பச்சை நிறக் கனவு


குளித்துவிட்டு இடுப்பில் கட்டிய பச்சை நிறத் துண்டோடு சாப்பிட கீழே உட்கார்ந்தான் மனோகரன். மே மாத காலை வெய்யிலின் உக்கிரம் மேலே சுற்றிக்கொண்டிருந்த மின் விசிறியை ஏளனப்படுத்தியது. மார்பில் முத்து முத்தாய் அரும்பிய வியர்வை அவனது வெண்ணிற பனியனை திட்டுத்திட்டாய் ஈரமாக்கியிருந்தது. மனோகரனின் மனைவி சங்கீதா ஒரு தட்டில் சோற்றைப் போட்டு வந்து அவன் முன்னால் வைத்தாள்.

அதே நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியின் அருகிலிருந்த கைப்பேசி “கிர்ரக்… கிர்ரக்….” என அதிர்ந்து, பின்னர் கூவத்தொடங்கியது. சங்கீதா அதை எடுத்து மனோகரனிடம் நீட்டினாள். அவன் அதை வாங்கிப் பார்த்தான்.

வேலு. அவனது பெரியம்மா மகன், பக்கத்து ஊரில் வசிக்கிறான். அவனை விட பத்து வயது இளையவன். மனோகரனின் தம்பி முருகனுக்கு நெருங்கிய சிநேகிதன்.

பட்டனைத் தட்டிவிட்டு காதில் வைத்து “சொல்றா வேலு…” என்றான்.

வேலுவின் குரல் பதட்டமாக இருந்தது.

“இன்னாடா சொல்ற…? …. எப்ப… அய்யயோ… ரொம்ப அடியாமா…? ம்… ம்… ம்…. செரி… செரி… வா… வா…” என்று கைப்பேசியை அணைத்தபடி எழுந்து நின்றான். அவன் முகத்தில் வியர்த்து வழிந்தது.

குழப்பமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சங்கீதா.

“முருகங் ஊட்ல இல்லியா….?” என்றான் பதட்டமாக.

“காலீல இர்ந்தே நானு பாக்கலியே…. மீனாவக் கேட்டாத் தெரியும்….” என்று நெற்றியைச் சுருக்கினாள் சங்கீதா.

“மீனா எங்க…?”

“பின்னால சாமானு கெய்விகினு கீறா…. இன்னாச்சி….?”

“மீனா… மீனா…” என்று பின்புறம் பார்த்து உரக்கக் குரல் கொடுத்தான். குளிர் கால காலைப் பனியில் நனைந்ததைப் போல அவன் குரல் நடுங்கியது.

பின்புறமிருந்து ஈரக்கையை தன் நீல நிற சுடிதாரில் துடைத்தபடி வந்தாள் மீனா.

“அரக்கோணம் பக்கத்துல மில்ட்ரி செலக்சனுக்குப் போறேன்னு வெடிகாத்தாலயே போச்சிணா…” என்றாள் மீனா.

அதைக் கேட்டதும் பின் தலையில் பலமாக ஒரு அடி விழுந்ததைப் போல தலை சுற்றியது மனோகரனுக்கு.  அப்படியே சரிந்து கீழே உட்கார்ந்தான்.

“ன்னாங்க ஆச்சி…?” என்றாள் சங்கீதா மேலும் பதட்டத்துடன்.

“செலக்சனுக்குப் போன எட்த்துல ஆக்சிடெண்டாம்….”

“அய்யயோ….” என்று ஒரே நேரத்தில் அலறினார்கள் சங்கீதாவும் மீனாவும்.

”அம்மா எங்க….?” என்றான்.

“கேவுரு அறுக்க காத்தாலயே போச்சிணா…” என்றாள் மீனா.

“இந்தக் குடிகாரங் எங்க…?” என்றான் எரிச்சலோடு. தன் தந்தை சுந்தரேசனைத்தான் அப்படி கேட்டான்.

”பின்ச்சினு வந்து ரெண்டு நாளு தான ஆவுது…. எங்கனா குட்ச்சிட்டு விய்ந்துகினு இர்ப்பாரு…” என்றாள் சங்கீதா சலிப்புடன்.

எழுந்து இடுப்பிலிருந்த டவலை உருவி வீசிவிட்டு, ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த நீல நிறப் பேண்ட்டையும், இளஞ்சிவப்பு சட்டையையும் எடுத்து அவசரமாக மாட்டிக்கொண்டான்.

“இப்ப வேலு பைக்ல வருவாங்… நாங்கப் போயி இன்னானு பாத்துட்டு போன் பண்றம்….”

அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் வண்டிச் சத்தம் கேட்டது. வேலு தான்.

அவன் முகமும் பால் சப்பப்பட்ட நெற்குறுத்துகளைப் போல வெளிறிப் போய் இருந்தது. தலை வாராததால் முடிகள் சிலுப்பிக் கொண்டிருந்தன. குளிக்காததால் எண்ணைய்ப் பிசுக்கு படிந்த பாத்திரம் போல முகமும் கலங்கலாக இருந்தது.

“எப்பிட்ரா நட்ந்துச்சாங்…. யார்ரா சொன்னது….?” என அவனிடம் கேட்டான் மனோகரன்.

“ணா…. யாரோ ஒரு பையங் போனு பண்ணாங்…. போற வைய்ல எல்லாத்தியும் சொல்றங்…. மொதல்ல வண்டில ஒக்கார்ணா…”

மனோகரனையும் சுமந்து கொண்ட ஹீரோ ஹோண்டா சர்ரக் என சீறிக்கொண்டு கிளம்பியது. ஊரைக் கடந்து ஏரிக்கரையின் மீது வண்டி ஓடத் தொடங்கியது. கரையின் இருபுறமும் செழித்து வளர்ந்திருந்த சீமைக்கருவேல மரங்களில் பிறை வடிவ மஞ்சள், பச்சை நிறக் காய்கள் கொத்துக் கொத்தாய்த் தொங்கிக் கொண்டிருந்தன. கீழே உதிர்ந்திந்த காய்களை சில வெள்ளாடுகள் முறுக்குகளைப் போலக் கடித்து மென்று கொண்டிருந்தன.

“ன்னாடா ஆச்சாங்…” முன்புறம் வேலுவின் கழுத்தருகே குனிந்தபடி கேட்டான் மனோகரன்.

“பஸ்லர்ந்து கீய விய்ன்ட்டானாம்…“ வேலு முன்புறம் பார்த்துக் கொண்டே சொன்னான். ஏரிக்கரையைக் கடந்து தார்ச் சாலையைில் இறங்கி, கீரைச்சாத்து, மிளகாய்க் குப்பத்தை பின்னுக்குத் தள்ளியபின் வேகமெடுத்தது வண்டி.

சாலையின் இருபுறமும் அவுஞ்சி மரங்களும், நுனா மரங்களும் இலைகளை உதிர்த்துவிட்டு இளம் விதவைகளைப் போல மொட்டை மொட்டையாய் நிற்க, நடுவில் சில புங்க மரங்கள் மட்டும் ஏராளமான வெண்ணிறப் பூக்களைச் சுமந்து கொண்டு பச்சைப் பசேலென அசைந்து கொண்டிருந்ததன. வேலியெல்லாம் காய்ந்து கிடந்த மற்ற மரங்களையும், செடிகளையும் வெறுமனே பார்த்தபடி மனோகரன் பேச்சற்று கிடக்க, வேலு வண்டியை மேலும் முறுக்கினான்.

சீறிக்கொண்டு வண்டி மேலும் வேகமெடுத்தபோது, ஒரு வேப்ப மரத்திலிருந்து இறங்கி திடீரென சாலையின் குறுக்கில் ஓடி வந்தது ஒரு அணில். இந்த வண்டியின் வேகத்துக்குத் திகைத்து சட்டென நடுச் சாலையில் அது அப்படியே நிற்க…. வண்டியின் முன் சக்கரம் சரியாக அதன் தலை மீது ஏற…. சொதக் என ஒரு சத்தம்.

“அய்யோ…. த்ஸ்… த்ஸ்……” என்றபடி திரும்பிப் பார்த்தான் வேலு. மனோகரனும் பதைபதைப்புடன் திரும்பிப் பார்த்தான்.

கூழைப் போல நசுங்கிய தலையில் ரத்தம் கொப்புளிக்க… காற்றுக் குறைந்த பந்தைப்போல இரண்டு முறை மெதுவாகத் துள்ளி…. வால் துடித்து… அடங்கியது அணில்.

“அய்யயோ…. பாத்து மெதுவா போப்பா…” என்றான் மனோகரன்.

அணிலின் தலையிலிருந்து பீய்ச்சியடித்த ரத்தம் அவனை துணுக்குற வைத்தது. திடீரென முருகனின் முகம் அவன் கண்களில் ஆடியது. அய்யோ என மீண்டும் வாய்விட்டே அலறினான்.

முருகனுக்கும் மனோகரனுக்கும் பத்து வயது வித்தியாசம். அவர்களின் அப்பா சுந்தரேசன் பட்டாளத்தில் சேர்ந்த புதிதில் பிறந்தவன் மனோகரன். அதன் பிறகு பத்து வருடங்கள் கழித்துப் பிறந்தவன் முருகன். அதற்கு அடுத்த வருடம் பிறந்தவள் மீனா.

இந்த வயது வித்தியாசத்தினால் முருகனும் மீனாவும் மனோகரனிடமிருந்து சற்று விலகியிருந்தாலும், அவர்கள் இருவருக்குமிடையில் மட்டும் ஒட்டுதல் அதிகம். முருகனுக்கு சாப்பாடு போடுவது, அவனது துணிகளைத் துவைத்து, மடித்து வைப்பது எல்லாமே மீனா தான். அவன் எங்கே போனாலும் மீனாவிடம்தான் சொல்வான்.

பட்டதாரியாக இருந்தும் வேறு வழியில்லாமல் சிப்காட்டில் ஒரு தோல் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக குப்பை கொட்டினான் மனோகரன். அந்த வருமானத்தில் தான் குடும்பத்தை உருட்டிக் கொண்டிருந்தான். அப்பாவின் ஓய்வுதியம் அவர் குடிப்பதற்கே போதவில்லை.

முருகனுக்கு மனோகரனைப் போல படிப்பு ஏறவில்லை. பத்தாம் வகுப்பையே இரண்டு முறை எழுதித்தான் தேறினான். எப்படியாவது பட்டாளத்துக்குப் போய் விடவேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டிருந்தான். சுந்தரேசன் நினைத்திருந்தால் முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் அவனை சுலபமாக பட்டாளத்தில் சேர்த்திருக்கலாம். ஆனால் அவருக்கு அதற்கெல்லாம் நேரமே இல்லை. மாதத்தின் முற்பகுதியில் அதீத போதையில் மட்டையாகிக் கிடப்பார். பிற்பகுதியில் குடிப்பதற்காக கடன் வாங்க தெருத் தெருவாக அலைந்து கொண்டிருப்பார்.

பட்டாளத்தான் கனவுடனே வளர்ந்த முருகனை அவர் கண்டு கொள்ளவே இல்லை. ஆனாலும் இராணுவத்துக்கு எங்கே ஆள் எடுத்தாலும் தனது பழுப்பு நிறப் பைலோடு அவன் தனியாகவே ஆஜராகிவிடுவான்.

மனோகரன் நல்ல உயரம். அதற்கேற்ற உடம்பு இல்லாவிட்டாலும் நோஞ்சான் கிடையாது. அவனைத் தான் பட்டாளத்தில் சேர்க்க விரும்பினார் சுந்தரேசன். ஆனால் மனோகரனுக்கு அதில் விருப்பம் இல்லை. மூத்த பிள்ளையே அவரது பேச்சைக் கேட்கவில்லை என அவருக்குக் கோபம். அதனாலேயே வீட்டில் யார் மீதும் அவருக்கு அக்கறை இல்லாமல் போனது என்று சொல்லிக் கொண்டார் அவர்.

முருகன் மனோகரனைவிட சற்று உயரம் குறைவு. ஆனால் பாரியான உடம்பு. கரிமலைக் காட்டில் தினசரி நடந்தும், ஓடியும், பில்லப்ஸ், சிட்டப்ஸ் என அவனாகவே உடற்பயிற்சிகள் செய்தும் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருந்தான்.

கொள்ளாபுரியம்மன் கோயில் ஆலமரத்தின் உச்சிக் கிளையில் நீளமான தாம்புக் கயிற்றைக் கட்டி அதில் சரசரவென ஏறிப் பழகுவான்.

எல்லா உடல் தகுதிகளும் இருந்தும் ஒவ்வொரு ஆளெடுப்பு முகாமிலும் ஏதாவது ஒரு குறையைச் சொல்லி அவனை வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர்.

“இப்பல்லாம் பணம் குட்த்தாதான்டா வேல….” என்று அவனது நண்பர்கள் சொல்வதை அவன் நம்ப முடியாமல் தான் கேட்டுக் கொள்வான்.

ஒரு முறை மீனம்பாக்கத்தில் நடந்த ஆளெடுப்பு முகாமில் ஓட்டப் போட்டியில் அவன் தான் முதலாவதாக வந்தான். உயரம், எடை சரிபார்ப்பு முடிந்ததும் அதிகாரிகள் அவனது சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொண்டனர். மதியத்துக்கு மேல் கயிறு ஏறினான். அதிலும் அனாயசமாக ஏறி எல்லோரையும் அசத்தினான்.

மறுநாள் அதிகாலையில் மருத்துவப் பரிசோதனை என்றார்கள். அதெல்லாம் ஒப்புக்கு தான் என்று அவனுடன் தேர்ச்சி பெற்றவர்கள் பேசிக்கொண்டனர். அன்றிரவு மைதானத்துக்கு எதிரிலிருந்த சாலையோர வெட்டைவெளியில் அவர்கள் வரிசை வரிசையாகப் படுத்திருந்தனர்.

தலைக்கு பையை வைத்துக் கொண்டு படுத்திருந்த முருகனுக்கு தூக்கமே வரவில்லை. மனசு பூரிப்பில் விம்மிக் கொண்டிருந்தது. கன்னங் கரேலென விரிந்திருந்த வானத்தில் கும்பல் கும்பலாய் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்கள் பார்க்கப் பார்க்க அழகாகத் தெரிந்தன. மனசு பரவசத்தில் இருக்கிற போது பார்க்கிற எல்லாமே அழகாய்த் தெரியும் என்பதை அவன் அப்போது தான் உணர்ந்தான்.

பின்னிரவில் கண்கள் அயர்ந்து அரைத் தூக்கத்தில் கிடந்தபோது… அடர் பச்சை நிறச் சீருடையில், நீளமான துப்பாக்கியை ஏந்தியபடி காஸ்மீர் எல்லையில் ஓடுவதைப் போலவும், எதிரிகளை படபடவென சுட்டுத் தள்ளுவதைப் போலவும் அவனுக்குக் கனவு வந்தது. அந்த பச்சை நிறக் கனவு அவனை மேலும் மேலும் பரவசப்படுத்தியது.

மறு நாள் காலையில் துணிகளைக் கழற்றி அக்குளில் வைத்துக் கொண்டு, ஜட்டியுடன் மருத்துவப் பரிசோதனைக்காக வரிசையில் நகர்ந்த போது கூச்சமாக இருந்தாலும்… பஞ்சு மேகங்களின் மீது மிதந்து மிதந்து நகர்வதைப்போல இருந்தது அவனுக்கு.

நீளமான கருமை நிற ஸ்டெத் மாட்டிய நடுத்தர வயதுள்ள இராணுவ மருத்துவர் அவனது ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, மூச்சு ஓட்டம், கண்கள், நாக்கு, வாயின் உட்புறம் என நிதானமாய் சோதித்தார். இறுதியில் ஜட்டியைக் கழற்றச் சொன்னபோது மனசு திக்கென்றாலும் கழற்றினான். அவனது தொடைகளுக்கிடையிலும், அவனது பிறப்புறுப்பையும் அவர் மிக நிதானமாக சோதித்தபோது கூச்சத்தில் நெளிந்தான்.

“எவ்ரிதிங் ஓக்கே…. எக்ஸ் சர்வீஸ்மேன் கோட்டாதான…? நாளிக்கிக் காலையில உங்கப்பா சர்வீஸ் புக்கோட அவரையும் கூப்டுகிட்டு வந்து இன்சார்ஜ் ஆபிசரப் பாரு…” என்று தமிழில் அவர் சொன்னபோது வானத்தில் பறப்பதைப் போல இருந்தது அவனுக்கு. இன்சார்ஜ் ஆபீசரும் தமிழர்தான் எனத் தெரிந்தபோது மேலும் குதூகலமாக இருந்தது.

வீட்டுக்குத் திரும்பி வந்து இதையெல்லாம் அவன் சொன்னபோது நட்சத்திரங்களின் மினுமினுப்பு அவன் கண்களில் ஒளிர்ந்தது.

அப்போதும் அவன் அப்பா சுந்தரேசன் மட்டும் மாப்பிள்ளை முறுக்கில் இருந்தார்.

“கட்ச்சீல எங்கால்லதாங் வந்து விய்ணும்னு எய்தி கீறாம்பார்ரா ஈசங்… இப்பக்கூட நானு நென்ச்சாதாண்டா அவங் பட்டாளத்தாங்….” என்று சக குடி மகன்களிடம் சுந்தரேசன் கெக்கலித்தார். அது முருகனின் காதுகளுக்கு வந்தபோது கோபத்தில் எகிறினான் அவன்.

“நமுக்கு காரியம் ஆவணும்டா…. இப்பப் போயி அந்தக் குடிகாரங்கிட்ட மொர்ச்சிகினு நின்னா நஸ்டம் நமுக்குதாங் நைனா….” என்று அவனிடம் கெஞ்சினாள் அவன் அம்மா.

கோயில் பூசாரி உடுக்கை அடித்து, பம்பை அடித்து, பாடிப்பாடி வர்ணித்து குல தெய்வத்தை வரவழைப்பதைப் போல… மொத்தக் குடும்பமும் சேர்ந்து காலில் விழாத குறையாக வேண்டிய பிறகு… வேண்டா வெறுப்பாக முருகனுடன் செல்ல ஒத்துக் கொண்டார் சுந்தரேசன். அதற்குள் மூன்று நாள்கள் ஓடிவிட்டன.

நான்காவது நாள் காலையில் சென்னைக்குச் செல்ல அவர்கள் கிளம்பியபோது… தெருவின் குறுக்காக ஒரு சாம்பல் நிறப்பூனை குதித்து ஓடியது. அவ்வளவு தான். அதிருப்தியோடு தலையாட்டிக்கொண்டு வீட்டுக்குள் போய்விட்டார் சுந்தரேசன். மறு நாள் தெருவைக் கடந்து மண் பாட்டையில் அவர்கள் இறங்கிபோது ஒரு கிழவி காய்ந்த விறகுக் கட்டோடு எதிரே வந்துவிட்டாள். அதுவும் நல்ல சகுனம் இல்லை என்று சொல்லிவிட்டு டாஸ்மாக் கடைப்பக்கம் போய்விட்டார்.

ஆத்திரமான ஆத்திரத்தில் கொதித்தான் முருகன். காய்ந்து முறுக்கேறும் சாரைக் கயிற்றை தண்ணீர் தெளித்து தெளித்து மேஸ்திரிகள் பதமாக வைப்பதைப் போல… அவனை மேலும் முறுக்கேறாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அவன் அம்மா.

ஒரு வழியாக ஆறாவது நாள் கிளம்பி அவர்கள் மீனம்பாக்கம் போய்ச் சேர்ந்தபோது எல்லாமே கை மீறிவிட்டது. அந்தத் தமிழ் அதிகாரிக்கு திடீர் மாறுதல் வந்து வடக்கே போய்விட்டார் என்றார்கள். ஆளெடுப்பும் முடிந்து விட்டது என அவர்கள் சொன்னபோது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை கொதித்தது முருகனுக்கு.

“யாராரு தலயில இன்னான்னா எய்தி கீதோ அதாண்டா நடக்கும்…. உனுக்குப் பட்டாளத்துக்குப் போவ ரொணம் இல்லடா….” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு அங்கேயே பிராந்திக் கடையைத் தேடினார் சுந்தரேசன். அந்த நொடியில் எண்ணைய்ச் சட்டியில் நுரைத்து நுரைத்துப் பொங்கியெழும் முருக்கைப் போல…. அவன் மனம் கொதித்துக் கொதித்துப் பொங்கியது.

“நானே எஞ்சொந்தக் கால்ல நின்னு பட்டாளத்துல சேர்ந்து காமிக்கிறேங்…. உஞ்சர்ட்டிபிகேட்டும் வாணா… ஒரு புண்ணாக்கும் வாணா….” என்று அவர் முகத்துக்கு எதிராக கை நீட்டி ஆத்திரத்தோடு கத்தினான் அப்போது.

அன்றிலிருந்து அவருடன் பேசுவதையே நிறுத்திவிட்டான். காலையும் மாலையும் மீண்டும் தீவிரமாகப் பயிற்சிகள் செய்தான். மணிக்கணக்காய் நடப்பான், ஓடுவான். ஒப்புக்காக சிப்காட்டில் வேலைக்குப் போனாலும் எந்த ஊரில் ஆளெடுத்தாலும் முதல் ஆளாகப் போய் நிற்பான்.

நடந்தும் ஓடியும் அவன் கால்கள் வேம்பின் அடிமரத்தைப் போல உருண்டு, திரண்டு இறுகிக் கிடக்கும். அவன் சாதாரணமாக நடக்கும் போதே “தண்… தண்…” என தரை அதிரும். பீமனின் கதாயுதம் போல திரண்டு நிற்கும் அவன் கால் அழகிற்காகவே சில பெண்கள் அவன் மீது மையல் கொண்டிருந்தனர். ஆனால் காதல், கல்யாணம் எதுவானாலும் பட்டாளத்துக்குப் போன பிறகுதான் என பிடிவாதமாக இருந்தான். அதனாலேயே அவனை “மில்ட்ரி” என்றே ஊரார் அழைக்கத் தொடங்கினர். அவனும் அதை ரசித்தான். அப்போதெல்லாம் சுடர்விட்டுப் பீறிடும் மத்தாப்பைப் போல அந்த பச்சை நிறக் கனவு அவனுக்குள் பீறிட்டுக் கொண்டு எழும்.

ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள் பளிச்சிடும் அந்த பச்சை நிறக் கனவோடு ஆளெடுப்புக்குப் போய்… முகம் சிறுத்துத் திரும்பும் போதெல்லாம் மீனாதான் அவனுக்குப் பெரும் ஆறுதலாக இருந்தாள்.

“ணா… பேப்பர்ல நியுசப் பார்த்துட்டு நூத்தியிருவது வேகண்டுக்கு நாலாயிரம் பேருக்கு மேல வண்ட்டாங்களாங். கூட்டத்தச் சமாளிக்க முடியாம ஆளெடுக்கறதயே நிற்த்திட்டாங்களாங்… ஒரே நேர்த்ல அவ்ளோ பேரும் திரும்பிப் போவ பஸ் இல்லியாம். வந்த ஒண்ணு ரெண்டு பஸ்ல மொத்தப் பேரும் கூட்டம் கூட்டமா ஏறிகீறாங்க…” என்றான் வண்டியை கவனமாக ஓட்டிக்கொண்டே வேலு.

“கூட்டம் ஜாஸ்தியா இர்ந்தா நின்னு அட்த்த பஸ்ல வரணும்… இவங் ஏங் அப்டி தொத்திகினு ஏற்னாங்…?” என்றான் மனோகரன் எரிச்சலாக.

“அதாங் தெர்லணா… கீய விய்ந்ததும் பின் சக்கர்த்துல மாட்டிகினு கீறாங்…”

“அய்யோ… அப்டினா அடி நெறைய்ய பட்டிருக்குமே…”

“இர்க்காதுணா… போயிப்பாக்கலாம்… கடவுளு கீறாரு…”

வளைந்தும் நெளிந்தும் நீளமாகப் படுத்துக் கிடந்தது நெடுஞ்சாலை. எதிரில் வந்த வித விதமான வாகனங்களைக் கடந்து புதூர் மேடு, மூங்கிலேரி, எரும்பி, சோளிங்கர், கரிக்கல், பாராஞ்சி, கூடலுர் என சிறியதும் பெரியதுமான ஊர்களைப் பின்னுக்குத் தள்ளி… அரக்கோணம் புதிய மேம்பாலத்தில் அவர்களின் வண்டி ஏறி இறங்கிய போது பரபரப்பான அந்த நகரம் அவர்களின் கண்களை மிரட்டியது. சந்து சந்தாய் திரும்பும் வாகனங்களைக் கடந்து, பெட்ரோல் பங்க் முக்கில் இருந்த ஆட்டோ நிறுத்தத்தில் நின்று விசாரித்தனர்.

“அய்யோ… அந்த பஸ் ஆக்சிடெண்ட் கேசா… ரொம்ப கோராமபா.…” என்று தன் கண்களை அழுத்தமாக மூடித்திறந்தார் அந்த குள்ளமான ஆட்டோ ஓட்டுநர்.

அவர் சொன்ன வழியில் மனது தடதடக்க நடந்து அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.

“இப்பதாங் மெட்ராஸ் ஜியெச்சுக்கு அனுப்பி வெச்சோம்….” என்றாள் வயது முதிர்ந்த அந்த உயரமான செவிலியர். அவள் கண்களில் படர்ந்த அனுதாபம் அவர்களை மேலும் நிலைகுலைய வைத்தது.

வண்டியை ரயில் நிலைய பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, மின்சார ரயிலில் ஏறி உட்கார்ந்தவர்களின் மனம் வாழைத் தண்டைப்போல வழவழத்துக் கொண்டிருந்தது. ரயிலின் தடக் தடக் சத்தமும், வியாபாரிகளின் கூச்சலும் அவர்களுக்குள் மேலும் திகிலூட்டின.

போராட்டமாய் நீண்ட இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் சென்ட்ரலில் இறங்கி, சுரங்கப்பாதை வழியாக அந்த பிரம்மாண்டமான மருத்துவமனைக்குள் நுழைந்தனர். கசகசத்த நோயாளிகளையும், முகமெல்லாம் கவலைகளை பூசிக்கொண்ட உறவினர்களையும் அவஸ்த்தைகளோடு கடந்து… அவசரச் சிகிச்சைப் பிரிவை அடைந்தபோது பிற்பகல் கடந்து கொண்டிருந்தது.

காற்றில் மிதந்த பார்மலின் வாசனையும், பச்சை ரத்தக் கவுச்சியும் குடலைப் புரட்டின. கைகளிலும், கால்களிலும், உடம்பிலும் வெள்ளைக் கட்டுகள் போடப்பட்ட நோயாளிகள் விதம் விதமான கோலங்களில் படுக்கைகளில் நெளிந்து கொண்டிருந்தனர். சிலர் கதறிக்கொண்டிருந்தனர். செவிலியர்கள் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருக்க, கண்களில் நிரந்தரமான பீதிகளோடு நோயாளிகளின் உறவினர்கள் கட்டில்களுக்கு அருகில் தவித்துக் கொண்டிருந்தனர்.

அந்த நீளமான வார்டின் கடைசிக் கட்டிலைக் காட்டினாள் ஸ்டூலில் அமர்ந்திருந்த செவிலி. அவளின் வெந்நிறத் துணிக் கொண்டை மின் விசிறியின் காற்றுக்கு லேசாய் அசைந்து கொண்டிருந்தது. அந்தக் களேபரங்களுக்குப் பொருந்தாத அவளது முகத்தின் அமைதி மனோகரனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

தனியாளாய் அனாதையைப் போலக் கட்டிலில் படுத்திருந்த முருகனை தூரத்திலிருந்து பார்த்ததுமே திக்கென்றது மனோகரனுக்கு. ஐஸ் பாறையின் மீது நடப்பது போன்ற சிரமத்தோடு நடந்து நடந்து அவனை நெருங்கினார்கள்.

“முருகா….” என்றான் மனோகரன். குரல் பிசிறடித்தது. சட்டென்று தலையைத் திருப்பி அவர்களைப் பார்த்தான் முருகன். அவர்களை அடையாளம் கண்டுகொண்டதும் அவன் கண்களில் ஒரு வெளிச்சம். அடுத்த கணம் அதில் அடர்த்தியான பெரும் வலி பரவியது.

வலது கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. இடுப்புக்குக் கீழே மட்டும் ஒரு நீளமான வெள்ளைத்துணி போர்த்தப்பட்டிருந்தது. அவன் போட்டிருந்த அரைக்கை வெளிர் ஊதா நிறச்சட்டை பல இடங்களில் கிழிந்திருந்தது. கைகள், முகம் என பல இடங்களில் சிராய்ப்புகள். அவற்றில் ரத்தம் கசிந்து உலர்ந்திருந்தது. இடது கையில் விரல்களோடு சேர்த்து பெரிய வெள்ளைக்கட்டு. கட்டை மீறி திட்டுத்திட்டாய் ரத்தம் கசிந்திருந்தது.

கால்கள் மீது போர்த்தியிருந்த துணியை விலக்க கையை நீட்டினான் மனோகரன். வேகமாக அவர்களை நெருங்கிய அந்தச் செவிலி அவசரமாகத் தலையை ஆட்டி அவனைத் தடுத்தாள்.

வாசல் பக்கத்திலிருந்து ஒரு இளைஞன் அவர்களைப் பார்த்தபடி வேகமாக நடந்து வந்தான். முருகனின் வயதுதானிருக்கும். கருப்பாக இருந்தான். கோரை முடிகள் முன் தலையில் குத்திட்டு நின்றன. ஒரு முன் பல் மட்டும் சற்று துருத்திக் கொண்டிருந்தது.

“நாந்தாங்க போன் பண்ணது…” என்றான் பொதுவாக இருவரையும் பார்த்து.

“ரொம்ப தேங்ஸ் தம்பி…” நன்றியோடு அவன் கைகளைப் பிடித்துக் கொண்டான் மனோகரன்.

தலையைத் திருப்பித் திருப்பி அவர்களைப் பார்ப்பதும், சொருகும் கண்களைத் திறந்து திறந்து மூடுவதுமாக இருந்த முருகனைப் பார்த்த அந்த இளைஞன் அவர்களை வெளியே அழைத்து வந்தான்.

“நாங்கூட செலக்சனுக்கு தாங் வந்தங்… திடீர்னு செலக்சன் கேன்சல்னு சொன்னதும் பஸ்ல செம கூட்டம். டாப் மேல கூட நெறைய்ய பேரு ஏற்னாங்க. இவுரு பஸ்சுக்கு உள்ளதாங் இர்ந்து கீறாரு… ஒரு பள்ளத்ல எறங்கி ஏறி வேகமா பஸ் குலுங்கிச்சி… பஸ்ல ஒரே கூச்சலு… முன் படில தொங்கிகினு வந்த சில பேரு தொபுக்குனு கீய விய்ன்ட்டாங்க. அப்ப யாரோ புடிமானத்துக்கு முன்ன நின்னுகினு இர்ந்த இவர புட்ச்சி இஸ்த்துகினு கீய விய்ந்து கீறாங்க. அவங்க தூரமா விய்ந்துட்டாங்க… கட்ச்சியா விய்ந்த இவுருதாங் பின் டயர்ல மாட்டிகினாரு…” கண்களில் திகில் பரவ அவன் சொன்னான்.

“பஸ் டிரைவரும் கண்டக்டரும் பயந்து போயி ஓட்டாங்க… பஸ்ல இருந்த யாருமே கிட்ட வர்ல… ரொம்ப நேரமா பஸ் கீழியே கத்திகினு இர்ந்தாரு… நானும் வேற ரெண்டு பேரும்தாங் துண்ஞ்சி வெளியத் தூக்னம். ரத்தம்னா ரத்தம்… எந்துணி ஃபுல்லா ரத்தம் ஆய்ச்சி… நோவுல துட்ச்சிகினே இர்ந்தாரு. கெஞ்சி கூத்தாடி ஒரு ஆட்டோல போட்டுகினு வந்து அரக்கோணத்ல சேத்தம். அங்கருந்து ஆம்புலன்ஸ்ல இங்க அனுப்பி வெச்சாங்க…”

அவன் சொல்லச் சொல்ல அவன் கண்களில் உறைந்திருந்த அதிர்ச்சி இவர்களின் ரத்தத்திற்குள்ளும் பரவியது. அவனுடைய மஞ்சள் நிறச் சட்டையில் காய்ந்திருந்த ரத்தத்தின் கவுச்சி வாடையை அவர்களாலும் உணரமுடிந்தது.

“அந்த ஆஸ்பத்திரில பத்து இரும்பு ஸ்கேலு வாங்கியாரச் சொன்னாங்க… ஒரு அடி ஸ்கேலுங்க… காலுக்கு சேப்டியா ரெண்டு கால்லயும் அந்த ஸ்கேல வெச்சிக் கட்டி அனுப்பிட்டாங்க…. வண்டி ஆடி ஆடி… அந்த ஸ்கேலு எலும்புல குத்தும்போதுலாம் பயங்கரமா கத்திக்கினே வந்தாரு….” திகிலோடு அவன் சொல்லி முடித்தபோது அவன் கையைப் பிடித்துக் கொண்டான் மனோகரன்.

“ரொம்ப தேங்க்ஸ்ப்பா… போய் சாப்டுட்டு போ…”

அவனிடம் ஒரு ஐநூறு ரூயாய்த் தாளை நீட்டினான். அவன் வாங்கவே இல்லை. மீண்டும் அவனைக் கை கூப்பி கும்பிட்டு அனுப்பி வைத்தான்.

மீண்டும் வார்டுக்குள் நுழைந்ததும், அந்த செவிலியிடம் போனான் மனோகரன்.

“சிஸ்டர்… ரொம்ப அடிபட்டிருக்குதா…?” பயமும் பதை பதைப்புமாகக் கேட்டான்.

“இன்னும் கட்டப் பிரிச்சி பாக்கல… சீப் டாக்டர் வரணும்… அவரு ஆபரேஷன் தியேட்டர்ல இருக்காரு… இப்பத்திக்கி பெயின் கில்லர் ஊசி போட்ருக்கறம்…” என்றாள் அவள்.

இரவு பதினோரு மணி. பெருநகரத்தின் பேரிரைச்சல் சற்றுக் குறைந்திருந்தது. மருத்துவமனை வளாகம் அமைதியையும், அதீத பயத்தையும் போர்த்திக் கொண்டிருந்தது.

ஆபரேஷன் தியேட்டரின் எதிரில் பரவியிருந்த இருட்டில் சிமெண்ட் திண்டுகளில் சோர்வோடு உட்கார்ந்திருந்தனர் மனோகரனும் வேலுவும். காலையிலிருந்து சாப்பிடாத களைப்பு அவர்களை தளர்த்தியிருந்தது. அருகில் மனோகரனின் அம்மா விசும்பிக்கொண்டிருந்தாள். கீறல் விழுந்த குழாயைப்போல அவள் கண்கள் சுரந்து கொண்டேயிருந்தன.

அவளோடு வந்திருந்த பங்காளிகள் இருவர் சற்றுத் தள்ளி உட்கார்ந்து கவலையோடு வானத்தை வெறித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அங்கே வந்து சேர்ந்த போதே இருட்டத் தொடங்கியிருந்தது. அவர்கள் ஊரிலிருந்து கிளம்பும் வரை சுந்தரேசனுக்கு போதை தெளியவேயில்லை என்றார்கள்.

அவரை நினைத்ததும் மனோகரனின் துக்கம் ஆத்திரமாக மாறியது. அவர் மட்டும் சரியாக இருந்திருந்தால் இப்படி ஒரு நிலையே வந்திருக்காது என நினைத்துக் கொணடான். அதே நேரத்தில் தகுதி இருந்தும் அவனை பல முறை நிராகரித்து அனுப்பிய அதிகாரிகள் மீதும் அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது.

பகலில் நோயாளிகளும் உடன் வந்தவர்களும் நிரம்பியிருந்த இடத்திலெல்லாம் இப்போது இருட்டும், கொசுக்களும் நிறைந்திருந்தன. பக்கவாட்டில் இருந்த வார்டுகளில் எரியும் சில விளக்குகளின் வெளிச்சம் திட்டுத்திட்டாய் ஆங்காங்கே பரவியிருந்தது. அந்த வெளிச்சத்தின் ரேகைககளைப் பற்றிக் கொண்டுதான் அவன் இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தான்.

ஆபரேஷன் தியேட்டருக்குள் முருகனைக் கொண்டு போகும்போதே பல தாள்களில் மனோகரனி்டம் கையெழுத்து வாங்கிக் கொண்டனர்.

“ரெண்டு காலுமே டேமேஜ் ஆயிருக்கு… எலும்பு மட்டுமில்ல…. சத, ரத்தக் கொழா, நரம்பு எல்லாமே செதஞ்சி போயிருக்கு… வலது கால் மொத்தமாவே கூழாய்ட்ச்சி… அத ஒடனே எடுத்தாதாங் உயிரக் காப்பாத்த முடியும்… ரெண்டு மூணு நாளு கழிச்சி இம்ப்ருவ்மென்ட் இருக்கானு பாத்துட்டு இன்னொரு காலப் பத்தி முடிவு பண்ணலாம்…” என்றார் அப்போது தலைமை மருத்துவர்.

“கால எடுக்காம எப்டினா காப்பாத்துங்க டாக்டர்….” அவரிடம் கெஞ்சினான் மனோகரன்.

“உயிரக் காப்பாத்தணும்னா ஒடனே ஒரு கால எடுக்கணும் தம்பி… இருந்தாலும் முயற்சி பண்ணிப் பாக்கறோம்…” பொறுமையாகவும், அழுத்தமாகவும் மருத்துவர் சொன்ன போதும் மனோகரன் தடுமாறினான். கண்கள் இருட்டிக்கொண்டன.

கால்கள் தான் முருகனின் பலம். காவலிக் கிழங்கைப்போன்று உருண்டு திரண்ட அவனது கெண்டைக்காலில் செழித்திருக்கும் கருமை நிற முடிகள் பார்க்கவே கவர்ச்சியாக இருக்கும். தரை அதிர அதிர கர்வமாக அவன் நடக்கிற போது இவனுக்கும் கூட பெருமையாக இருக்கும்.

ஒரு நீளமான பெருமூச்சோடு மனதை இறுக்கிக் கொண்டுதான் கையெழுத்துகளைப் போட்டான். மாலையிலிருந்தே முழு மயக்கத்தில் இருந்ததால் இது எதுவும் முருகனுக்குத் தெரியாது. அதுதான் மனோகரனின் துக்கத்தை மேலும் கிளறிக்கொண்டே இருந்தது.

விடியற்காலை ஐந்து மணி. சுற்றிலும் விடியலின் நிறம் பரவிக் கொண்டிருந்தது. கொசுக்களோடு போராடியபடி அவர்கள் துவண்டு கிடந்தபோது, முருகனுக்கு விழிப்பு வந்துவிட்டதாகவும், அவன் மனோகரனை கேட்பதாகவும் ஒரு செவிலி வந்து அவனை மட்டும் அழைத்துப் போனாள்.

ஆபரேஷன் தியேட்டரிலிருந்து சிறப்புப் பிரிவுக்கு மாற்றி இருந்தனர். அதில் சில இரவு விளக்குகள் மட்டும் சன்னமாய் எரிந்து கொண்டிருந்தன. அந்த அறையில் ஐந்து நோயாளிகள் மட்டுமே இருந்தனர். எல்லோருமே மயக்க நிலையில் இருக்க வேண்டும். உள்ளே இருந்த பெரும் அமைதி அவனை பயமுறுத்தியது.

கடைசிக் கட்டிலில் இருந்த முருகனை பதைபதைப்போடு நெருங்கினான். அவன் உடல் முழுவதும் நீல நிறப் போர்வை போர்த்தப்பட்டு முகம் மட்டும் திறந்திருந்தது. இவனது காலடிச் சத்தம் கேட்டு மெதுவாகத் தலையைத் திருப்பிப் பார்த்தான் முருகன். அவன் கன்னத்தில் ஈரம் மினுமினுத்தது. வலியில் அழுகிறான். பெயின் கில்லர் ஊசியையும் மீறி வலிக்கலாம் என நினைத்துக் கொண்டான்.

அவனை நெருங்கி கட்டிலருகில் நின்றான். அவன் கன்னத்தின் ஈர மினுமினுப்பு ஊர்ந்து நகரத் தொடங்கியது. இமைகளை உயர்த்தி மனோகரனைப் பார்த்தான்.

“ரொம்ப நோவுதாடா…?”  மனோகரன் பரிவோடு கேட்டான்.

கண்களை லேசாக மூடித்திறந்தான் முருகன். வாய் திறந்து எதுவும் பேசவில்லை. போர்வைக்குள்ளிருந்த தனது வலது கையை மெதுவாக வெளியில் எடுத்தான். கையிலிருந்த காயங்களில் புதிதாக வெள்ளைக் கட்டுகள் போடப்பட்டிருந்தன.

இடுப்புக்குக் கீழாக கையை நீட்டி போர்வையை மெதுவாக மேலே இழுத்தான் முருகன்.

பகீரென்றது மனோகரனுக்கு. அவனது வலது கால் இடுப்பிலிருந்து ஒரு ஜான் நீளம் மட்டுமே இருந்தது. துண்டிக்கப்பட்ட தொடையின் முனையில் பஞ்சு வைத்து சுற்றப்பட்டு இருந்தது.

நீண்டிருந்த இடது கால் முழுவதும் வெள்ளைக் கட்டுகள் போடப்பட்டிருந்தன. இடது காலுக்கு இணையாக இருந்த வலது காலின் வெறுமையைப் பார்த்ததும் மனசு துவண்டது மனோகரனுக்கு.

கண்களைத் தாழ்த்தி மீண்டும் தன் கால்களைப் பார்த்தான் முருகன். மீண்டும் மனோகரனைப் பார்த்துவிட்டு சட்டென்று கண்களை மூடிக்கொண்டான்.

அவன் கண்களிலிருந்து புதிதாக இரண்டு ஊற்றுகள் சுரக்கத் தொடங்கின. அதில் அவனது பச்சை நிறக் கனவு கரைந்து கரைந்து கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது.


கவிப்பித்தன்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.