தீரா வியப்பின் உயிர்த் திளைப்பு – தி.ஜானகிராமன்


“இந்த ராமையாதான் எனக்குத் தகப்பனார். தகப்பனார் – தகப்பனார் என்றால், அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?  அப்படி உண்மையாக ஏதாவது அர்த்தமிருந்தால், அப்படி வாக்குக் கொடுத்திருப்பாரா?…… நாளைக்குச் சொல்லிக்கொள்ளாமல் கீழே விழப்போகிறவர்கள், எலும்பையும் சாம்பலையும் விட்டுவிட்டுப் போகிறவர்கள், என்ன என்னவெல்லாம் செய்துவிட்டுப் போகிறார்கள்? பிறர் மனதிலே வெறுப்பை சாச்வதமாக எழுப்பிவிட்டு மறக்கமுடியாத கசப்பாகக் குடியேற்றிவிட்டு எதற்காகப் போகிறார்கள்?” (பாலி)

ஒரு முன்னீடு 

ஏற்பாட்டுத் திருமணத்திற்கும் காதல் திருமணத்திற்குமிடையில் என்ன வேறுபாடு இங்கே கொட்டிக் கிடக்கிறது? இரண்டிலும்  துயரமல்லாது வேறு என்ன எஞ்சுகிறது! இந்தத் திருமணம் என்ற சமூக ஏற்பாடே, எவ்வளவு செயற்கையானது? இப்படித் தத்துவப் பாவனையாக யோசிக்கலாமென்றாலும், காதலுக்கான பழைய கிளுகிளுப்பு மதிப்பு காலாவதியாகிவிட்ட சமகாலத்தில், மறுஉற்பத்திக்கான ஒரு வழமையான சடங்கு என்பதன்றிக் குடும்பக் கட்டுமானத்திற்குப் புனிதம் பூசிக் கொண்டாடுவதில் உள்ள வியர்த்தம் அல்லது விபரீதத்தை, இன்னும் எவ்வளவு காலம் வெட்டியாய்ப் பேசிக்கொண்டேயிருப்போம்? குடும்பம் வேண்டாம், குடும்பத்தைப்போல் வன்முறை வளர்க்கும் அமைப்பு வேறில்லையென்ற தீவிரச்சிந்தனையாளர்களில் மிகப்பலரும் குடும்பத்திற்குள்ளே ஒண்டிக்கொண்டேதான் அதை இங்குப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள்! இவர்களால் செய்ய முடிந்த பெரிய புரட்சியெல்லாம், இரண்டு மூன்று பொண்டாட்டிகளை அல்லது தொடுப்புகளைச் சேர்த்துக்கொண்டு, குடும்பக் கட்டிறுக்கத்தைக் குலைத்ததுதான்!

இவர்களைப் பார்த்தே, மரப்பசு அம்மணியம்மாள் சிரித்துச் சீறுகிறாள். இவர்களுக்குக் குடும்பமே மேலென்று கருதியே, இறுதியில் வயதில் இளையவனான பட்டாபியின் துணையையும் (இதுவும் எதிர்மரபுதான்) அவள் தேடிக்கொள்கிறாள்! உள்ளும் புறமுமாகக் கூத்தாடும் இந்த hypocrisyக்கு முற்றிலும் எதிரானவை தி.ஜா. எழுத்துகள். ஆனால், எவ்வளவு தூரம் முடியுமோ, அவ்வளவு தூரம், கனிவோடும் பரிவோடும் மனிதர்களைத் தி.ஜா. அணுகினார். வாழ்க்கையை வழிநடத்துவது மனிதர்களா, வழிவழிப் பாரம்பரிய நெறிகளா? என்ற ஆதாரமான முடிச்சைப் படைப்புத்தோறும் தி.ஜா.  பிரச்சனைப்படுத்தினார். ஆயிரங்கால் நிலவுடைமைச் சமூகத்தின் மதிப்புகளும் மதிப்பீடுகளும் காலனியாதிக்கத்திற்குப் பிற்பட்ட செழுமையான காவிரி டெல்டாப் பகுதியின் மரபார்ந்த so called பார்ப்பன மற்றும் வேளாள மேட்டுக்குடியினரிடம், குறிப்பாகப் பெண்களிடம், அவர்களின் நடைமுறை வாழ்வியலினூடாகப் பொருளற்றுப் பல்லிளிக்கும் உளுத்துப்போன வெற்று ஆனைக்கால் உதைகளாகப் (தோற்ற மிரட்டல்!) பம்மிப் பதுங்குவதைச் சிரித்து வேடிக்கை பார்த்ததுமன்றிப் பதிவுசெய்து சமன்குலைத்தும் தி.ஜா. கோடாலிக் காம்பானார்.

நீண்ட பாரம்பரியத் தொன்மையுள்ள சமூகங்களில் தனிமனித உணர்வுகளுக்கு மட்டுமில்லை, நினைவுகளுக்கும்கூடச் சுதந்திரமில்லாத ரண வெக்கையைப் பண்பாட்டுத் தணிக்கைக்குள் சரணடைய மறுத்துப் பச்சை வெட்டுக் குருதியுடன் கவிமொழியில் அப்படியப்படியே நிர்வாணப்படுத்தினார். இப்படிச் செய்தாலும், இதிலிருந்து திமிறிய செல்வழியிலும், இதைவிடக் கூடுதல் முள்களே மனிதர்களை மார்பிலும் முதுகிலும் குத்தக் கண்டு, பருந்தால் குதறப்பட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கூட்டுக்கு ஓடிவரும் குஞ்சுப்பறவைபோலே, பழகிவிட்ட பாதுகாப்பின் கதகதப்புக்கேங்கிப் பூஞ்சைப்பட்ட மனத்துடன் வீடு நாடி விரைகிறார். ஆத்மாவைத் தின்றழிக்கும். வைரஸ் கிருமிகள் வெளியில் திரியும்வரையில், வீட்டுக்குள்ளேயே தி.ஜா.வும் இளைப்பாறுவார். இதற்குப் பொருள், எப்போதும் சுவர்களுக்குள்ளேயே அவர் முடங்கிவிடுவார் என்பதன்று. தேவைப்படின் இருப்பை மீறித் திமிறுவதும், பாதுகாப்புத் தேடியடங்குவதும் தி.ஜா.வின் படைப்பறமாகும்.

குடும்பமும் இயல்பு. மீறலும் இயல்பு. குடும்பத்திலிருந்து கொண்டே மீறுவதும், மீறலைச் செய்தபடியே குடும்பத்துக்குள் வருவதும்… இரண்டிற்குமே ஜானகிராமனிடம் இடமுண்டு. இவற்றில் எந்த ஒன்றையும் புனிதப்படுத்தாதவர் அவர். நிஜமான அன்பைத் தேடியவர். ஒருவனுக்கு ஒருத்தி என்ற லட்சிய நிலையையும், வேண்டும் காதல் கிடைக்காதபோது அதைத் தேடியலைவதையும் சமமாகப் பாவித்தவர். மனிதர்களும் அவர்களின் உணர்வுகளும் இப்படிப் பட்டவைதான் என்பதே அவரது கடைசிப் புரிதல். கடலோரம் அமர்ந்து காலடிச்சுவடுகளைத் தேடிக்கொண்டிருப்பதில்லை; கடலுள் பாய்ந்து சுவடின்றித் தொலைந்து விடுவதுமில்லை; கடல் மேல் ஒரு கண் கரை மேல் ஒரு கண் எனப் பொறுப்பான கடலோடியாய்க் காலக் கறையானைத் தி.ஜா. கவனிக்கிறார். பாலியல் பிரச்சினைகளையும் உறவு மீறல்களையும் எழுதியவராகத் தி.ஜா.வைக் காண்பதும் மதிப்பிடுவதும் மேலோட்டமானவை; மிகைப்படுத்தப்பட்டவை. அடிப்படையான மானுட உணர்வுகளின் எல்லையின்மையைத் தம் சிறுகதைகளிலும் நாவல்களிலும் பிடிக்க முனைந்தவராகத் தி.ஜா.வைத் தடமறிவது இன்னும் அர்த்தமுடையதாகும்.

கவிதைகளில் ஒரு பாரதியாரையும் கட்டுரைகளில் ஒரு பாரதியாரையும் நிறையப் பேர் கண்டுபிடித்துக் கொண்டிருப்பதைப் போலவே தி.ஜா.வின் சிறுகதைகளையும் நாவல்களையும் சிலர் வேறுபடுத்தி அளவிடுகிறார்கள். இது செல்லுபடியாகத்தக்க நிலைப்பாடன்று. தம் சிறுகதைகளின் நீட்சியாகவே, தம் நாவல்களைத் தி.ஜா. எழுதினார் என்பது, மேலதிகமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஓர் உண்மையாகும். இந்த அடிப்படையை உள்வாங்கும்போதே, இன்னொன்றையும் உணர்ந்துகொண்டாக வேண்டும். ஒரு பிரச்சனையின் பல்வேறு வரிசை மாற்றங்களையும் (permutations), சேர்க்கைகளையும் (combinations) தி.ஜா. பொருட்படுத்தினார். ஒரு சூழலை ஒருவர் எதிர்கொள்வதற்கும் இன்னொருவர் அதையே வேறுபட்டு அணுகுவதற்குமான தனிநபர் சார்ந்த பார்வை மாற்றங்களை மட்டுமல்ல, ஒரே நபர் வெவ்வேறு மனநிலைகளில் வெவ்வேறு விதமாய்ச் சூழலைக் குறிப்பிட்ட தருணம் சார்ந்த உணர்வதிர்வாகத் திறந்துநிற்கும் புதிய சாத்தியங்களையும் பரிசீலித்தார்.

இப்படித்தான் அனுசுயா  – அம்மணி;  பாலி – பட்டு; யமுனா – ருக்கு; அமிர்தம் – பார்வதி; தங்கம்மா – டொக்கி; புவனா – மரகதம்; அலங்காரம் – பங்கஜம்;  இந்து – குஞ்சம்மா; செல்லம் – ரங்கமணி; சந்திரா – செங்கம்மா எனப் பல்வகைப் பெண்களைச் சாயல் ஒருமையுடனும் கூடவே பாவ வேறுபாட்டுடனும் புனைந்தார். பாபு – அப்பு; ரங்கண்ணா – கோபாலி; ராமையா – அனந்தசாமி; சபேச முதலியார் – தங்கராஜன்; ரங்கன் – பழனி; நடேசன் – ப்ரூஸ்; சட்டநாதன் – காமேச்வரன்;  ராஜா – பட்டாபி; தண்டபாணி – துரை; கோபாலசாமி – செல்லப்பா எனப் பல்வகை ஆண்களையும் சுழல்கோணப்  பிம்பங்களாகக் கலைத்தடுக்கினார். இது பற்றித் தனிக்கட்டுரைதான் எழுதவேண்டும். இங்கு நான் சொல்ல வந்தது வேறு. ரத்தினச் சுருக்கமாகத் தீட்டப்பட்ட சில சிறுகதைகளிலிருந்து உந்துதலுற்று அதன் அகத்தூண்டுதலாலேயே அப்பொறியைப் பெரிதாக ஊதித் தி.ஜா. நாவலாக்குகிறார் என்கிறேன். முன்கூட்டியே திட்டமிடப்பட்ட முன்னகர்வுகளின்  தொடர்புறுத்தல் என்பதில்லை, அழித்தழித்தெழுதிச் செல்லும் உணர்வு நிலைகளின் வகைவகையாய் விரியும் நீட்சி அல்லது பல்கோணத் திருப்புதல் அல்லது வலித்திழுப்பின் முடிச்சிறுகல் அல்லது அறுந்து நெகிழல் வழியேயே இதைத் தி.ஜா. சாதித்தார். இதன் சிறப்பான படைப்புச் சாதனையாக, மலர்மஞ்சம் நாவலைக் குறிப்பிடலாம்.

மலர் மஞ்சம் – ஜலத்தில் கட்டிய வீடு 

தனிப்பட்ட முறையில், எனக்கு மிகப்பிடித்த தி.ஜா.வின் நாவல் இதுதான். இதற்குப் பகிர விரும்பாத அந்தரங்கக் காரணம் எனக்குண்டு. அது இக்கட்டுரைக்குத் தொடர்பற்றது என்பதால், அதை இங்குத் தவிர்க்கிறேன். தி.ஜா. படைத்த மிக வலுவான ஆண் என்று இதில் வரும் ராமையாவை இனங்காணலாம். மிகவலுவான பெண்ணாகப் பாலியையும் உணரலாம். இவர்கள் மட்டுமில்லை; இந்நாவலில் வரும் தங்கராஜன், ராஜா, வக்கீல், பெரியசாமி, செல்லம், நாயக்கர், அவர் மகன், முதலியார் என அனைவருமே, ஒரு காவியச் சாயலுடன் நம் புந்தியுள் புகுந்து தொந்தரவு செய்வோராயுள்ளனர்.மலர் மஞ்சம் நாவலின் முன்வரைவைத் தூரப் பிரயாணம், தீர்மானம் ஆகிய சிறுகதைகளில் புகைமூட்டமாகக் காண்கிறோம். இந்த முன்வரைவென்பது, புள்ளி புள்ளியாக இழைக்கப்பட்டுத் தூலவடிவம் மட்டும் கொள்வதில்லை. ஒன்றனுள் ஒன்றாகப் புள்ளிகள் மயங்கியும் உருவிழந்தும் சூக்குமத் தீற்றல்களாக மனக்கோலமும் கொண்டுவிடுகின்றன. இவ்வாறு தூலம் சூக்குமமாகும்போது, பழைய முன்வரைவின் சூக்குமம் இப்போது தூலமாகிவிடுவதும் கவன ஈர்ப்புக்குரியதாகும். தூரப்பயணம் பாலியும், மலர் மஞ்சம் பாலியும் ஒரு சாயலின் இரட்டைப் பிறவிகளே. சிறுகதையில் வரும் பாலிக்குத் திருமணமாகிவிட்டது. நாவலில் வரும் பாலிக்குப் பிறந்த அக்கணத்திலேயே மணமகன் நிச்சயிக்கப்பட்டுவிட்டான்.

மண உறவுக்கு வெளியே ரங்குவோடு முதல் பாலிக்குத் தொடர்பிருக்கிறது. பிறந்த முதல் நாளிலிருந்தே தங்கராஜனின் மனைவியாக வளரும் இரண்டாம் பாலிக்குத் தனக்குத் தெரியாமலேயே தன் மனத்துக்குள் ராஜா எப்படி வந்து புகுந்தானென்ற திகைப்பிருக்கிறது. பன்னிரண்டாண்டு மீறலுறவு நீடித்தாலும், சட்டென ஒரே நாளில், ஒரு மண்டலம் மாரியம்மனுக்கு நேர்ந்துகொண்ட 48 நாள் அடிப்பிரதட்சணத்தைக்காரணமாக்கி, “அப்புறம் என் இஷ்டம். என் மனசு சொல்றபடிதான்….. இனிமே மெட்ராஸ் வரவேண்டாம்” என ரங்குவை விரட்டியடிக்கிறாள் முதல் பாலி. தஞ்சைப் பெரிய கோவிலின் முன்னிரவு இருட்டிலும் கண்களைக் கூர்ப்பாக்கித் தேடினால் காண முடிகிற கோபுரத்தைச் செல்லம் சுட்டிக்காட்டக் கண்டு, “எங்குப் பார்த்தாலும் வெளிச்சமாக இருந்தால், நிஜமான வெளிச்சம் இருக்கிற கண்ணுக்குத் தெரியமாட்டேன் என்கிறது. இருள் வந்துவிட்டால், அந்த வெளிச்சம் பளீர் என்று தெரிகிறது. எனக்குத் தெரிந்துவிட்டது” எனக் கோபுரமாய் ஓங்கியிருக்கும் தந்தை வாக்கெனும் பிருமாண்டம்முன் சுயமழித்துத் தங்கராஜனை மணக்கத் தன்னை ஒப்புக்கொடுத்துவிடுகிறாள் இரண்டாம் பாலி. வாங்கிவைத்த இரண்டு ஆழாக்குப் பாலில் ரங்கு சுற்றிச் சுற்றி வருவது போலிருக்கிறது சர்மாவின் மனைவி பாலிக்கு. “மஞ்சத்திலே பக்கத்திலே படுத்திருப்பான் உன் மாப்பிள்ளை (தங்கராஜன்). மனசிலே அந்தப் புள்ளையும் (ராஜா) வந்து வந்து போகுமில்ல? அதுதானே எங்கேயும் நடக்குது!” என்கிறார், காசிக்கு ஓடிச் சாமியாராகிச் சாவுக்காகக் கங்கைக்கரையில் காத்திருக்கும் நாயக்கர். இந்தப் பின்பகுதியை எழுதுவதில்தான், தி.ஜா. என்ற கலைஞனின் மேதைமை துலங்குகிறதெனலாம். இதைத் தி.ஜா.வைத் தவிரத் துணிச்சலுடன் வேறு எவரால் தமிழில் எழுதிவிட முடியும்?

எந்த உறவும் எந்த மீறலும், திடீரென நாம் உறுதியாக நின்று, ஒரு முடிவெடுத்துவிட்டோம் என்றால், அத்தோடு அந்தச் சனியன் தொலைந்துவிடுகிறதா என்ன? காலைச் சுற்றிய பாம்பாக, அது மனத்தின் நிழலாகிவிடுகிறதே என்கிறார். முதல் பாலியும் சரி, இரண்டாம் பாலியும் சரி, தாம் கழற்றிவிட்ட உறவை உடலால் தொடரப் போவதில்லை என்பது எவ்வளவு நிச்சயமோ, அதேயளவுக்குத் தத்தம் ஆழ்மனத்தில் ஓயாத நினைவலைகளால் வேட்டையாடப்படப்போவதும் உறுதிதானே! இந்த complex paradoxயைக் கையாள்வதில், தி.ஜா.வுக்குத் தமிழில் வேறு யாரையும் நிகராகச் சொல்லவே முடியாது. இது மலர் மஞ்சத்தில் அவ்வளவு அழுத்தமான ஒரு கலை வெற்றியாகப் பதிவாகியுள்ளது. தூரப் பிரயாணத்திலும் மலர் மஞ்சத்திலும் வரும் பாலிகளிடம் ஒத்த சாயலுள்ளது வெளிப்படையாகும். “சில சமயம், அவளுடைய மனத்தின் ஆழம், அவளுக்கே தெரியாது!” எனச் சர்மாவின் பாலியை ரங்கு வியக்கிறான். இதேபோல்தான், ‘என் மனத்தில் ராஜா இருப்பதைச் செல்லம் எப்படிக் கண்டுபிடித்தாள்?’ என்றும், ‘என்னைப் பற்றி அடி மனசுவரை தெரிஞ்சி உனக்கு என்ன ஆகணும்?’ என்றும், ‘ஒரு ரகசியம் – எனக்கே தெரியக்கூடாத ரகசியம், எதற்கு இவ்வளவு அம்பலத்திற்கு வர வேண்டும்?’ என்றும் ராமையா மகள் பாலியும் திகைக்கிறாள். “அளந்து அளந்து உனக்கு இந்த அர்த்தம், உன் அத்தைக்கு இந்த அர்த்தம், உங்களுக்கு இந்த அர்த்தம் என்று ஒரே வார்த்தையில் நான்கு அர்த்தம் தெரிவித்த பேச்சு, ஆளுக்கு ஒருவகையான புன்முறுவல்” எனப் பாலியைப் புகழ்கிறான் ரங்கு. மலர் மஞ்சத்திலோ, “நீ அத்தனைபேருக்கும் தனித்தனியா ஒரு சிரிப்புச் சிரிச்சிருந்தா, வாயைத் திறந்திருக்க மாட்டாங்க” என்கிறான் தங்கராஜன்.

“பாலியின் அறிவும் அழகும் ஊர்ப் பெரியவர்களையெல்லாம் மயக்கின. வயதுக்குச் சற்று அதிகமான புத்தியை அகாலங்களிலும் வேண்டாத இடங்களிலும் காட்டும் குழந்தையைக் கண்டு யாரும் ஆசைப்படத்தான் செய்வார்கள்” என்கிறார் ராமையா. இப்படிப் பாலிகளிடம் ஒட்டியுள்ள சாயலைத் தொட்டுக்காட்டுவதன்றி, மேன்மேலும் விளக்கிக்கொண்டிருக்கத் தேவையில்லை. ஆனால், சர்மா – பாலி – ரங்கு என்ற முக்கோணத்தைவிடத் தங்கராஜன் – பாலி – ராஜா என்ற முக்கோணம், இன்னும் அடர்த்தியும் ஆழமும் கொண்டதாகப் புனையப்பட்டுள்ளது. இந்த மூவருக்குமே, அவரவரைப் பற்றி அவரவரும் புரிந்துகொள்ளச் செல்லம் என்ற இளம் விதவையின் உதவி தேவைப்படுவதாகத் தி.ஜா. கதை பின்னியுள்ளார். இனியதை விரிவாகக் காண முனைவோம். அதற்குமுன், ராமையாவின் ‘மர்மத்தைப் போதிக்கும் புலம்பலை’ப் புரிந்துகொள்வதும் அவசியமாகும். காமாட்சி, கங்கா, பங்கஜம், அகிலாண்டம் எனப் பத்து வருடத்துக்குள் நால்வரை மணந்து அனைவரையும் சாவுக்குப் பலி தருகிறார் ராமையா. இருபது ஏக்கர் நஞ்சையும் மூன்று ஏக்கர் புஞ்சையும் வீடும் தோப்பும் கொல்லைகளுமாகச்  செழிப்பானவர். சொத்து மட்டுமில்லை; ஆளும் நல்ல சிவப்பென்பதால் கல்யாணச் சந்தையிலும் அவருக்குக் கிராக்கியிருக்கிறது. வைதீச்வரன் பக்தர். வைதீச்வரன் என்ற பெயரில் யாரோ தன் கூடவே வாழ்வதாக எண்ணுபவர். வயலுக்குப் போகும்போதும், பல் துலக்கும்போதும், மனைவிகளுடன் படுத்துக்கொண்டிருக்கும் போதும் தனக்குள்ளேயே காற்றைப்போலக் கற்பனையைப்போல வைதீச்வரனும் கூடவே இருப்பதாக நினைக்கும் பழக்கமுடையவர். ஆனால், என்ன பயன்? இப்படிக் கேட்பவரில்லை ராமையா. நன்றி கெட்டவர்களுக்கு மேலே மேலே நல்லது செய்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? எனப் பதினைந்தாம் நாளே பூஜையைத் தொடங்கிவிடுபவர்.

நெஞ்சிலேயே சாகப்பிறந்த ஆசையென்றாலும்,, சந்தனக் காப்பிட்ட மாதிரி வெண்ணையாய்ப் பளபளக்கும் இந்தச் சேப்பழகனின் தேகத்திற்கு ஏங்காதார் ஊரில் யார்? இப்படிப்பட்டவர் வாழ்வில் எப்போதுமே சம்பந்தமில்லாத நேரங்களில் சம்பந்தமில்லாத விஷயங்களே நடக்கின்றன. ஓசைக்கு மருளும் குருவிபோல், உற்றுக் கேட்டாலொழியக் கேளாதவாறு, படபடக்கிறது அவர் இதயம். அதில் ஒரே ஓர் ஆறுதல்தான் உயிர்த்திருக்கிறது. அவரையே உரித்து வைத்திருக்கும், ‘விளக்கு மாதிரி ஒரு மகள்’ பிறந்திருக்கிறாள். “கண்ணை மூடிக்கிட்டு மாவிளக்குமா உருட்டி வச்சாப்பல கிடக்கு” என்றும், “தலையிலே எத்தனை முடி பார்த்தீங்களா? இப்பவே ஒரு சீசாத் தைலம் வேணும் போலிருக்கு” என்றும் குழந்தை வர்ணிக்கப்படுகிறாள். அக்குழந்தைக்குப் பெயர்கூடப் பெற்றோரால் சூட்டப்படுவதில்லை. “நீங்க எப்படியாவது கூப்பிடுங்க. நான் பாலாம்பான்னுதான் கூப்பிடப்போகிறேன் அவளை. நான்தான் பாலாம்பாளுக்கு நாலு ரூவா மஞ்சத் துணியில முடிஞ்சு வச்சேன்” எனப் பாலிக்குப் பெயர் வைக்கிறாள் அடுத்த வீட்டு ஜகது. அவள்தான் ராமையாவைப் பாலி உரித்து வைத்திருப்பதாகவும் ஜாடை காட்டுகிறாள். “நீயே அந்தப் பாலாம்பா, வைதீச்வரன் கோயில்லேர்ந்து புறப்பட்டு வந்தாப்போலத்தான் இருக்கே” என்றும், “யாரிடமும் காட்டாத மரியாதை அவளிடம் காண்பிக்க வேண்டும் என்று தோன்றும். ஒரு காரணம், ஜகதுவின் முகத்தோற்றம்தான். தஞ்சாவூர்ப் படங்களில் வருகிற சீதை யசோதை கஜலட்சுமி இந்த மாதிரி ஒரு முகம் அது” என்றும் ராமையா சொல்ல நினைத்தாலும், ஏனோ அதை அவரால் சொல்ல முடிவதில்லை.

பிரசவத்தில் அகிலாண்டம் சாகக் கிடக்கையில், பழைய வாழ்க்கை நினைவுகள், வேகவேகமாக ராமையாவுக்குள் ஓடுகின்றன. முதல் மனைவி காமாட்சி செத்தபோது, பேய் பிடித்தாற்போல் ஜகது தவியாய்த் தவித்ததும், ஆறு மாதம் வரையில் அவள் தலைவாரிக்கொள்ளாததும் அவரை அறுக்கின்றன. “இந்தச் சுப்ரமண்யன் எவ்வளவு கொடுத்து வைத்தவன்! ஜகதுவைக் கல்யாணம் செய்துகொண்டவன் தெய்வத்தைக்கூடச் சட்டை செய்ய வேண்டியதில்லை. அதன் தயவுக்குக் காத்து நிற்க வேண்டியதில்லை” என்கிறார் ராமையா. இதுதான் தி.ஜா. போடும் புனைவுச் சுருக்கு. ஒருவேளை ராமையா – ஜகது இணைந்திருந்தால்? இந்த ஆல், தி.ஜா.வின் எல்லாப் படைப்புகளிலும் சூறாவளியாய்ச் சுழன்றடிக்கிறது. தி.ஜா. புனைந்த முதன்மை மாந்தர்களில், ஒரு பொருத்தமான இணையைக்கூடத் (செம்பருத்தியின் சட்டநாதன் – புவனா உறவுகூட மீறல் நினைவில்லாத உறவுதானே தவிரக் காதலின் சம்பூரணமான நிறைவன்று!), தி.ஜா.வின் எந்த நாவலிலுமே காண்பதற்கில்லை!

சில நேரங்களில் சில சொற்கள், எப்படியோ (slip of the tongue) தவறிவிழுந்துவிடுகின்றன. ஆழ்மன நினைவிலிப் புதைவிலிருந்து முளைப்பவையாக, இவற்றை ஃப்ராய்டு வகுக்கிறார். “பொண்ணா!” –  என்று இழுக்கிறார் ராமையா. இந்த இழுப்பு, அதன் உடனடி எதிர்வினையை இழுத்து வருகிறது. “பொண்ணான்னு இழுத்தாப்பல இருக்கே…. பொண்ணாயிருந்தா என்ன? நம்ம சொர்ணக்கா மகனுக்குக் கொடுத்துடறது” என்கிறாள் அகிலாண்டம். ராமையா மட்டும் இழுக்காதிருந்திருந்தால்? மறுபடியும் ஓர் ஆல். இந்த ஆல்தான், இக்கதையின் நாயகமாகிறது. பாதத்தின் பின்னெலும்பை எடுத்துக்காட்டுகிற ஒரு பின்னல் கொலுசுக்காரி என்றும், வாழைத்தண்டின் உட்குருத்தைப் போன்ற மெல்லிய உடலாள் என்றும் ராமையாவால் அகிலாண்டம் ரசிக்கப்படுகிறாள். குறுக்கே ஆற்றைப்போல நின்ற வயது வித்தியாசத்தை ஒரு பார்வையால், ஒரு நாணச் சிவப்பால் கடந்துவிட்ட (அசாத்திய எடுப்பாயிருந்த) அகிலாண்டத்தின் சொற்களைக் கேட்காதிருப்பதெப்படி? “சொர்ணக்கா மகனுக்குத்தானே! செஞ்சிடறது” என்கிறார் ராமையா. “பொறந்த பூச்சி இன்னும் கண்ணே திறக்கலே. அதுக்குள்ளியும் கலியாணமே நிச்சயம் பண்ணீட்டியே” என்கிறாள் வடிவக்கா. இந்த முதல்நாள் பால்ய விவாக நிச்சயம்தான், இந்நாவலின் மையவிசை.

யாரைப் பற்றி யார் யாருக்கு வாக்குக் கொடுப்பது? நம்மைப் பற்றியே நாம் வாக்குக் கொடுப்பதற்கில்லை என்னும்போது, ஒரு குழந்தை பூமியில் விழுந்த மறுநொடியே அதன் கல்யாணத்திற்காகத் தந்தை எவ்வாறு வாக்களிக்கவியலும்? இதென்ன புதுசா? இப்படித்தானே இங்கே காலங்காலமாகப் பெற்றோராலும் பெரியோராலும் கல்யாணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன, இதில் என்ன ஆச்சரியம் என்கிறாரோ தி.ஜா.! “கல்யாணம் பண்ணிக்கறதையே ஒரு மனுஷன் தொழிலா வச்சுக்க முடியுமா?” எனப் புத்தியோடு கேட்டாலும், மண்வெட்டியால் தரிசாய்க் கிடக்கும் மீனாட்சிக்கொல்லையைக் கொத்திக் கொத்தி மனசைக் கட்டியமுக்கத் திட்டமிட்டாலும், அவர் உயிரை வைத்திருப்பது இந்த ஒரு சொல்லைக் காப்பாற்றத்தான் என்ற எல்லைக்கோட்டு நிலைக்கு ராமையா நகர்வதேன்? “இத்தனை துக்கிரியா நீ? இப்படித் தெய்வம் தண்டிக்கும்படியா அத்தனை பாவம் செய்தவனா?” என்ற ஊராரின் இடித்துக்காட்டலிலிருந்து மீளத்தான் போலும்!

ஊருக்கெல்லாம் ஜாதகம் கணிப்பவர், தன் மகளுக்கு மட்டும் ஜாதகம் கணிக்க மறுக்கிறார். தன் குரு மஞ்சக்குடி வேலய்யாவே வந்து பாலியைப் பெண் கேட்கும்போதும், “ஆண்டவன் என்ன நினைச்சாலும் சரி, இதிலே என் இஷ்டம்தான் நடக்கப் போகுது” என்கிறார். அப்படியும் விடாமல் வேலய்யா வற்புறுத்தவே, அவர் மகனின் ஜாதகத்தைக் கையிலிருந்து பிடுங்கி சுக்குநூறாகக் கிழித்தெறிவதுடன், அவரைப் பிடித்துக் குளத்தில் தள்ளியும் விடுகிறார். “எனக்கு ஒருத்தர் மேலயும் கோபம் இல்லே. சாமி மேலதான் கோபம்’ என்கிறார் வேலய்யா. கொள்ளி போடும் பிள்ளை வாரிசுக்காகத் தத்தெடுக்கச் சொல்கிறான் வையன்னா. பெண்ணின்பத்தைக்கூட ஏமாற்றி வாங்கும் அற்பன் அவன். “ஏண்டா, அப்படியெல்லாமா அசைச்சிட முடியும்னு பாக்கறே? என்னையா! என்னையா! பாக்கறியா?” என்று கறுவுகிறார் ராமையா. “நீ வையன்னா மாதிரி வா. வேலய்யா மாதிரி வா. இது உனக்குக் கொடுத்த சொல்லில்லே. அகிலாண்டத்துக்குக் கொடுத்த சொல்லு” எனச் சந்நிதியில் நின்று சாமிக்கே சவால் விடுகிறார்.

தனபாக்கியத்திற்கு ஆதரவாகவும் வையன்னாவுக்கு எதிராகவும் கோர்ட் கூண்டிலேறிச் சத்தியத்தைச் சொன்னதற்காக, ராமையாவின் சொந்த உழைப்பால் உருவான மீனாட்சிக்கொல்லையை ஒரே நாளிரவில் வையன்னா துவம்சம் செய்துவிடுகிறான். நூறு எருமைக்கடா புகுந்து மிதித்தது போலிருக்கும் மீனாட்சிக்கொல்லையின் சிதைவைச் செகாவின் கதையில் வரும் செர்ரித் தோட்டத்தின் நாசத்தோடு ஒப்பிட்டுள்ளார் க.கைலாசபதி. ஆலையில்லா ஊரின் இலுப்பைப்பூவில்லை தி.ஜா. என்பதற்கான ஒரு கூரிய விமர்சன மதிப்பீடாக, இதைக் கொள்ளலாம். இவ்வளவு முழுமையுடன் அழிப்பதற்கு மனிதனால்தான் முடியும் எனச் சிரிக்கும் ராமையா, “இவ்வளவு பலஹீனமான சோப்ளாங்கி மனதா ஒருவனுக்கு இருக்கும்?” எனப் பேரழிவைக் கடந்தெழுந்து, ராஜங்காடே வேண்டாம் எனப் பூர்வீகத்தை உதறிவிட்டுத் தஞ்சாவூருக்கு குடிபெயர்ந்துவிடுகிறார். பின் கல்லூரிப் படிப்புக்காகத் தஞ்சையிலிருந்து சென்னைக்குப் பாலி பயணமாவதையும் கணக்கில் கொண்டால், இதை ஒரு மேல்நிலையாக்கத்தின் சூசகக் குறிப்பாகவும் வாசிக்கலாம். இத்தகைய சூசகங்களைக் காவிய மரபை ஒட்டித் தம் எல்லாப் படைப்புகளிலும் தி.ஜா. கையாண்டுள்ளதால், அத்தகைய வாசிப்புக்கு இங்கும் இடமுளது.

இந்நாவலில் சில கேள்விகளும் மௌனங்களும் இடைவெளிகளும் அப்படியப்படியே விடப்பட்டுள்ளன. சொர்ணத்தின் மகனுக்குத் தன் மகளைக் கொடுக்கச் சொல்லிவிட்டுச் சாகுமளவிற்குச் சொர்ணத்துக்கும் அகிலத்துக்கும் அப்படி என்ன நட்பிருந்தது?  ஜகதுவின் மகனுக்கு ஏன் கொடுக்கச் சொல்லவில்லை? தன் கணவனின் வைராக்கியத்தை நன்கறிந்திருந்தும், பிறந்த குழந்தைக்குச் சாகிற போக்கில் ஒரு கல்யாணத்தை ஏன் அகிலம் நிச்சயிக்க வேண்டும்?  அப்பாவையும் அம்மாவையும் ராமையா நினைப்பதாகக் குறிப்பேயில்லை. ராமையாவின் மனைவிகள் வீட்டுச் சொந்தமாக ஒருவரும் காட்டப்படுவதில்லை. நாலுநாள் ராமையாவும் பாலியும் ஜகது வீட்டில் தங்கும்போதும், அவள் குழந்தைகள் பற்றிச் சிறுசொல்கூடப் பகிரப்படுவதில்லை. மாமியார் சொர்ணத்துக்கும் மருமகள் பாலிக்கும் சௌஜன்யமான ஓர் உரையாடல்கூட நிகழ்வதில்லை. கல்யாணம் பண்ணிக் கொடுத்துவிட்ட மகள் பற்றி நாயக்கர் பேசுவதேயில்லை. இவற்றையெல்லாம்விட ராஜாவின் பெற்றோர் யார், அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதற்கும் விளக்கமில்லை. இத்தகைய விவரங்களைச் சாதாரணமாகத் தி.ஜா. சொல்லாதிருப்பதில்லை. கிட்டன், கோவிந்து, நாகம்மா, காவேரி, பெரியநாயகி, சுப்பிரமணியன் தாயார், ரத்தினம், நளினி, வஜ்ரவேலு, தாடியர்ச்சகர், ரெட்டிப்பாளையம் ரோஜாப்பூக்காரி, மோகன ராகத்தில் பாடும் பிச்சைக்காரி, கேதாரம் எனச் சிறு சிறு பாத்திரங்களுக்கும் உரிய முக்கியத்துவமிருக்கும் ஒரு நாவலில், மேற்கண்ட விடுபாடுகளை யதேச்சையாகக் கொள்வதா அல்லது தெரிந்தே இவை செய்யப்பட்டுள்ளனவா என்பதை வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

‘நம்ம நாட்டுப் பழைய தத்துவமெல்லாம் உடம்பெடுத்து வந்தாற்போல் வாழ்ந்து காட்டும் மகான் ராமையா’ கும்பிடும் அதே வைதீச்வரன் பெயரில்தான் அவரது எதிரியுமிருக்கிறான். அப்படியானால், அந்தத் தெய்வமே, மீண்டும் மீண்டும் ராமையாவைத் தேடிவந்து, முன்வினைப்பழி தீர்க்கிறதா? என, ஆஸ்திகர்கள் யோசிக்கலாம். நாஸ்திகர்கள், “அவன் எனக்கு இடைஞ்சல் பண்ணனும்னு நெனச்சா – நான் ஏன் அவனைப் பத்திக் கவலைப்படணும்? அட! அவனே படைச்சிருக்கட்டும் – … கண்ணு கலங்கும்படியா  அவனே பண்ணினானோ, எனக்குக் கெட்ட கோபம் வந்திரும்….. பாத்திருவமே யார் கை ஓங்குதுன்னு” எனக் கடவுளைச் சீறும் நாயக்கரோடு சேர்ந்துகொள்ளலாம். அனைத்துத் தரப்பு நியாயங்களையும் அவற்றின் எல்லைவரை இழுத்துப் பார்க்கும் பிரதியாய்த் தி.ஜா. மலர்மஞ்சத்தைப் புனைந்துள்ளதால்தான், அறுபதாண்டுக்குப் பிறகும் அது உயிர்ப்போடுள்ளது.

தஞ்சைக்கு வந்த பின்தான் பாலி பள்ளிக்கூடத்தில் சேர்கிறாள். காபி குடிக்கத் தொடங்குகிறாள். நடனம் கற்கிறாள். கோணவாய் நாயக்கரிடமும் வக்கீலிடமும் பாசத்தோடு பழகுகிறாள். இங்கேதான் ராஜாவைச் சந்திக்கிறாள். பின் இங்கிருந்துதான் சென்னைக்கும் போகிறாள். பட்டண வாழ்வைக் “கண்ணாடி வீட்டில் குடியிருப்பதுபோல் ஒரு வாழ்க்கை” எனப் பாலி நினைக்கும்போது, மேல்நிலையாக்கம் பற்றிய விழிப்பு,  அவளறியாமலேயே அவளுக்குள்ளும் ஓடக் காண்கிறோம். ராஜங்காட்டிலிருந்து வெளியேறிவிட்டால் தன் வாக்கை நிறைவேற்றுவதற்குச் சிக்கலிராது என்று ராமையா நினைத்ததற்கு மாறாகப் புறத்திலிருந்த எதிர்ப்பு, இப்போது அவர் வீட்டுக்குள்ளேயும் வந்துவிடுகிறது. ராஜங்காட்டு முரட்டுத் தங்கராஜனைத் தஞ்சாவூர் துடுக்கு ராஜாவோடு ஒப்பிடும் தர்மசங்கடம் முதல்நாளிலேயே பாலியின் நெஞ்சேறி அமட்டுகிறது.  ஆனால், ராஜங்காட்டில் அவள் எப்படியிருந்தாள்? வடிவத்தை கொடுப்பதை மறுப்பவள், சொர்ணக்காவைக் கண்டவுடன், ஒரே மூச்சில் ஒரு டம்ளர் விளக்கெண்ணெய் முழுவதையும் குடிக்கிறாள். “மாமியா சொல்லுக்குக் கூடவா நடக்காது?” எனச் சிரிக்கிறாள் வடிவு. இந்தச் சின்ன சமையலறை அனுபவம், ராமையாவை மட்டுமா, வாசகர்களையும் சேர்த்தே உலுக்குகிறது! “சும்மா நிக்காதே பாலி – நாலஞ்சு தடவை குதி” என்ற சொர்ணக்கா அதட்டலுக்காகப் பல தடவை தாழ்வாரத்தில் ஏறி ஏறிக் கீழே குதிக்கிறாள் பாலி. வீடு கூட்டும் வெள்ளச்சி, “இக்கினியூண்டு வாண்டுக்குக் கூடல்ல தெரிஞ்சிருக்கு. மாமியா சொன்னா கேட்கிணும்னு” எனக் காவிப்பல் தெரியப் பிரமிக்கிறாள்.ராஜங்காட்டிலிருந்து தஞ்சாவூருக்கு மாட்டு வண்டியில் வரும்போது, சாலைக் குலுக்கலில் பாலிக்குத் தலையிடிக்கிறது.  தன் மடிக்குப் பாலியைக் கூப்பிடுகிறான் சின்னக்கண்ணு. “வாண்டாம். இப்படியே இருக்கேன்” என்கிறாள். “மாமனாருல்ல?” எனச் சுப்ரமண்யன் சொல்ல, “அவரு மவன் வந்திருந்தா வண்டியிலே வரமாட்ட போலிருக்கே” என்கிறாள் வடிவு. நெஞ்சு பூரிக்கிறார் ராமையா. இப்படிக் கட்டுண்டிருந்த பாலி, தஞ்சையில் ராஜாவைப் பார்த்த அந்த முதல் நாளிலேயே கட்டவிழ்ந்துவிடுகிறாள்.

ஆறு வயதுச் சிறுமிக்கும் பன்னிரண்டு வயதுப் பையனுக்குமான முதல் சந்திப்பே அதுதான். “இது யாரு கருப்பண்ணசாமி?… அட்டைக்கரி. கொழச்சு சாந்து இட்டுக்கலாம்போல… யாரு இது?” என்கிறான் ராஜா. “எங்க ஊர்லேர்ந்து வந்திருக்காரு” என்கிறாள் பாலி. தங்கராஜனுக்கு முகம் சுண்டுகிறது. மாடியிலிருந்து கீழே இறங்கிவிடுகிறான். “பாத்தியா? உன்னாலேதான் அவன் கீழே போய்விட்டான்” என்கிறாள் பாலி. “இப்ப வந்து போய்ட்டான்கிறியே. அப்ப மாத்திரம் அவர் இவர்னியே” எனத் திருப்புகிறான் ராஜா. இந்தச் சிறிய உரையாடலுக்குள், சொல்லியும் சொல்லாமலும் எவ்வளவோ நுட்பங்களைத் தி.ஜா. கூட்டிவிட்டார்! தங்கம் கறுப்பு; ராஜா சிவப்பு. அவன் அமைதி; இவன் துறுதுறுப்பு. அவன் கிராமம்; இவன் நகரம். அவன் ஆழம்; இவன் நுட்பம். அவன் வன்மை; இவன் மென்மை. சங்கீதத்தைச் சட்டையே செய்யாதவன் அவன்; பாட்டையும் நடனத்தையும் ரசிப்பவன் இவன்;  அப்பா மாப்பிள்ளையான அவன் கண்ணாடி; மகளின் காதலனான இவன் வைரம். ஏர் பிடிக்கும் வெள்ளாளன் அவன்; குறுக்கே டவாலி போட்ட பார்ப்பனன் இவன். அந்தாண்ட இருப்பவன் அவன்; இந்தாண்ட வந்துவிட்டவன் இவன்! இந்த வேறுபாடுகள் பாலிக்கு மட்டுமா புலப்படுகின்றன?  நாயக்கர், வக்கீல், பெரியசாமி, செல்லம் என ராமையா தவிரப் பிறர் யாவருக்குமே தெரியத்தானே செய்கின்றன?

பாலி தங்கராஜன் கண்களைப் பார்க்கிறாள். அவளுக்கு ‘நீர் மிதக்கும் கண்கள்’ தெரிகின்றன. இரண்டிடங்களில், இவ்வர்ணிப்பைப் பாலி செய்கிறாள். (இதே தலைப்பில், கவிதைத் தொகுப்பு வெளியிட்ட பெருமாள்முருகன், தி.ஜா.வுக்கு ராயல்டி கொடுக்கவேண்டும்!) ஆனால், ராஜாவுக்கு மட்டுமில்லை, தங்கராஜனுக்கும் ஏதோ தெரிந்துதானிருக்கிறது. “ராஜா தாத்தா உன்னைப் படிக்கணும்கறாரு. ராஜா என்ன சொல்றான்னு தெரிஞ்சுக்க வாணாமா?” என்கிறான் தங்கராஜன். “ராஜாவை எதற்குக் கேட்கவேண்டும்? ராஜாவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” இக்கேள்விகள் தளிர்விட்டு வளர்ந்து மரமாகக் காய்க்கின்றன பாலியின் நெஞ்சில். எனினும், செல்லத்தின் முரட்டுக் குறுக்கீடு நேரும் வரையில், “எனக்குத்தான் பிறந்த அன்னிக்கே மாப்பிள்ளை வந்திட்டாரே!” எனப் பாலி திடப்படுகிறாள். கண்ணுக்குப் புலப்படாத நிழல், அப்போது அவள் மனத்துக்கும் அகப்படவில்லை! தங்கராஜனைப் பார்க்கும் சில சமயங்களில், மயிர்க்காம்பெல்லாம் பாலிக்குச் சிலிர்ப்பதுண்டு. ஆனால், ராஜாவைப் பார்த்ததும், கல்யாணமுருங்கை பூத்தாற்போல் பாலியின் முகம் சிவப்பதைச் செல்லம் கண்டுபிடித்துவிடுகிறாள். அவளேதான், தங்கராஜனின் கடிதத்தைப் பாலி படிக்கும்போதும், “தேன் குடித்த நரி மாதிரியிருக்கே மூஞ்சி” என்கிறாள். “ரண்டும் ரண்டு தினுசு” என்கிறாள் பாலி. பட்டுச்சால்வையைப் போட்டுக்கொள்வதுபோல் அவ்வளவு உசந்தவன் தங்கம்; இருதயத்தில் குப்பலாகத் தாமரை மொட்டுகளைப் போட்டடைக்கிறவன் ராஜா. உப்புக் காகிதம் தங்கம்; விரட்டினாலும் வெளிப்போகாதவன் இவன். “என் தாய் தந்தையிடமிருந்து மட்டும் விசாரிப்புகள் வந்தால் எனக்குப் போதவில்லை” என்கிறான் தங்கம். “பாலி நான் செத்தாலும் உன்னை மறந்திட மாட்டேன்” என்கிறான் ராஜா. “ரண்டு பேரும் இப்படி அங்கே உட்கார்ந்திருக்காங்களோ ஒருசமயம்!…  எங்கியாவது நடக்குமா அது? ரண்டு பேர் ஒருத்தி மனசிலே சேந்தாப்பல உட்கார முடியுமா?” எனச் செல்லத்திடம்  அகந்திறக்கிறாள்.

தன் நடனக் குருவான பெரியசாமியிடமும், “மாமா, நான் இப்ப இருக்கிறபடி பார்த்தா, எனக்கு ரண்டு பேர் புருஷர்களாக இருக்க முடியும்” என, உண்மை பேசுகிறாள் பாலி. “இவனுக்கு நம் மேலே ஆசை ஜாஸ்தியா அவனுக்கு ஜாஸ்தியான்னு  உட்கார்ந்து அழுதுகிட்டிருந்தா காரியம் கெட்டுப் போயிடும்….. ஒன்னு முழுக்கட்டுப்பாட்டோட இருக்கணும். இல்லே கட்டெல்லாம் அறுத்து எறிஞ்சுபிட்டு இஷ்டப்படி இருக்கணும். நடுவாந்திரமா இருக்கிறதெல்லாம் சாத்தியமில்லே” என்கிறார் பெரியசாமி. இதைப் பாலி அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. “அப்படியா? நடுநெறியே கிடையாதா? அவர் சொன்னதில் சிறிது சூடுகூட இருந்தது…. ஒருசமயம் – அவருக்கே  பெரியசாமி என்று பெயர் – அவர் தாயார் காமகோடி பரதத்தில் பிரசித்தையாக இருந்தவள். அவருக்குத் தாயார் பெயர்தான் தெரியும். அந்த ஆத்திரமா?” என்றே பாலி யோசிக்கிறாள்! இவ்வளவையும் தூண்டிவிட்டவள் செல்லம்தான். சிறுவயதிலேயே குறைப்பட்ட தன் வைதவ்யத்திலிருந்து அவள் பெற்ற விசாலமான வாழ்வனுபவ ஞானம்,  பாலிக்கும் உதவுகிறது. “நாமெல்லாம் வெள்ளத்திலே போகிற  எறும்பு மாதிரி, வெள்ளம் அடிச்சிட்டே போறவங்க. ஆனாலும் தப்பிச்சுக்கணும்னு கையைக் காலை உதைச்சுக்கிட்டே இருக்கோம்‌. நாம நினைச்ச மாதிரிப் போயிடலேயே தவிர எங்கியாவது கரையிலே ஒதிங்கினப்புறம் பழைய இடத்தை நோக்கித் தரையிலியாவது போவோம்” எனத் தத்துவம் பேசுகிறான் தங்கம். “பாலி, நான் உனக்காகத் தெய்வங்களையெல்லாம் பிரார்த்திச்சிண்டேயிருக்கேன்… எது எப்படி நடக்கப்போறதோ?…. ஆனா செத்து மடியறவரைக்கும் தனியா நின்னுக் காத்திண்டிருப்பேனே ஒழிய, இந்த மாதிரி மாத்து வழிக்கெல்லாம் படிஞ்சுட மாட்டேன்” எனக் காதலாய்க் கசிகிறான் ராஜா. “இந்த மாதிரி ஒருத்தன் பிரியம் வைக்கும்படியாயிருக்கிறதே ஒரு பெரிய பாக்கியம். உலகத்திலே இதையெல்லாம் அதிகமாகப் பார்க்க முடியாது. வாய்க்குக் கொண்டுபோறதுக்குள்ளே கையைத் தட்டிவிடுகிறதோ, கைதவறிவிடறதோதான் அதிகம்” என்கிறாள் செல்லம். செல்லத்தின் விளையாட்டுக் குறும்பெல்லாம் பொறுத்து, அவளிடம் பாலி மெய் பேசுகிறாள். “நீ சொன்னதுதான் சரி….. மனசிலேர்ந்து அவனை அடிச்சு விரட்டணும்னுதான் பாக்கறேன், முடியலெ.. பத்து வருஷமா நான் பழகறேன்‌. அவன் ஒரு நாளைக்கு வராட்டா, சூன்யம் பிடிச்சாப்பலதான் ஆயிடுது…… செல்லம், எனக்கே இப்பதான் புரியறாப்பல இருக்கு….” என்கிறாள் பாலி. இங்கே செல்லம் ஒரு கண்ணாடிபோலத்தான்; கடற்கரை மணலில் அமர்ந்து பாலாய்ப் பொழியும் ராஜாவின் ஆத்மார்த்தமே,   பாலியின் நெஞ்சடைப்பைத் திறந்துவிடுகிறது. இதன் ஊற்றுக்கண், தி.ஜா.வின் ‘தீர்மானம்’ சிறுகதையிலிருக்கிறது.

திருமணத்தின்போது ராஜாவின் அப்பாவுக்குப் பதினெட்டு வயசு; அம்மாவுக்குப் பதினொரு வயசு. “என் குழந்தை பார்வதி மாதிரி பண்ணின தபஸ் வீணாப் போயிடலே மாமா. ஏழு வயசிலேந்து அப்படி ஒரு ஆசையை ஏத்தி வச்சிண்டு எந்தத் தெய்வத்துக்கெல்லாம் பூஜை போட்டுதோ அது” எனச் சிறுமியின் பிரேமை பீடமேற்றப்படுகிறது. இதிலிருந்து சிறிது வேறுபட்டுத் ‘தீர்மானத்தில்’, ஏழு வயசிலேயே திருமாங்கல்யம் கழுத்திலேறிவிட்ட ஒரு சிறுமியின் கதை கூறப்படுகிறது. தீர்மானத்தில் வரும் சிறுமி விசாலிக்குக் கல்யாணமாகி நான்கு வருஷமாகிறது. தந்தை வீட்டில்தான் இருக்கிறாள் குழந்தை. கணவன் அனுப்பித் தன்னைத் தேடி வரும் பெரிய மச்சினன், சிறிய மாமனார், பெரிய மாமனாரின் உறவுப்பெயர்களைக் கூறவும் வெட்கப்படுகிறாள் விசாலி. “அவாள்ளாம் வந்திருக்கா” என்கிறாள். “குழந்தே…  நீலகண்டன், இப்ப கையோடு உன்னை அழைச்சிண்டு வரச் சொன்னான்…… என்ன சொல்றே?……… கொண்டுவிடுன்னு கடுதாசி போட்டானாம். பதில் போடலியாமே உங்கப்பா?… கலியாணத்துலேதான் உங்கப்பா நன்னாச் செய்யலே… இளையாளா கொடுக்கிறதுக்கு இது போறும்னு நெனச்சிப்பிட்டார் போலிருக்கு. இளையாள்னா கிழவனா அவன்? வயசு இருபத்தாறுதானே ஆறது?…….. உங்கப்பா சாதாரண மரியாதைகூடக் காண்பிக்க மாட்டேங்கறாரே…… ‘வரயா இல்லையா’ன்னு கேளுங்கோ. வந்தா அழைச்சுண்டு வந்துடுங்கோன்னான்” என்கிறார் பெரிய மாமனார். “அதுக்கு என்ன தெரியும்? பச்சைக்குழந்தை அவ!” எனப் புகைகிறாள் அத்தை. ஆனால், “நான் போயிட்டு வரேன் அத்தை” எனக் குழந்தை கிளம்பிவிடுகிறது. “என்ன தீர்மானம் இதுக்கு? அவாதான் தம் மனுஷான்னு யார் சொல்லிக் கொடுத்தா இதுக்கு?” என்ற வியப்புதான், இங்குக் கதையாகிறது. “அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள்கொல்!” எனச் செவிலித்தாய் நற்றிணையில் வியக்கிறாளே, அந்த வியப்பே இத்தீர்மானமும். (தமிழ் மரபு அறியாதவரல்லர் தி.ஜா.!).

“உலகத் தாயைக் கண்ட மோனத்தில் அந்த உள்ளங்கள் ஒடுங்கிக் கிடந்தன” என்றெழுதுகிறார். இதே பிரமிப்பைத்தான், தன் தாயின் காதலிலும் கண்டு, ராஜா மயர்கிறான். சூழலும் பல சம்பவங்களும் வேறுபட்டிருந்தாலும்கூடப் பத்துப் பதினோரு வயதுப் பெண் குழந்தைகளின் ஒரே க்ஷணத் தீர்மானம்தான் இவ்விரண்டு கதைகளையும் இணைக்கும் முடிச்சாகும். இத்தகைய க்ஷணத் தீர்மானம்தான், ஆறு வயதுப் பாலியிடம் பன்னிரண்டு வயது ராஜாவுக்கு நேர்வதுமாகும். “நீ எங்க வீட்டுக்கு முத முதல்லே வந்து இத்துனூண்டு பொண்ணா நின்னு ஆடின பாரு, அதுல இருந்து எனக்கு ஒன்னொன்னும் நினைவிருக்கு. அந்தச் சின்ன வயசுல கல்யாணம் பண்ணனும்னு எண்ணமெல்லாம் வருமா என்று நீ நினைக்கலாம். வரும் வரும். எங்கம்மாவுக்கு அப்படித்தான் நடந்தது…… ஒருதடவை அப்பாவைப் பார்த்ததுதானாம் அம்மா…… ஆமாம் பாலி. எனக்கு அனுபவிக்க முடியறது… நானும் அதேபோலப் பன்னண்டு பதிமூணு வயசிலேர்ந்து தபஸ் பண்ணின்டிருக்கேன்” என்கிறான் ராஜா. “அப்பா! கேட்கறபோதே கங்கையிலே குளிக்கறாப்போல இருக்கு. நீங்களும் எத்தனை அனுபவிச்சு அதைச் சொல்றீங்க” என்கிறாள் பாலி. இதுதான் தங்கராஜனைத் தாண்டிப் பாலிக்குள் ராஜா புகுந்து நிலைத்த இடம். இதன் நுண்மை ராமையாவுக்கும் புரிந்தேயிருக்கிறது. அதனால்தான் அவர், “எதுவும் கேட்டால்தான் கிடைக்கும். அவள் குழந்தை.  ஒரு வார்த்தை சொன்னால்தான் நல்லது. நாங்கள் நிச்சயம் பண்ணியிருக்கிறதென்னவோ உண்மைதான். அதுக்காக, ‘அதுங்கிட்டேயும்’ மனசிலே இருக்கிறதைச் சொல்லத்தான் வேணும். இந்த நாள் பெண்ணுங்க… அதுவும், நாலு எழுத்துப் படிக்கிறது. அப்படித்தான் இருக்கும்” என்கிறார் தங்கராஜனிடம்.

ஏன்? மிகவிரிந்த மனத்துடன், “என்னைத் தவிர எல்லோரும் நல்லவர்களாகத்தானே இருக்கிறார்கள்!” என்றும் கண்டுகொள்கிறார். ஆனால், ராமையா வேறு ஆள். “‘சத்தியமாகச் சொல்றேன்’ என்ற வார்த்தைகளை எத்தனை பேர் எவ்வளவு சாதாரணமாகச் சொல்கிறார்கள்! சாப்பிடுகிறேன், வருகிறேன் என்றெல்லாம் சொல்வதுபோல எவ்வளவு அலட்சியமாக, எவ்வளவு கவலையில்லாமல் சொல்கிறார்கள்!” என வியப்பவர் அவர். அப்படிப்பட்டவரும் சாதாரண மனிதர்கள் அகப்பட்டுக்கொள்ளும் நியாய அநியாயச் சிக்கலில் விழுந்து விடுகிறாரே எனத் தி.ஜா. குமைகிறார். இது வையன்னா விஷயத்தில் மட்டுமா? பாலி விஷயத்திலும் தானே! ” ட்யேயப்பா… அப்படி ஒரு புத்தி…. அப்படி ஒரு அறிவு….. உன் மக என் மகளாயிருந்தா சீமைக்கு அனுப்பியிருப்பேன்…… இந்த உலகத்தையே ஜெயிச்சுப்பிடுவாடா இவ” என்கிறார் நாயக்கர். சத்தியபாமாவாகவும் கிருஷ்ணனாகவும் நரகாசுரனாகவும் வேடமிட்டாடும் பாலியைப் பார்த்து, “நம்ம குழந்தைன்னா!”  என்று தான்தான் முதலில் கண்டுபிடித்துவிட்டதுபோலக் கத்துகிறார். எத்தனை சுற்றிவளைத்தாலும் இந்த இடத்தை எதிர்கொண்டுதானாகவேண்டும். “சேச்சே! என்னடா ராமையா இப்படி என்னத்தையோ செஞ்சிப்பிட்டு நிக்கிறானேன்னு எனக்குப் பகீர்னுது” என்கிறார் நாயக்கர். இதை முன்யூகித்துத்தான் பெரியசாமி மூலம் பாலிக்கு நடனம் சொல்லிவைக்கிறார் போலும் வக்கீல்! எதில் ருசியிருக்கிறதோ அதற்கு மனசு உயிர் உடல் சர்வத்தையும் அர்ப்பணம் செய்யவேண்டும்; அழகு சாதாரணமாகக் கிடைத்துவிடாது; முடிவான அழகு கிடையாது; அதுக்கு எல்லையே தெரியாது; உழைக்க உழைக்க அழகு பெருகிக்  கொண்டேயிருக்கும் என்கிறார் வக்கீல். “இந்தக் குழந்தைக்குச் சுற்றியிருப்பதை மறந்து ஒரு காரியத்தில் பிரவேசிக்கிற கூர்மையிருக்கும் என்று தோன்றுகிறது; அது போகிறபடி விடுங்கள்” என்கிறார். “இந்தக் குழந்தைக்குத் தாயார் இருந்தால், எவ்வளவு சந்தோஷமாயிருக்கும்? பகவான் ஒரு பித்துப் பிடித்த சில்பி. எதைச் செஞ்சாலும் கடைசியிலே ஒரு குறையை வச்சிருப்பான்” எனப் பிரச்சனையின் அடிமடியைப் பிடித்துவிடுகிறார் வக்கீல். “இதெல்லாம் அவ இஷ்டம். உம் இஷ்டமோ, என்னிஷ்டமோ, அவன் இஷ்டமோ இல்லை, தெரிஞ்சுதா?” எனப் பாலியின் கல்வியைச் சாக்கிட்டு வக்கீல் கேட்பது, ராமையாவுக்கா தெரியாமலிருக்கும்? எனினும், வக்கீல் சொல்லுக்குக் கட்டுப்பட்டுப் பாலி போகிறபடி விட்டுவிட ராமையாவால் எப்படி முடியும்? இது வேறெவரையும்விடப் பெரியசாமிக்கே அர்த்தமாகிறது. “படிக்கிறது, ஆடறது, பேசறது, பாடறது ஒன்னுக்கும் கடசீலே பிரயோஜனம் கிடையாது. அந்தந்தக் காரியத்தைச் செய்யறதுதான் பிரயோஜனம். செய்யறதுதான் சந்தோஷம்…. போய்ப் பத்துப் பேருக்கு நடுவிலே ஆடணுமா என்ன? வீட்டுக்குள்ர சாமி கதவைத் திறந்து வச்சிட்டுத் தனியா ஆடினாலே போதும். என்னைக் கேட்டா ஆடக்கூட வேண்டாம். ஆடறாப்பல நெனச்சிட்டிருந்தாலே போதும்” என்கிறார் பெரியசாமி. இதன் மறுதரப்பைச் செல்லம் பேசுகிறாள். என்றாலும், பெரியசாமி சொல்கிறபடிதான், இறுதியில் நடக்கிறது.

பாலியின் நடனத்தைச் சமூகம் எவ்வாறு எதிர்கொள்கிறது? “தேவடியான்னு அதுக்குத்தானே இருக்காங்க – ஆனா,  அவங்கள்ளாம்விட நல்லா ஆடுவியாமே…!” என்கிறாள் வேம்பம்மாள். பாலி கோயிலுக்குப் போகும்போது, “இதப் பார்றா, தேவிடியா போறா” என்கிறான் ஒரு பையன். “கூத்தாடிச்சி வந்து தங்கற வீடா, இந்த ஊரு? யாரைக் கேட்டுக்கிட்டு இப்படிச் சந்தியிலே ஆட வச்சையா?” என்கிறான் வையன்னா. பிறந்த நாள் முதல் பிறரைப் புண்படுத்துவதையே கலையாய்ப் பயின்றிருக்கும் இவனை ராமையாவின் நேர் எதிர் மாதிரியாய்த் தி.ஜா. புனைந்துள்ளார். தி.ஜா. படைத்தவர்களிலேயே இவன் ஒருவனைத்தான் மிகக் கெட்டவனாகச் சொல்ல முடியும். இக்கயவனுக்கு வைத்தியநாதன் (அதன் சுருக்கம்தான் வையன்னா) எனச் சிவன் பெயர் சூட்டியிருக்கும் தி.ஜா.வைத்தான் சிலர் இந்துத்துவர் என்கிறார்கள்! ஆர்.பாலாம்பாள். “ஆர் என்றால்?” – கேட்கிறாள் ஆசிரியை அகல்யா. அவளுக்குத் தாயின் பெயரை இனிஷியலாய்ப் போட்டுக்கொள்ளும் தேவதாசிக் குலத்தில் பிறந்தவளா பாலி என்பது தெரிய வேண்டுமாம்! “யாருக்கும் எதுவும் பிடிக்காம இராது. ஆனா, கட்டிக்கப் போறவ செய்தா பிடிக்காது” எனப் பாலி பேசுகிறாள். இவையெல்லாம் ஒழியட்டும். பொம்பளை  நடராஜாவாகப் பெரியசாமியால் புகழப்படும் பாலி,  நடனம் பற்றி என்ன நினைக்கிறாள்? அப்பெருஞ்சொத்திற்கு முன்னும், நடனமிட்ட சண்டியின் பாதத்தினின்று தெறிக்கும் குங்குமப்பொடிகளாய்த் தோற்றமளிக்கும் அகண்ட இயற்கையின் மௌனத்திற்கு முன்னும் ஆனந்தச் சொரூபியாகிறாள். “ஏன் பரம முட்டாளாய், மகா பாமரத்தியாய் இருந்துவிட்டாய்? இது என்ன பயம்? எந்தக் கஷ்டம் வந்தாலென்ன? ஞான சூனியம் படைத்த பொருளை, இப்போது நீ பார்க்கவில்லை?…… ஏன் அற்பங்களின் பின்னால் ஓடினாய் நீ?… இந்தத் தங்கராஜன்கூட யார்? இந்த உங்க அப்பா யார்? எல்லாம் எத்தனையோ தூசிகளில் ஒன்றுதான்” என்ற தெளிவால்தான் பாலி ஆசுவாசப்படுகிறாள்.

நடனமின்றிப் பாலிக்கு உயிர் ஏது? ஆனால், “முடவன் உட்கார்ந்த இடத்திலே தீர்த்த யாத்திரை பண்றதுதான் பெரிசு” எனத் தன் நடனத்தின் மனச் சாதகத்தைப் பாலி நியாயப்படுத்தும்போது, “லோகத்திலே இருக்கற மனுஷாள்ளாம் அப்படித்தான் காரியம் பண்ணிண்டிருக்கா….. இவ இத்தனூண்டு பிஞ்சுப் பருவத்திலே இப்படி நூத்துக் கிழம் மாதிரிச் சொல்றதும் அந்த மாதிரிதான்” எனச் சொற்கத்தியால் குத்துகிறாள் செல்லம். அதாவது, ஆடுவதே நடனத்தின் இயல்பென்கிறாள். தந்தையைப் புரிந்துகொள்வதிலும், கணவனைத் தெரிவு செய்வதிலும், மனப்போரை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் பாலிக்குச் செல்லமே துணையாகிறாள். இந்தச் செல்லம் நுட்பமானவள். பாலியின் ஆழ்மனத்தைத் தோண்டி, அங்கே ராஜாவைப் பார்த்து விடுகிறாள். “என்னைப் பத்தி அடி மனசு வரைக்கும் தெரிஞ்சு, உனக்கு என்ன ஆகணும்? நீ யாரு அதெல்லாம் தெரிஞ்சுக்க?….. நீ இனிமே இதைப் பத்திப் பேசாதே” எனச் செல்லத்தைக் கோபிக்கிறாள் பாலி. தன்னை ஒதுக்கிவிட்டுக் கடற்கரைக்கு  ராஜாவோடு  போய்வருவதற்காகச் செல்லத்தைக் கன்னத்திலறைகிறாள். ஆனால், அதற்கெல்லாம் செல்லம் அஞ்சுவதில்லை. ஆரம்பம் முதல், பாலிக்கு உதவவே, செல்லம் துடிக்கிறாள். யாராலும் மறுக்க முடியாத அடிப்படை உண்மைகளைப் போட்டுடைத்துக் கொண்டேயிருக்கிறாள். “நாம அநேகமா வருத்தத்தைச் சந்தோஷம்னு நெனச்சுக்கிறோம் சந்தோஷத்தை வருத்தம்னு நினைச்சுக்கிறோம்”  – இது அடி வாங்கும்முன் சொல்வது. “அறஞ்சாத்தான் என்ன? நான் திருப்பி அடிக்கப் போறேனா? அந்த வழக்கமேதான் கிடையாதே” – இது பின் சொல்வது. இரண்டினுள்ளும், ஒரு பால்ய விதவையின் சோகமே ஒலிக்கிறது. “உண்மையை ஒப்புக்கறதுதான் கெட்டிக்காரத்தனம்” என்கிறாள் செல்லம். எது உண்மை? “மனுஷங்க எல்லாம் மிருகம் மாதிரி இருக்கணும். யாருக்கும் கட்டுப்பட்டிருக்கக்கூடாது. சோறு போடறது, வளக்கறது – இந்த மாதிரி எல்லாம் பெரியவங்க விலங்கு தயார் பண்ணி, நம்மைக் கட்டிப் போடறாங்க. விஷ ஆவி அடைச்ச அறை மாதிரி இந்த நன்றியிலே கிடந்து தவிக்கிறோம் நாம, இல்லையா?” எனக் கேட்கிறாள் பாலி. இப்படி கேட்டாலும், மிரட்டும் யதார்த்தம், அவளைக் கட்டுப்படுத்தவே செய்கிறது. தங்கராஜனா ராஜாவா என்ற கேள்விக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டிய நிலையில், இறுதியில் தங்கராஜனைப் பாலி ஏன் தேர்வு செய்கிறாள்?

ஹரிச்சந்திரக்கட்டத்தில் கோணவாயரிடம், “குழந்தை மனசுதான் திரும்பிடிச்சே” என்கிறார் ராமையா. “நீ திருப்பினே. இல்லாட்டித் திரும்பிருமா?” என்கிறார் கோணவாயர். நிலைகுலைந்து வெறிக்கும் ராமையாவிடம், “உன் மாதிரியே உலகம் எல்லாம் இருக்குமா? …… சரி, அதுக்கு என்ன இப்ப? உன் மக இன்னும் ஆடிக்கிட்டிருக்கா?” எனக் கேட்கிறார். “வேளை தப்பினாலும் ஆட்டம் தப்பறதில்லே. சாயங்காலம் விளக்கேத்தி வச்சவுடனே ஆரமிச்சுடுது… உடம்பு கிடம்பு சரியில்லாட்டிக்கூட விடறதில்லே” என்கிறார் ராமையா. இங்கு நடனம் என்பது, எதன் பதிலி என்பதை வாசகர்களே யூகித்துக் கொள்ளலாம். அது கிடக்கட்டும். ஏன் துறவியானார் நாயக்கர்? “உன் மனசுக்கு மாறா ஒன்னு நடந்திர விட்டிரமாட்டேன்” எனப் பாலிக்குத் தந்த வாக்குப் பொய்த்ததற்காகத் துறவியாகிறார்! அப்போது பாலி, “பாவம்” என்கிறாள். யார் பாவம்? சாமியாரானவரா? நாள் தவறாது மாலையில்  விளக்கேற்றிவிட்டு,  வீட்டுக்குள் நடனமாடுபவளா? “உன் மக உன்னைவிட வீம்பு பிடிச்சவ. உன் மாப்பிள்ளையை விட்டு ஒரு நிமிஷம் பிரிய மாட்டா. ஆனா, மனசிலே ஒரு படுக்கை போட்டிருக்கே. அது அடிக்கடி தெரியும். அப்படியே தெரியாட்டி, அது இருந்த வடுவாவது இருக்கும். அதுக்கு யாரு என்ன செய்ய முடியும்?” என்கிறார் கோணவாயர். இந்நாவலை வாசித்து முடிக்கும்போது, ஏதும் செய்ய முடியாத ஓர் இசைகேடு, வாசகர் மென்னியை இறுக்குகிறது. நாயக்கர் யார்? ராமையாவுக்கே வாக்களிக்க உரிமை இல்லாதபோது, இவர் வாக்களிப்பதெல்லாம் எவ்வளவு மிகை? ராமையாவாவது தனி ஆள். மகன் மகள் மனைவி இவர்களெல்லாம் நாயக்கருக்கு இருக்கிறார்களே?இப்படிக் கேட்டாலும், புனைவுத் தருக்கம் சொல்லும் பதில் வேறு. தங்கராஜனைப் பாலி மணப்பதை யதார்த்தத்தில் தடுப்பதற்கில்லை என்பதால், தம் எதிர்ப்புணர்வின் குரலாகத் தி.ஜா. நாயக்கரைப் பேச வைக்கிறார்!

தன் காதலைக் கடற்கரையில் ராஜா சொல்லிவிட்ட பிறகு, தங்கராஜனைப் பார்க்கும்போதே பெருகிவரும் பழைய உற்சாகமெல்லாம் பாலிக்கு அணைந்துவிடுகிறது.  இது போதாது என்று, “இப்படி ஏதாவது பாச்சை காட்டி, அவனைத் திருப்பிவிடலாம்னு பார்த்தேன். அவனைத் திருப்பிவிட்டுவிட்டா, உன் மனசும் கொஞ்சநாள் உதைச்சிண்டு பேசாம அடங்கிடும்னுதான் என் எண்ணம். உன் மனசு எப்படி ஆச்சோ… ஆனா அவனை அசைக்க முடியலே. பாறாங்கல்லு மாதிரியிருக்கான் அவன்‌. நீ இல்லாம அவனுக்கு உயிர்கூடத் தங்காது போலிருக்கு” எனச் செல்லம் வேறு, ராஜாவின் ஆத்ம  வைராக்கியத்தைப் பாலிக்குணர்த்துகிறாள். பாலியைவிடச் சரியாக ராஜாவைப் புரிந்துகொண்டவள் அவள். ஏன்? பாலிக்கே புரியாத பாலியைப் புரிந்துகொண்டவளும் செல்லம்தானே! இதன் பின், பாலியின் மனம், எவ்வாறு தங்கராஜனிடம் செல்லும்? “யாரோ சிநேகிதியோடு இருக்கிறாற்போலத்தான் தோன்றுகிறது. அவன் கைதொட்டுத் தூக்கினபோதுகூட விட்டுவிட்டால் தேவலைபோல் இருந்தது, யாரோ தீண்டத்தகாதவன் தீண்டிவிட்டாற்போல” பாலி உணர்வதாகத் தி.ஜா. எழுதுகிறார்.  மேல்நிலையாக்கத்தின் விளைவாகவும் பாலி இப்படி யோசிப்பதாக வாதிடலாம். இந்த உவமை, தொல்காப்பியக் கற்பியலில், ‘மெய் தொட்டுப் பயிறல்’ என்ற தொடருக்கு நச்சினார்க்கினியர் உரையெழுதுகையில், முதலில் தலைநீட்டியதாகும். “புலையன் தீம்பால்போல் அனந்தருள்ளம் உடையள்” தலைவி  என்கிறார் நச்சினார்க்கினியர். (தமிழ் மரபு அறியாதவரல்லர் தி.ஜா.!). ஆண் – பெண் உறவுச் சிக்கல்களைத் தஞ்சை நிலவுடைமை வாழ்வுப் பின்புலத்தில் வைத்துப் பரிசீலிக்கும் தி.ஜா.வின் புனைவெழுத்தில், இந்த உவமை யதேச்சையானதன்று. இது மண் முகம் காட்டுவதோடு, பாலியின் அகமும் காட்டுவதாகும்.இந்த மேட்டிமை இழிவைக் கலையால் மீற முடியும் என்ற ஒளியை, “நம்மையெல்லாம் செடியிலிருந்து கிள்ளி வாணலிலே போட்டு வறுத்தாச்சு. நாம மறுபடியும் முளைக்க முடியாது. ஆனா இவ இன்னும் வளர்ந்திண்டேயிருப்பா…… அவ கால் தூசிகூடப் பொறமாட்டே நீ……இந்த உடம்பிலே குறுக்கே டவாலி ஒன்னு இருந்துடுத்துன்னா, வேதம் சாஸ்திரம் சங்கீதம் ராஸிக்யம் எல்லாம் வந்துடும்னு நெனச்சியா?” என்ற வக்கீல் கூற்றுவழித் தி.ஜா. உணர்த்த முனைவதாகவும் வாசிக்கலாம். இங்கும் பாலி கூசிக் குறுகிறாள். இயல்புணர்வைக் காலில் போட்டு மிதிக்கும் குடும்ப அதிகாரம் பற்றிய பதற்றமது.

எங்கெல்லாமோ பருத்தி விதையாய்ப் பறக்கிறாள் பாலி. “இத்தினி நாளா எனக்குத் தெரியலே” என்கிறாள். “இல்லைன்னுதான் இருக்கு” என்கிறாள். “என் இஷ்டத்தைக் கேட்டா, நான் அவரைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னுதான் சொல்வேன்” என்கிறாள். “எனக்கு மனசிருந்தாத்தானே” என்கிறாள். “ஏன் இப்பேர்ப்பட்ட ஒருவரை எனக்குத் தந்தையாகப் படைத்தாய்? இவ்வளவு நல்லவரை……. அல்லது இவ்வளவு கெட்டவரை?” என்கிறாள். “மாப்பிள்ளையா ஒருத்தரை நினைக்கிறதும் கற்புதான் உங்களுக்கு” என்கிறாள். “பெத்த பெண்ணுக் கிட்டவே இத்தனை அவநம்பிக்கையா?” என்கிறாள். “மனிதர்கள் எவ்வளவு ஈரமில்லாமல் பேசுகிறார்கள்! எத்தனை கண்டிப்பு! எவ்வளவு தைரியம்!” என்கிறாள். இவ்வளவையும் எதிர்கொண்டு, “ஒரு வார்த்தையை எங்கிட்டக் கொடுத்துக் காவல் காருன்னு சொல்லி, என்னைக் காவல் போட்டிருக்கறப்ப, நான் என்ன செய்ய முடியும்?….. எனக்கு நீ தங்கராஜனைத்தான் பண்ணிக்கனும்னு இப்பவும் கட்டாயமில்லே……. அந்தச் சமாதானம் என் கீழ் மனசு பண்ணிக்கிறது…… ஆனா, மனசு உசந்திருக்கிற சமயங்கள்ள அது சரிப்பட்டு வரலே….. நாம எல்லோரும் ஒரு மரியாதைக்குக் கட்டுப்பட்டுத்தானே விவகாரம் நடத்தறோம்? ……. பழுக்காததுன்னாலும் காயின்னாலும் ஒன்றுதானே?” என்கிறார் ராமையா. இதை நாயக்கர் எப்படிப் பார்க்கிறார்?  “நாமெல்லாம் மனுசங்கதானா? ஆகாசத்திலேந்து கொட்ற கண்ணும் பாவற காலுமா இந்தப் பூமியிலே வந்து முளைச்சிட்டோமா?” என்கிறார் நாயக்கர். என்ன மாதிரி மனசு இது? “அது பகையைத் தேடிக்கிண்டு போய் அடிக்கும்…. அவ்வளவு உறுதியுள்ள மனசு” என்கிறார் வக்கீல். அது இங்கே பாலியை அடித்துவிட்டது!

பாலிக்குச் செல்லம் துணைநிற்கிறாள். “யாரோ எப்பவோ சொன்னாங்கங்கறதுக்காக, யாரையோ போட்டு அவதிப்படுத்தறது தர்மம் இல்லே” எனச் செல்லம் சொல்வது, ஏன் ராமையாவின் புத்தியிலேறுவதில்லை? “எனக்குத் தர்மசங்கடமே கிடையாது” என்கிறார் ராமையா. “மாமா, சும்மா சொல்லாதீங்கோ. தர்மசங்கடமில்லாதவா மனுஷாளா இருக்கமுடியாது” என்கிறாள் செல்லம். ராஜாவையும் அவள் விட்டுவைப்பதில்லை. “இந்தத் தர்மம், சத்யம் – இந்த நெடிகள் அடிக்காத இடமாக எங்காவது ஓடிப்போய்விடுவோம்” என்கிறான் ராஜா, பாலியிடம். “ஓடிப்போக நினைக்கிறவா, இப்படி அதைப் பற்றிப் போகலாமா வாண்டாவான்னு யோசிச்சிண்டிருக்க மாட்டா…… நினைத்தவுடனேயே எதையும் செய்யறவாளை, மனித இனத்தைச் சேர்ந்தவான்னு சொல்லிவிட முடியாது” என்கிறாள் செல்லம், பாலியிடம். தங்கராஜனோடும் அவள் மல்லுக்கட்டுகிறாள்.

மாலையில் பாலி, தங்கராஜன், செல்லம் மூவரும் பெரிய கோயிலுக்குள் முதலில் நுழைகிறார்கள். (பின்னர் ராமையா, ராஜா, பெரியசாமி, நாயக்கர் மகன் ஆகியோரும் வந்துவிடுகிறார்கள்). முதலில் வருகிறவர்கள், பெரிய கோயில் கோபுரம் மீது இரண்டு காக்கைகள் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறார்கள். “இவ்வளவும் செய்து என்ன ஆச்சு? இந்த இரண்டு காக்காய் குடியிருக்கறதுக்காக, இத்தனை பெரிய கோயில் கட்டணுமா?” என்கிறாள் செல்லம். இதைச் சரியாக வெங்கட்சாமிநாதன் புரிந்துகொள்ளவில்லை. இக்காக்கைகளைத் ‘தம்மை உயர்த்திய கோபுரத்தை ஆபாசப்படுத்தும் காக்கைகள்; தம்மை உயர்த்திக்கொள்ளும் காக்கைகள்; முடிந்தால் காக்கைகளை மறப்போம்’ என்கிறார் அவர். (யாத்ரா (38-39),1983). இந்தக் காக்கா, கோபுரம் என்ற சொற்களையே ஜெயமோகனும் பிடித்துக்கொண்டு தொங்குகிறார். “கவித்துவமான எழுச்சியின் போதும் ஒருவகை அனுபவ யதார்த்தத் தளத்தைத் தக்கவைத்துக் கொள்பவை தி.ஜானகிராமனின் கதைகள். ‘மலர் மஞ்சம்’ நாவலில் கதாநாயகியின் அப்பா ஒரு பொருந்தாத் திருமணத்திற்காக அவளிடம் பேசுகிறார். அவள் அண்ணாந்து கோயில் கோபுரங்களைப் பார்க்கிறாள். காகம் உட்கார்ந்திருக்கிறது. அத்தனை பெரிய கலை அமைப்பு, பெரும் உழைப்பின் குவிப்பு, எல்லாம் காக்காய் உட்காரத் தானா? ஒருகணம் பிரமித்தபின் ‘சரி’ என்று சொல்லிவிடுகிறாள். ஒட்டுமொத்தமாக வாழ்க்கையின் அனைத்து இயக்கங்களையும் பார்க்கும்போது ஏற்படும் கவித்துவம் மிக்க வெறுமையைச் சொல்லாமலேயே குறிப்புணர்த்தும் இந்த இடத்தில் தி.ஜானகிராமன் ஒருபக்கம் உக்கிரமான கவித்துவத்தையும் மறுபக்கம் முதிர்ந்த யதார்த்த லெளகீகப் பிரக்ஞையையும் தன்னுள் கொண்டிருக்கிறார்” என்கிறார் ஜெயமோகன்.(தி.ஜானகிராமன் : காமமும் விடுதலையும்).வெங்கட்சாமிநாதன் போல் ஜெயமோகனும் சரியாகத் தி.ஜா.வைப் புரிந்துகொள்ளாததையே இது காட்டுகிறது. உண்மையில் இவை பாலியின் சொற்களில்லை. (இவை செல்லத்தின் சொற்களே!). “ஒட்டுமொத்தமாக வாழ்க்கையின் அனைத்து இயக்கங்களையும் பார்க்கும்போது ஏற்படும் கவித்துவம் மிக்க வெறுமையைச் சொல்லாமலேயே குறிப்புணர்த்தும்” ஜெயமோகனின் அந்த இருத்தலிய நோக்கம், தி.ஜா.வுக்குக் கிடையவே கிடையாது. வாழ்வின் எவ்வகை வெறுமைக்குள்ளும் மேன்மேலும் வாழும் உயிர்த்துடிப்பையே தம் சாதாரணத் தரிசனமாகக் கண்டவர் தி.ஜானகிராமன்.உயிர் வாழ்வதையே ஆகப் பெரும் மானுடச் சாதனையாகக் கண்டவர் என்பதால் (செம்பருத்தி : சீதாபதி), அசாதாரணங்களை அசட்டை செய்து, சாதாரணங்களையே கொண்டாடினார் அவர். இப்படித்தான் பாலியும் இயங்குகிறாள். ஆனால்,வெங்கட்சாமிநாதனைப் பின்பற்றிக் காகத்தையும் கோபுரத்தையும் இருமை நோக்கில் பிழைபடவே புரிந்துகொள்கிறார் ஜெயமோகனும். இங்குக் கோபுரம், காக்கை என்ற பேதம் கற்பிக்கப்படுகிறது. ஆனால், தி.ஜா. படைத்த செல்லம், இந்தச் சொற்களைச் சொன்ன செல்லம், இதை இப்படிப் பார்ப்பதில்லை. “ஒரு மனுஷனுக்கு இவ்வளவு அகம்பாவமான்னுதான், இந்த ரெண்டு காக்காயும் சிரிச்சுண்டிருக்கு” என்கிறாள் செல்லம். கோபுரத்தின் மீது காக்கை அமர்வதில்லை; கோபுரம் கட்டிய மனுஷ அகம்பாவம்தான் இங்கே பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது. “இந்த மௌனத்திற்கும் பரந்து கிடக்கும் ஆகாசத்திற்கும் நம் சிறுமையை இடித்துக்காட்டுகிற வல்லமையுண்டு” எனத் தங்கராஜனும் செல்லத்தை  ஆமோதிக்கிறான். செல்லத்திற்குக் கோபம் வருகிறது. அவனுக்குப் பாலியின் மனத்தைக் குறிப்புணர்த்த நினைக்கிறாள். “நாம் ஏதோ நினைத்துக்கொண்டு, வழியில்லாத வழியில் போய்க்கொண்டேயிருக்கிறோம். வெகுதூரம் போனபிறகுதான், இங்கே வழியில்லை என்று எழுதியிருக்கிறது. இது அப்போதே தெரிந்திருந்தால், இவ்வளவு தூரம் நடந்திருக்க வேண்டாம்…… முன்னாலேயே யாராவது சொல்லியிருக்கலாம். அப்படிச் சொல்வதற்கு யாரும் இருப்பதில்லை” என்கிறாள் செல்லம். செல்லத்தின் குறிப்பைத் தங்கராஜன் புரிந்துகொள்கிறான். என்றபோதிலும், அவனிடமும் ஒரு பதிலிருக்கிறது. “அவர் (ராமையா) சொன்னதற்காக, நான் ஆடவில்லை. அப்படியிருந்தால், ஒரு கொலையைச் செய்திருக்கமாட்டேன்…. ரகசியமாப் பண்ணினதுக்குக் காரணம், உசிரோட இருக்கணும்னு ஆசையாயிருந்தது” என்கிறான். பாலியைத் “தேவிடியா” என ஏசியதற்காகவே, வையன்னாவைக் கொன்றேன் என்கிறான்.

கடற்கரையில் ராஜாவின் காதல் மொழிகளைக் கேட்டதற்கு முற்றிலும் எதிரான உள்ளதிர்வைப் பாலி அடைகிறாள். ஆனால், அதன் உக்கிரம், எல்லோரையும் கவ்விக்கொள்கிறது. “அகிலம், அகிலம்….. எனக்கு எதுவும் முடியவில்லை. இவர்கள் உன் மகளை என் சொத்து, ஆடு, மாடு, வீடு என்று பட்டியலில் சேர்க்கிறார்கள். அப்படியிருந்தால்தான், என் வார்த்தை அவளைக் கட்டுப்படுத்துமாம்……. அவள் இஷ்டத்திற்கு விரோதமாகப் பிணைத்து வைக்க இஷ்டமில்லை……. அந்தச் சமயமே நான் இந்த உடலை விட்டுக் கிளம்பிவிடவேண்டும்….. இதை அழித்துக்கொண்டுதான் இந்தப் பொய் கிளம்பவேண்டும்” என்கிறார் ராமையா. இதன் முரணைத்தான், பின்னர் காசியில், “எல்லாரும் பணத்தைப் பரிசமாகக் கொடுப்பாங்க. உன் மருமவன் ஒரு உசிரையே பரிசமாகக் கொடுத்தான். இதிலே என்ன?” எனச் சாதாரணமாக்குகிறார் கோணவாயர். இந்த நுட்பமே, தி.ஜா‌.வின் பலம். இரண்டெல்லையிலும் நின்றாடுவார் அவர். தங்கராஜன் செய்த கொலை, ஒரு பெருங்காரணம்தான். எனினும், ‘கோபுரம்’ பற்றிய ராமையா மற்றும் செல்லத்தின் புதிய குறுக்கீடுகளும்,  எதிர்பாராத் தீர்வுக்குத் தூண்டுகோலாகின்றன. விழிமூடுகிறார் ராமையா. கோபுரம் தெரிந்த இடத்தில் ஒன்றுமில்லை; கோபுரமில்லை என்ற ஈடற்ற நிலையைக் கண்டுவிடுகிறார். பின் கண்திறக்கிறார். இப்போது கோபுரம் தெரிகிறது. யதார்த்தத்திற்குக் கீழிறங்கிவிட்டார்! இதே காட்சியைச் செல்லமும் பாலியும் அவரவர் மனம்வழி இன்னும் துல்லியமாக எதிர்ப்படுகிறார்கள். இங்கே பெரியசாமி முன்பே கூறியதையும் நினைக்கத்தான் வேண்டும்.  “எது நல்லதோ, அதுக்கு அப்பப்ப, ஏதாவது தடயம் கிடைக்கும். வழி தெரியாம இருட்டிலே தவிக்கறப்ப, ஏதாவது வெளிச்சம் கிடைக்கும். ஆனா, எப்பக் கிடைக்கும்னு சொல்ல முடியுமோ? நாம கண்ணை விழிச்சுக்கிட்டுப் பாத்துக்கிட்டேயிருக்கணும்……. தானே தெரியும் வழி” என்கிறார் பெரியசாமி. இப்படித்தான் செல்லமும் பாலியும் விழித்துக்கொள்கிறார்கள். “வருகிற ஒரு பிராணி பாக்கியில்லாமல், கழுத்து வலிக்க மேலேயே பார்க்கும்படி செய்துவிட்டான் அவன். அத்தனை உயரத்தில் வைத்த கண்ணைக் கீழே திருப்ப முடியாமல் செய்துவிட்டான்” எனக் கோபுரம் கட்டியவனைப் பார்த்துப் பிரமிக்கிறாள் செல்லம்.

இடுக்கியிடுக்கிப் பார்த்தால், இருளிலும்கூடக் கோபுரம் தெரிகிறது என்கிறாள் செல்லம். பாலிக்கும், அந்த இருட்டிலும், நிஜ வெளிச்சமடிக்கிறது. “எதற்குத்தான் என்ன அர்த்தம்!…. மீண்டும் போய்ப் படித்துத்தான் என்ன செய்யப்போகிறோம்? மறுபடி கடற்கரை மணலில் வந்து அவன் பேசப்போகிற வார்த்தைகளுக்குத்தான் என்ன அர்த்தம் இருக்கப்போகிறது?” எனக் கோயிலுக்குத் தன்னைச் செல்லம் கூட்டிவருவதற்குமுன் சிந்தித்தவள்தானே அவள்! எனினும், எதை நினைத்தோ, பாலி அழுகிறாள். அவள் அழுகைக்கு, “நல்லது செய்கிறபோது, அழுகைதான் வரும்” எனப் பொழிப்புரை பகர்கிறாள் செல்லம். மீண்டும் பெரியசாமியைத்தான் துணைக்கிழுக்க வேண்டியிருக்கிறது. “நம்ம இஷ்டப்படி நம்ம ஜென்மம் அமைஞ்சுதுன்னா, அப்புறம் பிறவியெடுத்ததுக்கு என்னதான் அழகிருக்கு?” என்ற சமாதானம் பாலிக்கும் இப்போதுறைக்கிறது.  ராமையாவா விட்டுக்கொடுப்பார்? “உங்க அம்மாவுக்கு மகளாக ஆயிட்டே இப்ப” என்கிறார். ஆனால், பின்னாளில் கோணவாயரைச் சந்தித்தபின், அவர் மனம் நிலைகுலைகிறது.  வயலில் வையன்னாவைக் குத்திக் கொல்லும் கோலம், தங்கத்தைப் பார்க்கும்போதெல்லாம்நினைவில் புகுந்து வதைக்கிறது.”நம்ம பிடிவாதத்தைப் பார்த்துத் தெய்வம் சிரிக்கணும்னா, இப்படி ஒரு  வழி பண்ணிச்சு…” எனப் பதைபதைக்கிறார். இவ்வகையில், சங்கீதத்தில் நல்ல செவியாறலெல்லாம் கேட்டு ஊறிப்போன ஒரு பெரிய மனுஷராக வக்கீலால் சிலாகிக்கப்படும் ராமையாவும், “மனிதன் என்னதான் மெத்தப் படித்தாலும், எட்டுச் சித்திகள் அடைந்தாலும், அவன் மனிதன்தான். ஆண்டவனின் புழுப் படைப்பைப்போல் ஒருவன்தான்” எனப் பெரியசாமி சொல்வதுபோல், விழுந்த மரத்தின்கீழ் சிக்கியவனின் முனகலாய்ச் சமைந்து ஒடுங்கிவிடுகிறார். கோணவாயரைப் பின்பற்றிச் சாவுக்காகக் காசியில் காத்திருக்க அவர் துணிவதற்கும், இந்த ஜலத்திலேயே வீடு கட்டிக் குடியேறிவிட்ட உள்ளிரைச்சலின் வெளியொடுங்கலே வேராகும்.

கோபுரத்தின் மேல் இரண்டு காக்கைகள். கோபுரம் பாலி. தங்கராஜனும் ராஜாவும் காக்கைகள். கோபுரத்தின் மீதிருக்கும் காக்கைகளுக்குக் கோபுரத்தின் பிருமாண்டம் பற்றி எதுவும் தெரியாது. அது அவை அமர்வதற்கான வெறும் இடம் மட்டுமே. தங்கராஜனுக்கும் ராஜாவுக்கும் பாலியின் உன்னதம் தெரியும் அல்லது தெரியாது (அளவில் வேறுபாடிருக்கலாம்). இது ஒரு கோணம். ராமையாவின் வாக்குதான் கோபுரம். ராஜா, பாலி, தங்கராஜன் காக்கைகள். காக்கைகளுக்குக் கோபுரத்தின் பிருமாண்டம் தெரியாது என்பது மனிதக் கற்பனையே. உயிருள்ள மரத்திற்கும் உயிரற்ற கோபுரத்திற்குமான வேறுபாடு காக்கைகளுக்கா தெரியாது? இது வேறு கோணம். மனிதர்களுக்குக் கோபுரத்தைப் பார்க்கத் தெரியாதது போலவே, காதலையும் பார்க்கத் தெரிவதில்லை என்பதும் குறிப்பாகலாம். அகிலத்திற்குக் கொடுத்த வாக்கு ராமையாவுக்குக் கோபுரம். ராஜாவின் காதல் பாலிக்குக் கோபுரம். பாலியை அடையப்போகிறோம் என்ற நினைப்பே, தங்கராஜனுக்குக் கோபுரம். பாலிக்களித்த வாக்கு நாயக்கருக்குக் கோபுரம். நடனமே பெரியசாமிக்குக் கோபுரம். செல்லத்திற்குத் தோழியின் மகிழ்ச்சியே கோபுரம். இங்குக் கோபுரம் என்பது என்ன? உள்ளத்தின் உயரம்தான் கோபுரம். மனிதர்கள் எவ்வளவு மனவிரிவு கொள்ள முடியும் என்பதைத்தான் தி.ஜா. சிந்திக்கிறார், விவாதிக்கிறார், தேடுகிறார்.

வெறுமையைத் தி.ஜா. ஒருபோதும் வலியுறுத்துவதில்லை. கிடைக்கும் சிறு துரும்பையும் பற்றிக்கொண்டு, எவ்வளவு அந்நியமாதலுக்கிடையிலும், வாழ்வுக்குள்ளும் உறவுகளுக்குள்ளும் மனிதர்கள் திரும்பிவிடுதலையே அவர் கொண்டாடினார். ‘நிஜமாயிருப்பது’ (அதை ‘மிருகமாயிருப்பது’ என்கிறாள் பாலி!) என்பதுதான், தி.ஜா.வின் ஒரே பிரச்சனை. சாமியாராக நாயக்கர் குடும்பத்திலிருந்தும் உறவிலிருந்தும் வெளியேறுவதுகூட, வாழ்க்கை மீதான வேதாந்த விரக்தியால் நிகழ்வதில்லை. கண்முன் ஒரு பொய் அரங்கேறக் காண்பதிலுள்ள ஒவ்வாமையின் வடிகாலாகவே, மனுஷ அகம்பாவத்திலிருந்து நாயக்கர் வெளியேறிக் கோணவாய்ச் சாமியாகிறார். இந்த உண்மையைக் கோணவாயரிடமிருந்து உள்வாங்கும் ராமையாவும், அதே சத்தியத் துடிப்பால்தான், காசியிலேயே எஞ்சிய வாழ்வைக் கழித்துவிட நினைக்கிறார். முழுமையான இசைவு என்ற கோபுரப் பிருமாண்டம் எங்கும் சாத்தியமில்லை என்ற தரிசனம் அவரைக் குழப்புகிறது. இல்லாத கோபுரத்தை மனத்தில் கட்டிக்கொள்வதாலேயே மனிதர்கள் வாழ்வதுபோல் பாவனை செய்ய முடிகிறது. கோபுரத்திற்கும் கோபுரமின்மைக்குமிடையில் இசைவைக் கட்டியிழுக்க ராமையா முனைந்து தோற்கிறார். ஜெயித்தவர் பின் தோற்பதுதான், மலர் மஞ்சத்தின்கதை. ஆனால், பாலியும் செல்லமும் கண்ட கோபுரம் எது? கோபுரமில்லை என்ற கண்டடைதலே, கோபுரத்தைக் கட்டியெழுப்பும் உந்துதலையும் மனிதர்களுக்களிக்கிறது. இதன் வெளிப்பாடாகவே, வெளிச்சத்தில் தெரியும் ஸ்தூலமில்லை; இருட்டிலும் தெரியும் சூக்குமமே கோபுரமென்ற முடிவிற்குப் பாலியும் செல்லமும் வருகிறார்கள். இதைச் சமரசமாக நாயக்கரும், அவர்வழிப் பின்னால் ராமையாவும் காண்கிறார்கள். ஆனால், அவர்கள் மட்டும் என்ன செய்கிறார்கள்? காசி அல்லது துறவு என்ற வேறொரு கோபுரத்தைத்தானே, மீண்டும் அவர்களும் கட்டிக்கொள்கிறார்கள்?கண்ணுக்குத் தெரிகிற சங்கிலிகளால் மட்டுமில்லை; கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளாலும் கட்டப்பட்டுள்ள வாழ்வென்னும் பிருமாண்டக் கோபுரத்திற்கு முன்னே மனிதர்கள் கையாலாகாதவர்களாகிப் பணியும்போது “தெய்வம் சிரிக்கிறது” என்கிறார் ராமையா.  தெய்வங்கள் சிரிக்கலாம்; பாலிபோல் அழுவதன்றி மனிதர்களால் என்றேனும் சிரிக்க முடியுமா?

ஒரு பின்னீடு 

இன்றைக்கு நிலைபெற்றிருக்கும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப அமைப்புத் தோன்றி எத்தனை ஆயிரம் வருடமிருக்கும்? ஒரு பேச்சுக்காகக் குறைந்தது மூவாயிரம் ஏன் அதிகப்பட்சம் நாலாயிரம் வருடம் என்றே வைத்துக்கொள்வோம். சமூகவியலாளர்களின் கறாரான வரையறைகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. சநாதனிகளுக்குச் சார்பாக, நினைக்க முடியாத நெடுங்காலத்திற்கு முன்பே, இது அமைப்புற்றுவிட்டது என்றே கொள்வோம். இத்தனை ஆயிரம் வருடமான பிறகும், மனிதப்பாலியல், இன்னும் ஒரு பிரச்சினையாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது. ஆதிமனிதன் சுதந்திரமானவன் என்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறோம். அவன் கூடத்தான் எவ்வளவு தூரம் சுதந்திரமானவன்?தாய்வழிச் சமூகத்திலிருந்தே தந்தைவழிச் சமுதாயம் என்பதைக் கருத்தளவில் ஏற்றுக்கொண்டாலும், தாய்வழிச் சமுதாயத்திலுங்கூடப் பாலியல் ஒரு பிரச்சனையாயிருந்ததுஇல்லையா, என்ன? ஒரு தனி மனுஷியின் தலைமையை எது தீர்மானித்தது? அவளின் வனப்பா, வலிமையா? அப்போது மட்டும் வன்முறையே இருந்ததில்லையா? ஒரு பெண் அல்லது ஓர் ஆண், தாகமெடுத்தபோது நீர் அருந்துவதுபோலும், பசித்தபோது உண்பதுபோலும், கண்கிறங்கும்போது உறங்குவதுபோலும், அவ்வளவு இயற்கையாக உடல் கேட்கும்போது புணர்ச்சி பழகிவிடுவதற்கில்லை. ஓர் உடலுக்கு இன்னோர் உடல் தேவைப்படும்போது, அது தன்னிச்சை என்பதிலிருந்து சார்ந்தொழுகலுக்கு வழிகோலிவிடுகிறது. இச்சார்ந்தொழுகல், மனிதகுல வரலாற்றில் வெறும் சார்ந்தொழுகலாக மட்டுமிருப்பதில்லை. உடைமைகொள்ளலாகவும் நீட்சியுற்றுவிடுகிறது. இந்த உடைமைகொள்ளல், மேலும் மேலும் ஆயிரமாயிரம் சிக்கல்களைத் துணைக்கிழுத்து வருகிறது. இவற்றை ஒழுங்குபடுத்தச் சமுதாய அறம் பரபரக்கிறது. இதன் தவிர்க்கவியலாத வெளிப்பாடாகத்தான், பாலியல் ஒழுக்கத்தைக் கட்டாயமாக்கும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற குடும்ப அமைப்புத் தோற்றமுறுகிறது. இக்குடும்ப அமைப்பு, இன்னும் எத்தனை எத்தனை ஆயிரம் வருடம் நீடிக்கும்? அதை யூகிப்பதற்கில்லை. அதன் இறுக்கம் தொடர்ந்து நெகிழ்ந்து கொண்டேதானிருக்கிறது. ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறமுடியும். அது எத்தனை நெகிழ்ந்தாலும், மீண்டும் பழைய கற்பிதமான தாய்வழிச் சமுதாயத்திற்கோ, குற்றவுணர்வற்றதாகப் பேசப்படும் சுதந்திரப் பாலுணர்வு இயற்கைக்கோ அது திரும்பிவிட முடியாது. பிறந்த குழந்தையாய் மீண்டுமாகிவிடக் கிழவன் துடித்தாலும், மனத்தளவில் ஓரளவிற்கேனும் அவனுக்கு அது சாத்தியப்பட்டாலும், அவன் நினைவுகளிலிருந்து பூரண விடுதலை அவனுக்குச் சாத்தியமா என்ற கேள்விக்குச் சாதகமான பதிலிருப்பதாகத் தெரியவில்லை.

கற்பு, குடும்பம், மீறல், தாய்மை, தந்தைமை, குற்றவுணர்வு, தியாகம், சுதந்திரம் அல்லது சுதந்திரப் பாவனை என்று எல்லாமே இன்று பழக்கப்பட்டுவிட்டன; மதிப்பிறக்கப்பட்டுவிட்டன. அப்போது இங்கு நடப்பதுதான் என்ன? பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் அஸ்தமித்துவிட்டது என்று சொல்வதைப் போன்ற சுய ஏமாற்றல்தான் காலாதீதமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தச் சுய ஏமாற்றலைச் சகித்துக்கொள்ள முடியாத தீவிரத்துடன் சீறிக், கட்டமைக்கப்பட்ட குடும்ப அமைதிக்கு எதிராகப் பொங்குகிறார் தி.ஜானகிராமன். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் மரபையும் பிறழ்வையும் கண்டும் காணாததுபோல் ஒதுங்கிவிடாமல், நேர்முகமாக நின்று எதிர்கொள்பவை அவர் எழுத்துகள். பண்பாட்டுப் போர்வைக்குள் ஊடுருவிப் பார்க்கும்போது, மிஞ்சுவது என்ன என்ற வினாவைத் திஜா வலிமையாக எழுப்புகிறார். மரபு எவ்வளவு வலிமையானதோ, அதைவிட வலிமையானது இயல்புணர்வென்கிறார்.  அப்படியெனில், இயல்புணர்வுகளின் போக்கிலேயே மனிதன் போய்விட முடியுமா? மனம் அல்லது எண்ணம் இறக்கும்வரை, அப்போராட்டம் தொடரத்தானே செய்யும்? ஒருவேளை எல்லாக் கட்டுப்பாடுகளையும் அறுத்தெறிந்துவிட்டால், விடுதலை கூடிவிடுமோ! எங்கே? பழைய கட்டுப்பாடுகளிலிருந்து புதிய கட்டுப்பாடுகளுக்குள் மனிதன் புகுவதன்றித் தீர்வு என்பது எங்கிருக்கிறது? இப்படியும் அப்படியுமாகத்தான் உலகம் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதைக் கண்கொண்டும் பாரோம் எனச் சொல்லும் மோன ரிஷிகளின் அசட்டுத் துணிச்சல் தி.ஜா.வுக்கில்லை. அதற்காகப் பாலியல் விடுதலை பேசிப் புவியில் பெண்மை நலம் உண்ணும் ஆண் வல்லாண்மைக்குத் துணைபோகவும் தி.ஜா.வுக்குத் தினவில்லை. இடையோடும் பிள்ளையாயிருக்கிறார். பெண்ணின் பாலியல் விடுதலையைப் பரிந்துரைப்பவர் அல்லர் அவர். ஏற்கெனவே குலைந்துள்ள வாழ்வை அது மேலும் குலைக்கவே செய்யும் என்கிறார். மீறல்களை எழுதுவதனூடாகக் குடும்ப நிறுவனத்தின் பொய்மைகளை அம்பலப்படுத்துகிறாரே ஒழியக் குடும்பத்தை ஒருபோதும் அவர் மறுதலிப்பதில்லை. இருப்பதை அழித்துவிட்டுக் கற்பனையான இல்லாததைக் கொண்டாடும் புரட்டு அவரிடமில்லை. பெண்ணுக்கான கெளரவத்தையே தம் படைப்புகளில் அவர் கோரினார். இக்கரைக்குப்  பச்சையாக அக்கரை இருக்கிறது என்றார். ஆண்-பெண் என்ற இடத்தை கடந்து உயிர் என்ற இடத்தை நோக்கி அவர் நகர்ந்தார். மற்றவர்களை அதாவது பிறரைப் புரிந்துகொள்ள முடியாமையே, மனிதத் துக்கத்துக்கும் தத்தளிப்புக்கும் காரணமென்றார். ஆனால், மனிதர்கள் உளுத்த மூங்கிலில்லை; மனமிருந்தால் தம்மைத் தாமே மனிதர்களாக அவர்கள் புதுப்பித்துக்கொள்ள முடியுமென்றார். நம்மை நாமே தேற்றிக்கொண்டும், உயர்த்திக்கொண்டும், நமக்கு நாமே காவலாயும் பலமாயும் விழித்திருப்பதே வாழ்வென்றார். எதைப் பற்றியுமான இறுதித் தீர்ப்பை ஒருபோதும் அவர் எழுதுவதில்லை. தன்மறதித் திளைப்பையே தம் தரிசனமாக்கினார். ‘ஐயோ! இந்த வாழ்க்கை இப்படியிருக்கிறதே?’ என்றார். Don’t go to the extreme ends, be in the middle path என்பார் புத்தர். கிட்டத்தட்ட அதேதான் தி.ஜா.வின் நிலைப்பாடும் என்று எனக்குத் தோன்றுகிறது. அடைபட மறுக்கும் மனவிரிவின் முழுவீச்சே, தி.ஜா.வின் படைப்புலகு முழுதும் நடைபயில்கிறது. இந்தத் தீரா வியப்பின் உயிர்த் திளைப்பே தி.ஜா. என்பேன். அதுதான் யாது? “தி.ஜானகிராமன், ஒருவகையில் லியோ தோல்ஸ்தோய் போன்றவர். சமூக, அரசியல் இயக்கங்கள் பற்றிய நேரடித் தொடர்பு இவருக்கு இல்லையெனினும், இவர் தம்மையும் அறியாமலே, தமிழ்நாட்டின், சிறப்பாகத் தஞ்சாவூர்ப் பகுதிப் பிராமண மக்களின் கூட்டுக் குடும்ப வாழ்க்கைச் சிதைவினை மிகச்சிறப்பாகப் புனைகதைகளில் வெளிக்கொணர்ந்துள்ளார் என்றே கொள்ளல் வேண்டும்” என்பார் கா. சிவத்தம்பி. (நாவலும் வாழ்க்கையும்). இங்குத் ‘தம்மையும் அறியாமலே’ என்பதற்கு, unconscious அல்லது subconscious writing எனப் புரிந்துகொள்கிறேன்.  தி.ஜானகிராமன் டால்ஸ்டாயைப் போன்றவர்தாம்;  டால்ஸ்டாய் இல்லை என்பது உண்மை. ஆனால், தமிழில் யாருமே டால்ஸ்டாய் இல்லை என்பது, இன்னும் கொஞ்சம் பெரிய உண்மை!

“நூற்றுக்கணக்கில் குழந்தைகள் ஒண்டிப் படுத்துக்கிடப்பதுபோலப் பூக்கள் கூடையில் நெருங்கியிருந்தன. எப்பேர்ப்பட்ட மேதையும், யுகயுகமாகத் தலைகீழாக நின்றாலும், இதைப்போல் ஒன்றை உருவாக்கிவிட முடியாது. இதை யார் செய்தார்கள்? இத்தனை மென்மையும் மணமும் வர்ணமும் யார் இப்படிக் கலந்தார்கள்? சின்னச் சின்னக் கனவுகள் தவிர வேறு ஒன்றுமில்லை – வெறும் பிரமைகள் என்று ஒருகணம் தோன்றிற்று….” (பாலி)

    தி.ஜானகிராமன், ஒரு வெறும் பிரமை இல்லை. அவர் நிலைகொண்டிருப்பது ஆழ்மனத்தின் அமைதியில். அவர் மனக்கிடங்கு ஒரு பெருங்கடல். பேரலைகளின் நடுவே நீச்சுப் போடப் பெருந்துணிவு வேண்டும். அது அவருக்குக் கைகூடியிருக்கிறது. அதனால்தான் தி.ஜானகிராமன், அபூர்வங்களைத் தின்று செரிக்கும் தீரா வியப்பின் உயிர்த்திளைப்பும் நிறைவுமாகிறார்.


– கல்யாணராமன்

குறிப்பு: இந்தக் கட்டுரை ‘கல்யாணராமன்’ தொகுக்கும் “ஜானகிராமம்’” என்ற தி.ஜானகிராமன் பற்றிய ‘படைப்பாவணப் பெருந்தொகுதி’க்காக எழுதப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.