ராஜம் கிருஷ்ணன் கட்டியெழுப்பியமணலூர் மணியம்மையின் வரலாற்றுச் சித்திரம்

து ராஜம் கிருஷ்ணனின் நூற்றாண்டு. எழுபத்தைந்து வருடங்களாக அவருடைய எழுத்துகள் வாசிக்கப்படுகின்றன. ராஜம் கிருஷ்ணன் என்ற பெயர் நாவல் வரலாற்றில் ‘கள ஆய்வு எழுத்தாளர்’ என்றே பதிவாகியுள்ளது. பதினைந்து வயதில் திருமணமான ராஜம் கிருஷ்ணனுக்குப் புகுந்த வீட்டில் எழுதக்கூடிய சூழல் அமைந்திருந்தது. அவர் வாழ்க்கைப்பட்டது பெரிய குடும்பம். முதலில் குடும்பங்களில் நிலவும் அகச்சிக்கல்களையே எழுதினார். அவரது தொடக்கக்கால நாவலான ‘பெண்’ (1952) அப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது. ‘சுதந்திர ஜோதி’ (1948) இவரது முதல் நாவலாக இருந்தாலும் ‘பெண்’ நாவலே அவர் எழுத்துக்கு ஓர் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. ராஜம் கிருஷ்ணனின் கணவர் பொறியாளராக அரசுப் பணியில் இருந்தவர். பணி நிமித்தம் அவர் செல்லும் பகுதிகளுக்கு இவரும் உடன் சென்றிருக்கிறார். அப்படியொரு சூழலில் ஊட்டிக்குச் சென்றவர் ‘குறிஞ்சித்தேன்’ (1963) நாவலுடன் வெளியே வந்தார். அந்த நாவல் அவருக்குப் பெரும் பெயரை ஈட்டித் தந்தது. பெரிய அளவில் அறியப்படாத படகர் வாழ்க்கை குறித்து அந்நாவலில் எழுதியிருந்தார். ‘குறிஞ்சித்தேன்’ தந்த உற்சாகத்தில் அதே பாணியில் தொடர்ந்து நாவல்கள் எழுதத் தொடங்கினார். ஒரே வருடத்தில் இரண்டு மூன்று நாவல்கள் எழுதும் அளவுக்கு அவரது ஆர்வம் வளர்ந்தது.

ஐம்பதுகளில் எழுதத்தொடங்கிய ராஜம் கிருஷ்ணன், இரண்டாயிரத்தைக் கடந்தும் எழுதிக்கொண்டிருந்தார். அவரது எழுத்துகளை வரிசைப்படுத்தி ஓர் அடங்கல்கூட அவருக்கு வெளிவந்ததாகத் தெரியவில்லை. இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் ராஜம் கிருஷ்ணன் குறித்து எழுதிய எஸ்.தோதாத்ரியால் கூட அவரது நூல்களின் முழுமையான பட்டியலை முறைப்படி தர இயலவில்லை. ‘கள ஆய்வு எழுத்தாளர்’ என்று இவர் விமர்சிக்கப்பட்டபோது அதனைத் தனக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இவர் எடுத்துக்கொண்டார். ஏனெனில், நாவல் வடிவம் குறித்து இவருக்கு ஒரு பார்வை இருந்தது. ‘ஒரு நாவல் என்பது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து வெறும் கற்பனையில் புனையப்படும் எழுத்துக் கோவைதான் என்பதில் எனக்கு முழுமையான உடன்பாடு கிடையாது’ (‘அலைவாய்க் கரையில்’ முன்னுரை) என்று எழுதியிருக்கிறார். ராஜம் கிருஷ்ணனின் ஒட்டுமொத்த நாவல்களும் சமூக ஆய்வுகளாகத்தான் இருக்கின்றன. அந்த எல்லைக்குள் வைத்துத்தான் இவரது நாவல் உலகத்தை ஆராய வேண்டும். ராஜம் கிருஷ்ணன் தரவுகளுக்கே அதிக முன்னுரிமை கொடுத்தார். அதிக அளவில் தரவுகளைப் புனைவுக்குள் ஊடாட விடுவதால் அது கலைப்படைப்பாக மாறுவதில் சிக்கல்கள் உள்ளன. அதனைப் பற்றியெல்லாம் இவர் கவலைப்படவில்லை.

ராஜம் கிருஷ்ணன் எண்பதுகளில் கீழைத்தஞ்சை விவசாயிகள் குறித்து ஆய்வு நடத்தச் சென்றார். அந்தக் கள ஆய்வில்தான் கீழைத்தஞ்சைப் பகுதியில் அதிகாரத்திற்கு எதிராக ஏழை விவசாயிகளின் குரலாக ஒலித்த மணலூர் மணியம்மையைப் பற்றிக் கேள்விப்படுகிறார். மணியம்மையுடன் பழகியவர்களிடமும் அவரைப் பற்றித் தெரிந்தவர்களிடமும் தரவுகளைச் சேகரித்துப் புனைவாக எழுதினார். இந்தப் புனைவு தினமணிக் கதிரில் தொடராக வெளிவந்தது. ராஜம் கிருஷ்ணனின் எழுத்துக்கு ஓவியர் கோபுலு உயிர் கொடுத்தார். கோபுலு வரைந்த ஓவியங்களே இன்று மணியம்மையின் படங்களாக உலா வருகின்றன. அதேபோன்று ராஜம் கிருஷ்ணன் எழுத்தைக்கொண்டே மணலூர் மணியம்மையின் வரலாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எழுதப்பட்ட வரலாற்றைக்கொண்டு பல புனைவுகள் உருவாகியிருக்கின்றன. மணியம்மையின் வரலாற்றில் நிகழ்ந்தது அதற்கு எதிரானது. பாரதியார், டாக்டர் ரங்காச்சாரி உள்ளிட்டோர் வரலாறுகளை ராஜம் கிருஷ்ணன் புனைவுகளாக எழுதியிருக்கிறார். ஆனால் இவர்களுக்கு ஏற்கெனவே வரலாறுகள் எழுதப்பட்டிருக்கின்றன. மணலூர் மணியம்மைக்கு ‘பாதையில் பதிந்த அடிகள்’ நாவல்தான் வரலாறு. அந்த வகையில் ராஜம் கிருஷ்ணன் இந்த நாவலை எழுதியதினூடாக ஓர் அரிய பணியைச் செய்திருக்கிறார் என்றே கருத வேண்டும்.

பிராமணக் குடும்பமொன்றில் மூன்றாம் தாரத்தின் குழந்தைகளுள் ஒருவராகப் பிறந்தவர் மணியம்மை. இவரது இயற்பெயர் வாலாம்பாள். ‘மணி’ என்ற செல்லப் பெயரே எதிர்காலத்தில் மணியம்மையாக நிலைத்து நின்றது. மணியம்மையின் பத்தாவது வயதில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த செல்வந்தரான குஞ்சிதபாதத்துக்கு இரண்டாம் தாரமாக மணமுடித்து வைக்கப்பட்டார். அப்போது அவர் கணவருக்கு வயது முப்பத்தைந்து. மணியம்மைக்கு நடந்தது குழந்தைத் திருமணம். இவரது இருபத்தேழாவது வயதில் குஞ்சிதபாதம் இறந்து போனார். விதவையாக மணலூர் வந்தார் மணியம்மை. அத்திருமண வாழ்க்கை அவருக்கு ஆங்கிலக்கல்வியை அளித்திருந்தது. அவர் கணவர் அதற்கு ஏற்பாடு செய்திருந்தார். மணியம்மை கற்ற கல்வி சமூகம் குறித்த பார்வையை அவருக்கு உருவாக்கியது. மரபான பிராமணப் பெண் வாழ்க்கையை வெறுத்தார். தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

காந்தியின் தமிழ்நாட்டு வருகை மணியம்மையின் வாழ்க்கையில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. உறவினர் ஒருவர் உதவியுடன் காந்தியைச் சந்திக்கிறார் மணியம்மை. விதவைக் கோலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். புடவைக்கு மாற்றாகக் கதர் வேட்டி சட்டையை அணிந்துகொள்கிறார். கிராப் வெட்டிக்கொண்டு ஆண்களைப் போன்ற தோற்றத்தை உருவாக்கிக்கொள்கிறார். மக்கள் மத்தியில் இந்தத் தோற்றம் பேசு பொருளாகிறது. செருப்பு அணிகிறார்; குடை பிடிக்கிறார். இந்த இயல்பான செய்கைகள்கூட அந்தக்காலத்தில் பெரும் விவாதத்திற்கு உரியதாகிறது. பழமையின்மீது தீராத நம்பிக்கை கொண்டவர்களால் மணியம்மையின் இந்தத் தோற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பல வழிகளில் தொல்லை கொடுக்கின்றனர். அத்தகைய சிறுமை குணம் கொண்டவர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ளச் சிலம்பம் கற்றுக்கொள்கிறார். சமூகத்தால் ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்களுடன் தன் வாழ்க்கையை அணுக்கமாக்கிக் கொள்கிறார் மணியம்மை.

ஒடுக்கப்பட்டவர்களுடனான மணியம்மையின் நெருக்கம், அவர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கிறது. அதிகாரத்திற்கு எதிராக அவர்களை இணைத்துக்கொண்டு போராடுகிறார். பண்ணையார்களுக்கும் பண்ணைக் கூலிகளுக்கும் இடையிலான நடுஆள் முறையை ஒழிக்கிறார். இதுதான் மணியம்மை செய்த முதல் நற்காரியம். இதனால் பண்ணையார்களின் முதல் பகையாளியாகிறார் மணியம்மை. மணியம்மையின் செல்வாக்கு அந்தப் பகுதியில் பரவுகிறது. தொழிற்சங்கங்களை உருவாக்குகிறார். முதலாளி வர்க்கத்திற்கு எதிராகத் தொடர்ந்து மக்களைத் திரட்டிப் போராடுகிறார். அதில் கணிசமான வெற்றியும் பெறுகிறார். காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றுகிறார். அப்பகுதி மக்களின் சுகாதாரத்தில் கவனம் செலுத்துகிறார். தீண்டாமை, மது ஒழிப்பு பிரச்சாரம் செய்கிறார். காந்திய வழியில் ஆடைகளை அணிகிறார். காந்தியவாதியாகச் செயல்பட்டுக் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும் காந்தியத்தையும் பரவச் செய்கிறார்.

காங்கிரஸ் ஒரு முதலாளித்துவச் சிந்தனையுடைய கட்சியாக இருக்கிறது. கூலித் தொழிலாளிகளை ஒடுக்கிய முதலாளிகளில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதை மணியம்மை அறிகிறார். தொழிலதிபர்களும் பண்ணையார்களும் காங்கிரஸ் கட்சியில் பதவி வகித்தனர். இவர்கள் சாதிய மனோபாவம் உடையவர்களாகவும் இருக்கின்றனர். ஒடுக்கப்பட்ட சாதியைச் சார்ந்தவர்களை வெறும் தொண்டர்களாகவே இவர்கள் வைத்துக்கொண்டனர். மணியம்மை இதற்கு எதிரான பண்புகளைக் கொண்டிருந்தார். இதனால் மணியம்மையின் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்து நீர்த்துப் போகச் செய்தனர். சென்னையில் வசிக்கும் மணியம்மையின் சொந்தத் தம்பியையே அவருக்கு எதிராகத் திருப்பி விடுகின்றனர். மணலூரிலுள்ள குடும்பச் சொத்துக்களை மணியம்மைதான் பார்த்துக்கொள்கிறார். அந்த நிலத்தில் அவரே விவசாயம் செய்கிறார். விவசாயக் கூலிகளுக்கு விளைச்சலில் அதிக அளவில் பங்கு தருகிறார். இது பிற பண்ணையார்களுக்குப் பிரச்சினையாகிறது. அவர்களது நிலத்தில் வேலை செய்பவர்களும் இதனை எதிர்பார்க்கின்றனர். இந்த இடத்தில்தான் விவசாயக் கூலிகளுக்கும் பண்ணையார்களுக்கும் இடையில் மோதல் உருவாகிறது. அதற்கு மணியம்மை காரணமாக இருக்கிறார். நிலத்தை அவரிடமிருந்து பிடுங்க அவரது தம்பியைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். பூர்வீக நிலத்தை அவ்வூரின் பட்டாமணியத்துக்குக் குத்தகை விடுகிறார் மணியம்மையின் தம்பி.  இதனால் சொந்த வீட்டிலிருந்தும் நிலத்திலிருந்தும் மணியம்மை வெளியேற வேண்டிய சூழல் உருவாகிறது. ஏற்கெனவே சேமித்து வைத்திருந்த பணத்தில் ஒரு வீட்டையும் கொஞ்சம் நிலத்தையும் வாங்கி மீண்டும் விவசாயம் செய்கிறார் மணியம்மை.

காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட மணியம்மை விருப்பம் தெரிவிக்கிறார். முதலாளித்துவக் கட்சியாகச் செயல்படும் காங்கிரஸ் இவரை ஒதுக்கி வைக்கவே முயற்சி செய்கிறது. இவர்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர். மணியம்மை தன்னுடைய நிலத்தில் கள் இறக்குவதாகப் பொய்யான தகவலைப் பரப்புகின்றனர். ஆண்கள் சூழ்ந்த அரசியல் களத்தில் ஒரு பெண்ணாகப் பல பிரச்சினைகளை மணியம்மை எதிர்கொள்கிறார். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திலும் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலகட்டத்திலும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மிக மோசமாகவே இருந்திருக்கின்றன. கட்சி தன்னை ஒதுக்கினாலும் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடுகிறார் மணியம்மை. கூலித் தொழிலாளர்களுக்கான சங்கங்களை உருவாக்குகிறார். உழைக்கும் மக்களின் அடையாளங்களான நெற்கதிரும் அரிவாளும் அச்சங்கங்களின் கொடிகளில் இடம்பிடிக்கின்றன.

சாதிய மேலாதிக்கமும் ஆணாதிக்கச் சிந்தனையும் காங்கிரஸ் கட்சிக்குள் புரையோடியிருப்பதை மணியம்மையின் வாழ்க்கை மூலமாக இந்த நாவலில் விவரித்துக் காட்டியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். அதேபோன்று கீழைத் தஞ்சைப் பகுதியிலிருந்த தேவதாசிகள் முறைக்கு எதிராகவும் ராஜம் கிருஷ்ணன் இந்நாவலில் உரையாடி இருக்கிறார். ‘ஆண்கள் ஒழுக்கமாக இருந்தால் தாசி குலம் ஏற்பட்டு இருக்குமா?’ என்ற கேள்வியை அவர் எழுப்பியிருக்கிறார். முதலாளிகள் தங்கள் நிலத்தில் வேலை செய்பவர்களை அடிமையைப்போல நடத்துகிறார்கள். சாதியைக் காரணம்காட்டி தனிக்குளம், தனிக்கிணறு, தனிக்கோயில், தனிச்சுடுகாடு எனப் பிரித்து வைத்திருக்கிறார்கள். ராஜம் கிருஷ்ணன் இந்த இடத்தில் முக்கியமான ஒரு கேள்வியை எழுப்புகிறார். ‘ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைகளாக வைத்திருக்கிறார்கள்; அவர்களுக்கு எதிராகப் போராட வேண்டும்’ என்று தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்களிடம் எப்படிக் கோரிக்கை வைக்க முடியும்? தங்களுக்குக் கீழிருப்பவர்களை அடிமைகளாக நடத்தும் மனநிலை உயர்சாதியைச் சார்ந்த காங்கிரஸ்காரர்களுக்கு ஆழமாக இருக்கிறது. ஆங்கிலேயரிடமிருந்து யாருக்கான சுதந்திரத்தைக் கேட்கிறோம் என்ற ஐயம் இந்த இடத்தில் எழுகிறது. காங்கிரஸ் இயக்கம் இரட்டை மனோபாவத்துடன் செயல்படுவதை மணியம்மை அறிகிறார். இவரே தனித்து காந்தியக் கொள்கைகளை ஊர் ஊராகக் கொண்டுசெல்கிறார். மணியம்மை பிராமணச் சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் பெண் என்ற பால் வேறுபாட்டை மிக அதிகமாக எதிர்கொள்கிறார். மதுவிலக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றமுமே காங்கிரஸின் அடிப்படையான கொள்கைகள். ஆனால் அந்தக் கட்சியில் இருப்பவர்கள் அனைவருமே அதற்கு எதிரானவர்கள். தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறிவிடக் கூடாது என்பதில் உயர்சாதி வர்க்கம் கவனமாக இருந்தது. ‘காங்கிரஸ், உண்மையான சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளவில்லை. உங்கள் ஹரிசன அக்கறை எல்லாம் வெறும் மேலுக்கு! வேஷம்’ என்கிறார் மணியம்மை.

சாதியால் ஒடுக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்குக் கல்வியறிவைப் புகட்டவும் மணியம்மை முயற்சி மேற்கொள்கிறார். பண்ணையடிமைகளின் குழந்தைகள் பலர் இவரது முயற்சியால் பயன்பெறுகின்றனர். பிராமணச் சடங்குகளின்மீது நம்பிக்கை இழந்த மணியம்மை, எளியவர்களின் குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்டு தன் ஆதரவைத் தெரிவிக்கிறார். மணியம்மையை ஒழித்துக்கட்ட ஒரு பக்கம் தொடர்ந்து முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றன. எதிரிகளுக்கு மணியம்மையின் தோற்றமே அசூயையைத் தருகிறது. அவரை முதலில் பார்ப்பவர்கள் ஆண் என்றே அடையாளம் காண்கின்றனர். பால் அடையாளத்தை அழித்ததில் மணியம்மைக்குத் தனிப்பங்குண்டு. இவர் நாகையில் கிசான் கமிட்டி ஒன்றைத் தொடங்குகிறார். இதன்மூலம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கிறார். விவசாயக் கூலிகளுக்கு ஆதரவாகப் பல ஒப்பந்தங்களைப் போடச் செய்கிறார். ஆங்கில அதிகாரிகளும் மணியம்மையின் போராட்டத்தை அங்கீகரிக்கின்றனர்.

தூய்மைப் பணியாளர்கள் தற்போது தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். அரசு அவர்களது போராட்டத்தில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் அனைவருமே சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் படித்தவர்கள் இல்லை. பெருந்தொற்றுக் காலத்தில் கடவுளாகத் தெரிந்த அவர்கள், இப்போது ஆட்சியாளர்களுக்குச் சாத்தான்களாகத் தெரிகிறார்கள். இந்தப் பிரச்சினை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. இதுபோன்றதொரு போராட்டத்தைப் பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் மணியம்மை முன்னெடுத்திருக்கிறார் என்பதை இந்தப் புனைவினூடாக அறிய முடிகிறது. ‘சீ! எட்டப்போ! தோட்டி…!’ என்று உயர்சாதி வர்க்கத்தால் ஏளனமாக நடத்திய துப்புரவுத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, நாகை நகரசுத்தித் தொழிலாளர் சங்கத்தைக் கட்டியிருக்கிறார். பஞ்சப்படி, பிரசவ விடுப்பு, கருணைத்தொகை உள்ளிட்டவற்றை இச்சங்கத்தின் மூலமாகப் பெற்றுத் தந்திருக்கிறார். அடுத்து, இந்நாவல் வேறொரு முக்கியமான விஷயத்தையும் கவனப்படுத்துகிறது. ஆங்கில ஆட்சியாளர்களே இதுபோன்ற போராட்டங்களுக்குக் கவனம் கொடுத்தார்கள். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகான ஆளும் வர்க்கம் எளிய மக்கள் நடத்தும் போராட்டங்களை நசுக்கவே நினைக்கிறது. இது மணியம்மைக்குப் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியே மேலானது என்ற பார்வையை இந்நாவலில் மணியம்மை கதாபாத்திரத்தின் வழியாக ராஜம் கிருஷ்ணன் முன்வைத்திருக்கிறார். அதற்குப் புனைவு சில வலுவான சம்பவங்களையும் கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

காங்கிரஸ் ஆதிக்கச் சாதிகளுக்கான கட்சியாகவும் பெண்களுக்கு எதிரான கட்சியாகவும் இருப்பதை மணியம்மை உணர்கிறார். மணியம்மை பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் அனைத்து ஆண் வர்க்கமும் ஒன்றுதிரண்டு நிற்கிறது. ‘சரோஜினிக்கு வயசாகிவிட்டது. அரசியல் தெரியாது! ஸ்திரீயாக இருப்பதால் பிச்சை போட்டிருக்கிறார்கள்?’ என்று காங்கிரஸ்காரர்களே சரோஜினி நாயுடுவை விமர்சனம் செய்து பேசுகிறார்கள். இதுதான் இன்றும் யதார்த்தம். காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் இடத்தில் சோனியா காந்தி இருக்கிறார். ஆனாலும் அந்த இயக்கத்தில் பெண்களுக்கு இன்றும் முக்கியத்துவம் இல்லை என்பதே கள நிலவரம். உதாரணமாக மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் 126 பேர் இருக்கிறார்கள். இதில் 20 பேர் மட்டுமே பெண்கள். இது அவர்களது அதிகாரப்பூர்வக் கட்சி இணையதளத்தில் கிடைத்த தரவுகள். பெண்கள் கல்வி கற்று விழிப்புணர்வுடன் இருக்கும் இன்றைய சூழலிலேயே இவ்வளவு மோசமாக இருக்கிறது. இட ஒதுக்கீடு இல்லையெனில் இந்த எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருக்கும். ராஜம் கிருஷ்ணன் காங்கிரஸ் கட்சியை ‘பெண் விரோத, மக்கள் விரோதக் கட்சி!’ என்பது போன்ற கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அவருக்கு மணியம்மையின் வரலாறு அப்படித்தான் கிடைத்திருக்கிறது.

வசதியாக வாழ்ந்திருக்க வேண்டிய மணியம்மை, மக்கள் பணிக்காகத் தன் சொத்துகள் அனைத்தையும் துறந்துவிடுகிறார். எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்திருக்கிறார். பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட மக்கள் தரும் உணவையே உண்டிருக்கிறார். மணியம்மை தன் இறுதிக் காலத்தில் திருவாரூர் ரயிலடிக்கு அருகில் ஒற்றை அறையில் வசித்திருக்கிறார். இருப்பிடம், கட்சி அலுவலகம் எல்லாமே அந்த ஒற்றை அறைதான். இச்சூழலில் நாட்டுக்கு விடுதலை கிடைக்கிறது. நாடு இனி மக்களுக்கானதாக இருக்கும் என்று மணியம்மை நம்புகிறார். ஆனால் முன்பைவிட மிக மோசமாக ஆட்சியாளர்கள் நடந்துகொள்கின்றனர். முதலாளிகளுக்கு எதிரான மக்களின் போராட்டங்களைக் காவல்துறை ஒடுக்குகிறது. சொந்த மக்கள்மீதே பொய் வழக்குப் பதிகிறது. மணியம்மை இதனைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு நடக்கும் அராஜகம் அனைத்தும் அதிர்ச்சியைத் தருகின்றன. மணியம்மையைக் கைது செய்யவும் காவலர்கள் நேரம் பார்த்துக் காத்திருக்கின்றனர்.

ராஜம் கிருஷ்ணன் மணியம்மையின் கைதினைப் பின்வருமாறு எழுதுகிறார்: ‘நாங்கள் சுதந்திரம் பெற்று ஆட்சிக்கு வந்தால், ஏழை எளியாருக்குச் சொர்க்கம் காட்டுவோம். வீதியில் தேனும் பாலும் ஓடும் என்று சொன்ன காங்கிரஸ்காரர்களின் கைதியாகப் போகிறாள் மணி.’ மணியம்மையைத் தடுப்புக் காவலில் கைதுசெய்து கடலூர் சிறையில் அடைக்கின்றனர். இன்று நடப்பது அந்நியர் ஆட்சியா, காங்கிரஸ் ஆட்சியா என்று மணியம்மையால் நம்பமுடியவில்லை. ஆனாலும் மணியம்மை சிறையிலும் சில சீர்திருத்தங்களை முன்னெடுக்கிறார். பெண் கைதிகளின் குழந்தைகளைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டுகிறார். மணியம்மை காங்கிரஸில் இருந்தாலும் கம்யூனிசச் சிந்தனை உடையவர். ஜனசக்தி இதழ்களைத் தொடர்ந்து படிக்கிறார். பலர் இவரைக் கம்யூனிஸ்ட் என்றே கருதுகின்றனர். ஒருகட்டத்தில் காங்கிரஸிலிருந்து வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து பணியாற்றுகிறார். தேர்தலில் நிற்க அனுமதி கேட்கிறார். அங்கும் இவருக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்படுகிறது. அங்கும் ஆண்களின் ஆட்சிதான். பிற கட்சிகளுக்கு மாற்றாகக் கருதப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியும் ராஜம் கிருஷ்ணன் பார்வையில் இன்னொரு காங்கிரஸ்தான். இவர்கள் வரலாற்றை ஆராய்ந்தாலும் அதே நிலைதான். இன்றும்கூட. கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தமிழக மக்களவை உறுப்பினர் நால்வரில் ஒருவர்கூட பெண் இல்லை. நிகழ்காலமே இப்படியென்றால், கடந்த காலமும் அப்படித்தான் இருந்திருக்கும்

பிற கட்சிகளைவிட கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தனைகள் முற்போக்கானவை என்ற பிம்பம் பொதுவெளியில் உள்ளது. மக்களுடன் நேரடியாகக் களத்தில் நின்று போராடும் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சியே உள்ளது. ஆனால் அங்குக்கூடப் பெண்கள் இரண்டாம் நிலையிலேயே நடத்தப்படுவதை யாரும் மறுக்க முடியாது. அதிகாரத்திற்குப் பெண்கள் வருவதை ஆண்வழிச் சமூகம் விரும்பவில்லை என்பதையே மணியம்மையின் வரலாறும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. கீழைத் தஞ்சையில் செங்கொடிச் சின்னத்தைப் பரப்பியதில் மணியம்மை முக்கியமானவராக இருந்திருக்கிறார். ‘மணியம்மா கட்சி’ என்றே அதனை மக்கள் அழைத்திருக்கிறார்கள். இவரது வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள இயலாத இயக்கத் தோழர்கள் மணியம்மைக்கு எதிரானத் தீர்மானங்களை நிறைவேற்றி இவரை ஓரங்கட்டவே முயன்றிருக்கின்றனர். இவர் முன்னெடுத்த ‘சந்தா குறைப்பு’ என்ற நடவடிக்கைக்காகக் குற்றம் சாட்டி கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்கின்றனர். ‘காலம் காலமாக ‘தான்’ என்ற ஆதிக்கச் சிந்தனையை வளர்த்து வந்திருக்கும் ஆண் வர்க்கம், அங்கே பெரும்பான்மை. இவள் சிறுபான்மை இனத்தில் பட்ட பெண். எந்தப் பக்கமும் ஆதரவின்றி அன்னியப்படுத்தப்பட்டவள்’ என்று மணியம்மையைப் பற்றி எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். காங்கிரஸ் கட்சியைப் போன்று கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஜனநாயகத் தன்மை இல்லை என்பதைப் புனைவு திரும்பத் திரும்ப வலியுறுத்தியிருக்கிறது.

1953இல் பூந்தாழங்குடி என்னும் கிராமத்தில் ஒரு நிலக்கிழாரோடு விவசாயத் தொழிலாளர்களுக்காகப் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திருவாரூர் செல்லப் பேருந்திற்காக நிற்கையில், பண்ணையாரின் வளர்ப்பு மான் ஒன்று குத்தி மணியம்மை இறந்து போகிறார். ஆவணங்கள் அப்படித்தான் சொல்கின்றன. ஆனால் ராஜம் கிருஷ்ணன் மான் மூலமாக நடத்தப்பட்ட கொலை என்ற குறிப்புகளைப் புனைவில் கொடுத்திருக்கிறார். ஏறக்குறைய ஒன்றரை மணிநேரமாக மணியம்மையின் உடல் சாலையிலேயே கிடந்திருக்கிறது. ‘இவரது இறப்புக்குப் பின்னால் கம்யூனிஸ்ட்காரர்கள் இருக்கிறார்கள்’ என்ற வதந்தியும் அந்தப் பகுதியில் பரவியிருக்கிறது. மணியம்மையின் இறப்பு முடிச்சு இன்றுவரை அவிழ்க்கப்படாத ஒன்றாகவே இருக்கிறது.

வரலாற்றில் மறைக்கப்பட்ட மணியம்மையின் வாழ்க்கையை ராஜம் கிருஷ்ணன்தான் ‘பாதையில் பதிந்த அடிகள்’ என்ற நாவலின் மூலமாகக் கட்டியெழுப்பியிருக்கிறார். இந்தப் புனைவிலிருந்துதான் அவரது வரலாறு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது புனைவு என்பதால் தரவுகளில் சிறிய அளவில் முரண்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. எழுதப்பட்ட மணியம்மையின் வரலாற்றின்மீது எவரும் எதிர்வாதங்கள் வைத்ததாகத் தெரியவில்லை. தினமணி நாளிதழில் தொடராக வெளிவந்திருக்கிறது. 1991ஆம் ஆண்டுதான் இந்நாவலின் முதல் பதிப்பு வெளிவந்திருக்கிறது. தொடராக வெளிவந்து நூலாக்கப்பட்டிருப்பதால் ஆதாரப்பூர்வமாக ஏதும் மறுப்புகள் முன்வைக்கப்பட்டிருந்தால் ராஜம் கிருஷ்ணன் அதனை நூலாக்கத்தின்போது பரிசீலித்திருக்க வாய்ப்பிருக்கிறது. ராஜம் கிருஷ்ணன் தனக்குக் கிடைத்த கள ஆய்வுத் தகவல்களைக்கொண்டே மணியம்மையின் வரலாற்றை எழுதியிருக்கிறார். அடுத்து, ராஜம் கிருஷ்ணனுக்கென்று ஓர் அரசியல் பார்வையும் இருக்கிறது. உழைக்கும் மக்களை முன்னிறுத்திப் பல புனைவுகளை எழுதியிருக்கிறார். கீழைத் தஞ்சை விவசாயிகள் குறித்து ஏற்கெனவே ‘சேற்றில் மனிதர்கள்’ (1982) என்ற நாவலை இவர் எழுதியிருப்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒருவரின் வரலாற்றை ராஜம் கிருஷ்ணன் உருவாக்கியிருக்கிறார். மணியம்மை தஞ்சைப் பகுதியில் பல்வேறு போராட்டங்களை மக்களைத் திரட்டி நடத்தியிருக்கிறார். ஆனால் அவரைப் பற்றிய பதிவுகள் எந்த நாளிதழிலும் பிரசுரமாகியிருக்கவில்லை என்பது ஆச்சரியமானது.

ராஜம் கிருஷ்ணனின் எழுத்துகள் தீவிரத்துக்கும் வெகுசனத்திற்கும் இடைப்பட்டவை. அவருடைய புனைவுகள் பெரும்பாலும் தரவுகளுக்கே முக்கியத்துவம் தருபவை. இதனால் அவரது படைப்புகளில் கலைத்தன்மைக்கு இரண்டாம் இடம்தான். ஆனால் குடும்பப் பிரச்சினைகளைக் கடந்து சமூகப் பிரச்சினைகளைச் சொல்வதற்கு ராஜம் கிருஷ்ணன் தம் புனைவுகளைப் பயன்படுத்திக் கொண்டார். ‘பழக்கப்பட்ட விஷயங்களுக்குப் பதிலாகப் புதிய கருப்பொருளை வைத்து நாவல் எழுதுவதில் ராஜம் கிருஷ்ணன் அனுபவம் வாய்ந்தவர்’ (தமிழ் நாவல்: நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்) என்று பெ.கோ.சுந்தரராஜனும் சோ.சிவபாதசுந்தரமும் குறிப்பிடுகின்றனர். ‘பாதையில் பதிந்த அடிகள்’ நாவலைப் பொறுத்தவரை, மணியம்மை என்ற ஓர் ஆளுமையின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. அதனால் நாவலுக்குரிய புனைவாக்க உத்திகள், மொழி, கூற்றுமுறை போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது. மேலும் இந்நாவல் மணியம்மையின் வரலாற்றுடன் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்பாடுகளையும் விமர்சனம் செய்திருக்கிறது. அகிம்சையின் பேரைச் சொல்லி ஆட்சியைப் பிடித்தவர்கள்தாம் ஆங்கிலேயரைவிட மிக மோசமாக ஒடுக்கப்பட்ட மக்களைத் துன்புறுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டை மணியம்மையின் வரலாற்றிலிருந்து ராஜம் கிருஷ்ணன் கண்டடைகிறார். மக்களாட்சி ஏன் மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது; சாதியவெறி கொண்டவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும்போது அது எப்படி அனைவருக்குமான ஆட்சியாக இருக்க முடியும் என்பது போன்ற விமர்சனங்களையும் இப்பிரதி முன்வைக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவெனில் ராஜம் கிருஷ்ணன் நாற்பதாண்டுகளுக்கு முன்பு முன்வைத்த விமர்சனங்களெல்லாம் இன்றும் தொடர்வதுதான்.

Previous articleமக்கள் கலைஞர் மக்மல்பஃப்
Next articleநீலவியாபகம்
சுப்பிரமணி இரமேஷ்
நவீன இலக்கியங்கள் குறித்த விமர்சனக் கட்டுரைகளை எழுதுகிறார். சென்னை, இந்துக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள், தொடக்க காலத் தமிழ் நாவல்கள், தமிழ் நாவல்: வாசிப்பும் உரையாடலும், படைப்பிலக்கியம் ஆகிய கட்டுரை நூல்களும் ஆண் காக்கை என்ற கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. காலவெளிக் கதைஞர்கள், தமிழ்ச் சிறுகதை: வரலாறும் விமர்சனமும், பெருமாள்முருகன் இலக்கியத்தடம், பத்ம வியூகம் ஆகிய தொகைநூல்களும் இவரது பங்களிப்புகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here