பால்தசாரின் அற்புதப் பிற்பகல்

பால்தசாரின் அற்புதப் பிற்பகல் (Balthazar`s Marvelous Afternoon)

ஸ்பானியம்: காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் (Gabriel Garcia Marquez)

ஆங்கிலம் : ஜே.எஸ். பர்ன்ஸ்டீன் (J.S.Bernstein)

தமிழில் : ச.ஆறுமுகம்.


கூண்டு செய்தாகிவிட்டது. ஆண்டாண்டுப் பழக்கத்தை விட்டுவிடமுடியாமல், பால்தசார் அதை இறவாணத்தில் தொங்கவிட்டான். அவன் மதிய உணவினை உண்டு முடிப்பதற்குள்ளாகவே,  எல்லோரும் அது, உலகத்திலேயே மிகமிக அழகான கூண்டு எனச் சொல்லத் தொடங்கியிருந்தனர். அதனால் ஏராளமான மக்கள் அதைப் பார்க்க வந்து, அவன் வீட்டின் முன்பு பெரிய கூட்டம் கூடவே, பால்தசார் அதைக் கழற்றிவிட்டுக் கடையை மூட வேண்டியதாயிற்று.

”நீங்கள் சவரம் செய்யவேண்டும்.” அவன் மனைவி ஊர்சுளா அவனிடம் சொன்னாள். “நீங்கள் ஒரு காப்புச்சின் சாமியார் மாதிரித் தெரிகிறீர்கள்.”

”மதியச் சாப்பாடு சாப்பிட்டதும் சவரம் செய்வது கெடுதல்” என்றான், பால்தசார்.  

அவன் முகத்தில் இரண்டு வாரத் தாடி, குட்டையும் தடிமனுமாகக் கோவேறு கழுதையின் பிடரி மயிர்போலத் தடித்த குறுமுடி அடர்ந்திருந்தாலும், பொதுவான தோற்றத்தில் பயந்துபோன ஒரு சிறுவனாக இருந்தான். ஆனால், அது ஒரு தவறான தோற்றம். பெப்ருவரியில் அவன் முப்பது கடந்திருந்தான்; அவன் ஊர்சுளாவுடன் நான்கு ஆண்டுகளாகத் திருமணம் செய்யாமல், குழந்தைகளும் இல்லாமல் குடும்பம் நடத்துகிறான். மிகவும் கவனமாகத் தற்காத்துக்கொள்வதற்கான பல காரணங்களை வாழ்க்கை அவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தது. எனினும் அவற்றில் எதுவும் பயப்படும்படியாக இல்லை. அவன் எளிதாகச் செய்துமுடித்த கூண்டு பலருக்கு உலகத்திலேயே மிகமிக அழகான ஒன்றாகத் தோன்றியதுகூட அவனுக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. அவனைப் பொறுத்தவரையில், குழந்தைப் பருவத்திலிருந்தே கூண்டுகள் செய்வது பழகிப்போனதுடன், அது அவனுக்கு வேறு எதனையும் விடக் கடினமானதாக இல்லவேயில்லை.

‘அப்படியென்றால் சிறிது ஓய்வெடுங்கள்,” என்றாள், அந்தப் பெண். “இந்தத் தாடியோடு வேறெங்கு போய் முகம் காட்டுவீர்கள்!”

ஓய்வெடுக்கும்போது, அக்கம்பக்கத்தவருக்கு அந்தக் கூண்டினைக் காட்டுவதற்காக அவன் பலமுறை ஏணையிலிருந்தும் இறங்கவேண்டியிருந்தது. ஊர்சுளா அதுவரையிலும் அதைப்பற்றிக் கண்டுகொள்ளவேயில்லை. அவளுக்குப் படு எரிச்சல்; என்னவெனில், அவள் கணவன் தச்சுக்கடை வேலையைக் கவனிக்காமல், இரண்டு வாரங்களாகச் சரியாகத் தூங்காமல், முழுக்க, முழுக்க அந்தக் கூண்டிலேயே, அதை அப்படியும் இப்படியும் திருப்பிச் சரியாக வராத இடங்களில் முணுமுணுத்து, இரண்டு வாரங்களாக முகம் மழிக்கும் நினைவு கூட இல்லாமல், அந்தக் கூண்டு செய்வதிலேயே கழித்தான். ஆனால், அவளுடைய அந்த எரிச்சல் எல்லாம் அந்தக் கூண்டினைப் பார்த்தவுடன் குளிர்ந்து போயிற்று. மதியத் தூக்கத்திலிருந்து பால்தசார் எழுந்தபோது, அவள், அவனுடைய காற்சட்டை, மேற்சட்டையை அழகாகத் தேய்த்து வைத்திருந்தாள். அவள் அவற்றை ஏணையின் பக்கத்திலிருந்த ஒரு நாற்காலி மீது தொங்கப் போட்டிருந்தாள். கூண்டினை எடுத்து, உணவு மேசை மீது வைத்து, அதையே வைத்த கண் வாங்காமல் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இதற்கு எவ்வளவு கேட்பாய்?” எனக் கேட்டாள், அவள்.

”தெரியவில்லை,” பால்தசார் பதில்சொன்னான். “அவர்கள் இருபது பெசோ கொடுக்கிற மாதிரித் தெரிந்தால், நான் முப்பது கேட்பேன்.”

“ஐம்பது கேளுங்கள்,” என்றாள், ஊர்சுளா. ‘கடந்த இரண்டு வாரமாக நீங்கள் சரியாகத் தூங்கவேயில்லை. அதிலும் இது நிரம்பவுமே பெரிது. என் வாழ்க்கையிலேயே இவ்வளவு பெரிய கூண்டினை இப்போதுதான் நான் பார்க்கிறேனென்று நினைக்கிறேன்.”

பால்தசார் முகம் மழிக்கத் தொடங்கினான்.

‘’அவர்கள் ஐம்பது பெசோ தருவார்களென்றா நினைக்கிறாய்?”

‘’செப் மான்டியெலுக்கு அதெல்லாம் ஒன்றுமேயில்லை. அதிலும் கூண்டு அந்த அளவுக்குப் பெறுமானமுள்ளது, சும்மாவா.” என்றாள், ஊர்சுளா. “ நீங்கள் அறுபது கூடக் கேட்கலாம், அறுபதே கேளுங்கள்.”

நிழலில், மூச்சு வாங்கிப் படுத்துக் கிடந்தது, வீடு. அது ஏப்ரலின் முதல் வாரம். வெக்கை கொஞ்சம் தாக்குப் பிடிக்கக்கூடியதாகத் தோன்றியதே சில்வண்டுகளின் சிலிர்க்கும் ரீங்காரத்தில்தான். உடையணிந்து முடிந்ததும், வீட்டைக் கொஞ்சம் குளிர்விக்கலாமேயென, பால்தசார் முற்றத்துக் கதவைத் திறந்ததும், குழந்தைகள்  பட்டாளம் உணவறைக்குள் புகுந்தனர். 

செய்தி பரவியிருந்தது. டாக்டர் ஆக்டேவியா கிரால்டோ, வயதான ஒரு மருத்துவர்,  வாழ்க்கையென்னவோ மகிழ்ச்சிதான், ஆனால் தொழிலால் களைத்துப்போனவர், பால்தசாரின் கூண்டு பற்றி அவரது ஆற்றலிழந்த மனைவியோடு மதிய உணவருந்தும்போது நினைத்தார். வெப்பம் அதிகமான நாட்களில் உணவு மேசை அமைக்கும் உட்பக்கமான மொட்டை மாடித் தளத்தில் அதிகமான பூத்தொட்டிகளும் பாடும் பறவைகளுள்ள கூண்டு இரண்டும் இருந்தன. அவரது மனைவி பறவைகளை நேசித்தாள். அவள் பறவைகளை அதிகம் நேசித்ததாலேயே, பூனைகளை வெறுத்தாள். ஏனென்றால், அவை பறவைகளைத் தின்றுவிடுமென்பதால்தான். அவளைப் பற்றி நினைத்துக்கொண்டே, டாக்டர் கிரால்டோ பிற்பகலில் ஒரு நோயாளியைப் பார்க்கச் சென்றவர், திரும்பும்போது, கூண்டினைப் பார்துவிடலாமேயென பால்தசாரின் வீடு வழியாக வந்தார்.

உணவறையில் ஆட்கள் கூட்டமாக நின்றனர். கூண்டு, மேசை மீது பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது – மாபெரும் கம்பிக் குவிமாடத்தினுள் மூன்று தளங்கள், உட்செல்ல, வெளிவர, வழிகள், படிகள், தூங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் தனித்தனி அறைகள், பறவைகள் பொழுது போக்கிடத்தில் ஊஞ்சல்களுடன், மாபெரும் பனிக்கட்டித் தொழிற்சாலை ஒன்றின் சிறுதொழில் மாதிரி வடிவமைப்பு போன்றிருந்தது. டாக்டர் அதனைத் தொடாமலேயே மிகக் கவனமாக நுணுகி, நுணுகிப் பார்த்துவிட்டு, கூண்டு அது பெற்றிருக்கும் புகழுக்கும் மேலாகவே தகுதியானதென்றும் அவரது மனைவிக்குக் கொடுக்கவேண்டுமென அவர் கனவு கண்டதைவிடவும் மிகமிக அழகாயிருப்பதாகவும் கருதினார்.

‘’இது, கற்பனை உச்சத்திற்கும் மேலாகப் பறந்தேறுதல், “ என்றார், அவர். அந்தக் கூட்டத்திலிருந்தும் பால்தசாரைப் பிரித்தழைத்து, தாய்மைப் பண்பு மிளிரும் கண்களை அவன் மீது ஓடவிட்டதோடு, “ நீ அசாதாரணமான கலைத் திறமையுள்ள ஒருவனாகத் தானிருக்கவேண்டும்.’’ என்றும் நாத் தழுதழுத்தார்.

பால்தசார் முகம் சிவந்தான்.

”நன்றி,” என்றான், அவன். 

“இது, உண்மை,” என்றார், டாக்டர். இளமையில் அழகாக இருந்த ஒரு பெண் போல அவர் வழுவழுவென மென்மையாகக் கொழுத்துக் காணப்பட்டார். அவரது கைகளும் மென்மையாகவே தோன்றின. அவரது குரல் லத்தீன் மொழி பேசும் மதகுருவின் குரல் போலத் தோன்றியது. “ நீங்கள் இந்தக் கூண்டுக்குள் பறவைகளை அடைக்க வேண்டியதேயில்லை,” என்ற அவர் அந்தக் கூண்டினை ஏலம் விடுவதைப் போலப் பார்வையாளர்களுக்கு முன்பக்கம் தெரியுமாறு திருப்பினார். “மரங்களில்  கட்டித் தொங்கவிட்டாலே போதும், அதுவாகவே பாடத் தொடங்கிவிடும்.” மீண்டும் அதனை மேசையின் மீது அமரவைத்த அவர், கூண்டினைப் பார்த்தவாறே, ஒரு நிமிடம் யோசனையில் ஆழ்ந்துவிட்டுப் பின் சொன்னார் : “ அருமை. நான் இதை எடுத்துக்கொள்கிறேன்.”

”அதை விற்றாகிவிட்டது.” என்றாள், ஊர்சுளா. 

திருவாளர். செப் மான்டியெலின் மகனுக்குச் சொந்தமானது அது,” என்றான், பால்தசார். “அவர் இதை மிகச்சிறப்பானதாகச் செய்யச் சொன்னார்.”

டாக்டர் மிகவும் மரியாதைக்குரிய ஒரு உளப்பாங்கினைக் கைக்கொண்டார்.

“அவரா இதற்கான உருவரைவினைக் கொடுத்தார்? 

‘’இல்லை,” என்றான், பால்தசார். “அவருக்கு இதைப் போல ஒரு பெரிய கூண்டு, ஓரிணை ட்ரௌப்பியல்களுக்காக வேண்டுமென்றார்.”

             ட்ரௌப்பியல் (வெனிசுலா)

             

 டாக்டர் கூண்டினைக் கூர்ந்து  நோக்கினார். 

‘’இது ட்ரௌப்பியல்களுக்கானதாகத் தெரியவில்லையே,” என்றார்.

“அவற்றுக்கானது தான், டாக்டர்,” என்றான் பால்தசார், மேசையை நோக்கி வந்தவாறே.

குழந்தைகள் அவனைச் சூழ்ந்துகொண்டார்கள். அவன், ஆட்காட்டி விரலால் பல்வேறு அறைகளையும் சுட்டிக் காட்டியவாறே “எல்லா அளவுகளையும் கவனமாகக் கணக்குப் போட்டுச் செய்திருக்கிறேன்.” என்றான், பின்னர், அவன் விரல் மூட்டுகளை மடக்கிக் கூண்டின் உச்சியில் ஒரு தட்டுத் தட்டியதும் கூண்டு முழுவதிலுமுள்ள கம்பிகள் அதிர்ந்து ஒத்த ஒரு இசையொலியை எழுப்பின. ”கிடைப்பதிலேயே அதிக வலுவான கம்பி, ஒவ்வொரு இணைப்பிலும் உள்ளும் வெளியிலுமாக உருக்கிய ஈயப்பற்று,” என்றான், அவன்.

“இது கிளிக்குக் கூடப் போதுமான அளவுக்குப் பெரிது,” என்று இடையிட்டது, குழந்தைகளில் ஒன்று.

”அதேதான், “ என்றான் பால்தசார்.

டாக்டர் திரும்பிப் பார்த்தார்.

“நல்லது, ஆனால், அவர் உங்களுக்கு உருவரைவு எதுவும் கொடுக்கவில்லையே.’’ என்றார், அவர். “ட்ரௌப்பியல்களுக்குப் போதுமான அளவுக்குப் பெரிய கூண்டு செய்யவேண்டுமெனச் சொல்லியதைத் தவிர வேறு ஏதும் குறிப்பிட்ட பரும, நீள அளவுகளையெல்லாம் அவர் கொடுக்கவில்லை, சரிதானா?” 

“அது சரிதான்.” என்றான், பால்தசார்.

“அப்படியென்றால் பிரச்சினை இல்லை.” என்றார், டாக்டர். இதில் இரண்டு விஷயங்கள்; ஒன்று, ட்ரௌப்பியல்களுக்குப் போதுமான அளவுக்குக் கூண்டு பெரியதாக இருக்கவேண்டும். அடுத்த விஷயம், இந்தக் கூண்டு. உங்களைச் செய்யச் சொன்ன கூண்டு இதுதான் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.”

“இதுவேதான் அது.” என்றான், பால்தசார், குழம்பியவனாக. ‘’அதனால் தானே நான் இதைச் செய்தேன்.

டாக்டர் பொறுமை இழந்த ஒரு உடலசைவைக் காட்டினார்.

’’நீங்கள் இன்னொன்றைச் செய்யலாமே,” என்றாள், ஊர்சுளா, கணவனைப் பார்த்து. அதன் பின்னர் டாக்டரிடம், “உங்களுக்கொன்றும் அவசரமில்லையே.” என்றாள்.

”இன்று மதியமே வாங்கித் தருவதாக என் மனைவிக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன்.” என்றார், டாக்டர்.

”நான் மிகவும் வருந்துகிறேன், டாக்டர்,” என்றான், பால்தசார். “ஆனால், அதற்காக ஏற்கெனவே விற்றுவிட்ட எந்த ஒன்றையும் உங்களுக்கு விற்றுவிடமாட்டேன்.”

டாக்டர் தோள்களைக் குலுக்கிக்கொண்டார். நெற்றி வியர்வையைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே, அவர் கூண்டினை வைத்த கண் வாங்காமல் கடலில் செல்லும் கப்பலைப் பார்க்கும் பார்வையில் பார்த்தார்.

”இந்தக் கூண்டுக்காக அவர்கள், உங்களுக்கு எவ்வளவு கொடுத்தார்கள்?”

பால்தசார் பதில் சொல்லாமல் ஊர்சுளாவின் கண்களைப் பார்த்தான்.

‘’அறுபது பெசோ,” என்றாள், அவள்.

டாக்டர் கூண்டையே பார்த்துக்கொண்டிருந்தார்.

”இது நிரம்பவும் அழகானது.” அவர் பெருமூச்சு விட்டார். ”நினைவுக்கும் எட்டாத அளவுக்கு அழகின் உச்சம்.” பின்னர், கதவை நோக்கிச் சென்ற அவர், தனக்குத்தானே வேகவேகமாக விசிறிக்கொண்டே புன்னகைத்தார். அத்துடன் அந்தக் காட்சியின் சுவடுகள் அனைத்தும் அவர் நினைவிலிருந்தும் அகன்றன.

”மான்டியெல் மிகப் பெரும் பணக்காரர்.” என்றார், அவர்.

உண்மையில், ஜோஸ் மான்டியெல் வெளிப்படத் தெரிவது போல் அவ்வளவு பெரிய பணக்காரர் அல்ல; ஆனால், அப்படி ஆகுவதற்காக எதை வேண்டுமானாலும் செய்கிற திறமை கொண்டவர். அங்கிருந்து ஒரு சில கட்டடத் தொகுதிகள் தாண்டி, கருவிகள் மற்றும் பொருட்கள் அடைந்த வீட்டில், விற்கமுடியாதென எந்த ஒரு மணத்தையும் எவருமே நுகராத அந்த வீட்டில், கூண்டின் செய்தியைக் கேட்டும் அதைப் பொருட்படுத்தாத பாராமுகத்தோடு அவர் வீட்டிற்குள்ளாகவே அடைந்து கிடந்தார். மரணத்தின் மீதான எண்ணப் பீடிப்பினால் வதைபட்டுக்கொண்டிருந்த அவரது மனைவி, மதியம் சாப்பிட்டதும் வாசற்கதவுகளையும் சாளரங்களையும் அடைத்து, மூடிவிட்டு, அந்த அறையின் நிழலையே வெறித்துத் திறந்த கண்களுடன் இரண்டு மணிநேரமாகப் படுத்துக்கிடந்தாள். அந்த நேரத்தில் ஜோஸ் மான்டியெல் மதியத் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார். அங்கே பல குரல் ஆரவாரத்தினைக் கேட்ட அவள் வியந்துபோனாள். பின்னர், வசிப்பறையின் கதவை விரியத் திறந்த அவள், வீட்டின் முன் ஒரு பெரிய கூட்டம் நிற்பதையும் அக்கூட்டத்தின் நடுவில் பால்தசார், மழித்த முகத்துடன் வெண்ணிற ஆடை அணிந்து, கூண்டும் கையுமாக, பணக்காரர் வீடுகளை ஏழைகள் அணுகும் ஒழுங்கு மரியாதை வெளிப்படத் தெரிகின்ற கள்ளங்கபடற்ற முகத் தோற்றத்துடன் நிற்பதையும் கண்டாள். 

“என்ன ஒரு அற்புதமான கூண்டு!” ஜோஸ் மான்டியெலின் மனைவி, பிரகாசமாக ஒளிரும் தோற்றத்தில் உள்ளே வருகின்ற பால்தசாரைப் பார்த்து, அதிசயித்தாள். “ என் வாழ்க்கையில் இது போன்று வேறெதையும் பார்த்ததேயில்லை.” என்ற அவள், வாசல் முன்பு கூடிய கூட்டத்தால் எரிச்சலாகி, வறண்ட குரலில், “ அதை உள்ளே கொண்டுவாருங்கள்; இந்தக் கூட்டம் வசிப்பறையை ஒரு காட்சிக்கூடமாக்கிவிடப் போகிறது.” என்றாள்.

ஜோஸ் மான்டியெலின் வீட்டுக்கு பால்தசார் ஒன்றும் புதியவனல்ல, அவனுடைய திறமை மற்றும் வெளிப்படையான நேர்பேச்சு முறையினால், அந்த வீட்டுக்குள் சின்னச் சின்ன தச்சு வேலைகளுக்காகப் பலமுறை அழைக்கப்பட்டிருந்தான், ஆனால், அவன் பணக்காரர்கள் மத்தியில் நிற்கும்போது, இயல்பான ஒரு தன்னமைதியை உணர்ந்ததேயில்லை. அவன், அவர்களைப் பற்றி, அவர்களின் அருவருப்பான, எல்லாவற்றிலும் வாதிடுகின்ற வாயாடி மனைவிகளைப் பற்றி, அவர்களின் மாபெரும் அதிரடி நடவடிக்கைகள் பற்றி, எப்போதும் நினைத்துப்பார்ப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்ததோடு, அவர்கள் மீது ஒரு பரிதாப உணர்ச்சியும் கொண்டிருந்தான். அவர்களின் வீடுகளுக்குள் அவன் நுழைகின்ற போதெல்லாம் கால்களைத் தரையில் இழுத்துத் தேய்க்காமல் செல்ல, அவனால் முடியவில்லை.

“பெப் இருக்கிறாரா?” அவன் கேட்டான்.

அவன் கூண்டினை உணவறை மேசை மீது வைத்தான்.

‘’அவன் பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கிறான்.” என்றாள் ஜோஸ் மான்டியெலின் மனைவி. “ ஆனால் அவன் வருகிற நேரம்தான்,” என்றவள் “மான்டியெல் குளிக்கிறார்,” என்றாள்.

உண்மையில் ஜோஸ் மான்டியெலுக்குக் குளிப்பதற்கான பொறுமையே இல்லை. வெளியே வந்து என்னதான் நடக்கிறதெனத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில், அவசரமாக ஒரு ஆல்கஹால் தேய்ப்பு தேய்த்துக்கொண்டிருந்தார். அவர், அப்படியான ஒரு எச்சரிக்கை உணர்வுள்ள மனிதர், தூங்கும்போதும் வீட்டில் நிகழுகின்ற சத்தங்களைக் கேட்கவேண்டுமென்பதற்காக, மின்விசிறியில்லாமல் தூங்குவாரென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

‘’அடிலெய்ட்,” அவர் கத்தினார், ‘’அங்கே என்ன சப்தம்?”

“வந்து பாருங்கள், என்ன ஒரு அற்புதமான விஷயம்,“ எனப் பதிலுக்கு உரத்துக் கூறினாள், அவர் மனைவி. 

ஜோஸ் மான்டியெல், தொந்தியும் மயிரடர்ந்த உடலுமாகக் கழுத்தில் ஒரு துவர்த்து தொங்கப் படுக்கையறைச் சாளரத்தில் காட்சிகொடுத்தார்.

‘’என்னது, அது?”

‘’பறவைக் கூண்டு, பெப்புக்கு.” என்றான், பால்தசார்.

மான்டியெலின் மனைவி, அவனைத் திகைப்புடன் நோக்கினாள்.

“யாருக்கு?”

“பெப்புக்கு” என்றான், பால்தசார். பின்னர் ஜோஸ் மான்டியெலின் பக்கமாகத் திரும்பி, “பெப் தான் செய்யச் சொன்னார்.”

அந்தக் கணத்தில் எதுவும் நிகழவில்லையென்றாலும், யாரோ ஒருவர் குளியலறைக் கதவை அவன் முகத்திலேயே அடித்துத் திறந்தது போல் உணர்ந்தான். ஜோஸ் மான்டியெல் அவருடைய இடுப்பு உள்ளாடையுடன் படுக்கையறையை விட்டு வெளியே வந்தார்.

“பெப்,” வீடே அதிருமாறு கத்தினார்.

‘’அவன் இன்னும் வரவில்லை,” என முணுமுணுத்தாள், அவர் மனைவி, எந்த அசைவுமில்லாமல்.

அப்போதுதான் பெப்பின் தலை, வாசலில் தெரிந்தது. அவனுக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். அம்மாவைப் போலவே வளைந்த இமைகள், அவளைப் போலவே அமைதியாகப் பரிதாபமாக விழித்தான்.

“இங்கே வா,” ஜோஸ் மான்டியெல் அவனிடம் கேட்டார். ‘’நீ இதைச் செய்யச்சொல்லிச் சொன்னாயா?”

குழந்தை தலையைக் குனிந்தான். அவன் முடியைப் பற்றி இழுத்துக்கொண்டு, ஜோஸ் மான்டியெல் பெப்பின் கண்களுக்குள் உறுத்து நோக்க, அவன் கழுத்தைப் பின்பக்கமாக வளைத்தார்.

‘’பதில் சொல்லுடா,”

குழந்தை பதில் சொல்லாமல் உதட்டைக் கடித்தான்.

`மான்டியெல்` எனக் கிசுகிசுத்தாள், அவர் மனைவி.

ஜோஸ் மான்டியெல் குழந்தையை விட்டுவிட்டு, பால்தசாரை நோக்கி ஒரு  வேகத்துடன் திரும்பினார். “ நான் மிகவும் வருந்துகிறேன், பால்தசார்,’’ என்றார், அவர். ‘’ஆனால், நீ செய்யத் தொடங்கும் முன் என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கவேண்டும். ஒரு மைனர் பையனுடன் ஒப்பந்தம் போடுவது உனக்குத் தான் நிகழ்ந்திருக்கிறது.” பேசப் பேச, அவரது முகம் அதன் வழக்கமான அமைதிக்குத் திரும்பியது. அவர் கூண்டினை எடுத்து, அதைக் கண்கொண்டு சிறிதுங்கூடப் பார்க்காமல் பால்தசாரிடம் கொடுத்தார்.

இப்போதே எடுத்துக்கொண்டு போய்விடு. உன்னால் விற்க முடிகிற யாருக்கு வேண்டுமானாலும் விற்க முயற்சி செய்.” என்றார், அவர். ”எல்லாவற்றுக்கும் மேலாக, நான் உன்னை இரந்து கேட்கிறேன், என்னிடம் வாதிட முயற்சிக்காதே.” அவர் அவனது முதுகில் தட்டி விளக்கினார், “டாக்டர் என்னைக் கோபப்படப் கூடாதெனச் சொல்லியிருக்கிறார்.”

பால்தசார் எந்த நிச்சயமுமில்லாமல், கையில் கூண்டுடன் குழந்தையைப் பார்க்கும்வரையில் அவன், எந்த அசைவுமில்லாமல், கண் இமைக்காமல்,, அப்படியே நின்றான். பின்னர் அவன், நாயின் ஊளையைப் போன்ற ஒரு சப்தம் எழுப்பித் தரையில் விழுந்து, கத்தி, வீறிட்டழுதான்.

ஜோஸ் மான்டியெல் அசையாமல் அவனையே பார்த்தார்; அவன் அம்மா அவனைச் அமைதிப்படுத்த முயன்றாள்.

”அவனைத் தொடக்கூடச் செய்யாதே,” என்றார், அவர். ‘யஅவன் தரையில் மோதி தலையை உடைக்கட்டும், அதன் மீது எலுமிச்சைச் சாற்றை ஊற்றி, உப்புப் போட்டு நன்கு தேய்த்துவிடு, அவன் வேண்டுமட்டும் ஆங்காரம் கொள்ளட்டும்,” அவன் அம்மா அவனது கை மணிக்கட்டுகளைப் பிடித்திருக்க, குழந்தை கண்களில் கண்ணீரெதுவுமின்றி, வீறிட்டு, வீல், வீலெனக் கத்தினான்.

‘’அவனைத் தனியாக விடு,” என வற்புறுத்தினார், ஜோஸ் மான்டியெல்.

வெறி நாயின் மரண இழுப்பினைப் பார்ப்பது போல பால்தசார் குழந்தையைக் கூர்ந்து நோக்கினான். அப்போது மணி அநேகமாக நான்காகி இருக்கும். அந்த நேரத்தில், அவன் மனைவி ஊர்சுளா, மிகப் பழைய பாட்டு ஒன்றைப் பாடிக்கொண்டே வெங்காயத்தைத் தகடாக அரிந்துகொண்டிருந்தாள். 

“பெப்,” என்றான், பால்தசார்.

அவன், கூண்டினை நீட்டியவாறே, புன்னகையுடன், குழந்தையை அணுகினான். குழந்தை துள்ளியெழுந்து, அநேகமாக, அவனளவுக்குப் பெரிதாக இருந்த கூண்டினை அப்படியே அணைத்துக்கொண்டு, அதன்ன் கம்பி இடைவெளி வழியாக, என்ன சொல்வதென்று தெரியாமல் பால்தசாரைப் பார்த்துக்கொண்டே நின்றான். அவன் கண்களில் துளிக்கூட கண்ணீர் இல்லை. 

‘’பால்தசார்,“ என மென்மையாக அழைத்த ஜோஸ் மான்டியெல், “ நான் ஏற்கெனவேயே அதை எடுத்துக்கொண்டு போகச் சொன்னேன்.” என்றார்.

“அதைத் திருப்பிக்கொடு,” என அந்தப் பெண்மணி குழந்தைக்கு உத்தரவிட்டாள்.

‘’நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.” என்றான் பால்தசார். பின்னர், ஜோஸ் மான்டியெலைப் பார்த்து, “ நான் அதை அவருக்காகத் தானே செய்தேன்.” என்றான்.

ஜோஸ் மான்டியெல் அவன் கூடவே வசிப்பறைக்கு வந்தார். ‘’முட்டாள் தனமாக நடந்துகொள்ளாதே, பால்தசார்,” என அவன் பாதையை மறித்தார். “ நீ செய்த கூண்டை உன் வீட்டுக்கு எடுத்துப் போ. முட்டாளாக இருக்காதே, உனக்கு ஒரு சென்ட் கூடத் தரும் எண்ணம் எனக்கில்லை.”

“அது ஒரு விஷயமே இல்லை,” என்றான் பால்தசார். “நான் அதை பெப்புக்கான ஒரு பரிசாகத்தான் செய்தேன். அதற்கு விலையாக நான் எதையும் எதிர்பார்த்துச் செய்யவில்லை.” 

பால்தசார் வாசலை மறித்து நின்றிருந்த பார்வையாளர்களின் ஊடாக வெளிவந்த போது, ஜோஸ் மான்டியெல் வசிப்பறையின் நடுவில் நின்று கத்திக்கொண்டிருந்தார். அவர் மிகவும் வெளிறிப்போய், அவரது கண்கள் சிவக்கத் தொடங்கியிருந்தன.

‘’முட்டாள்!” அவர் கத்தினார். “ உன்னுடைய நகாசு வேலையை இங்கிருந்து எடுத்துப் போடா. எங்களுக்குத் தேவையான கடைசி விஷயம் எதையும்,. என் வீட்டில் யாரும் உத்திரவிடக்கூடாதுடா, பொட்ட நாயின் மகனே!

பொதுவாகக் கூடி மதுவருந்தும் அறையில் பால்தசார் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டான்.

அந்தக் கணம் வரையிலும் இதற்கு முன்னர் எப்போதையும் விடச் சிறந்த ஒரு கூண்டினைச் செய்ததும், ஜோஸ் மான்டியெலின் மகன் அழாமலிருப்பதற்காக, அதனை அவனுக்குக் கொடுக்க வேண்டியிருந்ததும், இந்த விஷயங்களிலெல்லாம் எந்த முக்கியத்துவமும் இல்லையென அவன் கருதியிருந்தான். ஆனால், இவை எல்லாமே பலருக்கும் குறிப்பிட்ட முக்கியத்துவமுடைய ஒன்றாக இருப்பதை உணர்ந்ததும் அவன் சிறிது கிளர்ச்சியுற்றான்.

“அப்படியானால், அவர்கள் உனக்கு, கூண்டுக்காக ஐம்பது பெசோ கொடுத்தார்கள்.”

“அறுபது,” என்றான், பால்தசார்.

“ இது உனக்கு ஒரு மாபெரும் வெற்றிதான்.” யாரோ ஒருவர் சொன்னார். திருவாளர் செப் மான்டியெலிடமிருந்து இவ்வளவு பெரிய தொகையைப் பெற முடிந்த ஒரே ஆள் நீதான். நாம் இதைக் கொண்டாடியே ஆகவேண்டும்.”

அவர்கள் அவனுக்காக ஒரு புட்டி பியர் வாங்கினர்; பால்தசார் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ரவுண்டு வாங்கிக்கொடுத்து எதிர்விருந்து அளித்தான். அதுவே அவன் வெளியில் மது அருந்துவது முதல் முறையென்பதால் அந்தி கருக்கும் முன்பாகவே அவன் முழு போதையாகிவிட்டிருந்தான். அவன் அறுபது பெசோ வீதம் ஆயிரம் கூண்டுகள் தயாரிக்கும் பிரமாண்டத் திட்டம் ஒன்று பற்றிப் பேசிக்கொண்டிருந்தான்; அதன்பின் அவனிடம் அறுபது மில்லியன் பெசோ இருக்கும் வகையில் ஒரு மில்லியன் கூண்டுகள் தயாரிக்கும் திட்டம் பற்றிப் பேசினான்.

“ பணக்காரர்கள் செத்துவிடும் முன்னரே நாம் ஏராளமான பொருட்களைத் தயாரிக்க வேண்டியிருக்கிறது.’’ அவன் கண்தெரியாத போதையில் சொல்லிக்கொண்டிருந்தான். “அவர்கள் எல்லோருமே நோயாளிகள்; அவர்கள் சாகப் போகிறார்கள். அவர்களெல்லாம் மேற்கொண்டு கோபப்படக்கூட முடியாத அளவுக்கு  நல்ல மரை கழன்றிருக்கிறார்கள்,”

அவன், இரண்டு மணிநேரமாகப் பாட்டுப்பெட்டியில் காசு போட்டுக்கொண்டிருந்தான்; அது இடைவெளியில்லாமல் பாடிக்கொண்டேயிருந்தது. எல்லோரும் பால்தசாரின் நல் ஆரோக்கியம், நல்லதிர்ஷடம், மற்றும் நல்ல நேரத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்; கூடவே பணக்காரர்களின் இறப்புக்கும், ஆனால் சாப்பாட்டு நேரம் வந்த போது எல்லோரும் அவனைப் பொதுக்கூடத்திலேயே தனியாக விட்டுவிட்டுச் சென்றனர்.

ஊர்சுளா அவனுக்காக அரிந்த வெங்காயத் துண்டுகள் மூடிய இறைச்சி வறுவலை வைத்துக்கொண்டு எட்டு மணி வரையிலும் காத்திருந்தாள். யாரோ ஒருவர் அவளிடம், அவள் கணவன் பொதுக் கூடத்தில் மகிழ்ச்சித் திளைப்பில் அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் பியர் வாங்கிக்கொடுத்துக்கொண்டிருப்பதாகவும் சொன்னபோதும், அவள் நம்பவில்லை, ஏனென்றால், பால்தசார் மது அருந்தியதேயில்லை. அவள் படுக்கைக்குச் சென்ற அநேகமாக, நடு இரவில், பால்தசார் புளோவர் பறவைகள் நடந்து திரிந்துகொண்டிருந்த திறந்தவெளி நாட்டியத்தளமும் நான்கு நான்கு நாற்காலிகளுடன் இருந்த சிறுமேசைகளுமாக இருந்த ஒரு வெறிச்சோடிய  அறையில் இருந்தான். அவன் முகம் முழுதும் சிவந்து, அவனால் மேற்கொண்டு ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாத நிலையிலிருந்ததால், இரண்டு பெண்களுடன் ஒரே படுக்கையிலிருக்கவேண்டுமென நினைத்தான். அவன் அளவுக்கு மீறிச் செலவுசெய்து, மறுநாள் பணம் தருவதாகச் சொல்லி, கைக்கடிகாரத்தை அடமானம் வைக்க வேண்டியதாகியிருந்தது. ஒரு கணத்திற்குப் பின்னர் அவன் தெருவில் கையையும் காலையும் பரக்கப் போட்டுக் கிடந்தான் அவனது காலணிகள் கழற்றப்பட்டிருந்ததை, அவன் உணர்ந்த போதிலும் அவனது வாழ்க்கையின் மிகமிக மகிழ்ச்சியான அந்தக் கனவினைக் கைவிட அவன் விரும்பவில்லை. அதிகாலை ஐந்து மணி பிரார்த்தனைக்காக அந்த வழியே சென்ற பெண்கள் அவன் இறந்துவிட்டதாக நினைத்து அவன் கிடந்த பக்கமாகத் திரும்பிக்கூடப் பார்க்கத் துணியவில்லை.        

ச.ஆறுமுகம்

****

தமிழாக்க மொழிபெயர்ப்பாளர் குறிப்பு :

சமூகச் சிக்கல், ஏழை – பணக்காரப் பிளவு, கலை நேர்த்தி, தொழில் நேர்மை எனப் பல்வகை அடிக்கருத்துகள் கையாளப்பட்டுள்ள, மார்க்வெஸின் மிக எளிமையான இக்கதை ஒரு நீதிக்கதை வடிவிலும் உருவகக் கதை போன்றும் உள்ளது. ஆனால், இக்கதை மாந்தர்களுக்குச் சூட்டப்பட்டுள்ள பெயர்களும் அவற்றுக்கான பொருள்களும் இக்கதையைப் பல்வேறு தளங்களுக்குக் கொண்டுசெல்கின்றன. எனவே அந்தப் பெயர்கள் குறித்த ஒரு அகராதி வாசகர்களுக்கு அளிக்கப்படவேண்டுமென்பது எனது புரிதல்.

பெயர் அகராதி :

பால்தசார் – கிரேக்க மொழியிலிருந்து பிறந்த இச்சொல் `கடவுள் அரசனைக் காப்பாற்றுகிறார்` எனப் பொருள்படும். .

பால்தசார் – இயேசு குழந்தையாகப் பிறந்த போது, அவரைப் பார்ப்பதற்காகப் பரிசுப் பொருட்களுடன் கீழைத் தேசத்திலிருந்து வந்த மூன்று அறிஞர்களில் ஒருவரின் பெயர். 

பால்தசார் – வழக்கமான ஒயின் புட்டியைப் போல் பதினாறு மடங்கு  கொள்ளளவுள்ள ஒரு ஒயின் புட்டியையும் குறிக்கிறது. வழக்கமானதைவிட அதிகமானது.

பால்தசார் – பிற்காலப் பாபிலோனிய மன்னன் ஒருவனின் பெயர். இந்த அரசன் மிகப் பெரிய விருந்து அளிப்பதில் பெயர் போனவன். ஒருமுறை ஆயிரம் பேர்களுடன் ஒயின் அருந்தியவன்.

ஊர்சுளா –  நான்காம் நூற்றாண்டிலிருந்த ஒரு உரோமானிய இளவரசி; இவர் கன்னியாகவே இருந்துள்ளார். இவரை புனித யாத்திரை ஒன்றின் போது ஹூன் இன நாடோடிகள் கொன்றுவிட்டனர். அதனால், இவர் கிறித்தவத் தியாகியாக, புனித ஊர்சுளா என அழைக்கப்படுகிறார். இப்பெயர் இங்கிலாந்தில் மத்திய காலம் எனப்படும் 1000 – 1400 களிலிருந்து பொதுவான பயன்பாட்டிலுள்ளது.

காப்புச்சின் : Franciscan order என்ற பிரிவின் கீழ் பணியாற்றும் ஆண் மதகுருக்களைக் குறிக்கிறது. காப்புச்சின் என்றொரு தென்னமெரிக்கக் குரங்கு வகையும் உள்ளது.

ஆக்டேவியா : எட்டாவது எனப் பொருள்.

கிரால்டோ : குடும்பப்பெயர் 

செப் (chepe) ; கடவுள் பெருகுவார் God will multiply

பெப் (Pepe) ; ஜோஸ் என்ற பெயருக்கான பட்டப் பெயர். ஜோசப், இயேசுவின் தந்தை எனப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதைக் குறிக்கிறது. Meanings and history of the name Pepe: | Edit. Pepe is a nickname for Jose,Giuseppe, Jusepe. In Latin, Saint Joseph’s name is always followed by the letters “P.P” for pater putativus (commonly accepted) father of Jesus Christ. In Spanish, the letter “P” is pronounced “peh” giving rise to the nickname Pepe for Jose.”  

ஜோஸ் – ஜோசப் (இயேசுவின் தந்தை எனக் குறிப்பிடப்படுபவர்) என்ற பெயரின் ஸ்பானிய வடிவம்.

மான்டியெல் : தெற்கு ஸ்பெயினிலுள்ள ஒரு நகரம். அப்பகுதியிலிருந்து வந்த குடும்பத்தினர் என்பதைக் குறிக்கிறது.

அடிலெய்ட் : உயர்குடி, பிரபுத்துவத் தன்மை.   .  

ஆங்கில மூலம் : https://www.scribd.com/doc/218886008/Balthazar-s-Marvelous-Afternoon

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.