Saturday, Oct 23, 2021
Homeபடைப்புகள்கவிதைகள்ஸ்ரீவள்ளி கவிதைகள்

ஸ்ரீவள்ளி கவிதைகள்

  • திருவிருந்து

விரல்கள் என நாம் நினைப்பவை நிஜத்தில்
கோரைக் கிழங்குகள்
கைகள் எனத் தரப்பட்டிருப்பவை நிஜத்தில்
காட்டுக் காளான்கள்
பயனில்லை அவற்றால்
நேசிப்பவரைத் தொடும் போது
இருப்பின் சிவப்பு மொத்தமும்
விரல்களாகித் தொட வேண்டும்
துடிக்கும் மூளைப் பிசுபிசுப்பைக்
கைகளாகக் குழைத்து அணைக்க வேண்டும்.
காதலின் பரிசுத்த ஆராதனையில்
ஒயின் ஒயின் மாத்திரம்தான்
ஒன்றுக்குப் பதிலீடாக இன்னொன்றை
ஏற்காத உண்மையின் நற்கருணை
நிகழ்த்தப்படும்போது
தன்னைத் தின்னத் தருவதே திருவிருந்து.


  • முன்னொரு இரவில்

உடல்கள் ஒளிர்ந்தன
புவியீர்ப்பு விசையிலிருந்து
விடுபட்டுச் சுழன்ற உடல்கள்
இரு ஜோடி ஒளிர் கால்கள்
கால்களைப் பின்னின கொடிகளாக
இரு ஜோடி ஒளிர் கைகள்
முகங்களை ஏந்திக் காற்றில் அலைந்தன
நானாகவும் இன்னொருத்தியாகவும்
அவனோடும் அவனோடும் இருந்தபோது
நாளங்களின் செம்பொன் திரவத்தில்
கடவுளை விட இனிய இருப்பின்
பெயரெழுத்துக்கள் வரையப்பட்டன
நானாக இன்னொருத்தியாக
அவனோடும் அவனோடும்
ஒருமையான அன்று
மரம் என்றவுடன் மரம் தலையசைத்தது
பறவை என்றவுடன் கூரை மறைந்தது
வாழ்க்கை என்றவுடன்
தந்தேன் என்றது
ஒரு முறை மட்டும்.


  • நீங்கள் வருகை தரும்போது

ஆமாம் சரியான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள்
அறிவிப்புப் பதாகையைப் பாருங்கள்
‘ஒரு காலத்தில் இங்கே மனம் இருந்தது’
அதுதான் உண்மை
இந்த இடிபாடுகள் சமீபத்தில் ஏற்பட்டவை
உங்கள் தலையைச் சுற்றி வல்லுறுக்கள்
பறக்கின்றன
நிழலைக் கொத்துகின்றன
உங்கள் கண்களுக்குள் பார்க்கின்றன
அவற்றை நான் விரட்டுகிறேன்
என்னைப் பார்க்கத்தானே வந்தீர்கள்
தலையசையுங்கள்
இனிப்பான திராட்சைக் குலையைப் போன்ற
ஒரு ஆமாம்
எங்கிருந்து வந்தவராக இருந்தாலும்
சாறுகள் சுரக்கும் ஒரு ஆமாம்
திடீர் திடீரென தீப்பற்றும் வீடுகளில்
ஒரு வீட்டின் தீயை
அணைத்துவிடுகிறது.


  • ஒரு கவிஞரைக் காதலிப்பவர்கள் கவிஞரை விடவும்
    கவிதைகளைச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்

இக்கவிதையில் வரும் நிகழ்ச்சி
நம் மத்தியில் நடக்கவேயில்லையே என
அவன் கேட்டபோது விழித்துக்கொண்டாள்
அப்போது வேறு பல கவிதைகளை
அவன்முன் பரத்தினாள்
இது நடந்ததே
இது நடந்ததே
குயில்கள் கூவிய இடத்தை
அவள் காட்டினாள்
கோட்டான் மட்டுமே அவனுக்குத் தென்பட்டது
அதன்பின்
அவள் கண்களிலிருந்து விலகிக்கொண்டான்
அதன்பின்
ஒவ்வொரு ரெஸ்டாரண்டிலும்
ஒவ்வொரு கடற்கரையிலும்
கற்பனையான ஜனத்திரள் மத்தியில்
கற்பனையான ஒரு பெரிய மேஜைமீது நின்று
உரக்கக் கூவுகிறாள்
ஒவ்வொரு கவிதையின் நிகழ்ச்சியிலும்
யாரிருந்தாலும் நீ இருக்கிறாய்
எனத் தொடங்குகிறாள்
திரும்பத் திரும்ப அதையே கூவுகிறாள்
ஜனத்திரள் கலைகிறது
மேஜை வெடித்து
உடைந்து விழுகிறது
அதன் கனத்துக்கு அடியில்
சிராய்ப்புகளோடு ஒரு எலும்பு முறிவோடு
முணுமுணுக்கிறாள்
யாரிருந்தாலும் நீ மட்டுமே இருக்கிறாய்
ஒன்றைப் புரியும்படி சொல்ல
இத்தனை களேபரம் வேண்டியிருக்கிறது
கேட்க வேண்டியவர்கள்
கேட்க இல்லாவிட்டாலும்.


  • இரவில் சுவரைப் பார்த்துக் கவிதை எழுதுபவர்கள்

நகரம் இரவில் வேறொரு நகரமாகிறது
நகரத்தில் பகலில் பைத்தியமாக மறுக்கும் சிலர்
இரவில் சுவரைப் பார்த்துக் கவிதை எழுதுகிறார்கள்
நகரத்தில் இரவில் சுவரைப் பார்த்துக் கவிதை எழுதுபவர்கள்
கவிதை கேட்கும்போது சரி என்கிறார்கள்
அவர்களின் ஓர் இதயத்தில் தூக்கமின்மை குடியிருக்கிறது
இன்னொரு இதயத்தில் ஒரு சுழற்பாதை திறக்கிறது
சொற்கள் குதித்துச் செல்கின்றன
நகரத்தில் இரவில் சுவரைப் பார்த்துக் கவிதை எழுதுபவர்களை,
கவிதை அரைக் கண்ணால் பார்க்கிறது
வாழ்க்கை திரும்பிப் பார்ப்பதில்லை.


-ஸ்ரீவள்ளி

பகிர்:
முந்தைய பதிவு
அடுத்த பதிவு
No comments

leave a comment