பேதமுற்ற போதினிலே-4

மெய்யுயிர்

மெய் என்பதற்கு அகராதிப்படி உண்மை, அறிவு, உணர்ச்சி, பொருள், எழுத்துவகை, உடல் என்று பொருள் தருகிறது. உணர்ச்சியில் பொய்யில்லை; அறிவிலும் பொய்யில்லை; அழியக்கூடிய உடல் எப்படி மெய்யாகிறது? உயிர்தானே மெய்யாயிருக்க முடியும்? தொட்டு, உணர்ந்து, கண்டு, கேட்டு அறியக்கூடியதாய் இருப்பதால் பொருளும் உடலும் மெய். ஆனால் அசித்து. அழியக்கூடியது மெய்யானால், அழியாமல் எப்போதைக்குமாக இருப்பது?  

தமிழிலக்கணம் கவிதையின் அடிப்படைகளை மூவகைப் பொருட்களாகப் பகுத்துள்ளது. முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள். முதற்பொருளாக நிலமும் காலமும் (Time & Space). அட்சரேகையும் தீர்க்கரேகையும் வெட்டிக்கொள்ளும் புள்ளியைப் போல, எது நிகழ்ந்தாலும் அது குறிப்புப் பெறுவது இடமும் காலமும் வெட்டிக்கொள்ளும் புள்ளியில் என்பதால் அது முதற்பொருளாகிறது. கருப்பொருளாவது அந்த நிலத்தில் உள்ளவையாகும். உரிப்பொருள் அந்நிலத்தில் விளங்கும், வாழும் கருப்பொருளுக்குரிய உணர்வுகள், ஒழுக்கங்களைக் குறித்தது. ஒரு கணினியில் இயக்க முறைமையில் உள்ள நிரலிகளைப் போல முதற்பொருளுக்குள் கருப்பொருளும், கருப்பொருளுக்குள் உரிப்பொருளும் ஒன்றுக்குள் ஒன்றாகப் பொதிந்துள்ளன. கரு என்பது உயிர்ப்புள்ளது. மேலும் மேலும் வளரக்கூடியது. கரு உயிரினால் உயிர்ப்பைப் பெறுகிறது. உயிர் இங்கே சொல்லப்படாததாக இருக்கிறது.

”மெய்யொடு இயையினும் உயிர் இயல் திரியா” என்கிறார் தொல்காப்பியர். எது உயிரின் இயல்பு? தன்னைக் காத்துக்கொள்ளுதலும், இன விருத்தியும். ‘க’ என்று உச்சரிக்கையில் (எந்த உயிர்மெய் எழுத்தாயிருப்பினும்) உயிர் எழுத்தே தன் தன்மையை வெளிக்காட்டிக் கொள்கிறது. சொல்லை உருவாக்க உயிர் எழுத்து தேவை. உயிரற்ற சொல் ஏதுமில்லை. இணையும் மெய் உயிரின் இயல்பை மாற்றுவதில்லை. மண்ணிட்ட விதை முளைக்கிறது. பூக்கள் பருவத்தே பூக்கின்றன. காய்களும் பழங்களும் விதைகளைப் பொதிந்து வருகின்றன. உயிரின் இயல்பு. உயிர்மை மண்ணிலிருந்ததா? விதையிலிருந்ததா? 

”மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே”

தோன்று நிலை என்றதனான், உயிர்மெய்களைப் பிரிக்குமிடத்தும் கூட்டுமிடத்தும், அவ்வாறே முன்னும் பின்னும் ஆதலைக் கொள்க. மெய்யும் உயிரும் முன்னும் பின்னும் பெற நிற்கும் என்றமையால், அக்கூட்டம் பாலும் நீரும் போல உடன் கலந்ததன்றி, விரல் நுனிகள் தலைப்பெய்தாற்போல வேறுநின்று கலந்தனவல்ல என்பது பெறுதும். – என்கிறது பொழிப்புரை.

எத்தனை கவித்துவமான வரி. மெய்யின் வழியது உயிர் தோன்று நிலையே. எந்த மதமும் என் மொழியை என்னுடையது என்று உரிமை கொண்டாட முடியுமா? என் இலக்கணத்திலேயே இருக்கிறது இந்த மண்ணில் உயிர்த்த தனிமனிதனுக்கான வாழ்வியல் நெறி. வணங்க வேண்டியது தமிழையே. பற்றிப்படரும் கொடிபோல உயிர் சொற்களைப் பற்றி ஏறி, கிளை விரித்துப் படர்ந்து வெளியை சுவாசிக்கிறது. நெருப்பாய் மெய்களைத் தின்று அதையும் சேர்த்து எரித்து தழலாடுகிறது உயிர். உயிர் தோன்று நிலை. தொல்காப்பியர் மெய்யின் வழியது உயிர் என்று முடிக்கவில்லை. உயிர் தோன்று நிலை என்கிறார். க=க்+அ. ககரமும் அகரமும் எங்கே சந்திக்கின்றன. காலத்தின் எந்தப் புள்ளியில், எந்த அளபையில் வரும். அதை கவனித்துக்கொண்டே வந்தால் உயிர் தோன்று நிலை. (கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம் – பிரமிள்). இடையறாத புணர்வில் பெருகும் சொற்கள். உயிரின் தீராத் தகிப்பு. ஆவுடை லிங்கம். லிங்க ரூபம் தமிழுக்குரியதாகவே இருக்கமுடியும் என்று தோன்றுகிறது. 

தமிழ் இலக்கணம் வெறும் இலக்கணமல்ல. மொழி என்பது சிந்தனைப் பரப்பு. ஒரு மொழியைக் கைவிட்டால் பெரும் சிந்தனை வளத்தையே நிராகரிப்பதுபோல. ஒலிக்குறிகளை அடிப்படையாகக் கொண்டதால் அகவிழிப்பும், கவித்துவமும், மோனமும் கொண்டது தமிழ். உணர்வுப்பூர்வமாக சொற்களைத் தொடத் தொட அது நம்மை ஆட்கொள்ளும்.

அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்

உள என மொழிப”


-பாலா கருப்பசாமி

Previous articleஅம்மணத் தெரு -சிறுகதை
Next articleஅந்தோன் செகாவின் நாய்கள்
Avatar
சொந்த ஊர் கோவில்பட்டி. வசிப்பது திருநெல்வேலியில். கவிஞரும் விமர்சகருமான இவர் ’ஓரிரு வரிகளில் என்ன இருக்கிறது?’ என்ற கவிதைத் தொகுப்பும், அம்சிறைத் தும்பி, கண்டது மொழிமோ என்ற தலைப்புகளில் விமர்சனம் மற்றும் அனுபவக் கட்டுரைத் தொகுப்புகளையும், கதை விளையாட்டு என்ற சிறுகதைத் தொகுப்பும் மின்நூலாக வெளியிட்டுள்ளார். சக்தி லெண்டிங் லைப்ரரி என்ற பெயரில் நூலகம் நடத்தி வருகிறார்.
Subscribe
Notify of
guest
1 Comment
Most Voted
Newest Oldest
Inline Feedbacks
View all comments
Ranjithkumar N
Ranjithkumar N
3 years ago

இரண்டு முறை மீண்டும் மீண்டும் படித்துவிட்டேன். அறிந்துகொள்ளும் ஆர்வத்தை மிஞ்சி நிற்கிறது தங்களின் ஆழமும் விசாலமும் நுண்மையை அணுகும் பார்வை மீதான வியப்பு. சிறப்பான கட்டுரை வாழ்த்துக்கள்.