ஒற்றை வாசற்படிக்குள் இரண்டு உள்வீடுகள் இருந்தன. சாரதாவுக்கும் கற்பகத்திற்குமான வீடு வகிடாக பிரிக்கப்பட்டு வாசலுக்கு முன் இரண்டு திண்ணைகளும், முன்னொரு வீடும் பின்னொரு வீடுமாக இருந்தன. உள்நடையின் மத்தியில் பாத்திரங்கள் புலங்குவதற்கும், கலக்கட்டு, கூழாங்கல் என சுவற்றின் ஓரத்தில் கிடந்தது. அகண்ட செம்பானைத் தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன. குறுக்குவெட்டாக முன் வீட்டைக் கடந்துதான் பின் வீட்டிற்குச் செல்ல முடியும்.
கரிச்சான் குருவிகளின் ‘ட்ரூச் ட்ரூச்’ சப்தத்தோடு காலையில் எழும் பின் வீட்டின் சாரதா, முறைப்பாடாக ஒரு வாசலுக்கு சாணம் தெளித்து ஒரு திண்ணையென முறைப்பாட்டினைத் துவக்கி வைக்க, தெருக்களில் மதினிமார்களின் அதங்களோடு எழும் முதல் மனைவி கற்பகம் மிச்சத்தை பெருக்கி முடித்து வைப்பாள்.
தண்டபாணியிடம் ஓரியாட்டமும் ஒப்பாரியும் வைத்து முடித்துவிட்ட கற்பகம், முறைவாசலாக சாரதா பங்கு போட்டுக்கொண்டு வாசலைப் பெருக்கித் தள்ளுவதை சட்டைச் செய்வதில்லை.
சாரதாவை தண்டபாணி வீட்டிற்கு கொண்டுவந்த சமயத்தில் கீழத்தெருவின் ஊரணியில் நீர்மட்டம் அதன் கழுத்துவரை ‘கெத் கெத்’ தென ததும்பியிருந்தது. ஊரணியின் சனி மூலையில், கிழக்கைப் பார்த்தப்படி அமர்ந்திருக்கும் எல்லைக்காளி சோமண்டாயிடம் தன் கழுத்துவரை விக்கி நின்ற ஆற்றாமைகளை கற்பகம் முறையிட்டு வந்ததிலிருந்து, முறை ராத்திரிக்காக படுக்கைக்கு வராத தண்டபாணியைக்கூட நினைப்பதில்லை. எப்பொழுதாவது தன் மீது ஊறும் தண்டபாணியின் விரல்கள் அவளுக்கு எந்தவித நெருக்கத்தையும் தந்ததில்லை. ஊரின் தலைமாடாக மேற்கின் தொங்களில் சுத்துப்பாறைகள் இன்றி, பூங்கிணற்றின் பக்கவாட்டில் பெருத்த வயிற்றோடு உயர்ந்த அத்திமரங்கள் இருக்கும் வரையில், ஓடியாடி காலத்தை தள்ளிவிட முடியும் என அவள் நம்பிக்கைக் கொண்டிருந்தாள்.
ஆடி பிறந்து விசிறிய சூறைக்காற்று, மழைக்குப் பிறகு ஐந்து நாட்கள் கழிந்திருக்கும். அடர் இருட்டுக்கு பிறகாக மீண்டும் சாமத்தில் தொடங்கியது சூறைக் காற்று. உலக்கைத்தடி மீன்கள் மறையும் வரை கற்பகத்தின் முறைத் திண்ணையின் தொங்களின் ஓரமாக நீளமான மூக்கைக் கொண்டிருந்த உருண்டை பிஞ்சு மூங்கில்வாரையின் துளையில் வந்து விசும்பிக்கொண்டே இருந்தது பின் இரவின் சூறைக்காற்று.
கூரையின் செத்தைகளை சூறைக்காற்று அள்ளிக்கொண்டு போனது. விட்டத்தின் மீது தன்கால்களை அகட்டி நின்றுக்கொண்டிருந்த தலையாணிக்கட்டை மோட்டுவளையை அம்மணமாய் முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தபடியாக அன்றைய காலை கற்பகத்திற்கு விடிந்திருந்தது.
பங்காளிப் பெரியவர்கள் உறவுமுறைகளுக்கு கைக் கொடுப்பதற்காக முறைத் திண்ணையின் இருமருங்கிலும் பைத்தங்காய் வரிசையாய் நின்று கொண்டிருக்க, பின் வீட்டிலிருந்து தண்டபாணி மார்புக் கூட்டையும் கால்களையும் பற்றிக்கொண்டு வந்த இரண்டு சம்சாரிகள் வாசலில் கிடத்தினார்கள். வாசல் தெளித்து விட்டும், கன்னுவிட்டும் வந்திருந்த பெண்கள் லூர்துநகர் சவுரி போடப்பட்டுக் கொண்டிருக்கும் துணிப்பந்தலுக்கு அடியில் இலவுக் கட்டினார்கள்.
பகல் வெய்யிலில் கருத்து நிலத்தில் நிழலாய் படருவதும், பின் எழுந்து மறைவதுமாக இருந்தது. நேரத்தில் குறியாய் இருந்த கொத்தின் மூத்தக்கிழவன், ‘எலேய்! பொழுது என்னாட ஆவுது? இப்படித்தான் ஒருத்தன் ஒருத்தனோட ஏடுச்சிக்கிட்டு இருக்கிறீனுவ,’ என விலாஎலும்பு தெரிய தன் தோலில் கிடந்த துண்டை உதறி காரியஸ்தர்களை பார்த்து அலற்றினார்.
நேரம் நகர்ந்து உச்சிக்குப்பின் அயர்வாய் சாய்ந்ததும் பாடையூர்வலத்திற்கு ஏற்பாடாயின.
‘ஙொம்மால! இந்த கெழட்டுபய ஏங்கத்திக்கிட்டே இருக்குதுன்னுத்தான் தெரியலன்னு’, வசவிக்கொண்டே துணிப்பந்தலை நோக்கி கூமான் ஓடிவந்தான்.
வீட்டிற்கு முன்பாக வாசலையொட்டி வாரியாக குழிப்பறிக்கப்பட்டு அதன்மீது கிடத்தப்பட்ட நிலைக் கதவில்தான் வேட்டியால் சுருட்டப்பட்டிருந்த தண்டபாணி கிடத்தப்பட்டிருந்தான். குடத்தில் மஞ்சள் தடவப்பட்டு நூல் சுற்றப்பட்டிருந்தது. சிதறிய செம்மண்பானை ஓடுகளைப் போல சந்தனம் தெளிக்கப்பட்ட குடத்தின் மீது குங்குமம் ‘திப்பித்திப்பியாய்’ ஒட்டிக் கொண்டிருந்தது.
சுவற்றின் ஓரமாய் பழுப்பு இலைகளோடு நின்றுக் கொண்டிருந்தது முருங்கை மரம். அதன் சாம்பல் நிற உடம்பை பெரியம்மாக்களும் மதினிமார்களும் பற்றிக் கொண்டு சேலை முந்தியின் தலைப்புகளை தங்களின் வாய்களில் சொறுவியபடி நின்று கொண்டிருந்தனர்.
‘முறைவாசலும் முறைப்புமாக’ இருந்த கற்பத்திற்கும் சாரதாவிற்கும் கொண்டுவரப்பட்ட இரண்டு குடங்களின் வாயை அடைத்திருந்த மாங்கொத்தின் கழுத்தைப்பற்றி தூக்கி எறிந்துவிட்டு, அதன் தொண்டைக் குழியினை நிரப்பி வைத்திருந்த சாமந்திப் பூக்களின் உதிரலுடன் அவர்களின் தலையோடு தெப்பமாய் தண்ணீரை கவிழ்த்து விட்டார்கள் மதினிமார்கள்.
முகத்தைப் பார்த்து முகத்தினைத் தூக்கிக் கொண்டு, புளியம்பழமாய் வைத்துக் கொள்ளும் அவர்கள் அருகருகே நின்று கொண்டு, மல்லாத்தப்பட்டிருக்கும் தண்டபாணியின் முகத்தினை பார்த்தப்படியே இருந்தனர். கொண்டை நிறைய மல்லிகைப்பூக்களும், கனகாம்பரமும் பல்லிளிக்க சுற்றப்பட்டு, கழுத்தில் ஓடஓடக் கட்டப்பட்ட கதம்ப மாலையுடன் நின்று கொண்டிருந்த அவர்களின் கைகளில் நிறைய வளையல்கள் அடுக்கடுக்காய் கிடந்தன.
குறுகிய வீதியின் உச்சிப் பொழுதில் அண்டை வீட்டின் சுவற்றின் ஓரமாக தரையோடு படுத்திருந்த வழுக்கை கற்களில் சிலர் அமர்ந்திருந்தனர். வீட்டின்முன் போடப்பட்ட சிறிய அளவிலான துணிப்பந்தல் அவர்களுக்கு போதுமானதாக இல்லை.
‘உடம்போட சுத்துன துணியெல்லாம் விட்டுரண்ணே. அப்படியே தண்ணிய வூத்திவுட்டுருவோம்’, என்று சொன்னதையெல்லாம் யாரும் கவனிக்கவில்லை. கதவில் கிடந்த தண்டபாணியின் துணிகள் முழுவதுமாக அகற்றப்பட்டதும் அவன்மீது தண்ணீர் ஊற்றப்பட்டு, வேண்டிய சடங்குகள் முடிக்கப்பட்டன.
சாமந்திப்பூக்களோடு கலந்திருந்த இன்னும் பிற பூக்களின் வாசமும் பொழுதோடு கலந்து கொண்டிருந்தன. பொழுதின்மீது கொளுத்திய உச்சிவெய்யிலில் அந்தி கிறக்கமாக மேற்குப்பக்கம் சன்னமாய் தள்ளாடத் தொடங்கியது.
‘ஆவுறத பாருய்யா! நட்டுக்கிட்டே நிப்பியா!’ என தலைப்பாகையை உதறிக்கட்டி தண்டபாணியை தூக்கி வைப்பதில், தன் இடுப்பில் அரிவாளை சொருகிக்கொண்டு அவசரம் காட்டினான் லூர்துநகர் அருளப்பன்.
நிறைந்த மாலைகளோடு கிடக்கும் தண்டபாணியினை சுமந்துகொண்டு நொண்டியடித்தப்படி பாடை மேற்குப் பக்கமாய் புறப்பட்டுச் சென்றது. கைகளில் கருக்கருவாளையும் வேப்பிலைக் கொத்தினையும் நெருக்கிப் பிடித்துக்கொண்டிருந்தனர் கற்பகமும் சாரதாவும். அவர்களின் தலைக்குமேல் மதினிகள் பாடையூர்வலத்தில் பற்றிக்கொண்ட வெள்ளை வேட்டிக்கடியில் ஈரம் சொட்டச்சொட்ட தெருவின் எல்லைநோக்கி வந்துக் கொண்டிருந்தனர். வேட்டியின் இருத்தலைப்பையும் பற்றிக்கொண்ட மதினிகளுக்கு தாங்கள் சார்ந்த கொத்தில் நேரும் அடுத்த இழவின் பாடையூர்வலத்திற்கு, ஓரே வீட்டில் இரண்டு பெண்கள் கிடைத்து விட்டதாக நினைத்துக் கொண்டனர்.
‘என்னத்தக் கண்டோம் இவன அள்ளிக்கிட்டு’, என வேட்டிக்கு அடியில் தண்டபாணியின் முதல் மனைவியான கற்பகத்தின் மனதில் கலக்கமாகவே இருந்தது. தகிக்கும் வெய்யிலை அவளால் அண்ணாந்து பார்க்க முடியவில்லையென்றாலும் பாதங்களில் அப்பும் வெக்கையில் பொழுதின் தகிப்பை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
‘ஏய் புள்ளையா, குட்டியா! மச்சான நெறமா கொண்டுபோய் காடு சேக்கணும்முண்டா’ என்ற பாடையின் முதல் வரிசையிலிருந்து வரும் அதிர்ந்த கூச்சலோடு ஆண்களின் கூட்டம் முன்னால் நகர, முறைக்கார பங்காளிப் பெண்கள் அவற்றின் பின்னால் சம்பிராதாயங்களோடு பாடமாத்தியினை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர்.
எரவானத்தின் அண்டையோடும், சுவற்றில் சாய்ந்திருக்கும் அடுக்குப்பானைச் சட்டிகளாய் தெருவோரங்களில் நின்றுக் கொண்டிருக்கும் பெண்கள், தனது மனதை எட்டிப்பார்த்துக் கொண்டிருப்பதாக கற்பகம் நினைத்துக் கொண்டாள். தெருவின் ஓரமாக வாரியின் குப்பையை தன் அலகால் கிளறி மேய்ச்சலை தன் குஞ்சுகளுக்கு ‘பொக்பொக்கென’ சொல்லிக் கொண்டிருந்த பெட்டை பாடையூர்வலத்தின் இரைச்சலில் இறக்கையை விரித்து தன் குஞ்சுகளை அணைத்து குப்பையோடு பதுங்கியது.
பாடையின் மேல் நின்றுக்கொண்டு சம்சாரிகள் மாலைகளை விசிறியடித்தனர். மதினிகள் பற்றிக் கொண்டிருந்த வேட்டிக்கு அடியில் தண்டபாணிக்கு இரண்டு மனைவிகளாக வரும் சடங்குகள் தெருவெங்கும் வீசப்படும் மாலையிலிருந்து உதிரும் இதழ்களாக உலர்ந்து உதிர்ந்தன.
தண்டபாணியுடனான தனது திருமணத்திற்கும், நகர்ந்துச் செல்லும் பாடைக்குமான இடைவெளி முப்பது ஆண்டுகளாவது இருக்கும் என கற்பகம் நினைத்துக் கொண்டாள். ஆனால் அவளுக்கு பின்னால் வரும் சாரதாவிற்கு அனேகமாய் கழிந்த மனக்காடு விதைப்பிற்கு பிறகு வந்த ஆவணியோடு ஐந்து வருடம் மட்டுமே கடந்து விட்டிருந்தது.
‘புள்ள என்னாச் சொல்லப்போவுது. பொங்கிப் போட்றதுக்கும் பொழுசாய பாய விரிக்கறதுக்கும் ஒரு ஆளுன்னு’ நெனப்புல ரணங்கட்டுனமாதிரி தன்னை தண்டபாணியோடு அடைச்சூட்டதுதான் மிச்சமுன்னு சாரதாவிற்கு மனத்தாங்கலாகவே இருந்தது.
‘நிறுத்து நிறுத்து சாமி’ என லூர்துநகர் அருளப்பன் பாடைக்கு முன்னால் தன் இடுப்பில் சுற்றியிருந்த நாலுமுழ வேட்டியை தரையில் விரித்து தன் உடலெங்கும் புழுதி அப்பும்படி கும்பிட்ட சாயலில் கைகளை நீட்டி விழுந்ததும் கொத்தின் மூப்பாடி அவற்றின் மீது வேட்டியில் விழுந்த சில நாணயங்களை விசிறினான்.
பாடமாத்திக்கு முன்புவரை வீதியெங்கும் மூன்று நான்கு முறை விழும் அருளப்பன், தன் வயிற்றின் மீது ஒட்டும் மண்ணைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. கும்பிடும் கைகளில் ஒட்டும் மண்ணை மட்டும் அறைந்து பிழிவதைப் போல தட்டி உதறிவிடுவான்.
பாடைமாத்தியில் தண்டபாணியை இறக்கி வைத்தனர். கடைவாய்க்கருகில் பிளந்துப்பட்டு உதட்டின் ஓரமாக வறுத்து தோல் நீக்கப்பட்ட புளியங் கொட்டைப்போல பழுத்த நிறத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் தண்டபாணியின் சிங்கப்பல்லொன்றை சாரதா பார்த்தாள். முட்டானி எலும்புகளை தன் கடைவாய்ப்பற்களால் தண்டபாணி நொறுக்கி சப்புக் கொட்டிக்கொண்டு தின்னும்போது அவன் முழங்கையின் முட்டி வழியாக தரையில் சல்லுக் கொட்டியது அவள் நினைவில் வந்தது.
வெக்கையில் உதிர்ந்து கிடந்த சாமந்திப் பூக்களை மிதித்துக் கொண்டே நகர்ந்து கொண்டிருப்பது ‘தேவலாம்போல’ சிலருக்கு இருந்தது. தலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த தலையானி மூட்டையின் மேட்டில் தண்டபாணியின் தலை சன்னமாய் மேலோங்கியிருக்க, பாடமாத்தி வந்ததும் தண்டபாணியின் தலைக்கால்மாட்டு போக்குகள் மாற்றப்பட்டன.
‘ஊரவச்சதிலியே பொழுதிரிக்கும் ஊரவைச்சிகிட்டு இருக்கமுடியுமா? வறட்டு பொட்டச்சியோடயெல்லாம் காலமுச்சூடும் கெடக்கமுடியாதுடி’ , என்ற தண்டபாணியின் வாய் தலையோடு சேர்த்து வெள்ளைத்துணியால் இறுகக்கட்டப்பட்டிருந்தது.
வெற்றிலையெச்சின் சிவப்பாக மண்பானை ஓடுகள் சிவப்பும், பச்சையுமான வளையல்களின் சிதறல்கள், தெறித்துக்கிடக்கும் பாடமாத்தியில் கற்பகமும் சாரதாவும், வெறுங்கழுத்தோடும் இருக்கும் மதினிகளின் மடியில் சாய்க்கப்பட்டனர். அவர்களின் வளையல்கள் கைகளோடு கைகளாக மோதி உடைக்கப்பட்டன. கொண்டையில் சுற்றப்பட்டிருந்த பூச்சரங்கள் தலையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டவுடன், தண்டபாணியின் பாடை விசுக்கென உயரமாக எழும்பி மயானத்தை நோக்கிச் சென்றது. தண்டபாணி தன் இறுதி மூச்சுக்குப் பிறகு இதற்குதான் காத்துக் கொண்டிருந்ததாக தெரிந்தது. சம்பிரதாயமாக சில மதினிமார்கள் கற்பகத்தையும் சாரதாவையும் கட்டிக்கொண்டு விசும்பினார்கள்.
குழிமேட்டில் தண்டபாணி வைக்கப்பட்டான். குத்திரித் தலைப்பாகையினை தலையில் கட்டிக் கொண்ட கொழுந்தன் முறை கொண்ட லோகு, மூக்கில் எலுமிச்சைப்பழம் சொருகப்பட்டிருந்த வாங்கருவாளை வானத்தை கொத்துவதைப் போல தன் தோளில் சாய்த்துக் கொண்டு, சிவப்புச் சேலைகளை மதினிகளுக்கு கொண்டு வந்தான். பாடைமாத்தியில் மதினிகளின் தொடையில் வீழ்த்தப்பட்டுக் கிடக்கும் அவர்களின் முதுகில் போட்டுவிட்டு குழிமேட்டுக்குச் சென்றான்.
அலங்கோலமாக வைக்கப்பட்டிருந்த மல்லிகைப் பூச்சரத்தையும் கனகாம்பரத்தையும் அப்புறப்படுத்தப்பட்டதும், சிவப்பு சேலையினைப் கற்பகத்திற்கும் சாரதாவிற்கும் தலையில் போர்த்திவிட்டு பாடைமாத்தியிலிருந்து மதினிமார்கள் கைத்தாங்கலாக வீட்டிற்கு அழைத்து வந்தனர். பாடைமாத்தியில் ‘கெம்பரமாய்’ நின்றுகொண்டிருந்த ஒடுக்கலான உடலமைப்பைக் கொண்ட புளியமரத்தின் கிளையில் கரைந்துக் கொண்டிருந்த காக்கைகள் அப்போது இலைகள் உதிர உயரப்பறந்தன.
மயானத்திலிருந்து திரும்பிக்கொண்டிருக்கும் கற்பகத்தின் முதுகில் சூரியன் அறைந்தபடி இருந்தது. தெருவெங்கும் மஞ்சள் பூக்கள் பரந்து கிடந்தன. உதிர்ந்து கிடந்த ஒவ்வொரு பூக்களும் தண்டபாணியின் நெறிஞ்சிமுள்ளின் சொற்களாய் கற்பகத்தின் கால்களைத் துளைத்தன.
‘கண்ணுலருந்து, ஒருபொட்டு தண்ணியே காணோம் பாரேன். அழுத்தக்காரி. புருசன் பூட்டான்னு நெஞ்சில கொஞ்சமாச்சும் வெசனம் இருந்தா இப்புடி இருப்பாளா’ன்னு வரும் வசவுகள் அவள் காதுபடவே விழுந்தன. கற்பகத்திற்கு அழும்படியாக தோன்றவில்லை. தான் சத்தம்போட்டு கேவினால் சலிப்பாறிப்போகும் என நினைத்துக் கொள்ளும் பொழுதெல்லாம், சூடுபறக்க குந்தானியில் இருங்குச் சோளத்தை குத்தியதுதான் அவள் நினைவுக்கு வந்தன.
‘ஏய் நான் எந்த கெணத்துலனால்லும் விழுவுவேண்டி நீ வறட்டு முண்ட. அத கேக்குறத்துக்கு ஒனக்கு ஓக்கியத இல்லன்னு,’ நெறஞ்ச அம்மாவாசைக்கு ஒத்த வூட்டுக்காரனோட புள்ள சாரதாவ கோழிக்கூப்புடக் கொண்டாந்தவன், பின் வூட்டுல கொண்டு வந்து வச்சதுதான் கற்பகத்துக்கு நினைவில் வந்து கொண்டே இருந்தது.
‘பாவம் அவன் ஒரு சவலத்தட்டுனவன். ஏங்குடிய கெடுக்குனுன்னுலாம் அவனுக்கு துப்பரவா நெனப்பு இருந்துருக்காது’ன்னு சாரதாவின் அப்பாவின் இயலாமையைப் பற்றி நினைத்து கொண்டு சாரதாவை ஏறிட்டுப் பார்த்தாள். ஆனால் அவளின் முகம் முன்பு போலில்லை.
‘தனக்கு புள்ள உண்டாகுல. வறடின்னு சொல்ற தண்டபாணியை பதிலுக்காக ‘வறடன்’ன்னு சொல்றத்துக்கு தெம்பும் தேட்டையும் இல்லாமல், கொழுத்த திண்ணியாறு தாண்ட்ர வரக்கும் தாண்டட்டும்முன்னு’ நினைத்துக் கொள்வாள். அவள் உடலின் மீது நினைவுகள் நீச்சொட்டுகளாய் எப்பொழுதும் கசகசத்துக் கொண்டே இருந்தன.
நங்கைகளும், பங்காளிப் பெரியவர்களும் அன்றின் மாலை சடங்குகளை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டுருந்தனர். மேற்குபக்கமாய் சுழன்றுத் திரும்பி காட்டுமுட்கள் நிறைந்த எருக்கம் பாதையில் நொண்டியடித்துச் சென்ற பாடையினைப் பற்றி கற்பகத்தின் மனதில் எந்த நினைப்பும் இல்லை. மாலை இருட்டுக்கட்ட தொடங்கியிருந்தது.
தாழ்வாரத்திலும் திண்ணையின் அடைவாகவும் அமர்ந்திருந்த சில நங்கைகள் ‘கோழியப் புடிச்சி கொடாப்புல போட்டுட்டு வந்துற்றேன். வெளக்குக்கு எண்ணய வூத்திட்டு வந்தர்றேன் புள்ளயோவ்ன்னு’, தாக்கலை சொல்லிவிட்டு கலைந்துவிட்டிருந்தனர்.
கழற்றப்பட்டக் கதவினை பங்காளி தலைக்கொத்திலிருந்த கொழுந்தன் நிலைக் கொண்டியில் மாட்டி விட்டிருந்தான்.
ஒற்றை வாசற்படிக்குள் இருந்த இரட்டை வீடுகளிலும் வெளிச்சமும் இருளும் மாறி மாறி தரையில் படர்ந்து கொண்டிருந்தன.
‘ஆம்பளன்னா கட்டுனவளுக்கு ஒண்ணு வவுத்துப் பசியாத்தனும் இல்லாட்டிப் போனாக்க வவுத்தையாச்சும் நெறக்கனும். நமக்கு ரெண்டும் இல்லாத வெண்ணெலயாப் பூடுச்சின்னு’, இருந்த கற்பகத்திற்கு சில நோன்பு நாட்களுக்குப் பின்னாக மனது லேசாகிவிட்டிருந்தது.
ஒவ்வொரு இரவையும் தண்டபாணியின் ‘வறடி’ என்ற வார்த்தை மட்டும் கற்பகத்தின் நினைவை வதைத்துக் கொண்டே இருந்தன.
முறைவாசல், முறைத்திண்ணை முழுகலைப் பற்றியெல்லாம் கற்பகம் கவலைப்படுவதில்லை. விடியற்காலையில் வாசலில் அயர்ந்து கிடக்கும் நட்சத்திரங்கள் எழுந்து செல்லும் முன்னரே எழுந்து விடும் அவள் சாணம் தெளித்து விடுவதோடு சாரதாவை எதிர்ப்பார்ப்பதும் இல்லை.
தெற்குத் தோப்பில் இறைந்து கிடக்கும் பூத்த நெருப்பின் துளிகளாய் சுருங்கிய வேப்பம் விதைகள் தரையெங்கும் பரந்து கிடந்தன. நெளிந்து மேலெழும்பும் நெருப்பின் நாக்குகள் விதைகளின் மீது அயர்ந்து சோம்பலாய் கிடக்க, அவற்றிலிருந்து ஒரு பச்சை மொட்டு முட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கற்பகம்.
முப்பது வயதுக்குள் இருக்கும் சாரதாவுக்கு முப்பது வயதுக்கும் அதிகமாக இருக்கும் தண்டபாணியுடனான பெரும்பகுதி உறவும் குடித்தனமும் அடுப்பங்கரையோடுதான் கழிந்திருந்தது. கீழக்காட்டின் பட்டத்திற்கு ஒருமுறை இடுப்புக்கு வாதம் கொண்டவனாய் ‘அதனைத்’ தூக்கிக்கொண்டு பாயில் படுக்கவரும் தண்டபாணியின் உடலெங்கும் நாட்டுச் சாராயத்தின் வீச்சம் சுழன்றடிக்கும். அவன் போதையின் கிறக்கதில் நிர்பந்திக்கும் சம்பிராதாயத்தில், அவளுக்கு குமட்டல் குதும்பி வந்தவையனைத்தையும் அவனைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் அவளின் மனதில் வாதையின் நெடியாக இன்றும் சுழன்றடித்தன.
பொழுதுகள் ஓய்வின்றி தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பதை புலக்கத்தில் விடப்பட்டிருக்கும் நடையில் விருட்டென பறக்கும் குருவிகள் அவ்வப்போது அறிவித்துச் சென்றன. வயிற்றுப்பாட்டிற்காக பங்காளிப் பெண்களுடன் கூலிக்குச் செல்லும் பொழுதைத் தவிர, இரவின் நிறம் சாரதாவை ரணமாக்கிக் கொண்டிருந்தது. வேலைமுடிந்து பின்வீட்டில் நுழைந்துக் கொள்ளும் அவளின் இருப்பை, மாலையில் துடைத்து மாட்டாத சிம்னி விளக்கு சீசாவின் அயர்ந்த ஒளிர்வு மட்டுமே அறிவிக்கும். எப்பொழுதும்போல் பேசாமல் முறைப்பாடாக இருந்தாலும், இப்பொழுது கற்பகத்துடன் சாரதா எந்த முகச்சுழிப்பையும் காட்டுவதில்லை.
காற்று அந்தியினை தன் பெரும் வாயில் கவ்விக்கொண்டு நிலவுக்கு முன் மறைந்துப்போனது. சாரதாவிற்கு ‘தூரம்போகும் சமயத்தின்’ இரண்டாம் நாளாக இருந்தது. சோளக்காட்டுத் தட்டையின் வெட்டுக்கிளிகள் துள்ளிக் குதித்து தன் இளம் கருமுட்டையின் மூக்கை கொறித்து வேட்டையாடுவதாக அடிவயிற்றில் ரணம் கட்டியது.
வெடித்து வழியும் கருமுட்டையின் வாசம், அவள் பார்க்கும் இரவெங்கிலும் கலந்திருக்க, கைக்கால் உதறி நடுக்கம் கொண்ட அந்த இரவு, ‘தப்படித்தப்படியாய்’ அவளுக்கு முன்னால் கடந்து போனது. விடியலும் பொழுதும் சிலுப்பிக் கொண்டு தனித்திருந்து பின்அந்தியின் இருட்டில் கூரைசந்தில் இரகசியமாக சேர்ந்துக் கொள்வதாக இருந்தன.
‘உதிரப்போக்கின் காலத்தில்’ கன்னங்களில் தோன்றியிருந்த இரண்டு பால்பருக்கள் மறைந்து அழகாய்த் தெரிந்தன. இரவிக்கையின் கொக்கிகளை பிணைத்துக் கொண்டிருந்த சாரதா, தான் எத்தனை முறை முதுகை சுருக்கிக் கொண்டாலும் அதனை பிணைக்க முடியாதபடி அவளின் முலைகள் மலர்ந்து விரிந்திருந்தன. நுரையீரலை சுருக்கி கொக்கிகளை மாட்டிக்கொண்ட அவளின் மனது அன்று அலைந்து மிதப்பதாகவே இருந்தது.
பட்டத்து மழைக்கான மேலக்காற்று வீசத்தொடங்கியதும், தெருக்களில் புலக்கம் தொடங்கிய சல்லு சாரதாவின் காதில் விழுந்தது. பெரும் பாறைகளில் பாம்புகள் உருண்டு புரள்வதைப் போல உடலெங்கும் முறுக்கம் கொண்டபடி சாரதா தன் படுக்கையில் நெளிந்து கிடந்தாள். எத்தனை இரவுகள் இப்படியாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கையில், அவளின் கொப்பரைக் கண்களில் கொழித்து விசும்பும் கண்ணீர் கொப்பளித்து அவளைக் கொத்தின. மூட்டையாய் சுருட்டி வைத்திருக்கும் தலையாணியை தன் முன் பற்களால் கடித்து குதறுவதோடு, வாய்விட்டு சாமங்களில் அவள் கேவிவிடுவாள். ‘இல்லாததுக்கு இலுப்பைப்பூச் சக்கரை’ என்பதாக ஐந்தாண்டு காலம் தண்டபாணியோடு கடந்து போனது நினைவுக்கு வந்தது.
அந்தி முடிந்ததும் வாடிக்கையாக இரவு அவளுக்குள் நிறைந்துவிடுவதும், பின் அவற்றிற்குள் தன்னை ஒப்புக் கொடுப்பதுவுமாக சாரதா இருந்தாள். புலக்கத்திற்காக விடப்பட்ட நடையில் தொட்டியில் முளைத்திருந்த வாடாமல்லியினை பின்னிரவில் எழுந்து தன் தலையில் சூடிக்கொள்ளும் அவளுக்கு, ஒருவகையில் தனிமையை போக்குவதோடு, அவை இரவின் நெடுங்கிலும் அவளுடன் உரையாடுவதுமாக இருந்தது. மல்லாந்து படுத்துக்கொண்டு கனத்த முலைகளை தன் இரு கைகளிலும் பற்றி இரவு முழுக்க பிசைந்துக் கொள்ளும் சாரதாவிற்கு, அழுகையும் ஆத்திரமுமாக பொங்கி எழுந்தன. எப்பொழுது தான் தூங்கப் போகிறோம் என்பது கூட அவளுக்கு தெரிவதில்லை.
நடுநிசியில் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கிக் கொள்ளும் அவள் தன் உடலை தானே மோகித்துக் கொள்வதோடு, தன்னுள்ளிருந்து பிரவாகமாகும் ஒரு சம்சாரியை தன் உடல் மீது கிடத்திக் கொண்டு ஒவ்வொரு நாளின் இரவையும் தள்ளிக்கொண்டிருந்தாள். முன்னிரவில் தன்னோடு கிடத்திக் கொள்ளும் சம்சாரியினை பின் ஒருக்களித்து மல்லாத்துவதைப் பற்றி அவள் நினைப்பதில்லை.
அவளின் முனகலில் இழைந்தோடும் புணர்தலின் நெடி இரவெங்கிலும் நிரம்பி வழிந்தன. கைகளை மடித்து முகத்தினை மறைத்துக்கொண்டபடி தன் பெண்குறியினையும் முலைகளையும் படுக்கைக்கு முழுவதுமாய் ஒப்புக் கொடுத்திருந்தாள். காலின் இரண்டு கட்டைவிரல்களால் விரிக்கப்பட்ட பாயிலிருந்து முட்டி எழும் ஓசையும், கண்ணீரும், ஓயாக் கேவலும் முன்வீட்டின் கற்பகத்தின் தூக்கத்தினை அதங்குவதாக இருந்தது.
இரவு முழுக்க கேவல் இருந்து கொண்டே இருக்கும். முறை வாசலுக்குகூட அதிகம் வெளியில் வராத சாரதாவிற்கு தான் சமைத்த ஏதோ ஒன்றை பகலில் தருவாள். பின் அவள் படுக்கையிலிருந்து எழுந்திருப்பதும் உண்பதும், உறங்குவதும் எதுவும் கற்பகத்திற்கு தெரிவதில்லை.
அன்றைய இரவு நிறைமாத கர்ப்பிணியைப்போல மலர்ந்து அழகாய் இருந்தது. துண்டுத்துண்டான மேகங்கள் கம்மங்காட்டுப் பாத்திகளில் வறட்டுத்தண்ணீர் பாய்ந்ததைப்போல இருந்தன. புள்ளி போட்ட இரவிக்கை அணிந்ததைப்போல வானத்தில் நட்சத்திரங்கள் பூத்து நின்றன. தூக்கமின்றி புரண்டுக் கொண்டிருந்த கற்பகத்தின் மனதில் அன்று சாரதா மட்டுமே நிரம்பி இருந்தாள். தோன்றியவற்றையெல்லாம் மனதில் அடைத்துக் கொண்டு, பின் வீட்டில் இருக்கும் சாரதாவின் வீட்டிற்கு எழும்பிச் சென்றாள் கற்பகம். இரண்டு குட்டிச் சுவற்றின் வாசலில் மூங்கில் பாறையின் மீது மறைப்பாக தொங்கவிடப்பட்டிருந்த சேலையினை விலக்கி தனித்து பாயின் மீது வீற்றிருந்த சாரதாவைப் பார்த்தாள்.
மணக்கும் பூக்களை தன் தலையில் சூடியிருந்த சாரதாவின் அருகில் தன்னைச் சாய்த்துக் கொண்ட கற்பகம், முழு நிலவாக இருந்த சாரதாவின் இரண்டு முலைகளையும் கொய்தும் படியாக பற்றிப் பிசையத் தொடங்கினாள். முன்னிரவில் முளைக்கத் தொடங்கிய நிலவு சன்னஞ்சன்னமாய் முழுமையாக பின்னிரவில் வளர்ந்திருந்தது. நிச்சலனத்தில் வானத்தின் பெரும் பரப்பும் புதிய ஒளியின் பிரவகமாக உருப்பெற, முறைவீட்டிலிருந்து எழும்பிவரும் கேவல் நின்றுபோனது. அன்றைய விடியல்முதல் முறைவாசலும், முறைத்திண்னையும் பிரிக்கப்படாமல் ஒன்றாக வாரித் தெளித்து மொழுகப்பட்டன. புலக்கத்தில் விடப்பட்ட நடையில் வாடாமல்லிச் செடிகள் அதிக பூக்களை மலர்த்தியிருந்தன. கற்பகத்தின் ஆழ்மனதில் அமிழ்ந்திருந்த கேவல், வாடாமல்லிகளின் பூந்தோட்டமாய் பின் வீட்டிலிருந்து புதிய வாசத்தினைக் கமழ்த்தியதும், வானத்தில் ஒரு புதிய திசையை நோக்கி பயணப்பட்டது நிலவு.
- க.மூர்த்தி
கிராமியச் சொல்லாடல்களில் சொரியும் மணம் மனம் நிறைக்கிறது…!
கதைசொல்லியாக நிலவே பாத்தியப்பட்டிருக்கிறது. இத்தகைய கதைகளைக் கூற எத்தனை திராணி அந்த நிலவிற்கு…
நிலவே…!
(ஆசிரியர் மூர்த்தி அய்யா அவர்களே)
இதுபோல் உலவும் வழியில் பலவும் காட்சிகளாக அமையப்படுவதை காட்சிப்படுத்தி எங்களையும் காணச் செய்வீராக…
நன்றி நண்பரே. தங்களின் வாசிப்பில் மகிழ்கிறேன்.
Super sir 👌🏾👌🏾👌🏾
எழுத்தாளர் க.மூர்த்தியின் ‘நீர்க்கன்னிகள்’ சிறுகதை நிதானமாக ஆரம்பித்து விறுவிறுப்பாக கிராமத்து சூழல் மற்றும் பாஷைகள் ஒருங்கிணைந்த கலவையாக முடித்தது அருமை.வாழ்த்துக்கள்.
– தஞ்சிகுமார்.
நன்றி தோழர். வாசிப்பில் மகிழ்கிறேன்.