நுண் கவிதைகள்

காலுக்கடியில்
பாதாளம்.
முறிந்த கிளையின் நிழலில்
தொங்கும் என் சிறுபொழுது.

———

ஒரு கத்தியை
செருகி வைக்க
மற்றொரு கத்தியையே உறையாக்குகிறேன்.

———

வாதிடாமல்
குப்பைத் தொட்டியாக்குகிறேன்
உன்னை.
நீயும் ஒதுங்கியே நடக்கிறாய்.

———

மெளனப் பந்தை உன்னிடம்
உருட்டிவிடுகிறேன்.
அந்த விலங்கு
உன்னை விளையாட்டாக்குகிறது.

———

இன்னும் கிழியாமல்
கசங்காமல்
ஒரு குழந்தை போட்டோ.
அந்தப் பைத்தியக்காரன்
வெய்யிலில் சிலுவையோடு
அலைந்து திரிந்து கொண்டிருக்கிறான்.

———

சிலுவை சுமந்தலையும்
மனிதனுக்கு எப்போதாவது
ஒரு கை கொடுக்கிறது
வழிப்போக்கனின் நிழல்.

———

காற்று தோற்றுப்போவது
மரங்களிடமில்லை.
சின்னஞ்சிறு செடிகளிடம்.

———

அவன் மலையுச்சியில்
தவமிருந்தான்.
ஒரு சிறிய விதை வெடித்து
உச்சி வீழ்ந்தது.
உச்சியில் ஒரு தவம்
இருந்து கொண்டேதான் இருக்கிறது.

———

வாயில் காப்பாளனாக
ஒவ்வொரு நொடியும்
என்னை மொட்டாக்கி
மலர்விக்கிறது
காலம்.

———

தூண்டில்காரன்
ஒரு மீனைப் பிடித்துவிடுவது
புனலின் மகாதுயரம்.

———

ஒரு நாயைப் பழக்குவது
ஆகத் திறமையாக
ஏதுமற்று அந்த நாய்
பழக்கிவிடுகிறது
அந்த மனிதனை.

———

ஓய்ந்த நண்பகலில்
ஒய்யாரமாய் தலைகோதி
சிக்கெடுக்கிறாள்.
சீப்பிலிருந்து கரப்பான்கள்
குதித்தோடி காணாமல் போகின்றன
கை உதறும் திரும்பலுக்குள்.

———

தட்டானுக்கு மட்டுமல்ல
அது விளையாட்டு.
பாரம்தாங்காமல் ஆடும் குச்சியின்
சங்கடங்களையும் தியாகத்தையும்
பொருட்படுத்தத் தயாராயில்லை
யாரும்.

———

தன்னினத்தைத் தானே திண்ணும்
பூச்சியைக் கொல்லக் கூடாதாம்.
பெருமாள் பூச்சி வணங்கும்
திசைதோரும் பொழுது சிவக்கிறது.

———

கட்டமைப்பை மாற்றிக் கொள்ளும்
வைரஸை எதிர்கொள்ளும் ஓர் உயிரி
தன் கட்டமைப்பை மாற்றிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் கணத்தின் வேறுபாடு அவள் சிரித்துவிடுவதற்கானதான ஒன்றைப்போலத்தான்.

———

பலூன்காரன் வரும்வரைதான்.
அப்பா
வெறும்
பெயர்.


-சாகிப்கிரான்

Previous articleபயோ வார்
Next articleஸ்ரீவள்ளி கவிதைகள்
Avatar
சாகிப்கிரான் கவிஞர் வே. பாபுவுடன் இணைந்து 'தக்கை' என்ற சிற்றிதழை நடத்தினார். தக்கை சமூக கலை இலக்கிய அமைப்பு மூலம் கலை சார்ந்த நண்பர்களுடன் இணைந்து செயலாற்றினார். வண்ணச் சிதைவுகள், அரோரா ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன. தொண்ணூறுகளிலிருந்து கவிதை, கவிதை சார்ந்த கட்டுரைகளும் திரைப்படம் சார்ந்து கட்டுரைகளும் எழுதிவரும் இவர் மொழிபெயர்ப்பில் கட்டுரைகளையும் கவிதைகளையும் தந்துள்ளார். தற்போது சேலத்தில் கணினி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
Subscribe
Notify of
guest
2 Comments
Most Voted
Newest Oldest
Inline Feedbacks
View all comments
கதிர்பாரதி
கதிர்பாரதி
3 years ago

சிறப்பான கவிதைகள்

ஜீவன்பென்னி
ஜீவன் பென்னி
2 years ago

முறிந்த கிளையின் நிழலில்
தொங்கும் என் சிறு பொழுது.

அந்த விலங்கு
உன்னை விளையாட்டாக்குகிறது

இன்னும் கிழியாமல்
கசங்காமல்
ஒரு குழந்தை போட்டோ.
அந்தப் பைத்தியக்காரன்
வெயிலில் சிலுவையோடு
அலைந்து திரிந்து கொண்டிருகிறான்.

சிலுவை சுமந்தலையும்
மனிதனுக்கு எப்போதாவது
ஒரு கை கொடுக்கிறது
வழிப்போக்கனின் நிழல்.

இச்சொற்கள் பரப்பிடும் ஆழ்ந்த மனவெழுச்சிகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன் நண்பா. என்றுமே தீர்ந்திடாத ஒரு தனிமையான கணத்தை வைத்திருக்கின்றன இச்சொற்கள்.