ஐ.டி. துறையைப் பற்றி சுவாரஸ்யமாக ஒரு நாவல் எழுதும்போது கட்டற்ற காமம், உற்சாகக் குடி, வாரயிறுதிக் கொண்டாட்டங்கள் போன்ற கற்பிதங்கள் இல்லாமல் எழுத முடியுமா?
இவற்றைத் துளிகூடத் தொடாமல் தொழில்நுட்பத் துறையின் உள் சிடுக்குகளையும், அங்கே நிலவும் நுண்ணரசியலையும், அத்துறை கொடுக்கின்ற அபரிமிதமான வாழ்க்கைச் சூழலுக்கும், பொருளாதார நிறைவுக்கும், தங்கள் நேரத்தையும், வாழ்க்கையையும் ஒப்புக்கொடுத்துவிட்டு உதிரிகளாய் அலைந்து கொண்டிருக்கும் மனிதர்களின் உளச்சிக்கல்களையும், மிகக் கண்ணியமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது கார்த்திக் பாலசுப்ரமணியன் எழுதிய “நட்சத்திரவாசிகள்” நாவல்.
ஒரு பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் மிக உயரிய பதவியில் இருக்கும் சத்திய நாராயணாவில் இருந்து, அங்கே ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணி செய்யும் பிச்சைமணி வரையான பலதரப்பட்ட மனிதர்களின் மனவோட்டங்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், அலுவலகத்தின் ஒருநாளில் அவர்கள் கடக்க வேண்டிய பதற்றங்களையும் மிக இயல்பான சொல் முறையில் விவரித்திருக்கிறார் கார்த்திக். இரவுப்பணி முடித்து அதிகாலை வீடு சென்று, அப்போதுதான் கண்ணயரப் போகும் ராமசுப்புவுக்கு மீண்டும் காலைப் பணிக்கு அவசரமாக அழைப்பு வர, என்னவோ ஏதோ என்ற பதற்றத்தோடு அலுவலக சிறப்புக் கூட்ட அறையின் முன் வந்து காவலுக்கு நிற்கிறார். தன் மேலாளருக்குப் பதில் தான் ஒரு இக்கட்டான விஷயத்தை சாதுர்யமாக எடுத்துரைக்க வேண்டுமே என்ற பதற்றத்துடன் அதே கூட்ட அறைக்குள் வந்து அமர்கிறான் மனிதவளத்துறையைச் சேர்ந்த ஸ்டீபன். தன் பதவி உயர்வுக்கான ஆணையை எதிர்பார்த்து அந்தக் கூட்ட அறைக்குள் நுழையும், வேணுவுக்கோ ஸ்டீபனிடம் எதிர்கொள்ளும் முதல் வார்த்தையிலேயே வேறுவிதமான பதற்றம் தொற்றிக்கொள்கிறது. இப்படி நாவல் முழுக்கவே அலுவலகம் சார்ந்தும், குடும்ப உறவுகள் சார்ந்தும், பலவிதமான பதற்றங்கள் வியாபித்தபடியே இருக்கின்றன. அது நாவலை வாசிக்கும் நமக்குள்ளும் அது தொற்றிக்கொண்டு பரபரவென பக்கங்களை வாசித்துச் செல்ல வைக்கின்றது.
தகவல் தொழில்நுட்பத் துறையின் அலுவல் நடைமுறைகள் குறித்து மிக இயல்பான காட்சிப்படிமங்கள் மிக விரிவாக எழுதப்பட்டிருந்தாலும், சில விஷயங்களை ஓரிரு வரிகளில் சொல்லிவிட்டு வாசகனின் சிந்தனைக்கு விட்டு நகரும் இடங்கள், அதிக நாடகத் தன்மை இல்லாமல், அதே நேரம் சொல்ல வேண்டியவற்றைக் குறிப்பால் உணர்த்தத் தவறவில்லை. அந்தத் தருணங்கள் தாம் இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகின்றன. உதாரணத்திற்கு, குழு உறுப்பினர்கள் ஒன்றாய் ஹோட்டலுக்கு விருந்துணவிற்குச் செல்லும் போது, அதில் யார் யார் சைவ உணவினர், அன்று மட்டும் சைவமா, எப்போதும் சைவமா என்று மேலாளர் இரகசியக் கணக்கெடுக்கிறார். அவ்வளவு பெரிய கூட்டத்தில் தானும் இன்னும் இருவரும் மட்டுமே சைவம் என்ற அளவில் இருக்கிறோமா என்று மனதிற்குள் விசனம் கொள்கிறார். இத்தோடு அந்தக் காட்சி முடிகிறது. அடுத்து வரும் அப்ரைசலில், நிறுவனத்தில் யாருக்கும் பதவி உயர்வோ, ஊதிய உயர்வோ கிடைக்காவிட்டாலும் எப்படியோ எதேச்சையாக அந்த இரு சைவர்களுக்கு மட்டும் தேவையானது கிடைத்துவிடுகிறது. இன்னொரு உதாரணம், மெய் நிகர் உதவியாளரான அலெக்ஸாவுடனான சஞ்சீவின் உரையாடல்கள், அவன் எழுப்பும் கேள்விகளும், அதற்கு அலெக்ஸாவின் பதில்களும் மிகச் சிறியவை. ஆனால் அது சஞ்சீவின் மொத்த வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டத் தவறவில்லை. பிறகு இன்னொன்று, இங்குள்ள பணியாளர்களுக்கு சிம்மசொப்பனாமாக விளங்கும் ஆன்சைட் அமெரிக்கப் பெண்மணி திடீரென பணியிலிருந்து விடுவிக்கப்படுதல் மற்றும் அதற்குச் சொல்லப்படும் காரணங்கள், இப்படி நாவலில் நிறைய இடங்களில் பெரிதாக விவரிக்கப்படாமல் விட்டுச் செல்லும் படிமங்கள் நாவலுக்கு அடர்த்தியைத் தருகின்றன.
ஆனால் நாவல் முன் வைக்கும் ஒரு ஆதாரக் கேள்வி ஒன்று இருக்கிறது, அது நாவலில் பதிலளிக்கப்படாமலே தான் இருக்கிறது. அலங்காரத் தோரணங்கள் தொடங்க, கவர்ச்சி வலை வீசி, பெருங்கனவு கொண்ட இந்தத் தலைமுறை இளைஞர்களைத் தன்பால் ஈர்க்கும் இந்த தகவல் தொழில்நுட்பத் துறை, தன்னுள் விழுபவர்களைத் தின்று செரித்து, சக்கையாய்த் துப்பும் பகாசுரன் மட்டும்தானா? கொஞ்சம் சுதாரித்துப் பயணிக்கும் எத்தனையோ பேருக்கு, தலைமுறைகளாய் நினைத்துப் பார்க்க முடியாத பொருளாதார நிறைவையும், சமூக அந்தஸ்தையும் இத்துறை கொடுத்துக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மைதானே! இந்தத் துறையின் புதையல்களை அளவாய் அள்ளிக்கொண்டு, குடும்பத்தையும், அலுவலகத்தையும் திறம்படச் சமாளிக்கும் மனிதர்களே இல்லையா? நிஜவாழ்வில் இத்துறை விற்பன்னர்களில் பெரும்பான்மையினர் அந்த வகையைச் சேர்ந்தவர்கள் தானே. அவர்களைப் பற்றியும் பேசியாக வேண்டும் தானே. கார்த்திக் இன்னொரு நாவலில் தகவல் தொழில் நுட்பத்துறையின் வெற்றிக் கதைகளையும் எழுதுவார் என்று நம்புவோம்.
அதே போல, பணியிலிருந்து விலகும் சமயம் குழந்தை கருவுற்றிருப்பது, பணியின் வெற்றியாளனுக்குப் பின்னால் கிராமத்துக் காதல் தோல்வி, தமிழ்வழியில் படித்த தாழ்வு மனப்பான்மை கொண்ட நாயகன் எதிர் சுதந்திர சிந்தனை கொண்ட நாயகி, அவளை ஒருதலையாய்க் காதலித்த பழைய காதலன் என்ற இந்த வழமையான சட்டகங்களை விடுத்துக்கூட இதே சுவாரஸ்யம் குறையாமல் இந்நாவலில் உள்ள கதைகளைக் கொண்டு போயிருக்க முடியும். அவை நாவலின் வாசிப்பனுபவத்திற்கு எந்தவிதத்திலும் தடையாக இருக்கவில்லை என்றாலும், வாசித்து முடித்தபிறகு யோசிக்கும்போது சிறு அலுப்பைத் தந்தது.
தான் பணி செய்யும் சூழலின் நேர்மைக்குக் குந்தகம் விளைவிக்காமல், அதே நேரம் அதன் உண்மையான இயல்புகளைச் சரியான அளவு புனைவோடு, சிறந்ததொரு படைப்பாக எழுதியிருக்கும் கார்த்திக் பாலசுப்ரமணியன் அவர்களுக்கும், வழக்கமான தங்களது தனித்தன்மையான நேர்த்தியோடு பதிப்பித்திருக்கும் காலச்சுவடு பதிப்பகத்திற்கும் வாழ்த்துகள். தகவல் தொழில்நுட்பத் துறையின் பெயர் சொல்லும் படைப்புகளில் ஒன்றாக “நட்சத்திரவாசிகள்” நிலைத்துநிற்கும்.
நூல்: நட்சத்திரவாசிகள் (நாவல்)
ஆசிரியர்: கார்த்திக் பாலசுப்ரமணியன்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள்: 262
விலை: ரூ. 290