சித்திரக்கதைகள் எனக்குள் ஒரு தாக்கத்தை சிறுவயதிலே ஏற்படுத்தியது ஆச்சர்யமானதொரு சம்பவம்.
அப்போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எனது குடும்பம் மிகவும் வறுமையில் வாடிய காலக்கட்டங்கள் அவை.
நான், அம்மா, அப்பா, அண்ணன் ஆகிய நால்வரும் ஒரு சிறிய குடிசை வாடகைக்கு குடியிருந்தோம். மின்சாரம், வானொலி, தொலைக்காட்சி என எந்தவித வசதி வாய்ப்பும் இல்லாத சூழ்நிலையில் எங்கள் வாழ்க்கை சக்கரம் ஓடிக் கொண்டிருந்தது.
அப்போதைய காலகட்டத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மிகமிக குறைவு. பள்ளிக்கு செல்வது, நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவது, நேரம் கிடைக்கும்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை காண்பது! அதுவும் வாரந்தோறும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ஒலியும் ஒளியும், ஸ்பைடர்மேன், ஈ மேன் போன்ற நிகழ்ச்சிகளை கூட அருகிலிருக்கும் வீடுகளுக்குச் சென்றுதான் பார்க்க நேரிடும். சொல்லப்போனால் இவைதான் எனக்கு அப்போதைய பிடித்தமான பொழுதுபோக்கு அம்சங்களாக இருந்தன. (ஸ்பைடர்மேன், ஈ-மேன் போன்ற பொம்மை கதை நிகழ்ச்சிகளால் ஏற்பட்ட தாக்கத்தினால் கூட காமிக்ஸ் மீது எனக்குத் தனி ஈர்ப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று பலமுறை நான் நினைத்ததுண்டு).
1985ஆம் வருடத்தில் ஒருநாள், நான் வசித்துவந்த தெருவில் நஸீர் என்கிற அண்ணனும் வசித்து வந்தார், ஒருநாள் அவர் பாக்கெட் சைஸில் வெளிவந்திருந்த, ஒரு சித்திரக்கதையை ஆர்வமாகப் படித்துக் கொண்டிருந்தார். (குற்றச் சக்ரவர்த்தியான ஸ்பைடரின்- பாதாளப் போராட்டம்) அவர் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தையும் அதில் வரையப்பட்டிருந்த சித்திரங்களையும் வியப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த அண்ணன் கதையைப் படித்து முடித்ததும், அவரிடம் இரவல் வாங்கிப் படிக்கத் தொடங் கினேன். அந்தக் கதையைப் படித்ததுமே, ஏதோ ஓர் இனம் புரியாத உணர்வு ஏற்பட்டு, நானும் அந்தக் கதைக்குள் ஒன்றிய மாதிரியான உணர்வு அப்போது எனக்கு ஏற்பட்டது. இப்படித் தொடங்கிய காமிக்ஸ் மீதான காதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்றது.
காமிக்ஸ் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவது என்பது எட்டாத கனியாக அப்போது இருந்து வந்தது . அதனால் புத்தகங்களை வாடகைக்கு எடுத்துத்தான் படிப்பது வழக்கம். (அந்தக் காலகட்டத்தில் லெண்டிங் லைப்ரரிகள் அதிகம் இல்லை. புத்தகங்களைச் சேமித்து வைத்திருப்பவர்கள் தங்களுடைய புத்தகங்களை 25 பைசா, 50 பைசாவுக்கு வாடகைக்கு விடுவார்கள்)
ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ், முத்துமினி காமிக்ஸ், சக்தி காமிக்ஸ் எனப் பலவித காமிக்ஸ் புத்தகங்களைப் படித்திருந்தாலும், லயன் காமிக்ஸ் மூலமாக வெளிவந்திருந்த சித்திரக்கதைகளைப் படிப்பதில்தான் அதிக ஆர்வம் செலுத்தினேன். அதில் வரும் நாயகர்களே மிகவும் என்னை கவர்ந்தனர். அதிலும் குறிப்பாக, டெக்ஸ்வில்லர், ஸ்பைடர், ஆர்ச்சி, ஜான் மாஸ்டர், அதிரடி வீரர் ஹர்குலஸ், இரட்டை வேட்டையர்கள், ஈகிள்மேன், இரும்புக்கை நார்மன் இன்னும் பல சித்திரக்கதை நாயகர்களின் கதைகளைப் படித்து அவர்களின் தீவிர ரசிகனாக மாறினேன். டெக்ஸ் வில்லரின் பவளச்சிலை மர்மம் என்ற கௌபாய் சித்திரக்கதை எனக்கு மிகவும் பிடித்த கதையாக இருந்ததினால், இந்தக்கதையைப் பலமுறை நான் படித்ததுண்டு.
ஆரம்பத்தில் காமிக்ஸ் புத்தகங்களைப் படிப்பதாக மட்டுமே இருந்த எனது ஆர்வம் 1987ஆம் வருடத்திற்குப் பிறகு, இந்தப் புத்தகங்களையெல்லாம் சேகரிக்க வேண்டுமென்ற ஆவல் எண்ணுள் எழுந்தது.ஆனால், புதிய புத்தகங்களை விலை கொடுத்து வாங்கமுடியாத நிலையில் இருந்ததால், பழைய புத்தகக்கடைகளில் எனது கவனத்தைச் செலுத்தினேன். 25 பைசா, 50 பைசாக்களுக்கு அட்டைகள் இல்லாமலும், பக்கங்கள் இல்லாமலும் (சில நேரங்களில் நல்ல நிலையிலும் புத்தகங்கள் கிடைக்கும்) அதன் பயனாக பலவித காமிக்ஸ் புத்தகங்கள் கிடைத்தன. ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ், மேத்தா காமிக்ஸ், திகில் காமிக்ஸ் எனக் கிடைத்த அனைத்துப் புத்தகங்களையும், வாங்கிச் சேகரிக்க ஆரம்பித்தேன். அந்தக் காலக்கட்டத்தில் வீதிக்கு வீதி ஏராளமான பழைய புத்தகக் கடைகள் இருந்தன. அதனால் காலையில் பள்ளிக்குச் செல்வதும், மாலையில் வாடகை சைக்கிளில் பழைய புத்தக கடைகளுக்கு செல்வதுமாகவே அதிக பொழுதைக் கழித்தேன்.
சென்னையில் கொடுங்கையூரில் உள்ள பாட்டி வீட்டிற்குச் சென்றாலும், அங்கும் வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு, நாற்பது, ஐம்பது கிலோ மீட்டர் தூரம் வரை சென்று அங்கிருக்கும் பழைய புத்தகக்கடைகளில் காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி வருவேன். இதன் காரணமாக நிறைய புத்தகங்கள் என்னிடம் சேரத் தொடங்கின.
சில சமயங்களில் புத்தகங்கள் வாங்குவதற்குப் பணம் தேவைப்படும் போதெல்லாம், பள்ளி இல்லாத நாட்களில் சிறுசிறு வேலைகளும் (பாத்தி கட்டி மரத்திற்கு தண்ணீர் விடுவது, சுருட்டுக்கு லேபிள் ஒட்டுவது! 1000 சுருட்டுக்கு லேபிள் ஒட்டினால் 25 பைசா தருவார்கள்) செய்யத்தொடங்கினேன். இதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டும் புத்தகங்கள் வாங்கினேன்.நான் முதன்முதலாக விலை கொடுத்து வாங்கிய புத்தகம், ராணி காமிக்ஸில் வெளிவந்திருந்த “புரட்சிவீரன்” என்ற கெளபாய் சித்திரக்கதையாகும்.
நிறைய புத்தகங்கள் என்னிடம் சேர்ந்திருந்த காரணத்தினாலும், மேலும் புதிய புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காகவும். என்னிடம் உள்ள புத்தகங்களை வாடகைக்கு விடுவதற்காக, எங்கள் வீட்டருகில் உள்ள ஒரு மரத்தடியில் சிறிய தரைக்கடை வைத்தேன். புத்தகங்களை 25 பைசா 30 பைசா, 50 பைசா (புத்தக விலைக்கு தகுந்தாற்போல் வாடகை கட்டணம் அமையும்) என வாடகைக்குக் கொடுத்தேன். அதில் சிறிய வருமானமும் வந்தது. ஆரம்பத்தில் புத்தகங்களை வாடகைக்கு எடுத்துச் சென்றவர்கள் மாதங்கள் ஆகியும் திருப்பித் தராததைப் பிறகுதான் உணர்ந்தேன். இதனால் நிறைய புத்தகங்களையும் இழந்தேன். இருக்கின்ற புத்தகங்களையாவது காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்தினால், வாடகைக்குவிடும் எண்ணத்திற்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.
புத்தகங்களை வாடகைக்கு விட்டதினால், நிறைய புத்தகங்கள் எனது சேகரிப்பிலிருந்து குறைந்துவிட்டன. அதனால் மீண்டும் புத்தகங்களைச் சேகரிப்பதற்காக உள்ளூர், வெளியூரில் உள்ள பழைய புத்தகக் கடைகளுக்கு சென்று எனது காமிக்ஸ் தேடுதல் வேட்டையைத் தொடர்ந்தேன். அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. நிறைய புத்தகங்களும் சேர்ந்தன. புத்தகங்களைப் பத்திரப்படுத்தி வைப்பதற்காக ஒரு மரப்பெட்டி தயார் செய்து அதில் புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்திருந்தேன்.
சிறிய குடிசை வீட்டில் நாங்கள் நான்கு பேர் வசித்து வந்தோம். எங்களுடன் நான் புத்தகத்திற்காகத் தயார் செய்திருந்த மரப் பெட்டியும் சேர்ந்துகொண்டதால் இட நெருக்கடி ஏற்பட்டதின் விளைவால் அம்மாவிடம் தினந்தோறும் திட்டு வாங்கி வந்தேன். ஒருநாள் இந்தப் புத்தகங்களை எங்கேயாவது தூக்கிப் போட்டுவிட்டு அப்புறமாக வீட்டிற்கு வா என்று கடுமையாக சொல்லி விட்டார்! அதனால், வேறுவழியில்லாமல் நான் அரும்பாடுபட்டு சேகரித்த அனைத்துப் புத்தகங்களையும் பாதி விலைக்கு வாங்கி விற்கும் கடைகளில் விற்றுவிட்டு எதையோ இழந்து விட்ட உணர்வுடன் வீடு வந்து சேர்ந்தேன்.
இரண்டு, மூன்று வருடங்கள் புத்தகங்களைச் சேகரிக்கும் எண்ணம் இல்லாமலே இருந்தேன். இதற்கிடையே பள்ளிப் படிப்பைப் பாதியிலே நிறுத்திவிட்டு நானும், என் அண்ணனும் வேலைக்குச் சென்றோம். இதனால் குடும்பக் கஷ்டங்களும் ஓரளவுக்கு நீங்கின. 1992ம் வருடத்தில் ஒருநாள் வேலைக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, கருணாமூர்த்தி என்பவர் தான் சேகரித்து வைத்திருந்த அனைத்து காமிக்ஸ் புத்தகங்களையும், புத்தக விலைக்கே விற்பனை செய்துகொண்டிருந்தார். அட்டைப்படத்துடன், நல்ல நிலையில் அழகாய் அடுக்கி வைத்திருந்த புத்தகங்களைப் பார்த்ததும், சில நிமிடங்கள் என்னையே மறந்து, புத்தகங்களையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர், இயல்பு நிலைக்குத் திரும்பியதும். அவரிடமிருந்து சில புத்தகங்களை வாங்கி அப்போதிலிருந்தே புத்தகங்களைச் சேகரிக்கவும் ஆரம்பித்தேன். அவரிடமிருந்து வாங்கிய புத்தகங்கள்தான், இன்று நான் 2000 புத்தகங்களுக்கு மேல் சேகரிக்க அன்றுதான் தொடக்கமாக அமைந்தது!
அதன் பிறகு, மாதந்தோறும் வெளிவரும் புதிய காமிக்ஸ் புத்தகங்கள் அனைத்தையும் வாங்கிச் சேகரிக்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில், வேங்கை வேட்டை (லயன் காமிக்ஸ்) என்னும் புதிய புத்தகம் வாங்கிய போது, அதில் சென்னையைச் சேர்ந்த T.R.D. தாஸ் என்பவர் தான் சேகரித்து வைத்திருந்த அனைத்து காமிக்ஸ் புத்தகங்களையும் விற்பனை செய்ய புத்தகத்தில் விளம்பரம் செய்திருந்தார். விளம்பரத்தைப் பார்த்த மறுநாளே, கொஞ்சம் கடன் வாங்கிக் கொண்டு, அவரைத் தேடி சென்னைக்குப் புறப்பட்டுவிட்டேன். பஸ் பயணம் முழுவதும் புத்தகங்களைப் பற்றிய நினைப்பாகவே இருந்தது. மிகுந்த சிரமப்பட்டு, அவரது இல்லத்தைக் கண்டுபிடித்தேன். எனக்கு முன்பாகவே அவருடைய விளம்பரத்தைப் பார்த்து, அவரிடமிருந்து நிறையபேர் புத்தகங்களை வாங்கிச் சென்று விட்டதாக அவர் கூறினார். இருந்தும் அவரிடமிருந்து நிறைய புத்தகங்கள் எனக்குக் கிடைத்தன. அனைத்துப் புத்தகங்களையும் அவரும் புத்தக விலைக்கே எனக்குக் கொடுத்தார்.
ஒரே புத்தகங்கள் என்னிடம் இரண்டு, மூன்று என இருந்தன. அதன் காரணமாக எதிரிக்கு எதிரி (லயன் காமிக்ஸ்) என்னும் புத்தகத்தில், நானும் விளம்பரம் செய்திருந்தேன். விளம்பரத்தைப் பார்த்த நிறைய நண்பர்கள் கடிதம் மூலமாக (அப்போது செல்போன் வசதியெல்லாம் இல்லாமல் இருந்தது.) தொடர்பு கொண்டு, புத்தகங்களை விலைக்கு (நானும் புத்தக விலைக்கே விற்பனை செய்தேன்) வாங்கிக் கொண்டனர்.
இந்த காலகட்டத்தில் நிறைய வாடகை நூலகங்கள் இருந்தன. நிறைய காமிக்ஸ் புத்தகங்களும் அங்கு கிடைத்தன. ஆனால் அவர்கள் வாடகைக்கு மட்டும்தான் தருவார்கள். விலைக்குத் தரமாட்டார்கள். 100 ரூபாய் கட்டணம் செலுத்தினால், அவர் களுடைய வாடிக்கையாளர்களாக நாம் ஆகிவிடலாம். நானும் ஒவ்வொரு வாடகை நூலகத்திலும் மெம்பராகச் சேர்ந்து அவர்கள் தரும் மூன்று நான்கு புத்தகங்களுடன் திருப்தி பட்டுக்கொண்டு அத்துடன் அந்த வாடகை நூலகம் பக்கமே செல்லாமல் இருந்துவிடுவேன். புத்தகங்கள் சேர்க்கப் பல வழிகள் உண்டு. எனக்கு அப்போது இதுவும் ஒரு வழியாகத் தெரிந்தது!
அதன் பின்னர் நிறைய பேனா நண்பர்களின் நட்பு கிடைத்த காரணத்தில் அவர்கள் மூலமாகமும் நிறைய புத்தகங்கள் கிடைத்தது. இன்று செல்போன், இண்டர்நெட் வசதிகள் அதிகமிருந்தும் லைப்ரரிகளும், பழைய புத்தக கடைகளும் குறைந்து விட்டன. அப்படியே சில கடைகள் இருந்தாலும் காமிக்ஸ் புத்தகங்கள் கிடைப்பது அரிதான விஷயமாக மாறி விட்டன.
காமிக்ஸ் புத்தகங்கள் வெறும் பொழுது போக்கிகளாக மட்டுமில்லாமல், நான் பார்த்திராத ஊர்களையும், நாடுகளையும், பார்க்க வைப்பதோடு, அதன் வரலாறுகளையும் தெரிந்து கொள்ள உதவிகரமாக இருந்து வருகின்றன!
காமிக்ஸ் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கி 30 வருடங்கள் கடந்துவிட்ட பின்னரும், அதன் மீதுள்ள ஆர்வமும் தேடலும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.
சித்திரக்கதைகள் எனது வாசிப்பு மட்டுமில்லாமல், அது எனது சுவாசமாகவும் இன்று வரை இருந்து வருகிறது.
-கலீல் அஹமது
அருமையாக எழுதி இருக்கீங்க கலீல் ஜி!
சூழல் காரணமாக புதையலை தொலைத்து பரிதாபமாக நின்ற உங்க சின்ன வயசு நினைவுகள் மனசை பிசைகிறது.
பின்னாளில் நீங்கள் இழந்த அனைத்தும் மீண்டும் சேகரித்து விட்டது அறிந்து மகிழ்ச்சி.
நினைவுகள் நீங்கா இடம் பெற்று விட்டன.