ஒரு கார்டு

ண்ணாடி முன் நின்று சிரைக்கும்போதுதான் ஏழு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஞாபகம் வருகிறது காளிக்கு.ஒற்றைச் சம்பவம் மீதமிருக்கும் வாழ்க்கையின் ஒட்டுமொத்த ஒழுக்கின் திசையையே மாற்றிவிடுகிறது; ஒற்றைச் சம்பவம் கூட அல்ல ஒரு கார்டு. அந்த ஒரு கார்டு எங்கிருந்து வருகிறது?.

அவன் சிறு வயதிலிருக்கும்போது சீட்டுக்கட்டை வைத்துக்கொண்டு ஒவ்வொரு கார்டாக எடுத்து அடுத்து வரும் கார்டை சிகப்பு, கருப்பு, இதயப்பூ, இலைப்பூ என ஊகித்து விளையாடுவது அவனுக்கு பிடித்தமான விளையாட்டாகும். ஒவ்வொரு கார்டையும் கண்டுபிடிக்கும் போதும் மகிழ்ச்சி அடைவான் ஆனால் பெரும்பாலான தருணங்களில் அவனுக்குத் தோல்விதான் மிஞ்சும்.  சிறு வயதிலிருந்தே சீட்டு விளையாடுவதால் அவனுக்கு ஒன்று உறுதியாக தெரியும் அடுத்து வரும் கார்டு அந்த 52 கார்டுகளிலிருந்து வருவதில்லை என்று. அது எல்லா சாத்தியமும் நிறைந்த முடிவிலா வலைப்பின்னலின் ஒரு கண்ணி உடைந்து அகாலத்தின் தவம் முடித்து காலத்திற்கு வருகிறது என்றும் ;முடிவிலியின் உள்ளே கைவிட்டு அந்த ஒற்றைக் கார்டை மனிதர்கள் மண்ணுக்குக் கொண்டு வருகிறார்கள் என்றும் எண்ணிக்கொள்வான்.அந்த சம்பவமும் முடிவிலியிலிருந்து தான் வந்திருக்க வேண்டும்.

அந்த பெயருக்கு ஏற்றார் போல அவன் நடக்கவில்லை. ”துரை” எவ்வளவு மரியாதையான பெயர். கொஞ்ச நாளாகத்தான் சீட்டுகிளப்பில் அவனைப் பார்த்திருக்கிறேன் ஓரிரு வார்த்தைகள் தான் பேசியிருக்கிறேன், அமைதியானவன் எப்பொழுதும் சிரிப்பை அடக்கிய உதடு, ஒற்றைக்கண்ணை இடுக்கிக் கொண்டுதான் பார்ப்பான். அந்த முகம் ஏமாற்றும் என்று எதிர் பார்க்கவில்லை காளி. இருவரும் ஒரே ஊரிலிருந்தும் அவனுடன் பழக்கமில்லை, பழகியிருந்தால் ஒரு வேளை அந்த சம்பவம் நிகழாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதை நான்  செய்யவில்லை என் வழியே சூதின் தெய்வம்தான் அவன் கையை வெட்டியது.


துரையும் ஒரு ஏழெட்டு மாதமாகத்தான் சீட்டு விளையாடுகிறான்.அதற்கு முன் விளையாடாததற்கு அவனுடைய நாகலிங்க தாத்தாதான் காரணம். சிறு வயதில் பெரியவர்கள் விசிறி மாதிரி சீட்டு பிடிப்பதைக் கண்டு தானும் அவ்வாறு பிடிக்க ஆசைப்பட்டு துட்டி வீட்டிலிருந்து எடுத்துவந்த சீட்டுகளை வைத்து முயற்சி செய்த போது அவனுடைய நாகலிங்க தாத்தா “ இது எல்லாத்தையும் அழிச்சிரும்டா, சீட்டு பிடிக்கிறவன் கை அது கையில்லடா அது நாகம் அது உறையிற இடம் மனசில பாதாளம்டா அது. நம்ம தாத்தன் பூட்டன் அடக்கி வைச்சதடா, அந்த நாகம் உன்னையும் பாதாளம் நோக்கி கூட்டிட்டு போகும்டா.அது வேணாம்டா நமக்கு” என்றார்.

அன்றிலிருந்து அவன் சீட்டை தொடவில்லை. சிறு வயதிலிருந்தே விளையாடாததால் அவனுக்குச் சீட்டு விளையாட்டில் ஆர்வமும் இல்லை.ஆனால் அதே நாகலிங்க தாத்தா இறந்த அன்றைக்கு தான் நான் முதலில் விளையாடவும் ஆரம்பிச்சேன்.அதற்கு குமார் அண்ணன்தான் காரணம்.

தாத்தா இறந்த அன்றைக்கு குமார் அண்ணன் “ சீட்டு கிளப்புக்குப் பக்கத்திலேயே வீடிருந்தும் நல்லா பவுசா வாழ்ந்த தாத்தா ஒரு முறைதான் அங்க போயி விளையாடுனாரு.அது ஏன்னு தெரியுமால உனக்கு ? ” என்றார்.

நான் “ தாத்தாக்கு சீட்டு விளையாட பிடிக்காதுன்னு மட்டும் தெரியும் ஆனா ஏன்னு தெரியாது நீயே சொல்லுண்ணே ”  என்றேன்.

குமார் அண்ணன் சொல்லுச்சு “அன்னைக்கு தாத்தா ஒரே ஆட்டையில நூரு ரூபாய் ஜெய்ச்சாராம்ல. அன்னைக்கு தேதிக்கு அத வைச்சு ஒரு ஆட்டுக்கெடையே வாங்கலாம்ல.ஆனா அத அங்கனையே அப்படியே விட்டுட்டு எந்திரிச்சுட்டாராம்ல. அதுக்கு அப்பறோம் அவரு விளையாடவே இல்லையாம்ல”.

நான் “ ஏன்ணா காச வெச்சுட்டு போனாரு னு ” கேட்டதற்கு “ விளையாட்டுல இல்லாதவனுக்கு இது தேவை இல்லை ல. அத சொல்லால சொல்ல முடியாது ல. அத சொல்ல முடியும்னா இந்த சாமி, பூதம் எதுவும் தேவை இல்லை ல. நீ விளையாடு ல அப்ப தான் நீ உணர முடியும் அப்ப தான் அவரு எதை எடுத்துட்டு போனாரு எதை வச்சிட்டு போனாரு னு தெரியும் உனக்கு.” என்று கூறி அவருதான் சீட்டு விளையாட்டு சொல்லி கொடுத்தார்.

நான் நினைத்த மாதிரி இல்லை சீட்டு விளையாட்டு கற்றுக்கொள்வதற்குக் கடினமாக இல்லை ஆனால் அதில் வெற்றி பெறுதல் என்பது கடினமாக இருந்தது. ஊழ் ஒரு வாய்ப்பை அளிக்கும் அதைக்கொண்டு அதன் தொடர்ச்சியாக நாம் ஒரு வலைப்பின்னலை உருவாக்கி அந்த ஊழை நெருங்க வேண்டும் அதான் வெற்றிக்கான வழி.

பல நேரங்களில் நான் ஒருவரே இருவருக்கு சீட்டு போட்டு விளையாடுவேன். அதிலிருந்து நான் அறிந்த ஒன்று “ ஊழின் வலைப்பின்னலை அறுக்கும் கருவி தான் ஜோக்கர். சீட்டு விளையாட்டு உருவான ஆரம்பத்தில் ஜோக்கர் இருக்க வாய்ப்பில்லை; மானுடன் மீண்டும் மீண்டும் ஊழுடன் விளையாடித் தோற்ற கணத்தில் ஊழை பார்த்துச் சிரிப்பதற்காக உருவாக்கியதுதான் ஜோக்கர்.அதைக்கொண்டு ஊழையும் வீழ்த்தலாம் ”. தனியாக விளையாடும் பொழுது ஜோக்கர் கார்டை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து எடுத்து ஊழை வெற்றி கொள்வேன். ஆனால் சீட்டு கிளப்பில் முறையாகவே விளையாடுவேன் விதியை வெல்வதற்கே அந்த யுத்தி.

சீட்டு கிளப்பில் காளி தான் ராஜா. தான் வென்றுவிடுவோம் என்பவர்களிடம் விளையாட மாட்டான். துரைக்கு அவன் கூட விளையாடி வீழ்த்த வேண்டுமென்ற வெறி. காளிக்கும் அவனுக்கும் பெரிய பழக்கமில்லை என்றாலும் ஏன் இந்த வெறி ? யார் என அறியாதவரை வீழ்த்த ஏன் இந்த வெறி ? இதன் பதிலாக நான் உணர்ந்த்து “ இருவர் விளையாடும் சூதில் முடிவிலி இரண்டாகப் பிரிந்து இருவர் பின்னும் இருக்கிறது ஆனாலும் அது சிறப்பாக விளையாடுபவரின் மீது மோகம் கொண்டு மேலும் அருகிலுள்ளது .காளியை வீழ்த்துவது அந்த முடிவிலியின் நம்பிக்கையை வீழ்த்துவதற்கு நிகர், அது உருவம் கொண்டு வந்த அருவத்திற்கு எதிரான வெற்றி ”.


ம்பவம் நடந்த அன்று  101 பாயிண்ட் ஆட்டம் ஆறு பேருடன் ஆட்டத்தை ஆடினான் காளி அதில் துரையும் இருந்தான். இதை விட்டால் காளியுடன் விளையாட வேறு வாய்ப்பு கிடைக்காது இந்த விளையாட்டில் வென்று விடவேண்டும் என முடிவெடுத்தான் துரை.

மற்றவர் நால்வரும் தோற்று விலக காளியும் துரையும் மட்டும் 90-60 என்ற பாயிண்டுடன் இருந்தனர். இந்த முறை கலைத்து போட வேண்டியது துரை, கத்தியை விட்டெறிவது போன்று ஒவ்வொரு கார்டாக காளியை நோக்கி விட்டெறிந்தான் அவன், இருவரும் ஆட்டத்தை ஆரம்பித்தனர். கிளப்பினுள் வெளிச்சம் மங்கி விட்டதால் ஒரு சாய்வாக உட்கார்ந்துகொண்டான் துரை. அவன் காலத்தை கணம் கணமாக உணர ஆரம்பித்தான்,கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இதயத் துடிப்பைக் கூறிவிடலாம் எனும் அளவுக்கு அவனுக்கு படபடப்பு இருந்தது.” இதான் தருணம் காளியை வெல்வதற்கு எடுத்த எடுப்பிலேயே அடித்தால் தான் அவனை வெற்றி பெற முடியும்” என துரை நினைத்தான்.

தனியாக விளையாடும் போது பல முறை செய்து இருக்கிறான் ஆனால் மற்றவர்களுடன் விளையாடும் போது செய்ததில்லை. இதில் தவறேதுமில்லை, இதுவும் சூதிற்க்குட்பட்டதுதான். சூது எதிரியை முற்றாக வீழ்த்தழிக்க வேண்டும் எனும் இலக்கு மட்டுமே உடையது அதற்குள் விதி கிடையாது. இதில் வென்று விட்டால் துரையின் சீட்டாட்டம் முடிந்தது இனி எக்காலத்திற்கும் அந்த கார்டுகளைத் தொட மாட்டான். அவனுக்குள் ஒரு கணம் நாகலிங்க தாத்தா நினைவில் வந்து போனார். மறு கணம் கைலியிலிருந்த ஜோக்கரை பாம்பு இரையைக் கவ்வுவது போன்று வெடுக்கென கையில் நிறுத்திவிட்டான்.

அடுத்த நொடி துரையின் கை தனியாகக் கிடக்கிறது. காளி அருவாளுடன் எழுந்திருக்கிறான். 13 சீட்டுகளை விசிறி போல துரையின் துண்டான கை பிடித்துருகிறது. அந்த ஒரு கார்டு மட்டும் காளியின் முன் கிடக்கிறது,அந்த கார்டின் நடுவே ஒரு ஆடியை வைத்தால் அவை ஒன்றை ஒன்று பார்த்துச் சிரிக்கும்.


-தி.ஜினுராஜ்.

1 COMMENT

  1. இனிமையான கதையோட்டம்.அருமை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.