”பகடியை நிறுத்து என்கிறவர்கள் அடிப்படையில் ஒருவனை எழுதுவதை நிறுத்து என்கிறார்கள்.” -போகன் சங்கர்

தமிழிலக்கியத்தில் தொடர்ந்து இயங்கும் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவரான எழுத்தாளர்/ கவிஞர் போகன் சங்கரின் நேர்காணல் இது. போகனிடம் படைப்புகளை முன் வைத்து உரையாடும் விதமாக வடிவமைத்து இந்த நேர்காணலை செய்திருக்கிறார் நண்பர் க.விக்னேஷ்வரன்.

வாசிப்புக்குள்ளும் அதற்கு பிறகு எழுத வந்ததை எப்படி பார்க்கிறீர்கள்? இவற்றின் தொடக்க புள்ளிகள் பற்றி சொல்ல முடியுமா?

வாசிக்க ஆரம்பிக்கும்போதே எழுதவும் ஆரம்பித்து விட்டேன் என்று நினைக்கிறேன். படிக்கிற ஒவ்வொரு கதையின் தொடர்ச்சியையும் மாற்றுப் போக்குகளையும் மனதிலும் தாளிலும் எழுதிப் பார்க்கும் பழக்கம் இருந்தது.  இன்றும் தொடர்கிறது.இது அம்புலிமாமா,பாலமித்ரா, கோகுலம் காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. வாண்டுமாமாவின் பச்சைப் புகை போன்ற ஒரு சிறிய நாவலை நான் எழுதி எனது அப்போதைய புத்தகங்களுக்கான தொடர்பாகவும் தொடக்கமாகவும் இருந்த அக்காக்களுக்குக் கொடுத்தேன்.அவர்களுக்குத் துணையாக நூலகங்களுக்குப் போய் அங்கிருந்த சிறுவர் புத்தகங்களை எல்லாம் படித்துவிட்டு பெரிய புத்தகங்களுக்கு நகர்ந்தேன். நெல்லையில் இருக்கும் ஆலங்குளம் என்ற அந்த சிறிய ஊரின் நூலகத்தில் எத்தனை புத்தகங்கள் இருக்கும் ?  டான் குவிக்சாட் போன்ற புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளை அங்குதான் படித்தேன். ஏனோ சமையல்கலைப் புத்தகங்கள் மீது ஒரு ஈடுபாடு இருந்தது. அறுபது வகையான வங்காளச் சமையல் என்ற புத்தகத்தை ஏன் அவ்வளவு ஆர்வத்துடன் படித்தேன் என்று இப்போது விளங்கவில்லை.அந்த புத்தகத்தை சில பழைய அணில் மாமா புத்தகங்களை நூலகரிடம் லஞ்சம் கொடுத்து விலைக்கு
வாங்கவும் முயற்சி செய்தென். கடமை தவறாத அவர் மறுத்துவிடடார்.பெரியாரின் புத்தகங்களை நான் படிக்க ஆரம்பித்த பிறகுதான் அவர் சற்று பதற்றமடைந்தார்.

வழக்கமான கேள்வி தான் காமிக்ஸ்கள், தமிழ் இலக்கியம், அயல் இலக்கியங்கள் வரை தீவிரமான வாசிப்புள்ளவர் நீங்கள் இவற்றில் என்னை பாதித்தவர்கள் இவர்கள் என்று பட்டியல் நீங்கள் எழுதினால் (பட்டியலிட்டால் மட்டும் போதும்)யார் யார் பெயரை முதலில் எழுதுவீர்கள்.?

நிச்சயமாக எல்லோரும் சொல்லும் பெயர்களான டால்ஸ் டாய்,  தாஸ்தாவெஸ்கி, செக்கோவ், விக்டர் ஹ்யூகோ போன்ற பெயர்களோடு ஐரோப்பிய எழுத்தாளர்களான குஸ்டாவ் பிளாபர்ட், அகஸ்ட் ஸ்ட்ரின்ட்பேர்க், இப்ஸன் போன்றவர்கள் என் எழுத்தில் நிறைய தாக்கம் செலுத்தினார்கள். ஸ்ட்ரின்ட்பேர்க்கின் road to damascus எனக்கு மிக முக்கியமான புத்தகம். டான் க்விக்ஸ்சாடேயும் தான். தவிர மார்க் ட்வைன், எட்கர் ஆலன் போ, ஓ ஹென்றி, ஆஸ்கர் வைல்டு போன்றவர்களின் பாதிப்பு என்னிடம் மிக உண்டு. இவர்கள் ஆரம்ப கால பாதிப்புகள். பின்னால் பாக்னர், கிரகாம் க்ரீன், நீட்ஸே, தோரோ ,சார்த்தர் ,காம்யூ போன்றவர்களை சொல்ல வேண்டும்.

கவிதையில் எமிலி டிக்கின்சன் ,வில்லியம் பிளேக்,வொர்ட்ஸ்வொர்த் போன்றவர்கள் என் சிந்தையில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தினார்கள். சார்லோட்டே பிராண்டே யை மறந்துவிடக் கூடாது. இவை எல்லாவற்றையும் விட விவிலியத்தின் பாதிப்பு என்னிடம் நிறையவே உண்டு. விவிலியம் ஒரே புத்தகமாக மத நூலாகக் கருத்தப்படடாலும் அது பலர் வெவ்வேறு நடைகளில் எழுதிய ஒரு இலக்கிய பிரதியாகவே கருதுகிறேன்.ஹரால்டு ப்ளூம் தனது book of Jயில் அவ்விதமே கருதுகிறார். எனது சூழலில் அன்று கிறித்துவம் அதிகமாக இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். என்னை முதல் முதலாக நூலகத்துக்கு அழைத்துச் சென்ற சகோதரிகளே  என்னை தேவாலயங்களுக்கும்  ஐபக் கூட்டங்களுக்கும் அழைத்துச் சென்றார்கள். நான் அங்கு கொடுக்கப்படட சுவை மிக்க கேக்குகளை தின்றுவிட்டு தேவனை மிஸ் பண்ணிவிடடேன் என்று நினைக்கிறேன். அந்த சகோதரிகள்தான் நான் காதலித்த முதல் பெண்களும் கூட.

தமிழில் தி ஜானகிராமன் ,கரிச்சான் குஞ்சு போன்ற தஞ்சாவூர் எழுத்தாளர்கள்தான் என்னை ஆரம்ப கட்டத்தில் மிகவும் ஈர்த்தவர்கள். பாலகுமாரன் போன்ற வணிக எழுத்தாளர்கள் மூலம் கிடைத்த திறப்புகள் இவை. தமிழ் கவிதைகளில் எனக்கு வாசிப்பு இருந்தாலும் பெரிய பாதிப்பு இருந்ததாகத் தோன்றவில்லை. எஸ்.வைத்தீஸ்வரன் போல கொஞ்ச நாள் எழுத முயன்றிருக்கிறேன். கவிதைகளை பதின்மத்தில்தான் எழுத ஆரம்பித்தேன்.

எழுத ஆரம்பித்த பிறகு சுகுமாரனின் சொல்முறை எளிமையையும் வண்ணதாசனின் ஒளி நோக்கிக் கூர் தன்மையையும் கலாப்ரியாவின் வெடிப்புறுதலையும் முகுந்த் நாகராஜின் குழந்தமையையும் கவிதைக்குள் அடைய முயன்றேன். மனுஷயபுத்திரனின் கவிதைகளின் தன்னிரங்கும் தன்மை வந்துவிடக் கூடாது என்று நினைத்தேன். எல்லா சமயங்களிலும இது நடக்கவில்லை.

புனைவில் பஷீர், ஜெயமோகன், கோபி கிருஷ்ணன், அ.முத்துலிங்கம் போன்றவர்களின் விழுதுகள் என் எழுத்தில் உண்டு.

உங்களின் நிறைய சிறுகதைகளில் உடல் என்பது வலியான ஒன்றாகவும் மேலும் உடலைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்கிற ஆன்மாவின் குரல் ஒன்றும் தொடர்ந்து ஒலிக்கிறது. உடல்சார்ந்து எழுதப்படும இத்தகைய சிறுகதைளின் பின்புலம் என்ன?

என்னுடைய மற்றும் எனக்கு அணுக்கமானவர்களின் உடல் சார்ந்த பிரச்சினைகள் ஒரு நேரடிக் காரணம். என் உடல் எவ்வளவு வலியை நேரிட்டிருக்கிறது என்று யோசிக்க இன்று வியப்பாக இருக்கிறது . மிகச் சிறுவயதிலேயே இந்த வேதனைகள் தொடங்கிவிட்டன. மகிழ்ச்சி என்பது எனக்கு வலி இல்லாத பொழுதே என்பது போன்று மகிழ்ச்சிக்கு  ஒரு எதிர்மறை விளக்கத்துக்கு என் இளமைக்காலம் என்னைக் கொண்டு வந்துவிட்டது.  இப்போதும் சில நல்ல தினங்களில் உறக்கத்திலிருந்து விழித்துக் காலை நடை செல்லுகையில் என் உடல் திடீரென்று வலியை ‘மறந்து’ விட்டதை உணர்ந்து அதன் இயல்பு நிலைக்கு மீண்டுகொள்வதைக் கண்டிருக்கிறேன். பிறகு என் தொழிலும் வலி கவனிப்பது என்றாகிவிடட பிறகு உடல் எப்படி ஒரே நேரத்தில் ஒரு சாலையாகவும் சாலையின் நடுவே கொட்டப்படட ஒரு சல்லிக் குவியலாகவும் இருக்கிறது என்று நான் கவனிக்க ஆரம்பித்தேன்.  நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே முடியாத உடல் பிரச்சினைகளை நான் கண்டிருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன்.

இலக்கியத்தில் பகடி என்பது எப்போதும் ஒரு குரலாக இங்கு இருந்திருக்கிறது. (சில நேரங்களில் அது தன்னை பகடி செய்துக் கொள்வது அல்லது சமூகத்தை பகடி செய்வது என்கிற அளவில்) இதில் போகன் மட்டும் முடிந்தவரைக்கும் எல்லாவற்றையும் பகடி செய்து பார்க்கிறார். இவை சில நேரங்களில் அதிகம் ரசிக்கப்படுகிறது சில நேரங்களில் விமர்சனம் செய்யப்படுகிறது இவற்றை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்? பகடிகள் எந்தளவுக்கு இலக்கியத்திற்கு அவசியம்?

பகடி என்பது என்றைக்கும் புதிதல்ல. ஆர்தர் கோஸ்லர் தனது acts of creation நூலில் பகடி அல்லது நகைச்சுவைதான் படைப்பூக்கத்தின் முதல் படி என்கிறார். கூர்ந்து கவனித்தால்  எல்லா நகைச்சுவைகளும் பகடிகளே. வாழ்க்கை ஒரு அபத்தம் என்ற ஆல்பர் காம்யு/சார்த்தர் நிலைப்பாடுக்கோ ஒருகணத்துக்கும் அடுத்த கணத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற ஜென் புத்தம் சொல்லும் நிலைக்கோ வந்தவர்கள் வாழ்க்கை இயல்பாகவே தன்னைத் தானே பகடி செய்துகொள்கிறது என்பதைக் கண்டுகொள்வார்கள். மிக சீரியஸாய் எழுதப்படடவைகள் என்று நீங்கள் கருதும் நூல்களின் உள்ளேயும்  அவை வாழ்க்கை பற்றிய பகடிகள்தான் என்பதை நீங்கள் கண்டுகொள்ளும் ஒரு தருணம் வரும். அதாவது போரும் அமைதியும் நாவலும் மோகமுள்ளும் புதுமைப் பித்தனின் பொன் நகரமும் கூட பகடிதான். பகடியை நிறுத்து என்கிறவர்கள் அடிப்படையில் ஒருவனை எழுதுவதை நிறுத்து என்கிறார்கள். ஜன நாயகம், சுதந்திர வெளி, எழுத்துச் சுதந்திரம் என்று அதிகம் கதைக்கிற ஆள்கள்தான் இதில் முன்னணியில் நிற்கிறார்கள் என்பது தற்செயலானதல்ல.  பாசிசத்தை எதிர்க்கிறவர்கள் தங்கள் மனதின் ஆழத்தினுள் ஒளிந்திருக்கும் பாசிசத்தைக் கண்டுகொள்ளாத வரைக்கும் அது உலகில் உயிரோடு இருக்கும். நான் எல்லாவற்றையும் பகடி செய்கிறேன். மற்ற விஷயங்கள் பகடி செய்யப்படும் போது கிகி என்று இளிப்பவர்கள் தங்கள் மேல் அந்த வெளிச்சம் திருப்பப்படும்போது மூஞ்சியைக் கோணிக்கொள்வதை நீங்கள் கண்டால் அவர்கள் ஆழத்தில் பாசிஸ்ட்டுகள் என அறிக. நான் ஒரே நேரத்தில் ஒரே விஷயத்தை சீரியஸாகவும் பகடியாகவும் அணுகுவேன். ஒன்று மற்றொன்றை நிரப்பும். செழுமைப்படுத்தும். எதோ ஒன்று எல்லை மீறிப் போய்விடாமல் இருக்கச் செய்யும். நான் மிகுந்த மரியாதையுடன் வணங்குகிற விஷயங்களையே பகடி செய்கிறேன். செய்வேன். அந்த சுதந்திரத்தை எனக்கு வழங்குகிற விஷயங்கள் மீதே எனக்கு மரியாதையும் இருக்கும்.

போக புத்தகம் மொத்தம் 106 கதைகள் கொண்ட நிறைவான குறுங்கதைகள் கொண்ட தொகுப்பு அதன் முன்னுரையில் இவை புனைவா அல்லது அபுனைவா என்கிற கேள்விக்கு.. நீங்கள் எனக்கும் மிகச் சரியாகத் தெரியாது என்கிறீர்கள்? இப்போது அந்த தொகுப்பை ஒரு வாசகராக நீங்களே வாசித்தால் மனதில் எந்த மாதிரி எண்ணங்கள் தோன்றுகிறது.?

வாழ்க்கை ஒரு நீண்ட ஒற்றைக் கதையாடலா துண்டு துண்டான கதைத் துண்டுகளா என்ற கேள்விக்குப் பதிலளிக்க முடிந்தால் இதற்கும் பதில் அளிக்கலாம். அவை இன்று மீள வாசிக்கப்  படுகையில் அவை புனைவும் அல்ல அபுனைவும் அல்ல என்ற என் எண்ணம் வலுப்படுகிறது.

உங்கள் படைப்புகள் இருளிலிருந்து வெளிச்சத்திற்கு, வெளிச்சத்திலிருந்து இருளுக்கு இப்படி தான் அதிகம் பயணம் செய்கிறது. மனித வாழ்வும் இப்படித்தான் இருக்கிறது! இலக்கியத்தின் வழியே மனித வாழ்வை மேம்படுத்திவிடலாம் என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?

இலக்கியத்தின் மூலம் நீங்கள் இருக்கும் இருள் எவ்வளவு அடர்த்தியானது என்பதை என்று உணரலாம். இருள் உணரப்படுகையில் வெளிச்சமும் தென்பட ஆரம்பிக்கிறது.இலக்கியம் அந்த வேலையை நன்றாகவே செய்துவந்திருக்கிறது.

‘மீட்பு’ நிச்சயமாக தமிழ் இலக்கிய சூழலில் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. இன்றும் தொடர்ந்து பேசப்படும் சிறுகதை. மீட்பு போன்ற சிறுகதை எழுதும் போது மனதளவில் எப்படி உணர்கிறீர்கள்?

மனதளவில் என்பதையும் மீறி அது உடல் வரையும் பாய்கிறது. மீட்பு எழுதப்படட காலத்தில் நான் திரும்பாத திரும்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருந்தேன். மீட்பு மாதிரி கதைகள் எழுதப்படும்போது இது போன்ற கதைகளை எழுதும் சூழல் இனி எனக்கு வரக்கூடாது  என்ற பிரார்த்தனையுடன்தான் ஒவ்வொரு முறையும் எழுதுகிறேன். ஏறக்குறைய ஒரு மருத்துவரின் இரட்டை மன நிலை போல இது. ஒரு நோயாளியின் வருகையை ஒரே நேரத்தில் அவன் எதிர்பார்க்கவும் வெறுக்கவும் செய்வான்.

உங்களின் சில படைப்புகளில் ஆன்மிக தேடல்களையும், ஆன்மீக நெருக்கடிகளையும் சந்திக்கும் சில கதாபாத்திரங்கள் வருகிறது அடிப்படையில் போகனுக்கு ஆன்மீகத் தேடல்கள் இருக்கிறதா?

எனது வாழ்க்கையின் முற்பகுதி முழுக்க சாமிகள், சாமியார்கள், ஆன்மீக நூல்கள் பின்னால்தான் கழிந்தது. நான் இன்றளவும் இலக்கியத்தைக் கூட ஆன்மீகத் தேடல் கருவியாகவே நினைக்கிறேன். ஒரு விஷயத்தைத் தேட பல பிரவுசர்கள் இருக்கிறதல்லவா. ஆன்மிகம் என்றால் என்ன என்பதற்கு மதம் ஒரு பதிலை அளிக்கிறது. தத்துவம் ஒரு பதிலை அளிக்கிறது. இலக்கியம் ஒரு பதிலை அளிக்கிறது. இயற்பியல் இன்னொரு பதிலை அளிக்கிறது. எல்லாம் இயைந்த ஒரு பதிலை நான் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

இரண்டு மொழிகளை ஒரு படைப்பில் பயன்படுத்துவது குறிப்பிட்ட படைப்புகளை இன்னும் சுவாரசியமாக மாற்றுகிறது. மலையாளம் கலந்த தமிழை தொடர்ந்து உங்களின் படைப்புகளில் வாசிக்க நேர்கிறது. மொழிப் பிரக்ஞை ஒரு படைப்பாளிக்கு எந்தளவுக்கு அவசியமாகிறது?

எழுத்தாளன் தன்னை தனது  சொந்த ஊரில் இருந்தால் கூட தான் ஒரு ‘அந்நியன்’ என்று உணராவிடடால் படைப்பு சாத்தியமில்லை என்றே நான் நினைக்கிறேன். இதனாலேயே ஒருவன் வேறு இடங்களுக்கும் வேறு கலாச்சாரங்களும் வேறு மொழிகளுக்குள்ளும் பயணிக்க வேண்டி இருக்கிறது. இலக்கியம் என்பது defamiliarization தான். மலையாள மொழியும் கலாச்சாரமும் நிலமும் இப்படி எனக்கு ஒரு தன்மறைத்தலை தன்மறத்தலை அளிக்கிறது.

உங்கள் கவிதைகளில் நிராகரிக்கப்பட்ட அன்பு ஒன்றும், நிறைய தனிமைகளும், அழகான கிருஸ்துவ உலகமும், நோயுற்ற மனிதனின் அவஸ்தைகளும், மனச்சிக்கல்கள்,அதீத பயங்கள்,குழப்பங்கள், கனவுகள் தொடர்ந்து வருகிறது. சிலசமயங்களில் மொழியின் உச்சம் தொடும் அழகியல் கவிதைகள் வருகிறது. உண்மையில் கவிதைகளுக்கான எண்ணங்களையும், கவிதைகளையும் எங்கிருந்து கொண்டு வருகிறீர்கள்.?

கவிதை எனக்கு குறிப்பிட்டு  சொல்ல முடியாத பல்வேறு மூலகங்களிலிருந்து வருகிறது. சில சமயம் பிற கவிதைகளிலிருந்து.பல நேரங்களில் கவிதையற்ற எழுத்துக்களில் இருந்து.சில நேரங்களில் புலன் குழப்பங்களில் இருந்தும் தியானத்திலிருந்தும்.

போத மனம் கவிதையின் முகத்தை எவ்வாறு நேர்கொள்கிறது.? மனச்சீர்குலைவின் ஒழுங்குகளாய் வார்த்தைத் துணுக்குகள் உருத்திரள்வதாக சாதாரண வாசகன் எண்ணுகிறானா.? ஆயின் அப்பாராதி தூரங் கடக்க கவிஞன் எப்படி அவனை அணுகுவது?

கவிதை எழுதாத தருணத்தில் நான் என்ன செய்கிறேன் என்பது இன்று வரைக்கும் எனக்கு குழப்பமாகவே இருக்கிறது. கவிதை எழுதாத தருணத்தில் இவற்றை எழுதியவன் யார் என்று சதா கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருக்கிறேன். அவன் வேறொரு ஆள் என்கிற பிரமையும் ஆறுதலும் பீதியும் ஒரே நேரத்தில் எனக்கு ஏற்படுகிறது. வாசகனை அவன் வலிப்பு வருகிற ஒருவருக்கு மற்றவர் துணை ஒரே நேரத்தில் தேவைப்படுவது போலவும் தேவைப்படாதது போலவும்தான் அவன்
அணுகுகிறான்.

மிக நீண்ட காலமாக வாசகனே தான் தேடிக் கண்டடைய வேண்டும் என்றொரு பதிலிலேயே பெரும்பாலோர் முடித்துக்கொள்வதால் இதை கேட்க நேர்கிறது.

கவிதை எழுதியவரின் கைரேகை போன்றது என்று சிலர் கருதுகிறார்கள். வாசிப்பவர் தனது  கைரேகை கொண்டு அதைத் திறக்க முடியாது என்று சொல்வோரும் உண்டு. ஜென் மொழியில் சொன்னால் கவிதை என்பது ஒரு குளத்தில் கல் எறிந்துவிட்டு அலை எழும்பக் காத்திருப்பது. உங்களை போலவே என்ன மாதிரியான வரைவில் அலை எழும்பும் என்று கவிஞனும் அறியான். அவனும் காத்திருக்கிறான். உங்களைப் போல,கல் எறிந்தவன் அவன் என்பது மட்டுமே அவன் செயல். அதன் பிறகு குளத்தின் செயல்.

நவீன தமிழ் இலக்கியச்சூழல் இன்று எப்படி இருக்கிறது?

எனக்கென்ன தெரியும் ? அது வழக்கம்போல தனது முட்டாள்தனங்களோடு போலி வைரங்களோடு நடுநடுவே சிலுவையை விட்டு இறங்கிவரும் சாத்தான்களோடும் சவுக்கியமாக இருக்கிறது. அது அவ்விதமே இருக்கட்டும். புறச் சூழல்கள் இப்படி இருக்கும் போது அது இவ்விதம்தான் இருக்க முடியும்.

சமூக ஊடகங்கள் பெரிய ஆதிக்கம் செலுத்தும் சமூக சூழ்நிலையில் ஒரு படைப்பாளின் முன்பு இருக்கும் சவால்கள் எவை? படைப்பாளிகள் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று சில குரல்களும் இங்கு ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. இவை இரண்டையும் எப்படி பார்க்கிறீர்கள்?

படைப்பாளிகள் வாழ்க்கையை விட்டு வெளியேறவேண்டும் என்றும் யாராவது சொல்வார்கள். இடாலோ கால்வினோவின் ஏன் க்ளாஸிக்குகளைப் படிக்கவேண்டும் கட்டுரையில் இதற்குப் பதில் இருக்கிறது. அவர் காலத்தில் சமூக ஊடகம் என்பது செய்தித் தாள்கள், சினிமா போன்றவையாக இருந்தது. இதை பற்றிப் பேசுகையில் அவர் இசை என்பது மவுனத்தால் அல்ல இரைச்சலால்தான் வரையறுக்கப்படுகிறது என்று சொல்கிறார். ஆசிட் ராக்கில் இரைச்சலே இசையாவதில்லையா ?

கவிதைகள், சிறுகதைகள், குறுங்கதைகள் என்று இயங்கும் போகனின் படைப்புலகத்தில் நாவல்கள் எப்போது இடம்பெற போகிறது.?

தெரியவில்லை. நாவல் ஒரு நீண்ட கலவி. இரண்டு மூன்று நாவல்கள் எழுதப்பட்டு பாதியில் நிற்கின்றன.அவற்றைத் தொடங்கிய நபரும் நானும் இன்று தொடர்பற்ற மனிதர்களாக ஆகிவிட்டொம்.ஒரு நாவல் எழுத வேண்டும் ஒரே ஆளுமையைத் தக்கவைத்துக் கொள்வது சிரமமாக இருக்கிறது.

தொடர்ந்து சில அயல் இலக்கிய ஆளுமைகள் மட்டும் இங்கு பேசப்படுகிறார்கள். இவை தவிர்த்து நிறைய பேரை நாம் பேச வேண்டும் என்று சொல்லும் குரல்களில் ஒரு குரல் உங்களுடைய குரல். இன்னும் அந்த குரலின் தேவை இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது. அமெரிக்க எழுத்தாளர்கள் நிறைய பேர் இங்கு பேசப்படவே இல்லை. நமது இடதுசாரி சாய்வு ஒரு காரணம். கன்னடத்தில் இந்தியில் இந்திய ஆங்கிலத்தில் பெங்காலியில் இன்று யார் ஆளுமைகள் என்று நமக்கு தெரியாது. சிங்களத்தில் நல்ல நாவல்கள் எதுவும் உள்ளனவா நமக்கு தெரியாது. ரைம்போ இன்றுதான் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறார். அவண்ட் கார்ட் என்ற பெயரில். இந்த அவந்தி கார்டுக்கு நூறு வயதுக்கும் மேல் ஆகிவிட்டது !

இலக்கியத்தில் இதையெல்லாம் தவிர்த்திருக்கலாம், இதையெல்லாம் செய்திருக்கலாம் என்று நினைக்கும் இரண்டு விஷயங்கள் எவையெவை…?

இலக்கியத்தில் சிலருடன் பிணக்கு கொள்ளாமல் தவிர்த்திருக்கலாம் என்று நினைத்ததுண்டு. சிலருடன் காதல் கொள்ளாமல் என்றும்தான்.

“எழுத்திலும் கலையிலும் முன்னேற கொஞ்சம் அகங்காரம் வேண்டும்.ஒரு கலையைப் பயில்தல் என்பது உங்கள் அகங்காரத்தைப் பயில்வதுதான்” இது உங்களின் வரிகள் புதியதாக எழுத வருபவர்களுக்கு இதை தான் சொல்வீர்களா இல்லை வேறு எதுவாது உண்டா?

மற்ற கலைகளுக்கெல்லாம் உங்கள் உடலையும் பயிற்றுவிக்க வேண்டும். எழுத்து மட்டுமே நேரடியாக உங்கள் அகங்காரத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது. எழுத்து எது உங்கள் உடல் எது உங்கள் அகங்காரம் என்று கண்டுகொள்வதும்தான்.

 

நேர்கண்டவர்: க.விக்னேஷ்வரன்

4 COMMENTS

  1. சிறந்த கூரான உரையாடல். திருப்தியாகவும், திருப்தி இல்லாமலும் உணர்கிறேன்.

  2. நல்ல நேர்காணல். இன்னும் கொஞ்சம் அதிகமாகவே நீண்டிருக்கலாம் என்பது எனது எண்ணம். படக்கென்று முடிந்து போனதாக உணர்கிறேன். நன்றிகள் மரியாதைக்குரிய போகன் சாருக்கும், விக்னேஷ்வரனுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.