நட்சத்திரன் செவ்விந்தியன் என்கிற குறிப்பிட்ட புனைபெயரைச் சூடிக்கொண்டதற்கான பின்புலம் என்ன?
என்னுடைய பத்து வயதில் நான் மிக்க காதலோடு படித்து ரசித்தவை ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ் முதலிய சித்திரக்கதைப் புத்தகங்களே. அப்புத்தகங்களில் செவ்விந்தியப் பாத்திரங்கள் இடம்பெற்றன. அதில் வந்த கவர்ச்சியால் செவ்விந்தியன் என்று பெயர் வைத்தேன். நட்சத்திரன் என்பது இரண்டு பெயர்கள் இடம் பெறவேண்டும், தனியே தமிழர் பெயர்கள் போல (அப்பாவின் பெயரின் முதலெழுத்து அல்லாது) சிங்களவரின் பெயர்கள் போல இரண்டு பெயர்கள் வரவேண்டும் என்கிற ஆர்வத்தில் வைத்த இன்னொரு கவர்ச்சிப் பெயர். இப்போதும் நட்சத்திரன் என்கிறதில் எனக்குத் திருப்திதான். ஆனால் செவ்விந்தியன் என்கிற பெயரில் எனக்குச் சிறிது அசௌகரியம் உண்டு. இதற்குக் காரணம், இப்போது செவ்விந்தியர்(Red Indians) என்கிற பதம் பிழையாக, அவ்வினத்தவர்களை இழிவாக இனவாதத்தோடு சித்தரிக்கப்படுகிறது என்பதற்காகக் கைவிடப்பட்டு விட்டது. பூர்வகுடி அமெரிக்கர் என்பதே ஏற்றுக்கொள்ளப்பட்ட நாகரீகமான பதம். ஆனால் இப்போது என் பெயரை மாற்ற முடியாத அளவுக்குக் காலதாமதமாகிவிட்டதால் அதனையே பயன்படுத்துகிறேன்.
உங்கள் வாழ்க்கைச் சூழல் பற்றியும் (முடிந்தால் மட்டுமே ) அதனூடாக வாசிப்பு,இலக்கிய வாசிப்பு போன்றவற்றிலிருந்து எழுதுவதை நோக்கி நகர்ந்து வந்த பின்புலம் பற்றியும் சொல்ல இயலுமா?
என்னுடைய ஐந்து வயதில் அம்மா இறந்து விட்டார். என்னுடைய ஏழு வயதில் அப்பா இறந்துவிட்டார். இறக்கும்போது அப்பா உதவி அரசாங்க அதிபராக(தாசில்தார்) இருந்தார். 71 வயதான என் தாத்தாவே என்னையும் என் அண்ணாவையும் தங்கையையும் வளர்க்கும் பொறுப்பை ஏற்று தன் மகள்களான சின்னம்மாக்களின்(சித்திகள்) உதவியோடு வளர்த்தார். எனக்கு மூன்று அற்புதமான சின்னம்மாக்கள். என் மூத்த சின்னம்மாவே என்னுடைய புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்திற்குக் காரணம். ஆங்கிலத்திலும் தமிழிலும் படிக்கக்கூடிய அவரே எனக்கும் அண்ணாவுக்கும் ஆரம்பத்தில் அம்புலி மாமா, ரத்ன பாலா முதலிய சிறார் இதழ்களை வாங்கித்தந்து புத்தகங்கள் படிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அவர் விவசாயம் சம்பந்தப்பட்ட ஓர் அரசாங்க உத்தியோகத்தராக இருந்தார். தனது சம்பளத்தில் எமக்குப் படிக்க புத்தகங்கள் வாங்கித் தந்தார். பெருந்துயரம் என்னவென்றால் என் அப்பா இறந்த அடுத்த வருடம் திருமணமாகாமலிருந்த என் முத்தச் சின்னம்மா என்னுடைய எட்டு வயதில் தற்கொலை செய்து கொண்டார். வெறும் நாலு வருடங்களில் என் தூண்களாக இருந்த அம்மா, அப்பா, மூத்த சின்னம்மா என மூவரை இழந்துவிட்டேன். எட்டு வயதில் அந்தத் துயரம் தெரியவில்லை எனக்கு. அந்த மூன்று சாவு வீடுகளும் அப்போது கொண்டாட்டமாகவே இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகே இந்தச் சாவுகளுக்காக நான் அழுதேன். இப்போது இதையும் கண்களில் கண்ணீரோடேயே சொல்கிறேன்.
முத்தச் சின்னம்மா வாங்கித்தந்த சிறுவர் இதழ்களை பிறகும் தொடர்ந்து தாத்தா வாங்கித் தந்தார். என்னுடைய 12 வயதில் எமது வடமராட்சிப் பிரதேசத்தில் சிறப்பான பாடசாலையான ஹாட்லிக் கல்லூரியில் படிக்க வைக்கும் தெரிவுப் பரீட்சையில் நான் முதலாவதாகத் தேறினேன். எனக்கு இப்போதும் மிகத்தெளிவாக ஞாபகமிருக்கிறது , தாத்தா முதல்நாள் பஸ்ஸில் ஹாட்லிக் கல்லூரி அனுமதிக்கு என்னைக் கூட்டிச் சென்றுவிட்டு வரும்போது நம்மூர் பஸ் நிலையத்திலுள்ள புத்தகக் கடையில் எனக்கு ரத்னபாலா வாங்கிக்கொடுக்கக் கேட்டபோது புத்தகக் கடை உரிமையாளர் “ரத்ன பாலா இல்லை, கோகுலம் இருக்கிறது. இது ரத்ன பாலாவை விடச் சிறப்பானது” என்று சொன்னார். நான் ரத்ன பாலாவே வேண்டும் என்று அடம்பிடித்தேன்..கடைக்காரரோ
“இல்லை உங்கள் பேரன் வளர்ந்து கொண்டிருக்கிறான். இப்போது இவனுக்குக் கோகுலம் தான் சரியாக இருக்கும். பிடிக்காவிட்டால் திரும்பிக் கொண்டு வாருங்கள். நான் பணத்தைத் திருப்பித் தருவேன்”
என்றார். கோகுலத்தை வீட்டுக்குச் சென்று வாசித்தேன். அது என் அப்போதைய வயதுக்கு ரத்ன பாலாவை விடச்சிறப்பாக இருந்தது. அந்தக் கடைக்காரர் எனக்குச் செய்த நன்மை அப்போதே புரிந்தது.
ஹாடலிக் கல்லூரிக்குச் செல்வதற்காக என் ஒரு மாமனார் அந்தக்கால ஆடம்பரப் பொருளான ஒரு புதிய ஏசியா சைக்கிள் வாங்கித் தந்தார். அந்தச் சைக்கிளில் நான் நம்மூரில் உள்ள எல்லா நூலகங்களுக்கும் நேரம் கிடைக்கிறபோது செல்வேன். கோகுலமும் அலுப்புத் தரக் குமுதம், ஆனந்தவிகடன், தினசரிப் பத்திரிகைகள் எல்லாம் படித்தேன். அந்த நூலகங்களில் நான் முதல் முதலாகப் படித்த இலக்கியச் சஞ்சிகை டொமினிக் ஜீவாவின் மல்லிகை.
நான் ஈழ யுத்தத்தின் குழந்தை. எங்கள் பள்ளிப் பருவகாலம் முழுவதும் ஈழ யுத்தங்கள் நடந்து கொண்டிருந்தது. யாழ் குடநாடு புலிகளின் கட்டுப்பாடு, பின் இந்தியச் சமாதானப் படைகளின் கட்டுப்பாடு மீண்டும் புலிகளின் கட்டுப்பாடு என்று ஆட்சிகள் மாறினாலும் சமாதானமில்லாத காலமாகவே இருந்தது. ஆகவே உள்ளூராட்சி சபைகளின் கீழ்வரும் நூலகங்கள் சிறப்பாக இயங்க முடியவில்லை.
என்னுடைய பதினாலாவது வயதில் மாலை நேரத் தனியார் ரியூட்டறி வகுப்பில் தமிழாசிரியராக இருந்தவர் செ. யோகராசா என்கிற எழுத்தாளரும் விமர்சகரும் ஆனவர். பின்னாட்களில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஆனவர். அவர் இலக்கியத்தில் எனக்கிருந்த ஆர்வத்தைக் கண்டு தனது தனிப்பட்ட நூலகத்தில் வைத்திருந்த ஈழ, தமிழக கிளாசிக்கல் புனைகதை நூல்களையும் கவிதைத் தொகுதிகளையும் இலக்கிய சஞ்சிகைகளைமும் மிகத் தாராளமாகப் படிக்கத் தந்தார். சிறு பத்திரிகைகளான அலை( யாழ்ப்பாணம்), படிகள்(பெங்களூர்), மீட்சி(தமிழகம்) முதலிய இதழ்களை அவரிடமிருந்து பெற்றே வாசித்தேன். அவ்வயதில் அவ்விதழ்களில் வரும் புனைவு சாரா(அல் புனைவு) எழுத்துக்களில் ஒரு 65 வீதம் தான் எனக்குப் புரிந்தாலும் அந்த மொழி தந்த பரபரப்புக்காகவும் பரவசத்துக்காகவும் படித்தேன்.
இதை விடச்சுவாரசியமானது நான் அவற்றைப் படித்த காலங்களும் இடமும். பாடசாலையில் விஞ்ஞானப் பாடத்தை அல்லது கணிதப் பாடத்தை ஆசியர் படிப்பித்துக் கொண்டிருக்கும் போது நான் பாடப்புத்தகத்துக்குள் மறைத்து வைத்து ஓர் இலக்கியப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பேன். ஒன்பதாவது வகுப்பில் ஒருநாள் என் விஞ்ஞான ஆசிரியை நான் வேறேதோ புத்தகத்தை மறைத்துப் படித்துக் கொண்டிருப்பதைக் கண்டு பிடித்துவிட்டார். கிட்ட வந்து புத்தகத்தை எடுத்தார். அது இலங்கைப் பேராசிரியர் வி.செல்வநாயகம் எழுதிய தமிழிலக்கிய வரலாறு. அவர் கோபப்படுவதற்குப் பதில் ஆச்சரியப்பட்டார். இந்த வயதில் இந்தப் புத்தகத்தைப் படிக்கிறாயா என்று என்னிடமே திருப்பித் தந்தார். நான் புத்தகத்தை வாங்கி பையினுள் வைத்து விட்டு ஒன்றுமே நடவாதது போல பிறகு அவரின் விஞ்ஞானப் பாடத்தில் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினேன்.
எங்களுக்கு எட்டாம் வகுப்பில் கணித ஆசிரியராக இருந்தவர் அர்ப்பணிப்போடு படிப்பித்தாலும் அப்பாவி. வகுப்பில் எத்தனை பேர் இருக்கிறார்கள் போன்ற விடயங்களைக் கருத்தில் எடுக்கமாட்டார். நான் அவரது வகுப்பு தொடங்கி அவர் கரும்பலகைப் பார்த்து எழுதத் தொடங்க ஓசைப்படாமல் வகுப்பை விட்டு வெளியேறி ஒரு பச்சோந்தியைப் போல அனைத்து வகுப்புகளையும் கடந்து பாடசாலை நூலகத்திற்குச் சென்று விடுவேன். என் சக மாணவர்கள் யாருமே காட்டிக் கொடுக்கமாட்டார்கள். நூலகத்தில் நான் செங்கை ஆழியானின் கங்கைக் கரையோரத்தை விட்ட இடத்திலிருந்து அடுத்த பாட ஆசிரியர் வகுப்புக்கு வருவதற்கு முதல்வரை படிப்பேன். இந்தச் சாகசத்தில் நான் ஒருபோதும் மாட்டுப்பட்டு தண்டிக்கப்படாதது எனக்கே ஆச்சரியம் தான்.
என் பதினாறு வயதில் இவன் என்கிற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதினேன். அதைத் திசை என்கிற வாரப்பத்திரிகைக்கு அனுப்பினேன். திசையின் இலக்கியப் பக்கங்களுக்குப் பொறுப்பாக இருந்தவர் அ.யேசுராசா. கவிஞரும், சிறுகதாசிரியரும் விமர்சகருமான அ. யேசுராசாதான் இருபதாம் நூற்றாண்டில் பிற்பாதியில் ஈழத்தில் வெளிவந்த தரமான இலக்கியச் சிற்றிதழான அலையின் ஆசிரியராகக் கடைசிவரை இருந்தவர். பிரசுரிப்பதற்குத் தேர்வானதாகப் பிரசுரிப்பதற்கு முதல் வாரத்திலேயே பாராட்டி அஞ்சலட்டை எழுதி அனுப்பினார். இன்றும் எனக்கு என் சின்னக்கால இலக்கிய ஆசான் அ.யேசுராசாவே. அதற்குக் காரணம் என் பதின்ம வயதுகளிலேயே இலக்கியத்தின், கலைகளின் அடிப்படை “இலக்கணங்களை” எனக்குக் கற்றுத் தந்தது அலை சிற்றிதழ்களே.
நான் எழுத்தாளரான பிறகு ஊரில் எனக்குக் கிடைத்த முதிய நண்பர் எழுத்தாளரான குப்பிளான். ஐ.சண்முகம். அவரும் அலை சிற்றிதழின் ஆசிரியராக இருந்தவர். அவர் எனக்கு இன்னும் தரமான சிறப்பான இலக்கியங்களைத் தன் தனிப்பட்ட நூலகத்திலிருந்து படிக்கத் தந்தார். அவற்றில் முக்கியமானவை மகத்தான ரஷ்ய மொழிபெயர்ப்பு நாவல்கள், ஜத்மாத்தவ்வின் அன்னை வயல், தாஸ்தேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள், கொரலென்கோவின் கண் தெரியாத இசைஞன் இப்படிப் பல நாவல்கள்.
பிறகு, இந்தியச் சமாதானப்படைகள் ஈழத்தை விட்டு வெளியேறி ஓர் ஆறு மாதங்கள் தமிழீழம் பாதிக் கனவில் மறையும் பறவைபோலவும் Virtual Reality போலவும் புலிகளிடமிருந்து. அந்தச் சமாதானம் நீடிக்கவில்லை. 1987 இலங்கை இந்தியச் சமாதானத்தைக் குழப்பிய போரிலிருந்து பிறகு வந்த அனைத்துப் போர்களின் சிற்பியான பிரபாகரனே இரண்டாம் ஈழப்போரையும் தொடங்கினார். நான் 17 வயதில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குத் தப்பியோடினேன்.
பதினாறாம் வயதில் முதற் சிறுகதை எழுதியதாகச் சொல்கிறீர்கள், அப்படியானதொரு நிலையில் முதல் புத்தகமாகக் கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளீர்கள். புனைவுகளில் தொடங்கிய பயணம் கவிதைகள் பக்கம் மாறியதன் இரகசியம் என்ன?
சிறுகதை, நாவல்களைப் படித்தது போலவே கவிதைகளையும் தீவிரமாகப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்த ஈழக்கவிதைகளின் தொகுப்பான “பதினொரு ஈழக்கவிஞர்கள்” மற்றும் “மரணத்துள் வாழ்வோம்” என்கிற போர்க்கால ஈழக்கவிதைகளின் தொகுப்பு ஆகியவற்றைப் படித்தேன். இவ்விரு தொகுப்புக்களிலும் இடம்பெற்றிருந்த கவிஞர்களின் கவிதைத் தொகுப்புக்களையும் தேடித் தேடிப் படித்தேன். யாழ்ப்பாணத்தில் அப்போது கிடைத்த தேவதேவனின் சிறு தொகுப்பையும் சுகுமாரனின் சிறுதொகுப்பையும் சோலைக்கிளியின் எட்டாவது நரகத்தையும் விலை கொடுத்து வாங்கிப் படித்தேன். என் அயலவரான பழனி என்கிற NLFT போராட்ட இயக்க அண்ணா எனக்கு மரணத்துள் வாழ்வோம் தொகுப்பையும் வ.ஜ.ச ஜெயபாலனின் சூரியனோடு பேசுதலையும் இரவலாகப் படிக்கத் தந்தார். (சில மாதங்களிலேயே என் வீட்டுப் பின்புறத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் பழனி அண்ணாவும் கெங்கன் அண்ணா என்கிற இன்னொரு NLFT உறுப்பினரும் உதைபந்தாட்டம் விளையாடிக் கொண்டிருக்கும் போது புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் “கைது செய்யப்பட்டு” கொண்டு செல்லப்படுவதைக் கண்டேன்..இருவரும் பின்னர் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்)
இதே காலத்தில் தமிழில் வந்த மொழிபெயர்ப்பு கவிதைகளையும் படித்தேன். பதினேழாம் வயதின் ஆரம்பத்தில் ஈழப்போரின் உச்சத்தில் தற்செயலாகக் கவிதை எழுதிப் பார்த்தேன்.
பதினேழு வயது என் வாழ்வில் மிக முக்கியமான காலம். ஒரு திரைக்கலைஞனாக திரைப்பட நெறியாளராக வரவேண்டும் என்கிற பதின்ம வயதுக் கனவு தீவிரமாக என்னுள் எரிந்து கொண்டிருந்த காலம். இத்தனைக்கும் தமிழ் வணிகப்படங்களை விடத் தரமான சினிமாக்களை நான் பார்த்தது மிகக் குறைவு. மின்சாரமே இல்லாத அக்காலப் போர்க்கால யாழில் திரையரங்குகளோ, தொலைக் காட்சிகளோ இல்லை. அலை சஞ்சிகையில் வந்த தரமான உலகத் திரைப்படங்களைப் பற்றிய விமர்சனக் கட்டுரைகளைப் படித்தது, அலை ஆசிரியர் யேசுராசா யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சர்வதேசத் திரைப்பட விழாக்களுக்குச் சென்று விட்டு வந்து சொன்ன கதைகளைக் கேட்டது, யாத்ரா சிறுபத்திரிகையில் வந்த சினிமாக் கட்டுரைகளைப் படித்தது, வெங்கட் சாமிநாதனின் சினிமா சம்பந்தமான சில கட்டுரைகளைப் படித்தது, முக்கியமாக செர்கீ ஐசென்ன்ஸ்டைனின் பொட்டம்கின் போர்க்கப்பல் சினிமா பற்றிய சில கட்டுரைகளைப் படித்தது முதலியவற்றால் வந்த ஒரு குருட்டுக் கனவு.
என்னுடைய கனவு நனவாக வேண்டுமென்றால் நான் போர்க்கால யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி கொழும்பு செல்லவேண்டும். ஆனால் அது முடியாத காரியம். ஏனெனில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியிலிருந்த மக்கள் குறிப்பாகப் போராடத் தகுதியான மாணவர்களும் இளைஞர்களும் வெளியேறுவதற்குப் புலிகள் தடை விதித்திருந்தார்கள். நானும் என் வயது சக மாணவனும் சட்டவிரோதமாகக் காடுகள் வழியாகப் புலிகளுக்குத் தெரியாமல் தப்பிப் போகும் ஓர் ஆபத்தான சாகசப் பயணத்தைத் தெரிவு செய்தோம். இந்தப் பயணம் தான் என்னைக் கவிஞனாக்கியது.
என்னுடைய சாகசப் பயணத்திற்கு அப்போது 81 வயதாக இருந்த தாத்தா கடும் எதிர்ப்பாக இருந்தார். எனக்குள் எப்படி ஒரு மிருகம் வந்ததோ தெரியாது. அவர் என்னை கொழும்பு செல்ல அனுமதிக்காவிட்டால் நான் இயக்கத்துக்குப் போகவேண்டிவரும் என்று மிரட்டினேன். அவர் பேச்சிழந்து மிரண்டுபோனார். என்னுடைய சின்னம்மாவே தாத்தாவுக்குத் தெரியாமல் செலவுக்குப் பணம் தந்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து மிதி வண்டிகளில் நானும் நண்பனும் எல்லைப்புற வன்னிக் காடுகளில் உள்ள நண்பனின் ஊரான மாங்குளத்துக்குப் போய் அங்குள்ள நண்பனின் உறவினர் வீட்டில் ஒரு மாதம் தங்கியிருந்தோம். அங்கிருந்தே எம் வெற்றிகரமான பயணத்தின் திட்டம் தீட்டப்பட்டது. அது என் படைப்பிலக்கியத்தின் பொற்காலம். நான் எப்படிக் கவிஞனானேன் என்பதைப்பற்றி எழுதிய ஒரு விரிவான கட்டுரை கடந்த வருடம் சொல்வனம் இதழில் பிரசுரமானது.
வன்னி மிதிவண்டிப் பயணக் குறிப்புக்கள் – சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
புலிகளிடம் மாட்டுப் படாமல் காடுகள் வழியாகத் தப்பிச் சென்று இலங்கை அரசாங்கத்தின் கட்டுப் பாட்டிலிருந்த வவுனியா புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு செல்லும் புகையிரதத்தில் கொழும்புக்குப் போனோம்..அந்தப் பயணத்தில் நான் கவிஞனாவேனோ என்கிற ஓர் அங்கலாய்ப்பு எனக்கு வந்தது. காரணம் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நம் வடமாகாணப் பிரதேசங்கள் மிக வறண்டவை. சங்ககால மொழியில் சொன்னால் பாலை. ஆனால் வவுனியாவிலிருந்து கொழும்பு செல்லும் ரயில் பயணம் முல்லை, குறிஞ்சி, மருதம் வழிப் பயணம். இந்த ரயில் பயணத்தைப் பற்றி பத்தாண்டுகளின் பின் ஒரு கவிதை எழுதினேன்.
இப்போது உங்கள் கேள்விக்குத் தெளிவான பதில் வருகிறது. யாழிலிருந்து விலகி கொழும்பு அடையும் வரையான ஒரு மாதத்திற்கு மேற்பட்ட காலத்திலேயே என் மகத்தான கவிதைகள் எல்லாம் பிறந்தன. அவற்றை அப்போதே எழுதவில்லை. அல்லது முழுமையாக எழுதவில்லை. ஆனால் கவிதை வாய் வழியானது. வாய் மொழி( Oral). அதனால் தான் எழுத்து வடிவம், வரி வடிவம் வருவதற்கு முதலே கவிதையும் பாடலும் உருவானது.
ஆனால் சிறுகதை நாவல் அப்படிப் பட்டதல்ல. அது வரி வடிவங்களில் தங்கியிருப்பது.
பதினேழு வயதில் நான் கொழும்பை அடைந்தபின் வாய் மொழியாக என்னுள் இருந்த கவிதைகளை வரி வடிவங்களாக எழுதினேன். அது அருவி பிரவகிப்பது போல மிக இலகுவாக இருந்தது. ஒரு கவிதை எழுத எனக்கு அதிக பட்சம் பத்து நிமிடங்கள் தான் தேவையாக இருந்தது. பெரும்பாலும் என் கவிதைகளை எனக்குத் திருத்தி செம்மையாக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை.
ஒரு கட்டுக் கவிதைகளோடுதான் நான் கொழும்பில் ஈழக் கவிஞர் சேரனைச் சந்தித்தேன். அதிலிருந்து ஒவ்வொரு கவிதைகளாகத் தான் ஆசிரியராக இருந்த சரிநிகர் மாத பத்திரிகையில் பிரசுரித்தார். பெரும்பாலான கவிதைகள் என் பதினெட்டு/பத்தொன்பது வயதுகளில் பிரசுரமானாலும் என் பெரும்பாலான கவிதைகள் வாய்மொழியாக உருவானவை என் பதினேழு வயது சாகசப் பயணத்தில்தான்.
அந்தக் கவிதைகளுக்குக் கிடைத்த வரவேற்பு என்னைச் சோம்பேறியாக்கியது.
இக்கால மொழியில் சொன்னால் கவிதை T20 கிரிக்கெட்டுக்கு ஒப்பானதென்றால் சிறுகதை ரெஸ்ட் மச்சுக்கு ஒப்பானது.
ஒரு சிறுகதையை வெறும் பத்து நிமிடத்தில் எழுதமுடியாது. ஒரு வாரமோ ஒரு மாதமோ தேவை. அது மட்டுமல்ல. கவிதையினதும் சிறுகதையினதும்( அதன் தொடர்ச்சியாகக் குறுநாவல் நாவலதும் அடிப்படைக் கூறுகள் (Elements) முற்றிலும் வேறுபட்டவை. சிறுகதை, நாவலின் அடிப்படையான மூலக்கூறுகளான கதைப்பின்னல், பாத்திரவாக்கம், முரண்/பிரச்சனை, theme, setting, point of view என்பவற்றில் ஒருவர் தேறவேண்டுமானால் வயதில் இருபதுகளின் இறுதிவரை காத்திருக்கவேண்டும். முக்கியமாகக் கதைப்பின்னல், பாத்திரவாக்கம், முரண் முதலிய மூலக்கூறுகளைச் சிறப்பாக விருத்தி செய்ய வாழ்க்கை அனுபவங்கள் தேவை.
கவிதையின் அடிப்படை மூலக்கூறுகள் கவிதை உருவம், காட்சிப்புலம், உருவகமான மொழி, உருக்கமான உணர்ச்சி செழிப்பான மொழி, எதுகை, மோனை, ஒலிப்பொறிமுறைகள், பெரும்பாலும் கதைப்பின்னலால் அல்லாது காட்சிப் புலங்களாலும் ஒலிப்பொறிமுறைகளாலும் வெளிப்படுத்தப்படும் பாடுபொருள் முதலியவையே. இதனால் ஒருவர் தன்னுடைய பதின்ம வயதுகளின் இறுதியிலோ இருபதுகளின் ஆரம்பத்திலோ சிறப்பான கவிதை எழுதமுடியும். இன்னுஞ் சொல்லப்போனால் மகத்தான கவிஞர்களின் மகத்தான கவிதைகள் எல்லாம் அவர்களின் முப்பது வயதுகளுக்குள் எழுதப்பட்டவைதான். (விதி விலக்குகள் எங்கும் எப்போதும் உண்டு) மகத்தான ரூசியப் பெருங்கவி புஷ்கின் 37 வயதில் மரித்தார். மகாகவி பாரதியார் 38 வயதில் மரித்தார். ஈழத்து நவீன மகாகவி( து. உருத்திரமூர்த்தி) 44 வயதில் மரித்தார். புஷ்கின் தன் இருபதுகளின் இறுதியிலேயே சிறுகதைகளும் நாவல்களும் எழுத ஆரம்பித்தார். பாரதியும் ஈழத்து மகாகவியும் சிறுகதைகளில் சோபிக்கவில்லை.
ஆனால் சிறுகதைகளையும் தாண்டி ஒருவர் நல்ல நாவல் எழுதுவது அவரின் முப்பதுகளின் இறுதியில் அல்லது நாற்பதுகளின் ஆரம்பத்தில்.
உங்களின் முதற் கவிதைத் தொகுப்பில் வாழும் ஊரின் வழியே அடிக்கடி நடைப்பயணம் போவதைச் சொல்லிக்கொண்டு வருகிறீர்கள் அதனூடாக இளம்பருவம், தனிமை,கழி விரக்கம்,யுத்தம் அதன் துயரம்,மரணங்கள் எல்லாம் வருகின்றன. இன்று நாட்டில் யுத்தம் முடிந்து நீண்டகாலமாகிவிட்டது என்கிற போது அதே ஊரில் அதே நடைப்பயணம் போகும் பொழுதுகளில் என்ன மாதிரியான மனநிலை வாய்க்கிறது?
நெடுங்காலத்தின் பின் மூன்று வருடங்களுக்கு முன் முன்பனிக்காலத்தில் என் பதினேழு வயதில் விட்டுச்சென்ற ஊருக்கு முதல்முறையாகத் திரும்பியபோது ஊர் எனக்குப் புதிராக இருந்தது.
ஊர் மாறவில்லை. நான் தான் மாறிவிட்டேன்.
எனக்கு எது ஊர்?
சிட்னியிலிருந்து சென்னைக்கு வந்து அங்குப் பத்து நாட்கள் நின்று பின் கொழும்புக்கு வந்தேன். கொழும்பில் இரு நாட்கள். பின் யாழ் நகரம். யாழ் நகரில் ஐந்தரை நாட்கள். ஒரு ஞாயிறு நண்பகல் வல்லைப் பாலத்தைக் கடந்து என் ஊரின் எல்லை சிறுநகரான நெல்லியடியில் வந்திறங்கினேன்.
என் வீட்டில் யாருமில்லை. சொந்த ஊரிலேயே நான் ஹோட்டலில் றூம் போட்டுத்தான் தங்கினேன். கடந்த மூன்றாண்டுகளாக என் சொந்த ஊரே மீள மீள வரும் என்னுடைய Favourite Holiday destination ஆக இருக்கிறது.
என் பால்ய கால நண்பனுடன் உணவருந்தியபின் நான் ஊரை அளக்கத் தனித்து நடந்தேன்.
நெல்லியடி பெற்றோல் நிலையத்திலிருந்து தெற்காகச் செல்வது விக்னேஸ்வரா வீதி. ஊரைவிட்டு ஓடியபின் இத்தனை ஆண்டுகளாக அது நேராகச் செல்லும் வீதி என்பதே என் மனப்படத்திலிருந்தது. ஆனால் அது ஒவ்வொரு நூறு மீற்றர்களுக்கும் வளைந்து நெளிந்து சென்றது. இது என் முதற் புதிர். இரண்டாவது புதிர் என்னூர் மிகப்பெரிதானது என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் வெறும் 20 நிமிடங்களில் விக்னேஸ்வராக் கல்லூரியை நான் நடந்து அடைந்து விட்டேன்.
உண்மையில் என் ஊரில் நடந்து செல்வது ஒரு மாந்திரீக யதார்த்தவாத நாவலைப் படிப்பது போலிருந்தது. சொந்த ஊரிலேயே வழி தொலைவது நம் தலைமுறையினருக்கு அனாயாசமாக நிகழ்வது. நம் தவத்துக்குக் கிடைக்கும் வரம் அல்ல அது. பாவம்.
பிறகு வெறும் ஐந்து நிமிட நடையில் பதினேழு வயது வரை நான் ஊரில் பிறந்து வளர்ந்த என் வீட்டைக் கண்டுபிடித்தேன். தமிழில் கண்டுபிடித்தல் என்பதற்குப் பல அர்த்தங்கள். இதனை நான் ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் இவ்விடத்தில் நான் Discover அல்லது Invent என்ற வினைச்சொல்லையா பயன்படுத்தவேண்டும் என்ற குழப்பம் எனக்கு ஏற்பட்டிருக்கும்.
என் வீடே ஒரு பேய் வீடு போலிருந்தது. அதன் படலையைத் தட்டவோ திறக்கவோ எனக்கு அச்சமாயிருந்தது. பயத்தில் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துப் புகைத்துக்கொண்டு முன்னொரு காலத்தில் எங்கள் சுப்பர் மார்க்கெட்டாக இருந்த சம்பந்தர் கடைவரை நடந்தேன்.
சம்பந்தர் கடையடி ஒரு Ghost Town போலிருந்தது. ஓர் அரைப்பாலைவன Dirt Road சந்தி. எனக்கு அங்கு யாரையும் தெரியவில்லை. யாரும் என்னை இனங்காணவில்லை. இன்னொரு சிகரெட்டைப் பற்றிப் புகைத்தேன்.
ஊர் மாறிவிட்டது. நான்தான் மாறவில்லை.
சிறுகதை எழுதுவதைப் பற்றி உங்கள் கருத்துகள் எனக்கு ஆர்வமூட்டுகின்றன. அவ்வழியே இக்கேள்வியைத் தொகுத்துக் கொள்கிறேன் முகாமுகம் தொகுப்பில் தொகுக்கப்பட்ட சிறுகதைகளில் வடிவ நேர்த்தியிலும் அவற்றின் விறுவிறுப்பான போக்குகளிலும் வாசிப்பவர்களுக்கு ஒருவிதமான சுவாரஸ்யமான விடயத்தை அளித்துவிடுகிறது, அதற்கான காரணம் தொகுப்பிலுள்ள கதைகளின் மையங்கள் இப்படியான மையங்களை எப்படி உங்களை வந்து சேர்க்கின்றன அப்படி வந்து சேர்ந்தாலும் சிறுகதைகளில் நீங்கள் செய்திருக்கும் நுட்பமான போக்குகளை எப்படித் தொடர்ந்து உருவாக்குகிறீர்கள்? உதாரணமாக நீங்கள் அமைப்பில் இல்லாதவர்கள் என்கிறீர்கள் ஆனால் அமைப்பு பற்றி எழுதப்பட்ட எவ்வளவு எழுத்துகளில் உங்களுடையது இன்னும் அமைப்பை நெருக்கமாகவே என் போன்றோர்களைப் பார்க்க வைக்கிறது அதனால் இக்கேள்வியை உங்களிடம் முன் வைக்கிறேன்?
இதற்கான விடை முகாமுகம் தொகுப்பின் முன்னுரையில் இருக்கிறது. அப்பகுதிகள் பின்வருபவை.

“ஈழப்போரின் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். போர் என் தலைமுறையின் இளமையைக் காவு கொண்டது. விளையாட்டு வியூகங்களை விடப் போர் வியூகங்களையே எம் பள்ளிக்காலத்தில் கேட்டு வளர்ந்தோம். எங்களுக்குத் துடுப்பு மட்டையையை விடக் கால்பந்தாட்டப் பந்தை விட ஆடுகள மைதானங்களை விட ஏ.கே 47 துப்பாக்கி, கிரனேட், போர்க்களங்கள் பற்றியே அதிகம் தெரியும். விளையாட்டு வீரர்களை விட ஈழப்போராளிகளைப் பற்றியே அதிகம் தெரியும்.
ஈழ யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் நான் படித்துக்கொண்டிருந்த புத்தகம் நெப்போலியன் காலத்து யுத்தங்களைப்பற்றி லியோ ரோல்ஸ்ரோய் எழுதிய போரும் சமாதானமும் என்ற நாவல். அது என்னில் பெரிய உத்வேகமாகப் படிந்துவிட்டது. இக்கணம் இந்த முன்னுரையை எழுதிக்கொண்டிருக்கிறபோது நான் மேலே கேட்ட கேள்விக்கும் விடை கிடைக்கிறது. ரோல்ஸ்ரோய் நெப்போலிய யுத்தங்களை தன்நூலுக்குப் பாடுபொருளாக்கியது போல நான் என் சிறுகதைகளுக்கு ஈழ யுத்தத்தைப் பாடுபொருளாக்கியிருக்கிறேன்.ரோல்ஸ்ராயின் மாதிரியை நான் பின்பற்றத் தொடங்கியபின் என் பாதை இலகுவானது. கதைகளுக்குக் குறைவிருக்கவில்லை. மழைபோலப் பொழியத்தொடங்கியது. எழுதினேன்.”
எனக்கு கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களில் ஈடுபாடு இல்லாமல் போய்விட்ட பிறகு என் ஈடுபாடுகள் அரசியலிலும் சமூக விஞ்ஞானங்களிலும் இலக்கியத்திலும் இருந்தது. எனக்கு அரசியல் என்றால் உக்கிரமாக அப்போது நடந்து கொண்டிருந்த ஈழப்போர். அதன் மையமாக இருந்தவர் பிரபாகரன்., தன் பாசிச ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தைச் சிதைப்பதற்காக இந்தியச் சமாதானப் படைகளுக்கெதிராகத் தொடங்கிய யுத்தத்திலிருந்து அதற்குப் பிற்பட்ட எல்லா யுத்தங்களினதும் சிற்பி பிரபாகரனே. என் இளமையை மட்டுமல்ல எம் தலைமுறையினரதும் இளமையைக் காவு கொண்டவர் அவரே.
என் 25வது வயதில் காலங்கடந்து சிட்னிப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் கலைமாணிப் பட்டம் படிக்க அனுமதி கிடைத்தது. அரசியல் ஒரு பாடம். தென் அரைக்கோளத்திலேயே சமூக விஞ்ஞானங்களுக்கான மிகப்பெரிய பல்கலைக்கழக (ஒன்பது மாடி) நூலகம் அங்குதான் இருக்கிறது. Fisher Library அதன் பெயர். 1988 வரையான ஈழப்போராட்ட அரசியலையும் புலிகளின் அரசியலையும் தீவிரமாக விமர்சித்த Broken Palmyrah மூல ஆங்கிலப்பிரதி, நாராயண் சுவாமி எழுதிய Tigers of Lanka : From Boys to Guerrillas முதலிய நூல்களை அங்கு இரவல் பெற்றே வாசித்தேன். எங்கள் காலத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்தில் புகழ் பெற்றிருந்த யாசர் அரபாத்தின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம், மற்றும் பாசிஸ்டுகளாக பெயர்பெற்ற ஹிற்லர், ஸ்ராலின் ஆகியோரின் சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின் வந்த பல வாழ்க்கை வரலாற்று நூல்கள் என்பவற்றைப் படிக்க முடிந்தது. ஒரு புத்தகத்தைப் படித்தால் அது நூறு புத்தகங்களுக்கு உங்களை அழைத்துச் செல்லும் யாசர் அரபாத் பாசிஸ்ட் அல்லர். பின்வந்த பலஸ்தீன விடுதலை இயக்கங்களான ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்றனவும் பாசிச இயக்கங்கள் அல்ல.. இத்தகைய நூல்களைப் படித்து பிரபாகரனின் போராட்டத்தை மற்றவர்களோடு ஒப்பிட்டபோது பிரபாகரன் பற்றிய தெளிவான சித்திரம் வந்தது. பிரபாகரன் ஓர் “அக்மார்க்” பாசிஸ்ட்.
பல்கலைக்கழகத்தில் நான் விரிவுரைகளுக்கும் நூலகத்துக்குமே போய் வந்தேன். பரீட்சைகள் எழுதவில்லை. Assignments எதுவும் எழுதிக் கொடுக்கவில்லை. ஆகவே சரியான காரணம் சொல்லாவிட்டால் இனித்தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் படிக்க முடியாது என்று என்னைக் கலைத்துவிட்டார்கள். நானும் நூறு விரிவுரைகளைக்குப் போனேன், இருநூறு புத்தகங்கள் படித்தேன். ஓர் ஆங்கிலப் புத்தகத்தை முழுமையாகப் படித்துக் கிரகிக்கும் அளவுக்கு என் ஆங்கிலப்புலமை வந்துவிட்டது. இது இப்போதைக்குப் போதும் என்ற திருப்தியோடு வந்துவிட்டேன்.
பிரபாகரனுக்கு ஒரு விமர்சன ரீதியான வாழ்க்கை வரலாறு எழுதவேண்டும் என்பது என் வாழ்நாள் காலக் கனவு.. பிரபாகரனுக்கு இன்றுவரை ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய முழுமையான வாழ்க்கை வரலாறுகள் இரண்டு வந்திருக்கின்றன. INSIDE AN ELUSIVE MIND(2003) and THE ROUT OF PRABHAKARAN(2024). இரண்டுமே தமிழகப் பத்திரிகையாளர் நாராயண் சுவாமியால் எழுதப்பட்டவை. இரண்டுமே எனக்குத் திருப்தியாக இல்லை. இதைவிட வேறு பலரால் எழுதப்பட்ட பிரபாகரனின் வாழ்க்கை வரலாறுகள் மொக்கையானவை. ஒரு தமிழ் நாட்டுக்காரரால் பிரபாகரனுக்கு வாழ்க்கை வரலாறு எழுத முடியாது. என்னைப்போன்ற ஓர் ஈழத்தவர்களால் தான் எழுதமுடியும்..என்னைவிடப் பிரபாகரனுக்கு மகத்தான விமர்சன ரீதியான வாழ்க்கை வரலாறு எழுதத் தகுதியானவர்கள் என்று நான் நம்பியிருந்தது பிரபாகரனின்(1954) தலைமுறையைச் சேர்ந்த இருவர். ஒருவர் கவிஞரும் பத்திரிகையாளரும் பேராசிரியருமான சேரன்(1958). மற்றவர் முன்னாள் புளட் இயக்க உறுப்பினரும் பத்திரிகையாளரும் Tamilnet ஸ்தாபன ஆசிரியருமான தராக்கி சிவராம்(1959). இருவருமே ஆரம்பத்தில் புலிகளின் தீவிரமான விமர்சகர்களாக இருந்தவர்கள். தொண்ணூறுகளின் இறுதியில் இருவருமே புலிகளால் வாங்கப்பட்டு புலிகளின் லாபியிஸ்ட் ஆகிவிட்டது நம் காலத்தின் மிகப்பெரிய சோகம்..சிவராம் 2005ல் இலங்கை அரசாங்க அனுசரணையோடு கொல்லப்பட்டுவிட்டார். கவிஞர் சேரனுக்கோ இப்போது மறுபடியும் புலிகளை விமர்சிக்கும் நிலையெடுப்பது தான் ஒரு சந்தர்ப்பவாதி என்பதை உறுதிப்படுத்தும் என்பதால் புலி சார்பு நிலையிலிருந்தே தன் வாதங்களை முன்வைத்து வருகிறார்.
போர் நடந்துகொண்டிருந்த காலத்திலேயே புலிகளைப் பற்றிப் படிப்பதே என் காதலாக இருந்தது. 2009ல் ஈழப்போர் முடிந்தபின் புலிகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டுவது இலகுவானது.. உயிராபத்து இல்லாததால் முன்னாள் புலிப்போராளிகளும் புலிகள் சம்பந்தப்பட்டவர்களும் எழுதிய புலிகளைப்பற்றிய உண்மை வரலாறுகள் வர ஆரம்பித்தன. ஆனால் இந்தப்புத்தகங்களில் இல்லாத மகத்தான தகவல்கள் Primary Sources என்கிற முதன்மை ஆதாரங்களிலிருந்தே வரத்தொடங்கின. முக்கியமாக இறுதிப்போரில் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வந்த போராளிகள் சொன்ன கதைகள். யுத்தம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலேயே புலிகளிலிருந்து வெளியேறிவந்த முன்னாள் போராளிகளின் கதைகள் எனக்குக் கேட்டவண்ணமே இருந்தது. ஆனால் யுத்தம் முடிந்தபின் வந்த முதன்மை ஆதாரங்கள் அளவிலும் தரத்திலும் அற்புதமாக இருந்தன.
முதன்மை ஆதாரங்கள் பகுத்தறியப்பட்டு வேறு தகவல்களோடு ஒப்பாய்வு செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அல்ல. நம் கதையைக் கேட்க ஓர் இளிச்சவாயன் வந்துவிட்டான். இன்றைக்குத் தம் காட்டில் மழை என்று அண்டப்புழுகுகளை அவிட்டுவிடத் தயாராக இருக்கும் பல முன்னாள் புலிகளை நான் சந்தித்திருக்கிறேன். உண்மையில் உண்மையை அச்சொட்டாக ஒப்புவித்த புலிகளைவிட அண்டப்புழுகுகளை அவிழ்த்துவிட்ட புலிகளே எண்ணிக்கையில் அதிகமாக இருந்தார்கள். ஏற்கெனவே புலிகளைப்பற்றிய கணிசமான தகவல் களஞ்சியம் இருக்கும் என்னிடம் பொய் சொல்லும்போது மாட்டுப்படுவார்கள். என் உடல் மொழி அவர்களை நான் நம்பவில்லை என்பதை வெளிப்படுத்தும்போது உடனே சுதாரித்துக்கொண்டு தாம் வாய்மொழியாகச் சொல்லும் கதைகளை இடைச்செருகல்களை வைத்து “எடிற்றிங்” பண்ணத்தொடங்குவார்கள். இவர்கள் விதிவசத்தால் தவறான தொழிலைத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். அற்புதமான புனை கதாசிரியர்களாக வந்திருக்க வேண்டியவர்கள்.
தமிழ்ச்சூழலில் புனைவு எழுத்தாளர்கள் அ புனைவுகளைப் படிக்கக்கூடாது. படித்தால் அது அவர்களின் புனைவு மொழியைப் பாதிக்கும் என்றொரு தவறான அபிப்பிராயம் இருக்கிறது. இது உண்மையல்ல. பத்திரிகைத் துறை அ புனைவைச் சேர்ந்தது. பத்திரிகையாளர்கள் தம் பத்திரிகை அனுபவங்களை வைத்து அற்புதமான எழுத்தாளர்களான வரமுடியும். இதற்கு நல்ல உதாரணம் கேப்ரியல் கார்சியா மார்க்கியூஸ். அவருடைய நாவல்களின் பலங்களிலொன்று அவர் படித்த வரலாற்று மற்றும் லத்தீன் அமெரிக்க வரலாற்று அ புனைவுகளிலிருந்து வந்தது.
ஆக உங்கள் இரண்டு கேள்வியின் சுருக்கமான
1. “உங்கள் கதைகளின் மையங்கள் எப்படி உங்களை வந்து சேர்ந்தன? “
2. இவற்றிலுள்ள நுட்பமான போக்குகளை எப்படி உருவாக்குகிறீர்கள்?
என்பாவற்றுச் சுருக்கமான விடையாக இதைச் சொல்கிறேன். கதைகளின் மையம் என்பதைக் கதைப்பின்னல்(Plot) என்று புரிந்து கொள்கிறேன். ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களாகப் புலிகளைப் பற்றிப் பின்வரும் மூன்று வழிகளில் சேகரித்த தகவல்களிலிருந்தே அவை வந்தன.
1. நான் ஈழ யுத்தத்தின் குழந்தையாக யாழ்ப்பாணத்திலிருக்கும் போது என் கண்களாலும் காதுகளாலும் புலிகளைப்பற்றிப் பெற்ற என் பட்டறிவு. என் வயது என் வகுப்பு நண்பர்கள், உறவினர்கள், என் அயல் வீட்டுக்காரர்கள், என் நண்பர்களின் சகோதரங்கள் முதலிய பலர் புலிகளில் சேர்ந்து போராடி இறந்திருக்கிறார்கள். இதில் இறக்காதவர்கள் இப்போதும் உயிரோடிருக்கிறார்கள். மேற்கூறிய வகைகளுக்குள் வரும் புலிகளால் வேட்டையாடப்பட்ட மாற்று விடுதலைப் போராளிகள்.
2. புலிகளைப் பற்றி வந்த அ புனைவு வரலாற்று நூல்கள், நம்பகரமான அச்சு மற்றும் இணையச் செய்திகள்.
3. யுத்தம் முடிந்தபின் புனர்வாழ்வுபெற்று வந்த முன்னாள் புலிகள் முதன்மை ஆதாரங்களாக நேரடியாக மற்றும் தொலைப்பேசி, இணைய வழிகள் முலமாக வழங்கிய வாக்குமூலங்கள்.
நேரடியான பதிவுகளில் அல்லது உங்கள் விசாரணைக் குறிப்புகள் போன்றவற்றில் அமைப்பின் மீதான பல்வேறு விமரிசனங்களை நான் வாசித்திருக்கிறேன் இப்படியாக இத்தொகுப்பை மேலோட்டமாக எடுத்துக் கொண்டாலும் விமரிசனங்களை மீறி அமைப்பின் மேலே வெளிப்படும் காதலையும் அதன் தலைவர்களின் மீதான நெகிழ்ச்சியான மையத்தையும் தொகுப்பு தன்னையறியாமல் வெளிப்படுத்தும் இடங்களை இத்தொகுப்பின் ஆசிரியராக எப்படிப் பார்க்கிறீர்கள்?
முகாமுகம் தொகுப்பில் ஆறு கதைகள் உள்ளன. ஏறத்தாழ 12 ஆண்டுகளில் எழுதப்பட்ட கதைகள். 2011, 2013ம் ஆண்டுகளில் எழுதப்பட்ட கமக்காரன், கர்னலின் காமம் ஆகிய கதைகள் புலிகள் மீதான புனிதப் பிம்பத்தை உடைக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்ட கதைகள் என்று சரவணன் மாணிக்கவாசகம் சொல்கிறார். ஒரு புனை கதாசிரியராக யாரையும் புனிதப்படுத்துவதோ யாருடைய “புனிதங்களை “ உடைப்பதோ என்னுடைய நோக்கமல்ல. என்னுடைய நோக்கம் வாசிப்பில் பரவசத்தைத் தரக்கூடிய (The Pleasure of Reading) காலத்தை வென்று வாழும் புனைகதைகளை உருவாக்குவதே.
பன்னிரண்டு ஆண்டுக்கால இறுதியில் நான் எழுதிய நீண்ட கதைகளான முள்ளும் மலரும், முகாமுகம் ஆகிய கதைகளே இத்தொகுப்பின் சிறப்பான கதைகள் என்பது சீரிய இலக்கிய வாசகர்களினதும் விமர்சகர்களினதும் மதிப்புரை. இவ்விரு கதைகளையும் புலிகளின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் விரும்பிப் படித்தார்கள். இரு தரப்பினரையும் திருப்திப்படுத்தக்கூடிய என்னுடைய பன்னிரண்டு கால இலக்கிய அறுவடைக்குக் கிடைத்த படைப்பு பரிசுகள். கவிஞர் சுகன் கனகசபை என்பவரே விதிவிலக்காக முள்ளும் மலரும் கதையைப் படித்து “இது உங்கள் முத்திரைக் கதையென்றாலும் ஒரு புலி ஆதரவுக் கதை எழுதியிருக்கிறீர்கள்” என்று குற்றம் சாட்டியிருந்தார். அந்த இரு கதைகளையும் சுட்டியே இந்தக் கேள்வியை நீங்களும் முன் வைக்கிறீர்கள்.
அ புனைவு எழுதும் போதே நான் எனக்குக் கடிவாளம் போட்டுக்கொண்டு எழுதவேண்டும். தரவுகள் நம்பகரமானதா என்பதை உறுதிப்படுத்தவேண்டும். தருக்கங்கள் நியாயப்போலி(Fallacy) இல்லாமல் இருக்கும்படியாக வாதிக்கவேண்டும்.
புனைவுக்குக் கடிவாளம் கிடையாது. அது பறவைபோல பறக்கவேண்டும். புனைவின் மூலங்களான பாத்திரவாக்கம், கதைப்பின்னல், முரண் முதலியவற்றைத் தரையில் ஓடும் குதிரையைக் கட்டுப்படுத்துவதுபோலக் கட்டுப்படுத்த முடியாது. அதைக் கட்டுப்படுத்தும் திறன் எழுத்தாளருக்குக் கிடையாது. விட்டுப் பிடிக்கவேண்டும். பாத்திரங்கள் காலநிலை/வானிலை, புவியீர்ப்பு விசை இவற்றுக்கேற்கவே பறக்கும். பிறகும் வெற்றிகரமாக நம்பகரமான கதையாக ஒரு விமானத்தைப் போல பாதுகாப்பாகத் தரையிறக்கவேண்டும். பறப்பது மட்டும் புனைவல்ல. தரையிறக்கமும் ஆபத்தில்லாமல் நடக்கவேண்டும். இவையெல்லாம் நடந்தால் அது ஒரு வெற்றிகரமான புனைவு. மானிடப் புனைவு. “முள்ளும் மலரும்” , “முகாமுகம்” இரண்டும் புயலில் சிக்கினாலும் கடைசியில் பாதுகாப்பாகத் தரையிறங்கிய விமானங்கள். அவற்றின் உயிர்பிழைப்புக்கு விமானி செய்த சமரசங்கள் போன்றதுதான் என் படைப்புச் செயன்முறை.
இன்னொரு முறையில் சொன்னால் புனைவில் வரும் பாத்திரம் ஒரு பேயைப்போல எழுத்தாளருக்குள் இறங்குகிறது. பிறகு அதுதான் எழுத்தாளரை ஓட்டிச்செல்கிறது. போகிற போக்கில் அதுவே புனைவின் கதைப்பின்னலையும் முரண்களையும் உருவாக்குகிறது. எழுதி முடித்தபின்னர் தான் எழுத்தாளரே அதிசயிப்பார். “ இதை எழுதியது நான் தானா? அல்லது என்னுள் இறங்கிய பேயா? “ என்று.
இவ்வுலகின் ஆகச்சிறந்த சிக்கல்களான காமம்,தனிமை,போதை போன்றவற்றில் உங்களின் பெரும்பாலான சிறுகதைகளின் அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றாலும் இவற்றில் நான் அதிகம் ரசனையுடன் அணுகியது தனிமை போன்ற குணத்தையே, தனிமை தொடர்ந்து உங்கள் தொகுப்பில் உலவும் அத்தனை மனிதர்களிடம் உள்ளது.அதை அவர்கள் ஒரு மிருகத்தைப் போலவே பழகி தங்களிடம் வைத்துக்கொள்கிறார்கள் இத்தனைக்கும் எவ்வளவு உறவில் அவர்கள் உறவாடினாலும், தொகுப்பில் தனிமை மீதான இவ்வளவு வெளிப்பாட்டிற்கான காரணம் என்னவாக உள்ளது?
காமம், தனிமை, போதை போன்றவற்றை இவ்வுலகின் ஆகச்சிறந்த சிக்கல்கள் என்று உங்கள் கேள்வியில் சொல்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரையில் காமமும் தனிமையும் போதையும் சிக்கல்கள் அல்ல. அவை மனிதரின் அடிப்படையான உயிரியல் உளவியல் தேவைகள். காமத்தையும் தனிமையையும் போதையையும் சிக்கலாக்கிக் கொள்வது அதை எதிர்கொள்ளும் மனிதர்களே தவிரக் காமமும் தனிமையும் போதையும் அடிப்படையில் சிக்கலானவை அல்ல.
வாழ்க்கையில் பிரச்சனைகள் சவால்கள் இன்றி ஒரு பணக்கார “உயர்” சாதிக் குடும்பத்தில் யுத்தமோ பொருளாதாரப் பிரச்சனைகளோ இல்லாத காலத்தில் பிறந்து நல்ல பல்கலைக்கழகத்தில் படித்து நல்ல தொழில் பெற்று நிறையச் சம்பாதித்து விசுவாசமான ஒரு மனைவியை மணமுடித்து பிள்ளைகள் பெற்று அவர்களையும் சமூகத்தின் சிறப்பானவர்களாக்கி வறுமை, தோல்வி, துரோகம், இன்னபிற மானுட அல்லல்கள் இன்றி 90 வயதில் தூக்கத்தில் இறந்த ஒரு வென்ற மனிதனின் கதை நல்ல புனைவோ இலக்கியமோ ஆகாது. வாழ்க்கையில் தோற்ற மனிதனின் கதைதான், தப்பிப் பிழைத்த மனிதனின் கதைதான் நல்ல இலக்கியமாகும். நல்ல புனைவுக்கு நாடகப் பாங்கான களேபரமான சூழல் அவசியம். அவை வாழ்க்கையில் தோற்ற மனிதர்கள், திருடர்கள், கொலைகாரர்கள். காமுகர், அனாதைகள், போதைக்கு அடிமையானவர்கள், சூதாடிகள், ஒற்றர்கள், விபச்சாரிகள், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள், யுத்தக் காலங்களில் வாழ்பவர்கள், சைக்கோ பாத் வகையானவர்கள், குற்றவாளிகள், மன நோயாளிகள் முதலியோரின் கதைகளிலேயே வரும். அங்குதான் பாத்திரவாக்கம், கதைப்பின்னல், முரண் முதலிய கூறுகள் சிறப்பாக வரும். அங்குதான் மானுட மனதின் ஆழங்களுக்குச் சென்று முத்து எடுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
முள்ளும் மலரும் கதையின் மூல பாத்திரமான அனாதையான “ பிரிகேடியர் முகமட்” புலிகளால் சிறப்பான ஓர் ஒற்றனாகவும் தற்கொலைப் போராளியாகவும் ஆவதற்குப் பயிற்சி பெற்றவன். ஈழ யுத்தம் முடிந்தபின் அவன் கொழும்பில் வேறொரு போலி அடையாளமான சர்வதேசப் பல்கலைக்கழக மாணவனாகக் கைவிடப்படுகிறான். முகாமுகம் கதையின் முலபாத்திரமானவனுக்கு பெயரே இல்லை. கதிர்காமர் கொலையைச் செய்ய அவனை ஒரு குறிபார்த்துச் சுடுபவனாகப் புலிகள் உபயோகித்தபின் அவனை நட்டாற்றில் கைவிடுகிறார்கள். அவன் ஒரு போலிப்பெயரில் ஒஸ்றேலியாவில் அகதியாகிறான். அசல் அடையாளம் அற்ற இந்த இரண்டு பாத்திரங்களும் போதையையே தனிமையையோ விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை. அவை அவர்கள் மீது திணிக்கப்பட்டது. தப்பிப் பிழைப்பதற்கு அவர்களுக்கு அவற்றைவிட வேறு வழிகளிலிருக்கவில்லை.
காமம் பற்றிய அதீதமான சொல்லாடல்களில் சில இடங்களிலும் உங்கள் சிறுகதைகள் அதன் கலைத்தன்மை இழந்து நிற்கிறது என்றே நான் விமரிசனம் வைத்தால் உங்கள் பதிலடி எப்படியிருக்கும்?
இக்குற்றச்சாட்டை இதுவரையில் வைத்தது 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள். இப்போதுதான் முதல் தடவையாக இளந்தலைமுறையைச் சேர்ந்தவரான உங்களிடமிருந்து வருகிறது. இது எனக்கு மிகுந்த ஆச்சரியமளிக்கிறது. உங்களுடைய ரசனை, கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் இந்த மதிப்பீட்டை வைக்கலாம். ஆனால் இளந்தலைமுறை இலக்கிய வாசகர்கள் என் காமம் சார்ந்த சொற்களையோ, சொல்லாடல்களையோ உவப்போடு ஏற்றுக்கொள்கிறார்கள்.
தமிழில் ஆக மோசமான வசைச்சொற்களான “புண்டை “ , “ஓழ்” ஆகியவற்றை வரலாற்றில் முதன் முதலாக இலக்கியத்தில் பயன்படுத்தியது நானல்ல. கடந்த எழுபது வருடங்களுக்கு முதலே இச்சொற்கள் தமிழ்ப் புனைவுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. முள்ளும் மலரும் கதையில் முகமட்டின் காதலியான ஒரு உக்ரேனியப் பெண் முகமட்டுக்கு நிராசையான காமத்தின் உச்ச உணர்ச்சிக் கொந்தளிப்பில் அவனுக்கு அனுப்பிய ரெக்ஸ் மெசேச்சில் தன் பெண்குறி என்பதற்குப்பதிலாக அந்த வசைச்சொல்லைப் பயன்படுத்திவிட்டாள் என்பதுதான் பல 65 வயது கடந்த முதியவர்களுக்குப் பிரச்சனை. அவர்கள் காலத்தில் கைத்தொலைபேசிகளோ, ரெக்ஸ் மெசேச்சொ இல்லை. அவர்கள் காதலிகள் அந்த வசைச்சொல்லைப் பயன்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. அதற்காக இந்த 2020 களின் இளந்தலைமுறை ஈழப்பெண்கள் பெண்கள் இச்சொல்லைப் பயன்படுத்துவதில்லை என்று அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா? மேலும் என் கதாபாத்திரங்கள் வெளிநாட்டவர்கள். உக்ரேனியப் பெண், ஒஸ்றேலியப் பெண். நம் ஈழ, தமிழகப் பெண்களே வசைச் சொற்களை நெருக்கமான ஆண் நண்பர்களிடம் இக்காலத்தில் தாராளமாகப் பயன்படுத்துகிறார்கள்.
எல்லாவற்றையும்விட முக்கியமான பிரச்சனை என் கதைகளில் பெண்கள் இச்சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதுதான். ஆண்கள் பயன்படுத்தியிருந்தால் அந்த 65+ முதியவர்கள் அதனை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். இது தலைமுறை சார்ந்த, தலைமுறை மாற்றங்களை உணரத்தவறிய முதிய ஆண்களின் ஆணாதிக்க மனநிலையில் வெளிப்பாடு.
எல்லாச் சொற்களும் பொருள் குறித்தனவே. எனினும் எல்லாச் சொற்களும் வசைச்சொற்கள் உட்படச் சந்தர்ப்பங்களுக்கேற்பவே அவற்றின் அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன. எல்லாச் சொற்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கேற்ப, Denotation, Connotation என இரண்டு அர்த்தங்கள் உண்டு. Denotation என்பது ஒரு சொல்லின் அசலான அகராதி அர்த்தம். Connotation என்பது அகராதி அர்த்தத்திற்கு அப்பால் சந்தர்ப்பங்களுக்கேற்ப உணர்ச்சிகளையும் மறை பொருளையும் வெளிப்படுத்துவது.
நூறாண்டுகளுக்கு முன் தமிழ்ப் பெண்கள் தம் கணவரைப் பெயர் சொல்லி அழைத்ததில்லை. நீ என்று ஒருமையில் அழைத்ததில்லை. இன்றைய பெண்கள் பெயர் சொல்லி, நீ என்று, அவன் என்று சொல்லி தம் கணவனைக் காதலரை விளிக்கிறார்கள்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் கணவன் பலான படம் பார்த்தால் அவன் வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்துவிட்டான் என்ற கணக்கில் பிரச்சனையாக்கி சன்னதமாடுவாள் மனைவி. இன்றைக்கு மனைவியோ காதலியோ தமக்கு மூட் வந்துவிட்டால் களைப்பாயிருக்கிற கணவனிடமே ஸ்மாட் போனிலிருந்து ஒரு பலான வீடியோவைப் போட்டுக் காட்டி அவனைக் காம மூட்டுக்கு கொண்டு வருவாளவை.
இதுபோன்ற ஒரு தலைமுறை மாற்றம்தான் பெண்கள் தம் கணவர் காதலரிடம் வசைச் சொற்களைப் பயன்படுத்துவது. அதனுடைய மறைபொருள் – Connotation என்ன? அன்பு, காமம், நெருக்கம். வேற்று ஆடவரிடமோ ஏன் சொந்த ஆண் சகோதரரிடமோ இந்த வசைச்சொற்களைப் பயன்படுத்த முடியாது.
புலம்பெயர் வாழ்வு உருவாக்கும் அகச்சிக்கல்களையும் புறச்சிக்கல்களையும் எதிர்கொள்ளும் பொழுதுகளில் ஒருவரின் கலைத்தன்மை இன்னொரு கூர்மையான பகுதிகளை நோக்கிப் பயணிக்கிறது என்றாலும் இவற்றின் ஊடாகவே தொடர்ந்து பயணிப்பதும் சில நேரங்களில் ஒருவரின் கலைத்தன்மை மழுங்கிவிடும் அபாயமும் நேர்ந்துவிடுகிறது இல்லையா? அகதி வாழ்வின் நெருக்கடியும், இயக்கத்தின் ஆதரவும் எதிர்ப்பும் போன்ற முனைகளிலிருந்து ஈழ இலக்கியம் விடுபட மறுப்பதன் காரணம் என்ன? உங்கள் தொகுப்பின் கதைகளும் இந்த விமர்சனப் பள்ளியிலிருந்து தப்பவில்லையே?
இந்தக் கேள்வியிலிருந்து வரும் விமர்சனம் பல ஈழ மற்றும் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களுக்குப் பொருந்தும். எல்லாருக்கும் பொருந்தாது. ஷோபாசக்திக்கு இந்த விமர்சனம் மிகப்பொருந்தும். ஷோபாசக்தியினுடைய Masterpiece ஆன படைப்பு கொரில்லா குறுநாவல்தான். ம் குறுநாவல் சுமாரான படைப்பு. பொக்ஸ், இச்சா நாவல்கள் மோசமானவை, மொக்கையானவை. [இவற்றுக்கு நான் எழுதிய விமர்சன லிங் இணைப்புக்கள்.( பொக்ஸ் நாவல்: ஒரு மலின இலக்கியம், இச்சா – ஷோபா சக்தியின் ‘மட்டரக காக்ரெயில்’ தயாரிப்பு: நட்சத்திரன் செவ்விந்தியன்) சலாம் அலைக் சுமாரானது. நாவல்களைப்போலவே அவர் நல்ல சுமாரான மற்றும் மொக்கையான சிறுகதைகளும் எழுதியுள்ளார். அவருடைய எல்லாப் படைப்புகளிலும் நீங்கள் சொன்னபடியே அகதி வாழ்வின் நெருக்கடியும் இயக்கத்தின் ஆதரவும் எதிர்ப்பும் தொடர்ந்து வருகிறது. சரியாகச் சொல்லப்போனால் அவரின் மொக்கை நாவல்களான பொக்சிலும் இச்சாவிலும் இவை சலிப்பூட்டும் அளவுக்கு மீள மீளச் சொல்லப்படுகின்றன. அதாவது Recycling செய்யப்படுகின்றன. அதனால்தான் பொக்சும் இச்சாவும் தோற்றன.
“இவற்றின் ஊடாகவே தொடர்ந்து பயணிப்பதும் சில நேரங்களில் ஒருவரின் கலைத்தன்மை மழுங்கிவிடும் அபாயமும் நேர்ந்துவிடுகிறது” என்ற உங்கள் கேள்வியில் வரும் சில நேரங்களில் அழுத்தப்படவேண்டியது. ஷோபாசக்தியைப் போலச் சில ஈழ எழுத்தாளர்களின் விடயத்தில் இது சரியென்றாலும் எல்லா ஈழ எழுத்தாளர் விடயத்திலும் இந்த விடயம் சரியானதல்ல.
ஏனெனில் எல்லா மானுடக் கதைகளும் ஏற்கெனவே சொல்லப்பட்டவை. இதனை மிக அழகாகச் சொன்னவர் அமெரிக்கத் திரைக்கலைஞர் ஸ்டான்லி கூப்ரிக். அவர் சொன்னார்
“எல்லாக் கதைகளும் ஏற்கெனவே சொல்லப்பட்டவை
எல்லா சீனும்
ஏற்கெனவே எடுக்கப்பட்டவை
எமது பணி அதை மேலுஞ் செம்மையாக்குவதே”
அகதி வாழ்வும் போரும் மானுட வரலாற்றில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. அன்றிலிருந்தே இவை வாய்மொழி இலக்கியம் வழியாகவும் எழுத்துவழி இலக்கியம் வழியாகவும் சொல்லப்பட்டு வருகின்றன.
உலகின் முதல் நாவலாகக் கருதப்படுவது ஜப்பானிய மொழியில் பதினோராம் நூற்றாண்டில் எழுதப்பட்ட The Tale of Genji. உலகின் முதல் நவீன நாவலாகக் கருதப்படுவது 16ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட Don Quixote. ஆனால் இன்றை வரைக்கும் உலகின் எல்லா நாவலாசிரியர்களும் எழுதிய/ எழுதாத எல்லாக் கதைகளையும் ஏற்கெனவே சொல்லப்பட்ட கதைகளாக எழுத்து வரிவடிவங்களில் வசன நடையில் எழுதப்பட்டது, எழுதித் தொகுக்கப்பட்டது இற்றைக்கு ஈராயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆதியாகமத்தில் தான். ஆதியாகமம் ஒரு நாவல் அல்ல, நூற்றுக்கணக்கான நாவல்கள். ஆதியாகமம் பல எழுத்தாளர்களால் பல நூற்றாண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட வாய்மொழிக் கதைகளையும் இலக்கிய வடிவங்களையும் தொகுத்து அடிப்படையில் ஒரு மதநூலாக ஆக்கியதால் அதனை நாவல் என்கிற சொல்லப்பட்ட வடிவத்துக்குள் வைக்கமுடியவில்லையாம். என்னைப் பொறுத்த வரையில் ஆதியாகம் தான் நாம் அறிந்த எழுத்து வரி வடிவங்களில், வசன நடையில் வந்த உலகில் முதல் நாவல். ஆதியாகமம், அதை உள்ளடக்கிய வேதாகமம் இவற்றில் இல்லாத புதிய மானுடக் கதைகளையா இப்போது இருபத்தோராம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் சொல்லிவிட்டார்கள்? ஆக எல்லாக் கதைகளும் ஏற்கெனவே சொல்லப்பட்ட, எழுதப்பட்ட கதைகள்தான். பாடுபொருட்கள் தான். அதை மேலுஞ் சிறப்பாக எப்படி எழுதுவது என்பதே சமகால எழுத்தாளர்களின் சவாலே தவிரப் பாடுபொருள் அல்ல பிரச்சனை.
உங்கள் கேள்விக்கான இன்னொரு இரண்டாவது பதிலை ஈழப் போரிலக்கியத்தை தம் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்திய தமிழக வணிக இதழ்களின் அஜெண்டாவில் வைத்து விளக்கலாம்.
2009ல் ஈழப்போர் முடிந்தபின் தமிழ் உணர்வை சனரஞ்சகமான கச்சாப்பொருளாக்கி சுமாரான மற்றும் மோசமான ஈழப்போர் சம்பந்தமான நாவல்கள் வெளிவந்தன. ஆனந்த விகடன் போன்ற வியாபார நிறுவனங்கள் ஊக்குவித்த இந்தப் போக்கின்படி தமிழ்க்கவி, தமிழ்நதி, சயந்தன், குணா கவியழகன், தீபச்செல்வன் முதலியோர் எழுதிய நாவல்கள் வெளிவந்து சனரஞ்சக மதிப்பை பெற்று பிரபல்யமாகின்றன. ஈழ இலக்கியத்தைத் தமிழக வணிகத் தொலைக்காட்சி சீரியல்கள் போன்று மலினமாக்கிய காலம் இது. இதன் தொடர்ச்சியாக அகரமுதல்வன், வாசு முருகவேல் போன்ற ஈழ எழுத்தாளர்களும் வந்தார்கள். சீரிய இலக்கியம் சினிமா சீரியல்களான காலம். இந்தச் சினிமா சீரியல் வகை பெரும்பாலான படைப்புக்கள் காலத்தை வென்று நிலைக்கக்கூடியவல்ல.
“அகதி வாழ்வின் நெருக்கடியும், இயக்கத்தின் ஆதரவும் எதிர்ப்பும் போன்ற முனைகளிலிருந்து ஈழ இலக்கியம் விடுபட மறுப்பதன் காரணம் என்ன?”
என்கிற உங்கள் கேள்விக்குப் பதில் ஒன்றுதான் அது வணிக நோக்கங்கள்.
இக்காலத்தில் விதி விலக்கான ஈழ எழுத்தாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவர் அருந்ததி. அவர் எழுதிய ஈழத் தலித்திய நாவலான ஆண்பால் உலகு 2019 ல் வந்தது. கடந்த நாற்பதாண்டுகளில் வந்த சிறப்பான ஈழப்போர்க்கால ஈழத் தலித்திய நாவல்.
இரண்டாமவர் மீ ரூ குற்றச்சாட்டுக்குள்ளான எழுத்தாளரான யதார்த்தனால் எழுதப்பட்ட 2022 வெளிவந்த நகுலாத்தை நாவல். அகதி வாழ்வு, ஈழப்போர், இயக்கத்தின் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பவைதான் பாடுபொருட்கள். இதுகாலவரை வந்த சயந்தனின் நாவல்களை விட சோபாசக்தியின் பொக்ஸ், இச்சா, சலாம் அலைக் ஆகிய நாவல்களை விட, நான் மேலே குறிப்பிட்ட பல ஈழப்போரிலக்கிய சினிமா சீரியல் வகை நாவல்களைவிட நகுலாத்தை படைப்பாற்றலில் சிறப்பானது.
உங்கள் நீண்ட கேள்வியின் கடைசியில் “உங்கள் தொகுப்பின் கதைகளும் இந்த விமர்சனப் பள்ளியிலிருந்து தப்பவில்லையே? “ என்று கேட்டிருக்கிறீர்கள்.
கவிதைகளிலிருந்து விடுபட்டு இப்போதுதான் முதல் புனைவிலக்கியமாக முகாமுகம் என்ற என் சிறுகதைத்தொகுதி வந்திருக்கிறது. பெங்களூரிலிருந்தே நீங்கள் என் தொகுதியை ஆடர் செய்து வாங்கியிருக்கிறீர்கள். இவ்வருடச் சனவரி பெப்ரவரி மாதங்களில் நீங்களே உங்கள் முகநூலில் என் புத்தகத்தை மூன்று முறை குறிப்பிட்டுள்ளீர்கள். அதில் முக்கியமானது “ வருடத்தின் முதற் சிறுகதைத் தொகுப்பு வாசிப்பில் ஏமாற்றங்களை அளிக்கவில்லை என்பதே நிறைவானது” என்று தொடங்கி நீங்கள் உங்கள் முகநூலில் எழுதிய முகாமுகம் தொகுப்புக்கான Critically acclaimed மதிப்புரை. இப்போது என்னைப் பேட்டி காண்கிறீர்கள். இது என் தொகுப்புக்கான வெற்றி இல்லையா?
தமிழகத்தின் முதன்மையான இலக்கியப் பதிப்பகமான காலச்சுவடு முதல் பதிப்பில் வந்த அனைத்து முகாமுகம் பிரதிகளும் சென்னைப் புத்தகத் திருவிழாவில் விற்றுத் தீர்ந்தன. இரண்டு மாதங்களில் இப்போது இரண்டாம் பதிப்பு வந்திருக்கிறது. இத்தனைக்கும் முகாமுகம் தொகுப்பைப் பற்றி தி இந்து நாளிதழில் யாரும் மதிப்புரை எழுதவில்லை. ஆனந்த விகடனிலோ குமுதத்திலோ கூட மதிப்புரைகள் வரவில்லை. ஆனந்த விகடன் என்னைப் பேட்டி காணவில்லை.
எல்லா ஈழப் போரிலக்கிய எழுத்தாளர்கள் எழுதிய அதே பாடுபொருட்களான போர், அகதி வாழ்வின் நெருக்கடிகள், இயக்கத்தின் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பவையே நானும் எழுதினேன். இப்போதுதான் நான் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். அதே பாடு பொருட்களை வைத்து. அது வெளிவந்தபின் என் படைப்பாற்றலை மதிப்பீடுகளைக் காலத்தை விட மிகப்பெரிய இலக்கிய அளவுகோல் எது?
ஷோபாசக்தியின் மாஸ்டர் பீஸ் கொரில்லா என்கிற உங்கள் பதில் பிடித்திருக்கிறதுஎன்னைப் பொருத்தவரையில் ஷோபாசக்தி தன்னுடைய சிறுகதைகளிலும் தான் ஒரு மாஸ்டர் என்பதை நிரூபணம் செய்திருக்கிறார் என்றே நம்புகிறேன். இந்த இடத்தில் ஈழ இலக்கியத்திலிருந்து வந்து அகரமுதல்வன் போன்றவர்கள் இங்கிருக்கும் அதிகார மையங்களுடன் தன்னை இணைந்து கொண்டு இங்கே அவர்கள் அடைந்திருக்கம் இன்னொரு அதிகார மையம் முக்கியமானது தானே. கிட்டத்தட்ட தமிழிலக்கியச் சூழலில் கூடவும் யார் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பதைக் கூடவும் அவர்களே முடிவு செய்கிறார்கள் , இத்தகைய போக்கும் ஈழ இலக்கியத்திற்கு வலுச் சேர்க்கும் தானே?
அதிகார மையங்களிருந்து இலக்கியம் மதிப்பிடப்படுவது இல்லை. காலத்தை வென்று வாழும் இலக்கியத்தை நேர்மையான விமர்சகர்கள் ஆரம்பத்தில் இனங்காட்டினாலும் பல தலைமுறையாக வரும் வாசகர்களே தீர்மானிக்கிறார்கள். தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் பூராகவும் சமகாலத்தில் சில அதிகார மையங்கள் குறிப்பிட்ட சில இலக்கியப்பிரதிகளையும் எழுத்தாளர்களையும் முன்னிறுத்தினாலும் அப்பிரதிகளையும் எழுத்தாளர்களையும் காலம் விரைவில் நிராகரித்துவிடும். இன்றைய ஆங்கில மொழி இலக்கிய உலகில் நாசகார அதிகார மையமாக இருந்து மொக்கை நாவல்களை முன்னிறுத்திக் கொண்டிருப்பது மான் புக்கர் பரிசு அமைப்பு. சில பல ஆங்கிலப் பதிப்பாளர்கள் புக்கர் தேர்வுக் குழுவில் அதிகார மையமாக இருந்து தமக்குள் இரகசிய வணிக பேரம்பேசல்கள் மூலம் தமது நலன்களுக்காக இலக்கியத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நேர்மையான ஆங்கில இலக்கிய விமர்சகர்கள் இதனைச் சுட்டிக்காட்டினாலும் அவர்களைவிடப் பதிப்பகங்கள் பலமாக இருப்பதால் சமகாலத்தில் விமர்சகர்களின் குரல் எடுபடுவதில்லை. இலக்கிய விருதுகளில் இட ஒதுக்கீடு, Populism என்பவற்றுக்கு இடம் இருக்கக்கூடாது.
தமிழ்ச்சூழலிலும் விருது வழங்கும் அரசு சாரா நிறுவனங்கள் பல விருதுகள் மூலம் தம்மை இலக்கிய அதிகார மையங்களாக்குகின்றன. இதில் விஷ்ணுபுரம் விருது, கனடா இலக்கியத் தோட்ட விருது என்பன ஒரு தனிநபரின் கட்டுப்பாட்டில் இயங்குபவை. அமெரிக்க விளக்கு விருது மட்டுந்தான் சர்ச்சைகளற்ற நேர்மையான தெரிவுக்குழு முலம் விருதைத் தெரியும் அமைப்பாக இருக்கிறது. இப்படி அதிகார மையங்களிலிருந்து தீர்மானிக்கப்படும் இலக்கியங்களைக் காலம் வெகு விரைவில் நிராகரித்துவிடும்.
அகரமுதல்வன்அதிகார மையமாவதற்கு முதல் அதிகார மையமானவர் ஷோபாசக்தி. அ.மார்க்ஸ் இலக்கியவாதி அல்லர். ஆய்வாளர். ஆனால் ஓர் அதிகார மையமான அவருக்கு இலக்கியத்தில் யாரை முன்னிறுத்தவேண்டும், புறக்கணிக்கவேண்டும் என்கிற தனிப்பட்ட நலன் சார்ந்த அஜெண்டா இருந்தது. 1998/1999 காலப்பகுதியில் ஷோபாசக்தி, சுகன் கனகசபை, கற்சுறா முதலிய பாரிஸ் வாழ் ஈழத்தமிழர் அ.மார்க்ஸை பாரீசுக்கு அழைத்தார்கள். அங்கு மார்க்ஸ் அவர்களின் மூளையைக்கழுவி இலக்கியமே எழுதத்தெரியாத சாரு நிவேதிதாவை அவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அவர்கள் அடுத்த வருடம் சாரு நிவேதிதாவை பாரீசுக்கு அழைத்தார்கள். சாரு தன்னை விருந்தினராக அழைத்தவர்களுக்கு அங்கு நிறையத் துன்பங்கள் கொடுத்தார். அவர்கள் இரவல் பெற்றுக்கொடுத்த கமெராவையே திருடிக்கொண்டு இந்தியா வர முயன்றார். அவர்களின் பணத்தைத் திருடினார். பிறகு சாருவே ஓர் இலக்கிய அதிகார மையமாக வந்து இலக்கியத்தைப் பாழ் படுத்தினார். ஒரு விளம்பர நடிக மாடலாக பணம் மற்றும் சலுகைகளைப் பெற்றுக்கொண்டே சாரு இன்றுவரையும் மொக்கை இலக்கியங்களைப் பரிந்துரை செய்து கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் அ.மார்க்சுக்கும் ரவிக்குமாருக்குமிடையில் முரண்பாடு வந்தபின் ரவிக்குமார் காலச்சுவடு சஞ்சிகையோடு நெருக்கமானார். 2000ம் ஆண்டு காலச்சுவடு சஞ்சிகையும் கவிஞர் சேரனின் சரிநிகர் வார இதழும் சேர்ந்து மிகப்பிரமாண்டமான தமிழ் இனி 2000 மாநாட்டை சென்னையில் ஒழுங்கு செய்தார்கள். விடுவாரா அ.மார்க்ஸ்? காலச்சுவடு கண்ணனும் அவர் தந்தையார் சுந்தர ராமசாமியும் பிறப்பால் பிராமணர்கள் என்பதை மட்டுமே வைத்து இந்த மாநாட்டைக் குழப்பப் பல அவதூறுகளைத் திட்டமிட்டுப் பரப்பினார் அ.மார்க்ஸ். அதற்கு உதவியாக ஷோபாசக்தி முதலியவர்களைப் பயன்படுத்தினார். பிறகு ஷோபாசக்தியை முன்னிலைப்படுத்தி தமிழகத்தில் அவரைப் பிரபல்லியமாக்கி ஷோபாசக்தியையே ஓர் அதிகாரமையமாக்கினார். ஓர் அதிகார மையமாக ஷோபாசக்தி இன்று செய்வதென்ன? தன்னைப்போலப் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களின், அவர்களைப் பாதுகாப்பவர்களின் மொக்கைப் படைப்புக்களை அவர்களின் குற்ற வரலாறுகளைப் பணயமாக வைத்துக்கொண்டு முன்னிறுத்துவது. (உதாரணம் கிரிசாந்தின் மொக்கை நாவல்களான கொடிறோஸ், கல்விரல் என்பவற்றை முன்னிறுத்துவது). இதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் ஷோபாசக்தியின் Public Relations ஏஜண்டுகளாக தொழிற்படுகிறார்கள். மறுபுறத்தில் இலக்கியமே எழுத்தே எழுதத் தெரியாதவர்களுக்கு, அவர்களிடமிருந்து பணமும் சலுகைகளும் பெற்றுக்கொண்டு தன்வரலாறு, மற்றும் நாவலை ஒரு Ghost Writer ஆக ஷோபாசக்தி எழுதிக் கொடுக்கிறார். தன் கட்டுப்பாட்டில் இயங்கும் கருப்பு பிரதிகள் பதிப்பகம் மூலமாகப் புலம்பெயர்ந்த எழுத்தாளர்களிடமிருந்து அதிகப் பணம் பெற்று அவர்களின் நூலை வெளியிட்டு பணமோசடி செய்கிறார்.
இலக்கிய அதிகார மையங்கள் யார் முன்னிறுத்தப்படவேண்டும் என்பதைத் தம் தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தியே செய்வார்கள். இது இலக்கியத்திற்கு வலுச் சேர்க்காது. இலக்கியத்தைச் சம காலத்தில் பாழ்படுத்தவே செய்யும். ஆனால் காலம் அதிகார மையங்கள் முன்னிறுத்திய அனைத்துப் படைப்புகளையும் நிராகரிக்கும்.
இப்ப அகரமுதல்வனுக்கு வருகிறேன். அவரும் ஓர் அதிகார மையமாகி இருக்கிறார் என்கிறீர்கள். ஷோபாசக்தியாவது கொரில்லா என்றொரு மாஸ்ரப்பீஸ் குறுநாவலும் சில நல்ல சிறுகதைகளும் எழுதியிருக்கிறார். அகர முதல்வன் எம்மாத்திரம்? காலம் அவர் படைப்புக்களையும் அவர் முன்னிறுத்தும் படைப்புக்களையும் மிக விரைவிலேயே நிராகரித்துவிடும்.
இலக்கியப் பயணத்தில் ஏதேனும் இலக்குகளையும் நோக்கி நகரும் எண்ணங்கள் உண்டா? உண்டு என்றால் அப்பயணத்தில் அடுத்தென்ன?
என் முதல் கவிதைத்தொகுதியான வசந்தம் 91 என் இருபது வயதில் பிரசுரமானது. இரண்டாவது கவிதைத் தொகுதியான எப்போதாவது ஒருநாள் 25 வயதில் பிரசுரமானது. இதே காலப்பகுதியில் நான் சில சிறுகதைகளையும் ஒரு குறுநாவலையும் எழுதினாலும் அவை எனக்கே திருப்தியாக இருக்கவில்லை.
ஒஸ்றேலியாவில் சிட்னி நகரில் குடியேறிய பின் சில கவிதைகளே எழுத முடிந்தது. பிறகு ஒரு பத்தாண்டுகளுக்குப் படைப்பிலக்கியங்களே எழுதவில்லை. ஈழ அரசியல் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளைக் குறிப்பாகப் புலிகளின் பாசிச அரசியலை விமர்சித்த கட்டுரைகளும் சில இலக்கிய விமர்சனங்களுமே எழுதினேன்.
பத்தாண்டுகளின் பின் கமக்காரன் என்கிற சிறுகதையை எழுதியபோது எனக்குத் திருப்தியாக இருந்தது. சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதுவதற்குரிய திறமை வந்தது எனக்கே தெரிந்தது. அதற்குப் பிறகு பிரவாகமாக முன்னையைப் போலக் கவிதைகள் வரவில்லை. ஒரு சில கவிதைகளே எழுதினேன். சிறுகதைகள், நாவல்களே இனி எனது வசதியான வடிவமாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். பின் கர்னலின் காமம் என்கிற நீண்ட சிறுகதை ஒன்று எழுதினேன். அது இன்னும் திருப்தியாக இருந்தது. இக்காலத்திலேயே பல சிறுகதைகளுக்கான சில நாவல்களுக்கான கருக்கள் எனக்குள் உருவாகியது. சிட்னி நகரில் பல ஆண்டுகள் வசித்தபின் ஆங்கிலமும் வசமானபின் இப்போது என்னிடம் ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதுவதற்கான கருவும் இருக்கிறது. ஆனால் என் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனைகளால் அவற்றை எழுத எனக்கு நேரமும் வசதியும் கிடைக்கவில்லை.
கொரோனா காலத்தில் ஒரு வருடம் வேலையில்லாது இருந்தேன். அக்காலத்திலேயே என் Jaffnafashion.com வலைத்தளத்தை ஆரம்பித்தேன். முள்ளும் மலரும் சிறுகதையையும் முகாமுகம் நீள் கதையையும் எழுதினேன். பிறகு வேலை செய்யத் தொடங்கிய பின்னரும் ஓய்வு நேரங்களில் தடையின்றி புனைவுகள் எழுத முடிந்தது. சினிமாக் கலைஞராக வரவேண்டும் என்கிற என் கனவு பாதிக்கனவில் முறிந்தது.
ஆனால் என்னுடைய புனைவுகளைக் குறிப்பாக முகாமுகம் நீள் கதையைப் படித்த பலர் அற்புதமான சினிமா ஆக்கக்கூடியது என்று விதந்துரைத்தார்கள். ஈழத்திலிருந்து தமிழகத்துக்கு வந்து வெற்றிமாறனின் உதவி இயக்குநராக இருந்து இப்போது வெற்றிமாறனின் ஆதரவோடு ஒரு திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருக்கும் ஹசீன் அதம், மூன்று வருடங்களுக்கு முதல் ஒஸ்றேலியா வந்திருந்த போது என் கனகி புராணம் என்ற குறுங்குறு நாவலை (Novelette) படித்துவிட்டுச் சொன்னார்.
“உங்களால் நல்ல திரைக்கதைகளை எழுத முடியும். முழுநேரத் தொழிலாகவும் செய்யலாம். உங்கள் திரைக்கதைகளை விற்றுப் பண மீட்டுவதற்கு நான் உதவத் தயாராக இருக்கிறேன்”
இனி கடவுள் விடும் வழி. பார்ப்போம்.




