நகுலனின் வளர்ப்புக் கிளிகள்


1]
நகுலன் வீட்டில்
தரை வீழும்
கண்ணாடிக் கோப்பைகள்
உடைந்து நொறுங்குவதில்லை.

2]
நகுலன் வீட்டில் யாருமில்லை.
பூனைகள் பாதயாத்திரை
போய்விட்டன.

3]
நாலங்குலம் பாசம் காட்டும்
மனிதர்களைவிட
நாய்கள் மேல் என்பது
நகுலன் வாக்கு.

4]
மதுக் குப்பிகள் இல்லாத நகுலன் வீட்டில்
கவிதை காணாமல் போய்விட்டிருந்தது.

5]
புறவாசல் வரை வரும் சுசீலா
நகுலன் வீடேகுவதில்லை.
விந்தைதான்
ரோகிகள் சூழ் உலகு
என்பது இதுதானா?

6]
இன்மை,
முதுமை.
இருப்பின்மையின்
சுயம் அறிந்து
பூனைகள்
அமைதி காக்கின்றன.

7]
நகுலன் இன்னும்
கண் விழிக்கவில்லை
ஈரம் உலர்ந்த ஆடைகள்
காற்றோடு உரையாடிக் கொண்டிருக்கின்றன.
அந்த நீள் உரையாடலின்
ஸ்திதி கலையாமல்
இரவு
விடிந்துகொண்டிருக்கிறது.

8]
தன் கவிதையை
நகுலன்
தேடிக்கொண்டிருக்கிறார்
வெளியே காகம் கரைகிறது
இன்றைக்கு யார் வருவார்களோ
நகுலனைத் தேடிக் கொண்டு..

9]
சடங்குகளே இல்லாத
நகுலன் வாழ்வில்
யதார்த்தத்தை யார்
ஒளித்து வைத்து விளையாடுவது?

10]
நீயும் பொம்மை,
நானும் பொம்மை
நகுலன் முன்னே
எல்லாம் பொம்மை.

11]
நகுலன் இறந்துவிட்டார் என
நண்பன் கதறினான்.
இல்லை
சற்று
இடம் மாறி அமர்ந்து கொண்டார் என
முணுமுணுக்கிறேன் நான்.

12]
சன்னல் வழியே மிளிரும் வெளிச்சத்தை
இடுங்கிய கண்கள் கொண்டு
பார்க்கிறார் நகுலன்.
சுவரில் சுண்ணாம்பு பெயர்ந்து கிடக்கிறது
வாழ்வு
இருட்கொடையா
அருட்கொடையா?

13]
இந்தப் பிரபஞ்சம் என்பது
சந்தேகமே இல்லாமல்
நகுலனின் பொக்கை வாய் தான்.

14]
வளர்ப்பு கிளிகளின்
இனப்பெருக்க காலத்தை நகுலன் அறிவார்.
ஆனால்
அதை பூனைகளிடம் சொல்லும் பழக்கம் அவருக்கில்லை.

15]
கவிதைக்கும் நகுலனுக்கும்
இடையறாது நிகழும் மௌனத்தை நகர்த்த
ஓர் நெம்புகோல் கட்டாயம் தேவை.

16]
மதுவின்
தனித்த கசப்புக்கு
நான் நகுலன் என பெயரிட விரும்புகிறேன்.
நகுலன் நினைவில்லாமல்
ஒரு மிடறும்
உள்ளே போவதில்லை.

17]
தில்லை அம்பலத்தின்
திரண்ட வெளியின்
தேர் போல
நகுலன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்
அம்மையப்பர் மேல்
பாம்புகள் நெளிகின்றன.

18]
நகுலன் வீட்டில்
அழைப்பு மணியை
பூனைகள்
ஒலிக்கவிடுவதில்லை.

‘யார்?’

“நான் தான்”

‘நான்தான் என்றால்?’

“நான்தான் நகுலன்.”

பதில் கேள்வி வருகிறது..

”வெளியே யார்?”

‘சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எதுவுமில்லாத நான் தான்.’

நகுலன் வெடித்து சிரிப்பது எனக்கு மட்டும் கேட்கிறது.

19]
தினம் தினம்
நிறம் மாறிக்கொள்ளும்
பூனைகளுக்கு
சங்கேதங்களை கற்றுத் தந்ததே நகுலன் தான்.


  • சரோ லாமா

Previous articleநீரை. மகேந்திரன் கவிதைகள்
Next articleதுப்பறியும் பென்சில் – 9
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments