Saturday, Sep 25, 2021

யஹூதா அமிச்சாய் கவிதைகள்

1] இபின் கேப்ரோல்

சில நேரங்களில் சீழ்
சில நேரங்களில் கவிதை
ஏதாவது ஒன்று வெடித்துச் சிதறிக்கொண்டேயிருக்கிறது
மற்றும் வலி உண்டாக்குவதாகவும் இருக்கிறது
என் தந்தை, தந்தைகள் மெத்தப்பெருகிய காட்டில் ஒரு மரம்
அவர் பச்சை பருத்திக் கம்பளிகளால் போர்த்தப்பட்டவர்.
ஓ, சதைப் பிண்டங்களான விதைவைகள்,
ரத்தமும் சதையுமான அனாதைகள்
நான் கட்டாயம் தப்பிக்க வேண்டும்
தகரத் திறப்பான்கள் போல கூர்மையான கண்கள்
பெறுமதியான ரகசியங்களை அவிழ்க்கின்றன
ஆனால் என் மார்பின் ரணத்தின் ஊடாக
கடவுள் இந்த உலகை சமணப்படுத்துகிறார்
கடவுளின் வீட்டுக்கு
நான்தான் கதவு.


2] நாம் கடுமையாகப் பேசினால்

அர்த்தம் மிகு வார்த்தைகள்
நீங்கள் கடுமையாகப் பேசினால்
இந்த உலகம் மிக இனிமையாகும்
அல்லது இன்னும் கடுமையாகும்

மேலும் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறது
நாம் பயப்படக் கூடாதென.
அதில் மேலும் எழுதப்பட்டிருக்கிறது
வார்த்தைகளைப் போல நாம் மாறவேண்டும்
கடந்த காலத்திலும் எதிர் காலத்திலும்
மொத்தமாகவும் தனியாகவும்

வரப்போகும் இரவுகளில்
நாம் தெருவில் பொழுதுபோக்காக உலவித் திரியும்
விளையாட்டு வீரர்களைப்போல
மற்றவர்களின் கனவில் தோன்றுவோம்

மற்றும் அந்தக் கனவுகளில்
அந்நியர்கள் கூட உலவக்கூடும்
நாம் ஒருவரை ஒருவர்
யாரென்று அறியாமாட்டோம்.

 

3] என் மோசமான கனவுகளில்

என் மோசமான கனவுகளில்
ஒளி பொருந்திய கண்களை உடைய நீங்கள்
எப்போதும் சுவருக்கு அருகாமையில் நின்றுகொண்டிருக்கிறீர்கள்
சுவரின் அடித்தளமாக ஓர் இதயம் இருக்கிறது

நான் எது ஒன்றைச் செய்தாலும்
பிளவு தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது

என்னுடைய கனவுகளில் நான் எப்போதும்
ஒரு குரலைக் கேட்கிறேன்

அந்தக் குரல் என்னுடையதல்ல
அது உங்களுடையதுமல்ல
ஒருவேளை உங்களுடைய மக்களின் குரலாக அது இருக்குமோ?

கண்கள் சுருக்கம் கொண்டுவிட்டன
என்னுடைய கண்கள்
கடந்துவிட்ட இரவுகளைக் கொண்ட நாட்களுக்காக ஏங்கும்
வெளிறிய விலங்குகளின் கண்கள் போலாகிவிட்டன.

அவர்கள் என் காதல் முகத்திரையை விலக்கிவிட்டனர்
மரணத்தின் முகத்திரையை நீக்குவது போல
நான் கவனம் கொள்ளாதபடிக்கு
அவர்கள் முகத்திரையை நீக்கிவிட்டனர்
நான் உன் பின்னால் வீழ்ந்து கிடந்தேன்

அதுதான் என் உண்மையான முகம்.


4. காதல் பாடல்

இப்படித்தான் அது தொடங்கியது.
சடுதியில் அந்த உணர்வை
லேசாகவும் தளர்வாகவும்
உள்ளே மகிழ்வானதாகவும் உணர முடிந்தது.
உங்கள் காலணியின் வார் இழைகள்
தளர்வு கொள்கையில், சரிசெய்ய
நீங்கள் குனிவதைப்போல.

பிறகு
அதற்கடுத்த தினங்களிலும் அது வந்தது.

மேலும் இப்போது நான்
கடுங் காதல் கூடிப்போன
ஒரு ட்ரோஜன் குதிரையைப்போல ஆனேன்.
ஒவ்வொரு இரவும் அது திமிறிச் சென்று
கட்டுப்பாடிழந்து ஓடிப்போனது
விடியலில் மீண்டும் திரும்பி வந்தது
என் இருண்ட அடிவயிற்றுக்கு.


5. யெஹுதா ஹ-லெவி

அவனது கழுத்துக்கு பின்புறம் இருக்கும்
சன்னமான மயிர்க்கற்றைகள்
கண்களில் வேர் கொண்டவை.

அவனது சுருள் மயிர்கள்
அவன் கனவின் நீட்சி.

உடலுள் உள்ளுறை ஆன்மாவை
ஜெருசேலமுக்கு பயணம் கொண்டுபோகும்
அவன் நெற்றி ஒரு பாய்மரப் படகு
அவனது தோள்கள் துடுப்புகள்.

ஆனால் அவனுடைய கைப்பிடியளவு
பிரகாசமான மூளைக்குள்
அவனது மகிழ்ச்சியான பால்யத்தின்
கருப்பு விதைகளை
தேக்கி வைத்திருந்தான்.

வறண்ட பெருநிலத்தில் தன்
நேசத்துக்குரியவர்களை கண்டடையும்போது
அவன் அவ்விதைகளை ஊன்றுவான்.


 

– யஹூதா அமிச்சாய் – 

தமிழில் : சரோ லாமா.    


ஆசிரியர் குறிப்பு:

யெஹுதா அமிச்சாய்:

ஜெர்மனியில் கட்டுப்பாடு மிக்க யூதக் குடும்பத்தில் பிறந்தவர். விவிலியத்தையும் ஹீப்ரு மொழியையும் முறையாகக் கற்றவர். இஸ்ரேலியக் கவிஞர். இவரது 12ஆம் வயதில் ஜெலருசேலமுக்கு குடிபெயர்ந்தனர் குடும்பத்தினர். பிரிட்டிஷ் படையில் சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார். ஹீப்ரு கவிதைக்கான இஸ்ரேலிய பரிசும், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்க நாடுகளின் உயரிய விருதுகளையும் கவிதைக்காக பெற்றவர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர். இரண்டுமுறை திருமணம் செய்துகொண்டார்.  இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். தனது 76ஆம் வயதில் கேன்சர் நோயால் இறந்தார்.

சரோ லாமா:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த தூளி கிராமம் பூர்வீகம். அம்மாவின் தாய் ஊரான புரிசை எச்சூரில் தன் பால்யத்தை கழித்தவர். தெருக்கூத்துக்கு பெயர்போன புரிசை கிராமமும் அதன் புஞ்சை நஞ்சை நிலங்களும் சிறு வயதில் கேட்டு, பார்த்து வளர்ந்த மகாபாரத கூத்தும் அது சார்ந்த தொன்மக் கதைகளும் தான், தன்னை கலை இலக்கிய பாதையில் செலுத்தியது என்ற ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. பொறியியல் டிப்ளமோ படிப்பை வேலூரில் முடித்தார். கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத் என பணி நிமித்தம் பல்வேறு ஊர்களில் வசித்த இவர் இப்போது சென்னையில் குடும்பத்துடன் வசிக்கிறார். பாதரசம் பதிப்பகம்  இவரது இன்னொரு அடையாளம். சுயாதீன பதிப்பகமான பாதரசம் மூலம் இதுவரை 22 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.

பகிர்:
Post Tags
Latest comment
  • மூலக் கவிதையைப் படிக்காத போதும் மொழிபெயர்ப்பின் இலகுத் தன்மை என்னை ஈர்க்கிறது. ஆச்சரியம். மூலக் கவிதை தமிழில் எழுதப்பட்டது போன்றதொரு உணர்வு. அருமை.

leave a comment