வெண்பா கீதாயனின் ‘நீ கூடிடு கூடலே’ கட்டுரைத் தொகுப்பு குறித்த மதிப்புரை
இருபது வருடங்களுக்கு முன்னர் பிரித்தானிய தொலைக்காட்சியில் வெள்ளையினம் அல்லாத ஒருவரை செய்தி வாசிப்பாளராகவோ நிகழ்ச்சித் தொகுப்பாளராகவோ காண்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது. இன்று அப்படியல்ல. கலப்பின சங்கதிகளை காணமுடியும். பல்வேறு கலாச்சாரப் பின்னணி கொண்ட மக்கள் வாழும் தேசமாக மாறிவிட்டது.
பிரித்தானியத் தெருக்களில் நடந்து திரியும்போது பிரித்தானியத் தம்பதிகள், தமது இணையின் கைகளைப் பிடித்தவாறு காதல் ததும்ப புன்னைகையுடன் செல்வார்கள். பிரித்தானியர் அல்லாத வெவ்வேறு கலாச்சாரப் பின்னணி கொண்டவர்களிடம் இவற்றைக் காண்பது மிகக்கடினம். கணவர் முன்னால் நடக்க, பின்னால் குழந்தைகளுடன் தாயார் தயங்கியோ, கணவனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க வேகமாகவோ வந்துகொண்டிருப்பார். அதற்கு முக்கிய காரணம் வளர்க்கப்பட்ட பண்பாட்டின் துளியாக அப்பண்பாட்டில் இருந்து வந்தவர்களாய் இருப்பதுதான்.
இன்னுமொரு தேசத்தில் வாழ்ந்தாலும் அகத்தை அவ்வளவு இலகுவாக மாற்றிக்கொள்ள முடிவதில்லை. அனைத்து விதமான பாவனைகளையும் பிரித்தானியரிடம் இருந்து கவர்ந்து ‘போல’ச் செய்யமுடிகிறது. வார்த்தைக்கு வார்த்தை நன்றி சொல்ல முடிகிறது. சொன்ன நேரத்துக்கு பிசகாமல் வேலைக்குச் செல்ல இயலுகிறது. நீண்ட வரிசையை குழப்பாமல் நிதானமாக நின்று காரியத்தை செய்ய முடிகிறது. அவை பண்பாட்டின் ஓர் அங்கமாக மெல்ல மெல்ல மாறிவிடுகிறது. ஆனால் குடும்ப/காதல் வாழ்க்கையில் தம் இணையிடம் அன்பதைப் பகிர்ந்துகொள்வதில் உள்ள அகவய அணுகுமுறைகளைக் கற்றுக்கொள்ளவே முடிவதில்லை. இந்தக் இந்தக்கற்றுக்கொள்ளல் மறுப்புக்கு பின்னாலுள்ள காரணங்கள் தயக்கமும், வெட்கமும், மென்னுணர்வு சார்ந்த பற்றாக்குறையும்தான்.
காலனியாக்கத்தின்போது கற்றுக்கொண்ட மேலைத்தேய அணுகுமுறைகளில் காதல் விலக்கப்பட்ட தனிஅங்கமாக இருந்திருக்கிறது. காதலில் மெல்லுணர்வு மிக அவசியம்; அது தொடுதல் ஊடாக ஸ்பரிசம் ஊடாக முளைவிட்டு மலர்வது. கீழைத்தேய மனநிலை என்பது இவற்றை அந்தரங்கமான விடயங்களாகக் கருதுகிறன. மிகத்தனிமையான அறையில், அல்லது யாருமற்ற பிரதேசத்தில் இணையுடன் வெளிப்படுத்தும் செயல்பாடாகக் கொள்கிறது. நம் நாட்டில் துப்பட்டாவை முகம் முழுவதும் மறைத்தோ, தலைகவசம் அணிந்தோ மற்றவர்களுக்கு பயந்து பயந்து எங்கேயோ புதர்மறைவில் மறைமுகமாக ஒதுங்க வேண்டியுள்ளது. பூங்காவில்கூட பெரிய மரமாகப் பார்த்துச் செல்ல வேண்டியுள்ளது.
வெண்பா கீதாயனின் “நீ கூடிடு கூடலே” மின்புத்தகத்தை வாசித்தபோது கவர்ந்தது மெல்லுணர்வுகள் சார்ந்து தொட்டு எழுதியிருக்கும் முதிர்ச்சித்தன்மைதான். இப்புத்தகம் எப்படி இணை ஒன்றை அமைத்துக்கொள்ளுதல் என்பதை விளக்கும் புத்தகம் அல்ல. இணைந்து வாழ்தலில் ஏற்படும் புரிதல் இன்மையை புரிந்துகொள்ள வைக்கும் புத்தகம். சுருங்கச் சொன்னால் காதலை திகட்டத்திகட்ட அக்கறையாக துணையிடம் வெளிப்படுத்தும் தன்னுணர்வை மெருகூட்டுதல் எனலாம். இந்தவகை ஜோனரில் தமிழில் புத்தகங்கள் எழுதப்படுவது வெகுகுறைவு. பத்துவருடத்துக்கு ஒருமுறை எழுந்துவரும் ஒவ்வொரு தலைமுறைகளுக்கு இடையே பல்வேறு வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கும். ரசனையில் இருந்து வாழ்வியல் முறைகளிலும் பல்வேறு மாற்றங்களைக் காண இயலும். உலகமயமாதலின் பல்வேறு விளைவுகளின் செல்வாக்கினால் இவை நிகழ்வது.
‘நீ கூடிடு கூடலே’ சமகாலத்து யுவன் யுவதிகளின் வாழ்க்கை முறை சார்ந்து எழுதப்பட்ட புத்தகம். இணைய பாவனை, சமூக வலைத்தள உருவாக்கத்தின் பின்னர் எழுந்து வந்த தலைமுறைக்கு அணுக்கமானது. ஆனால், இதனை அவர்கள் மட்டும்தான் படிக்க வேண்டுமா என்றால், இல்லை. (எல்லோருக்கும் உரியதாக காதல் என்ற வஸ்து இருக்கவே செய்கிறது.)
இப்புத்தகத்தை ‘உறவு முறையில் ஏற்படும் விரிசல்கள்’, ‘அதிகாரப்படுத்துவதினால் உருவாகும் சிக்கல்கள்’, ‘உடைமையுணர்வு (பொஸசிவ்)’ வெளிப்பாடுகளில் இருக்கும் புரிதல் குழப்பங்கள்’ என்று மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கலாம். மூன்றுமே புரிதல் இன்மையால் ஏற்படும் விளைவுகளாக சுட்டிக்காட்டப்படுகிறது. நிலப்பிரபுத்துவ சமூகத்திலிருந்து முதலாளித்துவ சமூகத்துக்கு மாறிய சமூகமாக நாம் இருக்கிறோம். மெல்ல மெல்ல இன்னபிற வசதிகளை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறோம். இச்சூழல் ஒவ்வொரு மனிதனையும் அந்நியப்படுத்தி தனித்தீவாக்குகிறது. தனியாக இருக்கிறேன் என்பது வேறு, தனிமையில் இருக்கிறேன் என்பது வேறு. தனிமை என்பது கூட்டமாக சேர்ந்து வாழ்ந்தாலும் அத்தனை சீக்கிரம் வெளியேற்ற முடியாத உலோகப் பூச்சாக தனிமனிதனுக்குள்ளே ஒட்டிக்கொண்டே இருக்கிறது. இதுவரையிருந்த தலைமுறைகளில் இருந்து தற்போது இளமையில் இருக்கும் தலைமுறை அனுபவிக்கும் பிரச்சினைகளில் முதன்மையானது இந்த அகத்தனிமை என்ற பிரச்சினை. கூர்மையாகப் பார்த்தால் உறவுகளின் மீதான விலக்கம், குடும்ப அமைப்பின் மீதான விரக்கிதான் இதற்கான காரணமாகத் தோன்றுகிறது. இதற்குள் இருந்து எத்தனை தூரம் விலத்தி ஓடினாலும் மீண்டும் மீண்டும் அதற்குள்ளேதான் திரும்பி வரவேண்டியுள்ளது. துணை இல்லாமல் அகத் தனிமையை களையவே முடிவதில்லை. அதற்கான துணையை பரஸ்பரம் கண்டறிதல் என்பது அதிஷ்டவசமாக நிகழும் ஒன்றல்ல. அப்படி அமையாவிடினும் கிடைத்த துணையைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப இயங்குதல் என்பது கடினமான ஒன்றாகவே இருக்கும்.
காதல் திருமணமும் சரி, ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமும் சரி அதிகளவான முறிவில் போய் முடிவடைகின்றன. ஒருவருடம் சேர்ந்து வாழ்தல் என்பதே கடினமாக மாறிக்கொண்டே இருக்கிறது. இதற்கென்ன காரணம்? இந்த தலைமுறையிடம் ஒப்பிடும்போது, முன்னைய தலைமுறைகளில், பிரிவும், முறிவும் மிகக்குறைவாகவே இருந்திருக்கிறது. அதற்காக, சகிப்புத்தன்மை குறைவடைந்திருக்கிறது என்று சொல்லிவிட இயலாது. இந்தத் தலைமுறை அடைந்திருக்கும் உலக விரிவும் அதற்குரிய காரணங்களில் ஒன்றாக இருக்க முடியும் என்கிறது நீ கூடிடு கூடலே புத்தகம். வாட்ஸப், மெசெஞ்சர், காணொளி அலைபேசி அழைப்பு என்று தொழில்நுட்பங்கள் தொலை தூரத்திலுள்ள மனிதர்களை இன்னும் இன்னும் சிறிய வட்டமாக்கி மிகஅருகே இருத்தி வைக்கிறது. முன்னைய காதலிலிருந்த தொலை தூர விலகலை இல்லாமல் செய்கிறது. இருந்தும் இந்த முறிவுகளுக்கு பின்னே இருப்பதில் உள்ள பிரச்சினைகாலில் முதன்மையானது நம்பகத்தன்மை இல்லாமை. நம்பகத்தன்மையை உருவாக்கத் தவறிவிடுகிறோம். அல்லது நம்பிக்கையை கொடுத்துவிட்டு மோசடி செய்கிறோம். பிரிவுக்கான ஆரம்ப சண்டைகள் மிக எளிய விஷயங்களிலிருந்து ஆரம்பிக்கின்றன. ஏன் அவனுக்கு/அவளுக்கு ஃபேஸ்புக்கில் “ஹார்டின்” விட்டாய் – என்று ஆரம்பிக்கும் விவாதங்கள்கூட நாளடைவில் கசந்து பிரிந்து போய்விடலாமா என்கிற சிந்தனையை வலுப்படுத்தியும் உள்ளது என்பதை நினைக்க வேடிக்கையாக இருந்தாலும் உண்மையாகவும் இருக்கின்றது, பிரிவுகளும் நேர்ந்துள்ளது.
உடைமையுணர்வு இணைந்து வாழ்தலின் அச்சாணி என்றுகூட சொல்லலாம். ஒருவர்மீது ஒருவர் பற்றுக்கொள்ள அடிப்படையாக இருப்பது இந்த உடைமையுணர்வு. தன் துணையை தனக்குரிய விசேஷமான நபராக ஆக்கிக்கொள்கிறது. மறைமுகமாக இணையிடம் தன் இடத்தையே முதன்மையான இடத்தில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. இதைச் சுற்றி முளைக்கும் அகங்காரங்கள், மோதல்கள், ஊடல்கள் ஊடாகத்தான் இணைந்து வாழ்தல் சாத்தியமாகிறது. ஆனால், இந்த உடைமையுணர்வு உருவாக்கும் விளைவுகளை எப்படிக் கையாள்வது என்பதில் இருக்கும் குழப்பங்கள் மென்னுணர்வு பற்றாக்குறையாகவும் இப்புத்தகம் ஆராய்கிறது. அதேநேரம் உடைமையுணர்வு காதலுக்குத் தேவை இல்லை; உன் காதலியை உடைமையாக்காதே என்று சமூகவலைத்தளத்தில் உருவாக்கப்படும் விவாதச் சுழல்களையும் அதற்குப்பின்னே இருக்கும் ஃபளடர்கள் உத்தியையும் இப்புத்தகம் இரக்கமே இல்லாமல் குத்தி கீறிக்காட்டுகிறது. அந்த மாயைக்குள் வீழ்பவர்கள் அதிகம் இல்லத்தரசிகளாக இருக்கிறார்கள். அவர்களது தனிமையைப் பயன்படுத்தி சமூக வலைத்தளம் ஊடாக நுழையும் ஆண்கள் முதலில் அவர்களின் ஏதாவது ஒரு இயல்பை தந்திரமாகப் பாராட்டுகிறார்கள். பின்னர் நீங்கள் எவ்வளவு விஷேசமானவள், உங்கள் இணை உங்களைப் பண்டமாக்குகிறார் என்ற எண்ணத்தை விதைக்கிறார்கள். காதலையும் அன்பையும் அறிவார்ந்த ரீதியாகப் பேசி தம்மை அறிவார்ந்த சுவாரஸ்யமான நபராகக் காட்டிக்கொள்கிறார்கள். இதனால் சரிந்த உறவுகளின் எண்ணிக்கை பெருக்கெடுக்கிறது. காதலைக் கோட்பாடுகள் ஊடாகப் பேச சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் செயலில் இருக்கும் முட்டாள்தனங்களும், சண்டைகளும்தான் அதனை உயிர்ப்புடன் வைத்திருக்கும். இந்த இரண்டு இடைவெளிகளையும் வெண்பா தேர்ந்த கண்ணோட்டத்துடன் அணுகியிருக்கிறார்.
தனக்குரியவருக்கு முதன்மையான நபராக காட்டிக்கொள்ள உடைமையுணர்வு அடிப்படையாக இருப்பினும் அதைக் கையாள்வது என்பது எளிய அன்றாட விசயங்கள்தான். இந்த விஷயத்தில் வெளிப்படைத்தன்மை என்பது மிக அவசியம். இது அவர்களின் குண நலன்களுக்கு ஏற்ப வேறுபடலாம். முன்னைய காதல்களை இன்றைய காதலன்/காதலியிடம் சொல்லும்போது புண்படுத்தாமல் குறிப்பு வடிவில் எப்படி சொல்லிச் செல்வது என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. மனித மனம் ஒப்பீடுகள் ஊடாக எடைபோட்டுக் கொண்டிருக்கும். ஒருவரைப் புண்படுத்த ஒப்பீட்டுப் பேசுவதும் மட்டம் தட்டுவதும் கடுமையான மனக்காயங்களை உருவாக்கவல்லது. பல சமயம் தெரிந்தே இதைக் கையாள்வதும் நிகழ்வது; பெரும்பாலான பிரிவுகள் இதன் அடிப்படையில் ஏற்படுவது. இதிலுள்ள உபவிளைவுகளில் ஒன்று தாழ்வுச் சிக்கல் சார்ந்த பிரச்சினை. பல காதலர்களுக்கு அடியில் ஓடும் கசப்பான நதியாகத் தாழ்வுச்சிக்கல் இருக்கின்றது. ஒருவர் பிறிதொருவராக தங்களை வெளிக்காட்டிக்கொள்ள முயல்வதற்குப் பின்னுள்ள உளவியல் மடிப்பின் கீறல்கள் இதுசார்ந்த பிரச்சினைகள். தங்கள் ஆளுமை சார்ந்து சுயமாக தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் காதலி/காதலனுக்குப் பிடித்த வகையில் தங்களைக் காட்டிக்கொள்ள முனைகிறார்கள். இது இணையைக் கவர்ந்து கொள்ள முனையும் அப்பாவித்தனம் நிறைந்த உத்திதான். வெண்பா கீதாயன் இதை அதிகம் ஆண்கள் சந்திக்கும் பிரச்சினையாக குறிப்பிடுகிறார். ஆண்கள் பிறிதொரு ஆளுமையை தங்களது ஆளுமையாக நகல் எடுப்பதற்கு அதிக காரணம் தன்னை விசேஷமானவன் என்று காட்டிக் கொள்ள முனைவதால் நிகழ்வது. இதுவொரு போலியான தழுவல் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள நாட்கள் அதிகம் எடுக்கும். ஆனால், பெண்கள் முதலில் அதை ஆர்வமாகக் கவனித்தாலும் விரைவிலே உணர்ந்து சலித்துவிடுவார்கள். பின்னர் அதையே கேளிக்கைக்குரிய விஷயமாக தங்கள் தோழிகளுடன் பகிரத் தொடக்கிவிடுவார்கள். தன்னிடம் என்ன விசேஷமான இயல்பு இருக்கின்றது என்பதை நிச்சயம் அவனுக்கு அணுக்கமான பெண்கள் அனேகமாக கண்டுபிடித்துவிடுவார்கள். இதில் தன்னை கண்டடைபவர்களே எப்போதும் சுயம் நிறைந்து இணைக்குப் பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.
திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் (லிவிங்டூகெதர்) என்பது பெரு நகரங்களில் சாத்தியமாகி வருகிறது. காலனியாக்கம் விக்டோரிய ஒழுக்கங்களை நம் சமூகத்தில் புகட்டியது. அவர்களின் சட்டங்களே ஒழுக்கத்தைத் தீர்மானித்தது. மெல்ல மெல்ல நம் பண்பாட்டுடன் கலந்து இறுகியது. நமது பண்பாட்டின் ஆணிவேர்களைத் தேடினால் மிகச் சுதந்திரமானவர்களாக வாழ்த்திருப்பதை அறியலாம். பல்வேறு இனக்குழுக்களாக வாழ்ந்திருந்தாலும் தமக்கிடையே நவீனத்துவமாக பல்வேறு ஒழுக்க முறைகளை வைத்திருந்ததைக் காணலாம். இவற்றை ஒற்றைப்படுத்தி ஒழுக்கம் என்ற பிடிக்குள் கனவான் தன்மையான சீர்திருத்தங்களாக மாற்றியதில் விக்டோரிய சட்டங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது. ஓரினச்சேர்க்கையாளர்களை அருவருக்கத்தக்கவர்களாக மாற்றியதும் இந்த காலனியாக்க சட்டங்கள்தான். அன்றைய பிரித்தானியாவும் இன்றைய பிரித்தானியாவும் ஒன்றல்ல. இன்று எந்த சட்டத்தை உருவாகினார்களோ அவர்களே அதிலிருந்து உடைந்து பன்மைத்தன்மைக்குள் நுழைந்துவிட்டார்கள். எனினும் காலனியாக்க நீக்கத்தின் பின்னரும் நமது சமூகங்கள் இன்னும் விக்டோரியா மனோபவத்திலே இயங்குகின்றன.
இன்றைய மேற்கத்தேய உலகுடன் நம் பண்பாட்டை ஒப்பிட்டுக் கீழிறக்கவும் முடியாது. அதை காலனியாக்கம், அதற்கு முன்னைய காலம் சார்ந்தே விரிவாக அணுக வேண்டும். பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட கலாச்சார உடைவுகள் தனிமனிதனின் சுதந்திரத்தை அதிகம் முன்னிறுத்தியது. அதற்குப் பின்னர் ஏற்பட்ட வாழ்வியல் முறைகளில் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் என்பது இன்னும் சாதாரணமாகியது. ஆண் மைய பொருளாதாரத்தை முன்னிறுத்திய குடும்ப அமைப்பை தகர்த்த பின்நவீனத்துவ விடயமாகவும் லிவிங்டூகெதர் இருக்கிறது. உழைப்பைப் பகிர்ந்து வாழ்தல் என்பது லிவிங்டூகெதரிலே அதிகம் சாத்தியமாகியது. அதனாலேயே மேற்கத்திய யுவன் யுவதிகள் அதற்குள் நுழைகிறார்கள். குடும்ப உறவுக்குள் இருக்கும் அகவயமான அத்தனை விடயங்களும் லிவிங்டூகெதர் உறவுக்குள்ளும் இருக்கும். பரஸ்பர புரிதலுக்குப் பின்னர் எதிர்கால விடயங்களுக்காக (சங்கதி விருத்தி, அசையாச் சொத்துகள்) சட்ட ரீதியாகத் திருமணம் செய்கிறார்கள்.
இந்த லிவிங்டூகெதர் அமைப்பை நம் சமூகத்திற்கு இடையே முயலும்போது ஒழுக்கம் இன்மையான விடயமாகப் பார்க்கப்படுகிறது. பாலியல் தேவைக்காகக் கூடும் வயசுக் கோளாறாக நோக்கப்படுவதால் குடும்ப உறுப்பினர்கள் இடையே வரவேற்பு பெறுவதில்லை. லிவிங்டூகெதர் உறவு உடைய நேரும்போது அதிகம் பாதிப்படைவது பெண்ணாகவே இருக்கிறாள். அவளது கடந்தகால வாழ்க்கை இலவச சந்தைப் பொருளாக்கப்படுகிறது. இதையும் மீறி துணிச்சலாக லிவிங்டூகெதரை முயல்பவர்களின் உறவுகள் ஏன் முறிகின்றன என்பதற்கான விடைகள் மிக எளிமையானவையாக இருப்பது ஆச்சரியப்படத்தக்கது. ஏறக்குறைய குடும்ப அமைப்பில் ஏற்படும் அதே நெருக்கடிகள்தான். இவற்றை உதாரண சம்பவங்கள் ஊடாக வெண்பா கீதாயன் நன்றாகவே விளக்கியிருக்கிறார்.
முத்தத்தையும் கலவியையும் பற்றி பக்கம் பக்கமாக எழுதிய வாத்சாயனரின் இந்தியப் பண்பாட்டில் வந்த நாம் அவை பற்றி அதிகம் பிரக்ஞை இன்றியே இருக்கிறோம். முக்கியமாக ஆண்களின் அணுகுமுறை. எதிர்ப்பாலின அவயங்கள் சாந்திருக்கும் நீண்ட கால கற்பனைகள் திரையரங்கு மறைவிலோ, குடைக்குக்கீழ் கடற்கரையில் ஒதுக்கும்போதோ என்னவென்று பார்த்திடவேண்டும் என்ற அதீத பதட்டமான ஆர்வத்தில் செய்துபார்க்கும் அணுகுமுறைகள் காதலுக்குரிய மெல்லுணர்வுகளுடன் இருப்பதில்லை. பாலியல் வறட்சியின் வெளிப்பாடாகவே இருக்கிறது. இணையின் உடல் பரிச்சயம் ஆனாலே அதிலிருக்கக்கூடிய பதட்டங்கள் நீங்கும். இதற்கான வழிமுறைகளில் பிரதானமானதாக இப்புத்தகத்தில் சுட்டிக்காட்டப்படுவது ‘கட்டியணைத்தல்’. ஆண் பாதுகாப்பான அணைத்தலை இணையிடம் வெளிப்படுத்தும்போதே அவள் பாதுகாப்பை உணர்கிறாள். இதிலிருந்து துளிர்விடும் உணர்வுகள் சகஜ நிலைக்குக் கொண்டு செல்கிறது என்பதை வெண்பா விளக்கியிருக்கிறார். அக்கறைகளை வெளிக்காட்டும்போது கோபத்தையே முன்னிலைப்படுத்துகிறோம். அவை வசைகளாக வரும்போதே அதன்பின்னேயுள்ள அக்கறை மறைந்து போய்விடுகிறது. இவற்றை வெளிப்படுத்தும் அணுகுமுறைகள் சார்ந்து எழுதியிருக்கும் பகுதிகள் தேர்ந்த அவதானிப்புகளைக் கொண்டிருப்பது புன்சிரிப்புடன் மெலிதாக வியக்கவைக்கிறது.
இப்புத்தகம் இருபாலருக்கும் உரியது எனினும் மறைமுகமாக ஆண்களின் புரிதல் இன்மை சார்ந்தே அதிகம் பேசும் தொனியில் இருக்கிறது. பெண்களின் அவசரத் தன்மை, பாராட்டுகளுக்கு ஏங்கும்போது இணைக்குக் கிடைக்கும் எதிர்வினைகள், பெண்கள் பரிசுப் பொருட்களை இணையிடம் இருந்து வாங்கும்போது வெளிப்படுத்தும் எதிர்வினைகள் என்று கவனிக்கத் தவறுகிற நுண்மையான வாழ்வியல் மடிப்புக்களைத் தேர்ந்த உதாரணங்களுடன் எழுதப்பட்டிருப்பது இன்றைய கால யுவன் யுவதிகளுக்கு அதிகம் உதவக்கூடும்.
திருமணம் என்ற அமைப்பு முறைக்குள் மேற்கத்தியச் சமூகமே திரும்பிக்கொண்டிருக்கும் போது, அதிலிருந்து வெளியேற விரும்பும் இந்திய மனஅமைப்பில் இருக்கும் முரண்களும் அதற்கான காரணங்களும் இப்புத்தகத்தில் இருக்கின்றன. மேலதிகமாக சொல்லவேண்டும் எனில் பொருளாதாரம், தனிமனித சுதந்திரம் என்பதைத்தாண்டி வாழ்கையில் எக்கச்சக்கமான விடயங்கள் புதைந்தே இருக்கின்றன. எல்லோருக்கும் காதலிக்க சந்தர்ப்பங்கள் கிடைப்பதில்லை, கிடைத்தவர்களும் சரியாகக் காதலிப்பதில்லை. முடிந்தவரை அவற்றை இனிமையான அனுபவங்களாக மாற்றிக்கொள்ள இப்புத்தகம் உதவும்.
ஆண் பெண் உறவுச்சிக்கல்கள் தொடர்ச்சியான பேசுபொருளாக எப்போதும் இருப்பன. தலைமுறை தலைமுறையாக அதன் வடிவங்கள் மாறினாலும் புரிதல் இன்மையும், அகங்காரமும் அதன் மைய ஊற்றாக இருப்பன. காமம் என்பது ஒரு பசியாக இருப்பினும் அன்பும் காதலும் அதோடு கலந்து வேறுபட்டது. வெறுமே சந்ததி விருத்திக்காகத் திருமணம் செய்வதில்லை. ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தேவையாகவே இருக்கிறார்கள். முதுமையை நோக்கிச் செல்லச்செல்ல காமம் நீர்த்த அன்பே நடுவே நெகிழ்ந்து போயிருக்கும். அப்படியான உறவை வளப்படுத்திக் கொல்வதற்கான வாழ்க்கை நோக்கை இப்புத்தகம் அளிக்கிறது. திருமண உறவுகள் சார்ந்த நம்பிகையீனம், சமூகவலைத்தளத்திற்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் குறுகிய மெய் நிகர் உறவுகள் குமிழ்களாக உருவாகி வெகுச்சீகிரதிலே நீர்ந்து போவதை புரிதலற்று விருப்பும் தலைமுறைக்கான எதிர்வினையாகவும் இத்தொகுப்பைக் கொள்ளலாம்.
புத்தகம் வாங்க இங்கே சொடுக்கவும்
-அனோஜன் பாலகிருஷ்ணன்-
ஏன் எனக்கு வலிக்கிறது. அந்த பையன் அந்த பெண்ணின் கையை கிள்ளி உதறிவிட்டு ட்ரெயினில் ஏறிவிடுகிறான். கண்ணீர் மலங்க அவள் ப்ளாட்பாரத்திலேயே நின்று விடுகிறாள்.
எல்லாமே விளையாட்டு இந்த தலைமுறையினருக்கு.
” முத்தத்தையும் கலவியையம் பற்றி பக்கம் பக்கமாக எழுதிய வாத்சாயனரின் இந்திய பண்பாட்டில் வந்த நாம் அவைப்பற்றி அதிகம் பிரக்ஞை இன்றியே இருக்கிறோம் ” என்ற வரிகள் தமிழக இலக்கியவாதிகள் கவனிக்கப்பட வேண்டிய செய்தி.
ந க துறைவன்.