இசூமியின் நறுமணம்

ரு நாளைக்கு, எத்தனை முறை? என்று கேட்டார், கோபயாஷி. அந்த ஜப்பானிய குட்டை மேசையில் குழுமியிருந்த ஆறு பேரும் சிரித்தோம். புதிதாகத் திருமணமாகியிருந்த கஷிமா, இதற்குப் பதில் சொல்வதா என்று ஒருகணம் தயங்கினான். பிறகு, அனைவரும் அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்து, ”ஒரு நாளைக்கு ஒரு தடவை தான்”, என்றான் கோபயாஷிக்கு கேட்கும் குரலில். பிறகு மற்றவர்களுக்கு மட்டும் கேட்கும் தொனியில், ”என்ன இரும்புலேயா செஞ்சு வைச்சுருக்கு ?” , என்றான். அனைவரும் மறுபடியும் சத்தமாகச் சிரித்தனர்.

”கோபயாஷி சான், இந்த மாதிரி தனிப்பட்ட கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. அது ஜப்பானியனுக்கு அழகல்ல” போலியான கோபத்தை முகத்தில் காண்பித்தபடி சொன்னார் ஒயிஷி சான். மேலும் கைகளைக் குறுக்காக காண்பித்து, ஆங்கிலத்தில் ”நோ” என்றார்  கோபாயாஷியிடம்.

ஒயிஷி சான், உங்கள் கோப்பை தான் காலியாகிவிட்டதே, உங்களிடமா, இந்த கேள்வியைக் கேட்கமுடியும்? ,என்றார் கோபயாஷி. அனைவரும் ஒரே நேரத்தில் சிரித்தனர். கோபயாஷி சொன்னதை நேரடியாகப் புரிந்துகொண்ட கஷிமா, ஒயிஷி சானின் கோப்பையில், மக்கிலிருந்த பீரை நிரப்பப் போனான். இதைப்பார்த்து, புரையேறும்படி சிரித்தார் மேனேஜர் சிமுரா . ஒயிஷி சான், கஷிமாவிடம் பீரை மறுத்து, தனது கோட் பையில் கையைவிட்டு குவார்ட்டர் ஜாக் டேனியல்ஸ் விஸ்கியை எடுத்து, அதில் கொஞ்சம் கோப்பையில் விட்டு நீரை கலந்துகொண்டார்.

“இரண்டாவது பார்ட்டியிலும் உங்களிடம் விஸ்கி மீதமுள்ளதா ?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் யமதா சான் .  முதல் பார்ட்டி, ஆறு மணிக்கு ஆரம்பித்து எட்டு மணிக்கு முடிந்திருந்தது. உடனடியாக அந்த மதுபான விடுதியிலிருந்து வெளியேறி, தள்ளாடி நடந்து ரயில் நிலையம் அருகிலிருந்த இந்த இரண்டாவது விடுதிக்கு வந்திருந்தோம். இந்த சாலை முழுவதும், பெண்கள் நின்றுகொண்டு தங்களது விடுதிக்கு வரச்சொல்லி அழைத்தனர். அழகான கண்களுடன், தங்களது கடைப்பெயர் எழுதிய டிசர்ட்டும், குட்டைப்பாவாடையும் அணிந்திருந்த பெண்ணை கண்டதும், கோபயாஷி, இந்த விடுதிக்கே செல்லலாம், என்றார். எட்டு மணியிருந்து பத்துமணி வரை என இரண்டுமணி நேரத்துக்குப் பேசி உள்ளே வந்திருந்தோம். முதல் கோப்பை பியர் முடிந்து, சாக்கேவில் இறங்கியிருந்தார்கள். சாக்கேவிற்க்கான சிறிய பீங்கான் கோப்பைகளில் மூங்கில்கள் வரையப்பட்டிருந்தது. தட்டுகளில் உப்பிட்ட முட்டைகோஸ், மேலே எலுமிச்சை பிழிந்து  வைக்கப்பட்டிருந்தது.

”வரும் வழியில் செவன் லெவனில் குவார்ட்டர் பாட்டில்களை வாங்கினார், ஒயிஷி சான்”, என்றான் கஷிமா. ”நல்ல ஜப்பானியன், சாக்கேவும் பியரும் தான் அருந்துவான். இப்படி விஸ்கியை வாங்கிக்கொண்டு விடுதிக்குள் வரமாட்டான்”, என்றார் கோபயாஷி. அனைவரும் சிரித்தனர்.

என்னுடைய தவறல்ல. இந்த விடுதிகளில் ஒன்றுக்கும் உதவாத பீரும், விஸ்கியில் மொட்டை தண்ணீரை விட்டு ஹபாலும் தான் கொடுக்கிறார்கள். எனக்கு ஜாக்டேனியல்ஸ்தான் கேட்கும் என்றார், ஒயிஷி.

கேட்ட கேள்விக்கு, இன்னும் விடை வரவில்லை. ஒயிஷி சான், எப்படி மாதத்துக்கு ஒரு முறையா , இல்லை வருடத்துக்கு ஒரு முறையா ? என்றார் கோபயாஷி. சிமுரா சிரித்தார்.

மாதத்துக்கு இரண்டு முறை, என்றார் ஒயிஷி சான்.

பரவாயில்லையே, திருமணமாகி இருபத்தி ஐந்து வருடங்களுக்கு பிறகும், மாதம் இரண்டு முறை என்றால்.. மனைவி, ஒன்றும் கோபித்துக்கொள்வதில்லையா?, என்றார் யமதா சான்.

எங்கே.. அந்த இரண்டு நாட்கள் மட்டும், ஏன் மற்ற நாட்களைவிட குளிப்பதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறேன்? என்று கோபித்துக்கொண்டு கதவைத் தட்டுகிறாள் என் மனைவி.

மற்ற மேசைகளில் அமர்ந்திருப்பவர்களும் திரும்பிப்பார்க்கும்படி சிரித்தார் யமதா சான். அனைவரும் கொஞ்சம் தாமதமாக புரிந்துகொண்டு சிரித்தனர். பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டார் ஒயிஷி சான்.

கோபயாஷியின்  பீங்கான் கோப்பையில், சாக்கே பாட்டிலை மரியாதையுடன் கவிழ்த்தான், கஷிமா. எடுத்துக்குடித்தார் கோபயாஷி.  பிறகு, என்னைப் பார்த்துச் சொன்னார். ”பிஜய் சான், இந்த விவகாரங்களில் பிரமாதமாக இருப்பார். இந்தியர் அல்லவா ”  உடனே சாக்கே நிரப்பிய கோப்பையை உயர்த்தி என்னிடம் ”கம்பாய்” என்றார், யமதா சான்.

”இந்தியர்கள், கணிதத்தில் புலிகள். ஜப்பானியர்கள், ஒன்பதாம் வாய்ப்பாடு வரை மட்டும்தானே கற்கிறோம். இந்தியர்களுக்கு பதினாறாம் வாய்ப்பாடு வரை உண்டாம். NHK தொலைக்காட்சியின்  நிகழ்ச்சியில் காண்பித்தார்கள்” என்று சொன்னான் கஷிமா. இந்த ஏழு வருடங்களில், வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு நபர்கள், என்னிடம் இப்படிக் கேட்டதுண்டு. அந்த நிகழ்ச்சி, எப்போது NHK சேனலில் ஒளிபரப்பாயிற்றோ, என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அந்த புகழ்மிக்க கேள்வியைக் கேட்டான். ”பதிமூன்றை பதினாறால் பெருக்கினால் எவ்வளவு?” கொஞ்சம் நிதானித்து மனதில் பெருக்கினேன். ”இவ்வளவு நேரமெடுத்துப் பெருக்கினால், அது எப்படி வாய்ப்பாடு ஆகும்?” என்றான் கஷிமா.

பிஜய் சானிடம், எட்டை, எட்டால் பெருக்கினால் எவ்வளவு என்று கேட்டால் சரியாகச் சொல்வார். மொத்தம் அறுபத்தி நாலு கலவி நிலைகள் தானே காமசூத்ராவில்? என்று திரும்பவும், பேச்சை தனக்கு விருப்பமான இடத்துக்கு மடை மாற்றினார் கோபயாஷி. அனைவரும் சிரித்தனர்.

உண்மையாகவே, இந்தியர்கள் அறுபத்தி நாலு முறையில் செய்திருக்கிறீர்களா? என்று கேட்டான் கஷிமா.

அட, அதெல்லாம் சும்மா படம் பார்க்கத்தான். உண்மையில் முயற்சிசெய்தால் சிக்கிக்கொள்ளும், என்றார் கோபயாஷி.

”காமசூத்ரா, கலவி நிலைகளை மட்டும் பேசும் நூல் அல்ல. அதைத்தாண்டி எதிர் பாலினத்தின் உடலை புரிந்துகொள்வதைப் பற்றியது. சொல்லப்போனால் அறுபத்தி நான்கென்ன? கற்பனையில் நூற்றுக்கணக்கில் நிலைகளை உருவாக்கலாமே. கற்பனையில் விரித்தெடுப்பதுதானே காமம். ஜப்பானிய போர்னோ போல்,” என்றேன்.

தாமரை தண்டை சிறுதுண்டுகளாக வெட்டி, வறுத்தெடுக்கப்பட்ட வறுவலைக் கொண்டு வந்து வைத்தாள்,  பொன்னிறத்தில் சாயமேற்றி, போனிடெயில் போட்டிருந்த பெண். ஜப்பானிய மொழியில் நாடகீயமாக நன்றி சொன்னார் கோபாயாஷி. அனைவரும் சிரிக்க, அவளும் ஒருகணம் தயங்கி, பிறகு சிரித்தபடி கோபயாஷியின் தோளைக் குறும்பாகத் தொட்டு நன்றி சொல்லிப்போனாள். சாப்ஸ்டிக்கால், ஒருதுண்டை எடுத்தார் கோபயாஷி. அதை வாயருகே கொண்டு செல்கையில் நழுவி விழுந்தது. அனைவரிடமும் மன்னிப்பு என்றார். கோபயாஷிக்கு அவ்வளவு எளிதாகப் போதை ஏறுவதில்லை. நீஜிக்காய் எனப்படும் இரண்டாவது பார்ட்டி முடிந்து, மூன்றாவது இடத்துக்கும் செல்லத் தயாராக இருப்பவர்.

யமதா சான், நான் சொல்வதை உற்று கவனித்துகொண்டிருந்துவிட்டு, பிறரிடம் சொன்னார். ”பிஜய் சான், ஒருபோதும் இந்த குடி விருந்துகளைத் தவிர்ப்பதில்லை. உணர்வுப்பூர்வமாகவே அவர் இந்த இரவுகளை விரும்புகிறார். நான் அதைப் பெரிதும் பாராட்டுகிறேன்”. உடனே, அனைவரும் உற்சாகமாகி கைதட்டினர்.

டோக்கியோவில் வேலைக்கு சேர்ந்த புதிதில் என்னிடம் சொல்லப்பட்டது, இதுபோன்ற குடி இரவுகளின் முக்கியத்துவம் பற்றித்தான். குடி விருந்துகளைத் தவிர்ப்பவர்களிடம், யாரும் நெருக்கமாவதில்லை. வேலையைத்தாண்டிய நெருக்கம் சாத்தியமாவது இதுபோன்ற இரவுகளில்தான்.  தவிர, வேலையில் காணும் யமதா சானும், கோபயாஷியும் இரவுகளில் முற்றிலும் வேறொருவர்களாக ஆகும் அதிசயம் என்னை எப்போதும் வியப்பில் ஆழ்த்துவது. திரும்பவும் அடுத்த நாள், கழட்டிவைத்திருந்த உடையை மாட்டிக்கொள்வதுபோல் பாவனைகளைச் சூடிக்கொண்டு, காலைவணக்கம் சொல்லும்போது, முந்திய இரவின் அடையாளம் கொஞ்சமும் மிச்சமின்றி துடைத்தெறியப்பட்டிருக்கும். கொடுத்த அட்டவணையிலிருந்து சிறிது காலதாமதமென்றாலும், அது மன்னிக்கப்படாது. காரணமும், விளக்கமும் கொடுக்கவேண்டியிருக்கும். பகலில் காட்டும் கடுமையான இறுக்கத்துக்கு மாற்றுதான் இரவுகளா? அல்லது இந்த இரவுகளின் இன்னொரு முகம்தான் அந்த பிளாஸ்டிக் பாவனைகளா?

மொத்தம் ஐயாயிரத்துக்கும் மேலான களன்கள் போர்னோவில் இருக்கிறது, என்றான் கஷிமா. நானே அதில் ஆயிரத்தி சொச்சம் பார்த்திருப்பேன். நோயாளிக்குச் சிகிச்சை செய்யும் மருத்துவராக, அமாமி சான் நடிக்கும் வீடியோவை நீ பார்க்கவேண்டும், என்றான். புக்காக்கே வகை விருப்பமென்றால், கோஹரு சானின் போர்னோ பார். புக்காக்கே தெரியும் தானே?

நான் பேசாமல் இருந்தேன். கண்கள் சொருகியிருந்த ஒயிஷி சான் ஒருமுறை கஷிமாவை பார்த்துவிட்டு மறுபடியும் கண்களை மூடிக்கொண்டு, பின்புறமிருந்த பலகையில் சாய்ந்துகொண்டார்.

கோபயாஷி, பின்பக்க சுவரைப் பிடித்துக்கொண்டு கழிப்பறை செல்ல எழுந்தார். அனைவரும் புரிந்து கொண்டு விலகி அவர் நடப்பதற்கு இடம் கொடுத்தனர். மேலேயிருந்த மரத்தளத்திலிருந்து கீழே குதித்தபோது நிலைதடுமாறினார். தட்டில் பியர் கொண்டு சென்ற ஒருவன், தாங்கிப் பிடித்தான். மன்னிப்பு கேட்டுக்கொண்டு கழிப்பறை நோக்கிச்சென்றார்.

கோபயாஷிக்கு நன்கு ஏறிவிட்டது, என்றார் யமதா சான்.

ஆம். வயதாகிறதே. இந்த வருடம் பதினோராவது மாதம், பணி ஓய்வடைகிறார் அல்லவா? என்றார் சிமுரா.

அப்படியா? என்று அதிசயித்தான் கஷிமா.

பியர், மீண்டுமொரு முறை சொன்னார் யமதா சான். பியர் கொண்டுவந்த போனிடெயில் பெண்ணுடன் தள்ளாடியபடி பேசிக்கொண்டு வந்தார் கோபயாஷி. அந்த பெண்ணும், கோபயாஷியின் பேச்சை ரசிக்கிறாள் என்று தோன்றியது.

அந்த பெண் சென்றவுடன், கம்பாய் என்று பியர் கோப்பையை உயர்த்தி சொன்னார் கோபயாஷி. ஒரு மடக்கு அருந்தி கீழே வைத்தவுடன், ”நம்முடைய அலுவலகத்துக்கு, வாரம் மூன்று நாட்கள் மட்டும் வரும் அந்த மென்பொருள் நிர்வகிக்கும் இசூமி, இன்று வரவில்லை” என்றார்.

இசூமி, சராசரி  பெண்களை விட உயரமானவள். கழுத்து வரை நீண்ட இயற்கையான நிறம் கொண்ட தலைமுடி, மெல்லிய உடலும், நீள்வடிவ மாசில்லாத முகம். மென்பொருள் நிறுவனத்திலிருந்து, எட்டு மாதங்களாக எங்களது அலுவலகத்திற்கு வந்துகொண்டிருப்பவள். இளம்பெண், அழகி.

ஆம், இன்று வெள்ளிக்கிழமை அல்லவா? அவள் திங்கள், செவ்வாய், வியாழன் தானே வருவாள், என்றான் கஷிமா.

ஆனால், அவள் வராத நாட்களிலும், அந்த நறுமணம் வீசுகிறது

அனைவரும் சிரித்தனர்.

”முதலில் கோபயாஷியின் இருக்கையை மாற்றவேண்டும்”, என்றார் யமதா சான்.

வராத நாட்களில் எப்படி அவளுடைய மணம் வீசும்? இதெல்லாம் கோபயாஷியின் பிரமை, என்றார் ஒயிஷி சான்.

கோவில்மணி அடித்து ஓய்ந்திருக்கிறது.

காற்றில் மலர்களின் நறுமணம் மீதமிருக்கிறது,

அழகான மாலை.

என்று பாஷோவின் கவிதையைச் சொன்னார் கோபயாஷி. ”இதெல்லாம் உங்களுக்குப் புரியாது ஒயிஷி சான்.  உங்களுக்குக் குளியலறையில் தனிப் பாட்டுதான் எப்போதும்.”

அப்படி என்றால், அது என்ன நறுமணம் என்பதை இப்போது, இப்போது இவர் சொல்லவேண்டும், என்றார் உள்ளூர சீண்டப்பட்ட, ஒயிஷி சான்.

அந்த மணம், வென்னிலா கிரீமின் மணம் போல், நசுக்கப்பட்ட பாதாம்பருப்பின் மீது எழும் நறுமணம் போல் இருக்கும்.

என்னுடைய இருக்கையைத் தாண்டிதானே அந்த இளம்பெண் செல்கிறாள். நான் கவனித்ததில்லையே, என்றார் யமதா சான்.

வாராந்திர கூட்டங்களில், அவளிடம் வெண்ணிலா போல் நறுமணம் நிச்சயம் நான் உணர்ந்ததில்லை, என்றார் சிமுரா.

இல்லை. அந்த மணம் வெண்ணிலா கிரீம் போல் அப்படியே அல்ல. கொஞ்சம் மாறுதலானது. அதை எப்படிச் சொல்வது..

ஒருவேளை, இந்த மணமா பாருங்கள். சாக்கே கோப்பையை, கோபயாஷியின் மூக்கருகே கொண்டு சென்றார் சிமுரா.

முகர்ந்து பார்த்துவிட்டு, இல்லையில்லை. இது இல்லை என்றார் கோபயாஷி. அனைவரும் சிரித்தனர். பேச்சு சுவாரஸ்யமாவது கண்டு, போனிடெயில் பெண் கீழே நின்று பேச்சைக் கவனித்து அவளும் சிரித்தாள்.

ஒருவேளை இந்த மணமோ, யமதா சான், தான் அணிந்திருந்த சிவப்பு நிற டையின் நுனியை கோபயாஷியின் நாசியருகே கொண்டு சென்றார். போனிடெயில் பெண் கையால் வாயைப்பொத்திக்கொண்டு சிரித்தாள்.

ஒருவேளை அந்த மணமாக இருக்குமோ என்கிற கேள்வியில் கோபயாஷி டையின் நுனியை நுகர்ந்து பார்த்தார். கண்கள் சொருகியிருந்தது. இது இல்லை. என்று கையை ஆட்டினார்.

இப்போது, அனைவரும் கோபயாஷியை கேலிசெய்யும் மகிழ்ச்சியில் இறங்கினர். ஒருவேளை இதுவாக இருக்குமோ என்று முட்டைகோஸ் இதழ்களை நீட்டினான், கஷிமா. கண்கள் சொருக, இதழில் புன்னகை மலர, இதுவல்ல, இதுவல்ல என்று கையை ஆட்டினார் கோபயாஷி. மீண்டும் அனைவரும் சிரித்தனர். போனிடெயில் பெண் மட்டும் கஷிமாவை முறைத்தாள்.

யமதா, புகையை ஆழ்ந்து சுவாசித்து வெளியே விட்டார். ஒயிஷி சான், தனது கடைசி குவார்ட்டர் பாட்டிலின் மீதியை கிளாஸில் விட்டு, தண்ணீர் கொண்டு கலக்கினார். கஷிமா, எதாமாமே எனப்படும் உப்பிடப்பட்ட சோயா பீன்ஸை வாயில் பிதுக்கி விதைகளை எடுத்துக்கொண்டு, தோலைத் தட்டில் வைத்தான்.

புகை மண்டலமாக அந்த அறை மாறியிருந்தது. பத்து மணி நெருங்கிவிட்டதால், இறுதியாக ஏதேனும் தேவையா? என்று கேட்டாள் போனிடெயில் பெண். அனைவருமே முழு போதையிலிருந்ததால், எதுவும் கேட்கமாட்டார்கள் என்று நினைத்தேன். கோபயாஷி, ”பியர் ஒரு கோப்பை”,என்றார். அனைவரும் அதில் சேர்ந்துகொண்டு தங்களுக்கும் பியர் என்றார்கள். மீண்டும் அந்த போனிடெயில் பெண் பியர் கோப்பைகளை இரு கைகளிலும் சுமந்து வந்தாள். கோபயாஷிக்கு பியர் கோப்பையைக் கொடுக்கும்போது , அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.

கோபயாஷி சான் பியர் கோப்பையை எடுத்து ஒரே மூச்சில் குடித்து கீழே வைத்தார். திடீரென்று சொன்னார் “இசூமியின் மீது எழும் வாசனை என்னவென்று  ஞாபகம் வந்துவிட்டது. அந்த நறுமணம் சகுரா மலர்கள் மலரும்போது எழும் மெல்லிய மணம். நாசியுள்ளவர்களே அந்த சுகந்தத்தை அறிவார்கள். தெய்வீகமான அந்த நறுமணம், நம்மை எப்போதும் மீட்கக் கூடியது. ஆறுதல் அளிக்கக் கூடியது. என்னுடைய பெண், ஒரு வயதிலிருந்தே என்னுடன் தான் குளிப்பாள். நன்கு குளித்தபின்பு, குளியல் தொட்டி முழுவதும் வெந்நீர் நிரப்பி, சன்னலுக்கு வெளியே, சகுரா மலர்கள், மலர்ந்திருப்பதைப் பார்த்தபடி, நாங்கள் இருவரும் அந்த தொட்டியில் அமர்ந்திருப்போம். என்றென்றக்குமாக, அந்த காட்சி என்னுடைய இதயத்தில் உறைந்திருக்கிறது. பதிமூன்று வயதில் ஒரு நாள் அவள் பூப்படைந்தாள். அந்த நாள் முதல் என்னுடன் குளிக்க மறந்தாள். அன்றைய, அவளது மணத்தை எப்போதைக்குமாக நான் நினைத்திருக்கிறேன். இசூமியின் நறுமணம், என்னுடைய மகளின் அன்றைய வாசம் தான். அதை நான் இப்போது உணர்கிறேன். என்னுடன் இந்த பொழுதில் அதை உணர்பவர்கள் பாக்கியவான்கள்”,  என்றார். கண்களில் நீர் தேங்கியிருந்தது, புகையை ஆழ்ந்து இழுத்து வெளியே விட்டார். முகம் முழுவதும் சிவந்து, நன்கு வியர்த்திருந்தது. வெள்ளி நிறத்திலான தலைமுடி கலைந்து, முகத்தின் பாதியை மறைத்தது.    சில வினாடிகள் தாமதித்து, “அதற்கு முன்பும் அந்த வாசனையை நான் அறிவேன்.  கைக்குழந்தையாக என் அம்மாவிடம் அருந்திய பாலின் மணம் அது”, என்றார்.


-ரா.செந்தில்குமார்

 

Previous articleபசிநோ….
Next articleயஹூதா அமிச்சாய் கவிதைகள்
Subscribe
Notify of
guest
13 Comments
Most Voted
Newest Oldest
Inline Feedbacks
View all comments
குமார நந்தன்
குமார நந்தன்
2 years ago

அபூர்வமான கதை. இந்த கதையை பற்றி என்னுடைய முகநூலில் பகிர்ந்திருக்கிறேன் வாழ்த்துக்கள் செந்தில்குமார் இந்த ஒரு கதையிலேயே உங்களின் 100 கதைகளை வாசித்த அனுபவத்தை எனக்குள் கடத்தி விட்டீர்கள்

மணிவண்ணன்
மணிவண்ணன்
2 years ago

நண்பா… அருமையான மற்றும் எதார்த்தமான கதை.
கதையின் கடைசி பத்தி திசையையே மாற்றி அமைத்து விட்டது. இக்கதையை வாசிக்க ஆரமித்த எவரும் முடிக்காமல் இருக்க வாய்ப்பு இல்லை.
உண்மையான நண்பர்களுக்குள் நடக்கும் நடைமுறை உரையாடல்.

தொடரட்டும் உமது எழுத்துப் பணி செவ்வனே.

அன்புடன்
மணி

Siva
Siva
2 years ago

Good story, expecting more stories from you.
With love,
Siva

ChandraMouli
ChandraMouli
2 years ago

Good story and narration, it gives the feeling for the reader watching the movements directly. Good effort…👌👌

A. M. Khan
A. M. Khan
2 years ago

சிறப்பான கதை.ஜப்பானிய தளம் என்றாலும் முடிவானது உலக முழுவதும் ஒரேமாதிரி தான் சிந்திக்கிறார்கள் வாழ்வின் இறுதி ஆட்டத்தில்.அருமை👌💐

Bragadeesh V
Bragadeesh V
2 years ago

ஒரு நல்ல சிறுகதை என அறியப்படு வது ஒரு சம்பவத்தையும் அதன் மூலம் நாம் உணர்ந்த விஷயத்தையும் நேர்த்தியாக பதிவு செய்வது மட்டுமே அல்லாமல் அதன் சூழல், மனிதர்கள், அவர்களின் சம்பாஷைனைகள் வாயிலாக அந்த கதைகள மண்ணின் கலாசாரத்தையும், அம்மனிதர்களின் இயல்பையும் பதிவு செய்யும் சிறுகதைகேளே தனித்துவமாக பார்க்கப்படுகின்றன. அவ்வரிசையில் இடம் பெரும் தகுதி இந்த சிறுகதைக்கும் உள்ளதாக நான் கருதுகிறேன். நடையும் சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள்

Magesh
Magesh
2 years ago

Nice story and nice narration.. though few of the japanese terminologies, were hard to understand, when we read it for second time, can catch-up better.

Venky
Venky
2 years ago

மிக நல்ல சிறுகதை செந்தில். வாழ்த்துக்களும் அன்பும்.

-வெங்கி

சஙகரநாராயணன்
சஙகரநாராயணன்
2 years ago

நல்ல கதை. நாம் எல்லோரும் விருப்பமே இல்லாமல் மாட்டிகொண்டிருக்கும் அந்த முகமூடிகள் கழற்றுவதற்கு கடினமான ஒன்று தான். எல்லாவற்றிற்கும் மேலாக நமது சுயம் வெளிப்படும் தருணம் அபூர்வமாக அமையும். மித மிஞ்சிய போதை சில சமயங்களில் நாம் அதுவரை அடுக்கி வைத்த அத்தனையும் கலைத்து எறியும் தருணம்.அயல் நிலத்தில் அயல் மனிதர்களின் சுபாவங்களை வெறும் பொதுப்புத்தியில் அளவுகோல்களை கொண்டு மதிப்பிடமால் இருப்பது சிறப்பு.
நன்றி

காஸ்மிக் தூசி
காஸ்மிக் தூசி
2 years ago

கலாச்சார வேறுபாடுகளைத்தாண்டி, ஆண்கள் இணையும் சரளமான உரையாடல் நிகழும் தளத்திலிருந்து தொடங்கி -தாயின் அன்பையும் குழந்தையின் நேசத்தையும் முழுக்க உணர்ந்த ஒருவனின் உள்ளத்தை நுட்பமாக தொட்டுச்செல்லும் கதை. புலம்பெயர்ந்தவர் எழுத்துகளுள் கீழைத்தேய கலாச்சாரத்தை நுண்மையாக விரித்தெடுப்பவை என்ற வகையில் நண்பர் செந்திலின் கதைகள் முக்கியமானவை, அவருக்கு வாழ்த்துக்கள்!

மதுசுதன்
மதுசுதன்
2 years ago

மனித மனங்களின் கேளிக்கைகள் எவ்வளவு தான் கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு சென்றாலும் இறுதியில் அது சரணடையும் இடம் வாழ்வின் ஆத்ம தரிசனம் தான்.அது தான் வாழ்வின் பூரணத்துவத்தை மின்னல் கீற்றென நமக்கு சிறுநொடிப் பொழுதுகளில் அடையாளம் காட்டிவிட்டு ஓடோடி மறைந்துவிடுகிறது.அதைக்கண்டவன் பாக்கியசாலி கானாதவன் குற்றவாளியாகிறான்.அற்புதமான கதை.

Senthil kumar
Senthil kumar
2 years ago

அந்த கடைசி பத்தி …… எங்கேயோ உயரத்தில் கொண்டு போய் விட்டது…

Seetha
Seetha
2 years ago

அந்த வாசனையை எங்களையும் சுவாசிக்க வைச்சிருக்கீங்க.