புல்நுனிப் பனித்துளியில் பிரபஞ்சம்

 

                “ முதலில் வாழ்வதற்காக எழுதத் தொடங்குகிற நாம் நாளடைவில்

              சாகாமல் இருப்பதற்காக எழுதுகிறோம் என்பதாக முடிந்து போகிறோம்.”

                                                                    – கார்லோஸ் புயந்தஸ் , மெக்சிகன் நாவலாசிரியர்.

 

பிறப்பு , இறப்பு ஆகிய இரண்டுக்குமிடையேதான் கலைஞனின் உன்னதமான சுயம் உயிர்த் துடிப்போடு வாழ்கிறது. இந்த சுயத்தைத் தேடிக் கண்டுபிடித்து அதனைத் தனது கலையால்அது எழுத்தாகவோ, ஓவியமாகவோ, இசையாகவோ சினிமாவாகவோ எதுவாகவும் இருக்கலாம்கௌரவிப்பதற்காகவே கலைஞன் தனது மொத்த நிகழ்காலத்தையும் செலவிடுகிறான்.

 அவனது சுயத்தை அழித்து அவனுடைய விமானத்தை வேறு எங்கோ கடத்திச் செல்வதற்கு அவனது பெற்றோர், ஆசிரியர்கள், குடும்பம், படிக்கும் புத்தகங்கள்நட்பு,  தொழில், சாதி, காதலிகள், மதம் , கல்வி , பிடித்தமான கட்சி ,  ஊர் என்று அனைத்துமே சூழ்ந்து நின்று சூழ்ச்சி பல செய்வதை ஒரு எழுத்தாளன் என்ற வகையில் என்னால் உணர முடிகிறது.

எனக்கு வெளியே இருக்கும் கடல் என்னை வேறு எங்கோ அடித்துச் செல்கையில்என்னைக் காப்பாற்றுஎன்று தீனமாகக் குரல் எழுப்பும் எனது சுயத்தைக் காப்பாற்ற எனக்குக் கிடைத்த ஒரு சின்னஞ்சிறு மோட்டார் படகுதான் எனது எழுத்து என்று இன்று உணர்கிறேன். அலையெற்றிச் சீறும்போதெல்லாம் கவிழ்ந்து விடுகிற அந்த படகை விடாமல் கட்டிப் பிடித்தவாறு நான் பயணம் செய்வதே என் வாழ்வின் குறிக்கோள் என உணர்கிறேன். 

இன்பமென்ற மலரும்அருகே

துன்பமென்ற முள்ளும்

கண் பறிக்கும் ஒளியும்உண்மைக்

கதி மயக்கும் இருளும்

மன்பதையில் ஒன்றாய்  – வைத்த

மாயமென்ன தாயே ? “

  என்று எனது 17 வயதில் நான் எழுதிய வரிகளுக்கு இந்த 70 வயதிலும் எனக்கு விடை கிடைக்கவில்லை.

இப்போதுதான் எனக்குப் புரிகிறது நிஜமான கலைப்படைப்பு என்பது எல்லாவற்றையும் பேசி விட ஆசைப்படாது என்று.  ( இதனை இக்கட்டுரையின் பிற்பகுதியில் நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய புனைகதையாளர் யசுனரி கவபட்டாவின் ஒரு படைப்பை வைத்து விளக்குகிறேன்.)

சள்ளைப் படுத்தும் இந்த வாழ்க்கையில் மௌனமாகத் தலைகுனிந்து நிற்க முடியாது என்பதற்காகவே நாம் எழுதுகிறோம். மரணமிலா பெருவாழ்வு என்பது வள்ளலார் மட்டுமில்லாது தீவிரமாக இயங்குகிற ஒவ்வொரு கலைஞனும் காணும் கனவுதான். தனது 83வது வயதில் இறந்து போன லத்தீன் அமரிக்க நாவலாசிரியர் புயண்டஸ் தான் இறந்து போன அன்றுகூட செய்தித்தாள் ஒன்றில் அவரது கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டு இருந்த அளவுக்கு தனது கடைசி காலம் வரை எழுதிக் கொண்டே இருந்தார்.

எழுத்து என்பது ஒரு போராட்டம்.அதற்காக நாம் பல சவால்களை எதிர் கொள்கிறோம். பல அபாயங்களைக் கடக்கிறோம். எழுத்தாளன் தான் வாழும் காலத்தை மீறி என்றும் நிலைத்து நிற்கக்கூடிய சிந்தனையில் தன்னை மூழ்கடித்துக் கொள்கிறான்.

இதை இன்னொரு விதமாகச் சொல்ல வேண்டுமானால் எழுத்தாளன் தான் வாழும் காலத்தை மீறி பிரபஞ்சத்தின் காலத்தில் வாழத் தொடங்குகிறான். ”அது என்ன பிரபஞ்சத்தின் காலம்?”  நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. இதற்கு ஜப்பானிய எழுத்தாளர் யசுனரி கவபட்டா பதில் சொல்கிறார்.:

 பிரபஞ்சத்தின் காலமும் மனிதனின் காலமும் வேறு வேறானவை. பிரபஞ்சத்தின் காலம் எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால், மனிதனின் காலம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுவது ஆகும். அக்காலம் எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியாகத்தான் பாயும். ஆனால், ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கே உரியமுறையில் வித விதமாக அதில் நீந்துகிறான் என்று சொல்கிறார் யசுனரி கவபட்டா. 

காலம் ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு சிறு சிறு ஓடைகளாகப் பிரிந்து ஓடுகிறது. மனிதனுக்குள் ஓடும் காலம் எனும் ஓடை சிலநேரங்களில் சலசலத்துப் பாய்கிறது, சில நேரங்களில் மெதுவே நகர்கிறது, சிலநேரங்களில் தேங்கி நின்று விடுகிறது. நாவல் எழுதுபவன் எப்போது ஓய்வு பெறுகிறான் என்று கேட்கும் யசுனரி கவபட்டா அவரே அதற்கு பதிலும் சொல்கிறார். அவன் சாகும் நாளில்தான் புனைகதையாளன் பணி ஓய்வு பெறுகிறான் என்று சொல்கிறார். 

பிரபஞ்சத்தைப் புரிந்து கொள்வதில்  ஒவ்வொரு கால கட்டத்து மனிதனும் ஒவ்வொரு விதம் என்கிறார் ஜப்பானிய எழுத்தாளர் யசுமரி கவபட்டா. உதாரணத்துக்கு நிலா வெளிச்சத்தை எடுத்துக் கொள்கிறார் அவர். . மின்சாரம் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னால் மனிதன் நிலா வெளிச்சத்தை அனுபவித்ததற்கும் , கெரசின் விளக்குகள் வந்த பின் நிலா வெளிச்சத்தை அனுபவிப்பதற்கும் வேறுபாடு உண்டு. இதேபோல் மின்சாரம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு உலகம் மின்சார விளக்குகளால் நிறைந்து நிற்கும்போது மனிதன் நிலா வெளிச்சத்தை அனுபவித்ததற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது என்று பேசுகிறார். இவ்வாறு சொல்லும்போது ஒவ்வொரு காலகட்டத்து மனிதனின் பிரபஞ்சமும் ஒவ்வொரு விதமாக அர்த்தப்படுகிறது என்கிறார். இதனால்தான் எத்தனை உன்னதமான எழுத்தாளர் எழுதி விட்டுப் போயிருந்தாலும் புதிதாக வரும் எழுத்தாளன் எழுதுவதற்கு இந்த பிரபஞ்சம் மீண்டும் மீண்டும் அவனுக்காக காத்திருக்கிறது. 

தற்கொலை செய்து கொண்டு சாவதற்கு ஒரு சில மாதங்கள் இருந்தபோது யசுனரி கவபட்டா அவரால் பெரிதும் விரும்பப்பட்ட அவரது நாவலான  பனி தேசம் ( Snow Country) என்பதை  எடுத்துப் படித்தார். பிறகு அந்த நாவலை ஒரு சிறுகதையாக மறுசிருஷ்டி செய்தார். அவர் இறந்தபிறகு வெளியிடப்பட்டபனிதேசத்தில் விடுபட்டுப் போன மிச்சத்தைப் பொறுக்குதல்” ( Gleanings from Snow Country) என்று அதற்கு நீளமான தலைப்பு கொடுத்தார். அந்த சிறுகதையை அவர் ஏன் எழுதினார் ? இதைத்தான் நான் ஒரே எழுத்தாளர் வெவ்வேறு காலங்களில் வாழ்தல் என்று சொல்கிறேன். 

பனியில் உறைந்துபோன மேற்கு ஜப்பானிய பகுதியில் வீணாகிப் போன ஒரு காதலின் கதைதான் இந்த நாவல். மனித உறவுகள் , தனிமை குறித்த சிக்கல்களைத்தான் இந்த நாவல் பேசுகிறது. இந்தபனிதேசம்நாவல் 1935இல் ஒரு சிறுகதையாகத்தான் தொடங்கியது. அதே மாதத்தில் இன்னொரு பத்திரிகையில் அவரது இன்னொரு சிறுகதை வெளியிடப்பட்டது. ஆனால் அந்த கதையும் முதல் கதையோடு தொடர்பு கொண்டிருந்தது.அதே கதாபாத்திரங்களோடு அவர் இன்னும் ஐந்து பத்திரிகைகளில் சிறுகதைகளை எழுதினார். பிறகு அவை அனைத்தையும் திரட்டினார். 1937இல் தான் எழுதிய ஒரே கதாப்பாத்திரங்களோடு கூடிய சிறுகதைகளைத் திரட்டி அதற்கு ஒரு புதிய முடிவினை கொடுத்து வெளியிட்டார். அதன்பிறகு 1940 ,1941களில் இன்னும் இரண்டு  அத்தியாங்களை எழுதினார். இப்போது மூன்று ஆண்டுகள் கழித்து அந்த நாவலை அவர் வெளியிட்டார். 1946இல் தான் எழுதிய கடைசி அத்தியாங்களை ஒன்றிணைத்து ஒரே அத்தியாயமாக்கி வெளியிட்டார்.1947இல் இன்னொரு பகுதியை எழுதி அதனை ஒரு தனி பத்திரிகையில் வெளியிட்டார்.1948இல் நாவல் தனது முழுமையடைந்த வடிவில் வெளியிடப்பட்டது. யசுனரி கவபட்டா நாவல் எழுதிய அறை  ஒரு அருங்காட்சியகமாக இன்னும் பேணப்படுகிறது. 

போர்கே ஒருமுறை எழுதினார்: நாவலின் தொடக்கம் முடிவில் எனக்கு சிரமங்கள் இருந்ததில்லை. ஆனால் மத்தியபகுதிதான் எனக்கு மிகவும் சிரமம் கொடுத்தவை என்று. இது கலையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் கூடத்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. சொல்லப்போனால் அந்த மத்தியப் பகுதிதான் ஒருவனின் உண்மையான வாழ்க்கையே என்று கூட எனக்குத் தோன்றுகிறது.

இளமையாக இருக்கும்போது முதிர்ச்சி அடைய வேண்டுமென ஏங்குவதும், முதிர்ச்சி அடைந்த பிறகு இளமைக்கு ஏங்குவதுமான வாழ்க்கையின் மையப்பகுதிதான் மிக முக்கியமானது என்றே நான் நினைக்கிறேன். ஆனால் இந்த ஏக்கத்தை மிக எளிதாக எழுத்தின் மூலமாக நாம் தீர்த்துக் கொள்ள முடியும். நாம் ஏன் கற்பனையில் மூழ்குகிறோம் என்றால் அதற்கான மிகப்பெரிய தேவை இருக்கிறது. இளமையை முதுமையாக்குவதும் , முதுமையை இளமையாக்குவதும் கற்பனை செய்யும் மாயங்கள். 

மொழி ,அனுபவம் ஆகிய இரண்டு கருவிகள் எழுத்தாளனின் கையில் இருக்கிறபோது மொழியைப் பயிற்சியின் மூலம் எழுத்தாளன் கைப்பற்றி விடுகிறான். ஆனால் அனுபவம்? அனுபவம் என்பது கைப்பற்ற முடியாதது. தரையில் கொட்டி விட்ட பாதரச திவலையாய் நழுவும் அனுபவத்தை மொழியின் கையில் ஏந்துவதற்காகவே எழுத்தாளன் தன் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. கவிஞன் ரில்கேயின் கருத்துப்படிஅனுபவம் எனும் பிரதேசத்தில் வார்த்தைகள் இருப்பதில்லை.” சிறிய அடிக்கடி உருமாறும் வாழ்க்கையில் நழுவும் அனுபவங்களை வார்த்தைத் தூண்டிலில் பிடிப்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. 

நான் சிறுவனாக இருந்தபோது மேகத்துக்குக் கீழே இருக்கும் எல்லா அனுபவங்களையும் நான் பேசிவிட ஆசைப் பட்டேன். அப்படிப் பேச முயற்சி செய்த டால்ஸ்டாய், தாஸ்தாவஸ்கி, மிகையில் ஷோலகோவ் ஆகியவர்களின் எழுத்துகளைப் பார்த்து , இந்த ஒரு வாழ்க்கையில் எப்படி உலகை இந்த அளவுக்குப் புரிந்து கொள்ள முடிகிறது என்று ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். 

ஆனால் இன்று எனக்குப் புரிகிறது இவர்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாசற்படிக்குப் பக்கத்தில் முளைத்திருக்கும் ஒரு சிறு புல்லின் நுனியில் இருக்கும் அதிகாலைப் பனித்துளியில் மொத்த பிரபஞ்சமும் பிரதிபலிப்பதை உணர்ந்தவர்கள் என்று.


-இந்திரன்

1 COMMENT

  1. திடீரென உறக்கம் அறுந்து விழித்துக் கொண்டேன். இரவு 2:00 மணி. வாயில் லேசாய் கோழைக் கட்டுகிறது. தொண்டையில் நின்று செருமலைக் கொடுக்கிறது. தொடர்ந்து உறங்கும் வாய்ப்பு சட்டென ஏன் பறிபோனது என்றே தெரியவில்லை. ஏதேனும் உண்ண வேண்டும்போல் இருக்கிறது. கொஞ்சம் திராட்சை வத்தலையும் உப்புக்கடலையும் சேர்த்து மென்று விழுங்கிப் பார்க்கிறேன். வாய்க்குள் ஏதோ புது ருசி ஏறி உட்கார்ந்து கொண்டு இம்சை செய்கிறது. பின் மண்டையில் தூக்கமின்மையின் வாதை. கொஞ்சம் படிக்க முயல்கிறேன். சங்கப்பாடல் ஒன்றை வாசிக்கிறேன். ‘கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே…’ என்ற அந்தப் பாடல் மனதைப் பிசைகிறது. அதை மூடி வைத்துவிட்டு படுக்கையில் அமர்கிறேன். முகநூல் திறந்து கிடக்கிறது. கனலியில் இந்திரன் எழுதிய கட்டுரை கண்ணில் படுகிறது. பிடித்த கலைஞன், பேரன்பு தந்தை, 70 வயதிலும் எழுத்தின் மீது அவ்வளவு காதல் . கட்டுரையை வாசிக்கிறேன். உலகின் ஞானச்செருக்குடைய எழுத்தாளர்கள் பலரும் கண்முன் வருகிறார்கள். காலம் குறித்த விசாரணை நடக்கிறது. நான் இப்போது எந்தக் காலத்தில் மிதக்கிறேன் என்று சிந்திக்கிறேன். என்னால் யூகிக்க முடியவில்லை. பிரபஞ்சத்தின் காலத்திலா? என்னுடைய காலத்திலா? நான் காலத்தை விட்டு வெளியே தாவுகிறேன்.தொலைந்த உறக்கம் பக்கத்தில் எங்கோ மின்மினியாய் சுற்றிக்கொண்டிருக்கக் கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.