பத்மபாரதி கவிதைகள்

வழித்துணை

அனாந்தர ஊஞ்சலிலிருந்து
தவறி விழுந்து ஓவென்று
அழுகிற அவள் சின்னஞ்சிறுமி
எம்பிக்குதித்து அவள் கன்னத்தை வருடும்
செல்ல நாய்க்குட்டியின் வால்சுழட்டலில்
வலி கரைந்தே போகிறது
சதா கோபிக்கும் அப்பா
தவறவிட்ட பொற்கணங்கள் முப்பது முக்கோடி
அப்படி ரகசியங்களால்
வளரும் சிறுமியின் பின்னலிடையில்
அம்மா சொருகிய வேப்பங்கொழுந்து
பச்சை மாறாது மணக்கிறது.


குழந்தை விளையாட்டு

வழக்கம்போல் சேட்டையைக் குறை அப்பா
என்று சொல்லிக்கொண்டே தன்
விளையாட்டை ஆரம்பித்துவிட்டாள்
அமைதி அமைதி என்று தகப்பன் இறைஞ்சுகிறான்
மருத்துவமனை அவசரப்பிரிவில் அம்மா
படுத்துக்கொண்டிருக்கிறாள்
ப்ளாஸ்டிக் ஸ்டதாஸ்கோப் அணிந்து அம்மாவைப் பிழைக்க வைத்துக்கொண்டிருக்கிறாள்
அடுத்தவினாடி பாக்கெட்டில் ஒளித்த
மெழுகுக்கிராயன்களால் சுவர்களில்
வண்ண மீன்கள் வரையத்துவங்குகிறாள்
மருத்துவமனை மருத்துவமனை
இறைஞ்சுகிற வேடம் தகப்பனுக்கு
அவ்வளவு பொருத்தம்
வார்டின் அலமாரிக் கதவைத்
திறந்து மூடி திறந்து மூடுகிறாள்
புதிய விளையாட்டில்
செல்ல மகளோடு
மனதுக்குள் இசைகிறான்
திறந்தால் பிழைப்பு மூடினால் இறப்பு
ஒரு கணம் பேதலித்த தகப்பன்
குழந்தையை இழுத்துக்கொண்டு வெளியேறுகிறான்
குழந்தை அழத்துவங்குகிறது
தாதியின் தோள் பற்றிய அம்மா
திறந்த கதவின் வழியாக
புன்னகைத்தபடி வெளியேறுகிறாள்.


ஒளிந்து தோன்றும் மாயங்கள்

நீலவானத்தைத் தொடுகிற
தென்னை உதிர்த்த
தேங்காய்ச் சிரட்டையின்
சர்க்கரைக் கரைசலில்
சொக்கியிருக்கிறது சிற்றெறும்பு
வாழைமட்டையில் உருளும்
கோலிக்குண்டு போல
மகிழ்ச்சியைத் தேர்ந்து கொள்வது
எவ்வளவு எளியது
ஏகாந்த வனத்தில் துக்கத்தின் ஆற்றுப்பாடாக
ஒலிக்கும் சில்வண்டின் ரீங்காரம்
தனிமையின் காதுகளில் விழும்போது
ஒரு விநாடி துக்கத்தில் மூழ்குகிறோம்
ஸ்டிக்கர் ஸ்டார் கிடைத்ததை
தகப்பனிடம் காத்திருந்து பகிரும்
குழந்தையின் மலர்ச்சி
இருள் கிழிக்கும் மின்னலொளி
கண்கள் தன்னிச்சையாக மூடுகின்றன
விரைவுச் சாலையின்
சக்கரத்திலிருந்து
நழுவி ஓடும்
அணிலின் அளப்பரிய கருணையால்
உலகம் சுழல்கிறது
மகிழ்ச்சி அக்கணம்
நழுவி ஓடும் அணிலின் சாயை
ஒத்திருக்கிறது.


-பத்மபாரதி

1 COMMENT

 1. ..விரைவுச்சாலையின்
  சக்கரத்திலிருந்து
  நழுவி ஓடும்
  அணிலின் அளப்பரிய கருணையால்
  உலகம் சுழல்கிறது..

  ..அப்படி ரகசியங்களால்
  வளரும் சிறுமியின் பின்னலிடையில்
  அம்மா சொருகிய வேப்பங்கொழுந்து
  பச்சை மாறாது மணக்கிறது.

  இங்கிருந்து தான் நமது உலகம் தனியாகத் துவங்கிக்கொள்கிறது நண்பா..மனதின் தனித்த மகிழ்ச்சியையே இச்சொற்கள் தொடர்ந்து உருவாக்குகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.