மதிய வெயில் வெள்ளையாய் சாலையில் விரிந்திருந்தது. மூன்று மணி வெயில் என்பதால் வெக்கை அதிகமாக இருந்தது. பேருந்து நிறுத்த பெஞ்சில் படுத்துக்கிடந்த ஜானகிராமன் எதாவது வாகனம் வந்தால் தலையை மட்டும் கொஞ்சம் தூக்கிப் பார்ப்பது வண்டி நிற்காமல் போனால் பின்னர் மீண்டும் பெஞ்சில் வைத்திருந்த அழுக்கு மூட்டையின்மீது தலையை சாய்ப்பது. நிறுத்தத்தின் அருகிலிருந்த மரத்தின் கீழ் படுத்துக்கிடந்த செம்பட்டை நாயும் வாகன சத்தம் கேட்டால் அவனைப்போலவே தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு வாகனம் நிற்காமல் போனால் மீண்டும் தலையை மண்ணில் சாய்த்துக்கொண்டது. கொஞ்ச நேரத்திற்கு முன்புவரை எந்த வாகனம் வந்தாலும் “லொள்..லொள்…” என்று பின்னாலேயே கத்திக்கொண்டு போன செம்பட்டை இப்போது அந்த ஓட்டத்துக்கும் சக்தி இல்லாமல் படுத்துக்கிடந்தது.
ஒருநாள் முழுக்க பசியைப் பொறுத்திருந்த ஜானகிராமன் இரண்டாம்நாள் காலையிலிருந்து அவனது வயிற்றைப் பசி அரித்துக்கொண்டு இருந்தது. எதாவது போடு இல்லையென்றால் இருக்கும் குடல் அனைத்தையும் கடித்துக் குதறிவிடுவேன் என்று கொஞ்சம்கூட கருணை இல்லாமல் பசி அவனை மிரட்டிக்கொண்டு இருந்தது. நேற்று மதியம் வரை கோயில் முன்பு இருந்த குப்பைத்தொட்டியில் ஓரளவு உணவு கிடைத்த செம்பட்டைக்கு நேற்று இரவு முதல் ஒரு பருக்கைகூட கிடைக்கவில்லை. விட்டால் பசியில் நம்மை கடித்துவிடுமா! என்றுகூட அதனின் குறுகுறுப்பு பார்வையில் ஜானகிராமனுக்கு கவலை. அவர் தன்னுடைய உடல் இரண்டு கொடிய மிருகங்களுக்கு நடுவே சிக்கிக்கொண்டு இருப்பதாகப்பட்டது. ஜானகிராமன் எழுபது வயதைப் பூர்த்தி செய்திருந்தார். உடல் சுருக்கங்கள் அவரின் வயதைக் கூட்டியே காண்பித்தது. கருப்பை முழுவதுமாக தொடாத நிறம். தலையிலிருந்த வெள்ளை முடி கொஞ்சம் கொட்டியிருந்தது.
கடந்த எட்டு ஆண்டுகளாக அந்தோணியார் சர்ச்முன்பு பிச்சை எடுத்து வருகிறார். இதுவரை பசியை உணரவில்லை. ஐம்பது மீட்டர் தள்ளி மாரியம்மன் கோயில் இருப்பதால் இரண்டில் எதாவது ஒரு நம்பிக்கையாளர் அவரது நம்பிக்கையை சிதைத்தது இல்லை. காசுக்குக் காசும் சோறுக்கு சோறும் கிடைத்துவிடும். இது வருமானம் வரும் “நல்ல ஸ்பாட்” என்று முடிவு செய்துதான் இந்த இடத்தை தேர்ந்து எடுத்திருந்தார். “உங்கப்பனுக்கும் சேத்து ஆக்கி போடத்தான் எங்கம்மா உனக்கு கட்டி கொடுத்தாங்களா” என்று மகனிடம் மருமகள் சண்டைபோட்டபோது இதற்குமேல் அவமானத்தைத் தாங்கிக்கொண்டு இந்த வீட்டில் வாழமுடியாது என்று முடிவுக்கு வந்த ஜானகிராமன் ஏதாவது வேலைக்குப் போகலாமென்று வீட்டிலிருந்து வெளியேறினார். அவர் வேலை கேட்ட எங்குமே “உங்க வயசுக்கு என்ன வேல கொடுக்க முடியும், வேற எங்காவது பாருங்க” என்று வரிசையாக எல்லா இடத்திலும் நிராகரிக்கப்பட்டதால் அன்று என்னசெய்வது என்று தெரியாமல் நகர பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கையில், பசியாகயிருந்த முகத்தைப் பார்த்து பிச்சைக்காரர் என்று நினைத்து ஒரு அம்மா அவரின் முன்னால் ஒரு சாப்பாட்டுப் பொட்டலத்தை வைத்துவிட்டுப் போனாள். “நான் பிச்சைக்காரன் இல்லை” என்று வாய் திறப்பதுக்கு முன்பே சோற்றுப் பொட்டலத்தை வைத்தவள் வேக வேகமாகப் பேருந்து ஏறிப் போய்விட்டாள். அதனை தூக்கி எறிய மனமில்லாமல் பசியால் சாப்பிட்டார். கைநீட்டி எதுவும் கேட்கக் கூடாது கொடுத்தால் மறுக்கக் கூடாது என்று அவராகவே ஒரு கொள்கை முடிவெடுத்து அங்கும் இங்கும் சுற்றிக் கடைசியாக இங்கே வந்து உட்கார்ந்தவர் அப்படியே எட்டு வருடமாகப் பேருந்து நிறுத்தத்துக்கு பின்னாலிருந்த மூன்றடி நீண்டவாகு உள்ள இடத்தைத் தனக்கான இடமாக அவராகவே “பட்டா” போட்டு உட்கார்ந்துவிட்டார்.
இங்கு வந்து உட்கார்ந்தபோது இவரையும் சேர்த்து ஒன்றிரண்டு பிச்சைக்காரர்கள் இருந்தார்கள். இப்போதும் அவர்கள் எப்போதாவது வருவார்கள். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சர்ச்சில் சிறப்பு பிரார்த்தனை என்பதால் வருவார்கள். அன்று நல்ல வசூல் இருக்கும். சிலநேரம் அவர்கள் ஞாயிறு பூசைக்கு வருவார்கள் மற்றபடி எப்போதும் இங்கே தொடர்பில் இருக்கும் ஒரே நிரந்தர பிச்சைக்காரர் ஜானகிராமன் மட்டுமே.
நாடு முழுக்க பிரதமர் அறிவித்த திடீர் ஊரடங்கு உத்தரவினால் சாலையில் மக்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. நாடு முழுக்க பரவும் ஆட்கொல்லி வைரசினால் யாருக்கு வேண்டுமென்றாலும் உயிரிழப்பு ஏற்படும் என்ற அச்சம் மட்டுமே எல்லோரையும் முடக்கிப்போட்டது. “நீ என்ன சொல்லறது நான் என்ன கேக்குறது” என சொல்லிக்கொண்டு திரிபவர்கள்கூட பயந்து வீட்டுக்குள் அடங்கி இருந்தனர். உயிர் பயம் மட்டுமே அவர்களை வீட்டுக்குள் சிறைப்படுத்தி இருந்தது. அப்படியும் யாராவது நடமாடினால் அவர்களின் புட்டம் நன்றாகச் சிவக்கும்படி கருப்பு புட்டமாக இருந்தாலும் சிவப்பு கோடுகளாகத் தடித்து இருக்க வேண்டுமென்று காவல்துறைக்கு உத்தரவு கொடுக்கப்பட்டதால் அதற்குப் பயந்தேனும் வண்டியில் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருக்கும் இளம்தாரிகள் அடங்கி வீட்டில் இருந்தனர்.
கடைகள் அனைத்தும் பூட்டி இருந்தது. இந்த ஊரடங்கு பத்து நாட்களுக்கு நீடிக்குமென்று பிரதமர் அறிவித்து இருந்தார். செய்தியில் ஒவ்வொரு நாட்டிலும் எங்கள் நாட்டில் நான்காயிரம் பேர், எங்கள் நாட்டில் ஐந்தாயிரம், எங்களுக்குப் பத்தாயிரம் என்றுவரும் இறப்புச் செய்திகளின் எண்ணிக்கை உண்மையாகவே எல்லோருக்குள்ளும் கிலியை உண்டாக்கி இருந்தது. அதன்காரணமாகவே இரண்டு நாளும் சாலை பேரமைதியாக இருந்தது. இந்த பேரமைதி இன்னும் எட்டு நாட்கள் நீடிக்கும் என்று நினைக்கும்போதே ஜானகிராமனுக்கு வயிற்றில் புளி கரைத்தது. கையில் காசு இருந்தும் சாப்பிட கடை இல்லாமல் இருப்பது வாழ்வின் இறுதி இடத்தை வந்தடைந்துவிட்டோம் என்று முடிவுக்கு வந்துவிட்டார்.
எதாவது வீட்டில் “அம்மா பசிக்குது, சோறு போடுங்க” என்று கேட்டால் கொடுக்கும் வீடுகள்கூட அரசு சொன்ன “இந்த நோய்த் தொற்று யாருக்கு வேண்டுமென்றாலும் இருக்கும். புதிய நபர்கள் யாரையும் வீட்டின் பக்கம் அனுமதிக்காதீர்கள். அவர்களுக்கு இருந்தால் காற்றின் வழியாகப் பறந்து உங்கள் நாசி வழியாக நுழைந்து நுரையீரலை உங்களுக்கே தெரியாமல் தாக்கி உங்களைக் கொன்றுவிடும் ஜாக்கிரதை” என்று சொன்ன அரசின் அறிவிப்பு பலரின் வீட்டுக் கதவும் பத்து நாட்களுக்கு உலகமே அழிந்தாலும் திறக்கவே மாட்டோம் என்று கறாராக இருப்பதைப் பார்த்து ஜானகிராமன் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவர் தலையைத் தேய்த்துக்கொண்டே இருந்தார்.
“சாகரதுனு ஆச்சுனா நிம்மதி ஹோட்டெல்ல ஒரு பீப் பிரியாணி சாப்பிட்டு நிம்மதியா போய்ச் சேர்ந்திருக்கலாம்.” என்று புலம்பினார். அவருக்கு ஜீரண பிரச்சனை இருப்பதால் எப்போதாவது பிரியாணி சாப்பிடும் ஆசை வந்தால் சாப்பிடுவார். அதைக்கூட “ கையில் காசு இருந்தும் திங்காம சாகுறோமே” என்று விசனம் இருந்தது.
சாலையில் வரும் ஒன்று ரென்று வாகன வாசிகள் எதாவது சாப்பிடக் கொண்டு வருகிறார்களா என்று தலையைத் தூக்கித் தூக்கி பார்த்து எதுவும் வாராது என்று முடிவுக்கு வந்தவர். வயிற்றைப் பிடித்து தனது கையால் தடவிகொடுத்துக்கொண்டு இருந்தார். அது “நீ தடவுவதற்கான நேரத்தைக் கடந்து வெகுநேரமாகி விட்டது” என்று கொடூரமான வலியை குடலை பிழிந்து கொடுத்தது. அவரின் கைகள் பசியில் நடுங்க ஆரம்பித்தது.
“எதாவது கொடுங்களேன்” என்றுதான் இவ்வளவு நேரமும் வருகின்ற ஒன்றிரண்டு வாகனங்களையும் கெஞ்சிக்கொண்டே பின்னாலேயே ஓடியது நாய். அவர்கள் நாய் கடிக்க வருவதாகப் பயந்து “ச்சை போ..”என்று விரட்டிவிட்டுப் போனார்கள். அவர்கள் போகும்போது ‘அந்த பக்கம் போலிஸ் விரட்டுது.. இந்த பக்கம் இது விரட்டுது.. ஊர் பயங்கர செக்யூரிட்டியா இருக்குடா மாப்பிள” என்று கிண்டல் செய்து போனார்கள். அவர்கள் இதுக்குமுன்புவரை இப்படி ஊர் அமைதியாக இருந்ததைப் பார்த்ததே கிடையாது. அதனை நேரில் தரிசிக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது. பின்னாலேயே ஓடிய நாய் பசியின் கோரம் அதிகமாகி ஓடிஓடி கால்களில் பலமின்றி நாக்கு வெளியே தள்ளி அப்படியே படுத்துவிட்டது.
வெயில் கடுமை காரணமாக ஜானகிராமனின் நாக்கு தண்ணீருக்காக ஏங்கி “ஒரு சொட்டாவது தண்ணி தா” என்றது. தனது பட்டா போட்ட கூரை இல்லாத வீட்டில் இருக்கும் இரண்டு பைகளுக்கு நடுவே கையைவிட்டு துழாவினார். அங்கு கிடந்த பிளாஸ்டிக் போத்தலில் அவர் வாய் நனைக்குமளவு நீர் இருந்தது. அதனை எடுத்து அவர் குடித்தபோது தலை உயர்த்திப் பார்த்த செம்பட்டை கால்களுக்கு பலம் கொடுத்து எழுந்து நின்றது. அதனைக் கவனிக்காத ஜானகி அதற்குள் தண்ணீரை முழுவதுமாய் குடித்தார். அதன்முகத்தில் ஒரு ஏமாற்றத்தொனி தெரிந்தது. “வாவ்..” என்று அவரைப்பார்த்து ஒருசத்தம் கொடுத்து மீண்டும் படுத்துக்கொண்டது.
வெயிலின் வெக்கை காற்றில் அனல்போல மிதந்தது. தரையில் படுத்துக் கிடக்கும் நாயின் நாக்கு பற்களுக்கு நடுவே வெளியே நீட்டி விழுந்தது. குடல் பிழிவதை ஜானகிராமனால் தாங்கமுடியவில்லை. கைநடுக்கத்தை அவர் நன்றாக உணர்ந்தார். “முடியல யாரவது வந்து காப்பாத்துங்க” என்று அழைத்தாலும் வருவதற்கு அங்கே யாருமில்லை. இருந்தாலும் வர வாய்ப்பும் இல்லை. யாருக்கு வேண்டுமென்றாலும் நோய்த் தொற்று இருக்கலாம் என்ற ஜாக்கிரதை உணர்வு எல்லோருக்கும் மேலோங்கி இருப்பதை ஜானகிராமன் தெரிந்தே கைகள் நடுங்கப் படுத்துக்கிடந்தார்.
வயிற்றுக்கு எதாவது போனால் நிச்சயம் உயிர் பிழைத்துவிடலாம் என்று ஒரு சமிக்கையும் அவருக்குக் கிடைத்தது. தனது அம்மாவின் குரலை பல ஆண்டுகளுக்குப் பின்பு காற்று தூக்கி வந்து காதில் இறக்கியது. “என்ன ஜானகி பசிக்குதா. அம்மா அடுப்புல சோறு வச்சிருக்கேன் இறக்குனோன தரேன். அதுவர பொறுத்துக்கோ” என்று அந்த குரல் பேசியது. வெகு ஆண்டுகளுக்குப் பிறகு கேட்ட குரல் அவரின் கண்களின் வழியாக நீர் கோலமிட்டது. அது வளைந்து நெளிந்து தலையின் கீழே வைத்திருந்த அழுக்கு மூட்டையில் இறங்கி வட்டமாக விரிந்து நனைத்தது. எழுந்து உட்கார எத்தனித்தார். அவரின் கால்கள் ஒத்துழைக்கவில்லை. கண்கள் மூடின. காதுகள் அவ்வப்போது கேட்டுவந்த பறவைகள் சத்தத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி வந்தது. அவரின் உதடுகள் ‘அம்மா பசிக்குது…ரொம்ப பசிக்குதுமா ..”. என்றார்.
காதுகள் முழுவதுமாக கேட்பதை நிறுத்தியது. அவரின் உதடுகள் எந்த சுரமும் இல்லாமல் மெல்லிய ஓசையில் “அம்மா… அம்மா…” என்று முனகியது. கொஞ்சநேரத்தில் முனகலும் அப்படியே நின்றது. பலமற்ற அவரின் கையை யாரோ உலுக்கி “அய்யா… அய்யா.. எழுந்திடுங்க. பன்னு சாப்பிடறீங்களா… எழுந்துருங்க..எழுந்துருங்க” என்று இரண்டு பேர் அவரின் தோளைப்பிடித்துத் தூக்கினார்கள். கையில் இரண்டு பன்னையும் ஒரு பாட்டில் தண்ணீரையும் கொடுத்துவிட்டு ‘இந்த வழியா போகாதே போலிஸ் நிக்கும் இப்படி போ” என்று ஒருகுரல் பேசியது. அவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் வேகம்கூட்டி போனார்கள். பசியால் ஏற்பட்ட மங்கலான பார்வையால் அவர்கள் முகம் தெரியவில்லை கானல்நீரில் எழும் நெளிந்த உருவங்கள் மட்டுமே தெரிந்தது.
தூரத்தில் நாய் “வாவ்..வாவ்…” என்றது. அதனின் குரைப்பிலும் போதிய சக்தி இல்லை. நடுங்கும் கையிலிருந்த பன் ஒன்றை எடுத்து நாயின் மீது வீசினார். அது கொடூர பசியால் இரண்டு கால்களுக்கு நடுவே பன்னை வைத்துக் கடித்து இழுத்தது. ஜானகிராமன் பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடித்துவிட்டு அவருடைய தட்டை கீழே வைத்து தண்ணீர் ஊற்றினார். வெயில் முன்பைக்காட்டிலும் கொஞ்சம் தணிந்திருந்தது. இப்போது பறவைகளின் “கீச்” சத்தம் அவருக்கு ஓரளவு கேட்டது.
-அ.கரீம்.
அருமையான பதிவு. இன்றைய ஊரடங்கில்க நாம் வாசித்த , கவனித்த பல்வேறு விசயங்கள் இங்கு ஒரு சிறிய தீப்பொறியாக பதிவேற்றப்பட்டு இருக்கிறது. தெளிவான நடையில் அருமையாக தன்னுடைய முன்வைத்திருக்கிறார். நன்றி. அருமை அருமை.
சில. அய்யப்பன், இராசாக்கமங்கலம், குமரி மாவட்டம்.