செவ்வியல் நூல்களை ஏன் வாசிக்க வேண்டும்?

பரிந்துரைக்கப்பட்டுள்ள சில வரைவு இலக்கணங்களை முதலில் பார்ப்போம்.

1) மக்கள் எவற்றை “வாசித்துக் கொண்டிருக்கிறேன்” என்று சொல்லாமல் “மறுவாசிப்பு செய்கிறேன்” என்று சொல்கிறார்களோ அவையே செவ்வியல் நூல்கள். தம்மைத் தாமே “மெத்தப் படித்தவர்கள்” என்று கருதிக் கொள்ளும் சிலருக்காவது இது நிகழ சிறிதளவு வாய்ப்புள்ளது. ஆனால் தம் இளம் வயதில் செவ்வியலை வாசிக்கும் தலைமுறைக்கு இது பொருந்தாது. ஏனெனில் அதற்குள் அவர்களின் உலகின் ஒரு பகுதியாகவே செவ்வியல் மாறியிருக்கும்.

புகழ்பெற்ற ஒரு நூலைத் தான் வாசிக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ள அவமானப்படும் ஒருவருக்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்ட “வாசி” எனும் இந்த வினைச்சொல்லின் முன்னொட்டு ஒரு சிறிய பாசாங்காகவே இருக்கலாம்.
இத்தகையவர்களுக்கு உறுதிபடத் தெரிவிக்க வேண்டும் எனில், ஒருவர் அடிப்படையில் எவ்வளவு ஆழமான வாசிப்பைக் கொண்டிருந்தாலும் அவரால் இன்னும் வாசிக்கப்படாத ஏராளமான மூலாதார நூல்கள் நிச்சயமாகக் கொட்டிக் கிடக்கும் என்பதை அறிவித்தலே கூடப் போதுமானது.

ஹெரோடோடஸ், தூசிடைட்ஸ், செயின்ட் சீமோன், கர்தினால் தே ரெட்ஸ் ஆகியவர்களை முழுதாகப் படித்துள்ளேன் என்று யாராவது கையைத் தூக்குங்கள் பார்க்கலாம். 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகச்சிறந்த புதினங்கள் கூட அதிகம் பேசப்பட்டனவே தவிர வாசிக்கப் படவில்லை. ஃபிரான்சில் பால் சாக்கை பள்ளியிலேயே படிக்கத் துவங்குகிறார்கள். சுற்றுக்குச் செல்லும் பிரதிகளைக் கணக்கில் கொண்டால் அவை அதற்குப் பின்னரும் தொடர்ந்து படிக்கப்படுகின்றன என்றே ஒருவர் நினைக்கக் கூடும். ஆனால் இத்தாலியர்களிடம் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினால் பால்சாக்கின் நூல் தான் பட்டியலின் இறுதி இடத்தில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இத்தாலியில் உள்ள டிக்கன்சின் விசிறிகளாக இருப்பவர்கள் ஒரு மிகச் சிறிய மேட்டுக்குடி வர்க்கத்தினர். அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்த உடனே டிக்கன்சின் கதாபாத்திரங்களைப் பற்றியும் கிளைக்கதைகளைக் குறித்தும் எதோ தங்களுக்கு நன்கு பழக்கமான பொருட்களையும் ஆட்களையும் பற்றிப் பேசுவது போல் கதை அளக்கத் துவங்கிவிடுவார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த வேளையில், தான் அதுவரை படித்தேயிராத எமிலி சோலாவைப் பற்றிய கேள்விகளை அதிகம் எதிர்கொண்டு வெறுத்துப் போன மிஷெல் ப்யுட்டர், ரோகன் மாக் குவாட்டின் முழுத் தொகுதியையும் படிக்க முடிவு செய்தார். அது அவர் நினைத்ததற்கு முற்றிலும் வேறான ஒன்றாக இருந்ததைக் கண்டவர், அது அற்புதமான தொன்ம காலத்து  அண்டவியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் என்று மிகச் சிறப்பான தன் கட்டுரை ஒன்றில் எழுதினார்.

இதனை வேறு விதமாக சொல்ல வேண்டுமென்றால் வயதான ஒருவர் ஒரு மிகச் சிறந்த நூலை முதல் முறையாகப் படிக்கும் போது ஏற்படும் அசாதாரணமான இன்பமும் அவர் அதைத் தன்னுடைய இளமைக் காலத்தில் படிக்கும் போது ஏற்படுவதும் (அதிகமாக இருக்குமா குறைவாகவா என்பதை உறுதியாகச் சொல்ல இயலாது) வெவ்வேறானவை. மற்ற எல்லா அனுபவங்களைப் போலவே வாசிப்பிற்கும் ஒரு புதிய சுவையை இளமை கொடுத்துவிடுகிறது. ஆனால் முதுமையோ  இன்னும் நிறைய விவரங்களை, நிலைகளை அர்த்தங்களைக் கண்டறிந்து பாராட்டுகிறது. ஆகவே நாம் அடுத்த வரைவிலக்கணத்தை முயற்சி செய்வோம்.

2) எவை வாசித்த பிறகு காதலுடன் பொக்கிஷமாகக் கருதப்படுகின்றனவோ அவற்றையே
நாம் செவ்வியல் என்கிற சொல்லால் குறிக்கிறோம். தம் வாழ்வின் சிறப்பானதொரு காலகட்டத்தில் அவற்றை முதன்முறையாக வாசித்துத்  துய்க்கிற அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றவர்களும் அவற்றை பொக்கிஷமாகவே கருதுகிறார்கள்.

பொறுமையின்மை, கவனச்சிதறல், ஒரு பொருளின் “பயன்பாட்டு வழிமுறைகள்” பற்றிய அனுபவமின்மை ஆகியவற்றால் இளமைக் காலத்து வாசிப்பு உண்மையில் பயனற்றுப் போக வாய்ப்புள்ளது. அத்துடன் வாழ்வு குறித்த அனுபவமின்மையும் சேர்ந்து கொள்கிறது. அப்போது படிக்கப்படும் நூல்கள் ‘உருவாக்க’ வகைமையிலானவை. அவை எதிர்கால அனுபவங்களுக்கு உருவம் கொடுத்து, பிரதிகள், ஒப்பீடுகளுக்கான விதிமுறைகள், வகைப் படுத்தலுக்கான திட்டங்கள், மதிப்பீடுகளுக்கான அளவுகோள்கள், அழகுக்கான முன்மாதிரிகள் ஆகியவற்றை அளிக்கின்றன. இளமையில் வாசிக்கப்பட்ட ஒரு நூல் சிறிதளவோ அல்லது முழுமையாகவோ மறக்கப்பட்டாலும் கூடத் தொடர்ந்து தன் பணியைச் செய்தபடி தான் இருக்கிறது.
வயதான பிறகு ஒரு நூலை நாம் மீள் வாசிப்பு செய்யும்போது இந்தத் தடைகளை நாம் மறுபடி கண்டுணர முடியும். அதற்குள் அவை நம் இயங்கியலின் ஒரு பகுதியாக மாறியிருக்கும். ஆனால் அதன் மூலாதாரத்தை நாம் மறந்து பன்னெடுங் காலங்கள் ஆகியிருக்கும்.
ஒரு இலக்கியப் படைப்பு தன்னை மறக்கடிக்கச் செய்வதில் வெற்றி காணலாம். ஆனால் அது நமக்குள் அதன் விதைகளை விட்டுச் செல்கிறது. ஆகவே நாம் தரப் போகும் அடுத்த வரைவிலக்கணம் இது.

3) நாமே அழிக்க நினைத்தாலும் நீங்க மறுத்து, நினைவுகளின் அடுக்குகளில் மறைத்தபடி தம்மை செவ்வியல் நூல்களாக உருமாற்றம் செய்து கொண்டு நம்முடைய தனி அல்லது பொது புத்தியில் விசித்திரமான தாக்கத்தை ஏற்படுத்துபவையே செவ்வியல் நூல்கள் எனக் குறிக்கப்படுகின்றன. ஆகவே இளமைக் காலத்தில் வாசித்த மிக முக்கியமான நூல்களை மறு வாசிப்பு செய்வதற்கு என்றே ஒரு காலத்தை வயதானதற்குப் பின் அர்ப்பணிக்க வேண்டும். நூல்கள் அப்படியே தான் இருக்கின்றன (மாற்றத்துக்குள்ளாகும் வரலாற்றுப் பார்வையில் நூல்களும் மாறலாம்) என்றாலும் நாம் சர்வ நிச்சயமாக  மாறி இருப்பதால் அந்த நூல்களுடனான நம் சந்திப்பும் நிச்சயம் புதிதான ஒன்றாகவே இருக்கும். ஆகவே நாம்  “வாசிப்பு” அல்லது “மீள் வாசிப்பு” ஆகிய இரண்டு வினைச்சொற்களில் எவற்றைப் பயன்படுத்துகிறோம் என்பதில் முக்கியத்துவம் ஏதுமில்லை.
நாம் உண்மையில் இப்படி சொல்லலாம்.

4) செவ்வியல் நூல்களை மறுவாசிப்பு செய்யும் ஒவ்வொரு முறையின்போதும் கிடைக்கும் அனுபவம் முதல் வாசிப்பில் நிகழ்வது போலவே இருக்கும். அவை நீண்ட பயணங்களில் நிகழும் கண்டுபிடித்தல்களின் பரபரப்பிற்கு இணையானது.

5) செவ்வியல் நூல்களை ஒரு முறை வாசிப்பது என்பதே உண்மையில் மறுவாசிப்பு செய்வதாகும். அடுத்து வருவது நான்காம் வரைவிலக்கணத்துக்கான கிளைத்தேற்றமாகக் கருதப்பட வேண்டும்.

6)  செவ்வியல் நூல் என்பது தான் எதைச் சொல்லியிருக்க வேண்டுமோ அதை எப்போதும் சொல்லி முடித்திருக்காது. ஆனால் ஐந்தாம் வரைவிலக்கணம் இது போன்ற ஒரு குறிப்பிட்ட  விதிமுறையைச் சார்ந்துள்ளது :

7) செவ்வியல் நூல்கள் என்பவை நாம் அவற்றை வாசிப்பதற்கு முன் நிகழ்ந்த முந்தைய வாசிப்பின் சுவடுகளையும்  தாங்கியபடி நம்மை வந்தடைபவை.
தாம் கடந்து வந்த கலாச்சாரம் அல்லது  கலாச்சாரங்களின்  (அல்லது எளிமையாக மொழி மற்றும் பழக்கவழக்கங்கள்) மீது அவை பதித்திருக்கும் சுவடுகளையும் உடன் அழைத்து வருபவை.
பண்டைய, நவீன செவ்வியல் நூல்களைப் பொருத்தவரை இவை அனைத்தும் உண்மை. நான் ஒடிசியை வாசித்தால் ஹோமரின் உரையை வாசிக்கிறேன். ஆனால் யுலுசிசின் அத்தனை வீர சாகசங்களும் பல நூற்றாண்டுகளின் வழிவழியாக பொருள் கொள்ளப்பட்டு வருபவை என்பதை நான் மறக்க இயலாது. இந்த அர்த்தங்கள் யாவும் உரையின் உள்ளுறைவா அல்லது மேற்படிவா சிதைவா அல்லது விரிவா என்று   என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. காஃப்காவை வாசிக்கையில் கால் மணி நேரத்துக்கு ஒரு முறை  ஒலிக்க வாய்ப்புள்ள, சட்டபூர்வமாக, பாகு பாடற்று பயன்படுத்தப்படுகிற ‘காஃப்கேஸ்க்’ எனும் பெயர்ச் சொல்லை நான் ஏற்கவோ மறுக்கவோ இயலாது. துர்கனேவின் ‘ஃபாதர் அண்ட் சன்ஸ்’ அல்லது தஸ்தவெய்ஸ்கியின்  ‘தி பொசஸ்ட்’ ஆகியவற்றை நான் வாசித்தால் இக் கதாபாத்திரங்கள் எவ்வாறு தொடர்ந்து மறுபிறவி எடுத்து  இன்றைய தினம் வரை நம்முடன் வருகின்றன என்பதை என்னால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

செவ்வியல் நூல்களின் வாசிப்பு நாம் அவற்றைப் பற்றி கொண்டிருந்த கருத்துக்கு எதிரான ஒன்றிரண்டு ஆச்சரியங்களைத் தர வேண்டும். இக் காரணத்துக்காக உரை குறித்த விமர்சனம், வர்ணனைகள், தெளிவுரை ஆகியவற்றை வாசிக்காது கூடுமானவரை அவற்றைப் புறந் தள்ளி நேரடியாக உரையை மட்டும் வாசிக்கும்படி என்னால் ஒருபோதும் சிபாரிசு செய்ய இயலாது. எந்த ஒரு நூலைப் பற்றிப் பேசுகிற மற்றொரு நூலும் பேசப்படுகிற நூலை விட அதிகமாக எதுவும் சொல்வதில்லை என்பதை நாம் புரிந்துகொள்ள பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் நமக்கு உதவ வேண்டும். ஆயின் இதற்கு நேர்மாறான கருத்தை நாம் சிந்திப்பதற்கே தம்மாலான அனைத்தையும் அவை சிறப்பாகச் செய்கின்றன.  உரை என்ன சொல்ல வேண்டியுள்ளதோ அதை உரையை விடத் தான் அறித்ததாக உரிமை கோரும் இடைத்தரகர்கள் எவருமின்றி  உரை தனித்து நின்று பேச வாய்க்காத வரை, உரையை மறைக்கும் புகை மூட்டமான ஒரு திரையைப் போன்று செயல்படும் முன்னுரை, திறனாய்வுகள், ஆதார நூற்பட்டியல் ஆகியவை இருப்பது மிக விரிந்து பரந்துபட்ட விழுமியங்கள் தலைகீழாக வீழ்ந்து கிடப்பதற்கு இணையாகும்.
நாம் இந்த முடிவுக்கு வரலாம்:

8) ஒரு செவ்வியல் நூல் என்பது இதற்கு முன் நமக்குத் தெரியாத எதையாவது நமக்குக் கற்பிக்க வேண்டும் என்பதில்லை. நாம் முன்பே அறிந்திருந்த (அல்லது அறிந்ததாக நினைத்திருந்த) எதோ ஒன்றை செவ்வியல் நூல்களில் நாம் சிற்சமயங்களில் மறுபடி கண்டடைகிறோம். ஆனால் இந்த நூலாசிரியர் தான் முதலில் அதைச் சொன்னார் என்பதையோ அல்லது குறைந்தபட்சம் அதனுடன் ஒரு மிகச் சிறப்பான முறையில் தொடர்புடையவர் என்பதையோ நாம் அறிவதில்லை. ஒரு தோற்றுவாயை, உறவை, தொடர்பைக் கண்டுபிடிப்பதில் நாம் எப்போதும் துய்க்கும் அளப்பரிய இன்பத்தைப் போல இதுவும் வியப்பைத் தரும் ஒன்று.
இவை அனைத்தில் இருந்தும் நாம் இந்த வகைமையிலான வரைவிலக்கணத்தைப் பெறலாம்:

9) செவ்வியல் என்பது அவற்றைப் பற்றிப் பிறர் பேசுவதன் வாயிலாக மட்டுமே அவற்றை அறிந்திருப்பதாக நாம் நினைத்துக் கொண்டிருப்பதை விடவும், அவற்றை வாசிக்கும்போது மிகப் புதியதாக, இதுவரை துய்த்திராத, எதிர்பாராத ஒன்றாக அவற்றைக் காண்பது. தம் வாசகருடன் ஒரு இணக்கமான புரிந்துணர்வை நிறுவும் பணியை ஒரு செவ்வியல் நூலானது செய்தால் மட்டுமே இது இயல்பாக நிகழும். ஒரு பொறி ஏற்படவில்லையெனில் அது பரிதாபகரமானது; ஆனால் நாம் பள்ளிகளில் வாசித்தது தவிர பிற செவ்வியல் நூல்களை வாசிக்க அவற்றின் மீதான அன்பு மட்டும் தான் காரணமேயன்றி கடமையோ மரியாதையோ இல்லை.
சிறப்போ அல்லது மோசமோ, கணிசமான அளவுக்கு சில செவ்வியல் நூல்களை அல்லது செவ்வியல் நூல்களுக்கான  குறிப்புகளை பள்ளிகள் நமக்கு அறியத் தர வேண்டும்; அதன் தொடர்ச்சியாக நமக்கான செவ்வியல் நூல்களை நாம் பிறகு தேர்வு செய்துகொள்ள இயலும். தேர்வு செய்வதற்குத் தேவையான கருவிகளை நமக்கு அளிக்க வேண்டிய கடமை பள்ளிகளுக்கு இருக்கிறது. ஆனால் முக்கியமான தேர்வுகள் என்பவை பள்ளிக்கு வெளியேயும் அதற்குப் பின்னும் நிகழ்பவையே. சார்புகள் ஏதுமற்று வாசித்தல் மட்டுமே நீங்கள் எதிர்கொள்கிற நூல்களில் உங்களுடையதாக ஆகக் கூடிய அந்த நூலை நீங்கள் கண்டடைவதற்கான வழி.
எனக்குத் தெரிந்த மிகச் சிறந்த வரலாற்றாசிரியரும் அசாதாரண அளவில் மிகப் பெரிய படிப்பாளியுமான ஒருவர், இருக்கும் எல்லா நூல்களையும் விட்டுவிட்டு பிக்னிக் பேப்பர்ஸின் மீது தன் மனதின் பிரியத்தைச் செலுத்தினார். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் டிக்கன்சின் நூலில் இருந்து புதிரான சில வாசகங்களை எடுத்து வைத்துக் கொண்டு வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் பிக்விக்கில் காணப்படும் கிளைக் கதையுடன் தொடர்புபடுத்துவார். சிறிது சிறிதாக தானும், உண்மைத் தத்துவங்களும் பிரபஞ்சம் முழுவதுமே *பிக்விக் பேப்பர்ஸ் புதினத்தில் உள்ளது போலவே அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் அவருடைய பார்வையில் உருமாறின. இந்த முறையில் செவ்வியல் குறித்த ஒரு மிக உயர்ந்த, கவனத்தைக் கோருகிற  இந்தக் கருத்துக்கு நாம் வருகிறோம்.

10) செவ்வியல் என்ற சொல்லை ஒரு நூலுக்கு நாம் பயன்படுத்துவது பிரபஞ்ச வடிவத்துக்கு இணையான ஒரு பொருளைக் குறித்து ஆதிக் கால குறிசொல்பவரின் நிலையில் இருந்து பேசுவதாகும். இந்த வரையரையுடன் முழு நூலையும்  மஃலமேவின் கருத்தாக்கத்துடன் நாம் அணுகுகிறோம். ஆனால் எதிர்ப்பையும், எதிர்வினையையும் பொறுத்தவரை ஒரு செவ்வியல் நூல் அவை இரண்டுக்குமிடையே சமமான புரிந்துணர்வை நிறுவ வல்லது.  ஜான் ஜாகஸ் ரோசோ சிந்திக்கிற, செய்கிற யாவுமே என் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. ஆனாலும் அவை யாவுமே அவருடன் முரண்படவும் விமர்சிக்கவும் சண்டையிடவும் ஒரு அடக்க முடியாத ஆசையால் என் மனதை நிறைக்கிறது.
இந்த ஒரு தனிப்பட்ட விரோத  மனப்போக்கின் காரணமாக நான் அவரை வாசிக்காதிருப்பது தான் என் முன்னுள்ள ஒரே தேர்வு. ஆனாலும் எனக்கான நூலாசிரியர்களில் ஒருவராக அவரைக் குறிப்பிடாமல் என்னால் இருக்க இயலாது.
ஆகவே நான் இதைச் சொல்கிறேன்:

11) யாரை நீங்கள் அலட்சியமாக உணர முடியாதோ, தர்க்கங்களிலும் கூட அவரளவில் நீங்கள் யாரென  உங்களை வரையறை செய்துகொள்வதற்கு உங்களுக்கு யார் உதவுகிறாரோ அவரே உங்கள் செவ்வியல் நூலின் ஆசிரியர்.
வயது, பாணி, அதிகாரம் ஆகிய எந்த வேறுபாடுகளும் பாராமல் செவ்வியல் என்கிற சொல்லைப் பயன்படுத்துவது குறித்து நான் நியாயப்படுத்தத் தேவையில்லை என நினைக்கிறேன். புராதன நூல் ஒன்றுக்கும் கலாசார நீட்சியின் மூலமாக தனக்குரிய இடத்தை முன்பே அடைந்திருக்கிற நவீன நூலுக்கும் இடையே ஒரு செவ்வியல் நூலை நான் வேறுபடுத்திக் காட்டுவதென்பது  அவை இரண்டுக்கும் பொருந்துகிற ஒரு எதிரொலியின் ஓசையாகவே நான் செய்யும் இந்த வாதத்தில் இருக்கும்.
ஆகவே நாம் இப்படிச் சொல்லலாம்.

12) ஒரு செவ்வியல் நூல் என்பது மற்ற செவ்வியல் நூல்களுக்கு முன் வெளியிடப்படுவது. ஆனால் மற்றவற்றை முதலில் படித்து, இந்த நூலைப் பின்னர் படித்த எவர் ஒருவரும் அதனைப் படித்த அடுத்த நொடியே செவ்வியல் குடும்ப மரபின் கிளைகளில் இந்த நூலுக்கான இடத்தை அடையாளம் கண்டுகொள்வர். இந்தப் புள்ளியில் செவ்வியல் நூல்களை வாசிப்பதையும் செவ்வியல் தவிர வேறில்லை எனப்படுகிற மற்ற எல்லா நூல்களையும் வாசிப்பதையும் எப்படித்  தொடர்பு படுத்துவது என்கிற மிக முக்கியமான பிரச்சினையை நான் இதற்கு மேலும் மறைத்து வைக்க இயலாது. இந்த சிக்கல் பின்வரும்  கேள்விகளுடன் இணைக்கப்பட்டுள்ளது:

நாம் வாழும் காலத்தைப் புரிந்து கொள்ள உதவும் நூல்களைக் கவனம் செலுத்தி இன்னும் ஆழமாக வாசிப்பதை விட்டு நாம் ஏன் செவ்வியல் நூல்களை வாசிக்கவேண்டும்? அல்லது தற்கால நிகழ்வுகளின் பனிச் சரிவில் பெரிமளவில் சிக்கியுள்ள நமக்கு செவ்வியல் நூல்களை வாசிப்பதற்கான நேரமும் அதற்குரிய மன அமைதியும் எங்கு கிடைக்கும்?

நாம் நிச்சயமாக தன் வாசிப்பு நேரம் முழுவதையும்  லுக்ரேஷியஸ், லூசியன், மாண்டேய்ன், எராஸ்மஸ்,
க்வேடோ, மார்லோ, வில்ஹெல்ம் மெய்ஸ்டர், கால்ரிட்ஜ், ரஸ்கின், புரூஸ்த், வலேரி ஆகியவர்களை மட்டுமே வாசிப்பதற்கும் எதோ சிறிது நேரத்தை முராசகி அல்லது ஐஸ்லாந்தியர்களின் கட்டுக்கதைகளின் பக்கமும் திருப்புகிற ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட ஆன்மாவைக் கற்பனை செய்து கொள்ளலாம்.

இவையெல்லாமே சமீபத்தில் பிரசுரமான நூல்களுக்கான விமர்சனமோ அல்லது பல்கலைக்கழக இருக்கைக்கான போட்டியில் எழுதப்பட வேண்டிய ஒரு கட்டுரையோ அல்லது பத்திரிகைகளுக்குத் தர வேண்டிய கட்டுரைக்கான இறுக்கிப் பிடிக்கும் கால அட்டவணைகளுக்காகவோ எழுத வேண்டியிராமல் இருந்தால் நிகழக் கூடியவை. இத்தகைய ஒரு உணவு முறையைக் கறைபடியாமல் கடைப்பிடிக்க வேண்டி அந்த ஆசீர்வதிக்கப்பட்ட ஆன்மா செய்தித்தாள்கள் அளிக்கும் செய்திகளை நுகராமல், அப்போதைய காலகட்டத்தில் வெளிவந்திருக்கிற புதினத்தால் ஒருபோதும் தூண்டப்படாமல் அல்லது சமூகம் தொடர்பான பார்வைகளில் பங்கெடுக்காமல் இருக்கவேண்டும். ஆனால் அத்தகைய கடுமையான தன்மை எந்த அளவுக்கு நியாயமானது அல்லது லாபகரமானது என்பதை நாம் பார்க்க வேண்டும். அந்த காலகட்டத்தின் அண்மைச் செய்தி அற்பமானதைப் பற்றியோ அல்லது அழியாப் புகழுடையதைப் பற்றியோ  இருக்கலாம்.  தவிரவும் முன்னும் பின்னும் நோக்கும் விதத்தில் ஒரு புள்ளியில் அது  மையம் கொண்டிருக்கிறது.
செவ்வியல் நூல்களை வாசிக்க இயலவேண்டும் எனில் ஒருவருக்கு தாம் அதை “எங்கிருந்து வாசிக்கிறோம்” என்று தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் நூலும் அதை வாசிப்பவரும் ஒரு காலமற்ற மேகக் கூட்டத்தில் தொலைந்து போகக் கூடும். செவ்வியல் நூல்களில் இருந்து ஒருவர் ஏன் அதிகளவில்  “விளைச்சல்” பெறுகிறார் என்பதற்கு, அவர் செவ்வியல் நூல் வாசிப்பிற்கு மாற்றாக சமகால நிகழ்வுகளை சரியான அளவில் எவ்வாறு வாசிப்பது என்பதை அறிந்திருக்கிறார் என்பதே காரணம். இதன் பொருள் குலைவுறாத உள்மன அமைதி நிலையைக் குறிப்பதல்ல. அது ஒரு பதட்டமான பொறுமையின்மையின்  விளைவாகவோ அதிருப்தியுற்ற மனதின் ஓவென்று பேரிரைச்சலின் காரணமாகவோ இருக்கலாம். சாலையின் போக்குவரத்து நெரிசலையும் திடீரென நிகழும் வானிலை மாற்றங்களையும் நமக்குத் தெரிவிக்கிற ஜன்னலின் பேரிரைச்சலை அறைக்குள் இருந்தபடியே நாம் எப்படி கவனிக்கிறோமோ அதைப் போலவே மிகத் தெளிவாக சிறந்த உச்சரிப்புடன் நம்முடைய அறைக்குள் ஒலிக்கும் செவ்வியலின் குரலையும நிகழ்காலத்தில் இருந்தபடியே நாம் கவனிக்க வேண்டும் என்று சொல்வது பொருத்தமானது. பெரும்பான்மையினர் செவ்வியலின் இருப்பை தொலைக்காட்சியின் தாங்கமுடியாத முழுசப்தத்தைப் போல, அறையின் வெளியே கேட்கும் தொலைதூர இரைச்சலாய் உணரக்கூடும்.
ஆகவே நாம் இதையும் சேர்ப்போம்

13) செவ்வியல் என்பது தற்கணங்களின் கவலைகளை பின்னணி ஓசையெனக் கருதிப் புறக்கணிப்பதற்கு ஒப்பானது. ஆனால் அதே நேரத்தில் இந்தப் பின்னணி ஓசையில்லாமலும் நம்மால் இருக்க இயலாது.

14) செவ்வியல் என்பது சூழலைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும்   தாங்கவியலா தற்கணங்களின் கவலைகள் நம்மைச் சூழ்கின்ற நேரத்திலும் நம்மைத் தொடர்ந்து வரும் பின்னணி ஓசையைப் போன்றது.

நிறைய நேரமோ ஓய்வோ இனி வரும் காலங்களில் சாத்தியப்படாத நம் இயல்பான வாழ்வியலின் லயத்துடன் செவ்வியல் வாசிப்பு முரண்படும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய உண்மை. நமக்குத் தேவையானவற்றின் பட்டியலை  ஒரு நாளும்  செவ்வியலைப் போல ஒருங்கிணைக்க இயலாத நம் தேர்ந்த கலாசாரத்துடனும் அது முரண்படும்.

புராதன கிரேக்க லத்தீன் இலக்கியங்களை வழிபட்டவரும், தன் பயன்பாட்டுக்காகவே தந்தையால் உருவாக்கப்பட்ட பெரும் வல்லமை மிக்க சிறந்த நூலகத்துடன் தம் தந்தையின் வீட்டில் தனிமையில் வாழ்ந்தவருமான லியோபார்டியைப் பொறுத்தவரை மேற்சொன்ன இச் சூழல் மிகவும் பொருத்தமானதாகும். சில புதினங்களும் “சில சமீபத்திய வெளியீடுகளும்” தவிர இத்தாலிய மற்றும் ஃப்ரெஞ்ச் இலக்கியம் முழுவதும் இணைக்கப்பட்டு அவருடைய தங்கை பவுலினாவின் ஓய்வு நேரப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டன.
அறிவியல் மற்றும் வரலாற்றின் மீது அவருக்குத் தீவிரமான விருப்பம் இருந்தாலும் முழுதும் நவீனமற்ற  உரைகளான பஃப்பனின் பறவைகள் குறித்த பழக்கங்கள், ஃபொண்டனலின் ஃப்ரெட்ரிக் ரைஷின் மம்மீஸ்,
ராபர்ட்ஸனின் கொலம்பஸ் பயணம் ஆகியவற்றின் மீதும் அவருக்கு நம்பிக்கை இருந்தது.

இளம் லியோபார்டி பெற்ற செவ்வியல் கல்வியைப் போன்ற ஒன்றை நாம் இன்றைய காலகட்டத்தில் சிந்தித்துப் பார்க்கவே முடியாது.எல்லாவற்றுக்கும் மேலாக அவருக்கு அளிக்கப்பட்ட துரை  மொனால்டோவின் நூலகம் இன்று பல மடங்கு விரிவடைந்ததான ஒரு தளத்தில் நாம் இருக்கிறோம். பழைய நூல்களின் தரம் சீரழிவுக்குள்ளானதோடு நவீன  இலக்கியத்திலும் கலாசாரத்திலும் புதிய நூல்கள் பெருகியிருக்கின்றன. அதனால் ஆகப் போவது ஒன்றுமில்லை. ஆனால் நாம் எல்லோரும் அவரவர் சித்தாந்தத்துக்குப் பொருந்தும் செவ்வியல் நூல்களால் ஆன ஒரு நூலகத்தைக் கண்டெடுக்க வேண்டும். அத்தகைய நூலகத்தின் ஒரு பாதி  நாம் படித்த நமக்கு மிக முக்கியமான நூல்களாலும் இன்னொரு பாதி நாம் படிக்க விரும்புகிற மிக முக்கியமானதாக மாறக் கூடிய நூல்களாலும் ஆனதாக இருக்க வேண்டும். அதன் ஒரு பகுதியை வியப்பானதும் எப்போதாவது நிகழக்கூடிய கண்டுபிடிப்புகளுக்காகவும் என காலியாக விடவேண்டும்.

இத்தாலிய இலக்கியத்தின் ஒரே பெயராக லியோபார்டியை மட்டுமே நான் குறிப்பிட்டுச் சொல்லி உள்ளதை உணர்கிறேன். இதற்குக் காரணம் பேரெழுச்சி மிக்க அவருடைய நூலகமே. நாம் யார் என்பதையும் நம்முடைய இடம் எது என்பதையும் புரிந்துகொள்ள செவ்வியல் நமக்கு உதவுகிறது என்பதை மிகத்தெளிவாக உணர்த்த இப்பொழுது இந்தக் கட்டுரை முழுவதையும் நான் மறுபடி திருத்தி எழுதவேண்டும் என நினைக்கிறேன். இதன் நோக்கம் இத்தாலியர்களை அன்னிய நாட்டவருடனும் அன்னிய நாட்டவரை இத்தாலியர்களுடனும் ஒப்பிடுவதை இது இன்றியமையாததாக ஆக்குகிறது.

“இந்த நோக்கம் நிறைவேறும் ” என்ற காரணத்துக்காக செவ்வியல் நூல்களை வாசிக்கவேண்டும் என்று யாராவது நம்பிக்கை கொள்ளக் கூடாது என்பதற்காக நான் மறுபடி ஒருமுறை இந்தக் கட்டுரையைத் திருத்தி எழுத வேண்டி இருக்கும்.
செவ்வியல் நூல்களை ஒருவரால் மேற்கோள் காட்ட இயலும் என்ற ஒரு காரணமே அவற்றை வாசிக்காமல் இருப்பதை விட வாசிப்பது சிறந்தது என்று கூறுதற்குப் போதுமானது.

இவ்வளவு தொந்தரவை மேற்கொள்ளும் அளவுக்கு இது  தகுதியற்றது என்று யாராவது மறுப்பு தெரிவித்தால் தற்போது செவ்வியல் நூலாக இல்லாமல் இருக்கிற ஆனால் பின்னாளில் அவ்வாறு மாறக்கூடிய  சியோரனின் “அவர்கள் ஹெம்லாக் எனும் நஞ்சைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது சாக்ரட்டீஸ் தன்னுடைய புல்லாங்குழலில் ஒரு இசைக் குறிப்பைப் பயின்று கொண்டிருந்தார். ” நீ இறப்பதற்கு முன்னால் இந்த இசைக் குறிப்பை அறிவதால் அது உனக்கு என்ன பயனைத் தரும்?’ என்று அவர்கள் கேட்டார்கள் ”  எனும் இந்தக் கருத்தை இங்கு மேற்கோளாகக் காட்டுகிறேன்.

* பிக்விக் பேப்பர்ஸ்: சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய முதல் புதினத்தின் பெயர்


-இடாலோ கால்வினோ
தமிழில்: கயல்.

Previous articleஅஞரின்ப உயிரிகள்
Next articleபத்மபாரதி கவிதைகள்
கயல்
பேராசிரியர் கயல் எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என்கிற பன்முகத் தன்மையுடன் தொடர்ந்து சமகால இலக்கியச் சூழலில் செயல்பட்டு வருகிறார். இதுவரை இவரின் மூன்று கவிதைத் தொகுப்புகளும், இரண்டு மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்புகளும் வெளிவந்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.