அகிலாண்டத்திற்கு அதனை எடுத்துச் சாப்பிடலாமா வேண்டாமா என்ற குழப்பம் வந்தது. பொதுவாகப் பசியென்று வந்துவிட்டால் அவர் இவ்வளவு யோசிப்பதில்லை. அதுவும் நேற்று இரவு வண்டியேறுவதற்கு முன் அவர் திருச்சியில் சாப்பிட்டிருந்தார். மறுநாள் மதியம் கடந்திருந்தது. அவர் வந்த ரயில் மற்றொரு வண்டிக்கு வழி கொடுத்து, புதர்கள் மண்டியிருந்த ஒரு நிலையத்தில் காத்துக்கிடந்தது. வண்டியிலிருந்த சிலருடன் இவரும் கீழே இறங்கி நின்றுகொண்டிருந்தபோது தான், அந்தக் கொய்யாப்பழம் உருண்டோடி வந்து அங்கிருந்த மின் கம்பத்தில் முட்டி நின்றது. ரயில் பெட்டியின் சன்னலோரம் அமர்ந்திருந்த அந்தச் சிறுமியின் கைக்கு அடங்காமல் அது கீழே விழுந்திருக்கலாம் என்று நினைத்துக்கொண்டே குழப்பத்துடன் நின்றுகொண்டிருந்தார். சன்னல் கம்பியைப் பற்றியபடி அச்சிறுமி அவரையே இன்னும் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களிலிருந்த எதிர்பார்ப்பு அவரை ஏதோ செய்ய, திரும்பி அவளுக்கு முதுகைக் காட்டி நின்றுகொண்டார். தூரத்தில் சிறு சிறு மரங்களின் குவியலாக மலைகள் இருந்தன. ஜமாலை நினைத்துக்கொண்டார். அவன் இந்நேரம் அய்யம்பேட்டை பள்ளிவாசலின் அடுக்களையில் இரவுக்கான நோம்பு கஞ்சியில் கீரைகளைச் சேர்க்கச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் குவித்து வைத்திருப்பான். அங்குச் சென்றிருந்தால் ஜமால் தனக்கு நெய் சோறு, ஆனம் கொடுத்திருப்பான். அவனுக்காக நௌசாத் செய்து தரும் அல்வாவும் கூட கொஞ்சம் கிடைத்திருக்கும் என்று நினைத்துக்கொண்டபோது, வயிற்றிலிருந்து குமிழிகள் பொங்கிப் பட படவென உடைந்தது போன்ற சத்தம் வந்தது. பள்ளிவாசலுக்கே திரும்பிச் சென்று விடலாமா என்று யோசித்தார். ஜமால் அவனுக்கேயுரிய அக்கறையான குரலில் “வீட்டுக்கு போ, அகிலாண்டம்” எனச் சொன்னது நினைவுக்கு வந்தது. திரும்பி சன்னலைப் பார்த்தார். அச்சிறுமி அவளின் அருகில் அமர்ந்திருந்த யாரிடமோ வெளியே கைநீட்டி ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். ரயில் பெட்டியினுள் இருந்த தணிந்த இருளில் ஓர் உருவம் எழுவது நிழலாய் தெரிந்தது. அகிலாண்டம் கீழே கிடந்த பழத்தைப் பார்த்தார். நடைபாதையிலிருந்த சதுர சிமிட்டி பலகைகள் வெவ்வேறு உருவில் உடைந்து, அதன் இடைவெளிகளில் முளைத்திருந்த செடிகளின் இடையே அந்தக் கொய்யாப்பழம் மறைந்திருந்தது. எந்த நேரத்திலும் எவரேனும் வண்டியிலிருந்து வெளியே வந்து அந்தப் பழத்தை எடுத்துவிடலாம் என்று அவருக்குத் தோன்ற, குனிந்து அதனை எடுக்க முற்பட்ட சமயம், தடதடவென ரயில் ஒன்று மிக விரைவாக அவருக்கு அருகில் சென்றது. உடல் விதிர்த்துப் பின்வாங்கிக்கொண்டு திரும்பி அந்த ரயிலைப் பார்த்தார். சுழன்று பறக்கும் புழுதி திரைக்குப் பின்னால் சென்றுகொண்டிருந்த அந்த ரயில் அவரின் காட்சிக்குள் அடங்கும் முன்னரே கடந்து போக, அங்கிருந்தவை அனைத்தும் அதனதன் நிலைக்கு மீண்டு வந்தது. அது விட்டுச் சென்ற வெறுமையில் அகிலாண்டம் ஆழ்ந்து நிற்க, அவர் வந்த ரயில் ஒலியெழுப்பி மெல்ல முன்னகர்ந்தது. அச்சிறுமியைப் பார்த்தார். அவள் தூரத்தில் புள்ளியாய் மறைந்துபோன ரயிலையே சன்னலில் கன்னம் ஒட்டிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவர் தொத்தி ஏறிய பெட்டியின் வாயிலில் ஏற்கனவே ஒரு குடும்பம் அமர்ந்திருக்க, அவர்களைச் சற்று உள்நோக்கி நகரச் சொல்லி படிகளை ஒட்டிச் சம்மணமிட்டு வெளியே பார்த்தவாறு அமர்ந்துகொண்டார். ரயில் நிலையத்தின் நீண்ட நடைபாதை ஒரு சரிவுடன் முடிய, அதன் நீட்சியாய் தொடர்ந்த ஒற்றையடிப் பாதையில் நாய் ஒன்று கனத்த முலைகள் ஆட, அதன் தனித்த கவலைகளுடன் எங்கோ ஓடிக்கொண்டிருந்தது. புதர்களுக்குப் பின்னால் முக்காடிட்டு வாய்மூடி நின்ற பெண்கள் வெறுப்பாய் ரயிலையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். காற்று தடம் பதித்த மணல் வெளியில் நிறைந்திருந்த கோரைப்புற்கள் கானல் நீரில் அலையாடின. சிலுவைகள் பதித்த கல்லறைகளைக் கொடிகள் பற்றியிருந்தன. எங்கிருந்தோ வந்து ரயிலுடன் சேர்ந்துகொண்ட சாலையில் பேருந்து ஒன்று சிறு துள்ளலுடன் சென்றுகொண்டிருந்தது. இரண்டிலும் பயணிப்பவர்களில் சிலர் இனி எப்பொழுதும் நிகழாத சந்திப்பை ஒருவருக்கொருவர் நிகழ்த்திக்கொண்டனர். ரயிலின் அதிர்வுக்கும், குலுக்கலுக்கும் அகிலாண்டத்தின் பெருத்த உடல் ஒத்திணைந்து ஆடிக்கொண்டிருந்தது. வெளித்தெரியும் உடலெங்குமிருந்த வெண்ணிற முடிகளில், ஒளி படுவதும் மறைவதுமான தொடர் நிகழ்வில் அவர் மினுங்கிக் கொண்டிருந்தார். அவரின் தடித்து அகன்ற உள்ளங்கையில் ஒளித்துவைத்திருந்த கொய்யாப் பழத்தைப் பார்த்தார். மெல்லிய தோலுடன் பசுமையான நிறத்திலிருந்தது. கடித்தவுடன் வெளித் தெரியும் அதன் சிவந்த உள்பக்கம் மனதில் எழ, அதனை முகர்ந்து பார்த்தார். மாங்குடி பெரியசாமி வீட்டுத் திண்ணையில் அவர் படுத்துறங்கிய அந்த இரவு நினைவுக்கு வந்தது. சாணி மெழுகிய தரையின் மணத்தையும் மீறி, அந்த இரவின் செறிவென எழுந்த கொய்யாப் பழத்தின் வாசனை தூக்கத்தைக் கலைக்க, பொலிந்த உடலுடன் யாரையோ எதிர்பார்த்து வாசலில் நின்றிருந்த அந்தக் கொய்யா மரம் நினைவுக்கு வர, அவருக்குச் சட்டெனக் கையிலிருந்த கொய்யாப் பழத்தைத் தூக்கி எறிந்திடத் தோன்றியது. அதனைச் சாப்பிடாமல் அப்படியே மடியில் சுருட்டி வைத்துக்கொண்டார்.
சந்திராவை பெண் பார்க்கச் சென்ற அன்று அவளுடன் சேர்ந்து நிற்கவைத்துப் பார்த்தபோதே தொடங்கிவிட்டது அந்தப் பேச்சுக்கள். உலகின் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி அகிலாண்டம் என்றும், துருப்பிடித்த தகரக் குப்பையில் அவருக்குத் தங்கத் தாம்பாளமே கிடைத்திருக்கிறது என்றும் நீண்டன. அப்பேச்சுகளை அகிலாண்டம் முதலில் ரசித்தாலும், அந்தத் தங்கத் தாம்பாளத்தை ஒருபோதும் தன்னால் உபயோகிக்க முடியாது என்று உள்ளுணர்வில் கண்ட போது, அவர் அங்கம்மாவிடம் எவ்வளவோ சொல்லியும் அவனால் அத்திருமணத்தை நிறுத்தவே முடியவில்லை. “அரியலூர்க்காரனுங்க ஒங்க அம்மா வீட்டு ஆளுங்கடா. அவளும் செத்ததுக்கப்புறம், சொந்தம் விட்டுப்போக கூடாதுன்னு பொண்ணு கொடுக்கிறாங்க. எதாவது ஒண்ணுன்னா அப்படி விட்டுட மாட்டானுங்க.” என்று சமாதானம் சொல்லி நடத்தி வைத்தாள். சந்திரா, வீட்டுக்கு வந்த முதல் நாளிலிருந்தே அவளை யாரோ வேறு ஓர் உலகத்திலிருந்து வலுக்கட்டாயமாகப் பிய்த்துக் கொண்டு வந்தது போலவே இருந்தாள். உடல் முழுவதும் கூரிய முட்கள் கொண்ட குறுஞ்செடி போலச் சொற்களிலும், பார்வையிலும், உடல் மொழியிலும் வெறுப்பை வளர்த்து வைத்திருந்தாள். காலம் அவளிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என அகிலாண்டம் காத்திருக்க நினைத்தான். சில மாதங்களிலேயே அவன் நினைத்தது போலச் சந்திரா கதவோரம் அமர்ந்து தெருவையே பார்த்துக்கொண்டிருப்பதாகத் தெரு பேச்சுகள் அவன் காதுபடச் சொல்லிச் சிரித்தன. அந்தக் காதிருப்பு தனக்காக அல்ல என்பதை சந்திராவின் கையை ஓர் இரவு தொட்ட போது, அவள் அழுது, ஆத்திரம் கொண்டு அனைத்தையும் உடைத்து அறைக்குள் சென்று தாழிட்டு உறங்கியபோது தெரிந்து கொண்டான். அதற்குப் பின் இரவில் கனன்று கொண்டிருக்கும் விறகடுப்பிற்கு துணையாக கரிப்படிந்த அடுக்களையில் படுக்க ஆரம்பித்தான்.
ரயிலின் அதிர்வொலியையும் மீறி வயிற்றில் எழுந்த வினோத ஒலியை மறைக்க, அகிலாண்டம் சற்றே அசைந்து அமர்ந்து அருகிலிருந்தவர்களைக் கூச்சத்துடன் திரும்பிப் பார்த்தார். அவர் எதிரில் சேலையால் முக்காடிட்டு அமர்ந்திருந்த பெண்மணி துணி மூட்டையை அவிழ்த்துக்கொண்டிருந்தாள். அவளின் கைகளில் அணிந்திருந்த வளையல்கள் முடிச்சுகளை அவிழ்க்கத் துரிதப்படுத்திச் சிணுங்கிக்கொண்டிருந்தன. அவள் மேல் கண்மூடி சாய்ந்திருந்த சிறுமியின் புழுதியடைந்த தலை மயிர்கள் அதன் நெகிழ்வை இழந்து பழுப்பு நிற விழுதென நின்றன. அப்பெண்மணி அவிழ்த்த மூட்டையில் பெரிதும் சிறிதுமான சப்பாத்திகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அவள் அதிலிருந்து இரண்டை எடுத்து அகிலாண்டத்திடம் நீட்டினாள். அவர் எப்போதோ இழந்திருந்த அந்தத் தயக்கத்தையும் மீறி ஒரு கணம் தடுமாறி, பின் அவளிடமிருந்து வாங்கி சாப்பிட முற்பட, “ரூகோ” என யாரோ அதட்டுவது போலக் கேட்டு தன் அருகில் அமர்ந்திருந்தவரைத் திரும்பிப் பார்த்தார். பழுப்பேறிய உடையும், தலைப்பாகையும், புகை படிந்து நிறம் மாறியிருந்த முறுக்கேறிய மீசையும், தாடியும், அதன் சிறு பிளவில் கருமையான கீழ் உதடு தொங்க ஒருவர் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தார். பேசி முடித்த பிறகும் ஏதோ சொல்ல வருவதுபோல கைகளை அப்பெண்மணி நோக்கிப் பார்க்குமாறு நீட்டினார். அவள் தூக்குவாளி ஒன்றை அகிலாண்டம் கையில் ஏந்தியிருந்த சப்பாத்தியின் மீது கவிழ்த்தாள். ஏதேதோ காய்களுடன் விழுந்த அது சற்று புளிப்பு வாடையுடன் இருந்தது. அப்பெண்மணி அச்சிறுமியைத் தூக்கி அமரவைத்து சப்பாத்தியைக் கிழித்து அவள் வாயில் வைக்க, முகம் சுளித்து அதனைத் தட்டிவிட்டு வாயை இரு கைகளால் மூடிக்கொண்டாள். அதனைப் பார்த்த அந்த மீசைக்காரர் கரை படிந்த பற்கள் தெரியப் பலமாகச் சிரித்தார். அவர் சிரிப்பதைக் கண்டு அகிலாண்டமும் சிரித்தார். அச்சிறுமி வெட்கம் கொண்டு உடல் நெளித்து அவள் அம்மாவின் தலை முக்காட்டை இழுத்து முகத்தை மூடிக்கொண்டாள். சட்டென முக்காடு விலகியதை உணர்ந்து அச்சிறுமியிடமிருந்து சேலையைப் பிடுங்கி மீண்டும் தலையில் போட்டுக்கொண்டாள். அகிலாண்டம் தன் மடியில் வைத்திருந்த கொய்யாப்பழத்தை அந்தச் சிறுமியிடம் நீட்டி “சாப்பிடு” என்றார். அச்சிறுமி தயங்கி அவள் அம்மாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். “லே லோ” எனக் குரல் வந்த திசை நோக்கித் திரும்பிப் பார்க்காமலே அகிலாண்டத்திடம் கைநீட்டி வெட்கத்துடன் வாங்கிக் கொண்டாள். அகிலாண்டம் அச்சிறுமியையே பார்த்துக்கொண்டிருந்தார். அச்சிறுமியின் முகத்திலிருந்த எதுவும் தனஞ்சயனைப் போல இல்லாவிட்டாலும், அவருக்கு ஏதோ ஒன்று சட்டென அவனை நினைவுபடுத்தியது.
பிறந்த குழந்தையை அங்கம்மா அகிலாண்டத்தின் கையில் கொடுத்து, “ஒங்கப்பனே பொறந்துட்டான் போ ” என்று வெற்றிலை கரை படிந்த பல்லைக் காட்டி தலையாட்டிக்கொண்டே அவள் சொன்னவுடன், அகிலாண்டம் அக்குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தான். துருப்பிடித்த தகரத்தில் நகங்களைக் கொண்டு கீறுவதுபோல அவனின் உடல் முழுவதும் கூச்சம் ஓடியது. கைகள் நடுக்கம் கொண்டன.
அங்கம்மா முகத்தில் சந்தோசம் பொங்க, “பாத்துக்க, உனக்குக் கடைசி காலத்துல இவன்தான் கஞ்சி ஊத்துவான்” என்றாள். இரு கைகளையும் குவித்து, வாயில் வைத்துக் கடித்துக் கொண்டிருந்த அக்குழந்தையின் கண்களிலிருந்த தூய்மையும், சிறிய உதடுகளை நெளித்துச் சிரிப்பதும் அவனுக்குள் எழுந்த ஒன்றை அடக்கி வைத்தது.
கட்டிலில் படுத்திருந்த சந்திரா, “இங்க கொடு பிள்ளைய. கட்டுனவளுக்கே கஞ்சிய ஊத்தக்காணோம்”, என்று வெடுக்கென அவரிடமிருந்து பிடுங்கிக்கொண்டாள்.
“அவ கிடக்கிறா முண்ட. நீ போடா. சம்பாதிச்சு வந்து கொடுத்தாதான் அப்பனா? என்னைக்கு இருந்தாலும் நீதான் அவனுக்கு அப்பன். அதை எவளும் மாத்த முடியாது.”
“அப்பன் யாருன்னு அம்மாக்காரிதான் சொல்லணும்” என்று சொல்லிக்கொண்டே சந்திரா குழந்தையை அணைத்து ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள்.
அங்கம்மா ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி நின்றாள். அவளின் கழுத்து பகுதியின் நரம்புகள் புடைத்துக் கொண்டன, “ப்..வ..போடி மயிறு. நீ என்னடி சொல்றது. ஒரு நாள் தங்கமும் பவுனுமா வந்து போடுவான். அப்ப வந்து கொளந்தைய நொட்டுவ அவன்கிட்ட”, என்று அங்கம்மா அவளின் தொங்கிய கையின் சதைகள் ஆட, கையை தட்டி, உருட்டி ஒரு நடனம் போல ஏதோ செய்து காட்டினாள்.
“நொட்டுவோம். தெரு தெருவா போய் வாங்கி விக்கிற தகரத்துல தான் வாங்கி போடுவான். எதுக்கும் இவனை நம்பி நான் இல்ல.”
அங்கம்மா, “பாப்படி செருக்கி. நீ பாக்கத்தான் போற.” என்று சொல்லிவிட்டு வெளியேறிய அங்கம்மாவின் பார்வை அகிலாண்டத்தின் கண்களைச் சந்திக்கத் தேடித் தோற்றது.
ஓரிருமுறை அங்கம்மா தனஞ்செயனை அழைத்து வந்து அகிலாண்டத்திடம் ஓட்ட முயன்றாள். ஏதேதோ தின்பண்டம் வாங்கி வந்து அகிலாண்டத்திடம் கொடுத்து அவனிடம் கொடுக்கச் சொன்னாள். ஆரம்பத்தில் வெட்கப்பட்டு அவனிடம் வாங்கிக் கொண்டு எங்காவது மறைவான இடத்தில் வைத்துத் தின்றுகொண்டிருந்தவன், பின்னாளில் அங்கம்மா கூப்பிட்டாலும் வர மறுத்தான். தாயம் போட்டு அவள் தொடங்கி வைத்த இந்த விளையாட்டு அவளாலே புரிந்துகொள்ள முடியாத இடத்தில் வந்து நின்றபோது, இவர்களை இனி தன்னால் கரை சேர்க்க முடியாதென்றெண்ணி அங்கம்மா பகடைகளைத் தூரப்போட்டாள். தனஞ்செயனின் உடல் வளர்ச்சிக்கு இணையாக அவன் கண்களில் அகிலாண்டத்தின் மீதான வெறுப்பும் அதிகமாகிக்கொண்டே இருந்தது. அகிலாண்டத்தின் மீது சந்திரா தினமும் ஏதோ ஒரு பழியைப் போட்டு அழுவதும், திட்டுவதும் நீடிக்க, கரிபடிந்த வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு திண்ணையில் படுத்துறங்க ஆரம்பித்தான்.
அகிலாண்டம் முழித்துப் பார்த்தபோது யாரோ ஒருவர் அவசரமாக ரயில் பெட்டியிலிருந்து கீழே இறங்கி இருளுக்குள் சென்று மறைந்தார். தான் கட்டியிருந்த வேட்டியின் நுனியில் அவர் பதித்துச் சென்ற செருப்பின் அடையாளத்தைத் தட்டிக் கொண்டே எழுந்து வெளியே எட்டிப் பார்த்தார். எதற்கோ பயந்து பதுங்கி நிற்பது போல இருளுக்குள் ஆழ்ந்த மௌனத்துடன் ரயில் நின்றுகொண்டிருந்தது. தன்னுடனேயே விளையாட்டாய் இழுத்து வந்த துணி கிழிசல்கள் எனச் சன்னல்களின் ஒளி பிம்பங்கள் புதர்களில் சிக்கியிருந்தன. குளுமையான காற்று அவர் முகத்தில் வந்து படிந்து செல்ல, நடைபாதையற்று இருந்த அவ்விடத்தில் படிகளின் வழியே கீழே இறங்கி நின்றுகொண்டார். சில்வண்டுகளின் ஓயாத ஒலி இரவின் இருப்பை மேலும் கனமாக்கியது. வெயிலில் காய்ந்திருந்த நிலமும் செடிகளின் மணமும் காற்றில் கலந்திருந்தது. தன்னை தாண்டிக்கொண்டு கீழே இறங்கியவர் சட்டென எங்கு மறைந்தார் என்று இரு பக்கமும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். தூரத்தில் ஒரு மஞ்சள் நிற ஒளி புள்ளி தரையில் ஊர்ந்து அவரை நோக்கி வந்துகொண்டிருக்க, அதனையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவரின் கையை சட்டென ஓர் உருவம் இழுத்துச் சென்று புதர்களுக்குள் பின் மறைவாய் அழுத்தி உட்கார வைத்தது. அகிலாண்டம் தடுமாறிச் சுதாரித்துத் திரும்பிப் பார்த்தபோது, அவரின் முகத்துக்கருகில் இரு விழிகள் மட்டும் அசைந்து ஏதோ சொல்லியது. கண்கள் இருளுக்குள் பழகியபோது அந்த முகத்தில் அடர்ந்திருந்த தாடியும் மீசையும் புதர்களிலிருந்து பிரித்தறிய முடியாதபடி இருந்தது. அந்த மஞ்சள் ஒளி புள்ளி சற்று பெரியதாகி பெட்டியின் மேல், கீழ், புதர்களில் எனப் படிந்து எதையோ தேடிய பின், வந்த வழியே சென்றது. சிறிது நேரம் கழித்து அவர் வந்த ரயில் முணுமுணுத்துக்கொண்டே நகர, அகிலாண்டம் அதையே பார்த்துக்கொண்டிருந்தார். ரயிலின் இறுதி பெட்டியும் மறைந்த பிறகு, பலர் அப்புதர்களின் மறைவிலிருந்து எழுந்து வெளியே வந்தனர். அகிலாண்டமும் எழுந்து தண்டவாளங்களுக்கிடையே நின்று கடந்து சென்ற ரயிலைப் பார்த்துக்கொண்டிருந்தார். அந்த இருளில், ரயிலில் பயணித்தவர்களின் நிழல்கள் மட்டும் கீழே இறக்கிவிடப்பட்டது போலப் பல உருவங்கள் தண்டவாளத்தைக் கடந்து எதிர்புறத்திலிருந்த புதர்களுக்குள் புகுந்து மரங்களுக்கிடையே சென்று மறைந்தனர். தன் கையை பிடித்து இழுத்துச் சென்ற அந்த உருவம் தலைப்பாகையை அணிந்துகொண்டே அவர் அருகில் வந்து நின்றது. அகிலாண்டத்துக்கு அப்போதுதான் அது தன்னுடன் பயணித்த குடும்பத்திலிருந்த அந்த மீசைக்காரர் என்பதைக் கண்டுகொண்டார். அவருக்குப் பின்னால் கைப்பையும் மூட்டையுமாக அந்தப் பெண்மணியும், சிறுமியும் நின்றுகொண்டிருந்தார்கள். அந்த மீசைக்காரர் அருகில் வந்து ஏதோ சொல்லிவிட்டுச் செல்ல, அகிலாண்டத்துக்கு எதுவும் புரியாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தார். அந்தப் பெண்மணியும் சிறுமியும் மீசைக்காரரைத் தொடர்ந்து புதர் வழியே சென்றார்கள். அகிலாண்டம் சட்டெனத் தனிமையில் விடப்பட்டு இருளில் நின்றுகொண்டிருக்க, மீண்டும் அதே கை வந்து அவரையும் புதர்களின் வழியே அழைத்துச் சென்றது.
துருவேறிய இரும்புக் குழாய்கள், கம்பிகள், தகரங்கள் என யாரும் கேட்பாரற்று மலைகளாகக் குவிந்து கிடந்த இடத்தின் அருகேயிருந்த மர நிழலில் அகிலாண்டம் படுத்திருந்தான். காகம் ஒன்று குவியலிலிருந்து நீண்டிருந்த இரும்புக் குழாயின் மீது அமர்ந்து மூக்கினால் இருமுறை கொத்திவிட்டு எழுந்து பறந்து போனது. சற்று தொலைவில் ஒரு சிறிய வாகனத்திலிருந்தவற்றைக் கீழே கொட்டி சிலர் பிரித்தெடுத்துக் கொண்டிருக்க, இரும்புகள் ஒன்றோடு ஒன்று உரசும் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது. வெயில் மெல்ல நகர்ந்து அகிலாண்டம் முதுகில் பட, எழுந்து அமர்ந்துகொண்டான். காற்றில் இரும்பின் மக்கிய வாடை சற்று அதிகமாகியிருப்பதுபோல இருந்தது. சக்கரபாணியின் வாகனத்தைக் காணாமல் அவனுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. இன்னும் சிறிது நேரம் காத்திருந்து அவரை பார்த்து விட்டுச் செல்லலாமா என்று யோசித்தான். முகத்தில் படும் வெயில் இப்போதே அவனுக்கு எரிந்தது. இன்னும் சிறிது நேரத்தில் உச்சிக்குச் சென்றுவிடும், பின் அங்கு அமர்ந்திருக்க முடியாது. துருப்பிடித்தது போல உடம்பு சிவந்துவிடும் என நினைத்துக்கொண்டே எழுந்தவன், கீழே கிடந்த உடைந்த மிதிவண்டியின் சக்கரத்தை எடுத்து அருகேயிருந்த குவியலில் போட்டுவிட்டு நடக்கலானான். இந்தக் குவியலில் இருக்கும் துருப்பிடித்த பொருட்களில் தான் கொண்டு வந்து சேர்த்ததே அதிகம் இருக்கும் என்று நினைத்துக்கொண்டான். ஒவ்வொரு வீட்டிலும் சிறிதும் பெரிதுமாகத் துருப்பிடித்த ஏதோ ஒன்று இருக்கிறது. ஒரு காரணத்திற்காகச் செய்யப்பட்டு உலகத்திற்கு வரும் அது, ஒளி இழந்து வேறொன்றாக மாறிவிடுகிறது. புதியதாக இருக்கும்போது அதற்குத் தான் எத்தனை மதிப்பு. மிகக் கவனமாக எடுப்பதும், கையாள்வதும் என அதன் மீது எத்தனை அக்கறை. ஏதோ ஒரு கட்டத்தில் உதாசீனப்படுத்தப்பட்டு வீட்டிற்குள் ஒரு மூலையில் நிறுத்திவிட, மெல்ல அதற்குள் வேறு ஒன்று குடிகொண்டு அரித்துவிடுகிறது. ஒரு சிலவற்றைத் துரு நீக்கிச் சரி செய்துவிடலாம். சிலவற்றை தீயிலிட்டே வேறொன்றாக்க முடியும். அது ஒரு சுழற்சி போல. அழிவே இல்லாமல் ஒன்று மற்றொன்றாக மாறிக்கொண்டேயிருக்கிறது என்று நினைத்துக்கொண்டான்.
சக்கரபாணியை அவரது வீட்டில் சென்று பார்த்துவிட்டு வீட்டுக்கு வருவதற்கு அந்தியாகியிருந்தது. உடல் முழுவதுமிருந்த அசதியும் பசியும் அவனை வீட்டுக்கு வேகமாகச் செலுத்தியது. வீட்டை ஒட்டியிருந்த சந்தின் வழியே கிணற்றடிக்குச் சென்றான். தூரத்திலிருந்த தென்னை மரங்கள் இருளுக்குள் மூழ்கிக்கொண்டிருந்தன. வீட்டினுள் இருந்த ரேடியோவில் ஒலிக்கும் பாடல் கொல்லைப்புறத்தில் கேட்க, தனஞ்செயன் வேலை முடித்துவிட்டு வீட்டினுள் தான் இருக்கிறான் என நினைத்துக்கொண்டான். வீட்டுக்குள் சென்று அடுப்படியில் தட்டு நிறையச் சாதமும், குழம்பும் இட்டுச் சாப்பிட அமர்ந்தான்.
எங்கிருந்தோ அங்கு வந்த சந்திரா, “எழுந்திரு. எழுந்திரி”, என்று கத்தினாள். “சோத்துல கை வைக்காத. நீ எங்கயாவது பொறுக்கிட்டு வருவ. நானும் என் பையனும் வேலை செஞ்சி உனக்குச் சோறு போடணும்னு தலை எழுத்தா?”, என்று சொல்லிக்கொண்டே தட்டை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
தனஞ்செயன், “செஞ்சது ஒரு வேலை அதுவும் இப்ப இல்லாம போச்சு. சக்கரபாணி அவர் குடோனை பாய்க்கிட்டே வித்துட்டாரா? நீ சொல்லாம இருந்தா தெரியாதா எங்களுக்கு?”, என்றான்.
அகிலாண்டத்துக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் அப்படியே தரையைப் பார்த்து அமர்ந்திருந்தான்.
“ஆமா. இவரு அப்படியே பெரிய கலெக்டர் வேலை பார்த்தாரு.”
“என்ன வேலை செய்வியோ தெரியாது. டெய்லி எரநூறு ரூபா எடுத்து வந்தாதான் சோறு வீட்டுல. எழுந்திரி.”, என்றான்.
அகிலாண்டம் நிமிர்ந்து தனஞ்சயனைப் பார்த்தார். ஜன்னலுக்குக் கீழே இருந்த நாற்காலியில் தோரணையாக அமர்ந்திருந்தான். இதற்கு முன் அவனை எப்போது இப்படித் தெளிவாகப் பார்த்தோம் என்று அவருக்குச் சரியாக நினைவிலில்லை. சுருள் சுருளான அடர்ந்த கேசத்துடன், மூக்கு சற்று கூர்மையாக, சிறிய கண்களுடன், சதுர முக அமைப்பில் தாடை கூர்மையாகக் கீழிறங்கியிருக்க, நல்ல உடற்கட்டுடன், வார்த்தெடுத்த புதிய இரும்புத் தூண் போல இருப்பதாக அகிலாண்டம் நினைத்துக்கொண்டான்.
ரயிலிலிருந்து இறங்கியவர்கள் அனைவரும் ஒரே திசையிலேயே நடந்து பெரிய திடல் போன்றிருந்த இடத்தில் கூரை வேய்ந்த வெவ்வேறு குடிசைக்குள் சென்று மறைந்தனர். அப்பெண்மணியும், சிறுமியும் ஒரு குடிசைக்குள் சென்றுவிட, அகிலாண்டம் வெளியே இருந்த ஒரு கட்டிலில் அமர்ந்துகொண்டார். அருகிலேயே மற்றொரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த அந்த மீசைக்காரர் கையில் சுருட்டுடன் அமர்ந்திருந்தார். புகை சூழ்ந்திருந்த அந்த நிலவொளியில் அவர் ஒரு காட்டுத் தெய்வம் பூசையின் நடுவில் இருப்பது போல இருந்தார். அவ்வப்போது வீசும் காற்றில் காய்ந்த மண்ணின் மணம் கலந்திருந்தது. அகிலாண்டத்திற்கு ஏனோ அந்த இடம் பிடித்திருந்தது. மீசைக்காரரை அவ்வப்போது திரும்பிப் பார்த்துப் புன்னகைத்து அவரிடம் ஏதேதோ கேட்க வேண்டும் போலத் தவிப்பாக இருந்தார். எழுந்து அங்கேயே நடந்து அவ்வெளியைச் சுற்றிப் பார்த்தார். நிலவில் ஒளிரும் தார்ச் சாலையெனத் தூரத்திலிருந்த தொழுவத்தில் மினுக்கும் கரிய உடலுடன் எருமைகள் வரிசையாக அமர்ந்திருந்தன. எருமைகளின் எண்ணிக்கையை அகிலாண்டம் அவ்விருட்டில் மனதுக்குள் கணிக்க முயன்றார். ஓரிடத்தில் திரள்வதும் சட்டெனக் கலைவதுமாய் இருள் அவரை குழப்பியதில் எண்ணிக்கை ஒன்றுபோல இல்லை. வெகு தூரத்தில் மலைகள் போல ஏதோ இருளில் தெரிந்தது. மரங்களாகக் கூட இருக்கலாம். ஆடுகள், கோழிகள் என வேறு ஏதேனும் பிராணிகள் கூட இருக்கலாம் என நினைத்துக்கொண்டார். குடிசைக்குள் மண் சுவர்கள் சிவந்து அனலில் நகர்வது போல இருந்தது. சிறிது நேரத்தில் அப்பெண்மணி அடுப்பில் சுட்ட கிழங்கும், எருமைப் பாலில் செய்த மோரும் வந்து கொடுத்தாள். அந்த இரவும், கிழங்கின் வாசனையும் அகிலாண்டத்துக்கு ஏனோ அழவேண்டும் போல இருந்தது. கையில் வாங்கி வெகு நேரம் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார். பின் மீசைக்காரர் அவரை பார்த்து ஏதோ சொல்லச் சாப்பிட ஆரம்பித்தார்.
வானத்தில் நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்தது. அகிலாண்டத்துக்கு ஒவ்வொரு முறையும் அவற்றைப் பார்க்கும்போதும் அவைகள் கூட்டமாகத் தன்னை போலவே எங்கோ பயணித்துக்கொண்டே இருக்கின்றன என்று நினைத்துக்கொள்வார். அந்த மீசைக்காரர் இன்னும் கட்டிலில் அமர்ந்து இருட்டையே பார்த்துக்கொண்டிருந்தார்.
அகிலாண்டம், “இன்னும் தூக்கம் வரலையா?”, என்று கேட்டுவிட்டு அவர் பதிலுக்குக் காத்திராமல், அவரே தொடர்ந்து “எனக்கும் தூக்கம் வரலை. முன்னாடியெல்லாம் படுத்தவொடனே தூங்கிடுவேன். இப்ப அப்படியில்ல. தூக்கம் சட்டுனு வரமாட்டேங்குது.” என்று நிறுத்தினர். “ஏன்னு கேட்டிங்கனா என்ன சொல்றது. சரியா தெரியல. இப்படித்தான் திருப்பனந்தாள் சம்முவம் வீட்டு மொட்டை மாடியில படுத்திருந்தேன். இந்தோ தெரியுதே அந்த பெரிய நட்சத்திரம் அது அங்க இருந்துச்சி அன்னிக்கு. தூக்கமே வரல. நானும் என்னமோ சொல்லி நினைச்சி பார்த்தேன். ஒன்னும் வரல. இறங்கி மூத்திரம் இருந்துட்டு வந்து கூட படுத்து பார்த்தேன். அப்பவும் தூக்கம் வரல. அப்புறம் எழுந்திரிச்சி விடிய வரைக்கும் உக்காந்தே இருந்தேன். சம்முவம் நல்லவரு. காலையில எழுந்து வந்து அம்பது ரூவா பணம் கொடுத்து வீட்டுக்குப் போக சொன்னாரு. வீட்டுக்கு எங்க போகறது? அப்படியே கடலூருக்கு போய்ட்டேன். அங்க தான் அந்தோ கிழக்கு பக்கம் ரெண்டு நட்சத்திரம் பக்கத்து பக்கத்துல இருக்கு பாருங்க அது எங்கிருந்தோ வந்திருந்தது. அப்புறம் எங்க போனாலும் ஜோடியா தான் வருதுங்க”, என்று சொல்லிச் சிரித்துக்கொண்டார். “இத வேறு ஓர் ஊர்ல பார்த்தேன். அந்த ஊர் பேரு தெரியல. அது வந்து காசியிலே. இங்க புதுசா எதுவும் இன்னும் வரல. எல்லாம் இதுக்கு முன்ன பார்த்தது மாதிரியே இருக்கு. நாளைக்குப் பார்ப்போம் எதாவது வந்துருக்கும்”, என்று சொல்லிக்கொண்டே திரும்பி மீசைக்காரரைப் பார்த்தார். அவர் தலைமாட்டில் கைவைத்து உறங்கியிருந்தார். அகிலாண்டமும் கட்டிலில் படுத்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டார். தொழுவத்திலிருந்த எருமைகளின் கழுத்து மணியோசை விடியும் வரை ஒலித்துக்கொண்டேயிருந்தது.
அகிலாண்டம் எனக் குரல் வந்த திசை நோக்கித் திரும்பிப்பார்த்தார். குறிப்பாக யாரென்று தெரியாவிட்டாலும் அது காவல் நிலையத்தினுள்ளிருந்து தான் என்பதைப் புரிந்துகொண்டு உள்ளே சென்றான். வெளியிலிருந்து பார்க்கும்போது உள்ளே அடங்கியிருந்த இருட்டு நுழைந்தவுடன் விலகியதுபோல வெளிச்சமாக இருந்தது. பெருத்த தொந்தியும், மீசையும், வழுக்கைத் தலையுடன் ராமமூர்த்தி மேசையின் பின் பக்கமிருந்த நாற்காலியிலிருந்து எழுந்து அகிலாண்டத்தை நோக்கி வந்தார்.
“அகிலாண்டம், வெளியில எங்கயாவது அவசரமா போயிட்டுருக்கியா?”
“இல்ல ராமா.”
“நம்ம சந்தானம் கடையிலிருந்து ஒரு பிரியாணி வாங்கி கொடுத்துட்டு போ. ஸ்டேஷன்ல யாரும் இல்ல. அக்யுஸ்ட்டு வேற இருக்கான்.”
அவர் கைகாட்டிய திசையில் மேல் சட்டை இல்லாமல் கைலியுடன் ஒருவன் தரையில் அமர்ந்திருந்தான். அவன் ஒரு கையில் மாட்டியிருந்த விலங்கு அருகிலிருந்த தூணுடன் பிணைக்கப்பட்டிருந்தது.
அகிலாண்டம் அவனையே பார்த்துக்கொண்டு, “சரிப்பா. வாங்கிட்டு வரேன்.” என்றார்.
“நீ சாப்பிட்டியா?”
அவன் ஒன்றும் சொல்லாமல் நின்றான்.
“இப்படியே எவ்வளவு நாள் வீட்டுக்கு போகாம வெளியில சுத்திகிட்டு இருப்ப. மனுஷனுக்கு வீடுன்னு ஒன்னு வேணும்டா. பொருப்பில்ல, உதவாக்கரைன்னு சொல்றானுங்க. நான் வேணும்னா வந்து பேசட்டுமா?”
“இல்ல இல்ல வேணாம். எல்லாம் சரியாகிடும்.”
“என்னத்த சரியாகிடும்..போ…”, எனச் சொல்லிக்கொண்டே மீண்டும் அவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு, “திருப்புறம்பியம் செல்வத்தை போன மாசம் அவன் வீட்டுல பாத்தியாம். கடைத்தெருவுல பாத்தப்ப சொன்னான். பள்ளிக்கூடத்துல நம்ம கூட படிச்ச எல்லாரையும் பாத்துட்ட போல”, என்று சிரித்துக்கொண்டார். பின் சற்று நேரம் எதையோ யோசித்தவராய், “அப்படி இருக்கிறது கூட நல்லாத்தான் இருக்கு டா. எதுக்கும் கவலைப்படாம, யோசிக்காம அப்படியே போய்கிட்டே இருக்கிறது. எனக்கும் அப்படியெல்லாம் எல்லாரையும் ஒருநாள் பார்க்கணும்னு ஆசை இருக்குடா”, என்று சொல்லிப் பெரு மூச்சு விட்டுக்கொண்டே கீழே அமர்ந்திருந்த அந்தக் கைதியைப் பார்த்தார். அவன் அவரை பார்த்துப் புன்னகைத்தான். அவனின் சிரிப்பையே பார்த்துக்கொண்டிருந்தவர், சட்டெனப் பதறி எழுந்து அவனருகில் சென்று பார்த்தார். அவன் கையில் இன்னும் விலங்கு மாட்டியிருந்தது. அவன் இன்னும் அதே புன்னகையில் மலர்ந்திருக்க, ஓங்கி ஓர் அரை அவன் கன்னத்தில் விட்டார். அகிலாண்டம் பயந்து எழுந்து ராமமூர்த்தியை பார்க்க, அவர் அவனின் கண்களைத் தவிர்த்துச் சட்டெனத் திரும்பிக் கொண்டார்.
வியர்த்திருந்த நெற்றியைத் துடைத்துக்கொண்டே, “இந்தா. நீ அங்கேயே கடையில சாப்பிடு. அப்புறம் ரெண்டு பிரியாணியா வாங்கிட்டு வா”, என்று பணத்தைக் கொடுத்தார்.
அகிலாண்டம் அச்சிறுமி கைகாட்டிய இடத்தில் பார்த்தார். பெரிதும் சிறிதுமான பறவைகளின் கூடுகள் மரங்களின் கிளைகளில் நிறைந்து இருந்தன. அவள் கையில் வைத்திருந்த தொரட்டியை வைத்து ஒரு கிளையைக் கீழ் நோக்கி இழுக்க, அகிலாண்டம் அக்கிளையின் நுனியிலிருந்த ஒரு கூட்டினை எட்டிப் பார்த்தார். மெல்லிய சுள்ளிகளைக் கொண்டு சிக்கலான வலைப்பின்னலில், கரை சேர்க்கும் தோணியைப் போல இருந்த அக்கூட்டில் உடைந்த முட்டை ஓடுகள் மட்டுமே இருந்தன. அவர் அச்சிறுமியைப் பார்த்து அக்கூட்டில் ஒன்றுமில்லை என்பது போலத் தலையை ஆட்டினார். அவள் அந்தக் கிளையிலிருந்து தொரட்டியை சட்டென விடுவிக்க, அக்கிளை மேலே சென்ற வேகத்தில் கூடு கிளையிலிருந்து கீழே விழுந்தது. அகிலாண்டம் அதிர்ச்சியாகி ஓடிச்சென்று அக்கூட்டினைக் கையிலெடுத்து அச்சிறுமியைப் பார்த்தார். அவரின் அதிர்ச்சியைப் புரிந்துகொண்டவளாக ஏதோ சொல்லி தேவையில்லை என்பது போலச் சைகை செய்தாள். அகிலாண்டம் அக்கூட்டினை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துவிட்டு கீழே போட்டார். அவள் மற்றொரு கிளையை இழுக்க, அதில் கூம்பு போன்ற வடிவத்திலிருந்த கூட்டினை கையில் எடுத்து உள்ளே பார்த்தார். அந்தக் கூடும் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இருந்தது. அதில் உடைந்த ஓடுகளுடன் ஒரு சிறிய பறவையின் இறகும் இருக்க, அதனைக் கையில் எடுத்துப் பார்த்தார். நுனியில் கருநீல நிறத்தில் தொடங்கி, அதன் அடர்த்தி பல்வேறு நீல நிறமாக படிப்படியாகக் குறைந்து வெள்ளை நிறத்தில் முடிந்திருந்தது. அதையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர், அச்சிறுமி கூப்பிடுவதைக் கேட்டு அந்த இறகைத் தன் சட்டைப் பையில் வைத்துக்கொண்டார். பின் அங்கிருந்த பல கிளைகளையும் இருவரும் வளைத்து கூடுகளைப் பார்த்தனர். ஒவ்வொன்றும் அளவிலும், வடிவத்திலும், அதன் சிக்கலிலும் வெவ்வேறாக இருந்தபோதிலும் அனைத்திலும் முட்டைகள் உடைந்து இருந்தது அகிலாண்டத்துக்கு மகிழ்ச்சியளித்தது. அக்கூடுகளையே பார்த்துக்கொண்டிருந்தவருக்கு உள்ளுக்குள் மெல்ல ஒரு வருத்தம் எழுந்தது. சிறிது நேரம் கழித்துத் திரும்பிப் பார்த்தார். அச்சிறுமி பறவை முட்டை கிடைக்காத ஏமாற்றத்தில், கோபமாக தொரட்டியை எடுத்துக்கொண்டு வேகமாகச் செல்வதைக் கண்டார். அவள் பின்னாலேயே செல்ல முற்பட்டவர், ஆடுகளுக்குப் பறித்த தழைகள் கீழே கிடப்பதைக் கண்டு, அதனைப் பந்தாகச் சுருட்டி தலையில் வைத்துக் கொண்டு அவள் பின்னால் ஓடினார். அவர் தன் பின்னால் வருவதைக் கண்ட அச்சிறுமி இன்னும் வேகமாக நடக்க, அகிலாண்டமும் அவளுக்கு இணையாக வேகமாக நடந்தார். இருவரும் போட்டிப் போட்டு வேகமாக நடந்தும், சிரித்துக்கொண்டும் நடக்க அகிலாண்டத்தின் தலையிலிருந்தவை கீழே உதிர்ந்துகொண்டே வந்தன.
தூரத்திலிருந்த மேட்டின் விளிம்பில் அச்சிறுமி அவளை மீறி வளர்ந்திருந்த நீண்ட தொரட்டியால் நீல வானத்தை இரண்டாகக் கிழித்துக்கொண்டும், அவள் பின்னால் வந்துகொண்டிருந்த அகிலாண்டம் கீழிருந்து எதையோ பொறுக்கி தலையில் வைத்துக்கொண்டும் வருவதை, மீசைக்காரரும் அவர் அருகில் அமர்ந்திருந்த வேறு ஒருவரும் வாயில் புகை வழியப் பார்த்துக்கொண்டேயிருந்தனர். அவர்கள் இருவரும் வீட்டின் அருகே வந்தவுடன், அச்சிறுமி தொரட்டியை தூர எறிந்துவிட்டு அந்த மீசைக்காரரிடம் ஓடிச்சென்று அகிலாண்டத்தை பார்த்து கை நீட்டி ஏதோ சொன்னாள். அவர் சிரித்துக்கொண்டே அவளின் முதுகைத் தட்டிக் கொடுத்தார். அகிலாண்டம் தழைகளை ஆட்டுக்குட்டிகள் நிறைந்திருந்த கொட்டகையில் பிரித்துப் போட்டார். ஆடுகள் கூட்டமாக ஓடிவந்து ஒன்றோடு முட்டி சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தார். பின், அங்கிருந்த தொழுவத்தில் எருமைகளுக்குக் கரைத்து வைத்திருந்த தீனியை எடுத்து வந்து போட்டுவிட்டு, மீசைக்காரர் அமர்ந்திருந்த கட்டிலுக்கு எதிரே இருந்த கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டார். மீசைக்காரரின் அருகே தலைப்பாகையுடன் இருந்தவர் அகிலாண்டத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அகிலாண்டம் அவரை பார்த்துச் சிரிக்க அவரும் சுதாரித்துச் சிரித்துக்கொண்டே
“மதராஸ்? மதராஸ்?”, எனக் கேட்டார்.
அகிலாண்டம் யோசித்து, இல்லை என்பதுபோல தலையாட்டி “திருவிடைமருதூர்.. கோயில்..” கையை இரண்டையும் கோபுரம் போலச் செய்து “பெரிய கோயில்.. திருவிடைமருதூர்” எனச் சொல்லிப் பார்த்தார். கேட்டவர் ஏதோ தெரிந்தது போலத் தலையாட்டிவிட்டு மீசைக்காரரிடம் ஏதோ சொல்ல இருவரும் சிரித்துக்கொண்டார்கள்.
சிறிது நேரம் அவர்கள் இருவரும் ஏதோ பேசிக்கொண்டனர். தன்னை பற்றித் தான் ஏதோ பேசிக்கொள்கிறார்கள் என்று நினைத்து அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தார் அகிலாண்டம். குடிசையிலிருந்து முக்காடிட்ட அப்பெண்மணி வெளியே வந்து அகிலாண்டத்திடம் ஒரு சிறு துணி மூட்டையை அவர் கையில் கொடுக்க, அவருக்கு ஏதும் புரியாமல் அவளிடமிருந்து வாங்கி என்ன செய்வதென்று அவர்களைப் பார்த்தார். அம்மூட்டைச் சற்று வெம்மையாக இருக்க, அதனை முகர்ந்து பார்த்தார். சப்பாத்தியின் வாசனை அடித்தது. அவர்கள் இருவரும் எழுந்து அகிலாண்டத்தை தங்களுடன் வருமாறு அழைத்துச் சென்றார்கள். அகிலாண்டம் எழுந்து அப்பெண்மணியை நோக்கித் திரும்பி, தயங்கி நின்று விட்டு அவர்களுடன் சென்றார். அவர்கள் குறுக்கு வழிப் பாதையைப் போல இருந்த புதர்கள் மண்டிய வழியே சென்றுகொண்டே இருந்தனர். அகிலாண்டம் திரும்பி தூரத்திலிருந்த அவ்வீட்டைப் பார்த்தார். அச்சிறுமி குடிசையின் தூணில் சாய்ந்துகொண்டு அவர்கள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். சிறிது நேர நடைக்குப்பின் ஆளுயர புதர்கள் படர்ந்திருந்த பகுதிக்கு வந்தார்கள். அகிலாண்டம் சற்று தூரத்தில் குறுக்காகப் பளபளத்துச் செல்லும் தண்ட வளாகங்களைப் பார்த்தார். சில மாதத்திற்கு முன் இரவில் கண்ட அந்த இடம் இப்போது அவருக்கு வேறொன்றாக இருப்பது போலப் பட்டது. மூவரும் புதர்கள் மண்டியிருந்த மறைவில் அமர்ந்துகொண்டனர். மீசைக்காரரும், அவர் நண்பரும் அவர்களின் தலைப்பாகையைக் கழட்டி கீழே வைத்துவிட்டு, ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். சற்று நேரம் வரை சிரித்து மகிழ்ந்திருந்த அகிலாண்டத்தின் முகம் இருளடைந்து மாறியதைக் கண்டு அவர்களும் அமைதியாகி அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். பின், வெகு நேரம் அவர்கள் ஏதும் பேசிக்கொள்ளாமல் ஏதோ யோசனையில் அமர்ந்திருந்தனர். தொலைவில் ரயில் வரும் சத்தம் கேட்டு மீசைக்காரருடன் வந்தவர் எங்கோ சென்றார். வேகமாக வருவது போல இருந்த ரயில் சட்டெனப் பலமான இழுவையுடன் உராய்ந்து நின்றது. அவர்கள் இருவரும் அப்படியே அமர்ந்திருந்தார்கள். சிறிது நேரத்திற்குப் பின் யாரோ ஒருவர் ஒவ்வொரு பெட்டியாகப் பார்த்துவிட்டுத் திரும்பிச் செல்ல, மீசைக்காரர் சட்டென அகிலாண்டத்தை அழைத்துக்கொண்டு அந்த ரயில் பெட்டியின் அருகில் வந்து அதில் ஏறிக்கொள்ளச் சொன்னார். அகிலாண்டம் அதில் தொத்தி எரியப் பின், மீசைக்காரர் அவர் கையில் வைத்திருந்த துணி மூட்டையை அகிலாண்டத்திடம் கொடுத்துவிட்டு “கர் ஜாவ்..கர் ஜாவ்..” என்று சொல்லிக்கொண்டே புதர் மறைவில் நின்றுகொண்டார். ரயில் மெல்ல நகரக் கதவில் சாய்ந்துகொண்டு கீழே அமர்ந்துகொண்டு மீசைக்காரர் மறையும் வரை அவரையே பார்த்துக்கொண்டிருந்தார். எங்குச் சென்றாலும் தன்னை பார்க்கிறவர்கள் பழகுகிறவர்கள் எல்லோரும் தனக்கு ஒரே திசையைக் காட்டி அந்த இலக்கில் தஞ்சம் அடையச் சொல்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டார்.
ரயிலிலிருந்து இறங்கி அகிலாண்டம் வீட்டுக்குச் சென்றபோது பெரிய மாற்றமில்லாமல் இருந்தது. சந்திரா, அகிலாண்டத்தை கண்டவுடன் அவளின் முகமும் உடலும் சிவந்து அடுப்படிக்குள் சென்றுவிட்டாள். எங்கோ கிளம்பிக்கொண்டிருந்த தனஞ்செயன் அவரை கண்டவுடன் சற்று நேரம் செயலற்று நின்றான். பின் எதுவும் சொல்லாமல் அவனும் வெளியே சென்றான். அகிலாண்டம் குளித்து வேறு உடைக்கு மாறி வீட்டின் மூலையில் செய்வதறியாது வெகு நேரம் அமர்ந்திருந்தார். சுற்றியிருந்த நான்கு சுவர்களும் நெருக்கிக் கொண்டே வந்து மூச்சடைப்பது போல இருந்தது. எழுந்து ஒவ்வொரு சுவரிலும் முட்டிக்கொள்ள வேண்டும் போல இருந்தது. எழுந்து வெளியே சென்றார். ஊரில் பார்க்கும் ஒவ்வொருவரும் அகிலாண்டத்தை கண்டபடி திட்டியும் இனி வீட்டிலேயே இருக்குமாறு கண்டித்தும், வாழ்க்கையென்றால் அப்படிதான் இருக்கும் எனவும் சொல்லிச் சென்றார்கள். யாரும் அவருக்கு வேலை கொடுக்க முன்வரவில்லை என்றாலும் சாப்பிடச் சொல்லி பணம் கொடுக்க முன் வந்ததை அவரால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பழைய குடோனை எடுத்து நடத்துபவரைப் பார்த்தபோது, அவர் இரும்பு சாமான்களைப் பிரித்தெடுக்கும் வேலையில் சேர்த்துக்கொண்டார். குடோன் முன்னைவிட இன்னும் பெரியதாக விஸ்தரிக்கப்பட்டிருந்தது. இன்னும் ஏராளமான, பிரமாண்டமான மட்கும் இரும்பு பொருட்கள் துருவேறிக் கனன்று கொண்டிருந்தன. காலையில் வந்து மாலை வரை கைகள் எரிய அங்கேயே வேலை செய்தார். தினந்தோறும் அவர் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே தனஞ்செயனிடம் கொடுத்துவிடுவார். அவன் அவரிடமிருந்து வாங்குவதற்குத் தயங்கியதையும், அவனின் பரிதாபம் கொண்ட பார்வையையும் அகிலாண்டம் கண்டுகொண்டு அதனைத் தவிர்த்து விலகினார். காலம் சந்திராவிடம் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. செயலற்ற, பொறுப்பற்ற கணவன் அமைந்த மனைவி என்ற பேச்சுக்குள், அவள் வாழ்ந்த ரகசிய வாழ்வொன்றை நியாயப்படுத்த நினைத்ததை அவர் திரும்பி வந்தது கெடுத்துவிட்டதால் அவளின் பிடிவாதமும் அகங்காரமும் அதிகரித்தே போனது. அது கண்ணுக்குத் தெரியாமல் அவளை அரித்துக்கொண்டிருப்பதை அவள் அறியவேயில்லை. தன் இருப்பை அவளுக்கு முன் வைத்திருப்பதைத் தவிர்த்து பெரும்பாலும் குடோனிலேயே இருந்தார்.
ஓர் இடைவெளியின் போது தன் சட்டைப்பையில் ஏதோ இருப்பதை உணர்ந்து அதனைக் கையிலெடுத்துப் பார்த்தார். அந்தப் பெயர் தெரியா பறவையின் கருநீல இறகு, அதன் மெல்லிய இழைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி, அதன் மென்மை இழந்திருந்தது. அகிலாண்டத்திற்கு அச்சிறுமியுடன் பறவை முட்டை தேடிய நாள் நினைவுக்கு வந்தது. அந்த இறகையே பார்த்துக்கொண்டிருந்தார். இனி ஒருபோதும் அந்தச் சிக்கலான கூட்டிற்குத் திரும்பாத பறவையின் இறகு. கடிதம் போல அக்கூட்டில் இந்த இறகை விட்டுச் சென்றிருக்கிறது. எத்தனை கடிதங்கள் நாள் தோறும் அவைகள் விட்டுச் செல்கின்றன. திறக்கப்படாமல், படிக்கப்படாமல் விட்ட கடிதங்கள் அவைகள். படித்தாலும் பறக்கப் பழகாதவர்களுக்கு என்ன புரியப்போகிறது என நினைத்துக்கொண்டே இறகை மெல்ல நீவிவிட்டார். அவர் கையில் ஒட்டியிருந்த துருவின் நிறம் அதனில் ஏறித் துருப்பிடித்த இறகென மாறியது. அதனைத் தூக்கி எறிந்தார். அது, துருவேறிய இரும்பில் விழ, ஒரு பறவையின் சிறகொடிந்த சத்தம் பலமாகக் கேட்டது.




