பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்

1.) கெடாவெட்டுதல்

இந்த வருடம் அவ்வீட்டில் நிச்சயமாய் ஒரு உயிர் போகுமென்கிறது

ஒப்புக்கொடுக்காமல் நிற்கும் கிடா.

முதியவருக்கோ இன்னும் கொஞ்சநாள் இருக்கலாமெனத் தோன்றுகிறது

ஒருவேளை அது குறிப்பது 

என்னைத்தானோ என பயத்திலொரு உதைவிட்டது

வயிற்றிலிருக்கும் சிசு

ச்சே… ச்சே…

நாம் வளர்த்த ஆடு அவ்வளவு மோசமில்லை

முதியவரே நீங்கள்தான் விட்டுக்கொடுக்க வேண்டும்

 

இல்லை 

அதற்கும் அவசியமில்லை என்பதுபோல்

ஒரு நீண்ட அடைமழை திடீரெனக் கையளவு குறுகி

ஆட்டின் முகத்தில் பெய்தபோது 

அது உண்மையில் சற்று அதிர்ந்துதான் போனது

உலுக்கியதும்தான் தாமதம்

இறந்துபோன முதியவருக்கு அப்போதுதான் உயிர்வந்தது

 

உயிரில்லை என்ற தைரியத்தில் 

அதன்வாலில் கைவைத்தால் கோபப்படுமென்று தெரிந்தே 

வந்தமரும் ஈயை 

இப்போது காற்றா விரட்டுகிறது 

யாரையோ ஏமாற்றிய பாவனையில் 

ஆடு முறுவலிப்பதைப் பார்த்துமா புரியவில்லை.


2.) பரமபதம் 

 

1.

அவள் உடலை புற்றென நினைத்துக்கொண்ட நாகமொன்று 

தஞ்சமடையவேண்டி வலம்வருகிறது 

பரமபத பலகையின் மூளை(லை)யிலிருந்து 

அங்கப்பிரதட்சிணை செய்துவரும் சிந்தனைகள் பல

இடரும் பாம்புகளால் மாண்டுபோகின்றன 

அவள் உருட்டி

தன் முலைகளில் விழுந்த இருபகடையிலும்

தாயங்களே கிடைத்தும்கூட 

வலுக்கட்டாயமாகக் கீழிறக்கப்பட்டாள்

 

2.

விளையாட்டுத்தனமாய் புற்றைத் தலைகீழாக்கி

கணவன் கண்டறிய இயலாதபடி

இடுக்கில் மறைத்துக்கொள்ள,

அவள் முதுகெலும்பை ருத்ராட்சை மாலையென

தயங்கித் தயங்கி ஜெபிக்கிறது

நிறைப்பதற்கு பெய்த மழைத்துளிகள்

 

3.

திருமணமான சிலநாட்களிலேயே 

அவள் நெற்றியிலிடும் திலகத்தை 

கிரகணமென்று நினைத்த பாம்பு 

ஓர் உச்சிப்பொழுதில் அதை விழுங்கிக்கொண்டது

விதவையானவளுக்கு இனி பரமபதம் எதற்கென்று

பலகையைப் பிடுங்கிக்கொள்ள,

காரணமான சர்ப்பத்தை கோபத்தில்

இரண்டு துண்டுகளாக்கி வீசியெறிந்தனர்

துண்டங்களை எடுத்துக் 

கண்ணோடு ஒற்றிக்கொண்டவள்  

பின் அதையே புருவங்களாக்கினாள்

 

4.

தனித்தனியே கிடக்கும் அத்துண்டு உடல்களில்

இன்னும் உயிருள்ளதாக பாவித்து

வேண்டுமென்றே வீட்டார் கண்படும்படி 

நெற்றிநிறைய திலகமிட்டுக்கொண்டாள்

அவ்வளவுதான்

அன்றிலிருந்து அவள் லேசாக நெற்றியைச் சுருக்கினால்போதும்

இரு சர்ப்பங்களும் முந்திக்கொண்டுவரும்.


-பெரு விஷ்ணுகுமார்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.