நான், இன்ன பிற……


            “நான்” என்பது ஒரு நூற்றாண்டுக்கால அனுபவச்சாரம். காலத்துக்கும் “கை கோர்த்தல்”. இந்தக் கை கோர்த்தலும், ‘நான் இப்படித்தான்’ எனக்கட்டுமானம் செய்துக் கொள்ளலும், எஃகாக இறுகிக்கிடக்கும் சமூகத்தை உடைத்தலும், சாதாரண செயல் அல்ல. காலத்தேக்கத்தில் அடிப்பட்டு, வெளியேற முடியாமல் கால்களைப் பின்னிக்கிடக்கும் வளையத்தை விட்டு வெளியே வருதல் எல்லோர்க்கும் எளிதல்ல. ஒரு சமூகத்தைப் பார்த்து, அதை தன் மனதின் வழி இருத்தி, இவர்கள் இப்படியும் இருக்கலாம் என தான் விரும்புவதை எழுத்துக் கூட்டங்களின் வழி அமைத்துக் கொடுத்துள்ள படைப்பாளனை ‘மன உறவாளன்’ எனக் காலவரிசையில் ஒரு படைப்பு நிலைத்து நிற்கச் செய்ய முடியும். செய்திருக்கிறது. நாளையும் செய்யும். இங்கு, இவ்விடத்தில் பெண்ணிற்கான போதாமையினை, தி.ஜா வெற்றிடமாகப் பார்க்கவில்லை. நாள்தோறும் விடிந்து மறையும் நீட்சியாக வெளிப்படுத்தியிருக்கிறார். ‘உயர்ந்தக்கலை’ என்ற கோட்பாட்டுக்குள் அவர் சிக்கவில்லை. மெனக்கெடலான எளிதான, ஒரு பெண் ஆழத்தைத் துழாவிச் செல்கின்றார்.

            அப்படிச் செல்வது மட்டுமல்லாமல் அந்த ஆழத்தை கரைத்து மிடறு மிடறாக அருந்திப் பார்த்து ‘நான்’ ‘நான்’ என ஒவ்வொன்றையும் அசல் படுத்துகின்றார். இந்த அசலில் படைப்பாளன் தான் விரும்பும் பெண்ணிற்கான ‘நான்’ என்பது எழுத்தசைவுகளின் வழியில் பரவிக் கிடக்கின்றது.

            அப்பரவல் அழகியலோ, கலையோ, உன்னதமோ அல்ல. அத்தனையும் பெண்களின் மனங்கள். ஆம். அதுமட்டுமே. வேறு எந்த அளவுகோலும் அதை எட்டிப் பிடிக்க முடியாது. இந்த மாயாஜாலத்தை சற்றே தொடமுயன்று, துருவித் துருவி உள்புகுந்து, தட்டையான படிநிலைகளைத்தாண்டி தான் காண விரும்பிய ‘சிலிர்ப்புத் தேடல்’  தான் மரப்பசுவின் ‘அம்மணி’.

            “எதைப் பார்த்தாலும் சிரிப்பு வருகிறது” எனத் தொடங்கும் தி.ஜா சமூகத்திற்கான உச்சபட்சக் குட்டுதலை இனி சொல்லப்போகிறேன் என்பதற்கான எழுத்துப் பொதி தான் அந்த ஒற்றை வரி. அதனுள், அம்மணியின் சிரிப்பு வெறும் சிரிப்பு இல்லை. பெண்கள் அதிகமாக சிரிக்கக் கூடாது என்ற இறுகிய மனோநிலையை உடைக்கும் கருத்தியல் அது என்ற விழிப்பை உணர்த்தும் இடமாகப் பதிக்கின்றார். அந்தச் சிரிப்பு தான், கணவன் இல்லாமல் போன பின், முடி இழந்து மடிசார் புடவையுமாகச் சுருண்டு மயங்கி விழுந்துக் கிடந்த கண்டுமாமாவின் பெண்ணின் நிலையைப் பார்த்த போது, அந்தப் பெண்ணின் தகப்பனின் உடலின் உள் அழுக்கை உணர்த்துகிறது. அன்னவாசல் முழுவதும் பத்ரகாளி மாதிரி நின்று சிரிக்க வேண்டும் போலிருக்கிறது. அதை மனதிற்குள் செய்தும் பார்க்கின்றாள். அந்தச் சிரிப்பு தான், அதே வீட்டில் மருமகளாக வர கேட்டதை, ஒத்துக் கொள்ள மறுத்து ஏன் நானும் முடியை இழந்து மயக்கம் போட்டுக் கிடக்கணுமா? என்ற தாயிடம் கேட்கச் சொன்ன சிரிப்பு. இதில் இப்படி கேக்கலாமா, சொல்லலாமா என்ற சலனிப்பு அம்மணியிடம் இல்லை. துல்லியம் மட்டும் தான். அதுவும் சிரிப்பின் வாயிலாகவே மனிதஅழுக்குகளின் மறைவிடங்களைக் காட்டிச்செல்வாள். சமூகத்தின் முரண் என உணரும்வகையில், படைப்பாளனின் கதை உலகம் அன்றையச் சூழலின் அப்பட்டத்தை எழுத்துச்சேர்க்கையில் கோடிட்டுக் காட்டுகின்றது. இது தான், படைப்புக்கும் சமூகத்துக்குமான உறவு. இந்த உறவின் வடிகாலாக, நிர்ப்பந்திக்கப்படாத நிலையாக, போலித்தனமில்லாத, அன்பு ஊறும் ஊற்றாக நாம் வாசிக்கும் போது சில பூரண கணங்களைத் திரைவிலக்கி அம்மணி நிகழ்த்துகின்றாள். இந்நிகழ்த்துதல் “மனத்தேய்வு” இல்லாமல் நாம் உணர்வதே படைப்பின் தனித்துவம்.

            இந்த மனிதக்குழாமில், யாரையும் தொட்டுப்பேசவும், கையைப்பற்றவும், தழுவிக்கொள்ளவும், ஒரு அவமானக்காட்சி எனக்கு உணர்த்தியது என்றால், வெறும் வெற்றுச்சரடு என் கழுத்துக்குத் தேவையில்லை என்ற ஒளிக்கீற்று அம்மணிக்குள் புகுந்ததாய் காட்டுவதுமே எழுத்தின் ஒத்த இணைப்பாக ‘திம்மென’ மனதில் சம்மணமிடுகின்றது.

            இங்கு, அனைவரும் பொது. ஏற்றம், இறக்கம் இல்லாமல் எல்லாமும் யாவருக்குமானதாய் மாறவேண்டும் என்றும், பகிர்ந்தளித்தலுமே சமூகத்துக்கான மேனிலை என்பதை மனிதர்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையும், தன் படைப்பின் உந்து சக்தியாக அம்மணி மூலம் துய்த்துக் கொண்டுள்ளார் தி.ஜா.

            இந்த எண்ண விளைச்சலை ஊர் ஊராகச் சென்று கூட்டத்தில் விதைத்து விட்டு வந்த மனித உணர்வுகளோடு உறவாடி வளர்கின்றதொரு நிலப்பயிராக அம்மணி காட்சிப்படுத்தப்படுகிறாள். நிலமும், பயிரும், உறவும் இல்லாத மனிதர்களேதும் உண்டா?

            இப்படியான, அன்புப்பயணம், கோபாலியோடு முதலில் இணைந்துக் கொள்கின்றது. இளமையும், நடுத்தரமும் கலந்ததொரு தொடல் அது. எப்பயோ பார்த்து பன்னாட்களுக்குப் பிறகு பார்க்கும் போது, ஏதோ ஒன்றிற்கு தான் விரும்பிய மனநிலைக் கிடைக்கின்றது அம்மணிக்கு. அதே மனநிலைதான் சென்னைக்குத் தள்ளுகின்றது. இது ஒரு விருப்பத்தள்ளல். அதற்குள் நிரம்புகிறாள். நிரம்பி வழிதலில் எத்தனையோ ஏச்சு பேச்சுகள், எகத்தாளங்கள், அறைதல், அடித்தல், முடி குலுக்குதல் எல்லாமே நடக்கின்றது. நடந்தாலும் அவளிடம் தெளிவு இருந்தது. சிறுவயதில் மொட்டையடித்த கண்டுமாமா பொண்ணும், நடந்தேறிய பல திருமணங்களால் என்ன நடந்தது என்ற கேள்வியும், கல்யாணம் பண்ணி வச்சாலும் திருட்டு மறைஞ்சிருமா? திருடினது திருடினதுதானே? என்ற நிச்சயமின்மையும், விருப்பப்படி நான் இருக்கப்போறேன். சுதந்திரமாக, கட்டற்றநிலையில். அது தான் எனக்குத் தேவையென்று கூறி இப்போ கோபாலி. கோபாலி பிடிக்கலன்னா வேற யாரோ? எனக் கட்டுடைக்கும் இடங்களிலெல்லாம் சமூகத்தின் ஒரு புதுப்பார்வையை, மனிதர்களின் ஊடான வாழ்வைப் புரிதலென்பது அவசியமானதென்பதை, எழுத்தாக்கப்படுத்துவதில் தி.ஜா. பெண்களின் அருகில் நின்று உற்றுப்பார்த்திருக்கின்றார். இவ்வுற்றுப்பார்த்தலில் தி.ஜாவுக்கும், பெண்களுக்குமான அலாதிப்பிரியம் வெளிப்படுகின்றது. எத்தனை, எத்தனை பெண்களுக்கான ஆழ்மனம் பாளம் பாளமான வெடிப்புகளில் ரத்தமும், வலியும், புண்ணும் ஆறாமல் இருந்திருக்குமென்பதை அறிந்ததாலயே முடிமழித்தலும், விதவைக்கோலமும் பார்த்து அவரால், அம்மணி என்ற பெண்ணை வைத்து வாதாட முடிந்தது.

            இன்னும் சொல்லப்போனால், ‘தான்’ என்ற அகங்காரம் கொண்ட பெண்ணாகச் சித்தரிப்பு செய்யவில்லை. ‘தான் விரும்பியபடி வாழ்தல்’ ‘சுதந்திரமாக இருத்தல்’ என்ற இரு நிலைப்பாடு தான் அம்மணிக்கு என்பதை தயக்கமில்லாமல் அறிவிக்கின்றார். இதை வாசிக்கும் நாம் முகச்சுளிப்போ, திருகுப்பார்வையோ செய்ய அவசியமே இல்லை. அனைவரின் மனதிலும் சதையில் சிந்தும் மெழுகு எளிதில் ஒட்டிக்கொள்வதைப் போல அந்த நிலைப்பாடு தான் கெட்டிப்பசையாய் ஒட்டிக் கொண்டுள்ளது. கால நீட்சியில் கள்ளத்தனமற்ற ஒட்டுதல் அது.

            பேச்சு. பேச்சு. ஓயாத பேச்சு.

            இந்த சுதந்திரப்பேச்சின் நீண்ட நேரத்தின் மாற்றாக ‘பட்டாபி’ வருகின்றான்.

            இப்படிதான் பட்டாபி வந்தான்.

            நல்ல பேச்சுமாகவும் அவன் இருந்தான்.

            பேசுதல் என்பது ‘இனிமை’. ஆனால், யார், யாரோடு என்பதில்தான் அந்த ‘இனிமை’ நுழைந்து உள்புகும்.

            அப்படி ஒரு ‘உள்புகுதல்’ பட்டாபியால் அம்மணிக்குத் தீர்மானிக்கப்பட்டது. அவள் விரும்பும், விருப்ப நபருக்குள் பட்டாபி நுழைகின்றான். மிக விருப்பமான நபராகின்றான். இந்த அதீத வேட்கையே கதையின் முடிவில் முடிச்சாயம் கலைக்கப்பட்ட அம்மணியால் தேடப்படும் இடத்தில் கூட பட்டாபி இருக்கின்றான். கோபாலியுடனிருந்து விலகித் தனிமைச் சாயையில் பதற்றத்திற்குள்ளாக சூழலில் உழலாமல் இருக்க ‘பட்டாபி’ தான் அம்மணியின் பொருத்தப்பாட்டிற்குள் மெதுவாக ஊர்ந்து வருகின்றான். இது மோதுதல் அற்ற இருமனங்களின் ஊர்தலாக வாசிக்கும் நாம் உணரமுடியும்.

            நம்மைப்பார்த்து, நம் வாழ்கின் நாட்களில் எல்லோரையும் கேள்வி கேட்க அனுமதிக்க முடியாது. அப்படிக் கேட்பதென்பது, நம் மனதிற்கு நெருங்கி வந்த அவர்கள் என்ன செய்தாலும் அதை ஏற்றுக் கொண்டு நடக்கும் மனநிலையும், நம்மை நாமே உணரச் செய்த ஒரு உருவம் கொடுத்த ஒருவர் என்று ஆண், பெண் இருபால் நிலைகளிலும் எல்லோரின் வாழ்விலும், தெரிந்தும், தெரியாமலும் ஒருவர் உழன்றுக் கொண்டேயிருப்பார்.

            அந்த ஒருவரைக் கண்டெடுத்து ‘அவரோடு வாழ்தலென்பது’ பிரபஞ்சத்தோடு இயைதலாக மாறும்.

            அப்படித்தான், அம்மணிக்கு, பட்டாபி தெரிகின்றான்.

            ‘உனக்கு என்ன வேணும்’ என பட்டாபி அம்மணியிடம் கேக்கும் போது தான்,

            ‘எனக்கு என்ன வேணும்’?

            எதைச்சார்ந்து நான் இயங்குகிறேன்? இயங்குதலில்லாமல் உள்ளுக்குள் சுழன்றுத் தவித்த என்னை, பட்டாபி தான் உடம்பும், உயிரும் கொடுத்தானோ? என்றெல்லாம் அம்மணி தன்னை சுயபரிசோதனை செய்யுமிடங்கள் காலச்சுழலில் அடிப்பட்டு காணாமல் போகும் ஒவ்வொரு பெண்ணுக்குமான பார்வையாக சமூகத்தை விவரணை செய்கின்றார் தி.ஜா.

            ஒரு வெளிநாட்டுப்பயணத்தில் பிடிக்காலி சதுக்கத்தில் ‘ப்ரூஸ்’ அறிமுகமாகி, ஷேக்ஸ்பியரும், நிறைய மனிதத்திரள்களுமாக மூழ்கிப்போகிறாள் அம்மணி.

            அந்த மூழ்கல் ப்ரூஸின் ‘மூச்சு முட்ட மூழ்கலாய்’ அவளுள்ளானது.

            புதிதாக மனிதர்களைப் பார்த்து என்னவாக போகிறாய்? ஊர்களைப் பார்த்து என்ன தெரிந்துக் கொள்ளபோகிறாய்? இத்தனை பேரை முத்தமிட்டு என்ன தெரிந்துக் கொண்டாய்?

            இதே நிலை வயதான பிறகு, தலை நரைத்தப் பிறகு, தோல் சுருங்கின பிறகு, பல் விழுந்த பிறகு சாத்தியப்படுமா?

            என்ற கேள்விகளை ப்ரூஸ் சொல்லிவிட்டு, அம்மணியைப் புதுமையாகப் பார்க்கத் துவங்கி, ‘நீ மிகமிகத் தூய்மையான மனுஷி‘ என்று கூறுமிடத்திலும், ப்ரூஸ் அம்மணியாகவே மாறித்தெரிவதும், ஒரு குழந்தையாக மாறித் தெரிவதாக அம்மணி உணருமிடத்திலும், பளிங்கு நீரில் தெரியும் முகம் போல் அப்பழுக்கில்லாத அம்மணியின் உள்ளம் நமக்குத் தெரிகிறது.

            தி.ஜா-வுக்குப் பெண்களைப் பற்றி, வலிந்து தூக்கிச் சுமக்காமல் இயல்பாக, எழுத்துக்கோர்வைகளில் கட்டத் தெரிந்திருக்கிறது. அந்த எழுத்துக்கட்டுமானம் தேவையானது.

            ஒரு இடம் அதை நாம் அப்படி உணரச் செய்யும்.

            “இத்தனை நேரம் வீட்டில் படுத்துக்கொண்டிருப்பதாக ஞாபகம்” என்று ப்ரூஸ் சொன்னபோது, “பெண் இருக்கிற இடம் எல்லாம் வீடுதான்” என்று அம்மணி சொல்வது சமூகத்தில் பெண்களைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருப்பது போதாதென்று, அதற்கான இடத்தைத் தருவிக்கும் பாங்கும், நறுவிசும் தேவையென புரியுமிடம் இது.

            ப்ரூஸைத் தாண்டித் திரும்ப ‘மதராஸூக்குள்’ கதை நுழைகிறது. கூடவே, நாமும்.

            மரகதம் இல்லை. பச்சையப்பன் இல்லை. எங்கே அவர்கள்? அது ஒரு கதையாகப் பின்பு தெரிந்துக்கொள்கிறாள் அம்மணி.

            தனித்திருக்கும் போது, ப்ரூஸ் சொன்னதெல்லாம் நினைவலையில் சொடுக்குகின்றது.

            நினைத்துப்பார்க்கிறாள்.

            வயதான பிறகு என்ன ஆகும்? கண்ணாடியில் பார்க்க விரும்பாத பொருளாக ஆனபிறகு?

            இளமை போன பிறகு? இந்த உடம்பு இரண்டாம், மூன்றாம் பொருளாக ஆன பின்பு?

எண்பது வயதின் பார்வையை அணிந்துக் கொள்கிறாள்.

பார்வையில் ஒரு தெரு தெரிந்தது. ஓரத்தில் பசு ஒன்று அசையாமல் கிடந்தது.

நான் ஏன் மரப்பசுவாக இருந்திருக்கக் கூடாது?

பசுவுக்கு உடைமைக்காரன் வேண்டுமென நீ நினைக்கத் துவங்கி விட்டாயா?

நான் அதீத “கம்யூனிஸ்ட்”.

அதாவது உடைமையில் நம்பிக்கை வந்துவிட்டது.

நான் “என் உடைமை”. அவ்வளவு தான் விஷயம்.

என்னுடைய மூப்பை, நம்பிக்கையை பட்டாபிதான் உணருவான். அவ்வளவே.

மரகதம், பச்சையப்பன், பட்டாபி – இது போதும்.

இதுவரை தன்னிடமிருந்த பொருளாதாரத்தைத் தூக்கிப் பிடித்த படாடோபங்களைப் பட்டியலிடுகிறாள். வெறும் பட்டும், நகையும், வெள்ளியும் கோபாலியிடம் ஒப்படைத்திட வேண்டும்.

அவை எல்லாம் அம்மணியைப் பார்த்துக் கேள்வி கேட்பது போல் தோன்றுகிறது.

ஹே…….

“நான் இல்லாமல்” மார்க்சியம்

                                                புரட்சி

                                                திட்டல்

                                                துன்பத்தில் இருப்பவர்களை நினைத்து அழுதல்.

இதெல்லாம் எப்படி?

என்ன சொல்ல?

அம்மணி நினைக்கிறாள் தனக்குள்.

“எதைப்பார்த்தாலும் சிரிப்பு வருகிறது”

தொடக்கவரியும், முடிவு வரியும் “நான்” மட்டுமே.


– ம.கண்ணம்மாள்

1 COMMENT

  1. கண்ணம்மாவின் அம்மணீ கட்டுரை நூறு முறை அம்மணீயை புத்துயிர் பண்பு செய்து மறுபடி மறுபடி வாசித்து மகிழ்வுச்சம் எய்திய நிலை அளிக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் நேசத்தின் தேடல் அடர்கடலாய் எங்கும் நீலமயமாய் விரிந்து பிரபஞ்சத்தை நினைக்கிறது. எங்கும் மகிழ்ச்சி..எங்கும் அம்மணிகள் தோன்றி, ஒத்த அலைவரிசைகளின் ஒத்திசைவால் பிரபஞ்ச கானத்தை தாளமுடியாத பரவசமாய் அகமெங்கும் விசுவரூப தரிசனம் கொண்டு இசைக்கச் செய்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.