Monday, Aug 8, 2022
Homeபடைப்புகள்கட்டுரைகள்அந்தோன் செகாவின் நாய்கள்

அந்தோன் செகாவின் நாய்கள்

அந்தோன் செகாவின் ஒவ்வொரு கதையும் மிகச் சாதாரண மனிதர்களைப் பற்றியது. நிராகரிப்பு, கைவிடப்படுதல், துக்கம், காதல் எனப் பல உணர்வுகளைத் தனது கதைகளில் கையாள்கிறார் செகாவ். வரலாற்று அனுபவங்களின் பின்னணியில் தனிமனிதனை வைத்த நாவல் வடிவத்தை, மனிதனின் நுண்ணிய அகவுணர்வுகளுக்குள் இழுத்து வந்ததில் தஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய் ஆகிய இருவருடனும் இணைக்கக் கூடிய சாதனை ஆண்டன் செகாவுடையது. அவர்கள் இருவரிடமும் இல்லாத ஒரு அம்சம் செகாவிடம் உள்ள நகைச்சுவை.

செகாவின் சிறுகதைகளில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக பாத்திரங்களின் மிகையற்ற இயல்பான  வெளிப்பாட்டைச் சொல்லலாம். மெல்லிய நகைச்சுவை அதில் இழையோடி ஊடுபாவாக இருக்கும். பல இடங்களில் ஊசி ஏற்றினாற்போல் நகைச்சுவை மூலம் ஒரு மிகப்பெரிய கருத்தை வெளியிட்டிருப்பார்.

செகாவ் எதையும் பலத்த குரலில் பிரகடனம் செய்வதில்லை. வாசகருக்கு நேரடியாய் அறிவுறுத்த முற்படுவதில்லை. ஆயினும் நாம் அவரின் கதைகளை வாசிக்கும் போது நமக்குள் ஒருகுரல் ஒலிக்கிறது. அதை கேட்கச் செய்வதுதான் அவரது தனித்தன்மை.

மனிதனின் நிலையை மனிதனுக்கு தெரியப்படுத்தும் போது தான் மனிதன் மேம்படுவான் என்பதுதான் அவரது எண்ணமாக உள்ளது. அதை அவரது எழுத்தின் மூலம் சாத்தியபடுத்தியதால் நாம் இன்றும் செகாவை கொண்டாடுகிறோம். செகாவ் பல்வேறு வகைமைகளில் கதாபாத்திரங்களை உருவாக்கியவர். குறிப்பாகக் கதாபாத்திரங்களின் மன உணர்ச்சிகளைத் துல்லியமாக எழுதியது அவரது தனிச் சிறப்பு.

குறிப்பாக ஆண், பெண்ணுக்குள் ஏற்படும் கசப்பை, வெறுப்பை, தனிமையை நிராதரவான தன்மையை, செகாவ் பல்வேறு முனைகளில் ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.

அந்தோன்  செகாவின் ‘வான்கா’எனும் சிறுகதை நம்பிக்கை தரும் வாழ்வின் கடைசி அர்த்தத்தைச் சொல்கிறது. 1886-ல் தமது 26-ம் வயதில் செகாவால் எழுதப்பட்ட இச்சிறுகதை, மனம்வாடி ஏதோ ஒரு நம்பிக்கையில் கடிதம் எழுதும் சிறுவனை நம்முன் கொண்டுவருகிறது. இந்தக் கதையில் ஒன்பது வயது  வான்கா எனும் சிறுவன் வேலை பயிலுவதற்காகக் காலணித் தொழிற்சாலையில் விடப்படுகிறான். அங்கு அவனுக்கு ஏற்படும் துயரங்களின் போதெல்லாம் அவனது தாத்தாவின் ஞாபகம் வருகிறது. தாத்தாவான கன்ஸ்தந்தீன் மக்காடிக்கு ஒரு கடிதம் எழுதுகிறான்.

தாத்தாவின் முகவரி தெரியாமலேயே கடிதம் எழுதி, அது மறுநாளே தாத்தாவின் கையில் கிடைக்கும் என்று நம்பும் அந்தக் குழந்தையின் மனநிலை வாசிப்பவரை  உறைய வைக்கிறது. கதை முடிந்தப்பின் வாசிக்கும் ஒவ்வொருவரும் அந்தக் கடிதத்தைச் சேர்க்கும் தபால்காரராகி விடுகிறோம்.

பச்சோந்தி என்ற கதையில் போலிஸ்காரர் அச்சுமலோவின் கதாபாத்திரத்தை மிக அழகாக செதுக்கியிருப்பார் செகாவ். ஒரு நாயினால் கடிபட்ட “ஹீரியக்” சந்தையில் நாயின் காலை பிடித்துக்கொண்டு சப்தமிட்டு கூட்டம் சேர்க்கிறான். இதனைக்கண்ட அச்சுமலோவ் முதலில் “ஹீரியக்”கிற்கு பரிந்து பேசுகிறார். பின் நாய் ஜெனரலுடைய நாய் என கூட்டத்தில் இருப்பவர்  கூறவும் உடனே தனது எண்ணத்தை மாற்றி “ஹீரியக்”மீது குற்றம் சாடுகிறார். பின் இன்னொருவர், இது ஜெனரலுடையது இல்லை எனக்கூறவும் மீண்டும் “ஹீரியக்”கிற்கு பரிந்துபேசுகிறார். மீண்டும் மற்றொருவர் இது ஜெனரலின்  நாய் எனக்கூறுகிறார், மீண்டும் “ஹீரியக்”மேல் குற்றம் சாடுகிறார். பின் ஜெனரலின் வீட்டில் வேலைசெய்பவர்,  இது “ஜெனரலின் நாய் இல்லவே இல்லை,  இந்த நாய் ஒரு தெருநாய்தான் என உறுதிசெய்கிறார்.

அது ஒருவேளை ஜெனரலின் அல்லது அவரது சகோதரரின் நாயாக இருக்கக் கூடும் என்று கூட்டத்திலிருந்து யாரோ சொன்னதுமே, கடிபட்ட மனிதன்தான் தப்பு செய்திருக்க வேண்டும்; உயர்குலத்து அதிகாரி வீட்டு நாய் அப்படியெல்லாம் தெருவில் போகிறவனைக் கடிக்காது எனறு மாறி பேசுகிற அச்சுமலேவின் பச்சோந்தித்தனத்தை கதையில் செகாவ் கேலி செய்கிறார், இதில் அவர் விமர்சித்திருப்பது அன்றைய  அரசின் அதிகாரத்துவத்தை;  ஆனால் இன்றைக்கும் நமது வாழ்க்கையில் இது போல சம்பவங்கள் நடக்கதானே செய்கிறது, நமது தெருவில். நமது வாழ்க்கையிலும் நடக்கக் கூடியதுதான் இது.

நாய்க்காரச் சீமாட்டி, பச்சோந்தி, வான்கா உள்ளிட்ட செகாவின் புகழ்பெற்ற பலகதைகளில் பல்வேறு வகையான நாய்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறுகின்றன.

அந்த நாய் பணிவுமிக்கதாய்  வாலைக் குழைத்துக்கொண்டு வரும்; தெரிந்தவர்களாயினும் தெரியாதவர்களாயினும் எல்லோரையும் அன்பு ஒழுகும்  பார்வை கொண்டுதான் உற்று நோக்கும். ஆயினும் யாராலும் அதை நம்ப முடியாது. அதன் அடக்கமும் பணிவும் வெளிவேஷமாக இருக்கிறது. தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் விசுவாசச்சுமையை உதறிவிட்டு வன்மத்தில் இளைப்பாறுகின்றன. தன்னை அறிந்துவிட்ட ருசியில் திளைக்கின்றன. அவ்வப்போது குறும்பு செய்து அதற்கான தண்டனைப்பெற்றதற்கான தடயங்கள் அதன் கால்களில் உள்ளன ஆனால் அது யாவற்றையும் சமாளித்துக் கொண்டு உயிர் வாழ்வதாக சொல்கிறார் செகாவ்.

செகாவின் சிறுகதையை வாசிப்பவர்கள் இந்த நாயை எளிதில் கடந்து செல்லலாம். ஆனால் இந்த நாய்தான் சமூகத்தில் மனிதன் வகிக்கும் போலிமுகத்தின் படிமம். செகாவின் கதாபாத்திரங்கள் பெருங்குற்றவாளிகள் அல்ல. பதட்ட சூழ்நிலைகளின் விளைவால் தடுமாறுபவர்கள். கஞ்சத்தனம் உடையவர்கள். சின்னப்  பொய் ஒன்றை சொல்லியதற்கு கடும் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள். உயரதிகாரியின் முதுகுக்குப் பின்னால் தும்மியதற்கே இன்னுயிரை இழப்பவர்கள். உணர்ச்சிகரமான மனிதர்கள், எல்லாம் தனக்கு எதிரானதாகவே இருக்கின்றன எனப் புலம்புபவர்கள்.

முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சமூகத்தின் ஊழல்களையும், அராஜகங்களையும் அவரது பெரும்பலான கதைகள் பேசுகிறது. ஆறாவது வார்டு கதையில் தெளிவாக அம்பலப்படுத்தி உள்ளார். இக்கதை இன்றைக்கும் நம் சமூகத்தில் நமக்கு அருகாமையில் நடந்து கொண்டே இருக்கிறது.

ஆறாவது வார்டு, நாய்க்கார சீமாட்டி மணமகள் கதைகளை யோசித்துப்பார்த்தால், கதையின் சுவாரஸ்யத்திற்காக மட்டுமே அவை சொல்லப்பட்டிருக்கவில்லை.  ஆழ்ந்த தரிசனங்கள் அக்கதைகளில் உண்டு. ஆழ்ந்த தரிசனங்களை எட்டுவது வரையில் அந்த கதைகள் வளர்ந்து கொண்டே செல்லும். செகாவின் கதைகள் படிப்போரைக் கலங்கச் செய்கிறவை. துயரம் தோய்ந்த புன்னகை புரிகிறவை. மென்மையானவை. அவரது தலைசிறந்த படைப்பாக ஆறாவது வார்டைசொல்லலாம்.

“ஆம் நான் நோயுற்றவன் தான். ஆனால் நூற்றுக்கணக்கான பைத்தியக்காரர்கள் சுதந்திர மனிதர்களாய் வெளியே இருந்து கொண்டிருக்கிறார்கள். சித்தசுவாதீனமுள்ளவர்களிடமிருந்து இவர்களை வேறுபடுத்தி, இனங்கண்டுக்கொள்ளத் தெரியாத மூடர்களாய் இருக்கிறீர்கள் நீங்கள். இந்த ஒரே காரணத்தால் இவர்கள் சுதந்திரமாக வெளியே இருக்கிறார்கள்.  பிறகு ஏன் நானும் பரிதாபத்துக்குரிய இவர்களும் இங்கே கிடந்து அழிய வேண்டுமாம்?”  என்று சமூகத்தை கேள்வி கேட்கிறார்.

“தூய்மை வாய்ந்த நங்கையால் பின்னப்பட்ட லேஸ் போன்றவை செகாவின் கதைகள்” என்று டால்ஸ்டாய், செகாவைப் பற்றிப் புகழ்ந்து கூறுகிறார். “பழங்காலத்திய நங்கைகள் தமது இன்பக்கனவுகளை எல்லாம் வாழ்நாள் முழுவதும் அவர்கள் பின்னல்களாக லேஸில் பின்னிவிடுவார்கள். அந்த லேஸ்கள் யாவும் தெளிவற்றவையான தூயகாதலில் தோய்ந்தவையாக இருக்கும்”  என்று கண்களில் உணர்ச்சிததும்ப டால்ஸ்டாய்  பேசியதாக கார்க்கி பதிவு செய்கிறார்.

நூல் : அந்தோன் செகாவ் சிறுகதைகளும்.  குறுநாவல்களும்

ஆசிரியர் : அந்தோன் செகாவ்

தமிழில்:  ரா.கிருஷ்ணையா, பூ.சோமசுந்தரம், ச.சுப்பாராவ்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

விலை: ரூ 230


  • இரா.சசிகலா தேவி
பகிர்:
Latest comment
  • செகாவ் கதைகளை பிரபஞ்சன், எஸ்.ரா உரை வாயிலாக கேட்டிருக்கிறேன். வாசிக்க ஆர்வமூட்டும் பதிவு.

leave a comment

error: Content is protected !!