- உறங்கும் ஒருவன்.
அதிகாலை 4:43, எழுப்புகிறது
எழு ஒரு சேதி சொல்ல வேண்டுமென்று
காதோரம் கிசுகிசுக்கிறது
ஆர்வம் மேலிடவில்லை
ஒரு வீட்டை திடீரெனக் காணவில்லை பார் என்கிறது
அதற்கும் அலட்சியம்
தொலைந்த அந்த வீட்டில் தொங்கும் ஹோல்டரில்
உன்னை
காலத்திற்கும் தொங்கவிடப்போகிறேன்
என்ற போதும் கூட
அச்சமோ பதற்றமோ இல்லை
எந்த உத்தியும் கை கொடுக்காது போகவே
4:43..ற்கு வந்ததே கோபம்
4:42.. இன் தலையில் ணங்கெனக்குட்டியது
தொலைந்ததாய்ச்சொல்லப்பட்ட வீட்டினுள்
ஓர் தனியறையிலிருந்து பதறி விழித்தான்
வீடோ
பற்றி எரிந்துக்கொண்டிருக்கிறது.
- நடை, நடத்தை, நடவடிக்கை.
ஒன்றுமே சரியில்லை என்றதும்
கறுப்பு ஜீன்ஸின் இரு கண்களிலும்
கோபம் சடசடத்து
கொடியிலிருந்துக் குதித்து
மொட்டை மாடியிலேயே
ஒரு சிறு நடை
மாடிப்படியில்
ஸ்டைலாய் ஒரு துள்ளலில் கீழிறங்கி
தெருவில்
கடை வீதியில்
திரையரங்கிற்கு
அருங்காட்சியகத்திற்கு
அனேக இடங்கள் நடந்து நடந்து
அனேக நபர்களைக் கடந்து கடந்து
உரித்தான
கால்களிடம் வந்து நிற்கிறது
அங்கிருந்து தொடங்குகிறது
சில
சம்பவங்கள்.