தி.ஜானகிராமனின் ஜப்பான் பயணக் கட்டுரை


ரு மாதம் கழித்து சாதாரண வீட்டில் நடக்கும் தேநீர் உபசாரத்தையும் பார்த்தோம். மிக மிக சாஸ்திரோக்தமாக, மரபுப்படி நடந்தது அது. வெளியே தோட்டம், இயற்கையை அப்படியே உருவாக்கியிருந்த தோட்டம். மூங்கில் நாணல் புதர்கள் கோணாமாணா வென்று போட்டாற் போலிருந்தது. ஆனால் மிகவும் கவனமாகச் செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து தேநீர் உபசார அறைக்கு ஒரு பாதை போயிற்று. அதன் வழியாக உள்ளே சென்றதும் பாத்திரங்கள் கழுவும் அறை. இந்த உபசார அறையின் நீள, அகலம், மற்ற அளவுகள் இவற்றையெல்லாம் கூட பழைய நூல்களில் எழுதி வைத்திருக்கிறார்களாம். நாலரை பாய் பரப்பு பத்தடி சதுரம் இருக்க வேண்டும். ஐந்துபேர் தான் ஒரு சமயத்தில் உட்காரலாம். இப்படி ஒரு நிபந்தனை பழைய காலத்தில் இருந்திருப்பதாகத் தெரிகிறது. நாங்கள் அப்போது சென்ற வீட்டிலும் இப்படியே அமைத்திருந்தார்கள். நுழைவதற்கு முன்னால் தோட்டத்தில் உள்ள கருங்கல் தொட்டியில் கை கழுவி, முகம் கழுவிவிட்டு உள்ளே போக வேண்டும். உள்ளே போனதும் உபசாரம் முன்பு சொன்னதுபோல் தான் நடந்தது.

            இந்தத் தேநீர் உபசாரம் பல நூற்றாண்டுகளாக ‘ஐப்பானிய வாழ்க்கையில் ஒன்றிவிட்ட மரபு. அன்றாட மரபு. இதைத் தொடங்கி வைத்தவர்கள் “ஸென்” மார்க்க பௌத்தத் துறவிகள் என்று செல்கிறார்கள். இந்த ‘ஸென்’னுக்கும் நம் நாட்டுக்கும், முக்கியமாகத் தமிழ்நாட்டுக்கும் தொடர்பு இருக்கிறது. தியானம் என்ற சொல் தியான் ஆகி, ஸென் என்று ஆகிவிட்டது. தியானம் செய்யும் ரகசிய முறைகளை காச்யபருக்கு கௌதமபுத்தர் போதித்தார் என்பார்கள். குரு-சீடர் முறையில் வழிவழியாக இருபத்தேழு பேருக்கு அவை போதிக்கப்பட்டனவாம். இருபத்தெட்டாவது ஆசிரியர் போதிதர்மர். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். காஞ்சிபுரத்தில் 6ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் சீனத்திற்குச் சென்று தங்கிவிட்டார். சீனத்தில் தியான மார்க்கம் பரவிற்று. எனவே சீனம் சம்பந்தப்பட்ட வரையில் ‘ஸென்’ மார்க்கத்திற்கு ஆதிபிதா போதி தர்மர் தான்.

            ஸென் மார்க்கம் பிற்பாடு ஜப்பானுக்கும் பரவிற்று. அந்த மார்க்கம் ஆத்மீக உணர்வோடு  நின்று விடவில்லை. மக்களின் புற வாழ்க்கையிலும் செயல்படத் தொடங்கிற்று. முக்கியமாக மன்னர்களும் ஆளும் வர்க்கத்தினரும் அதைப் பேண ஆரம்பித்தார்கள். வாழ்க்கையில் எத்தனை முரண்கள் தோன்றினாலும், மனம் கலங்காமல், புன்னகையுடன் சகித்துக் கொள்வது, கடமையைச் செய்வது, தூய்மை, மென்மை, இனிமை இவை அனைத்தையும் பயின்று, வாழ்க்கையை முரணில்லாத, சுருதி சுத்தமான இசைவாக வாழப் பழகும் கலையை பெரியவர்கள் வற்புறுத்தத் தொடங்கினார்கள். இதிலிருந்து புஷிதோ” என்ற மரபும் கிளம்பிற்று.

            புஷிதோவை விளக்கப் பெரிய அத்தியாயமாக எழுத வேண்டும். சுருங்கச் சொன்னால், கடமை வீரம், இனிமை, மென்மை, அழகு, இரக்கம் எல்லாம் இணைந்த ஒரு இனிய கலவையாக வாழ்க்கையை வாழும் விதம் என்று அதைச் சொல்லலாம். ஒரு பெரிய ராணுவப்படை முன்னேறும் வழியில் ஒரு மலர் கிடந்தால், அதை மிதிக்காமல்  காப்பாற்றுவதற்காக தளபதி தன் படையை நிறுத்திவிட வேண்டும். புஷிதோ மரபுக்கு இது ஒரு எடுத்துக் காட்டு. இந்த மாதிரி எத்தனையோ சொல்லலாம். வலிமையும் மென்மையும், கொடுமையும் தயையும், இன்னலும் இன்னகையும் இசைந்து வடிவெடுக்கும் பயிற்சி அது. முரணான இயல்புகளும் பழக்கங்களும் கூட அபஸ்வரமாக, அவலமாக ஒலிக்காமல், சுஸ்வரமாக, இனிய சுருதியாக நூற்றாண்டாக பின்னிப் பின்னி மக்கள் வாழ்க்கையில் கூட இது இழைந்திருப்பதை ஜப்பானில் காண முடிகிறது.

            இந்த இசைவைப் பெறுவதற்குத் தேநீர் உபசாரம் ஒரு பயிற்சி. பல நூற்றாண்டுகளுக்கு முன் இதைத் தோற்றுவித்த பௌத்த பிட்சுகள் போதிதர்மரின் சிலை முன் அமர்ந்து பச்சைத் தேயிலை முழுகிய வெந்நீரை அருந்தினார்களாம். இது ஜப்பானின் தேசீய வழக்கம். ஜப்பானிய மொழியில் இதை சானோயு என்று அழைக்கிறார்கள். “தேயிலை(யின்) வெந்நீர்” என்பது இதன்பொருள். பச்சைத் தேயிலையின் பொடிதான் இதற்குப் பயன்படுகிறது. சர்க்கரை சேர்க்காத வெறும் பச்சைத் தேயிலை வெந்நீர் இது. தேநீர் உபசார அறை சூன்யமாகத்தான் இருக்கும். தேநீர் அருந்தும் பாத்திரம், இருக்கைகள் இவற்றைத் தவிர ஒன்றும் இராது. அதாவது, வறுமை அழகாகத் தோற்றம் அளிக்க வேண்டும். வறுமையிலும் துப்புரவு, இனிமை, மென்மை எல்லாம் சாத்தியம் என்பது தான் அர்த்தம்.

            இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது ஜப்பான் கிழக்கத்திய நாடா, மேற்கிந்திய நாடா என்று சந்தேகம் வந்துவிடுகிறது. புற வாழ்க்கையில் அதாவது, தொழில் நாகரிகத்தில் அது மாபெரும் முன்னேற்றம் கண்டுவிட்டது. “இயந்திரங்களையும் இயந்திரத்தின் மூலம் வரும் பொருட்களையும் எங்களால் இன்னும் உறுதியாகச் செய்ய முடியும்” என்று ஜப்பானியர் காட்டிவிட்டார்கள். மணிக்கு நூற்றைம்பது மையில் வேகத்தில் ரயில் வண்டியை ஓட்டிக்காட்டி வருகிறார்கள். மாபெரும் தொழிற்சாலைகளைக் கட்டி, உலக மார்க்கெட்டின் விலையில் பாதி, முக்கால் விலையில் சாமான்களை விற்றுக் காட்டியிருக்கிறார்கள். ஆனாலும் அதே சமயம் ஜப்பானின் அகவாழ்வு, ஆத்மீக வாழ்வாக மாறிவிட்டது என்று சொல்வதற்கில்லை. பெரும்பாலோர் மேல்நாட்டு உடைதான் உடுத்துகிறார்கள். திரும்பின இடம் எல்லாம் சூட்டும் ப்ராக்கும் தான் காட்சியளிக்கின்றன. ஆண்களும் பெண்களும் கிமோனோ அணிவது பண்டிகைத் திருநாள் கொண்டாடும்போது தான். வயதானவர்கள், போன தலைமுறையைச் சேர்ந்தவர்கள் சிலர் உடுத்துகிறார்கள். அதும் அதிகம் இல்லை.

            ஆனால், ஜப்பானிய வீடுகளின் தோற்றமோ உள்ளமைப்போ, அந்த வீட்டுக்குள் வாழ்பவரின் அடிமனமோ மாறிவிட்டதாகத் தெரியவில்லை. பெண்கள் ஏராளமாகத் தொழிற்சாலைக்கு வேலைக்குப் போவதால் கற்பைப் பற்றிய பழைய கொள்கைகள் கூட மாறியிருக்கலாம். ஆனால் கற்பு, தெய்வபக்தி இவையனைத்தையும் கடந்து ஒரு தேசத்திற்கு ஆத்மா ஒன்றிருக்கிறது. அது தேசத்தின் மண்வாடை, தேசத்தின் உடலில் பிறவியில் தோன்றிய மச்சம். அது லேசில் மறைந்துவிடாது. சகிப்புத் தன்மை, அடக்கம், திருந்தச் செய்தல், அழகுடன் செய்தல், மறையாத புன்னகை இவையெல்லாம் அந்த ஆத்மாவின் சில தோற்றங்கள், ஜப்பானியர் இரண்டாவது உலக யுத்தத்தின் போது பர்மாவிலும் அதை ஒட்டிய நாடுகளிலும் இழைத்த கொடுமைகளைப் பற்றி பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், அது கூட அந்த புஷிதோவின் ஒரு வெளிப்பாடுதானோ என்னவோ!

            “சதா புன்னகையுடன் எப்படி இருக்க முடியும்? உணர்ச்சிகளை எப்படி அடக்குவது? பிற்பாடு எரிமலையாக வெடிக்காதா? அல்லது உள்ளேயே புரையோடிவிடாதா?” என்று மேலை நாடுகளில் இஷ்டப்படி உணர்ச்சிகளைக் கொட்ட, அம்பலத்தில் கூடக் கொட்டிக் காட்டப் பழகிவிட்டார்கள். ஆனால் ஜப்பானில் இது ஒரு இன இயல்பாக நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஜப்பானில் ரத்த அழுத்த வியாதி மிக மிக அரிது என்று ஒருவர் சொன்னார். எந்த நிகழச்சியையும் விலகி நின்று அனுபவிக்கக் கற்றுக் கொண்டிருந்தால் இது சாத்யம். இதற்கு ஸென் மார்க்கம் அஸ்திவாரம் போட்டிருக்கிறது போலும். இதனால்தான் எந்தக் காரியத்தையும் சத்தம் இல்லாமல் அவர்களால் செய்யமுடிகிறது. தொழிற்சாலை கட்டுவது, துக்கத்தை அனுபவிப்பது, உலக யுத்தத்தில் கொடுமை இழைத்தது. அணுகுண்டுகளைக் தாங்கிக் கொண்டது. கிளர்ச்சி செய்வது எல்லாவற்றையும் படாடோபமோ, ரகளையோ இல்லாமல் இதனால் தான் அவர்களால் செய்ய முடிகிறது.

            சமீபத்தில் பாரிஸுக்கு ஏதோ பயிற்சிக்கு சென்றிருந்த ஜப்பானிய நண்பர் ஒருவர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அங்கே தம் அனுபவங்களை விவரித்துவிட்டு ஒரு சிரிப்புச் சிரித்திருந்தார். பாரிஸில் ஆண்களும் பெண்களும் ரயிலிலும் பஸ்ஸிலும் தெருவிலும் சந்திலும், கூட்டத்திலும் கும்பலிலும் இறுகத் தழுவிக் கடும் உணர்ச்சியுடன் முத்தமிட்டுக் கொள்கிறார்கள் என்று அவர் எழுதியிருந்தார். அவர் ஒரு பொருட்காட்சிச் சாலைக்குப் போயிருந்தாராம். போன மாதம், அங்கே பிரஞ்சுப் பேரரசர்களின் உடைவாட்கள் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தனவாம். அவர் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, கீழே பிரெஞ்சுக் காதல்ஜோடி இறுகத் தழுவி முத்தமிட்டுக் கொண்டிருந்ததாம். “வாளையும் கீழே இந்தத்தழுவலையும் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நின்றேன்.” என்று விமர்சனம் எதுவுமில்லாமல் நிறுத்திவிட்டார் நண்பர்.

            ஜப்பானியப் புன்சிரிப்பு உலகப் பிரசித்தி பெற்றது. எல்லாவற்றுக்கும் புன்சிரிப்புச் சிரித்து விடுகிறார்கள். குழந்தை செத்துப் போனால் கூட. எதிராளிக்கு அந்த துக்கச் செய்தியை மூஞ்சியைத் தொங்கப் போட்டுக் கொண்டு சொல்லிக் கலங்கடிக்காமல் புன் சிரிப்போடு கூற வேண்டும் என்ற அளவுக்கு புஷிதோ மரபை வளர்த்தவர்கள் வேறு என்ன செய்வார்கள்? கோபம் வந்தால் புன்சிரிப்பு. ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்ளாவிட்டால் புன்சிரிப்பு. சில சமயம் ஆங்கிலம் தெரிந்த ஜப்பானியர் கூட நாம் சொல்வது புரிந்தாலும் புரியவே புரியாதது போலப் பேதையாகப் புன்சிரிப்புச் சிரித்துக் கொண்டு நிற்பார்கள்” என்று சொன்னார் வங்காளி நண்பர் ஒருவர். ஒரே ஒரு ஜப்பானியரிடம் ஏறக்குறைய அதையே காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

            ஜப்பான் மக்களைப் பற்றிய ஒரு புத்தகத்தில் வாசித்த கதை ஞாபகம் வருகிறது. இந்த ஊரில் அது கிடைக்கும் என்று தோன்றாததால் அதைச் சுருக்கமாகச் சொல்கிறேன். ஒரு பிரபு, அவரிடம் போர்வீர மரபைச் சேர்ந்த ஒரு வேலைக்காரன் சேவகம் செய்து வந்தான். வேலையில் ஏதோ தவறு செய்விட்டான். அவர் கோபித்துக் கொண்டார். அவன் புன்னகையோடு நின்றான். ஒருவாரம் கழித்து அதேமாதிரி இன்னொரு தவறு செய்துவிட்டான். கன்னாபின்னாவென்று திட்டினார் அவர். அவன் பேச்சால் புன்னகை புரிந்து நின்றான். “ஏனடா சிரிக்கிறாய்” என்றார் அவர். அவன் சிரிக்க சிரிக்க அவருக்கு ஆத்திரம் தாங்கவில்லை. கடைசியில் கைநீட்டி அடித்துவிட்டார். கேட்க முடியாத வசவாக ஒரு மூட்டை அவிழ்த்து விட்டார். அந்தச் சுடுசொற்களைக் கேட்டதும் அவனுடைய புன்சிரிப்பு மறைந்தது. ரோசம் மேற்கரித்தது. இடுப்பில் செருகியிருந்த பிச்சுவாவைச் சட்டென உருவி நீட்டிக் காட்டினான். ஒரே குத்தாகக் குத்தியிருக்கலாம். சரேலென்று இழுத்துக் கொண்டான். மறுகணம் அந்த இடத்தைவிட்டு மறைந்துவிட்டான். போனவன் மீண்டும் வேலைக்கு வரவில்லை. பிறகு அவரே விசாரிக்கப் போனபொழுது அவன் தற்கொலை செய்து கொண்டுவிட்டான் என்று தெரிந்தது. கணவன் – மனைவி உறவு ஒரு ஜன்மம். எஜமானன் ஊழியன் உறவு மூன்று ஜன்மமாம். அதனால் அவரைக் கொல்ல அவன் துணியவில்லை. ஆனால் கத்தியையோ ஓங்கியாகிவிட்டது. அதைப் பயனின்றி மடக்கிவிடுவது இழுக்கு.

            நீட்டின கத்திக்குப் பலன் வேண்டும். எனவேதான் தன்னையை கொன்று கொண்டானாம் அவன்.

            இந்தக் கதையை நான் நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். நீங்களும் நினைத்துப் பார்க்கலாம்.

            இந்தப் பூலோக வாழ்க்கையை அழகுணர்ச்சியுடன் மென்மையாக வாழக் கற்பிக்கிறது தேநீர் உபசாரம். அதை மிகுந்த கலையழகுடன் முன் காலத்தில் பலர் பழகி வந்தார்களாம். அவர்களே கலைஞர்கள். எழில்மிக்க உத்யான வனங்களை அவர்கள் நிர்மாணம் செய்தார்கள். மலர் அலங்காரத்திலும் அவர்கள் நிபுணர்கள்.

            இதையெல்லாம் பாக்கும் போது புத்த மதத்தில் விதிக்கப்பட்டுள்ள “ஸதிபத்தானம்” என்ற பயிற்சி ஞாபகம் வருகிறது. தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும் கலை அது. பெரியவித்தை. அடிப்படையான அளவில் சொல்ல வேண்டும் என்றால், எந்தக் காரியத்தையும் உணர்வோடு, நினைவோடு செய்யவேண்டும் என்று அது விதிக்கிறது.

            உட்கார்ந்திருந்தால் உட்கார்ந்திருப்பதாக அடிக்கடி நினைத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்டால் சாப்பிடுவதாக நினைத்துக்கொள்ளுங்கள். நடக்கும்போது, அதில் நினைவு இல்லாமல் நடக்காதீர்கள். நடப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். பேசும்போது, எழுதும் போது, எதைச் செய்தாலும் அதைச் செய்வதான ஞாபகம் இருக்கட்டும். அப்படியே சரீரத்தைக் கடந்து மனத்தையும் அதன் எண்ணங்களையும் எட்ட நின்று பார்க்கச் சொல்கிறது அந்தவிதி. இந்தப் பழக்கம் எல்லையில்லாத திறமைகளையும் சித்திகளையும் கொடுத்து கடைசியில் பேரின்பத்திற்கு நம்மை இழுத்துச் செல்கிறது. பெரிய விடுதலையை இன்பம் நிறைந்த பேரனுபவமாக ஆக்குகிறது என்று வர்ணிக்கிறது இந்த வித்தை. இதை ஜப்பானில் அன்றாட வாழ்க்கையோடு ஓரளவுக்கு இழைத்திருக்கிறார்களோ என்று சொல்லத் தோன்றுகிறது.

            “ஸென்” மார்க்கம் தேநீர் உபசாரத்தைப் பிரபலப்படுத்தியிருப்பதுடன், தேசியப் பழக்கமாகவும் செய்துவிட்டது. மலர் அலங்காரம் கூட பௌத்தர்கள் ஒரு காலத்தில் பிரபலப்படுத்தியதுதான். இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு, ஜப்பானியர் மடிசஞ்சிகள், மத ஆசாரங்களில் முழுகிக் கிடக்கிறவர்கள் என்று நினைத்துவிடக் கூடாது. உண்மையில், மதத்தின் பிடிப்பு அங்கே மிகமிகக் குறைவு என்றுதான் எனக்குப்பட்டது. நம்மைப்போல மதச் சடங்குகளில் ஈடுபடுவது, செலவழிப்பது, விடுமுறை விடுவது இவற்றை அங்கே காண்பது அரிது. தற்பொழுது அவர்களுடைய மதம் உழைப்புதான். எதையும் துப்புரவாகச் செய்வது அழகாகச் செய்வது. ஏனோ தானோ என்று ஒப்பேற்றாமல் முற்றிலும் சரியாகும் வரை, நினைத்த அளவிற்கு இம்மி குறைவின்றிக் கச்சிதமாக ஆகும் வரை பிரயாசையைத் தளர்த்தாமல் செயல்படுவது. மென்மை, அடக்கம், இனிமை – இவையெல்லாம் நிறைந்த வாழ்க்கையே மத வாழ்க்கைதான். நல்ல மனிதனாக வாழத்தான் மதம் நமக்குச் சொல்லிக்கொடுக்கிறது. காலையிலும் மாலையிலும் கோவிலிலும் பூஜை அறையிலும், மட்டும் தான் நல்லவனாகவும் புண்ணியவானாகவும் இருக்க வெண்டும் என்று சொல்லவில்லை. சேரிகளையும் கோவில்களையும், லஞ்சத்தையும் குருபீடங்களையும் சமூக நீதியையும் வகுப்பு வாதத்தையும் பக்கத்தில் பக்கத்தில் எழுப்பிப் பார்க்க வேண்டும் என்று சொல்லவில்லை.

            பார்க்கப் போனால் நம்மைவிட ஜப்பானியருக்கு துயரம், துன்பம் எல்லாம் அதிகம்தான். பூகம்பம், கடல் கொந்தளிப்பு இரண்டும் தண்ணீர் பட்டபாடு. எந்த நிமிஷம் என்ன நேரும் என்று சொல்லமுடியாது. ஆசைகளையும் நம்பிக்கைகளையும் கனவுகளையும் முன்னறிவிப்பின்றி திடீர் என்று பொசுக்கிச் சாம்பலாக்கி இடுப்பொடிக்கும் வேகத்துடன் இயற்கையின் சீற்றங்கள் அங்கு வருகிற வழக்கம். ‘காயமே இது பொய்யடா’ என்று துந்தினம் ஏந்தும் மனப்பாங்கும் நிராசையும் விதிவாதமும் மலிந்து நிற்கக் கூடிய ஒரு அநிச்சயமான சூழ்நிலைதான். ஆனால் இந்த அநிச்சயத்தையே ஒரு தத்துவ பலமாக்கிக் கொண்டு, ‘இருக்கிற வரையில் நன்றாக இருந்துவிட்டுப் போவோம். உழைப்பும், நேர்மையும் இனிமையும் அழகுமாக வாழ்ந்துவிட்டுப் போவோம்’ என்று பாதை அமைத்துக்கொண்டு விட்டது ஜப்பானிய உள்ளம். நாளைக்குத்தான் பூகம்பம் வரப்போகிறதே, எதற்காக இப்படி உழைத்துச் சாக வேண்டும் என்று தூங்காமல், கடைசி பூகம்பம் வந்து போய்விட்டது போன்ற உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

            ஜப்பானில் கோவில்கள் இல்லாமல் இல்லை. ஏராளமாகவே இருக்கின்றன. நாரா என்னும் பழைய தலை நகரத்திற்குப் போய்விட்டால், காசி, காஞ்சி, குடந்தைபோல் இடறிவிழுந்த இடமெல்லாம் கோவிலாக இருக்கும். ஆனால் பெரும் அளவுக்கு அவை காட்சிப் பொருள்களாகத்தான் இருக்கின்றன. மிகப்புராதனமான கோவில்களை தேசியப் பொக்கிஷங்களாகப் பாதுகாக்கும் அளவுக்கு சிரத்தை இருக்கிறது. ஆனால் கோவிலையோ, மதச் சடங்குகளையோ வாழ்க்கையின் அன்றாட அம்சங்களாக யாரும் ஆக்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றவில்லை. புறத்தே நின்று மனத்தையோ செயலையோ சீர்படுத்தாமல் லௌகீகப் போக்குகளையும் முன்னேற்றத்தையும் நகர வொட்டாமல் அழுத்திக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை.

            இதைப்பற்றி நான் சில நண்பர்களைக் கிண்டியது உண்டு. “நீங்கள் என்ன மத்தைச் சேர்ந்தவர்கள்?” என்று கேட்டதற்கு “என் அப்பா பௌத்த மத்தைச் சேர்ந்தவர்” என்று நாலைந்து பேரிடமிருந்து விடை வந்தது. நானும் விடவில்லை. “நீங்கள் என்ன மதம்?” என்று ஒரு நண்பரை வற்புறுத்திக் கேட்டேன். தாம் இன்ன மதம் என்று அவருக்குச் சொல்லத் தெரியவில்லை. “நான் தினமும் பிரார்த்தனை செய்கிறேன். எப்போதாவது தோன்றினால் ஏதாவது ஒரு கோவிலுக்குப் போவேன். அது ஷிண்டோ கோவிலோ, பௌத்தக் கோவிலோ, மாதா கோவிலோ எதுவாயிருந்தாலும் சரி. ஆனால் அப்படிப் போவது குறைச்சல்” என்றார் அந்த நண்பர். பெரும்பாலான ஜப்பானியர் இப்பத்தான் இருப்பார்கள் என்று எனக்கு ஒரு எண்ணம்.

            ஜப்பானின் பழைய மதம் ஷிண்டோ மரபுதான். அந்த மரபு மரம், மலை, நதி, மழை என்று எல்லாவற்றிற்கும் அதிதேவதைகள் உண்டு என்று நம்மிடையே உலவும் ஒரு கொள்கையைப் போன்றது தான். இறந்தவர்களும் அதில் தேவர்களாகி விடுகிறார்கள். அதனால்தான் பழைய சக்கரவர்த்திகளுக்குக் கோவில்கள் கட்டியிருக்கிறார்கள். முன்னோரை வணங்கும் வழக்கத்தை திதிகளிலும் சிராத்தங்களிலும் நாம் இன்னும் கடைப்பிடித்து வருகிறோம். அவர்கள் கோவிலே கட்டிவிட்டார்கள். இந்த ஷிண்டோ கோவில்களில் சில பிரம்மாண்ட அளவு உடையவை. டோக்கியோவில் உள்ள யாஸூகூனி மெய்ஜி கோவில்கள் கலையழகு நிரம்பியவை. இந்தக் கோவில்களில் விக்ரகங்கள், பிம்பங்கள் வைத்த கர்ப்பக் கிருகங்கள் ஏதும் கிடையாது. வெறும் சூன்யமாகத்தான் இருக்கும். காலமாகி தேவனானவரின் ஆத்மா விரவி நிற்கிறது என்பதுதான் பொருள். பௌத்தக் கோவில்களைப் போல இந்தக் கோவில்களும் பெரும்பாலும் மரத்தாலானவைதான். கூரை அமைப்பு மலையாளத்துக் கோவில்களைப் போல இருக்கின்றது.

            ஆனால் ஜப்பானியரின் வர்ண உணர்வு கலையழகும் அமைதியும் நிறைந்தது. நிறங்கள் ஒன்றோடொன்று பொருந்தும் அழகை நன்கு காண வேண்டும் என்றால் ஜப்பானில் எந்த இடத்திலும் காண முடியும். முக்கியமாக, ஷிண்டோ, பௌத்தக் கோவில்கள் இரண்டிலுமே காண முடியும். அதைப் பார்த்த பொழுது, நம்முடைய கோவில் கோபுரங்கள் நினைவுக்கு வந்தன. நம் நாட்டின் பழைய கோவில் கோபுரங்களைப் பார்க்கும்பொழுது, காலத்தின் பாசியும் கறுப்பும் தெரிகின்றன. பிம்பங்களில் அமைப்பழகு நம்மைக் கவர்கிறது. புதிதான ஜீர்னோத்தாரணம் ஆகி, சம்ப்ரோஷண, கும்பாபிஷேகங்கள் செய்யப்பட்ட கோவில்களின் கோபுரங்களைப் பார்க்கும் போதுதான் வேதனையாக இருக்கிறது. வர்ண ரகளை நம் கண்ணை உறுத்துகிறது. வெள்ளைச் சுதையாக இருந்துவிடக் கூடாதா என்று தோன்றுகிறது. வர்ணம் கொடுப்பது ஒருகால் ஆகம் அவசியமாக இருந்தால் கூட. கலைஞர்கள் ஏன் வர்ணப் பொருத்தத்தைச் சரியாகச் செய்வதில்லை? வாழ்க்கையில் காண்கிற புடவைகளையும், நகைகளையும் அப்படியே காட்டிவிட வேண்டும் என்ற ஆசையால், தாறுமாறாக வர்ணங்களை அப்பிவிடுகிறார்கள். கோபுரத்தின் மீது பார்க்கும்போது அது கலைத்தன்மையை இழந்து, இடைக்கால நாடகப் படுதாக்களைவிட மோசமாகிவிடுகிறது. நம் நாட்டில் அடிப்படை நிறங்களின் மீது மோகம் அதிகம். ஓவியங்களிலும் இந்த மோகம் உண்டு. ஆனால் வர்ணங்களைப் பொருத்துகிற அமைப்பில் ஒரு அமைதியையும் கலைத் தன்மையையும் கொண்டு வர முடியும். உணர்வற்றவர்களின் கையில் சிக்கும் பொழுது வர்ண பட்சணங்கள் அடுக்கிவைத்த மிட்டாய்க் கடையாக கோபுரங்கள் காட்சியளிக்கின்றன.

            ஜப்பானில் பொதுவாகப் பெரிய கோவில்கள் எல்லாம் செர்ரி, பைன் போன்ற மரங்கள் சூழ்ந்து அமைதியாகக் காட்சியளிக்கின்றன. தோட்டத்தில் ஒரு பெரிய கருங்கல் தொட்டியில் நீர் நிறைத்து வைத்திருக்கிறது. நீளமான அகப்பைகள் வைத்திருக்கிறார்கள்; அழகான அகப்பைகள். ஒன்றை எடுத்து நீரை மொண்டு கை கழுவி விட்டு கோவில் வாசலை நெருங்குகிறார்கள். படியேறி, கம்பி போட்ட பெட்டியில் காணிக்கையை எறிகிறார்கள். சண்டிகேசர் சந்நிதியில் கொட்டுவதுபோல இரண்டு மூன்று முறை கையைக் கொட்டிய பிறகு, கண்மூடி தியானித்துவிட்டுத் திரும்புகிறார்கள்.

            ஒரு ஞாயிற்றுக் கிழமை டோக்கியோவில் குதான் என்ற பகுதியில் உள்ள யாஸூகூனி கோவிலுக்குச் சென்றேன். அன்று ஒரே கூட்டம். நூற்றுக்கணக்கான ஜப்பானியப் பெணக்கள் அன்று கிமோனோ அணிந்து வந்திருந்தார்கள். கோவிலில் ஓரத்தில் கரைஸாந்திமம் மலர்ச்செடிகளும் மலர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. வெள்ளை, ரோஜா, சிவப்பு, நீலம் இந்த வர்ணங்களை எப்படியெல்லாம் குழைத்து இழைக்க முடியுமோ, அத்தனை நிற பேதங்களையும் அன்று காண முடிந்தது. அத்தனை பெண்களும் அந்த மலர்களைப் பார்த்துக் கொண்டு மணிக்கணக்கில் நின்று கொண்டிருந்தார்கள். மனித மலர்களும் செடி மலர்களும் பரஸ்பரம் பார்த்து மயங்கி நின்ற அக்காட்சியை மறக்கவே முடியவில்லை. ஜப்பானியர் மலர்களைத் தலையில் சூடுவதில்லை. அறைக்குள் அழகாக வைத்துப் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்.

            அன்று கூட்டம் கூட்டமாகப் பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் கிமோனோதான் அணிந்திருந்தனர். ஜப்பானியர் எல்லோருமே வெள்ளை நிறம்தான். லேசாக மஞ்சள் எட்டிப் பார்க்கும் வெள்ளை. எல்லோருமே தலைமுடி கன்னங்கரேலென்றிருக்கும். அந்தக் கறுப்பு, வெள்ளை மேனி, வர்ணப் பொருத்தம் நிறைந்த, பூப்போட்ட கிமோனோக்கள், க்ரைஸாந்திமம் மலர்கள், கோவிலில் வர்ணப் பாகுபாடு, செர்ரி மரங்களின் செம்மஞ்சள் இலைகள் – எல்லாவற்றையும் ஒருங்கே பார்த்த பொழுது “ஞானரத” த்தின் கந்தர்வலோகம் நினைவுக்கு வந்தது. கலை உணர்வும் தூய்மையும், மரமாகவும், மலராகவும், பெண்ணாகவும், வர்ணமாகவும், கோவிலாகவும் வெவ்வேறு உருவங்களெடுத்து வந்தாற் போலிருந்தன.

            இத்தனைக்கும் நடுவில், தலைமயிர் எப்படி இவ்வளவு கறுப்பாக இருக்கிறது என்று நான் வியந்து கொண்டிருந்தேன். என் தலையில் நரை கூடிக் கொண்டிருந்ததும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஜப்பானியரிடையே நரை மயிரைக் காண்பது அரிது. மிகமிக முதியவர்களிடம்தான் காண முடியும். அத்தனை கறுப்பு மயிருக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நம் ஊர்க்காரர் ஒருவர், “ஜப்பானியர் கடல்பாசி, தாவரங்களைத் தின்னும் வழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். கடல்பாசி, தாவரங்களில் புரதம் அதிகம். நரையையும் தக்கிறது” என்று சொன்னார். எனக்கு விஞ்ஞானம் தெரியாது. இதைப்பற்றி அபிப்பிராயம் சொல்லத் தெரியவில்லை.

            “நீங்கள் தலைக்குக் கறுப்புச் சாயம் போட்டுக் கொள்வதுண்டோ?” என்று நண்பர் ஹிரோஷியைக் கேட்டேன்.

          “எதற்காக?” என்றார்.

           “உங்களுக்கெல்லாம் மயிர் இத்தனை கறுப்பாக இருக்கிறதே?”

           “அது அதன் சுபாவம். நாங்கள் என்ன செய்வோம்?”

மயிர் கறுப்பாக மட்டும் இல்லை; நல்ல அடர்த்தியாகவும் இருக்கிறது. அடாங்காப்பிடாரியாக, முள் முள்ளாகப் பலபேர் தலையில் படியாமல் முரண்டு பிடிக்கிறது.

மெய்ஜீ கோவிலுக்கு ஒருநாள் போனோம். அன்று நவம்பர் பதினைந்தாம் தேதி என்று நினைக்கிறேன். நவம்பர் 14-ஆம் நாளை நாம் இங்கு “குழந்தைகள் தின” மாகக் கொண்டாடுகிறோம். பதினைந்தாம் தேதியை அவர்கள் கொண்டாடுகிறார்கள். வெகுகாலமாக நடந்து வருகிற கொண்டாட்டம் அது. “ஷிசிகோஸான்” என்று பெயராம் அதற்கு. அதாவது, “7-5-3 பண்டிகை” என்று சொல்லலாம். பெற்றோர் தங்களுடைய ஏழுவயது, ஐந்து வயது, மூன்று வயதுக் குழந்தைகளுக்கு அழகிய வர்ணக் கிமோனோக்களை அணிவித்து அவர்களை ஆங்காங்கு உள்ள கோவில்களுக்கு அழைத்து வருகிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு நீண்ட ஆயுளும் அதிர்ஷ்டமும் அருளுமாறு முன்னோரின் ஆசிகளையும் மற்ற கடவுள்களையும் வேண்டுகிறார்கள்.

            இரண்டு நிமிஷங்களுக்கு செல்லும் சுரங்க ரயில்வண்டிகள், ட்ராம், பஸ், மேலே செல்லும் ரயில்கள் எல்லாவற்றிலும் அன்று நிற்கக் கூட இடமில்லை. நிற்க முடியாமல், பிடித்துக் கொள்ள முடியாமல், நசுங்கிக் கொண்டே, யாரென்று பார்க்காமல் தோள், தலை என்று கைக்கு வந்ததைப் பற்றிக் கொண்டே ரயிலில் சென்றோம். ஜப்பானில் ரயிலின் சராசரி வேகமே அதிகம். அதனால் அந்த வாதை நீடிக்காமல் சீக்கிரமே முடிந்துவிட்டது. அத்தனை கூட்டத்திலும் ஆபத்து ஒன்றும் ஏற்படவில்லை. ரயில் கதவுகள் நகர்ந்து மூடித் திறப்பவை; வெளியிலோ உள்ளுக்குள்ளேயோ திறக்காது. ரயில் புறப்படும் சமயத்திற்குத் தாமாக மூடிக் கொண்டு விடும். அதனால் படியிலும் நிலையிலும் உட்கார்ந்து யாரும் பிரயாணம் செய்ய முடியாது. அதேபோல பஸ்ஸிலும், ட்ராமிலும் கதவை மூடிவிடுகிறார்கள். நின்ற இடத்தில் திறப்பார்கள். மூடிவிட்டுத்தான் புறப்படுகிறார்கள்.

            நவம்பர் மாதம் அங்கு நல்ல குளிர். லேசாக வெயில் இருந்தது. ஆனால் உடம்பில் உறைக்கவில்லை. எனவே குழந்தைகள் சிரமம் இல்லாமல் வெயிலில் நடந்து உலவித் துள்ளிக் கொண்டிருந்தன. ஆனால் பெரும்பாலான குழந்தைகளால் துள்ள முடியவில்லை. கிமோனோ ஆடைகளைக் குனிந்து குனிந்து பார்த்துக் கொண்டே வந்தன. பல குழந்தைகளுக்கு லேசான மரத்தில் செய்து அழகுபடுத்திய காலணிகளைப் போட்டிருந்தார்கள். அந்த மரச் செருப்பு சற்று உயரம். எனவே வேகமாக ஓடியாட முடியாது. தேய்த்துத் தேய்த்துத்தான் நடக்க வேண்டும். தேய்க்கிற சரசரப்புக் கேட்கமால் அடியில் ரப்பரோ, துணியோ கொடுத்திருந்தது.

            டோக்கியோ எங்கும் அன்று ஒரே குழந்தை மயமாக இருந்தது. லட்சக்கணக்கில் குழந்தைகளைக் காண முடிந்தது. அநேகமாக அந்த எல்லாக் குழந்தைகளுக்கும் ஆண், பெண் அனைத்திற்கும் தேசிய உடையான கிமோனோவே அணிவித்திருந்தார்கள். திருநாளானதால் தாய்மாரும் தந்தைகள் பலரும் கிமோனோவே அணிந்து வந்திருந்தார்கள். ஜப்பான் ஆடைத்தொழிலுக்குப் பெயர்பெற்றது. பட்டு நெசவின் திறமை அத்தனையும் அன்று உலா வந்து கொண்டிருந்தது.

            மெய்ஜிக் தோட்டத்தில் அன்று ஒரு நாலாயிரம், ஐயாயிரம் காமிராக்களைப் பார்த்திருப்பேன். பையன்கள் கையில் காமிரா; பெண்கள் கையில் காமிரா. தந்தைகள் கையில், தாய்மார்கள் கையில் எங்கும் காமிராக்களே. காமிராக்களின் காட்சியோ, குழந்தைக் காட்சியோ, கிமோனோக் காட்சியோ, பட்டு நெசவுக் காட்சியோ என்று கண்டு பிடிக்க முடியவில்லை. ஜப்பானில் போட்டோ பிடிக்கும் கலையும் காமிரா செய்யும் தொழிலும் அப்படி முன்னேறியிருக்கின்றன. காமிராத் தொழிலில் அது உலகில் முதல் இடம் பிடித்துக் கொண்டு விட்டது என்று சொல்கிறார்கள். மிக நேர்த்தியான, மிக உயர்ந்தரகக் காமிராக்களை, வழக்கம் போல உலக மார்க்கெட்டின் விலையில் பாதி, முக்கால் கொடுத்து வாங்கிவிடலாம். அதனால் தான் போட்டோ பிடிக்கிற ஆர்வமும் அங்கு ஒரேயடியாகத் தொற்றுக் கொண்டிருக்கிறது. ஏழை, பணக்காரன் என்றில்லை. அனைவருக்கும் அவரவர் நிலைக்கு ஏற்ற ஒரு நல்ல காமிரா கிடைத்துவிடுகிறது.

            அதேபோல பிலிம் தொழிலும் பெரிய அளவில் பெருகியிருக்கிறது. 3,6 படங்கள் எடுக்கக் கூடிய 35 மிலி மீட்டர் பிலிம் சுருள் சாதாரண இரண்டரை ரூபாய்க்கு அங்கே கிடைக்கிறது. கூட்டுறவுக் கடைகளில் அதையே இரண்டு ரூபாய், ஒன்றே முக்கால் ரூபாய்க்கு வாங்கிவிட முடியும். இவை யாவும் தரத்திலும் உயர்ந்தவை. ஜெர்மன், அமெரிக்கச் சரக்குகளுக்கு ஈடானவை. ஆனால் விலை குறைந்தவை. அதுவும் வெளிநாட்டுக்காரர்களைக் கண்டுவிட்டால் இந்தக் குறைந்த விலையிலும் கால்பகுதி தள்ளிக் கொடுத்து விடுகிறார்கள். தம் தேசத்துச் சரக்குகளின் நயம், நேர்த்தி எல்லாம் உலகிற்குத் தெரியட்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கிறார்கள். அதனால் தான் ஜப்பானுக்குச் செல்லும் வெளிநாட்டவர்கள் காமிரா வாங்காமல் அந்த நாட்டை விட்டுக் கிளம்புவதில்லை.

            ஜப்பானில் நவம்பர் 15 நல்ல குளிரான நாள். தமிழ் நாட்டிலும், பொதுவாகத் தென்னாட்டிலும் அப்பொழுது தான் ‘குளிர்காலம் என்ற காலம் வரப்போகிறேன்’ என்று தூரத்தில் தலைகாட்டுகிற தருணம். அந்தச் சமயம் இங்கு மழை அல்லது சுமார் வெயிலாக இருக்கும். நம்நாட்டில் குழந்தைகளைப் பதினாயிரக்கணக்கில் எங்கோ ஒரு மைதானத்தில் கூடச் சொல்லி நல்ல வெயிலில் இரண்டு மூன்று மணி நேரம் நிறுத்தி வைப்பதைப் பார்க்கும் பொழுது கண்ணராவியாக இருக்கிறது. யாரோ பெரிய மனிதர் வரப்போகிறாராம். என்னமோ சொல்லப் போகிறாராம்! குழந்தைகளிடம் அன்பு பூண்ட பெருமானாக அவர் இருக்கலாம். அதற்காக ஒரு பதினாயிரம் பள்ளிக்கூடத்துக் குழந்தைகள் உடுப்பும் கொசகொசப்புமாக வெயிலில் நின்று ஏன் வேர்த்து உருக வேண்டும் என்று தெரியவில்லை. பெரிய மனிதர் வர நாழியாகிறது. அவருக்கு எத்தனையோ வேலைகள். அவர் வர நேரமானாலும் அவர் வருவதற்கு மூன்று மணி முன்பேயே அத்தனை குழந்தைகளும் கூடியாகவேண்டும். பல பள்ளிகளிலிருந்து அவர்களை ஓட்டிவரும் ஆசிரியர்மார் இன்னும் முன்பு புறப்பட வேண்டும். இப்படி மணிக்கணக்கில் குழந்தைகளை ஏன் நிற்க வைக்க வேண்டும் என்று புரியவில்லை. சில குழந்தைகள், மயங்கி விழுவதும் பித்தக் கிறுகிறுப்பால் குமட்டித் துப்புவதும் சாதாரணக்காட்சி. சாயங்காலம் அல்லது முன் காலையில் இந்தக் கொண்டாட்டத்தை வைத்துக் கொண்டு குழந்தைகளை வதக்காமல் இருக்கக் கூடாதா என்று தான் நமக்குத் தோன்றுகிறது! ஏதோ ஞாபகம் வந்தது சொன்னேன்.

            பொதுவாகக் குழந்தைகளுக்கு ஜப்பானில் சலுகை அதிகம். மலர்களைப் போல, குழந்தைகளைப் பேணுவதிலும் எல்லையில்லாத ஆர்வம் காட்டுகிறார்கள். அங்கு இது ஒரு அதிசயமோ என்று கேட்கலாம். குழந்தைகளை யார்தான் விரும்பமாட்டார்கள்? கொண்டாட மாட்டார்கள்? ஆனால் உலகத்தில் சில மக்கள் குழந்தைகளை அதிக அளவில் கொண்டாடுகிறார்கள் என்று தோன்றுகிறது. இந்தியாவில் பஞ்சாபிகளை இந்த வகையில் சேர்க்கலாம். ஜப்பானிலும் இந்தக் குழந்தைப் பிரியத்தைக் காண்கிறோம். நவராத்திரி போன்ற கொலுத் திருநாள். ஆண் குழந்தைகளுக்கான திருநாள் எல்லாம் அங்கு உண்டு. ஆனால் நாங்கள் போனது அக்டோபர், நவம்பர், டிசம்பரில். எனவே அவற்றைக் காண முடியவில்லை. ஆயினும் பண்டிகை நாட்களில் மட்டுமன்றி எப்பொழுதுமே குழந்தைகளுக்கு அதிகச் செல்லமும் சலுகையும் உண்டு என்று தோன்றிற்று. “இத்தனைக்கும் சேர்த்து பள்ளிக்கூடத்து இறுதி வருஷத்தில் பிழிந்தெடுத்துவிடுவார்கள். பள்ளிக்கூடத்து இறுதிப் பரிட்சையில் தேர்வது மிகவும் கடினம். பாடங்கள், பரிட்சைகள் – எல்லாமே கடினமாகத்தான் இருக்கும்” என்றார் நண்பர் ஒகஹானா.

            நானும் ஒரு ஏழெட்டுக் குழந்தைகளைச் சிநேகம் பிடித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் இருந்த இடம் டோக்கியோவின் மையத்திலிருந்து பதினைந்து மைல் அப்பாலுள்ள ஒதுக்கமான இடம். கிராமம் மாதிரி இருக்கும். எங்கள் விடுதியின் மாடியில் என் அறையிலிருந்து பார்த்தால் ஒரே வயலாகக் காட்சியளிக்கும். விடுதிக் காம்பவுண்டை ஒட்டினாற் போலச் சில வீடுகள். பிறகு வயல்கள். பத்து வயல்களுக்கு அப்பால் மீண்டும் சில வீடுகள் வரிசையாகத் தெரியும். சிலசமயம் தெருக்குழந்தைகள் அங்கே வந்து விளையாடிக் கொண்டிருக்கும். பக்கத்திலேயே கடை ஒன்று இருந்தது. அங்கு காய்கறி, மீன், ஆரஞ்சு, ஆப்பிள், வேர்க்கடலை, சாக்கலேட், எல்லாம் கிடைக்கும். பெரிய ஆப்பிள் பழம் நாலணா, ஐந்தணாத்தான். ஒரு நாலு பழங்களும், வேறு தின்பண்டங்களும் வாங்கி அந்தக் குழந்தைகளிடம் கொடுத்தேன்.

            “தோமோ, அரிஙாதோ கொஸாய்மாஸ்” என்றான் கொஞ்சம் பெரிய பையன். ரெம்ப நன்றி என்று அர்த்தம். சொல்லிவிட்டு மற்ற குழந்தைகளையும் சொல்லத் தூண்டினான் அவன். எல்லாம் நாலு ஐந்து வயதுக் குழந்தைகள்.

           “அரிஙாதோ கொச்சாய் மச்சு” என்றது ஒரு குழந்தை.

            “தோமோ” என்றது இன்னொன்று

           “தோமோ”

           “தோமோ”

            ஒரு பயல் மட்டும், “தாங்ஸ்” என்று இங்கிலிஷில் சொன்னான். “அமெரிக்கா ஜின்?” என்று கேட்டான்.

          “ஈயே. இந்தோ ஜின்!” (இல்லை – இந்தியன்)

          “இந்தோ ஜின்!” என்று வியப்புடன் சற்றுப் பார்த்தான்.

           “ஹை” (ஆமாம்)

           உடனே ஓடிவிட்டான் அந்தப் பயல். கூட ஓடினவர்களிடம் திரும்பி என்னவோ சொன்னான். அந்தக் குழந்தைகள் அப்படியே நின்றுவிட்டன. ஒரு நிமிஷத்தில் திரும்பி வந்துவிட்டான். கையில் என்னவோ கொண்டு வந்தான். அருகே வந்தான். பிரித்தான். அது தேசப்படங்கள் அடங்கிய வர்ணப்புத்தகம். புரட்டி, ஆசியா கண்டத்துப் படத்தை எடுத்தான். இந்தியாவைக் காட்டினான்.

          “ஹை” என்றேன்.

           வேறு என்னவோ கேட்டான். புரியவில்லை. விடுதி மானேஜரை ஓடிப்போய் அழைத்து வந்தேன். அவர் விசாரித்துவிட்டு, “உங்களுக்கு இந்தியாவில் எந்த ஊர் என்று கேட்கிறான்” என்றார்.

           “மெட்ராஸ்” என்று இடத்தைச் சுட்டிக் காட்டினேன்.

            “மெட்ராஸ் – மெட்ராஸ் – ஜின்”.

             “இந்தோ ஜின் – மெட்ராஸ் ஜின்” என்று எல்லோரும் ஒருமுறை கூறிவிட்டுச் சிரித்தார்கள்.

                மறுநாள் காலையிலிருந்து நான் வேலைக்குப்போகும் சமயம் பார்த்து வெளியே காத்திருப்பார்கள். அந்த ஏழெட்டுக் குழந்தைகளும். “ஓஹாயா கொஸாய்மஸ்” (நல்ல நாளாக இருக்கட்டும் என்ற பொருள்) என்று ஒரு மூன்று வயது குழந்தை கையைத் தூக்கும். தொடர்ந்து எல்லாம் அதையே கத்தும். தேசப்படப் பையன் மட்டும் “ஹர்ரோ, ஹர்ரோ, குட்மானிங்” என்பான். நாலைந்து நாள் வரை ஹர்ரோ என்றால் என்னவென்று புரியவில்லை. பிறகுதான் அவர் சொல்வது ஹல்லோ என்று தெரிந்தது. ஜப்பான் மொழியில் “ல” என்ற ஒலி கிடையாது. அதற்குப் பதிலாக “ர” என்று சொல்வார்கள் என்று ஒருவர் சொன்னார். விளக்கியவர் ஒரு வங்காளி! இதை ஒரு ஜப்பானியரிடம் சொல்லி, சரிதானா என்று கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். மறந்தே போய்விட்டது. அவர் சொன்னது சரி என்று தான் தோன்றுகிறது. யாமாதே ரைன் என்று வரைபடத்தில் ஒரு ரயில் பாதையை ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. பிறகுதான் யாமாதே லைன் அது என்று புரிந்தது. இதைப்போல அரிகாதோ (நன்றி) என்று இங்கிலீஷில் எழுதுகிறார்கள். அரிஙாதோ என்று சொல்கிறார்கள். இஸ{ஙோசி மாற்றிச் சொல்லிக் கொண்டே ஒரு பெயர்ச் சீட்டைக் கொடுத்தார். அதே போல ஸ{வில் முடியும் சில வார்த்தைகள் எழுதப்படுகின்றன. ஆனால் குற்றியலுகரமாகத்தான் உச்சிரிக்கிறார்கள்.

            அன்று காலை பழங்களை வாங்கிக் கொண்டு போன குழந்தைகளில் ஒன்று மாலையில் ஒரு பெரிய ஆளுடன் விடுதியின் வாசலில் வந்து நின்றது. நான் தற்செயலாகக் கீழே இறங்கி வந்தேன். குழந்தை என்னை நோக்கிக் கையைக் காண்பித்தான். உடனே அவர் வந்தார். “ஆப்பிள் ஆப்பிள்” என்று கையைக் காண்பித்தார்.

            “என்ன?”

            “ஆப்பிள் – மானிங்” என்று ஜாடை செய்தார்.

             நல்லவேளையாக ஹிரோஷி அங்கே ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார். “நீங்கள் காலையில் இந்த குழந்தைக்கு ஆப்பிள் கொடுத்தீர்களாமே? அதற்காக உங்களுக்கு நன்றி கூற வந்திருக்கிறார். பையனுடைய தாயும் உங்களுக்கு நன்றி கூறச் சொன்னாளாம். நீங்கள் வருவீர்கள் என்றுதான் இங்கு காத்துக் கொண்டிருந்தோம்.”

             எனக்கு நான் பிறந்த வளர்ந்த ஜில்லாவின் ஞாபகம் வந்தது. வயிற்றைக் கிழித்துக் காட்டினாலும் செப்பிடுவித்தை என்று சொல்கிற ஜில்லா அது.

            ஹிரோஷியின் உதவியுடன் அவரோடு சிறிதுநோரம் பேசிக் கொண்டிருந்தேன். “ஜீதார்த்தா பிறந்தது இந்தியாவில் தான். அங்கேயிருந்ததுதான் இவரும் வந்திருக்கிறார்” என்று அவரிடம் சொன்னதாகச் சொன்னார் ஹிரோஷி.


– தி.ஜானகிராமன்

[mkdf_highlight background_color=”black” color=”yellow”]குறிப்பு[/mkdf_highlight] தி.ஜானகிராமனின்  “உதய சூரியன்”  – ஜப்பானிய பயணக் கட்டுரைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்ட இந்த கட்டுரை கனலி-யின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழுக்காக  தட்டச்சு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

2 COMMENTS

  1. ஜப்பானியர்களின் வாழ்வியலை பேசுகின்ற அருமையான கட்டுரை. சிறப்பான முறையில் வழங்கியதற்கு நன்றி!

  2. சிறப்பான கட்டுரையின் தகவல்கள் பொருந்திய ஒரு பகுதி …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.