“ஏ.. புள்ள செலுவி இங்க வாடி செத்த”
“யத்தே சொல்லுத்தே”
“நாளக்கி மொத பஸூக்கு நானும் மாமனும் மெட்ராஸூக்கு கெளம்புறோம்டி. நாளக்கலிச்சு வெசால கெலம ரவைக்குள்ளாற வந்துறுவோம். பொளுது எறங்கங்காட்டியும் ஊட்டுல ரைட்டு போட்டு.. விடியங்காட்டியும் சத்த அமத்திப்புடு கண்ணு..”
“சரித்தே.. மாமனும் உன் கூட வருதா.?”
“ஆமாங்கண்ணு. மாமன் இல்லாத போனா தடுமாறிப்புடுவேன்.. அம்மான் தொலவு வேற தொணைக்கு ஆருனா வேணும்ல.”
“ம்ம்.. அதுவும் சரிதா. பஸ்ஸூலியாத்தே போற ?”
“இங்கேருந்து ஆத்தூர் வரை பஸூ. அப்புறம் சேலத்துலேருந்து வர எட்டரை ரேலு.. மாட்டை சம்மந்திகாரி ஊட்ல கட்டிருக்கேன். ஒனக்கு இந்த வேல மாத்துறம்தான் கண்ணு.. மறக்காதடி என் ராசாப்பொண்ணு.”
“சரித்தே மறக்கல.. நான் ஊட்டுக்கு போறேன். ரவைக்கு எங்க பெருச வெளிவாசல்ல படுத்துக்க சொல்றேன்.. வரும்போது மறக்காத எனக்கு தீனி வாங்கியா..”
“சரிடி.. ஒனக்கில்லாததா. கட்டாயம் அத்தே வாங்கியாறேன்.. “
பக்கத்து காட்டுகாரி குப்பாயி மருமவ செல்வி வேத்துசனம் தான். அவசர ஆபத்து எதுக்குனாலும் வருவா. சொந்த மாமனையே கண்ணாலம் பண்ணிக்கிட்டா. எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு சொந்தம். எந்த சலுப்பு சங்கடம்னாலும் ரெண்டே நாள்தான். கந்தன் பரோட்டா சேவு வாங்கியாந்து கொடுத்தா சண்டை சமாதானமாயிபுடும். மூனாவது புள்ள வவுத்து ஆம்புள புள்ளை வேணும்னு ஆச. சொன்னாலும் கேக்கமாட்டா. வாரிசு ஓனும்லத்தே என்பாள். ரெண்டாவது பொம்பள புள்ளையா போச்சுனு பாலு குடுக்கமாட்டேன்னு ரவுசுப்பண்ணப்ப.. ‘அடி சிறுக்கிகளா பொச்சுல என்ன டி இருக்கு.. அல்லாம் மனசுல தான் இருக்குது.’ னு குடும்பத்தையே வெளுத்து விட்டாள் ஆயா..
“நம்மூட்டுக்கு வந்ததும் இருக்கே.. மூளுக்குனா மூலையில போயி உக்காந்துக்குது.. மாட்டு சாணியை அள்ளாத இந்தாளு எங்க போனாரு. பூசைக்கு சாமானத்தை வேற வாங்கியாற சொல்லனும்’ ” அம்மாளின் புலம்பலைக் கேட்டுக்கொண்டே அவளின் பயணத்திற்கு வேண்டியதை எடுத்து வைத்துக்கொண்டிருக்கிறேன்..
மாத்துத்துணியும் செலவுக்கு கொஞ்சம் துட்டும் ஆயாளுக்கு பிடித்தமான சீலையும். அவள் எப்போது எங்கு சென்றாலும் அந்த கடல் பாசி நிற சீலையைத்தான் கட்டுவாள். ‘கூத்தன் கண்ணாலத்துக்கு எடுத்துக்குடுத்தான்.’ என்று அந்த சீலையைக்கட்டும் போதெல்லாம் அந்த கல்யாணத்தில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் ஒன்றுவிடாமல் வரிசைக்கட்டி கூறிவிடுவாள்.. எப்போதும் ஒரேபோல் மாறாமல் எப்படிதான் அதே உற்சாகத்தோடு கூறுவாளோ தெரியவில்லை. கேட்பவர்களுக்கு தான் சலுப்பு தட்டும். அவள் சொல்ல சொல்ல ஒரு ‘ம்’ ஆவது கொட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் சண்டைக்கு வந்து விடுவாள்.
அவளின் சீலைத்துணியும் அவள் கட்டில் போட்டுப்படுத்திருந்த வேப்பமரத்து இலையும் அவள் உயிர் பிரிந்த இடமும் அதுதான். அந்த மரத்தடியிலேயே தான் கயித்துக்கட்டிலில் படுத்திருப்பாள். காற்று, குளிர், சூறாவெளி என்று எதற்குமே அஞ்சாதவள் மழைபெய்தால் மட்டும் முன்வாசலில் கட்டில் கிடக்கும். மழை விட்டவுடனேயே ‘கட்டுல சத்த மரத்தடியில எடுத்துப்போடு சாமி’ என்பாள். ‘ஏன்யா அந்த மரத்தடியில என்ன பொதையலா வெச்சிருக்க’ என்று கிண்டலடித்துக்கொண்டே எடுத்துப் போடுவோம். ஆனிமாதம் என்பதால் வேப்பங்கொட்டையும் ஒரு பேப்பரில் மடித்து வைத்துக் கொண்டாள் அம்மா. சித்திரை மாதம் துவங்கி ஆடி மாதம் வரை இந்த வேப்பங்கொட்டையை பெரக்குவது தான் ஆயாளின் வாடிக்கை. போனியில் சோத்தை எடுத்துக்கொண்டு காடுகாடாக அலைவாள். கால் மிதிபடாத சதையாக உள்ள பழங்களை மடியில் கட்டிக்கொண்டு வாயில் போட்டு சப்பிக்கொண்டே மீதியுள்ளவற்றை தென்னம்பாளையால் கூட்டி கூமாச்சியாக்கி ஒரு குட்டிசாக்களவு கட்டி தலையில் தூக்கிவருவாள். இல்லையென்றால் யாரோடைய வண்டியையோ சைக்கிளையோ நிப்பாட்டி ஏறிக்கொள்வாள். ஊரில் உள்ள அனைவருக்கும் அவளை தெரியும். அவளுக்கும் அப்படிதான். யாரையும் மதிக்கமாட்டாள் சகட்டுமேனிக்கு வைதுவைப்பாள். ‘ஏன்யா இப்படி ரௌடிமாதிரி பண்ற’ என்று கேட்டால் ‘இந்த ஊர்லயே நான் தான்டா வயிசுல பெரியவ அல்லாருக்கும் மூத்தவ நானு நான் ஆருக்கு மருவாதி குடுக்கனும் ‘ என்று பெருமை அடித்துக்கொள்வாள்.
ஆத்தூர் பஸ்ஸில் அப்பனும் ஆத்தாளும் கிளம்பிவிட்டார்கள். இன்னேரம் கிட்ணாவரம் தாண்டியிருக்கும் பஸ்ஸூ. அப்பா பாவம் கிளவி உயிரோடு இருந்தவரை அதனிடம் படாதபாடு பட்டார். அப்பனை கொச்ச கொச்ச வார்த்தையாக திட்டுவாள். தாங்கமாட்டாமல் பூத்து பூத்தென மூச்சுவிட்டுக்கொண்டு திரும்ப திட்டுவார். இப்படித்தான் ஒருநாள் ‘நீ என்ன என் பொண்டாட்டிக்கு ஆத்தாளா? வளத்தவ தானே’னு கேட்டுவிட்டார். அவ்வளவுதான் ஆயா திட்டப்போகிறாள் என்று நினைத்திருக்கும் போது அழ ஆரம்பித்துவிட்டாள். அப்பனுக்கு ஒரே சங்கடம் ‘இதுக்கு இந்த கெள முண்ட திட்டியே இருக்கலாம்’னு சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பப்போகையில் மூக்கை சிந்தி எரிந்துவிட்டு ‘கட்டியதிண்ணியாரே. சாந்தநக்கியாரே என் புள்ளைக்கு கையெலுத்து போடத்தெரியும் டா. குஞ்சப்புடிச்சி ஒண்ணுக்கு அடிக்க தெரியாத பய நீ. புள்ள பெக்க வந்தவ ஊடு வந்து சேரங்காட்டியும் இன்னொரு பொண்டாட்டி கேக்குதோ மாப்புளைக்கு. ஏதோ.. என் புள்ளைய சலாக்கான் புலக்கான் போட்டு ஓத்து ரெண்டு புள்ளைய பெத்துட்ட. அதனால இந்த ஊட்டுல நீ இருக்க.’ என்று சகட்டுக்கும் பேசிவிட்டாள். அவள் திட்டிய திட்டிற்கு வேற யாராவது இருந்திருந்தால் என்ன ஆகி இருக்குமோ. அவள் திட்டியதை அடியோடு மறந்துவிட்டு. அப்பன் சொன்ன வார்த்தைகளை பிடித்துக்கொண்டு தினமும் ஒப்பாரி சொல்லி அழுவாள்…ஆயா எப்போதும் அப்படிதான் அடுத்த வம்பு கிடைக்கும்வரை முன்னதை விடமாட்டாள். ராவும் பகலும் ஒப்பாரி சொல்லி அழுதபடியும் அப்பனை திட்டித்தீர்த்தபடியுமே கிடந்தாள். ஆனாலும் அப்பன் சோத்து வேளைக்கு வந்தால் அண்ணன் பிள்ளைகளை கூப்பிட்டு சோறு போட்டுக் குடுக்க சொல்வாள். ஆயாளை புரிந்துக்கொள்ளவே முடியாது.
‘மொத்தம் இருவது புள்ளைகள பெத்தெடுத்தா எங்கம்மா.. மவராசி. அதுல பன்னென்டு பொட்ட மீதி எட்டும் ஆணு. எங்கய்யாரு எங்க ஆருக்கும் ஒரு கொறையும் வெக்கில. சோத்துக்கு எங்க காட்டு நெல்லு தான். வேவவெச்சு குத்தி தான் சோறுபொங்கனும் அம்புட்டு பேருக்கும். ஆளுக்காரன் நாலு உருப்படி. நாயி அஞ்சு னு அத்தனை பேருக்கும் பித்தாள காசுப்பாணையில சோறாக்கும் எங்கம்மா. துணியிலும் வருசம் ரெண்டு தடவ நாங்க கேக்கங்காட்டியுமே வாங்கியாந்துருவாரு எங்க அய்யாரு. நாப்பது ஏக்கர்ல மொந்தவாழை, தேன்வாழை, பூப்பழம், நாவமரம், புளியமரம், தென்னமரம், பனை மரம் மட்டும் காட்டை சுத்தி அறுவது மரம். சப்போட்டா, நாத்தங்கா, கொய்யா, பப்புளி, மாங்கானு நாங்க தின்னது போவ மிச்சத்த தான் விப்பாரு எங்கய்யா. இருவது மாடு அதுல நாலு எரும. எரும பாலைஊட்டுக்கு வெச்சிக்குவோம். அதுல தயிர் போட்டா அப்புடியே கல்லுக்கணக்கா இருக்கும் பெசைஞ்சா வெண்ணை வெரலெல்லாம் ஒட்டும்.. அப்புடி திண்ணு வளந்த ஒடம்பு அதான் இன்னும் ஒரு ஊசிகூட போடாம இருக்கு. இந்த ஏலுமலைய பாரு எப்பபாரு ஆஸ்பத்திரிக்கும் ஊட்டுக்கும் மாத்தி மாத்தி ஓடுறான். ஆளும் மொவரையும் ஆம்புளைனா தெடமா இருக்க வேணாம்.’ எங்கு எந்த கதையை பேசினாலும் அப்பனை திட்டாமல் முடிக்க மாட்டாள். அப்பா அம்மாவை ஒதுக்கிவிட்டு இரண்டாம் கல்யாணம் செய்ததில் பெரும் மனக்கசப்பு அவளுக்கு. பிறகு மாமா ஊர் பெரியவரை அழைத்து போலீஸில் சொல்லி எழுதி வாங்கி அந்த அம்மாளுக்கு நட்டம் கட்டி என்று ஒருவழியாய் சரியாயிற்று. மாமனுக்கும் அம்மாளுக்கும் அப்பன் ஒன்று தான், அம்மா தான் வேறு. ஆனால் அந்த பாகுபாடு பார்த்ததில்லை மாமா. ஆயாளின் தங்கைகளின் பிள்ளைகள்தான் இருவரும்.
மாரிமுத்து தாத்தாவிற்கும் ஆயாளின் ஒரு தங்கைக்கும் பிறந்தது தான் மாமா. மாமன் பிறந்ததும் மீனாச்சி ஆயா ஜன்னி கண்டு செத்துபோக இன்னொரு தங்கையைப் பிடித்து மணம் முடித்து வைத்திருக்கிறார்கள். அந்த ஆயாளுக்கு பிறந்தது தான் அம்மா ராணி. மாரிமுத்து தாத்தா அந்த காலத்துலயே மிகவும் பவுசான ஆள். கிருக்கு செருப்பும் வெள்ளைக்கார கிராப்பும் சாரட் வண்டியும் சிலுக்கு சட்டையும் போட்டு ஒரு போட்டோ இப்போதும் மாமா வீட்டில் இருக்கிறது. ஒரு வேலைக்கும் போகாமல் சொத்தைக்காட்டி கடன் வாங்கியே பொழப்பை ஓட்டியிருக்கிறார் தாத்தா. கடன் கொடுத்தவர்கள் அவமானமாக பேசிவிட காட்டிய இடத்திலும் நீட்டிய பேப்பரிலும் பெருவிரலை உருட்டிவிட்டு வந்திருக்கிறார்.
புத்தி சரியில்லாதவர் என்று தெரியாமல் ஆயாளை கண்ணாலம் கட்டி வைக்க. உண்மை தெரிந்தவுடன் அங்கிருந்து கிளம்பி தன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்ட ஆயாளிடம் அம்மாளையும் மாமனையும் கொடுத்துவிட்டு மனைவியோடு சேர்ந்து பஞ்சம் பிழைக்க மைசூருக்கு போனவர்தான், திரும்பவே இல்லை. குந்தி தின்றால் குன்றும் மாளும் என்பதற்கு இந்த தாத்தாவை உதாரணமாக அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாள் ஆயா. பாவம் ஆயா. ஆனால் தைரியமானவள். நாலு வருடத்தில் கட்டியவர் இறந்து விட பைத்தியம் குணமாகி ஆயா வாழப் போவாள் என்று நினைத்திருந்த பெரியதாத்தனுக்கும் பெரிய ஆயாளுக்கும், பெரிய தீராசோபை. அவன் கூட நான் வாழவேஇல்ல ‘அவன் எப்படி எனக்கு புருசனாவான். இந்தா அவன் கட்டுனது’ என்று தலைவழியாக தாலிகவுத்தை உருவி அவளின் அம்மா கையில் திணித்துவிட்டு தலைக்கு தண்ணி ஊத்திக்கொண்டு அருவா, கவுரு, சோத்துச்சட்டியும் பிறகு ஒரு வட்டத்தையும் சுருட்டி பிரம்புக் கூடையில் வைத்துக்கொண்டு காட்டுக்கு கிளம்பி விட்டாளாம். மாமனுக்கு அப்போது நினைவு தெரிந்த வயது. அவரும் கூடவே சென்றிருக்கிறார். ‘எங்கம்மாளுக்கு எவ்வளவு தெகிரியம். ஆரும் தன்னை நெனச்சி கவல பட்டு நொந்துக்க கூடாதுனு காட்டுக்கு வெரவு வெட்ட வந்துட்டாக’ என்று சொல்லிக்கேட்டிருக்கிறேன்.
“ஹலோ. அப்பா. எங்க இருக்கிங்க? ம்ம். சரிப்பா.. அம்மா சாப்ட்டுச்சா.. அத எப்புடியாச்சும் சாப்புட வையி.. சாப்டாத எங்கனாச்சும் மயக்கம் போட போவுது. இல்லப்பா. பிரசரு இருக்குல்ல.. சரி எறங்கினதும் போன் பண்ணு.. பச்ச பட்டனுதான் ரெண்டு தடவ அமுக்கு.. ம்ம் செவப்பு தான்.. வெக்கிறேன்..”
அப்பா பாவம் உலகம் தெரியாதவர். கேட்பார்பேச்சை கேட்டு ரண்டாம் கல்யாணம் பண்ணிக் கொண்டார். அதிலிருந்தே அப்பனைக் கண்டாலே ஆயாளுக்கு ஆவதில்லை. அம்மா சித்த நேரம் அப்பனோடு சிரித்து பேசிவிட்டாலே, வசைபாட ஆரம்பித்துவிடுவாள். அப்பனுக்கும் அம்மாளுக்கும் சினிமா பார்ப்பதென்றால் கொள்ளைப் பிரியம். நாளெல்லாம் காட்டு வேலையில் நேரமிருக்காது. ரெண்டாம் ஆட்டத்திற்கு ஆயாளுக்கு தெரியாமல் பின்பக்க தட்டியைப் பிரித்துக்கொண்டு சைக்கிளை காத தூரம் உருட்டிக்கொண்டே போய் பிறகு ஏறிக்கொள்வார்கள். இந்த ஊரில் இருக்கும் ஒரே கொட்டகையில் ஒரு வாரம் ஒரு படம் ஓடினாலே அது பெரிய விசயம். அதிகநாட்கள் ஓடியபடம் பாசமலர் மட்டும்தான். அதை தினமும் போய் பார்த்து அழுதுத்தீர்த்த வரலாறு கூட இருக்கிறது. “தட்டுவாணி சிறுக்கி அவன் ஒரு ஆம்பளையாட்டம் அவன் கூட ராவுல போறியே? ஊரு கெடக்குற கெடப்புல எவனாவுது ரெண்டு பேரு சேந்து வந்தா அவன் சமாளிப்பானா.. உன்னை உட்டுட்டு ஓடிருவானே.. அவன் கூட ஏன் போற.. ” என்று அம்மாளை போட்டு அடிப்பாள். கூரையில் அடிக்கடி நல்லபாம்பு ஏறிக்கொள்ளும் அதை ஒற்றையாய் பயமில்லாது அடிப்பாள் அம்மா. ஆனால், கிளவி அடிப்பதை எதிர்ப்பில்லாமல் வாங்கிக்கொள்வாள். குப்பாயி அத்த கேட்டால் ‘எங்கம்மா தான அடிக்கிது வுடு கா. அதுக்கு நான் மாமங்கூட பேசரதே புடிக்கிறதில்ல. அதுக்கு அப்புடியே இருக்க முடியுமா. அந்த மனுசன் தான் அறிவுக்கெட்டு ஒரு தப்பு பண்ணிட்டான். அது தப்புனும் ஒத்துக்கிட்டு இப்ப ஒழுங்காவும் இருக்கான். அப்புறம் நாம ஏன் பழய குப்பைய சொமந்துட்டு திரியணும். அம்மாக்கு என்னையும் புள்ளைங்களயும் நட்டாத்துல உட பாத்தானேனு கோவம். இன்னும் அந்த கோவத்தை வளத்துட்டு திரியுது. அது கொணம் அப்புடி அதுக்கு என்ன பண்றது. ரெண்டு பேத்தையும் அனுசரிச்சிக்க வேண்டிதான்.’ என்பாள்.
ஆயாளின் கணவர் இறந்து கொஞ்ச நாட்கள் கழித்து மனைவியை இழந்த மூன்று மகன்களின் தந்தையான ஆத்தூர் தாத்தா ஆயாளை கட்டிக்கொள்வதாக கேட்டுவந்தார். பெரியதாத்தாவும் அனைத்தையும் சொல்லியே திருமணம் முடித்து வைத்திருக்கிறார். ‘எங்கய்யாருக்கு எவ்வளவு ரோசனை பாத்தியா நமக்கு அப்புறம் இந்த புள்ளைக்கு ஆரு ஆதரவுனு ரெண்டாம் கண்ணாலம் பண்ணிவெச்சாக. நல்ல ரோசனையான நெத்தத்துக்கு பொறந்தவ நானு.. இந்த ஏலுமலையாட்டம் கூதரையா…’ என்று நெட்டி முறித்து பெருமை சவடால் விடுவாள் கெளவி. ஆயாளுக்கு ஆண்குழந்தை பிறந்திருந்த சமயம். சொத்துக்கு பங்குக்கு ஆள் வந்துவிட்டது என்று நினைத்த மூத்த குடி மகன், குழந்தைக்கு பசியாற்ற பால்கிண்ணியையும் சங்கடையையும் வைத்துவிட்டு பிள்ளையை தூக்கிவர ஆயா போயிருக்கும் சமயம் சங்கடையில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை தடவி வைத்திருந்திருக்கிறார்கள் மூத்த குடி மக்கள். அது தெரியாமல் அதிலேயே பாலை ஊற்றி குழந்தைக்கு பசியாற்றியிருக்கிறாள் ஆயா. ஆயாளை ஒன்றும் செய்யமுடியவில்லை. அவள் ஆள் ஆறு அடிக்கும் சற்று குறைவு. . ‘நான் நல்லா சவைக்கு நெறைஞ்ச பொம்பளையா இருப்பேன்.’ என்பாள். உண்மையில் அப்படிதான் இருப்பாள். அவள் ஒரு அடி விட்டிருந்தாலும் சுருண்டு விழுந்திருப்பார்கள் . ஆனால் அவள் கோபம் வேறுமாதிரியாய் இருந்தது. ‘இனி உன் பக்கத்துல படுக்க மாட்டேன் யா. பக்கத்துல படுத்தா தானே புள்ள பொறக்கும். உன் மவன் கொல்லுவான். அய்யோ என் கையினாலேயே என் புள்ளைய கொன்னுபுட வெச்சானே’ னு சொல்லும் போதெல்லாம் அழுது தீர்ப்பாள். சொன்னது போலவே தாத்தனை கிட்டத்தில் சேர்க்காமல் கல்லைப்போல ரோசத்தோடே வாழ்ந்தவள். ஆயாளுக்கு அம்மாவே நிரந்தர மகளானாள். அம்மாளுக்கு சரியாக படிப்பு ஏறவில்லை. சமஞ்சி ஆறு மாதத்திற்குள்ளாகவே அம்மாளை அப்பனுக்கு கட்டி வைத்து விட்டாள். அப்போது அம்மாளுக்கு பதினைந்து வயது. அண்ணன் அம்மாளின் பதினாறாம் வயதில் பிறந்தார். பிறகு நான். தாத்தா இறந்த பிறகு தனக்கென்று பிரிந்த காணி நிலத்தை விற்றுவந்த பணத்தை அம்மாளிடம் கொடுத்துவிட்டு ஒரு பால்மாடும் ஏழு மூட்டை நெல்லும் அவள் புழங்கிய பண்ட பாத்திரங்களோடு அம்மாளோடவே வந்துவிட்டாள் ஆயா.
ஆயாளின் ஒரு போட்டோவை எடுத்து வைக்க சொன்னாள் அம்மா. இந்த போட்டோவை லச்சம் முறை பார்த்திருக்கிறேன். கோடி முறை இதை சொல்லியிருக்கிறாள். இதோ அம்மா ரெண்டு சடையில் கனகாம்பரம் பூ. வட்ட வட்டமான டிசைனில் கவுன் அணிந்திருக்கிறாள். ஆயாளின் மடியில் அவளின் நக்லஸ் போட்டிருக்கிறாள். ஆயா காதுக்கு கொப்பு, லோலாக்கு, கம்மலு ரெண்டு பக்கம் மூக்குத்தி கலுத்துக்கு காரை ரெட்டைவடம் சங்கிலி பதக்கம் காசுமாலை வளவி காலுக்கு கொலுசு, காப்பு எல்லாம் எங்கய்யாரு பண்ணி போட்டது ‘இந்த காப்ப மட்டும் கலட்டவே கூடாதுயா.. ‘நீ செத்தப்புறம் குழியில எறக்கிதான் கலட்டனும்னு எங்கய்யாரு சொல்லியே போட்டாரு..’ என்பாள். மேலுக்கு முடியாமல் கால்வீங்கிய போதும் கழட்ட விடவில்லை அவள். ஆயாளுக்கு சொந்தபந்தம் என்று நிறைய இருக்கிறார்கள். இருவது பேரோடு பிறந்தவளுக்கு சொந்தத்திற்கா பஞ்சம்.? அவ்வளவையும் விட்டுவிட்டு அம்மாளோடு வந்துவிட்டாள். ‘முக்கி பெத்தாதான் மவளா?’ என்பாள். ஏனோ வழிதவறி வந்த அனைத்தையும் அரவணைப்பாள். ரோட்டோர விட்டு சென்ற பூனையைக் கொண்டு வந்து, பால் கறந்த போவுனியை கழுவி, அவளுக்கு வைக்கும் சோற்றில் அதற்கும் பங்கு வைத்து, அந்த பால்தண்ணியை ஊற்றித் தேற்றுவாள். நாய்.. ஆடு.. மாடு.. கோழி. என்று எதையும் பார்த்து பார்த்து கவனிப்பாள். காட்டுக்கு குடி வந்த புதிதில் கொட்டைக்கு நிறைய பாம்பு வரும். அதைக்கூட அடிக்க விடமாட்டாள். ‘எங்கேயாவது கொண்டு போய் உட்ருங்க சாமி.. பாவம் அதுவும் ஒரு உசுருதான. அதுங்க எடத்துல தான் நாம பொலங்குறோம்..’ என்று பல்லாயிரக்கணக்கான ஆண்டு இயற்கை பரிணாமத்தை ஒரே வரியில் வீசிவிட்டுப் போவாள் கிளவி. ‘நான் செத்தனா என் சாவுக்கு கோடி சனம் வரும்.. என் சொந்த பந்தமே கோடி பேரு இருக்காங்க.’ மரணம் என்றால் அவ்வளவு பயம் ஆயாளுக்கு. தொண்ணூருக்கு மேல் தான் தள்ளாட்டம் கண்டாள். அதுவரை அவள் சொந்தங்களை பார்க்க தனியாகவே பஸ்ஸில் ஏறிப்போயி வருவாள். ‘இங்க காரு ஏறுனா அங்க போயி எறங்க போறேன்.. அங்க என்ன எனக்கு மனுசருக்கா பஞ்சம். யாராவது ஒருத்தன் இருப்பான். நீ பயப்படாத சாமி’ என்று தைரியமூட்டிச்செல்வாள். முதிர்ச்சி அவளைக் கண்டே பயந்தது. ‘எமன் உன் ஏட்டை மறந்துட்டான் போலயோவ். உனக்கு நெல்லு குதுரு தான் போல’னு கேலி செய்வோம். தார்ரோட்டில் போகிற யாரையாவது நிப்பாட்டி பேச்சுக்கொடுப்பாள். ஊரில் இவளிடம் ஒப்பாரி படிக்காத ஆளே இல்லை. விடுமுறைக்கு ஊருக்கு வரும் பிள்ளைகளுக்கு எல்லாம் ஒப்பாரி பாட சொல்லிக்கொடுப்பாள். ‘ஏஞ்சாமி நான் செத்தா வருவியா? இதுமாறி ஒப்பாரி சொல்லி அழுவியா?’என்று கேட்காது விடமாட்டாள். அதில் ஒரு வாண்டு ‘சரி வரேன். நீ எப்ப சாவ’ என்று கேட்டே விட்டது. அதை சொல்லியே ஆத்து ஆத்து போனாள்.
வயது கோளாறு. சத்து பத்தவில்லை. ஊசி மருந்தையும் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை ஆயாளுக்கு. படுக்கையாக கிடக்கவேயில்லை சேரில் உட்கார்ந்தபடியே கிடந்தாள். அதற்கும் ஒரு கதை சொன்னாள் ‘எங்கம்மா தூக்கத்துல தான் செத்தாங்க. படுத்தா நானும் செத்துபுடுவேன். எமன் வந்துருவான். வந்தான்னா என்னய புடிச்சிக்குவான் சாமி.. ஆராவது கூடயே இருங்க.’ என்று பயத்திலேயே உடலை கெடுத்துக்கொண்டாள்.. அப்போதும் வீட்டிற்குள் வரவில்லை. அந்த வேப்பமரத்தடியில் உட்கார்ந்தபடியே கிடந்தாள். அவளின் உயிரும். அவளை விட்டு பிரியமுடியாமல் பிரிந்தது. இங்கு அவள் ஆதரித்த எல்லா உயிரும் அனாதையானது. நாங்களும்….
அவள் சொல்லியதைப்போலவே அவள் சாவிற்கு கோடிசனமும் வந்து ஒப்பாரி சொல்லி அழுதது. ஆயாளைக் கட்டையில் வைக்கவில்லை
‘என்ன நெருப்புல வெக்காதிங்க சாமி. நான் சூடு தாங்கமாட்டேன் சாமி. ரெம்ப ஆழமா குழி தோண்டிப்புடாதிக.. ரெண்டு மொழங்கையளவு தோண்டுனா போறும். உப்புக்கல்லு நீரும் கொட்டி வேப்பந்தவ, சந்தன தவ, நொனா தவ, நொச்சி தவ, பெலா தவ, அரச எல, இலுப்பை எல எல்லாம் போட்டு கொட்டி குழியை மூடுங்க சாமி அப்பதான் நம்மகாட்டுக்கே நான் ஒரமாவேன். மேலே கோரி கட்டிப்புடுங்க’ என்று அவளை புதைக்கும் சூத்திரத்தை எங்களுக்கு சொல்லி கொடுத்து விட்டே சென்றாள். அதே போல காட்டின் சனி மூலையில் அவளின் கோரிமேடு அமைந்தது. தினமும் நல்ல விளக்கு ஒன்றை ஏற்றுவாள் அம்மா. வீட்டுக்கு தூரமானால் என்னை அனுப்புவாள். ‘என்ன தூரம் எல்லா பொம்பளைக்கும் வர்றதுதான் இதுல எங்கயிருக்கு தூரம் அடி ஊட்டுக்குள்ள வாடி சக்காளத்தி’ என்னும் ஆயாளின் குரல் என் காதில் ஒலிக்கும்.
அப்பனுக்கு தான் வெறிச்சோடிக்கிடக்கிறது. ‘ஏதாவது தொணதொணத்துட்டே கெடக்கும்’ என்று வேப்பமரத்தைப் பார்த்து பெருமூச்செறிவார்.
அம்மா கூலிக்கு போன காசில் மருந்தம்பா அக்காளிடம் சீட்டு போட்டு சேமித்த பணத்தை எடுத்துக்கொண்டு அப்பனையும் கிளப்பிக்கொண்டு மெட்ராஸ் போயிருக்கிறாள்.
“ஹலோ. அப்பா.. ம்ம் சமாதி எல்லாம் பாத்தாச்சா.. கடலுக்கு போனிங்களா? ஆயா சீலதுணிய கடல்ல விட்டிங்களா? ம்ம் சரி பஸ்ஸூலயே வாங்க.. ஆமா சேப்பு பட்டன் தான்.”
உறக்கம்தான் வந்தபாடில்லை. ஆயாளின் கடைசி ஆசையை அவளுக்கென்றிருந்த ஒரே ஆசையை, நிறைவேற்ற முடியாத. இனி நிறைவேறவே வழியில்லாத ஆயாளின் ஒரே ஒரு ஆசை. அவள் வாய் விட்டு கூறிய அந்த ஒரு ஆசையை சுமந்துக்கொண்டு அதை நிறைவேற்ற அவளின் நினைவுநாளில் புறப்பட்டு சென்றிருக்கிறார்கள், அப்பனும் அம்மாளும்.
“ஆயோவ்… ஒனக்கு எதுனா ஆச இருக்கா? “
“ஏன் கேக்குற.” “ சும்மா தெரிஞ்சிக்கதான் ஆயா. நான் படிச்சி பெரியவளானதும் உன் ஆச தான் மொதல்ல நிறைவேத்துவேன். அப்புறம் தான் மத்த எல்லாருக்கும். உனுக்கு என்ன ஆச சொல்லு ஆயா.. சொல்லு ஆயா.”
‘ஓ… இருக்கே.. ஒரு தடவயாவது ரெயில்ல போவனும். ‘
“ஏன் யா ஏரோப்ளேன்லாம் வேணாமா”
‘அய்யோ.. அது ஆகாசத்துக்கும் மேலே அந்தரத்துல போவுது.. எங்கயாச்சும் பொசுக்குனு உளுந்துப்புட்டா கறி கூட மிஞ்சாது. ஏராப்ளேன் வேணாம் சாமி. இங்கேருந்து மெட்ராஸூக்கு ரெயில்ல போயி அங்கருக்க அண்ணா சமாதி எம்சியார் சமாதி எல்லாம் பாத்து தொட்டு கும்முட்டு வரணும். எம்சிஆர் சமாதியில காத வெச்சிக்கேட்டாக்கா அவர் வாச்சி ஓடுற சத்தம் கேக்குமாமே. நான் சாவறதுக்குள்ள ஒருக்கா என்ன கூட்டி போரியா சாமி.’
-பவித்ரா பாண்டியராஜூ
செம நல்லாருக்கு
SEMA SEMA, ரொம்ப நல்லா இருக்கு..
ஆமா செவப்பு பட்டன் தான்…
Super pavi sis
மிக நல்ல முயற்ச்சி. ‘Dialects’ என்றுமே வசீகரம். பிடிவாதமாக எனது மகளை உட்காரவைத்து வாசித்து காட்டினேன். தங்கிலிஷ் மட்டுமே பரிச்சயமான அவளுக்கு வெடிச்சிரிப்பு. உங்களின் இக்கதை எனக்கும் அவளுக்குமான இனிய சில நிமிடங்களை கொடுத்தது.
“அய்யோ.. அது ஆகாசத்துக்கும் மேலே அந்தரத்துல போவுது.. எங்கயாச்சும் பொசுக்குனு உளுந்துப்புட்டா கறி கூட மிஞ்சாது. ஏராப்ளேன் வேணாம் சாமி.” –
கதை நெடுங்கிலும் என் அப்பாயி உடனே பயணித்தேன். இராமாயணம் ஒளிபரப்பான நாட்களில், நாடகத்தின் முடிவில் டிவியை அணைத்துவிட்டால் பெரும் கோபம் கொள்வால் “ சண்டால பாவிகளா சாமி ஆடிக்கிட்டு இருந்ததை அனைச்சுப்புட்டீங்கலே!!!!”
பவித்ரா பாண்டியராஜூ அவர்களின் ‘நினைவுகள் நிரம்பிய நித்திரையற்ற இரவு’, சிறுகதை குறித்த கருத்து பதிவு :
அறிமுக எழுத்தாளரின் முதல் கதை போல் தெரியவில்லை.
தேர்ந்த எழுத்தாளர் எழுதிய கதை போல் மிக இயல்பாக சரளமாக அதுவும் வட்டார மொழியில், மிகச் சிறப்பாக உள்ளது.
விவசாய கிராமத்தை அதன் மண் மணம் மாறாது, அதன் அனைத்து கூறுகளுடன் கதையை நகர்த்தி அவற்றை நம் கண் முன்னே நிறுத்துவது, எழுத்தாளரின் வெற்றி.
வட்டார வழக்கில் வெகு இயல்பாக செயற்கை தனமின்றி கதையை நகர்த்தி இருப்பது வெகு நேர்த்தி. எதிர் காலத்தில் இந்த எழுத்தாளர், பல உயரங்களை, இலக்கிய உலகில் தொடுவார் என்பதில், எந்த ஐயப்பாடும் இல்லை.
அறிமுக எழுத்தாளரே, தங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். வரவேற்கிறோம். தொடர்ந்து எழுதி மேன்மேலும் உயருவீர்கள் – என்று மனதார பாராட்டுகிறோம்.
நன்றி, மகிழ்ச்சி.
Excellent pavi..வார்த்தைகளில் மண் மணம் என்னமாய் வீசுகிறது..அழகிய வாசிப்பு அனுபவம்..தொடரட்டும் கதைக்களமாடல்..all d best..
அருமை அக்கா.. வட்டார மொழி அருமை..
நல்லாருக்கு….ரொம்ப நல்லாருக்கு…வழக்கு வார்த்தைகள் நிறைய ஞாபகத்திற்கு வருகிறது…சிறப்பாய் இன்னும் பல படைக்க வாழ்த்துகள் 💐
இன்னைல இருந்து நீ பட்டாசு பவித்ரா…
வட்டார மொழி, புதிய சொற்கள், கதை நெடுக கிளவியின் கோபமும், பயணிக்கிறது. குடும்பத்தில் இருக்கும் எல்லா வயதானவர்களுக்கும், ஏதாவதொரு கதை, ஆசை இருக்கும். அதை நிச்சயம் நிறைவேத்திடனும்.