வெகு காலத்திற்கு முன்னதான ஓர் இரவில்.. அந்தக் கணத்தில்.. பிசாசையொத்த புழுதி படிந்த எண்ணற்ற முகங்கள் உன்னை நோக்கின.
உன்னுடைய அம்மாவின் முகம் கதவிற்கப்பால் இருந்தது. எந்த மூத்த சகோதரியை அந்த இரவிற்குப் பிறகு நீ மீண்டும் பார்க்கவேயில்லையோ, அவளை அவருடைய உதடுகள் உசுப்பி எழுப்பிக் கொண்டிருந்தன. அனைத்துக் கண்களும் தீக்கங்குகள் போல் கோபத்தில் ஒளிர்ந்திருந்தன. அவள் துயில்நிலையில் இருந்தாள். இரவின் இருளில், அவள் அப்படுக்கையிலேயே கரைந்துவிடக்கூடுமென நினைக்கச் செய்த அம்மயக்கநிலையை, வயதில் மூத்தவர்கள் சாதகமாக்கிக் கொள்ள நினைத்தனர். அவளுடைய சிறிய முகத்திற்கும், உனக்கும் இருந்த தொலைவு, ஒரு கனவிற்கிடைப்பட்ட தூரம் அல்லது நினைவிற்கிடைப்பட்ட தூரம் அல்லது அறியாத பிரதேசத்தின் விலங்குகள் வசிக்கும் வனங்கள் அமைந்திருந்த தூரம்.
அவள் பயத்தில் முனகியபடி இருந்தபோது, அவர்கள் வன்மையாக அவளை இழுத்தனர். அவளுடைய அதீத மயக்கநிலை அவர்களின் கைகளுக்குள் அவளை சரிந்து விழச்செய்தது.
அடைக்கப்பட்டக் கதவுகளுக்கப்பால், ஒரு ஆணின் குரலைக் கேட்டாய், உன் தந்தையினுடையதைப் போல, கோபத்துடன் ஏமாற்றம் கலந்ததொரு தொனியில், “ம்.. சொல்லித் தொலை.. யார் அவன்?”
பயத்தினால் அடைப்பட்டிருந்தது அவளுடைய குரல். அவள் பதில் சொல்லாமலிருந்தாள். இன்னொரு குரல், அந்த இருள் நிறைந்த அமைதியை சிதைத்தது. கதவிற்கு அப்பால் அவளை முற்றுகையிட்டிருந்த அம்மக்களிடமிருந்து அவளை விடுவித்துவிடும் விருப்பத்துடன், நீ தயக்கத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாய்.
நடுங்கும் குரலில் உன் சகோதரி ஒரு பெயரை உச்சரித்தாள். அந்தப் பெயரைக் கேட்டதும், உன்னுடைய விழிப்புணர்வு இன்னும் கூர்மையடையத் துவங்கிற்று.
“நான் எதுவும் செய்யவில்லை, அவனுடன் விளையாட மட்டுமே செய்தேன்” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
“அவன் ஒரு பையன். நீ ஒரு பெண்”
அந்த மழைக்கால இரவில் அவர்கள் அனைவரும், *சமோவர் அருகே குழுமியிருந்தனர். அவள் எங்கே என்று கேட்க எவருக்கும் தைரியமிருக்கவில்லை.
இருப்பினும் பிறகு, முற்றத்தில் கூடியிருந்த பெண்கள் கூட்டத்திலிருந்து, வருத்தம் தோய்ந்த துண்டுதுண்டான வார்த்தைகள் முணுமுணுக்கப்படுவதை நீ கேட்டாய்.
“அவள் வயதில் சிறியவள்..”
“அந்தப் பையன்தான் ஏமாற்றிவிட்டான்..”
“குடும்ப கௌரவம்..”
உனக்குத் தெரிந்ததெல்லாம் அவள் எப்போதைக்குமாக மறைந்துவிட்டாள் என்பது மட்டுமே.
நீ பெண்களுக்கான பொது குளியலறையினுள் ரகசியமாக எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய். அங்கு நீராவி வழியும் தெளிவற்ற தேகங்கள் இருந்தன. இது கனவா அல்லது கனவைப் போன்ற ஒன்றா? இந்தப் பெண்களை எது இங்கே வரச் செய்துள்ளது? உன் அகன்ற கண்கள் சுற்றும்முற்றும் அவளைத் தேடின, அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதிலும், அன்றைய மாலை வேளையில் கிசுகிசுக்கப்பட்டத்தொரு உரையாடலை படுக்கைக்குப் போகும் முன்பு கேட்டாய். உனக்கு பெண்களைப் பற்றி நிறைய சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தது, ஆனாலும் உன் சிறிய சகோதரியின் கண்களிலிருந்து தூக்கத்தைப் பறித்த, அவர்களின் உருக்கோணலான வடுக்கள் நிரம்பிய முகங்களால் நீ தொடர்ந்து துன்புறுத்தப்படுகிறாய்.
வேறொன்றுமில்லை, நீராவியில் அசையும் நிர்வாணங்களை மட்டும் இப்பொழுது காண்கிறாய், ஆசையால் அலையுறும் பெண்களைப் பார்க்கிறாய், உன்னைத் துரத்திய ஒரு குடும்பப்பெண்மணியின் உருவத்தைக் காண்கிறாய். நீ இரகசியமாக எவ்வித குறிக்கோளுமற்று இவளுடைய வீட்டில் நுழைந்திருந்தாய், அவளின் ஒழுக்கமற்ற நடத்தையைக் கண்டு அதிர்ச்சியடைந்தாயாதலால், திரும்பி உன்னால் முடிந்தயளவு வேகமாக அங்கிருந்து ஓடினாய்.
மென்மையான மேனி கொண்ட பெண்களின் முகத்திற்குத் திரையிடும் ஆண்களுக்குச் சொந்தமான வேலிகளுக்கு அப்பாலும், அருகிலிருக்கும் வீடுகளிலும் நீ நிறையவே பார்த்திருக்கின்றாய்.
ஆனால் இப்போது,
உன்னைவிட பல வயதுகள் மூத்தவளான அவளை நினைத்துக் கொள்கிறாய். சிலநேரங்களில் மிகுந்த வேதனையுடன் அழுதுத் தீர்க்கின்றாய், மற்ற சமயங்களில் அவளைத் துன்புறுத்தியவர்களைப் பிடித்து வைத்து, அவர்களின் அந்தரங்க உறுப்பில் துடிக்கும் தமனிகளை அறுத்துவிடும் விருப்பம் கொள்கிறாய்.
ஏன் அவளை அந்த இரவிற்குள் மறையச் செய்தார்கள்? ஏன் அந்த அடர்ந்த வனத்தின் முதிர்ந்த மர நிழலில் அவள் அரட்டையடிப்பதை நீ கேட்க முடியவில்லை, அவள் விளையாடுவதை நீ காண முடியவில்லை?
நீ தனிமையில் மிஞ்சியிருக்கிறாய். நீயும் உன்னுடைய பெற்றோரும்.
நீ பெரும் வீரியம் கொள்ளும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் வயது முதிர்ந்து கொண்டு வருகிறது.
சில சமயங்களில் அவர்களுடைய அந்த சரசங்களின் அர்த்தங்கள் புரியாமலேயே, இருவரும் இணைந்திருக்கும் சமயத்தில் நீ அவர்களைக் கண்டாய். தன் உடலின் கீழ்பகுதியிலுள்ள உடைகளைக் களைந்த பின், அவன் அவளை நெருங்குவான். அவனுடைய பரவசத்தில் மௌனமாகத் தன்னை நகர்த்திக் கொள்ளும் அந்தக் கணம் வரையிலும் அவள் சலிப்பாகவோ கோபமாகவோ தன்னை காட்டிக் கொள்வாள். இது வாழ்வின் மிக இயல்பான நியதி என்பதும், தன் வீட்டின் தலைவன் என்றாலும் பெண் அத்தனை சுலபமாகத் தன்னைக் கொடுத்துவிடலாகாது என்றும் பிறகுதான் புரிந்து கொண்டாய். நீ இன்னமும் படுக்கையில் தூங்காமல் இருக்கக்கூடுமென்று அவர்கள் சந்தேகம் கொள்ளவேயில்லை. பிறகு ஏன், அந்த சிறு பெண்ணை மட்டும் இதையொத்த ஒரு நடத்தைக்காகத் தொலைந்துபோகச் செய்தனர்.?
ஒரு நல்லொழுக்கமுடைய பெண், விளையாட்டுத்தனமான காதல் லீலைகளை, அத்தகைய நெருக்கத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாதவளாகயிருப்பினும் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டாள்.
அவள் எங்கே மறைந்து போனாள்?
கடுமையான ஜூரத்தால் பாதிக்கப்பட்டிருந்தாள் என்றும் ஒரு மழைக்கால இரவில் அது அவளின் உயிரை பறித்துச் சென்றதென்றும் உனக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு சொல்லப்பட்டது.
எந்த இடம் அது? அந்த மழையிரவில், அவ்விடத்திற்கே அவள் மறைந்து போகுமளவிற்கு, அவளின் சிறு ஆன்மா எந்த இடத்தின் மீது அளவிலா அன்பு கொண்டிருந்தது? அவள் மரணத்தினால் உண்டான அந்த இரணம் இன்னும் ஆறவேயில்லை. வசந்தகால மாலைகளில் சிறு *ஜீனிகள் நட்சத்திரங்களாக வடிவெடுக்கிறார்கள், சிறுமிகள் பூமியிலிருந்து வானத்திற்குள் மறைந்த பிறகு அந்த நட்சத்திரங்களுடன் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார்கள் என சொல்லப்படுகிறது. மற்ற சிறுமியருக்கிடையில் அவளும் அங்கே இருக்கிறாள், எண்ணற்ற விண்மீன்களோடும் பிரகாசமான ஒளியோடும் விளையாடுவதாகச் சொன்னார்கள்.
அவள் வேறொரு உலகத்தில் இருந்தாள். அவ்வுலகம் கவலைகளே இல்லாத கற்பனைக்களுக்கெட்டாத இன்பங்கள் நிறைந்தது.
பூமியில் மகிழ்ச்சி முழுமைபெறாத போது, வானின் எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைக்கும் பொருட்டு இறந்துவிடும் ஒருவர் எப்பொழுதும் உண்டென்பதாகவும் சொல்லப்பட்டது.
உனக்கு நெடுங்காலம் எது புதிராகயிருந்தது என்றால், எல்லா மனிதர்களும் சாதாரணமாக, தினசரி ரகசியமாக ஈடுபடும் ஒரு செயலுக்காக, அவள் முறைப்படி விசாரிக்கப்படாமல், மரணம் நேரத்தக்க வகையில் கண்டிக்கப்பட்டாள் என்பதே.
*சமோவர் ~ தேநீர் தயாரிப்பதற்கானத் தண்ணீர் கொதிக்க வைக்கப் பயன்படும் கொதிகலன்.
*ஜீனிகள் ~ அரேபிய புராணங்களில் இடம்பெற்றுள்ள வரங்கள் அளிக்கக்கூடிய ஆன்மாக்கள்
– ஃபௌசியா ரஷீத்
தமிழில்: ஜான்ஸி ராணி
ஆசிரியர் குறிப்பு:
ஃபௌசியா ரஷீத் (1954)
பெஹ்ரைனில் பிறந்த இவர் “அக்பர் அல் கலிஜ் ” என்ற தினசரியில் பத்திரிக்கையாளராகப் பணிப்புரிந்தார். வளைகுடா மற்றும் அரேபிய பத்திரிக்கைகளுக்கு நிறைய கட்டுரைகள் எழுதியுள்ள இவர், 1977-ஆம் ஆண்டு கதைகள் எழுதத் துவங்கினார். முதல் நாவலும், முதல் சிறுகதைத் தொகுப்பும் 1983-ல் வெளிவந்தன. அதன் பிறகு மேலும் இரண்டு நாவல்களும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன.
ஜான்ஸி ராணி: உளவியல் ஆலோசனையில் முதுநிலை பட்டம் படித்தவர். மனநலம்,வாழ்வியல்,வணிகம்,
மெட்டாஃபிஸிக்ஸ் என பல்வேறு தலைப்புகளில் இவர் எழுதிய கட்டுரைகள் தமிழின் முன்னணி பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் வெளியாகியுள்ளன.
“ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்” எனும் கவிதைத் தொகுப்பை சென்ற ஆண்டு வெளியிட்ட இவர் தற்போது அரபு நாட்டு கதைகளை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.