தனிமையிருள்

 

வேப்பமூடு சந்திப்பில் பிரபல டீக்கடையில் வழக்கமான நண்பர்கள் சந்திப்பில் இருந்தபோது அந்த அழைப்பு வந்தது. நான் எதிர்பார்த்திருந்த அழைப்புதான். வழக்கமான கலகலப்பு என் முகத்தில் அன்று இல்லாதிருந்ததை நண்பர்கள் கவனித்து என்னவென்று கேட்க, ஏதேதோ சொல்லி சமாளித்திருந்தேன். அந்த அழைப்பு வந்ததும் என்னை அறியாமல் படபடத்து தனியாகச் சென்றேன்.

“அப்பா…சொல்லுங்கப்பா…” பதில் ஏதும் இல்லாமல் கதறி அழுதார் நிஷாப்பா.

“அப்பா..அப்பா..என்னாச்சுப்பா?…அப்பா, சொல்லுங்கப்பா… அழாதீங்கப்பா… நீங்க எங்க இருக்கீங்க?”

“தம்பி…தப்பா நெனைக்காதப்போ, கொஞ்சம் வருவியாப்போ.. ஒண்ணும் மனசுலாவல…”

“எங்க இருக்கீங்கப்பா? சொல்லுங்க..”

அழுகையை அடக்கமுடியாமல் பெருமூச்சாக விட்டுக் கொண்டிருந்தார் நிஷாப்பா.. ”ராஜசேகரன் ஆஸ்பத்திரி.. செனம் வாப்போ… தப்பா நெனைக்காதப்போ… ப்ளீஸ்…”

எங்கள் நட்பு எவ்வளவு நெருக்கம் என்பதை நன்றாகத் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே சம்பிரதாய வார்த்தைகளைச் சொல்வார் நிஷாப்பா. “தப்பா நெனைக்காதப்போ, ரொம்ப நன்றி தம்பி, நீங்க மெனக்கெட வேண்டாம்ப்போ….”. பலபேர் நினைத்த மாதிரி அவரும் நினைத்திருப்பாராக இருக்கலாம். நிஷாம்மாவும் நானும் திருமணம் செய்து கொள்வோம் என்று! அது இல்லையென்று தெரிந்தும் இன்னும் மரியாதை என்னும் பெயரில் அந்த விலக்கம், தூரத்தில் வைத்தல்.

அழைப்பைத் துண்டித்துக் கொண்டு நண்பனை வண்டியை எடுக்கச் சொன்னேன். அவன் ஏதும் கேட்கவில்லை, “மாப்ள.. விடு.. ஒண்ணும் ஆகிருக்காது… மொதல்ல போயி பாப்பம்…”

வரவேற்பில் பெயர் சொன்னதும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகச் சொன்னார்கள். நேற்று இரவில் திரும்பி வரும்போதே எனக்கு தோன்றியது. நிஷாம்மாவின் மனது எல்லை மீறி விட்டதென்று. சீ..சீ..அவள் அப்படியெல்லாம் செய்யமாட்டாள் என்று வந்திருக்கக் கூடாது நான்.

“பாரதி, கொஞ்சம் வீட்டுக்கு வருவியா?” என்று கேட்டாள் நிஷாம்மா.

“என்னடி, கண்ணாடி? என்ன விஷேசம்?” என்று வழக்கம் போல கேட்டேன்.

“இல்லடா.. நீ வா, உன்ட்ட பேசணும்.”

வீட்டில் நுழைந்ததும் சுவரில் இருந்த பகவதி அம்மனின் படத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அப்பா, “வாப்போ, மேல பெறைல இருக்காப்போ” என்று சொல்லி அமைதியானார். வீடு நிசப்தத்தை பூசிக்கொண்டது போல இருந்தது. கலகலப்பாக பேசித் திரியும் தங்கச்சி செல்லாவையும் காணவில்லை. நடு அறையின் ஓர் ஓரத்தில் மேற்செல்லும் மரப்படிக்கட்டின் மேலேறிச் சென்றால் இருண்ட, நிஷாம்மாவின் அறை. ஜன்னல் கம்பிகளைப் பிடித்து வான் நோக்கி இருந்தாள். கண்களில் அழுகையில்லை. அசைவும் இல்லை.

“என்ன மேடம், மேல உங்காளு முருகன்ட்ட பேசிட்ருக்கியா?”

நான் வந்தது அவள் கவனத்தில் இல்லவே இல்லை. “ஏய், கண்ணாடி, உன்னத்தான், என்ன சொல்றாரு முருகன்?”

முகம் பார்க்காமலேயே   “வா.. இரி.. பிள்ள நல்லாருக்காளா?” என்றாள்.

“ம்ம், எல்லாரும் சுகம், என்ன, திடீர்னு வீட்டுக்கு வரச் சொல்லிருக்க?”

“என்னால முடிலடா.. எங்கப்பா நேத்து சொல்லுகா, நீ பேசாம பாரதியவே கெட்டிருக்கலாம்னு… அப்பாட்ட நா என்ன சொல்ல? நா எங்கயாம் போப்போறேன்.. முடிலடா..”

நிஷாம்மா என் உயிர்த் தோழி என்பது என் நண்பர்கள், குடும்பத்தினர் எல்லாருக்கும் தெரியும். அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற எண்ணம் எனக்குத் தோணாமலெல்லாம் இல்லை. ஆனால், அவள் என்னைப் பார்த்த விதமே வேறு. விளையாட்டாக ஓட்டுவது மாதிரி சில சமயங்களில் அவளிடம் காதலைக் கூட சொல்லியிருக்கிறேன். ஒரு சிறுவனை அதட்டுவது போல எளிதாக என்னை விலக்கி அவள் நிலையில் மிக உறுதியாக இருப்பாள். அவள் என்னை விட மூன்று வயது பெரியவள் தான். ஆனால், வயது இங்கே விசயமல்ல. பாரதி, பெயரைப் போலவே அவளுக்கு ஆணும் பெண்ணும் ஆன அல்லது கடந்த ஒரு உறவு தான்.

“நிஷாம்மா, நான் எவ்ளோ வாட்டி சொல்லிருக்கேன். நீ உன் இஷ்டப்படி இரு, எதையும் கண்டுக்காதன்னு. எல்லாம் சரி ஆகும் பாரு.”

“இல்லடா, எனக்கு என்னலாமோ தோணுது பாத்துக்கோ, கண்ண மூடி ஒறங்க முடில, ஒரே கெட்ட சொப்பனம், ஒரே இருட்டு, யாரோ என்ன கூப்புடுகா.. ஒரு பொட்டு தூங்கல..

“அதெல்லாம் சும்மா.. நீயே கற்பன பண்ணிக்கிற, சாமிய நெனச்சுக்கோ.. எல்லாம் சரி ஆகும்..”

“இங்கப்பாரு, நா எப்பவுஞ் சொல்லுக மாரியில்ல, இப்ப ரொம்ப தல வலி, ஒரே சத்தம் மண்டைக்குள்ள, யாரோ பக்கத்துல நின்னு பேசுக மாரி… செத்துரலாம்னு தோணுது..”

“எத்தன நாளா இப்படி இருக்கு உனக்கு?”

“தெரிலடா, ரொம்ப நாள் இருக்கும்..”

“சரி, விடு, நாளைக்கு நா வரேன், வெளிய போலாம்.”

அவள் இன்னும் வான் பார்த்தே இருந்தாள். இந்த உரையாடலின் போது கூட யாருடனோ பேசுவது போல என்னைப் பார்க்காமலேயே தான் இருந்தாள். நான் அப்பாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினேன்.

ஆஸ்பத்திரியில் பணம் கட்டும் இடத்தில் நின்றிருந்தார் அப்பா. என்னைப் பார்த்ததும் கண்களை விலக்கி எனை நோக்கி மெதுவாக நடந்து வந்தார். எப்போதும் போல ஒரு வெள்ளைக் கைக்குட்டை அவர் கையில், இந்த முறை அழுக்கேறியிருந்தது. என் கைகளைப் பிடித்து தழுதழுத்தார், “வாப்போ.. டாக்டர் இப்பத்தான் சொன்னாரு..தாணுமாலயன் புண்ணியத்துல பொழச்சிட்டா…”

தீவிர சிகிச்சைப் பிரிவின் கதவுக் கண்ணாடி வழியே நிஷாம்மாவின் உயிர்த் துடிப்பைப் பார்த்தேன். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் அவளைப் பார்த்துக்கொண்டு நிற்க முடியவில்லை. நிஜமாகவே உறங்குகிறாளா? என்ன யோசித்துக் கொண்டிருப்பாள்? எனக்கு என்னென்னமோ தோன்றியது.

”நீ ஏதாவது பண்ணிருக்கணும்டா.. உனக்கு நல்லாவே தெரியும் இப்டிதான் நடக்கும்னு… முட்டாள்… அவ என்ன பெரிய புரட்சிப் பெண்ணா? முட்டாள்.. வம்பா ஒரு உயிர் போகப் பாத்துச்சே…”

அப்பா ஏதோ சொல்ல வந்து தயங்கி நிற்பது தெரிந்தது. “என்னப்பா.. சொல்லுங்க… எதும் வாங்கிட்டு வரணுமா?”

“இல்ல தம்பி… இது….” என்று ஒரு நோட்டை நீட்டினார். நினைத்தேன். “பெரிய இவ மாதிரி பண்ணிருக்கா.. திமிரு பிடிச்சவ… நாங்க அப்ப என்ன மயித்துக்கு இருக்கோம்… லெட்டர் மண்ணாங்கட்டி…”

நிஷாம்மா அந்த நொடியைக் கடந்துவிட எவ்வளவு யோசித்திருப்பாள். நோட்டை வாங்கிக்கொண்டு பின்புறம் இருந்த கேண்டீனுக்குச் சென்றேன். “மாப்ள.. ஒரு டீ சொல்லுல..”

 

என்னால முடியல… இத நீங்க படிக்கணும்னு ஒண்ணும் இல்ல..இத யாரு படிக்கப் போறியோன்னு எனக்குத் தெரில.. ஆனா படிச்சு முடிச்சா எங்கப்பாட்டயும் பாரதிட்டயும் சாரி சொல்லுங்க..ப்ளீஸ்..

இப்டி நான் செய்வேன்னு என்னாலயே நம்ப முடில.. ஆனா தல வலிக்கி.. பொறுக்கவே முடில.. உடம்பு பூரா வலி… வலி இல்ல…ஊசி வச்சு குத்துனமாரி… ஒரு காலத்துல எப்படி இருந்தேன்… என் முகத்த பாத்துத்தான் எங்கப்பா வெளிய போவா.. எங்கம்மாவுக்கும் நான்தா மூச்சு… பொறவு, பாரதி..என்னன்னு சொல்ல…

திருச்சி பஸ்சுன்னு தா நெனைக்கேன். போஸ்டல் அசிஸ்டென்ட் வேலைக்கு நா இன்டர்வியூக்கு போய்ட்ருந்தேன். நா எதுக்கும் டென்சன் ஆக மாட்டேன், ஆனா அன்னிக்கு அவ்ளோ பயம். ஒரே மந்திரமா சொல்லிட்ருக்கேன், முருகன் காப்பாத்துவான்னு..

பாரதி எழுதிருந்தான், “உன் பின்னிருக்கையில் இருந்து, காற்றில் சிறகசைத்த உன் காதோர ஒற்றை முடியையும் துருத்தி நின்ற மூக்குக் கண்ணாடியையும் ரசித்திருந்தேன்”

பதினாலு வருசமாச்சு, இப்ப எனக்கு இருக்க ஒரே நட்பு, உறவு அவன்தான். அவனுக்கு இந்த உலகத்துல தெரியாத எதுவுமே இல்ல. அப்டிதான் அவன் சுத்துவான். அவன் இருக்க எடத்துல சந்தோசம் மட்டுந்தான் இருக்கும். ஒரே கலகலன்னு. என்ன கொமச்சிட்டேதா இருப்பான். ஆனா பாசம், அவ்ளோ பாசம். சரி, அவனப்பத்தி பொறவு சொல்லுகேன்.

பொம்பளயளுக்கு வாழ்க்கையே ஆம்பளையள நம்பித்தான இருக்கு..அப்பா, அண்ணன், தம்பி, மாப்பிள்ள, தாய் மாமா. ஆனா இவ்வோ யாரும் இப்ப எங்கூட இல்ல. எல்லாம் என்ன சுத்திதான் இருக்கா. ஆனா, எங்கூட இல்ல. மனசுலாவுதா உங்களுக்கு? எனக்கே வெறுப்பாயிட்டு.. அவ்வோ மூஞ்சியக் கூட எனக்கு பாக்காண்டாம்.. இப்டி சொல்லதால நான் சோகப்பாட்டு பாடுகேன்னு நெனைக்காதியோ. நா மட்டுந்தா கஷ்டப்படுகேன்னு நா சொல்லல.. அப்டி வக்கத்தவளும் இல்ல.. ஆனா, எல்லா ஆம்பளையோளும் அப்படி இல்லல்லா.. எல்லாரையும் அப்டி சொல்லமாட்டேன்.. எனக்கும் கூறு உண்டு..

அங்க இண்டர்வியூ போனேனா.. ஒரு பெரிய ரூம்ல இருக்கச் சொன்னாங்க.. அங்கதா பாரதியும் இருந்தான். எல்லார்ட்டயும் வளவளன்னு சிரிச்சுட்டே பேசிட்ருந்தான். என்னயும் பாத்தமாரி இருந்து. சரி, நம்மளே போய் பேசுவோம்னு அவன் பொறத்த போயி, ““எக்ஸ்க்யூஸ் மீ”-ன்னு சொன்னேன்.

திரும்பி என்ன யாருன்னே தெரியாதமாரி “எஸ், சொல்லுங்க”-ன்னான்.

ஒருவேள கவுரவம் புடிச்ச பயலா இருப்பானோ. பேசவா வேண்டாமா? “காலைல பஸ்சுல உங்க முன்னாடிதா இருந்தேன், எம்பேரு நிஷாந்தி”

“ஓ! அப்டியா! நைஸ் டு மீட் யு.. என் பேரு பாரதி, ஊரு நாகர்கோவில். நீங்க எந்த ஊரு?”

அவன் பேசுறது நாரோயில் பாஷ மாதி இருக்காது. எல்லா ஊர்லயும் சுத்தி சுத்தி அப்டி ஆய்ட்டுன்னு அவன் சொல்லுவான்.

“நானும் நாரோயில் தான்.”

“சூப்பர்.. நம்ம ஊர் தானா? நீங்களும் போஸ்டல் அசிஸ்டென்ட் வேலைக்குத்தானா?” என்றான்.

“ம்…”

“அப்போ கஷ்டம்தான், எனக்குக் கண்டிப்பா கெடச்சிரும். நீங்க என்ன பண்ண போறீங்களோ?” ஏதோ ரொம்ப தெரிஞ்ச ஆளுட்ட பேச மாதி என்ன பாத்து கண்ணடிச்சான்.

நான் ஒண்ணுஞ் சொல்லல, “ அய்யோ , சாரிங்க! சும்மா தான் சொன்னேன். தப்பா எடுத்துக்காதீங்க. எல்லாம் ஈசியா தான் இருக்கும், பாத்துக்கலாம்.”-ன்னு சொன்னான்.

ஒரு மாரியான சந்திப்புதா இல்லயா?.. நீளமான முடி, கண்ணாடி போட்ட பொண்ணுதான் புடிக்கும்பான். பொம்பளப் புள்ளையோ நல்ல தமிழ் பேசடது தனி அழகும்பான். அவனுக்கும் தமிழ்னா உயிர் மாரிதா. பேரு சரியாதான் வச்சிருக்கான்லா?

எதோ சொல்ல வந்தேனே. ம்ம்ம் … எல்லா ஆம்பளமாரயும் நான் கொற சொல்ல மாட்டேன். நான் கிறுக்கி இல்லல்லா. பாரதியும் ஆம்பள தான. சுப்பிரமணிய பாரதியும் இந்த பாரதியும்..செரி, எனக்குக் கல்யாணம் கழிஞ்சு ஆறு வருசமாச்சு. ஆனா, என் ஆபீஸ்ல எவள்லாமோ என்னலாமோ பேசுகாளுகோ. அவ்வோ பேசத என்ட்ட வந்து சொல்லவும் ஆளுகோ உண்டும். எனக்குப் பிடிச்ச கொஞ்ச ஆளுகோ. இவாள்லாம் இப்டி பேசது என் தலயெழுத்து தான். ஒரு வேள, நானே காரணமா இருப்பனோ? எனக்கு ரொம்பத் திமிராம், ஓவர் வாயாம், அதனாலதா இப்படி சீரழியேனாம்.

ஒரு நாள் பேசும்போ பாரதிட்ட கேட்டேன், “டேய், ஒண்ணு கேட்டா உண்மையச் சொல்லுவியா?”

“ம்..கேளு”

“அது…ம்..எப்பவாது இவளுக்கு திமிர் கொஞ்சம் கூடதான்னு நெனச்சிருக்கியா?”

நான் நெனைக்கமாரி அவன் சொல்லணும்னு மனசுக்குள்ள எதிர் பாத்தேன்.

“இல்லையே..கொஞ்சம் திமிர் இருக்கு..ஆனா, பரவால்ல, அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.”-ன்னு சொல்லி சிரிச்சான்.

எனக்கு கடுப்பாயிட்டு, “சிரிக்காத சவமே, உன்ட்ட கேட்டேன்லா, எனக்கு தேவதான். அதுக்குப் பொறவு நான் பேசல. மனசுல என்னென்னமோ ஓடிச்சு, உள்ள பூரா ஒரே கேள்வியா ஓடுகு…கண் கலங்கவே கூடாதுன்னு வாழ்க்கைல இருந்த வெறி போயிரும்னு தோணிச்சு.

பொறவு, அவன்தான் பேசினான்.

“நிஷாந்தி, இங்கப் பாரு. பொண்ணுங்க திமிரா இருந்தாதான் என்ன? அச்சம், மடம், நாணம், பயிர்ப்புலாம் பேசிப் பேசி என்ன ஆகப் போகுது. எனக்குத் தெரிஞ்ச நிஷாந்தி எந்தவொரு ஆணுக்கும் சளச்சவ இல்ல. நெறைய ஆண்கள் சாதிச்சத விட அதிகமாவே நீ இந்த வயசில சாதிச்சிருக்க. உங்க அப்பா அம்மா எவ்வளவு பெருமையா சொல்றாங்க எங்கிட்ட. உன் தங்கச்சிக்கு நீ தானே ரோல் மாடல்?”

பாரதி இப்டி பேசது இதொண்ணும் மொத தடவ இல்ல. வாரத்துக்கு ஒரு தடவ, இல்லன்னா, செல சமயம் தெனம் இத சொல்லுவான். அவன் அப்டி சொல்லும்போல்லாம், செரி, நம்ம வாழணும்னு தோணும்.. செத்துப் போணும்னு நான் எப்பயும் நெனச்சதில்ல, நெனச்சிருந்தா எனக்கு அது ரொம்ப ஈசிதான். யாருமே இல்லாத எடத்துல இருக்க மாரி ஒரு எண்ணம். தண்ணி தெவிக்கும், கண்ணு இருட்டாயிரும், மூச்சு முட்டும், எங்க போறேன்னு தெரியாம ஒரு போக்கு. போயிட்டே இருப்பேன். நல்லா மெசின் மாரி வேல பாத்து ஆபீஸ்ல நல்ல பேரு தான், ஆனா, எதுக்கு இதெல்லாம்னு ஒரே கேள்வி..தெனமும் அதே கேள்விதான்… செரி, போகமட்டுக்கும் போட்டும்னு நானும் பாத்தேன். பாருங்க, நா சொல்ல நெனச்சத சொல்லாம என்னல்லாமோ சொல்லுகேன்.

என்ன கட்டினவன் ஒருவேள ஆம்பளயா கூட இருப்பானா இருக்கும், பாக்கதுக்கு சினிமாக்காரன் மாரி இருப்பான். கொஞ்சம் வசதி உண்டும். பாசமாட்டு இருக்க மாரி காட்டிட்டு உள்ள பூரா வெசம், எம் மாமியாரு. பொறவு, ‘பாவம் அந்த புள்ள’ன்னு எப்பவும் சொல்லக்கூடிய நெஜமாவே பாசமான மாமனார். எல்லா வீட்டுலயும் உள்ளதுதான். ஆனா, எம் பிரச்சன அதில்ல, எனக்கு விவாகரத்து வாங்கலாமா வேண்டாமான்னு ஒரே கொழப்பம். விவாகரத்து வாங்க என்ன காரணம் சொல்ல, அது கூட எனக்குத் தெரில. லாயர் சொன்னாரு, “ஆண்மை இல்லன்னு சொல்லிருவோம்மா ..இல்லன்னா, அடிச்சுக் கொடுமப் படுத்துகாங்கன்னு சொல்லுவோம்.”

அடிச்சிருந்தா கூட பரவால்லயே. எம் மாப்ளைக்க சுண்டு வெரல் கூட எம்மேல பட்டதில்லயே, ஆறு வருசத்துல ஒரு தடவ கூட! நா சத்தியமா தான் சொல்லுகேன். அதுதா பிரச்சினயே. சுண்டு வெரல் கூட படல..

பாரதி சொல்லுவான், “நிஷாந்தி, நீயெல்லாம் எப்படி இருக்க வேண்டியவ! எதுக்கு இதெல்லாம் உனக்கு? தூக்கிப்போடு..அப்பா, அம்மா, தங்கச்சி வாழ்க்கைன்னுலாம் பாத்தா சரி ஆகாது. ஊம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு.. அவன கைய கால ஒடச்சி போட்ருவோம்.. அவனெல்லாம் ஒரு ஆளு.”

என்னதான் சொன்னாலும் இத்தன வருசமா விவாகரத்து வாங்க என்னால முடிவெடுக்க முடில. எங்கப்பா எவ்ளோ நல்ல ஆளு. எங்கம்மா வாயில்லாப்பூச்சி. என் தங்கச்சிக்கு கல்யாணம் எப்டி நடக்கும்? இப்டி யோசிச்சு யோசிச்சுதா இந்தா இப்டி வந்து நிக்கேன். அவோல்லாம் இல்லன்னா எப்பவோ போயிருப்பேன். இப்ப தூங்கவே முடிய மாட்டுக்கு. யாரோ கூப்பிட மாரியே இருக்கு. நல்லா தெரிஞ்ச கொரல் தான். பாரதி கூட இப்போ ரொம்ப பிசி ஆயிட்டான், நானா போன் பண்ணாதான் உண்டு.

உங்கட்ட சொல்ல மறந்துட்டேன், அவனுக்கும் கல்யாணம் கழிஞ்சி ஒரு கொழந்த இருக்கு. நல்ல வேள, நீங்க வேறமாரி நெனைக்க முன்னாடி, அவ்வொள பத்தியும் சொல்லிருகேன். நல்ல கூறுள்ள பிள்ள, அவன் பொண்டாட்டி, என்ன மாரி கொஞ்சம் திமிரும் உண்டுன்னு நெனைக்கேன். ஒரு பொம்பள புள்ள, அழகோள இருப்பா. பேரு இளவெயினி. நல்ல தமிழ் பேருல்லா? அவன் கல்யாணம் கழிஞ்ச பொறவு நான்தான் கொஞ்சம் விலகிட்டேன். அது தான் சரிப்பட்டு வரும், இல்லயா? ஆனா, எப்பயாச்சும் பேசும்போ, “ஒருத்தி இருந்தாளே, நிஷாந்தின்னு, இப்ப உயிரோட இருக்காளா இல்லயான்னு கூட கேட்க மாட்ட, என்ன நண்பன்டா நீ?”-ன்னு வேணும்னே கொமப்பேன்.

“ஏய் கண்ணாடி! நீதான் பெரிய இவ மாதிரி பண்ற. நான் தான் சுத்திக்கிட்டே இருக்கேன் வேலைல. உனக்கு போன் பண்ண முடியாதா? என்ன கொறஞ்சு போயிடும்?”

செல சமயம் என்ட்ட வந்து ப்ரபோஸ்லாம் பண்ணுவான். கொழுப்பு அவனுக்கு. நான் மொறச்சு பாப்பேன். எனக்கு அவன ஒரு ஆம்பளயாலாம் பாக்க முடியாது.. அது, சொல்லத் தெரில.. எல்லாத்தயும் சொல்லிர முடியாதுல்லா!

அவன்ட்ட பேசும்போ செல சமயம் எரிச்சல்ல கத்திருவேன். போன வருஷம் வண்டிலருந்து கீழ விழுந்து என் கை ஒடஞ்சு போச்சு. ஆஸ்பத்திரில ஒரு வாரம் இருந்தேன், இவன் வந்து பாக்கவேல்ல. ஒரு போன் கூட பண்ணல. பின்ன, கோவம் வராதா? இன்னிக்கும் மனசுல வருத்தம் உண்டு. செரி, நா நெறைய பேசிட்ருக்கேன்.. சீக்கிரமா முடிச்சுருவோம். அதான், அந்த சுண்டு வெரல் விசயம். எதுக்கு? நா என்ன தப்பு செஞ்சேன்? அழகாட்டுதான இருக்கேன். ஓரளவு வெவரமும் உண்டு. எல்லா கறியும் நல்லாத்தான் வப்பேன். என்ன யோசிச்சு என்ன செய்ய? வெறுத்துப் போச்சு.

நெஜமாவே நான் கொஞ்சம் அழகு தான், பாரதி கூட சொல்லுவான். நான் வக்க கறி எல்லாம் அவ்ளோ நல்லாருக்கும். சாம்பாரும், அவியலும், உள்ளிப் பச்சடியும் வச்சேன்னா ஆபீஸ்ல எல்லா சார்மாரும் மேடமும் நொட்ட விட்டு சாப்பிடுவா. எட்டு வயசுலேந்து புக் படிக்கேன். தேவாரம், திருவாசகம்-னு தொடங்கி தி.ஜா, ஜெயகாந்தன், அம்பை, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன் எல்லாரயும் படிப்பேன். ஸ்கூல்லயும் காலேஜ்லயும் நான்தான் மொத ரேங்க். ஆனா, ஒரு சுண்டு வெரல் தொடாத அளவுக்கு ஆயிட்டேன்.

எம் மாப்ள இருக்காரே…இனி அவனுக்கு எதுக்கு மரியாத மண்ணாங்கட்டி? எம் மாப்ள இருக்கானே, அவன் இப்ப எங்கூட இல்ல. அவன் எப்பதான் எங்கூட இருந்திருக்கான், இப்ப இருக்க? அவங்க அப்பா அம்மா கூடதான் இருக்கான். என்ட்ட பேசி ஒரு பத்து மாசம் இருக்கும். இந்த ஆறு வருசத்துல கூடிப்போனா ஒரு நூறு வார்த்த பேசிருப்பானா இருக்கும்.

என்னோட ஏ.டி.எம் கார்டு கூட அவன்ட்ட தான் இருந்துச்சு. அது அவோ போட்ட கண்டிசன்ல ஒண்ணு. அவன மாரி எனக்கு ரெண்டு மடங்கு சம்பளம். அதுல என்ன ஈகோ மயிரு? பொம்பள பைசால சோத்த திங்கும்போது இல்லாத ஈகோ மயிரு.. ஆனா, அது ஒண்ணும் காரணமா இருக்காது. பாரதி கூட கேட்டான், அவனுக்கு வேற எவ கூடயாம் தொடுப்பு இருக்குமான்னு, எனக்குத் தெரியாதா? இது நிச்சயமா அதா இருக்காது. ஒரு பொம்பளயா எனக்குத் தெரியும்லா?

ஆனா, அதெல்லாம் சமாளிச்சுட்டேன்.. இப்ப என்னால முடியல, எம் மூஞ்சியவே எவ்ளோ நாள்தான் பாத்துட்டு இருப்பேன்? அப்பா, அம்மா, தங்கச்சி எல்லாருமே பரிதாபமா தான் பாக்கா. ஆபீஸ்ல போனா அதே தான், ஒரே அட்வைஸ் மயிரு.. எல்லாவளும் ரொம்ப ஒழுங்கு மாரி.

ஒவ்வொரு பார்வையுமே போதும் நம்மள கொல்ல.. செரி, நெறைய சொல்லிட்டே இருப்பேன்…..

….

இப்ப, நானும் பாரதியும் திருச்செந்தூர் போனது ஞாபகம் வருது.. அவன் தோள்ல சாஞ்சு நல்லா தூங்கிட்டேன். அப்டியே தூங்கிட்டே இருக்கலாம். அழுக்கு, குறுகுறுப்பு, கேள்வி, சந்தேகம் ஒண்ணுமே இல்லாம… எத்தன ஆம்பிளையோ இப்படி இருக்கா? அவன் பொண்டாட்டி குடுத்து வச்சவ தான் என்ன? அவ மாசமா இருந்தப்போ எப்டி கவனிச்சான் தெரியுமா? கால் தரைல பட விடமாட்டான். பொம்பளப் புள்ளதான் வேணும்னு சொல்லிட்டே இருப்பான். கண்டிப்பா மக தான் பொறப்பா, பேரு இளவெயினின்னு அடிச்சு சொல்லுவான். அவன் நெனச்சமாரிதான் நடந்து. அதான் செரி இல்லயா?

செரி, முடிக்கேன், அப்டி ஈசியா வாழ்க்கைய விட்டுற மாட்டேன்னு தான் நெனச்சேன்.. ஆனா முடியல. அந்தாளு வீட்டுல என்ன சொன்னா தெரியுமா? விவாகரத்துக்குப் போனா, எம் மேலதான் கொற வருமாம், என் நடத்த சரில்லயாம்.. அவோ லாயர் என்ட்ட சொன்னதெல்லாம் நா உங்கட்ட சொல்லக்கூட முடில. எதுக்கு பொறந்து தொலச்சேன்னு தோணிட்டு… போதும்..

இப்ப எனக்கு மூச்சு முட்டும், தொண்ட அடைக்கும், தூங்க முடியாது, யாரோ கூப்பிடுவா, இங்க, காதுக்குள்ள வந்து.. எவ்ளோ தூரம் இப்டியே நடக்க? போதும்… எதுக்கு இருக்கேன்னும் தெரில, எதுக்கு சாவுகேம்னும் தெரில…

சாரி அப்பா..சாரி பாரதி…

கையெழுத்து போடக்கூட அவளுக்கு நேரமில்லை, அல்லது இஷ்டமில்லை.

“மாப்ள, வா, டாக்டர்ட்ட நெலம எப்டின்னு கேப்போம்”

“ம்ம்ம்” என்றவாறு தீவிர சிகிச்சைப் பிரிவிற்குச் சென்றேன்.

ப்ளேடால் கையை அறுத்திருக்கிறாள். நல்ல ஆழமான வெட்டு, உயிர் போயிருக்க வேண்டிய இரத்தப் போக்குதான். எழுந்து வரட்டும். பளார் என்று ஒரு அறை கொடுக்க வேண்டும்.

..

அடுத்த நாள் மாலை அப்பா அழைத்திருந்தார். கொஞ்சம் பழங்கள் வாங்கிச் சென்றேன். வார்டுக்கு மாற்றியிருந்தார்கள். நுழையும்போதே அவள் என்னை எதிர்பார்த்துக் காத்திருப்பாள் என்று தெரியும். பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அப்பா சம்பிரதாயமாக, “டீ வாங்கிட்டு வாரேன் தம்பி” என்று சொல்லிச் சென்றார்.

“என்ன மேடம்? ஏன் இப்படி பண்ணீங்க?”

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, “எங்கூட பேச யாருமே இல்லடா.. ஒரே இருட்டு..காதுக்குள்ள ஒரே சத்தம்…” என்று சொல்லி கண்மூடி இருந்தாள். “ஆனா, எனக்கு என்ன நடந்துன்னே தெரில… எத்தன நாளா இங்க இருக்கேன்? அன்னக்கி நீ எங்க வீட்டுக்கு வந்தமாரிலாம் தோணிச்சு.. கொஞ்சநேரம் என்ட்ட பேசிட்ருந்த… பொறவு என்னாச்சின்னு எனக்கு ஓர்மயில்ல…

எனக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. அவள் இன்னும் கண்களை மூடித்தான் இருந்தாள். மெல்ல மெல்ல கண்களின் ஓரமாய் கண்ணீர் வடிந்தது. ஜன்னல் வழியாக தூரத்து வானத்தை வெறித்து நின்றேன் நான்.


-சுஷில் குமார்

Previous articleபெரிய ஆடு
Next articleஒரு கார்டு
Avatar
நாகர்கோவிலைச் சார்ந்தவர். கிராமப்புற மாணவர்களின் கல்விப் பணியில் இருக்கிறார். இவரது சிறுகதைகள் கனலி, யாவரும், பதாகை, சொல்வனம் இதழ்களில் வெளிவந்துள்ளன. ' தெருக்களே பள்ளிக்கூடம் ' எனும் மொழி பெயர்ப்பு நூலும் வெளி வந்துள்ளது. தற்போது கோவையில் வசிக்கிறார்.

4 COMMENTS

 1. உங்கள் மொழியிலேயே சொல்ல வேண்டும் என்றால் ஒரு ஓர்மையுள்ள கதை.
  நிதானமான கதை சொல்லும் போக்கு சம்பவங்களுக்கு வலுவூட்டுகிறது,
  வாழ்த்துகளும் அன்பும் அண்ணா
  கனலி குழுவினருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்

 2. ஒருமுறை வாசித்தேன்…
  உங்கள் ஊரின் மொழி வழக்கானது,
  கதையில் திருச்சி செல்லும் பகுதி வரை புரியவில்லை அதன்பின் புலப்பட்டு விட்டது .
  ஒரு அனுபவம் போல தோன்றியது…

 3. வட்டார வழக்கில் எழுத்து கோர்வை நாகர்கோவில் சென்று திரும்பிய அனுபவம். சற்று துணிச்சலோடு தன் வாழ்வை பயணிக்கும் பல பெண்களின் நிலைமை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.