நிலவு கருமேகம் -சிறுகதை


சற்றுப் படுத்து இளைப்பாறலாம் என்று வாசல் கதவைத் தாழிடுவதற்காக வந்தாள் சங்கரியம்மா. ஹாலில் அந்தப் பெண் இன்னும் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

 ”என்ன இங்கியே உக்காந்திருக்கே, மாலா?’’

‘’ சீதாவுக்காகத்தான் காத்துட்டிருக்கேன்’’ என்றது அந்தப் பெண்.

‘’ சீதா அப்பவே போயிட்டாளே!’’

‘’ ஸ்கூலுக்கா?’’

‘’ ஆமா.’’

‘’ எப்ப?’’

“அவ போய் பத்து நிமிஷம் ஆச்சே.”

“எப்படிப் போனா?”

“இப்படித்தான்.”

“நான் இங்கேதானே உக்காந்திருக்கேன். அவ போனதைப் பார்க்கலியே!”

“என்னது!” சங்கரியம்மாள் படுக்கையறை, குளியல் அறை, தாழ்வாரம் எல்லாம் பார்த்துவிட்டு வந்தாள். சீதா இல்லை.

“போய்ட்டாம்மா. எங்கிட்ட சொல்லிட்டுத்தானே போனா? புஸ்தகத்தை எடுத்துக்கிட்டுப் போறதைப் பார்த்தேனே நான்?’’

‘’ நான் பார்க்கலியே! என்று சிரித்தது அந்தப் பெண்.

‘’ நீ புஸ்தகத்திலே மெய்மறந்து போயிருப்பே. அவ அவசரத்திலே உன்னைப் பார்க்க மறந்து போயிருப்பா.’’

‘’ மணி ரண்டடிக்கப் போவுதே. நான் வரேன்’’ என்று செருப்பை மாட்டிக் கொண்டு விரைந்தது அந்தப் பெண்.

 சங்கரியம்மாளுக்கு உடம்பு கையெல்லாம் படபடத்தது. பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் பெண்ணை இழுத்து கன்னத்தில் நாலு வாங்கவேண்டும்போலப் பரந்தது. இந்த வயசுக்குள் என்ன கோணல்! என்ன அவமரியாதை! என்ன அலட்சியம்! இது முதல் தடவை அல்ல. முந்தாநாளும் போன வெள்ளிக்கிழமையன்றும் நடந்ததுதான். பாதிநாள் அந்தப் பெண் பள்ளிக்கூடம் போகிற வழியில் சீதாவுக்காக காத்திருந்து அழைத்துப் போகும். பிற்பகல் இடைவேளைக்கு வீட்டுக்குப் போய்விட்டுத் திரும்பும்போதும் உள்ளே நுழைந்து, காத்திருந்து சேர்ந்துதான் போகும். ஆனால் திடீரென்று சீதா வக்கரித்துக்கொண்டிருக்கிறாள்.

‘’ சீதா இருக்காளா என்று கேட்டுக் கொண்டே வரும் அந்தப் பெண்.

‘’ சாப்பிடறா. கொஞ்சம் இரு.’’

 சீதா சாப்பிட்டுப் போய் பத்து நிமிஷமாகியும் அது அன்று காத்திருந்தது. சீதா மறந்து போய்த்தான் போயிருக்க வேண்டும்; முந்தாநாளும் மறந்து போயிருக்கட்டும். இன்று?

 நிச்சயமாக மறந்து போயிருக்க முடியாது. வேணும் என்று செய்ததுதான். நல்ல பாம்போடு பழகுகிற கதையாகி விட்டதா சீதாவின் குணம்?

 சங்கரியம்மாளுக்குக் கோபம் மட்டும் இல்லை; ஒரு வேதனையும் நெஞ்சைத் துவட்டிற்று- வேதனையா? துயரம். நம் வயிற்றில் பிறந்த பெண்ணா இது? இப்படி முகத்தில் அறைகிறாப்போல நடந்து கொள்ள எத்தனை ஈரமில்லாமல் இருக்க வேண்டும்? பதினைந்து வயதில் எப்படி இந்தக் கொடுமை தோன்றும்? இரண்டு மூன்று பரீட்சைகளாக வகுப்பில் முதல் இடம் வருகிறதாம் சீதாவுக்கு. ஏன் வந்தது என்று நொந்துகொண்டிருந்தாள் தாயார். ஒரு குழந்தையை, அதுவும் நம் குழந்தையை அகம்பாவத்தில் ஏற்றிவிட்டதே இந்த முதல் இடம்!

 மாலா சிரித்தது நினைவுக்கு வந்தது; ஏமாற்றத்தையும், மூஞ்சியில் அடிக்காமல் அடித்த அடியையும் மறைத்துக்கொண்டிருந்த சிரிப்புதான் அது. சிறு வயதுக்கு கற்பனை, அனுதாபம் எல்லாம் சகஜம் என்கிறார்கள். சீதா எப்படி அதெயெல்லாம் உதிர்த்துவிட்டு நிற்கிறாள்?

 பெரியவளான பிறகு சீதாவிடம் வந்து கொண்டிருக்கிற மாறுதல்களை ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தாள் சங்கரியம்மா. உடம்பில் நீரோட்டமாக ஒரு பளபளப்பு. பட்டை பட்டையாக இருந்த கையும் காலும் பூசித் திரண்டிருக்கின்றன. தோலை இழுத்துப் பிடித்தாற்போல மினுமினுவென்ற ஒரு அழுத்தம். ஆனால் அதோடு ஒரு நெஞ்சழுத்தமும் உள்ளே வளர்ந்து கொண்டிருக்கிறதே- அது என்ன? ஓடல், கத்தல், குதி எல்லாம் இருந்த இடம் தெரியவில்லை. இப்போது நடையில் ஒரு நிதானம். நிச்சயம். ஏதாவது ஹாஸ்யம் சொன்னால் கூட பழைய பெரிய சிரிப்பு இல்லை; தனக்குப் பிடித்தால் சிணுக்கென்று ஒரு சின்னச் சிரிப்பு; உடனே உதடு பழைய நிலைக்கு வந்துவிடுகிறது. பேச்சில் ஒரு சுருக்கம். ஒரு கண்டிப்பு. சங்கரியம்மாளின் சிநேகிதிகள் வந்தால், இப்போது சீதா அங்கே உட்கார்வதில்லை, வரவேற்றுவிட்டு, உடனே அந்த இடத்தைவிட்டு வேறு எங்காவது போய் உட்கார்ந்துகொள்கிறது. “அமுத்தலாக” என்று தான் வந்தவர்களின் முகத்தைப் பார்த்தால் சொல்ல வேண்டியிருக்கிறது.  இத்தனையும் பெரியவளாகிவிட்ட தன் வரங்களாகவே இருக்கட்டும். ஆனால் அகம்பாவம் எப்படி வரும்? அலட்சியம் எப்படி வரும்? வருந்தி வருந்திக் காத்திருக்கிற பெண்ணை ஈரமில்லாமல் உதறி விட்டுப் போகிற வன்மை எப்படி வரும்?

சங்கரியம்மாவுக்குப் பொருமிப் பொருமி வந்தது. ஒரு வெட்கமும் பிடுங்கி அரிப்பது போலிருந்தது. தானே நன்றி கெட்டுவிட்டாற்போல மனது தலை குனிந்துகொண்டது. இந்த ஒரு பெண் வந்து போகிறது என்பதற்காக எத்தனை உதவிகள் கேட்டபோது நினைத்த போதெல்லாம் அந்த வீட்டிலிருந்து ஓடி வந்திருக்கின்றன! தம்பி டில்லிக்குப் போகும்போதெல்லாம் நினைத்த மாத்திரத்தில் ஒரு ரயிலில் தூங்கு பலகை கிடைத்துவிடும். போன வருஷம் தாயார் உடம்பாகக் கிடந்தபோது ஊர் பஞ்சப்பட்ட பால் பவுடர்களும் மருந்துகளும் எப்படி வந்துகொண்டேயிருந்தன! எல்லாம் அந்தப் பெண் மூலமாகவே கிடைத்துவிடும். அந்தப் பெண் அழைத்துத்தான் சங்கரியம்மாவும் அந்த வீட்டுக்குப் போனாள்; அவள் தாயாரின் சிநேகமும் ஏற்பட்டது. ஒரு தடவை ரஷ்யாவிலிருந்து நடன கோஷ்டி வந்தபொழுது, தங்களுக்குப் போக முடியவில்லை என்று இரண்டு டிக்கட்டுகளை இவர்களுக்குக் கொடுத்தனுப்பினாள் அந்த அம்மாள்…

புறப் பொருட்களாக அதையெல்லாம் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கக்கூட வெட்கமாயிருந்தது சங்கரியம்மாவுக்கு. சர்க்கரை கடலைப் பருப்பு காப்பிக்கொட்டை என்ற உருவங்களில் சிநேகத்தைப் பார்க்கச் சிறிது லஜ்ஜை. சிநேகம் நெஞ்சில் ஊர்கிற சுனை. புறப் பொருட்களாக, உதவியாக வந்தாலும் அவற்றைச் சுரக்கிற ஊற்றுக் கண்ணைத்தான் நினைத்துப் பார்க்கவேண்டும்.

இந்த சீதாவுக்கு இதையெல்லாம் உணரத் தெரியாத வயதல்ல. தாயார் தன்னுடைய பதினைந்து வயதுப் பருவத்தை நினைத்துப் பார்த்தாள். பதினான்கு வயதில் கலியாணமாகி, அடுத்த வருடமே கணவன் வீட்டுக்கு வந்து குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது அவளுக்கு எது தெரியாமலிருந்தது? மாமனார் மாமியார் நாத்தனார்களைச் சமாளிப்பது , சுருக்சுருக்கென்று அவர்கள் குத்தின குத்தலுக்கு வாய் திறவாமல் இருந்து அவர்களுக்கே தங்கள் சுடு சொற்களைக் கண்டு வெட்கம் வந்தது , வீட்டுக்கு அண்ணி உருவத்தில் ஒரு வேலைக்காரி வந்ததாக மைத்துனன்கள் நினைத்துச் செய்த அதிகாரங்களை அன்பின் உரிமையாக நினைத்துக்கொண்டு போனது அவளுக்கு எது புரியவில்லை? பதினைந்து வயதுதான் என்று குழந்தை மாதிரி உதட்டைப் பிதுக்கினாளா, இரைந்தாளா, அழுதாளா? சேர்ந்த உதடு பிரியாமல் கிண்டல்களை அப்படியே விழுங்கி ஜீரணம் செய்து. கடைசியில் கண்ணை மூடுகிற ஒரு வருடத்திற்கு முன்னால் ”நீ சமைத்துப் போடு; யார் செய்தாலும் என் வாய்க்கு வழங்கமாட்டேங்குது” என்று ஒரு வார்த்தையில் மாமியார் தன் பொழிந்துவிட்டாள். மைத்துனன் கலியாணம் ஆகி தாயாரை விழுந்து வணங்கப் போனான். ”அண்ணியைக் கும்பிட்டியாடா? முதல்லே தாய்ச் சுவருக்குப் பண்ணு. அப்பறம்ல மோசனத்துக் கிட்டவும் உத்தரத்துக்கிட்டவும் வரணும்!  என்றாளாம் மாமியார்.

சீதாவுக்கு இதையெல்லாம் எடுத்து ஒரு நாள் சொன்னால்கூட நல்லது என்று தோன்றிற்று. கூடப் படிக்கிற ஒரு பெண்ணிடம் இவ்வளவு நெஞ்சைத் துடைத்துச் சாடுகிற ஒரு பெண் மீதி நாட்களில் எப்படி குப்பை கொட்டப்போகிறது!

 சீதா பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் , காபியைக் கொடுத்துவிட்டு இதைத்தான் தொடங்கினாள் சங்கரியம்மா. சீதா அப்போது ஒரு வாரப்பத்திரிகையை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். சங்கரியம்மாவுக்கு பயமாகவும் இருந்தது. அதைச் சிரித்து மறைத்துக்கொண்டே கேட்டாள். ”ஏன் சீதா மத்தியானம் மாலா வந்து உனக்காகக் காத்துக்கிட்டிருந்தா. நீ பாட்டுக்குப் போயிட்டியே. பத்து நிமிஷம் கழிச்சி அவ உட்கார்ந்திருக்கறதைப் பார்த்தேன். நீ எப்படிப் போனே? ”

சீதா பேசவில்லை.

”அவ வந்தது மறந்து போச்சா உனக்கு”

அதற்கும் பதில் இல்லை.

 ”கேக்கறேன். பேசாம இருந்தா?’’

அந்தக் கடுமையையும் குரலையும் கேட்டு சீதா நிமிர்ந்தாள்.

‘’என்னம்மா சொல்லணும் உனக்கு?’’

‘’ அவளுக்குத் தெரியாம போனியா?’’

“ ஆமாம்.”

“ எப்படிப் போனே?’’

“ சந்து வழியாலே”

 ‘’கொல்லைச் சந்து வழியாலேயா?’’

‘’ஆமாம்.’’

‘’ தோட்டி வர சந்து வழியாவா?’’

“ தோட்டி நடக்கிற சந்துகூட நாத்தமடிக்குமா?’’ என்று சீதா முகத்தை எங்கோ திருப்பிக்கொண்டு சொன்னாள்.

‘’ அவ்வளவு கசந்து போயிருக்கா மாலாவைப் பாக்கறதுக்கு?’’

‘’——-“

“ அவங்க வீட்டிலேர்ந்து சர்க்கரை வாங்கிக்கலாம், காப்பிக்கொட்டை வாங்கிக்கலாம்; அவளை மாத்திரம் பார்க்கக் கசந்து போயிடுமா?’’

“இனிமே அங்கே ஒண்ணும் வாங்காதே.”

“ ஏன்?’’

 ‘’வாங்காதேன்னா வாங்காதே  அவ்வளவுதான்.’’

 ஓங்கி ஒரு ஆதி வாங்கினாற்போல நின்றாள் சங்கரியம்மா. இரண்டு நிமிஷம் அவளைப் பார்த்துக்கொண்டே நின்றாள்; பேசவில்லை.  பிறகு சற்றுத் தணிந்த கடுமையோடு பேசினாள். “ சீதா, வரவர நீ இருக்கற இருப்பு எனக்குப் பிடிக்கவே இல்லை. பயமா இருக்கு எனக்கு. நம்ம வீடு தேடி ஒரு புழு வந்தாக்கூட அதைக் கௌரவமா நடத்தணும். அவங்க மனசு ஒரு நொடி நொந்து போனாலும் நமக்குக் கஷ்டம். இது என்ன, மனுஷங்க வாழற வீடுன்னு நினைச்சியா…….’’

‘’ ஆமா. அதனாலெதான் விலகி ஓடிப் போயிடணும்னு சந்திலே பூந்து போனேன்.

 மறுபடியும் தூக்கிவாரிப் போட்டது தாயாருக்கு. சமமாகப் பேசினால்தான் வழி காணலாம் போலிருக்கிறது.

அருகே போனாள். நல்லா புரியும்படியாக சொல்லேன். நான் என்ன, உன் மாதிரி படிச்சிருக்கேனா? எனக்கு விளக்கமா சொன்னாத்தானே புரியும் சீதா?’’

“ நீ விளக்கிட்டு என்ன செய்யப் போறே? உனக்கும் வருத்தமாயிருக்கும்.”

“ நீ ஒண்ணுமே சொல்லலியே இன்னும்.”

“ அவ பொய் சொல்றாம்மா.”

“ மாலாவா?’’

‘’ ஆமா. பொய் சொல்றதைக் கேட்டா பகீர் பகீருங்குது எனக்கு.’’

‘’எதுக்கு பொய் சொன்னா?’’

‘’ எதுக்கோ. என் நோட்டெல்லாம் பாத்துக் காப்பியடிப்பா. டீச்சர் கேட்டா. நான்தான் அவ நோட்டைப் பார்த்துக் காப்பி அடிச்சேன்னு சொன்னா ரண்டு தடவை. கிளாசிலே ஒண்ணையும் கவனிக்கவே மாட்டா. டீச்சர்ங்களைப் பார்த்து சிரிச்சிக்கிட்டேயிருப்பா. கேலி பண்ணிக்கிட்டேயிருப்பா. கொடுத்த வேலையை செஞ்சுக்கிட்டு வரமாட்டா. ‘’ ஏன் செய்யலை? ன்னா, கிண்டலா சிரிச்சிக்கிட்டே நிப்பா. ‘’ஒரு வேலையும் செய்ய மாட்டேங்கிறியே’’ ன்னு ஒரு நாளைக்கு ரொம்ப கோவிச்சுக்கிட்டாங்க டீச்சர். அவ்வளவுதான். இந்தப் பீடை பிடிச்சவ…’’

 சட்டென்று சீதா பேச்சை நிறுத்திவிட்டாள். வானில் எங்கோ தோன்றி ஓடுகிற எரிகொள்ளி கண்முன்னேயே மறைவது போலிருந்தது.

“ என்ன செஞ்சா அவ?’’

 சீதா பேசவே இல்லை.

“ சொல்லேன்.”

‘’என்னை ஒண்ணும் கேக்காதேம்மா’’

 ஐந்து நிமிஷம் அள்ளிக் கட்டின பிறகு சிறிது சிறிதாக சீதா செய்தியைச் சொன்னாள். டீச்சர் பாலத்திற்கு ஒரு மொட்டை கடுதாசி வந்ததாம். ‘’ நெறிகெட்ட நாரீமணி, மாணவிகளை அதிகம் விரட்டாதே. உடலைப் பல பேருக்குச் சொந்தமாக்கியிருக்கிற உனக்கு மாணவிகளை விரட்ட என்னடி துணிச்சல்? ஆசிரியத் தொழிலே உன்னைப்போன்ற விலைமகள்களால் ஊருபட்டுவிட்டதடி.  ஒழுக்கம் கட்டுப்பாடெல்லாம் பேதை மாணவிகளிடம் பேச கீழடி உனக்கேதடி வாய்? தான் இருக்கிற அழகுக்கு தடவிக் கொண்டாளாம் வேப்பெண்ணெயை இனி ஜாக்கிரதையா இரு. இல்லாவிடில் உன் பெயர் சந்தி சிரிக்குமடி,  இப்படிக்கு கபாலி.’’ என்று எழுதியிருந்ததாம் அந்தக் கடிதத்தில்.

‘’ எங்க பாலம் டீச்சர் என்கிட்ட ரொம்ப பிரியமா இருப்பாங்க.  வழக்கம்போல நோட்டெல்லாம் கொண்டு கொடுக்கிறதற்காக போனேன். அந்த லெட்டரை காமிச்சு இது யார் கையெழுத்துன்னு  சொல்ல முடியுமா? ன்னு கேட்டாங்க பார்த்தவுடனே தெரிஞ்சு போச்சு; மாலா கையெழுத்துன்னு சொல்லிட்டேன். ‘’நானும் அதுதான் நினைச்சேன். உனக்கு ரொம்ப சினேகிதியாச்சே.  உன்னையும் கேட்டு நிச்சயம் பண்ணிக்கனும்னு தான் காமிச்சேன்’’னு சொன்னாங்க. அப்புறம் விசுச்சி விசுச்சி அழுதாங்க.

“ நெசமாவா? இந்த மாலாவா எழுதுனா அப்படி?’’

‘’ ஆமாம்மா.’’

‘’ உனக்கு நிச்சயமா தெரியுமா?’’

‘’ அந்தக் கையெழுத்து வேறு யாருதும் இல்லேம்மா. கால் வாங்கறது, கொம்பு போடறது. அது ஒன்னே போதும்…

 நான் திருப்பித் திருப்பி வாசிச்சு எனக்கு நெட்டுருக்கூட ஆயிடுத்தும்மா. எனக்கும் அழுகை அழுகையா வந்துது.

”உங்க ஹெட்மிஸ்ட்ரஸ்கிட்ட போய்ச் சொல்லலியா அவங்க?

”எங்க ஹெட்மிஸ்ட்ரஸ்தாம்மா மாலாவுக்கு வருஷா வருஷம் பாஸ் போட்டுகிட்டே வரா அவுங்களுக்கு முதுகெலும்பெல்லாம் தான் முருங்கக் குச்சியைப் போலிருக்கே பிச்சை கேட்டுக் கேட்டு வருஷம் நாலு தடவை ”அந்த ஹாலுக்கு நிதி வேணும்; இந்த இடத்துக்கு நிதி வேணும்’’ னு பதினாயிரம் இருபதாயிரம்னு ஏதாவது கிளப்பிக்கிட்டேயிருக்காங்க. இன்னார் கிட்டதான் வாங்கறதுன்னு கிடையாது. யார் கொடுத்தாலும் வாங்கிப்பாங்க. மாலா அப்பா அதுக்கெல்லாம் ஓசி விளம்பரம் போடறாரு தன் பத்திரிகையிலே. மாலாவுக்கு வருஷா வருஷம் பாஸ் போடணுமே மாலாவை கூப்பிட்டு ஏதாவது கண்டிச்சா அவ அப்பா பத்திரிகையிலே பள்ளிக்கூடத்தைக் திட்டக் கிளம்பிடுவாரோன்னு பயம்.’’

‘’ஹெட்மிஸ்ட்ரஸ்கிட்ட சொல்லாமலே அப்படி பயப்படுவா, இப்படி பயப்படுவான்னு சொல்ல முடியுமா?”

” பாலம் டீச்சர் அவங்க கிட்ட சொல்லவும் சொல்லிட்டாங்கம்மா. அதுக்கு என்ன சொன்னாங்களாம் தெரியுமா அவங்க? ”நாம சரியா இருந்தா இந்த மாதிரி அவதூறுகெல்லாம் இடம் வராது. முக்கியமா டீச்சர்ங்க எல்லாம் ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாயிருக்கணும்”னு சொன்னாங்களாம். கடசிலே, சரி ” போங்க, நான் கவனிக்கிறேன்” னு அனுப்பிச்சிட்டாங்களாம். அப்பறம் வெளியே வந்ததும் மறுபடியும் கூப்பிட்டு ” பள்ளிக்கூடத்திலே எத்தனையோ பெற்றோர்ங்கள்ளாம் குழந்தைகளை படிக்க வச்சிருக்காங்க ஏழை, பணக்காரங்க, செல்வாக்கு உள்ளவங்க சாதாரணப் பட்டவங்க அதையெல்லாம் கவனிச்சி தான் நாம நடக்கணும். பப்ளிக் ஆதரவில்லை நடக்கிற பள்ளிக்கூடம் இது’’ன்னு சொல்லி அனுப்பிச்சாங்களாம்.

”அட பரதேவதே! இப்படியா சொல்லுவா ஒருத்தி! புதுசுபுதுசா இருக்கே நீ சொல்றதெல்லாம்!”

” நான் நடந்ததைதாம்மா சொல்றேன். பாலம்  டீச்சர் என்கிட்டே பிரண்டு மாதிரி பேசுவாங்க. இல்லாட்டி எப்படி எனக்குத் தெரியும்?”

” மாலாவை யாரும் இன்னும் கேட்கலே?”

” நான்தான் தனியாக் கூப்பிட்டுக் கேட்டேன். ” இந்த மாதிரி எழுதலாமா? ன்னு. ”நான் இல்லவே இல்லை”ன்னு பொய் சத்தியம் பண்ணினா. எனக்கு வயிறெல்லாம் என்னமோ பீறிக்கிட்டு வந்தது. அன்னக்கி ராத்திரி சரியாத் தூங்கவே முடியல. மறு நாளைக்கும் கேட்டேன். அதுக்கு என்ன சொன்னா தெரியுமா? ” நீதாண்டி என் பெயரை கெடுக்கிறதுகாக போர்ஜரி பண்ணிருப்பே”ன்னு கையை கையை என் மூஞ்சியிலே நீட்டிக்கிட்டே பாஞ்சாம்மா.”

” என்னது!”

” ஆமாம். ரண்டு மூணு தடவை அந்த மாதிரி சொன்னா. இப்பக்கூட அதை நினைக்கிறப்ப கண்ணை இருட்டிக்கிட்டு வருது.”

தாயார் சற்று பயந்துபோய் பெண்ணைத் தன்னருகில் இழுத்துக் கீழே உட்கார்ந்தாள்.

”போர்ஜரி பண்ணியிருப்பேன்னு சொன்னாளா, உன்னையா?”

”ம். நான் கேட்டேன். போர்ஜரி பண்ணி உன்னைக் கெடுக்கணும்னா உன் கையெழுத்தில்ல போடுவேன்? கபாலின்னு போடுவேனா? ன்னு கேட்டேன்.

 ” நீ எதுவானாலும் செய்வே கொள்ளிக்கட்டை’’ன்னு சொல்லிட்டு விர்ருன்னு நடந்து போய்ட்டா.”

சங்கரியம்மாளுக்கு நரம்பெல்லாம் புடைத்துக்கொண்டது. ரத்தம் மண்டைக்கு ஏறிற்று. நினைத்து நினைத்துப் பார்த்தாள். மண்டையில் குல்லாய்ப்போல நோவு எடுத்தது. வயிற்றில் ஒரு கிலியும் நமநமவென்று ஊர்ந்தது. துவண்டு போய், முழங்கையில் தலையை அழுத்தி ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள்.

‘’ நான் இதுக்குதான் நீ கேக்கவாணாம்னு சொன்னேன்,’’ என்றாள் பெண்.

‘’ கேட்டது நல்லதாப் போச்சு. இல்லாட்டி உங்க பள்ளிக்கூடம் ஜெயிலு, வெண்ணைய், சுண்ணாம்பு, மண்புழு, சிறு பாம்பு எல்லாம் ஒண்ணுன்னு நினைச்சிக்கிட்டே இருந்திருப்பேன்.’’

‘’  சரிம்மா விடு. நீ வா, காத்தாட நடந்திட்டு வரலாம். பார்க்கிலே போய் கொஞ்ச நேரம் புல்லாந்தரையிலே உக்காந்திட்டு வரலாம்’’ என்றாள் பெண்.

 புல்லாந்தரையின் தண்மை தோலையெல்லாம் குளிர்வித்தது. ஐப்பசி நிலா வெள்ளி வட்டமாக ஒரு சின்ன மேகத்தின் குறுக்கே ஊர்ந்து கொண்டிருந்தது. ஒரு மூலையில் வீட்டிலிருந்து கட்டுச்சோறு கொண்டு வந்து நிலாவையும் சாதத்தையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தது ஒரு குடும்பம். சாமந்தியும் கேனா வாழைப் பூவும் நடுவில் உள்ள தண்ணீர் குளத்தருகே தங்கம் தங்கமாக விழித்துக் கொண்டிருந்தன. ஓரமாக இருந்த தூங்குமூஞ்சி மரத்தில் காகங்களும் நிலவை உண்டு கரைந்து கொண்டிருந்தன.

‘’ ஐப்பசி மாச நிலா மாதிரி பார்க்கவே முடியாதும்மா’’ என்றாள் சீதா.

‘’ ஹெட் மிஸ்ட்ரஸ் நாம் ஒழுங்கா இருக்கணும்’’னு உங்க டீச்சர் கிட்ட சொன்னான்னியே’’

‘’ என்னம்மா, இன்னுமா அதையே நெனைச்சுக்கிட்டிடுருக்கே. நான் என்னமோ சொல்றேன்’’

‘’ இல்லடி கேக்கறேன். அவ அப்படிச் சொன்னப்ப, உங்க பாலம் டீச்சர் சும்மா கேட்டுக்கிட்டா இருந்தா? திருப்பிப் பளார் பளார்னு பதில் சொல்ல வேண்டாம்?’’

‘’ சொல்லலாம். ஆனா பாலம் டீச்சர் பொய் சொல்ல மாட்டாங்கம்மா’’

‘’ என்னது!’’

‘’ அவங்க ரொம்ப ஏழைம்மா. அவங்க அப்பாவுக்குப் பாரிசவாயு வந்து ரொம்ப வருஷமா கெடக்காங்க. அம்மாவும் வியாதிக்காரங்க. சமைச்சி போடுறதே அவங்களாலே முடியலை. ரண்டு தம்பி ஸ்கூல்லே படிக்கிறாங்க. பாலம் டீச்சருக்குச் சம்பளம் பத்தாது. டியூஷன் வச்சுக்ககூட விடமாட்டாங்க, பள்ளிக்கூடத்திலே பள்ளிக்கூட வேலையே இடுப்பை முறிக்குது. அவங்க திரும்பி வீட்டுக்குப் போறபோது  பார்த்தா நீ சொல்லுவே…. டியூஷன் எங்கே சொல்லிக்கொடுக்கிறது! அதுவும் கிடைச்சா தானே?’

‘’ என்ன சீதா  என்னென்னமோ சொல்லிட்டுப் போறே? மாலா கடுதாசியிலே எழுதினது?’’

‘’ சும்மா இரும்மா உனக்கு எல்லாத்தையும் துருவித்துருவி கேக்கணும்! இனிமே இதைப்பத்திப் பேசாதே. பேசாம இரு’’ இப்போது தலைவலி இல்லை சங்கரியம்மாவுக்கு. பெண்ணை நினைத்து நெஞ்சு விம்மி கொண்டிருந்தது. பெருமையால் அழவேண்டும் போலிருந்தது. நிலவில் கருத்த மரங்களைப் பெண் பார்த்துக் கொண்டிருந்தது. அவள் பெண்ணையே பார்த்துப் பருகிக் கொண்டிருந்தாள்,

‘’ அப்படின்னா மாலா ஏண்டி சும்மா சும்மா உன்னைக் கூப்பிட வர்றா?

‘’ அவ பயந்தாங்கொள்ளி.’’

 பெண்ணின் வயதைப் பார்த்து, நெஞ்சைப் பார்த்து சங்கரியம்மாவுக்கு பூரிப்பாகவும் இருக்கிறது, பொறாமையாகவும் இருக்கிறது. இவளா குழந்தை? இவளா சிறுசு?

 சீதாவின் முகத்தில் துயரம் படர்ந்திருந்தது. நிலவு வெள்ளியாக விழுந்து புருவமும், மூக்கும் லேசாக நிழல் எறிந்திருந்தன. சீதா நிலவைப் நிமிர்ந்து பார்த்தாள். ஏதோ பட்டு மாதிரி இருந்தது அந்த முகம். அத்தனை வேதனை, அத்தனை இனிமை, அத்தனை உரம்!

 மாலாவின் அப்பா மூன்று வருடங்களுக்கு முன்னால் தெருவோடு நடந்துதான் போவார். இப்போது ஒரு புது கார் ஒரு புது வீடு. அவர் பத்திரிகையில் திட்டுகிற திட்டு, வெசவு எல்லாமே வீடாக, காராக உருமாறினாற் போலிருந்தது சங்கரியம்மாவுக்கு. மேகம் கூட எப்படி உருமாறுகிறது, பார்க்கும்போதே!

 நிலாவுக்கு என்ன தெரியும்? அது பாட்டுக்கு சௌக்கியமாக, நிம்மதியாக இருக்கிறது. இன்னொரு பத்தை கருப்பு மேகத்தின் உள்ளே புகுந்து புறப்பட ஓடிக்கொண்டிருக்கிறது.


-தி.ஜானகிராமன்

குறிப்பு:   1967- ஆம் ஆண்டு  “சுதேசமித்திரன்”   இதழின் தீபாவளி மலரில் வெளியான இச்சிறுகதை கனலி-யின்  “ தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழு”க்காக தட்டச்சு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி :   சுதேசமித்திரன்- இதழ்  மற்றும் சிறுகதையை தேடி கண்டறிந்து கனலி-யின்  “ தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழு”க்காக அளித்து உதவிய கவிஞர் ராணி திலக் அவர்களுக்கு நன்றி.! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.