறப்பதற்குக் காரணம் அந்த ஒலி ஏற்படுத்துகின்ற அச்சமே காரணமாகும்.

இப்படியிருக்கையில் ஒலி மற்றும் ஒளியின் தத்துவங்களை வைத்து மக்களை ஏமாற்றி சம்பாதிக்கும் வேலைதான் மதங்கள் என்பதற்கு நாம் சில சான்றுகள் தர வேண்டியிருக்கிறது. ஒரு மெல்லிய இசை என்னும் ஒலி மனதுக்குள் ஊடுருவி ஒரு மனிதனின் மூளையைக் குளிர்வித்து மகிழ்ச்சிப்படுத்தும். இது ஒரு நிலை. அதுவே தடதடக்கும் ஒரு ஒலியைக் கொண்ட பாடல் ஒருவனது கவலையைக் குறைத்து துள்ள வைக்கும் தன்மையைக் கொண்டது. அதுவே அவனது மனம் துக்கத்தில் இருக்கும் போது ஒலிக்கும் துள்ளல் இசை அவனுக்கு இரைச்சலாக மாறி எரிச்சலை ஏற்படுத்தும் விதமாக அமைந்து போகும்.

ஒரு சாமியிடம் போய் நின்று கொண்டு வீணை வாசித்து அவரிடம் சாமியாடச் சொன்னால் எப்படி ஆடுவார் ? வயிறு முட்டக் குடித்திருக்கும் ஒருவனது பக்கத்தில் நின்றுகொண்டு வயலினை இசைப்பீர்களேயானால் அவன் உங்களை செருப்பால் இசைப்பான். சாமியாட மேளமும், குடிகாரன் ஒருவன் உற்சாகப்பட்டுத் துள்ள வேண்டுமானால் அதற்குத் தகுந்த ஒலியும் அவர்களுக்குத் தேவையாயிருக்கிறது. ஆனால் இசைக்கருவிகள் வேறுபடுகிறதல்லவா?

இசையும் ஒலிதான்… இரைச்சலும் ஒலிதான்… அவை ஏற்படுத்தும் அதிர்வுகள்தான் வேறு… ஒரு குழந்தை அழுகை என்னும் ஒலி மூலமே தன்னுடைய பசியை வெளிப்படுத்துகிறது. சுவாசம் விடுதலும் ஒலிதான்… உயிர் பிரியும் வலி கூட ஒலிதான்… இவ்வுலகில் எல்லாமே ஒலி என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஒரு அணுகுண்டு வெடிக்கும் சப்தம் என்பது மனிதர்களால் தாங்க முடியாத அளவிலான ஒலி என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மனிதர்கள் பேசும் சப்தம் அல்லது நடக்கும் சப்தங்களை எறும்பு போன்ற சிறிய உயிர்களால் உணர்ந்து கொள்ள முடியாது.

அதுபோலவே ஒளியும் மிகுந்த அதிர்வையும், அமைதியையும், ஆர்ப்பரிப்பையும் தரவல்லது. இந்த ஒளியும், ஒலியும் சேரும்போது நடக்கும் விந்தைகள்தான் படம். படத்திற்கு டிரான்ஸ் என்று பெயர் வைத்த விதத்திலேயே படமும் ஒரு மாதிரியான சமாதி நிலை அல்லது நினைவிழந்த நிலையிலான ஒரு தனிமனிதன் அல்லது ஒரு பெருங்கூட்டம் அல்லது ஒரு பேரொளி அல்லது ஒரு பேரிரைச்சல் குறித்தானது என்பது புரிந்து போகிறது.

விஜூ பிரசாத் தன்னுடைய சகோதரன் குஞ்சனோடு கன்னியாகுமரியிலுள்ள ஒரு வீட்டில் வசிக்கிறான். அவர்கள் இருவரும் சின்ன பிள்ளைகளாயிருக்கும் போது அந்த வீட்டில் அவனது தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறாள். அதிலிருந்து கிடைக்கும் வேலைகளையெல்லாம் செய்து தன்னுடைய தம்பியை வெளியே விடாமல் பாதுகாத்து அவனை வளர்க்கிறான். வெளியுலகத் தொடர்பு அல்லது ஒலி இல்லாமல் இருக்கும் குஞ்சன் ஒரு மன நோயாளியாகக் கருதப் பட்டு தனிமைப் படுத்தப் படுகிறான்.

பிறமனிதர்களுக்கு ஊக்கமளிக்கும் தன்னம்பிக்கை வார்த்தைகளைக் கூறி   அவர்களுக்குப் புத்துணர்வு ஊட்டும் வகுப்புகள் நடத்தி வருகிறான் விஜூ பிரசாத். ஒரு கூட்டத்தில் வயதானவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்க முற்படும்போது அதீத ஒலி காரணமாக ஒரு பெரியவர் மாரடைப்பு ஏற்பட்டு சுகவீனப் படுகிறார்.

தன்னுடைய அண்ணன் தன்னுடைய மனநலப் பிறழ்வை வெளிக்காட்டாமல் தன்னை ஒரு மனநோயாளியாகச் சித்தரிக்க முற்படுகிறான் என்று குமுறும் குஞ்சனால் தனக்கு உணவளித்துப் பாதுகாக்கும் அண்ணனை எதுவும் செய்ய முடியாமல் மின்விசிறியில் தூக்கு மாட்டிச் செத்துப் போகிறான். அந்த மின்விசிறியின் மீச்சிறு அசைவின் ஒலி தாளாமல் மும்பை வந்து கார்ப்பரேட்டின் கரங்களில் சிக்குகிறான். சாலமோன் டேவிஸ் மற்றும் ஐசக் தாமஸ் ஆகிய இரண்டு பேர்தான் விஜுவுக்கு முதலாளிகள். ஆவராச்சன் என்னும் மேலாளரின் பயிற்சியில் தேர்ச்சி பெற்று வேலைக்கு அமர்த்தப் படுகிறான் விஜூ. விஜூவின் பெயர் மாற்றப் படுகிறது. ஜோஷுவா கார்ல்ட்டன் என்னும் ஜீசஸ் கிரைஸ்ட்.

மதபோதகர் வேலை. அலைக்கழிக்கப்படும் ஜனங்களின் பாதுகாவலனாக, ஏசு கிறிஸ்துவின் நேரடி வேத விற்பன்னனாக, அதிசயங்களைச் செய்பவனாக முக்கியமாக மக்களின் காதுகளில் வேத வார்த்தைகள் என்னும் ஆறுதலை அதி சப்தமாக ஒலித்து, அவர்களின் சங்கடங்களிலிருந்து அவர்களை விடுவிக்கும் ஆபத்பாந்தவனாக உருவெடுக்கிறான். இவனது வளர்ச்சியின் மூலம் காணிக்கைகளில் கோடிகள் சம்பாதிக்கும் அவனது முதலாளிகள் ஒரு கட்டத்தில் ஜோஷுவாவுக்கு வில்லன்களாக உருவெடுக்கிறார்கள். தலைமையைப் பகைத்துக் கொண்டபின் விஜூ பிரசாத் என்னும் ஜோஷுவா என்னவானான் என்பதே மிச்சக் கதை.

ஃபகத் ஃபாசில் என்னும் நடிகனை வர்ணிக்கத் தேவையில்லை. ஞான் பிரகாஷன் என்னும் ஒரு ஒற்றைப் படம் போதும். நார்த் 24 காதம், இம்மானுவேல், கும்பளாங்கி நைட்ஸ் என்று வெரைட்டி கொடுத்த ஒரு உச்சக்கலைஞனுக்கு விஜூ பிரசாத் மற்றும் ஜோஷுவா கார்ல்டன் கதாபாத்திரங்கள் என்னவோ பூந்தி சாப்பிடுவதுபோல இருந்திருக்கிறது.

ஒரு மனநோயாளியை அவனது கண்களை வைத்தே கண்டுபிடித்துவிடலாம் என்னும் ஒரு பேருண்மையை ஃபகத்தின் கண்கள் நிரூபித்திருக்கிறது. விஜூ பிரசாத்தாக இருந்து ஜோஷுவா கார்டனாக மாறும் அந்த டிரான்ஸ்பார்மேஷனே ஒரு பெரிய சீன்தான் என்பதை உறுத்தாமல் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். ஏனெனில் மத வியாபாரம் என்பது அத்தனை பெரிய தளத்தையும், காசின் புழங்கலையும் விவரிக்க முடியாத அளவுக்கு விந்தைகளையும் கொண்டது என்பதை நமது சாமியார்களும், மதகுருமார்களும், பாதிரியார்களும் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

ஒரு சாமியார் காட்டையழித்து ஒரு மிகப்பெரிய தியான மடத்தைக் கட்டி கோடிக்கணக்கில் பணத்தையும், பக்தர்களையும் சம்பாதித்து வைத்திருக்கிறார். ஒரு சாமியார் ஒரு தனித் தீவையே வாங்கி குடியிருக்கிறார். ஒரு போதகர் ஒரு பெரிய பல்கலைக்கழகத்தைக் கட்டி கோடியில் புரள்கிறார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். அத்தனை பணமும் யாருடையது என்று பார்த்தால், எதைத் தின்றால் பித்தமும், பாவமும் தெளியும் என்று அலையும் பஞ்சப் பாவங்களுடையதும், ஊரை அடித்து உலையில் போட்டு நிம்மதி தேடி அலையும் கோடீஸ்வரர்களின் பணமும்தான்.

கவுதம் வாசுதேவ் மேனன், செம்பன் வினோத், திலீஷ் போத்தன், விநாயகன், சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி, நஸ்ரியா ஃபகத் என படத்தில் யார் யாரோ ஸ்கோர் செய்திருந்தாலும்கூட திரைக்கதையும், ஒலியும், ஒளியும், சப்தங்களும் மிகப்பிரம்மாண்டமான பங்களிப்பைச் செய்திருக்கிறது. இதுதான் கதை என்பதை முடிவு செய்துவிட்டு இசைக்கும், ஒலிக்கும், ஒளிக்கும் மாத்திரம் ஒரு பெரும் பட்ஜெட்டை ஒதுக்கியிருக்கிறார்கள். முப்பத்தைந்து கோடி பட்ஜெட் என்பது மலையாள சினிமாவில் ஒரு மிகப்பெரிய தொகை.

படத்தின் ஒவ்வொரு காட்சியையும் உன்னிப்பாகக் கவனித்தால் அதில் இருக்கும் இசை அல்லது ஒலிதான் அந்தந்த காட்சிகளின் ஜீவனாக இருப்பது புரியும். ஒரு மனிதன் தன்னுடைய நிஜ பிம்பத்தை உணர்ந்து கொள்ளாமல் தன்னுடைய எதிர்காலத்தை சிற்சில ஒலிகளின் நிமித்தம் நிர்ணயித்து ஒரு பெரிய ஒலிக்கு ஆயத்தப்பட்டு, அவனது கூக்குரல்களின் நிமித்தம் கடவுளின் ஒளியை தன்னை வேண்டி நிற்கும் மனிதர்களின் பால் பாய்த்து அவர்களுக்கு அற்புத சுகமளிக்கும் விந்தையை நிகழ்த்துவதாக எண்ணிக் கொண்டு இறுதியில் தன்னையே கடவுளாகப் பாவித்து, தானுடைந்து, தனக்குள்ளிருந்த ஒளியும், ஒலியும் மாயைகள் என்பதை உணர்ந்து தன்னைக் கடவுளாய் மாற்றிய சாத்தான்களை ஒரு விசுவாசியின் மூலம் கொன்றுவிட்டு தனக்கான ஒளியாய் வந்து போன ஒருத்தியைத் தேடிச் செல்வதோடு படம் நிறைவு பெறுகிறது.

மதங்களை மனிதன் படைத்துவிட்டு, தன்னுடைய குறுகிய மனப்பான்மையின் நிமித்தம் தான் படைத்த கடவுள்தான் தன்னைப் படைத்ததாகச் சொல்லி தன்னுடைய படைப்பின் முன்பாக மண்டியிட்டுத் தலைவணங்கியும், வணங்காதவரின் தலையைக் கொய்தும், கூச்சலிட்டுக்கொண்டே வாழ்ந்து முடிக்கிறான். இத்தனைக் காலமும் தக்கவைத்துக் கொண்டிருக்கிற கடவுளை இன்னமும் யார் காப்பாற்றுவார்களோ என்ற பயம் இந்த மனிதர்களின் சித்தத்தைக் கலங்க வைத்து இந்த அகால வெளியில் சப்தங்களையும், சலனங்களையும், ஒளியையும் உருவாக்குவதும் சாந்தப்படுத்துவதுமாக தங்களுடைய வாழ்வை வாழ்ந்து முடிக்கிறார்கள்.

கண்ணை மூடிக்கொண்டு ஏதோவொன்றை நம்பி அதன் பால் ஈர்க்கப்பட்டு ஏதோவொன்றைப் பெற்றும், இழந்தும் வாழும் மனித இனக்குழுவைப் போகிற போக்கில் செருப்பால் அடித்துவிட்டுச் செல்கிறது டிரான்ஸ். நன்மை தீமைகள் குறித்து இந்த மனிதர்கள் நிரம்ப அறிந்து வைத்திருந்தாலும் கூட “ஏழு வர்ணங்களைக் காணும் கண்களில் நிறக்குருடு இல்லாதிருத்தல் அவசியம்” என்பதை அழுத்தமாகச் சொல்லும் படைப்பு டிரான்ஸ்.


  •  பிரபு தர்மராஜ்

1 COMMENT

  1. தோழரே! தங்கள் வலைதளத்தில் டிரான்ஸ் விமர்சனம் உள் வாங்கப்பட்டு படம் பார்த்து இதனை நண்பர்களுடன் விவாத பொருளாக விளங்குகியது.. இன்று இங்கு கணலி இதழ் முலம் மீண்டும் வாசிப்பு! தொடருஙகள் நண்பரே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.