விரவிக் கிடக்கும்
சடைத்த மர நிழல்கள்…
ரயில் தண்டவாளத்தை இரு கோடாக
முதுகில் கீறிய அணில் குஞ்சு,
என் சித்திரத்திலிருந்து தப்பித்த தும்பிகள்
படபடக்கும் வண்ணாத்திப்பூச்சி,பொன் வண்டு
வேலியோர தொட்டாச்சிணுங்கி.
குப்பை மேனிச் செடி இணுங்கும்
சாம்பல் பூனை…
இறைந்துகிடக்கும்
சருகு,
நான் கூட்டக் கூட்ட
இலைப்பச்சையாகி வளர்கிறது!
யாரோ
வெயிலைப் பிய்த்து
துண்டு துண்டாய்
காய வைத்திருக்கிறார்கள்.
சொதசொதவென இழுக்கும்
செஞ்சேற்றுக்குள்
வெறுங்காலுடன் புதைதல்
சுவர்க்கம்!
எல்லா இடங்களிலும்
செடிகளை நடுகிறேன்…
ரோஜாக்களையும்
முள்ளாய்க் குத்தும்
கள்ளிகளையும் இன்னும்
இடையிலுள்ளவற்றையும்…
பின்னந்தியில் பிறை கீறிய
வானத்தில்
ஆயிரம் கனாப்பொறிகள்.
முடிவிலியாய் நீள்கிறது
என் முற்றவெளி…
-ஷமீலா யூசுப் அலி
ஓவியம் : ஷமீலா யூசுப் அலி
தேர்ந்தெடுத்த தமிழ் சொற்கள், அழகான எழுத்து நடை. தித்திக்கிறது. அருமை.
ரசனையில் தோய்த்தெடுத்த கவி வரிகள். தலைப்பே ஒரு கவிதையாக.. ரசித்தேன்.
சிறந்த சொல் தேர்வுகள்…
வாழ்த்துக்கள்
அழகு