நீரை. மகேந்திரன் கவிதைகள்


1. வரிசையில் நிற்கும் பள்ளி ஆசிரியை

அந்த வரிசையில்,
பத்தொன்பதாவது நபருக்கு பின்னால் நிற்கிறேன்
இருபது என்று சொல்லலாம்
இடித்துக் கொண்டு நிற்கிறான் இன்னொருவனும்.
முதலாவது நிற்பவனுக்கு ஏ.டி.எம்மில் பணம் எடுக்க வேண்டும்.
இரண்டாவதாக நிற்பவனுக்கும்,ஏழாவதாக உள்ளவனுக்கும்
காலைக்கடனுக்கான அவசரம்.
மூன்றாவதாக நிற்பவன்
கே.எப்.சி கவுண்டருக்கு முன்னால் நிற்கிறான்.
அடுத்தடுத்த பேருந்துக்காக முண்டியடிக்கிறார்கள் ஏழெட்டு பேர்.
பத்தாவதாக நின்றவன் ஒரு பொடியன்
அம்மாவுக்கு தைலம் வாங்குவதற்காக.
ஹார்லி டேவிட்சனுக்கும் இதே வரிசைதான்.
நான் நிற்பதா?
பிள்ளையை பள்ளியில் சேர்க்க.
ஆச்சர்யம் ஒன்று
எனக்கு முன்னாள் நிற்பது
அதே பள்ளி ஆசிரியை,
பிரேயர் நேரத்தில் வந்ததால்
கம்பி கேட்டுக்கு வெளியே நிற்கிறாள்.
ஆச்சர்யம் இரண்டு
எனக்கு பின்னால் நிற்பவன்
எதற்கு நிற்கிறான் என்றே தெரியவில்லை.

 

2.உன் பெயரில் ஒரு பூ

ஜாதி மல்லி போலவே
வேறொன்று இருக்கும்
அதற்கு வாசனை இருக்காது
எனக்கெப்படி தெரியும்
முல்லைக்கு ஓரடுக்கு
ஈரடுக்கும் இருக்கு.
மல்லியிலும் குண்டுமல்லி காட்டுமல்லி
நீ சொல்லி கொடுத்தது.
செண்பகப்பூ வைத்து பார்த்ததில்லை
ஐயய்யோ ஆகாதுப்பா
பேன் வைக்கும்.
நெருக்கி கட்டிய மல்லி சரத்தை வட்டமாக்கி
நடுவே கட்ரோஸ் வைத்து
கூந்தலேற்றும் உன் கலைக்காகவே
அவை பூத்திருக்கலாம்.
கனகாம்பரம் கலருக்குத்தான்,
டிசம்பர் மாதமெனில்
ரேடியோ குழல்போலிருக்கும்
கருநீல டிசம்பர் பூக்களுக்கு வசந்த காலம்.
தலைக்கு சூடவென
கதம்பத்தை வாங்கிச் சென்ற யெனக்கு
எந்த ஜென்மத்திலும் மோட்சமில்லை.
அடச்சை
இப்ப பூவுதான் முக்கியமா…
கண்ணைக் கட்டிக் கேட்டாலும்
டக்கென்று எந்தப் பூ என சொல்லும்
உன் கூர்நாசியின் பக்கவாட்டு மருவுக்கு
ஒரு பூவின் பெயர்தான் சூட்டியுள்ளேன்.
போதுமா…

 

3. உண்மை எனும் நயவஞ்சகம்

உண்மைகளை நேசிக்கிறார்கள்
வறண்ட நதியை நேசிப்பதைப்போல,
ஒரு நாள் மேலெழுமென.
ஆற்றைக் கடக்கையில்
கொஞ்சம் பொய்களைக் கொண்டு செல்லலாம்
உண்மையோடு நீண்டதூரம் பயணிப்பது எளிதில்லை.
உண்மை கார்கால சோம்பேறி பனிக்கரடி
பொய் இரைதேடும் மிருகம்.
இழுவிசைக் குதிரை
ஒன்று மற்றொன்றை அடித்து சாய்க்கிறது
அதிவேகத்தில் இழுத்துச் செல்கிறது.
பொய்களை சுகிப்பது பேரானந்தம்
உண்மை நீரலை குப்பைகளைப்போல,
உண்மையில்,
உண்மை ஒரு நயவஞ்சகம்
ஒழுக்க சீலர்களின் ரகசிய வாழ்க்கைபோல,
அதன் சாவி அவர்களிடமே உள்ளது.
ரொட்டி சுட்டு பசியாறிய பின்,
உப்பரிகையில் இருந்தபடி
உண்மைகளுக்குக் கட்டுப்படுங்கள்
உண்மைகளை நேசியுங்கள்
உண்மைகளைப் பேசுங்கள்
என் பிரசங்கம் செய்கிறார்கள்.
அந்த நொடியில்
ஒரு ஈட்டி எறிவதே கலகம்
அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது
நீங்கள், நான் மற்றும் உண்மை.

 

4.வேறு என்ன பெயர் சூட்டுவது?

சூரியனுக்கு பெயர் சூரியன்தான்
வேறு பெயர்கள் இல்லை.
வேண்டுமெனில்
காதலியின் பெயரைச் சூட்டிக் கொள்ளலாம்.
அதன் குளுமை அலாதியானது
தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா..
ஒளி ஆள்கிறது நேரத்தை, தூரத்தை காலத்தை…
அதைக் கண்டறிய ஒரு வழி இருக்கிறது
கண்களை மூடவும்
எவ்வளவு தூரம் சென்றோம்
எவ்வளவு தூரம் கண்டோம்
எவ்வளவு தூரத்தில் நின்றோம்.
ஒளிஞானம், ஒளி பொருள், ஒளி அன்பு
அனைத்தையும் உயிர்க்கிறது அன்பின் சூடு.
அதன் நிறை முடிவிலி, அடர்த்தி முடிவிலி..
ஆதியில் ஒளி இருந்தது
ஆதாம் அளித்த முதல் ஆப்பிள்போல,
ஆதியில் காதல் இருந்தது
சலனத்தில் உயிர்க்கச் செய்வது போல,
ஆதியை அறிதல், காதலை அறிதல்.
காதலிப்பவர்கள் சொல்லட்டும்
சூரியனுக்கு வேறு என்ன பெயர் சூட்டலாம்?

 

5. ஒருவரைப் பற்றி..

ஒருவரைப் பற்றி யோசிப்பதென்பது
ஒருவரைப் பற்றி யோசிப்பதுதான்.
பற்றுவதற்கு முன்னரான கொழுந்துபோல
ஒருவரை பற்றி யோசிப்பதென்பது
அவரை பற்றி யோசிப்பதிலிருந்து விடுபடல்
எரிந்த பின்னரான சாம்பலைப் போல.
ஒருவரைப் பற்றிய யோசனைகள்
ஒருவரிடமும் பகிர்ந்து கொள்ள முடியா துயரம்.
ஒருவரைப் பற்றி யோசிப்பதற்கு முன்
அவரைப் பற்றிய யோசனைகளுக்கு ஆயிரம் கண்கள்.
ஒருவரைப் பற்றி யோசிப்பதன் காரணங்கள்
ஒருநாளும் புரிந்து கொள்ளப்படுவதில்லை.
ஒருவராலும் புரிந்து கொள்ளப்படுவதில்லை

 

6. சரோஜாதேவி..

 • சுழன்று சுழன்று ஆடுகிறாள் நாயகி,
  நடுபட்டனை நோக்குகிறான் ரசிகன்.
  ஓரத்தில் ஆடுபவளின் கண்களும்
  ரசிகனை தேடுகிறது.

 

 • கோயம்பேடு சந்தை இட்லிகடை அன்னம்மாவை
  எங்கோ பார்த்த ஞாபகம்…
  ஒவ்வொரு விள்ளலுக்கும்
  ஒரு படத்தைத் துழாவுகிறான் கலாரசிகன்

 

 • காவேரி கார்னர் டீக்கடையில்,
  நாற்பது வயதுக்கு மேல்
  நயந்தாராவுக்கு மார்க்கெட் இருக்காது என்கிறான்,
  நாற்பது ஆண்டுகளாக கதை சொல்லிகொண்டிருப்பவன்.

 

 • சரோஜாதேவி..,
  ரசித்த காலத்தில் நான் இல்லை
  வாசித்த காலத்தில்தான் அறிமுகம்.

 • நீரை.மகேந்திரன்

4 COMMENTS

 1. நீரை மகேந்திரன் வாழ்க்கை வரிகள் மிக சிறப்பு
  நன்றி ஐயா,

 2. அருமையான வரிகள். யதார்த்தமான உண்மையை வெளிக்கொணரும் கவி வரிகள்

 3. நண்பர் மகேந்திரனின் கவிதைகளை முதன்முதலாக வாசிக்கிறேன். மிகச் சிறப்பாக இருக்கின்றன.சரோஜாதேவி அனுபவங்கள் முத்திரை.
  -செல்லம்பாலா, சென்னை

 4. ஆறு கவிதைகள்

  எட்டு அனுபவங்கள்!

  சொற்சேர்க்கைகள் சிலீரிட வைக்கின்றன

  ” ஆதியில் காதல் இருந்தது!”
  காதல் வேதாகம வரி!

  திரைசார்ந்த கடைசி மூன்று கவிதைகளில் முதலிரண்டு ஏமாற்ற வாழ்வியலில் நடைமுறைக் கசப்பின் சுவடுகள்!

  சரோஜாதேவி

  பெயரை வைத்துக்கொண்டு வார்த்தை விளையாட்டு _ ஈர்க்கிறது!

  இனிய வாழ்த்துகள் தம்பி கவிஞர் நீரை மகேந்திரன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.