சங்கீத சேவை – சிறுகதை


ஞ்சாவூரில் ஒரு பொந்தில் எலி ஒன்று வாழ்ந்து வந்தது.

 “இந்தாங்க உங்க பாட்டை நிறுத்தப்போறீங்களா இல்லியா?”  என்று ஒருநாள் பாடிக்கொண்டே பொந்துக்குள் நுழைந்த அந்தப் புருஷ எலியைப் பார்த்துச் சொல்லிற்று மனைவி எலி.

    “நிறுத்தற காலம் வந்துரும்.  சும்மா ஆளைப் பிராண்டாதே.”

    “இதை என்னாலே கேக்கமுடியலே.”

    “ஏன், இப்ப என் பாட்டுக்கு என்ன வந்திடுத்து?”

    “என்ன வந்திடுத்தா?  பாட்டுன்னா அதுக்கு ஒரு சுருதி.  லயம், நல்ல சாரீரம் இதெல்லாம் வாணாம் போலிருக்கு!”

    “ஹட பைத்யமே! ஹ்ம்…  தேவுடா”  என்று பெருமூச்சு விட்டு ஆண் எலி விரக்தியுடன் சாய்ந்து கொண்டது.  “சுருதி, லயம், நல்ல சாரீரம் இதெல்லாம் இருந்தாப் போதுமா?  ரயில்லே போற பிச்சைக்காரன்கிட்ட கூடத்தான் இதெல்லாம் இருக்கு நான் இதெல்லாம் தாண்டி பெரிய ஆராய்ச்சியிலே ஈடுபட்டிருக்கேன்.  உன் அக்ஞானத்துக்கு அதெல்லாம் எப்படிப் புலப்படப்போகுது ……ம்…ராம ராமா!”

    “எனக்குப் புலப்படாம இல்லே, அதான் உங்க வாயிலேர்ந்து பழங்கடுதாசி வாடை அடிக்குதே இப்ப லைப்ரரியிலேருந்து வாறீங்கன்னுதான் நாலு ஊருக்கு வாசனையடிக்குதே”

    “போவுது அந்த முட்டாவது கண்டுபிடிக்கத் தெரிஞ்சுதே”

    “தெரிஞ்சு என்ன, யாருக்கு என்ன பிரயோசனம்?  முன்னெல்லாம் வித்வாங்க வீட்டு முற்றம் அலமாரியிலெல்லாம் இருந்திட்டு நாலு பிஸ்தாப்பருப்பாவது கொண்ணாந்திட்டிருந்தீங்க.  இப்ப அதுவும் போச்சு!”

    “பிஸ்தாப் பருப்புக்காகத்தான் வித்வானுங்க வீடுங்களுக்குப் போனேன்னு நெனச்சியா?  அடமண்டூகமே, அந்த வித்வாங்கள்ளாம் சிஷ்யப் புள்ளைங்களுக்கு சங்கீதத்தைப்பத்தி சொல்லிட்டிருப்பாங்க, பாடிக் காமிப்பாங்க.  அலமாரியிலே உக்காந்து அதையெல்லாம் கேட்டுக்கிட்டே இருந்தேன்.  ரொம்ப நாள் கழிச்சுத்தான் நான் உக்காந்திருக்கிற இடத்துக்குப் பக்கத்திலே பிஸ்தாப் பருப்பு இருக்கிறது தெரிஞசுது.  தினம் சிஷ்யப் புள்ளைங்க வீட்டுக்குக் கிளம்பறப்ப வித்வானும் வாசல்லெ போவாரு.  அப்ப நான் நாலு பிஸ்தாவைத பிரசாதம் மாதிரி எடுத்துக்கிட்டு வருவேன்.  அவ்வளவு தான், பிஸ்தாவைத் தின்னுகிட்டேயிருக்க முடியுமா?  லைப்ரரிக்குப் போகாட்டி  இந்த மாதிரி ரண்டு புஸ்தகம் எப்படி எளுத முடியும்?  என்னமோ கடுதாசி வாடை அடிக்குதுங்கிறீயே!”

       “இந்த புஸ்தகம் எளுதறதெல்லாம் எதுக்காக?  வேலையிலே முன்னுக்கு வரதுக்கு வழி தேடுவீகளா?”

        “புஸ்தகம் எளுதிக்கிட்டு வரதெல்லாம் பின்னே எதுக்காகவாம்?  ஆபிஸிலே என் வேலையை மாத்திரம் செஞ்சிகிட்டிருந்தா யார் என்னை சீண்டப்  போறாங்க?  புஸ்தகம் எழுதினேன, நல்லபடியா அம்பலத்துக்குக் கொண்டுவந்தேன்.  ஆபீஸிலியும் முளிச்சிக்கிட்டாங்க.  இல்லாட்டி இத்தனை பேரை விட்டுப்பிட்டு என்னைப்பார்த்து தென்னமெரிக்காவுக்கும் ஆப்ரிக்காவுக்கும் போய்ட்டு வறியான்னு கேப்பாங்களா?”

        “என்னது!  தென்னமெரிக்காவுக்கும் ஆப்பிரிக்காவுக்காவுக்குமா!”

    “படு படு! நல்லா ஆச்சரியப்படு!”

    “என்னாது.  கொஞ்சம் விவரமாச் சொலலுங்களேன்!”

    “இதைப்பாரு”  எனறு க்ளோஸ் கோட்டின் பையிலிருந்து ஒரு கவரை எடுத்து நீட்டிற்று புருஷ எலி. மனைவி எலி அதை வாசித்துவிட்டு ஆச்சரியம் தாளாமல் கணவனைப் பார்த்தது தன் கணவன் சாதாரண ஆளில்லை.  அவன் மகிமையை இத்தனை காலமாகத் தெரிந்துகொள்ளவில்லையே என்று பெருமிதமும் பிரமிப்பும் பொங்கின.

    “அந்த வித்வான்களைப்பத்தி இப்படி புஸ்தகம் எழுதி உலகம் பாராட்டினதாலே இந்தச் சந்தர்ப்பம்,  இந்த கௌரவம் எல்லாம் என்னைத் தேடிவந்திருக்கு தெரியுமா!” என்றது ஆண் எலி.

    “நானும் வரலாமா அந்த தேசங்களுக்கெல்லாம்?”

    “நீ இல்லாமியா?”

    “எப்ப போகணும்?”

    “அடுத்த மாசம்.  முதல் வாரம்”

    “ஈ… “என்று ஒரு கூச்சல் போட்டு உடம்பு கொள்ளாத தன் ஆனந்தத்தைக் காட்டிவிட்டு உள்ளே ஓடிற்று மனைவி எலி.

    கடுதாசைத் திருப்பித் திருப்பிப் படித்துப் பூரித்தது ஆண் எலி. அமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள எலிகள் எப்படி வயல்களில் பொந்துகள் அமைக்கின்றன, புதிதாக மனிதர்கள் தெளிக்கும் நாசகாரி மருந்துகளைத் தின்று செத்துவிடாமல் ஜீரணமாக்கிப் பிழைத்திருக்க என்னென்ன விஞ்ஞான முறைகளை மேனாட்டு எலிகள் கையாள்கின்றன – இந்த இரண்டு விஷயங்களை ஆராய்ந்து வருவதற்காக அமெரிக்காவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் போய்வருமாறு விநாயகதாசனைத் தலைமைக்காரியாலயம் கேட்டுக்கொண்டிருந்தது அந்தக் கடுதாசியில்.

    சுருத்ஜாதி விசாரதனாயும் வீணை வரிசிப்பின் தத்துவத்தை அறிந்தவனாயும் உள்ள சங்கீதக்காரன் பிரயாசமில்லாமல் மோக்ஷ மடைகிறான் என்ற யாக்ஞவல்கியர் எழுதிய சுலோகத்தை நினைத்து நினைத்துச் சிரித்தது எலி.  “ஓய் யாக்ஞவல்கியரே, இந்த லோகத்தில் இந்த உடம்போடு சுகத்தையும் புகழையும் அடைய வேண்டும் ஐயா!  அதற்குச் சங்கீதத்தைப் பற்றிப் பேசினாலும் எழுதினாலுமே போதும் என்று இந்த விநாயகதாசன் சொல்லுகிறான்” என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டது அது. அந்த எலியின் பெயர் விநாயகதாசன்.

    வயல்களிலும் வீடுகளிலும் எப்படிப் பொந்துகள் அமைப்பது. மனிதர்கள் விழித்துக்கொண்டிருக்கும்போதுகூட எப்படி அகாரதிகளைச் சூறையாடுவது என்று சின்ன எலிகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதுதான் எலியின் மகத்தான உத்தியோகம்.

    சந்தோஷச் செய்தியைக் கேட்டுச் சேமியாப் பாயசமும் வடையும் தயாரித்துக்கொண்டிருந்த மனைவி எலி நடுவில் வெளியே வந்து கேட்டது.  “சங்கீதத்துக்கும் நீங்கள் அயல்நாடு போறதுக்கும் என்ன சம்பந்தம்?”

    “சம்பந்தமில்லாமல் என்ன? நீ பார்க்கிற வேலை மட்டும் தெரிந்தால் போதாது கலைஞானமும் உலக ஞானமும் இருந்தால்தான் வெளிநாடுகளில் நல்ல தொடர்பு வச்சுக்க முடியும்?  ஒரு தேசத்தோட கௌரவமே ஒரு பிடியாவது உசர வாணாமோ?”

    “என்னமோ, எனக்கு இதெல்லாம் என்னத்தைப் புரியுது?”

    “புரியவாணாம்.  பேசாம நல்ல குடும்பப் பெண்ணா, வாய்க்கு வழங்க சமைச்சுப் போடு.  உன் புருஷனோடு வெளிநாட்டுக்குப் போறபோது பேச்சை லிமிட்டா வச்சுக்க. உனக்கும் பெருமை, எனக்கும் பெருமை.”

    “சரி,கைகாலை அலம்பிட்டு வாங்க சாப்பிடலாம்”  என்றது மனைவி.


மெரிக்காவுக்குப் புறப்பட இன்னும் பதினைந்து நாளிருக்கும் போதே, விநாயகதாசனின் வீட்டில் அடுப்பு மூட்ட விடவில்லை யாரும்.  எங்கே பார்த்தாலும் விருந்து, டீ பார்ட்டி, புகைப்படம்.  ஆயிர ரூபாய் குறைவாகச் சம்பளம் வாங்கினாலும் அவர்களை எலியாவே மதிக்காத உள்ளுர் ஆபீஸ் மேலதிகாரிகூட விநாயகதாசனையும் அவர் மனைவியையும் விருந்துக்கழைத்தார்.

    விமான நிலையத்தில் ஏகக்கூட்டமாகக் கூடி விநாயகதாசன், அவர் மனைவி, உதவிக்காகப் போகும் குறுக்கெழுத்துக்கார மூஷிகினி – மூவரையும் கோலாகலமாக எலிகள் வழியனுப்பி வைத்தன.

    நம் ஊரிலேயே இந்த அமர்க்களம் நடக்கும்போது அமெரிக்காவில் கேட்க வேண்டுமா?  விமானத்திலிருந்து இறங்கியதுமே பிடித்துக்கொண்டுவிட்டார்கள்.  அப்பா,  எத்தனை நிருபர்கள்.  எத்தனை புகைப்படக்காரர்கள்.  எத்தனை பேர்களுக்குப் பேட்டி.  “அப்பாப்பாப்பா!  தூங்கவிட மாட்டார்கள் போலிருக்கிறதே!”  என்று அலுத்துக்கொண்டது மனைவி எலி.

    விநாயகதாசனும் ஒரு காமிரா எடுத்துச் சென்றிருந்தது.  அமெரிக்காவின் அதிசயங்களைப் போட்டோ பிடித்தது.  அந்த நாட்டு எலிகள் பொந்துகள் அமைக்கும் வகைகளைப் புகைப்படம் எடுத்தது.  பேச்சு வார்த்தைகள் நடத்திற்று.  தலைவர்களைக் கண்டது.  மந்திரிகளைக் கண்டது. தொழில் நிபுணர்களை எல்லாம் கண்டது.  பல ராஜ்யங்களின் பொந்து நிபுணர்களான எலிகளைக் கண்டு பேசிற்று.  விருந்துகள் புசித்தது.  லட்சோபலட்சம் பிரதிகள் விற்கும் பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்குப் பேட்டி கொடுத்தது சின்னசின்ன நகரங்களில் உள்ள உள்ளுர் பத்திரிகைக்காரர்களுக்கும் பேட்டி கொடுத்தது.  ஐந்து நாள் ஒரு காலேஜில் தங்கி ஒரு டாக்டர் பட்டம் வாங்கிக்கொண்டது இன்னும் பல கல்லூரிகளுக்கும் பொதுஸ்தாபனங்களுக்கும் போய் இந்தியப் பண்பாட்டைப் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றிற்று அவைகள் பத்திரிகைகளில் வந்ததும் கத்தரித்து ஜாக்கிரதையாக ஒட்டி வைத்துக்கொள்ளுமாறு மூஷிகினியிடம் சொல்லிற்று மொத்தத்தில் வெற்றிகரமான பிரயாணம்.

தென்னமெரிக்கா பெரு நாட்டு இன் காக்களின் புராதனப் பண்பாடுகளைக் கண்டு பிரமித்தது. அந்த நாட்டுப் பூர்வகுடிகள் விநாயகதாசனுக்கு விருந்து வைத்து நடனமாடிப் பாடினார்கள். அதைப் பார்த்துக் கொண்டு ஆவலாகத் தன் மனைவியின் பக்கம் திரும்பிற்று. அதன் முகத்தில் வீசிய உவகையையும் வியப்பையும் ஒரு பத்திரிகை நிருபர் பார்த்துவிட்டார். வளைத்துக் கொண்டார்.

    “எப்படி எங்கள் சங்கீதம்!”

    “இப்பாட்டின் பெயர் என்னவோ?”

    “டக்கோன டொட்டி”

    “மறுபடியும் சொல்லுங்கள்”

    “டக்கோன டொட்டி”

    “டக்கோன – டொட்டி – டக்கோன டொட்டி டொட்டி.  தோட்டி – தோடி”  என்று தானே பரவசமாக முணுமுணுத்தது விநாயகதாசன்.

   “என்ன?”

   “இருங்கள்.  தோடி – டக்கோன – டக்கான – டக்கன – டக்கின – தக்கின – தட்சிண – ஐயோ ஐயோ!”  என்று புளகித்தது விநாயகதாசன்.

   “என்ன?”

   “இது தட்சிண தோடி அய்யா – எங்கள் நாட்டில் பெரிய கனராகம்.  ஆகா, பாரத சங்கீதம் எங்கெல்லாம் தன ஒளியை வீசியிருக்கிறது!  அது தானே பார்த்தேன் என்னடாது ஏ புண்யமு சேசிதிராங்கிற தியாகையாபாட்டு மாதிரி இருக்கே ராகம்னு பார்த்தேன்  அது தோடி – இது தட்சிண தோடி அதுதான் டக்கோன டொட்டி என்று மாறிவிட்டது”

      “உங்களுக்குச் சங்கீதம் தெரியுமா?” என்று கேட்டார் நிருபர்.”

   உடனே தான் செய்த ஆராய்ச்சிகளையும் எழுதிய புஸ்தகங்களையும் பற்றிச் சொல்லி, இந்தப் பிரயாணமே சங்கீதம் போட்ட பிச்சைதான் என்ற உண்மையை இங்கிதமாகக் கூறிவிட்டது விநாயகதாசன்.

   அவ்வளவுதான். மறுநாள் பத்திரிகைகளில் “இந்தியாவின் பெரிய சங்கீத மேதை – இந்திய அதிகாரி அடக்கமாக வெளியிட்ட தகவல்” என்றெல்லாம் தலையங்கங்கள் வெளிவந்தன.  “இந்திய சங்கீத நிபுணரின் அடக்கம் – தன் இசையறிவைப் பற்றி இதுவரை வாயைத் திறக்கவில்லை.  இன்று சிரமப்பட்டு அவர் வாயிலிருந்து பிடுங்க வேண்டியிருந்தது.  டக்கோன டொட்டியைப் பற்றி அவர் வெளியிடும் பிரமிக்கவைக்கும் வரலாறு” என்று உப தலையங்கங்கள்.

   சொச்சமிருந்த மூன்று வாரமும் – பிரேசில், உருகுவே முதலிய பல இடங்களுக்குப் பறந்து சென்ற மூன்று வாரமும் வேலை நேரம்போகச் சங்கீதச் சொற்பொழிவுதான் விநாயகதாசனுக்கு.

   போனஸ் அயர்ஸில் மாபெரும் கூட்டம் ஒன்று கூடி வரவேற்று விருந்தளித்தது.  சங்கீத சப்தரிஷிகளைப் பற்றிச் சொற்பொழிவாற்றிற்று விநாயகதாசன்.  கடைசியில் போனஸ் அயர்ஸ் எலிகளின் மேயர் அதைப் பார்த்து “தாங்கள் இரண்டு மூன்று பாட்டுகள் பாடி எங்களை மகிழச்செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டது.

   “ஓ பேஷாக. இருபது வருஷம் பல மேதாவிகளிடம் சிட்சை சொல்லிக்கொண்ட பிறகு மூன்று பாட்டுதானா பிரமாதம்!”  என்றது விநாயகதாசன்.

     “ஏன் புளுகிறீங்க?” என்று தமிழில் ரகசியமாகச் சிணுங்கிற்று மனைவி எலி.

  “நீ சும்மா இரு”

  “மேயர் சார்”  என்று கூப்பிட்டது விநாயகதாசன்.

  “என்ன?”

  “பாடறேன்.  ஆட்சேபமில்லே.  ஆனா தம்புரா இல்லாமல் பாட முடியாது”

  “தம்புராவா?”

  “ஆமாம்.  இந்திய சங்கீதகர் யாரும் தம்புரா இல்லாமல் பாடமாட்டார்கள் அது சுருதி வாத்தியம்.”

    “பாடத்தெரியாதவருக்கு எப்படி இந்தப் பட்டம் கொடுப்பார்கள்?”  என்று விழித்தது மனைவி.

  பொங்கல் பண்டிகையன்று “சங்கீத மகார்ணவம்” என்று பொன்தகட்டில் எழுதி, எலியின் கழுத்தில் கட்டி மேளதாளத்துடன் வீட்டில் கொண்டுவிட்டார்கள்.

                கல்கண்டுப் பொங்கலும் தவலை அடையும் செய்துபோட்டு அந்தத் திருநாளைக் கொண்டாடிய மனைவி எலி “ஒரு பாட்டு பாடுங்களேன்” என்றது.

   “பாட்டா!  இது வாங்கினப்பறம் யாராவது பாடுவாங்களா!”  என்று கழுத்தைச் சுற்றியுள்ள பொன்பட்டியைச் சுட்டிக் காண்பித்தது எலி.

   “மூத்த பயலுக்கு அகில உலக எலிகள் சங்கக் காரியாலயத்திலே சூப்பரிண்ட் வேலை வந்திடும். இப்பப்போய் பாடச் சொல்றியே!”  பழைய லைப்ரரி எலின்னு நெனச்சியா?”

   அடுத்த மாதம் அதற்கு ஒரு புதிய பதவி கிடைத்தது.  ஆஸ்திரேலிய, நியூசிலாந்து நாடுகளில் இந்திய எலிகளின் நிரந்தரப் பிரதிநிதியாக ஆகி, அங்கே போய்ச் சங்கீதத்தை மறந்து இன்பமாய் வாழ்ந்து வந்தது.

   “நிறுத்தற காலம் வந்துரும் என் சங்கீதத்தைன்னு ஒருநாள் சொன்னேனே, ஞாபகமிருக்கா?”  என்று தன் மனைவியைப் பார்த்து அடிக்கடி சொல்லி மகிழ்ந்தும் வந்தது!


–  தி.ஜானகிராமன்

 

குறிப்பு:1959-ஆம் ஆண்டு “நண்பன்”இதழில் வெளியான இச்சிறுகதை கனலி-யின் “தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழு”க்காக தட்டச்சு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நன்றி: சிறுகதை கண்டறிந்து உதவிய கவிஞர் ராணி திலக் அவர்களுக்கு நன்றி


 

1 COMMENT

  1. தி. ஜானகிராமனுக்கு சூடப்பட்ட இந்த மலர் மாலை அற்புதமான அஞ்சலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.