பார்த்தல்-க.கலாமோகன்

து சுகமான தருணம். மூன்று வருடங்களாக நான் அவளைப் பார்த்து வருகின்றேன். அவளைத் தனியாக அல்ல. சிநேகிதிகளுடனும், சில ஆண்களுடனும், சில சந்தைகளில் அவள் தனியே இல்லாமலும். ஒவ்வொரு காலையிலும் அவளைப் பஸ் நிலையத்தில் கண்டால் அவளின் அருகில் பலர் இருப்பர். நிச்சயமாக அவளின் மீது காதலும், காமமும் வந்தது என நினைத்து நீங்கள் வாசிப்பீர்களாயின் அவை பொய்யான வாசிப்புகளே.

நிறையப் பெண்களைப் பார்ப்பதால் எனக்குக் காம ஆசை வந்துவிடுகின்றதா? உயிர்ப்பின் மூலமானது  இந்த ஆசையானாலும் வாழ்வின் கொடூர விளையாட்டுகள் உடல்களை நசுக்கிவிடுகின்றன. ஒவ்வொரு தினமும் எமது மனதை உடைக்கும் சேதிகள், காட்சிகள் பல. இந்த உடைப்புகளை ஏந்தியபடிதான் எமது உடல்கள் தற்காலிக வசிப்புக்காக வாழ்வின் கோரமானதும் அமைதியானதுமான வீதிகளில்.

எனக்குள் உள்ள  காம வில்கள் பிடுங்கப்பட்டன அல்ல. ஆனால், அவைகள் இல்லாமல் அவளை, சனி, ஞாயிறு கழிந்த தினங்களில், பஸ் நிலையத்தில் பார்க்கின்றேன். இந்தப் பார்வைகளில் அர்த்தம் உள்ளதா இல்லையா என்பதைத் தேடும் நோக்கு சில வேளைகளில் உடைந்துவிடும்.

துயர விழிகளுடன்  ஓர் அழகிய வாலிபனை சுரங்க ரயிலில் எனது விழிகள் கண்டன.  இவனது  விழிகளுள் எனது விழிகள் விழுதலை வைத்து  எனக்கு அவன் மீது காம ஆசை வந்தது  எனக் கருதிவிடவேண்டாம். இந்த ஆசைத்துவ   இருப்பினை  ஒழித்தல் துரோகமே. காம ஆசைகள் நிறங்களையும் மொழிகளையும் கடப்பன. உலகின் முதலாவது மொழி உடல்  என்பது எனது சிறிய மூளை.

என்னைப் பிறர் பார்ப்பதை மதிப்பிடாமல் அந்த அழகிய வாலிபனைப் பார்ப்பதில் எனது விழிகள்… அவனது நிலவொளி தரும்  விழிகள் களைத்துக் கிடந்தன. எனக்குள் அவன் மீதான கலக்கம். அவன் நிச்சயமாக எனது மகனைப் போல. நான் அவனைப்  பார்க்கின்றேன்.

எம்மை மர்மமாகப் பார்க்கும் சுரங்க ரயில் பயணிகள் எமக்குள் ஓர் காதலோ அல்லது காமமோ என நினைக்கக் கூடும். அது அவர்களின் நினைப்பு மட்டுமே.

நான் இறங்கிய வேளையில் அது அவனது இறங்கும் வேளை அல்லாததாக இருந்தது.

சுரங்க ரயிலால் வெளியேவந்து, பீகாலில்  உள்ள ஒரு  செக்ஸ் மதுச்சாலைக்குள்    வடிவான கறுப்பிகளைப் பார்க்க உள்ளிட்டேன். அது எனது வயதிற்கு  இளமையை ஊட்டியது. எங்களது நாட்டில் இல்லாததுபோல பிரான்சில் செக்ஸ் விளம்பரம் மலிவாக. ஆம்! விலையாகவும்தாம். எமது  நாடுகளில் இவை மறைவாக. இந்த மறைவுகளில் புழுதிகள் பூப்பதில்லை, பூப்பன  நெருப்புகளே.

நான் உள்ளே சென்றதும் அங்கே ஆண்கள் மட்டுமே இருந்தனர்.  பெண்களே இல்லை. அவர்கள் சில நிமிடங்களில் வருவார்கள் என  நினைத்த வேளையில் ஓர் பார் மேன் இனிய குரலில் எனக்கு இருக்குமிடத்தைக் காட்டினான். அவனது விழிகளில் இருந்தது காந்தமா? எனது விழிகளை மீண்டும் கவ்வின அவனது விழிகள்.

என்முன்  அவன் வந்தான்.

“நீங்கள் விரும்புவது எது?”

“உங்களிடம் Saint Emilion வைன் (மிகவும் சுவையுள்ளது, மலிவானது அல்ல)   உள்ளதா?”

“எங்களிடம் எல்லாம் உள்ளது.”

“அதில் ஓர் சிறிய கிளாஸ் தாருங்கள்.”

அவனது சிரிப்பு என்னை முத்தமிட்டது.

மதுச்சாலை மிகவும் செக்ஸியாக. ஓர் பெண்ணையும்  காணவில்லை. பெண்கள் தங்களது விருந்தைக்  காட்ட பின்னர் வருவர் என நினைத்தபோது சில ஆண்களினது ஆண்கள் மீதான முத்தங்களைக் கண்டேன்.

அழகியதும், காவியக்  கோலம் கொண்டதுமான  முத்தங்கள்போல எனக்குப்பட்டன.

நான் அதை ரசித்துப் பெண்கள்   வாசலில் வருவதைத் தேடிக் கொண்டிருந்தேன்.

அந்த மதுச்சாலைக்குள்    சில புதிய சித்திரங்கள் இருந்தன. ஓர் மிருதுவான ஆங்கில இசை காதுகளைத் தழுவியது. எனக்குள் பொலிவை ஊட்டியது ஒரு மிடறு Saint Emilion.

ஓர் இளம் பையன் என் முன் வந்து அமர்ந்தான்.

“நீங்கள் இந்தியரா?” எனக் கேட்டான்   பதுமமான மொழியில்.

“நான் இலங்கையன், எனது தீவில் உள்ளவர்கள் இந்தியர்களது மூலத்தைக் கொண்டுள்ளனர்.”

“இலங்கையா? அது அழகிய தீவு. அங்கு வாழும் சிங்களவர்களை இந்தியர்கள் எனக் கருதுகின்றீர்களா?”

“இல்லை. தமிழர்கள்தாம் இந்திய மூலத்தைக் கொண்டனர்.”

“உங்களது விழிகள் அழகாக உள்ளன……” என்று சொன்ன அவனிடம் “நன்றி!” சொல்லிவிட்டு “இங்கே எப்போது பெண்கள் வருவார்கள்?” எனக் கேட்டேன்.

சிரித்தான்.

“இது பெண்கள் வரும்  மதுச்சாலை   அல்ல. ஆண்கள்தாம் இங்கு வருவதுண்டு. இங்கு இருப்பதில் உங்களுக்கு  விருப்பம் இல்லையா?”

நான் இங்கு தவறி வந்துவிட்டேன் என அப்போதுதான்  விளங்கியது.

“ஆண்கள் ஆண்களோடு வைக்கும் உறவுகள் சாதாரணமானவை எனப் பார்க்கும் நிலை எனக்குள் உள்ளது. ஆனால் எனது செக்ஸ் எரிவது பெண்களினால்தான். சில ஹோமோசெக்ஸ்ஸுவல் நண்பர்கள் என்னிடம் உள்ளனர். பெண்களில்தான் எனக்குப்  பெரிய விருப்பு…”

என்னை அமைதியாகப்  பார்த்துவிட்டு “ஓர் இந்தியனுடன் கிடப்பதுதான் எனது கனவு.”  என்று அவன் சொன்னான்.

“தேடலாமே!”

“இந்தியர்களை வளைப்பது கஷ்டம். ஆனால் அவர்கள் நடை அசைவு கவர்ச்சியானது. விழிகள் காந்த உருண்டைகள் போல. பல ஆண்களிடம் கேட்டபோது என்னைக் கோபமாகப் பார்த்துள்ளனர். ஆனால் எப்படியோ   ஓர் இந்தியனுடன் எனக்குச் சில ஆண்டுகளின் முன்  தொடர்பு ஏற்பட்டது….”

“அது எங்கே?”

“அவனை இங்கு இரண்டு தடவைகள் சந்தித்தேன். தொடைகளைத் தடவியபோது அவனுள் விழித்த கூச்சம் எனக்குள் பெரிய வெறியை மூட்டியது. அவனது கறுப்பு விழிகள் இன்றும்  எனது விழிகளுக்குள். அவனது  கூச்சத்தை ஓர் கட்டிலில் காணாது விட்டதே எனக்குள் இன்றும் கவலையாக உள்ளது.”

“அவன் உனது வீட்டுக்கு வரவில்லையா?”

“பல தடவைகள் ‘ஆம்’ என்றான். வரவேயில்லை.”

“உனது  தொடைகளையும் அவன் தடவினானா?”

“ஆம்! தொடைகளையும், தொடைகளுக்கு உள்ளும்……மிகப் பெரிய  காம தரிசனம் அவனுக்கு முன்னால் கிடைத்தது….”

“ஏன் அவன் இப்போது இங்கு வராமல் உள்ளான்?”

“சுரங்க ரயிலில் அவனை அவனது மனைவியுடனும், பிள்ளைகளுடனும் பார்த்தபின்தான்.”

“அவன் அப்போது உன்னைக் கண்டானா?”

“ஆம்! நான் அவனது எதிரில் செல்லவில்லை. அவனது முகம் வாடியதைக் கண்டேன்.”

“இது ஓர் சோகமான கதை” எனச் சொன்னபோது  எனக்காக மீண்டும் ஓர் கிளாஸ்  Saint Emilion இனை வைக்குமாறு பார் மேனிடம் சொன்னான்.

“உங்களோடு ஓர் காதல் விருப்பு எனக்குள் வந்தது. பெண்கள் விருப்பை நீங்கள் தேடுவதாக  அறிகின்றேன். பார்த்தல்…. பார்த்தல்  இல்லாமல் வாழ்வு இல்லாதிருக்கும்  என்பதே என் நினைப்பு.”

“ஆம்! பல கறுப்புப் பெண்களோடு கிடக்கும் ஆசை எனக்குள். ஆனால்  கிடக்கும் ஆசையோடு மதுச்சாலைக்குள்   நுழைந்தவன் அல்லன். பார்க்கும் ஆசையோடே.”

“உங்களது ஆசை எனக்கு விளங்குகின்றது. எனக்கு நீங்கள் தேடும்  பெண்கள்   எங்கு உள்ளனர்  எனத் தெரியும். உங்களை அங்கு  கூட்டிக்கொண்டு போகலாமா?”

“நிச்சயமாக.”

நான் மறுத்தும், எனது Saint Emilion கிளாஸ்களுக்காக அவனே பணத்தைக்  கொடுத்தான்.

இருவரும் பீகாலினது சிறிதான வீதிகளுள் நடந்தோம். அங்கு அமைதி. பல சிவப்பு வெளிச்சங்கள் நிறைய வீதிகளிலிருந்து வந்தாலும், “இவை நல்லதல்ல. வேறு இடம் நல்லது.” என அவனது சிறு உதடுகள் சொல்லின.

“நீ ஆண்களை மட்டும்  விரும்புகின்றாயா? அல்லது பெண்களையும் விரும்புகின்றாயா?”

“தொடக்கத்தில் நான் பெண்களை விரும்பினேன். பின்பு அவர்கள் எனது நண்பிகளாகவே. இப்போது என்னை எரிப்பது ஆண்களே.”

“உனக்கு 25 வயது இருக்கும் என நினைக்கின்றேன்.”

“பொய்.”

“எது உனது வயது?”

“நீயே  சொல்.”

“20”

“பொய்.”

“சொல்!”

“42……”

“உனது உடல் வயதுகளை ஒழிப்பது.”

“உங்களது வயது என்ன?”

“எனக்கு வயது என்பது இல்லை.”

“இது தத்துவம்.”

“உடல்கள் தத்துவத்தினது வீடுகள். எனக்கு அழகான கறுப்புப் பெண்கள் தேவை.”

“நீங்கள்  அவர்களோடு பல தடவைகள் கிடந்ததுண்டா?”

“ஒருபோதும் நான் கறுப்பிகளோடு  கிடந்ததில்லை.”

“இலங்கையன்  எனச் சொன்னாய். நீ தமிழ்ப்  பெண்ணுடன் வாழவில்லையா?”

“வாழ்ந்தேன். தமிழ்ப் பெண்ணுடன். அவள் கறுப்பு. ஆனால்  கறுப்பிகள்  என நான் சொல்வது ஆப்ரிக்கப் பெண்களையே. இவர்கள் தமிழ்ப் பெண்களிலும் கவர்ச்சியானவர்கள்.”

“ஏன் கிடந்ததில்லை?”

“பார்த்தலில் பல சுகங்கள் உள்ளன.”

“நிறையப் பெண்கள் வருத்தமுடன் உள்ளனர் என நீங்கள் நினைக்கின்றீர்களா?”

“இந்த நினைப்பு என்னிடம் இல்லை. சுகத்தின் உயிர்ப்பு  பார்த்தலிலும் உள்ளது என நினைக்கின்றேன். ஓவியச் சாலைகளுக்குச் சென்றால், பிடித்திருக்கும் ஓவியங்களைத் தொடுவதற்குப்  பலருக்கு விருப்பம் வரலாம். ஆனால் பார்க்கும் உரிமையே அங்கு இருக்கும். பின்பு பார்த்தலே இவர்களது இயல்பாகுவதில்லையா?  நான் பல பெண்களைப் பார்த்துப் பார்த்தே சொர்கத்துக்குச் சென்றுள்ளேன்.”

ஆம், அவன் என்னைப் பார்த்தான். அது அது ஓர் ஆழமான பார்வை. அந்தப் பார்வைக்குள் அடங்கிய மர்மச் செய்திகள் எனக்கு எப்படித் தெரியும்?

“எங்கே மதுச்சாலை?”

“சில நிமிடங்களில்…., நிறையக் கறுப்புப் பெண்கள்…. கவர்ச்சியானவர்கள்…… என்பது உண்மை.  நான் கறுப்பர்களோடும் கிடந்துள்ளேன்….  சுவையான இரவுகள்….”

“ஆம்! கறுப்பு ஆண்கள் அழகியவர்கள்.”

“கட்டிலில் வீரமானவர்களும்…”

“வெள்ளைகள்?”

“இவர்களுக்குக் காலனித்துவம் தெரியும். கட்டிலில் அடிமைகள்.”

“உடல்கள் காக்கும் காம விருப்புகள் மர்மமானவை.”

“நில்!” அவனது சொல். நான்  அவன்  தேடிய இடத்தின்   முன். பின் “போ!” எனச் சொன்னது அவனது  சின்ன உதடுகள்.

“நீயும் வா!”.

“வருவேன், நிறைய நேரம் இருக்கமாட்டேன்!” என்றபடி என்னுடன் உள்ளிட்டான்.

அங்கே அதிக கறுப்புப் பெண்கள். நீண்ட பொய்க் கூந்தல்கள் அவர்களைத் தேவதைகள் எனக் காட்டின. எங்களை நோக்கி வளைந்தன அவளது  நாக்குகள். கறுப்பு முலைகள் சின்னச் சட்டைகளை விட்டு வெளியில் வரும் துடிப்பில். சிலர் சில பெண்களுடன் இருந்து குடித்தபடியும், பார்த்தபடியும், தடவியபடியும். வேறு சிலர் அவர்களை வெறித்துப் பார்த்து அமைதியாகக் குடித்தபடி. அனைத்துச் சேவகிகளும் கறுப்புப் பெண்களே. முதலாளிப் பெண்  மட்டும்தான் வெள்ளை. அவளின் உடலை முதுமை தழுவிக்கொண்டிருந்தது.

என்னையும் அவனையும் ஒரு சின்னக் கறுப்பி அழைத்தாள்.

“இவரை நான் இங்கு கூட்டி வந்தேன்!” என வெட்கத்துடன் சொன்னான்.

“நீ விரும்பியதைக் குடி! பின் வெளியேறு!” இது நான்.

“மிகவும் நன்றி! நீங்கள் நிறையக் கறுப்பிகளை விடியும்வரை பார்த்துக் கொண்டிருக்கலாம். எனக்காக இப்ராஹிம் வேறு ஒரு மதுச்சாலையில்  காத்துக் கொண்டிருப்பான்.” என்ற படி தனது போன் இலக்கத்தை எனக்குத் தந்து, “ஓர் இந்தியனை உங்களுக்குத் தெரிந்தால் தயவு செய்து எனக்கு அறிமுகம்  செய்யுங்கள்.” எனச் சொல்லியபடி போய்விட்டான்.

“உங்களுக்கு எது குடிக்க விருப்பம்?” எனச் சின்னக் கறுப்பி என்னிடம் கேட்டாள்.

“ஒரு சின்ன டின் பியர்….” எனும்போது  அவளிடம்  பரிகாரமாகச் சிரிப்புகள் வந்தன.

“நான் எதனைக் குடிப்பதாம்?” அவள் இதமாகக் கேட்டாள்.

“நானே இங்கு குடிக்க வந்தேன்.”

“உங்களுக்கு நான் வெறியைத் தரவில்லையா?”

“வெறி வருகின்றது. நான் உன்னைப் பார்க்கவே  வந்தேன்.”

“உனது சின்ன பியரைக் குடி…….” என்றபடி, தொலைவில் போய்  தனது முதுகைக் காட்டிக் கொண்டு  இருந்தாள்.

முதுகு முழுக்கக்  கறுப்பாக இருந்தது. அந்த முதுகை வெறித்தன எனது விழிகளும் நாக்கும். பிற கறுப்பிகள் என்னிடம் வந்தும், போய்க்கொண்டும், முதுகைக் காட்டிக்கொண்டுமிருந்தனர்.  வாழ்வு முதுகைப் பார்ப்பதா எனும் கேள்வி எனக்குள் எழுந்தது.

செலவு செய்யாமல் இருந்தால் முதுகுதான் கிடைக்கும் முகம் கிடைக்காது.  சாகும்போது உயிரை வாங்குமா காசு என எனக்குள் ஓர் கேள்வி எழுந்தபோது ஓர் சிறிய கறுப்பி என்முன் வந்து திரும்பினாள்.

முதுகு.

“திரும்புவாயா?”

திரும்பினாள். எனது உடலில் இனம்புரியாத கிறுக்கம்.

“எது உனக்குக் குடிக்க விருப்பம்?” எனக் கேட்டேன்.

“Champagne! அதுவும் உன்னோடு, தனியாக உன்னுடன் இருந்து குடிக்க விருப்பம். நீ எனது அப்பாபோல உள்ளாய். எனக்கு முதியவர்களில்தான் விருப்பம்.”

நானும் அவளும் தனி இருக்கைக்குச் சென்றோம். அவள் தனது கூந்தலைக் கலைத்துவிட்டு “ஒரு போத்தல்  Champagne! “ என்றாள்.

எனது தொடைகள்  அவளால் தடவப்பட்டது.

“உன்னோடு இரவு கிடக்கவேண்டும் என்பதே எனது வெறி ……” என அவள் சொன்னபோது Champagneனோடும் பில்லோடும் ஒருத்தி வந்தாள்.  மதுப் போத்தலைத் திறந்து அவளுக்கும் எனக்கும் தந்த அவள்  “பணம் தொடக்கத்தில் கொடுக்கப்படவேண்டும்” என்றாள்.

பில் மீது எனது விழிகள் சென்றன.

“420 €”

தலையில் சிறு நடுக்கம். மீண்டும் எனது லாபத்தனத்தை  உடைத்தேன்.

கிரெடிட் காட்டால்   பணம் கொடுக்கப்பட்டது.

காமரசத்தை  தனது உதடுகளில் ஒழுகச் செய்தபடி கிளாசை என்முன் நீட்டினாள்.

சொட்டுக் குடித்தேன்.

“உங்களுக்கு நிறைய அனுபவங்கள் இருக்கும் என நினைக்கின்றேன்.” என்று அவளது வெளுத்த உதடுகள் சொல்லின.

நிறைய அனுபவங்கள் இல்லாதபோதும் எப்படி அவளிடம் உண்மையைச் சொல்வது? எனது விழிகள் அவளது கவர்ச்சியான அரை நிர்வாண உடலைப் பச்சையாக முத்தமிட்டுக் கொண்டிருந்தன.

“நான் முதியவன். எனக்குள் நிறைய அனுபவங்கள் உள்ளன!” என்றபடி அவளது கிளாசை நிரப்பினேன்.

“நான் சின்னவள்! எனக்குள் பெரிய வெறிகள் உள்ளன…. நீங்கள் செக்ஸியாக உள்ளீர்கள்” என்றபடி, தனது பூக்கரங்களால் தடவ வேண்டியதைத் தடவி, என்னை எழுப்பினாள்.

அவளது கிளாஸ் வெறுமையாகிக் கிடந்ததால் மீண்டும் நிரப்பினேன்.

“உங்களோடு கிடக்கவேண்டும்!”

எனது உடலில் பல துடிப்புகள் ஏற்பட்டன.

“வா!” என்றேன்.

“எங்கே?” என அவள் தனது உதடுகளை நாக்கினால் நனைய வைத்துக்கொண்டு கேட்டாள்.

“எனது வீட்டுக்கு…..”

“எங்கே?”

இடத்தை நான் சொன்னபோது அவளது முகம் திரும்பியது.  பின் என்னைப் பார்த்து “உனது இடம் தூரம் !” எனச் சொன்னாள்.

“உனது இடம் அருகில் உள்ளதா?” எனக் கேட்டேன்.

“ஆம்!”

“அது உனது வீடா?” என அவளது சின்னத் தொடைகளைத் தடவியபின் கேட்டேன்.”

“இல்லை, அது ஹோட்டல்! அங்கு  என்னை உங்களது வெறிகளால் புசியுங்கள்.”

நாங்கள் வெளியில் வந்தோம். அவள் விரைவாக ஓர் அழகான ஹோட்டலைக் காட்டி, அதுதான் தனது தெரிவு எனச் சொன்னாள்.

எங்களை வரவேற்றாள் ஓர் அழகிய பெண்.

“1200 €” என்றாள்.

இதயம் நடுங்கியது.

“கூட” என அவள் செவிகளில் ரகசியமாகச் சொன்னேன்.

“கூட இல்லை, இது எனக்காகவும், ஹோட்டலுக்காவும்… எனது உடல் உனக்கு வெறியைத் தரவில்லையா?”

“ஆம். காத்திரு, சில நிமிடங்களில் வந்துவிடுவேன்.” என வெளியில் வந்தபோது மீண்டும் எனக்கு மூச்சு வந்தது.

ஓடினேன். மிகவும் பலமாகியது எனது ஓட்டம். ஓர் சின்னப் பூங்காவில் வந்து இறங்கியது எனது உடல். ஓர் கதிரையில் தூக்கத்துக்காக அமர்ந்தேன்.

சத்தம் கேட்டது.

முத்தச் சத்தங்கள்.

எனது முன்னுக்கு இருந்த வாங்கிலில், என்னைக் காணாமல்  என்னைப் பெண்கள் மதுச்சாலைக்கு  அழைத்தவன் தனது இப்போதைய நண்பனுடன் முத்தங்களால் வாழ்ந்துகொண்டிருந்தான்…

பாரிஸ் புறாக்கள் அந்த வாங்கினை வட்டமிட்டதையும், முத்தமிட்டதையும்  எனது விழிகள் அவதானிக்கத் தவறவில்லை.

 

மார்ச்,2016, பாரிஸ்

Previous articleபதிலீடு -காளீஸ்வரன்
Next articleலூக்கா 5:8 -வைரவன் லெ.ரா
Avatar
(பி.1960) ஒரு தமிழ் எழுத்தாளர். இலங்கையில் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்கிறார். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகியவற்றில் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார். இவரது கவிதைகள் டேனிசு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.பிரஞ்சுமொழியில் புலமையுடையவர். இவரின் சில ஒட்டோவியம் புகலிட இதழ்களில் வெளிவந்துள்ளன. "தாயகம்"  சஞ்சிகையில் இவரின் பல கதைகள் வந்துள்ளன. அதே இதழில் பிரஞ்சுக் கவிதைகள் சிலவும் உள்ளன