துப்பறியும் பென்சில் – 9

துப்பாக்கிச் சண்டை 

இரவு குறைந்த வெளிச்சம் கொண்டது. ஆனால், இந்த காந்தி மியூசியம் சாலை குறைவிலும் குறைவான வெளிச்சம் கொண்டது. இருளை விட சற்று கருமையான இடம் எனலாம். 

இந்த சாலை இரண்டு முறை ஆங்கில எழுத்தான எஸ் வடிவில் வளைந்து திரும்புவதால், நடுவில் என்ன நிகழ்ந்தாலும் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. யாரும் ஒளிவதற்கு ஏற்ற வகையில் இரண்டு வளைவுகளிலும் இரண்டு புளியமரங்களும், இரண்டு வாகை மரங்களும் பருத்து உயர்ந்து வளர்ந்து நின்றன.

நீச்சல் குளத்தினை ஒட்டியுள்ள புளியமரத்தில் இருந்து திரும்பிய வேன், தனது ஹெட்லைட்டை ஆப் செய்து பணப்பெட்டியை நோக்கி நகர்ந்தது. வேனின் உள்ளே குழந்தைகள் பயந்து தவித்துக் கொண்டிருந்தனர். துப்பாக்கி முனையில் இருந்த அவர்களுக்கு தந்தையைக் கண்டதும் கொஞ்சம் தெம்பு கிடைத்திருந்தது.

இன்று எப்படியும் விடுதலை ஆகிவிடுவோம் என நினைத்து மகிழ்ந்தனர்.

“முதலாளி! போனை எடுக்காதீங்க.”  என கணக்குப்பிள்ளை ராமு தடுத்தார்.

 “வீட்டில் இருந்துதான் போன்.”

  “அப்புறம் பேசலாங்க, முதலாளி!”

  குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்துவிடுவோம் என சொல்லிவிடுறேனே… அவ கொஞ்சம் நிம்மதியா இருப்பா.”

  “பணத்தை எடுத்துட்டு போகட்டும். குழந்தைகள் நம்மிடம் வரட்டும். கொஞ்சம் பொறுத்துகங்க.”

அவர் போனை கட் செய்தார்.

மாருதி வேன் முன்னே நகர்ந்து பணப்பெட்டியை நோக்கி வந்தது. வேனில் இருந்து ஒருவன் குதித்து பணப்பெட்டியை நோக்கி ஓடிவந்தான்.

சுந்தராஜனின் போன் மீண்டும் ஒலித்தது. வேன் நகராமல் நின்றது. ஓடியவன் மிக மெதுவாக நடந்தான்.   

“டேய். போலீஸ் தான் போன் செய்றாங்க. சீக்கிரம் பணத்தை எடுத்து ஓடி வா.” என மாருதி வேன் டிரைவர் கத்த, அவன் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு ஓடிவந்தான்.

வேன் அப்போது ஒரு யு டேர்ன் அடித்து திரும்பி உறுமிக் கொண்டிருந்தது. அவன் ஓடி வந்து உள்ளே ஏறினான்.

அவன் ஏறிய உடன் மூத்த பெண்ணை கீழே தள்ளிவிட்டான். அவள் தடுமாறி கீழே விழுந்தாள்.

சுந்தராஜன் போனை கட் செய்ததும், கண்ட்ரோல் ரூமில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் துரைக்கு சந்தேகம் ஏற்பட்டது.  உடனே,  அவருக்கு போன் செய்தார். அவரது போனையும் சுந்தராஜன் கட் செய்வதை தெரிந்ததும், சுந்தராஜனின் இருப்பிடம் அறிந்து அனைத்து போலீஸ்காரர்களையும் எச்சரித்தார். கண்ட்ரோல் ரூம் வண்டி அண்ணா பேருந்தில் இருந்து காந்திஒமியூசியத்தை நோக்கி பறந்தது. முருகன் கோவில் வாசலில் இருந்த தல்லாகுளம் ஸ்டேசன் எஸ்.ஐ. சத்யன், தன் துப்பாக்கியுடன் வேகமாக இருட்டில் நீச்சல்குளம் நோக்கி ஓடிவந்தார். அவர் வருவதைக் கண்ட கடத்தல்காரனில் ஒருவன் அவரை நோக்கி சுட்டான். அந்த குண்டு அவரது தோள்பட்டையில் உரசியபடி சென்றது. இரத்தம் சொட்ட சொட்ட உயர் அதிகாரிகளுக்கு  வாக்கி டாக்கியில் தகவல் பரிமாறினார்.

“டேய். துப்பாக்கியை உள்ளே வை. தேவையில்லாமல் கொலை கேஸ் ஆகிட போகுது. மாட்டினா கடத்தல் கேஸ் மட்டும் தான்.”  வண்டி ஓட்டியவன் அதட்டினான்.

சட்டக்கல்லூரி அருகில் வண்டியின் வெளிச்சம் தெரிந்தது. கடத்தல்காரர்களின் வண்டி அடுத்த புளியமரம் தாண்டியது. அப்போது, வண்டியில் இருந்த இரண்டாவது பெண்ணைத் தள்ளிவிட்டார்கள். அப்போது, அவளுடன் சேர்ந்து பணப்பெட்டியும் கீழே விழுந்தது. விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த வண்டி, மெதுவாக சத்தம் இல்லாமல் நீச்சல் குளம், உலக தமிழ்ச்சங்க வளாகத்தின் இடையில் உள்ள குறுக்குசந்தில் திரும்பியது. 

சத்யன் இடது கையால் வலது கையை தாங்கிபிடித்து துப்பாக்கியை குறி வைத்து இருட்டில் சுட முயன்றார்.

அப்போது சுந்தராஜன், “சார், சுட்டுடாதீங்க. என் சின்னப் பொண்ணு உள்ளே இருக்கா… பெரிய பொண்ணை கீழே தள்ளி விட்டுட்டாங்க. சுமித்ரா மேலே குண்டு பட்டுற போகுது.”  எனக் கத்தினார்.

சத்யன் துப்பாக்கியை மடக்கிக் கொண்டு இருட்டில் ஓடினார். வேனை இப்போது திருப்பத்தில் அவருக்கு தெரியவில்லை. பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வேகமாக ஓடி சந்துக்குள் நுழைந்த வாகனத்தில் ஓடி போய் ஏறிக் கொண்டான். 

எப்போதும் தெருவில் படுத்து உறங்கும் அந்த ஏரியா மக்கள், அன்று மழை பெய்ததால் வீட்டினுள் உறங்கி இருந்தனர். அதனால், வண்டி மெதுவாக நகர்ந்து சென்றது. அந்த குடிசைப்பகுதியை வண்டி கடந்ததும் வேகமெடுத்து இராஜாஜி பார்க் நோக்கி திரும்பியது.

வண்டியில் இருந்து கீழே விழுந்து கிடந்த இரு குழந்தைகளின் கை கட்டுகளை அவிழ்த்து கொண்டிருந்தனர் சுந்தராஜனும், ராமுவும். 

சத்யன், வண்டி எங்கு சென்றது எனத் தெரியாமல் திகைத்தார். அண்ணா பேருந்து நிலையம் மற்றும் கோர்ட் அருகில் இருந்த போலீஸ் வாகனம் இருபுறம் இருந்து வந்த போலீஸ் வேன் வந்து சேர்ந்திருந்தது. 

சத்யன் மயங்கி கீழே விழுந்தார். அவரது தோள்பட்டையில் இருந்து இரத்தம் வழிந்து சட்டையை நனைத்திருந்தது.   

கண்ட்ரோல் வேனில் இருந்து இறங்கிய போலீஸ்காரர்கள் குழந்தைகளின் கட்டுகளை அவிழ்த்து விட்டனர். ஒரு வேன் சத்யனை தூக்கிக் கொண்டு அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு விரைந்தது. 

போலீஸ்காரர்கள் நான்கு புறமும் வண்டியை தேடினார்கள். எங்கு வண்டி சென்றிருக்கும் என்று விழிபிதுங்கி நின்றனர்.

சுந்தராஜனிடம் வண்டி என்ன கலர்? என்ன வண்டி? எந்தப்பக்கம் போனது? உங்க ரூபாய்பெட்டி எங்கே? என கேள்விகளை கேட்டு துளைத்தது. ஆனால், எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், தன் குழந்தைகளை கட்டி அணைத்து கதறி அழுதுக் கொண்டிருந்தார். 

காந்திராஜன் அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் விஜயனிடம் போனில் பேசினார்.. “வண்டியில் பத்திரமாக சுந்தராஜனையும், குழந்தைகளையும் வீட்டில் அனுப்பி வையுங்கள். விசாரணையை காலையில் வைத்துக் கொள்வோம்.” எனக் கூறினார்.   

இதற்கிடையில் இராஜாஜி பார்க் நோக்கி வளைந்த கடத்தல்காரர்கள் வண்டி, தமுக்கம் மைதானத்தின் பின்புறம் உள்ள கேட் எதிரில் உள்ள டிரான்ஸ்பாரமில் மோதியது.

டிரான்ஸ்பாரம் ‘டமார்’ என வெடித்தது. கடத்தல்காரர்களின் வண்டி தீப்பிடித்து எரிந்தது.  

தொடரும்…


  • க.சரவணன் 

 Art Courtesy : Kapil Patel

Previous articleநகுலனின் வளர்ப்புக் கிளிகள்
Next articleபெரு விஷ்ணுகுமார் கவிதைகள்
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments